
கண்ணுக்கு குளிர்ச்சியான பின்னணி கொண்ட காட்சிகள் கிடையாது; கண் கவரும் வண்ண ஆடைகள் கிடையாது; குறிப்பிட்ட சில காட்சிகளைத் தவிர்த்து முழுப் படமும் செல்ஃபி வியூ / செல்ஃப் வியூ கேமராவின் வழியாகவே விரிகின்றது, ஆனாலும் “அடுத்து என்ன?” என்ற எதிர்பார்ப்பும், “அனு யார், அனுவுக்கு என்ன ஆனது?” போன்ற பல கேள்விகளையும் அதைச் சார்ந்த சில மர்ம முடிச்சுகளையும் போட்டு, தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒவ்வொரு புதிர்களையும் நிதானமாக அணுகி அவிழ்த்து இறுதியில் காண்போரை உணர்வுக் குவியலுக்குள்ளாக்கி இருக்கும் படம் C U SOON!
“Hi Jimmy here” என chat பாக்ஸ்சில் உரையாடல் தொடங்கும் நொடியில் இருந்து “C U SOON” என ஜிம்மி (ரோஷன் மேத்யூஸ்) அனுப்பும் மெசேஜ்ஜுடன் படம் முடியும் வரை ஒன்றரை மணி நேரத் திரைப்படத்துடன் பார்வையாளர்களை ஒன்றச் செய்து திரைக்கதையை நேர்த்தியாகக் கையாண்டவிதத்தில் மகேஷ் நாராயணன் தான் ஒரு ஆகச் சிறந்த கதை சொல்லி என்பதை அழுத்தமாகப் பதிந்திருக்கிறார்!
வீடியோ காலின் வழியாகவே பயணித்தாலும் அலுப்புத் தட்டாத, காண்போரைப் பதட்டத்துடனே வைக்கும் திரைக்கதையும், தர்ஷனா ராஜேந்திரன், பஃஹத் பாசில், ரோஷன் மேத்யூஸ் உள்ளிட்டோரின் நடிப்பும் தான் படத்தின் பெரும் பலம்!
கதைக்கரு புதிதல்ல. காலங்காலமாக நடக்கும் வேலை வாய்ப்பு மோசடி பற்றியது தான். வேலை வாய்ப்பு என்ற போர்வையில் வெளிநாட்டிற்க்கு அழைத்துச் செல்லப்படும் பெண்கள் எப்படி விபச்சார மோசடிக்கு ஆளாகி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதைக் கோடிட்டுக் காட்டி இருக்கிறது கதை.
திரையில் தன்னுடன் நடிப்போரைத் தூக்கி சாப்பிட்டு விடும் திறமை கொண்டவர் பஃஹத். இப்படத்திலும் அவ்விதமே. ஆனால் பஹத்தையும் மிஞ்சி நடிப்பில் மிளிர்கிறார் தர்ஷனா ராஜேந்திரன். அதிலும் உதிரம் சொட்ட “என்னால முடியலம்மா” என விம்மி வெடித்து அழும் காட்சி காண் போரின் மனதைக் கனக்கச் செய்யும்! திறமையைக் கொண்டாடும் சினிமா விரும்பிகளுக்கு இந்த ஒரு படத்தின் மூலமாக தர்ஷனா ஆதர்ஷமாகி இருக்கிறார் எனலாம்!
“எனக்கு அவளை ஒரு தடவைப் பார்க்கணும் கெவின். ஏன் இதெல்லாம் செஞ்சானு கேட்கணும்” என ஆற்றாமையுடன் பஃஹத்திடம் சொல்லும் ரோஷன் மேத்யூஸ் காதல் , பதற்றம், கோபம், “அனு யார்?” என்பதைத் தெரிந்து கொண்டவுடன் பஹத்திடம் வெடித்துப் பொங்குவது எனத் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
படம் பூடகமாகப் பேசும் மற்றொரு முக்கியமான விஷயம்: மனிதர்கள் அனைத்து வகையான கீழ்மைகளும் பொருந்திய சராசரிகள் மட்டுமே. யாரும் இங்கே புனிதர்கள் இல்லை… அதே சமயத்தில் பாவிகளும் இல்லை. உணர்வுக் கலவையால் ஆன சூழ்நிலைக் கைதிகள் தான் என்பதை போகிற போக்கில் அழகாகக் காட்சிப்படுத்தி இருக்கிறது திரைக்கதை!
“அனுவின் ப்ரோபைல்லை கொஞ்சம் செக் பண்ணிடு” என ரோஷன் மேத்யூசின் அம்மா (மாலா பார்வதி) பஃஹத்திடம் சொல்லும் இடமும், “அம்மாகிட்ட சொல்ல முடியாதது எதெனும் இருந்தா என்கிட்ட சொல்லு” என ரோஷன் பஃஹத்திடம் சொல்லும் இடமும், கூடவே ..”36 தடவை துபாயில் இருக்கும் அனு செபாஸ்டின்னைப் பத்தி தேடி இருக்க..” எனச் சொல்லி நேரில் வந்து சஞ்சனா (அமால்டா லிஸ்) பஃஹத்துடன் சண்டையிடும் காட்சியும், பெரும் சண்டை ஒன்றுக்குப் பின் அனுவைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்காக மீண்டும் அமால்டாவின் உதவியை பஃஹத் நாடும் காட்சியையும் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். கோபி சுந்தரின் பின்னணி இசையும் படத்திற்கு ஓரளவிற்கு வலு சேர்த்திருக்கிறது!
இன்றைய தொழில்நுட்பத்தின் உதவியுடன் நாம் என்னவெல்லாம் செய்ய முடியும் என்றும், நமக்குத் தெரியாமலேயே நம்மைப் பற்றிய பல விஷயங்களை மற்றவர்களுக்கு சமூக வலைத் தளங்களின் மூலமாக நாம் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் சொல்லும் திரைக்கதை, “அப்போ இன்றைக்கு உள்ள தொழில் நுட்பத்தின் முன்னேற்றத்தை வைத்து அந்தத் துறையில் உள்ள எந்த ஒரு திறமைசாலியும் நினைத்த மாத்திரத்தில் யாரைப் பற்றிய தகவல்களையும் எப்படி வேண்டுமானாலும் பெற்று விடுவது அத்தனை சுலபமான விஷயமா?” என்ற கேள்வியையும் சிறு பய உணர்வையும் சேர்த்தே எழுப்புகிறது!
Face time, google duo, WhatsApp வீடியோ காலிங் போன்றவை தடை செய்யப்பட்டிருக்கும் துபாயில் இருந்து ரோஷன் மேத்யூஸ் பஹத்துடன் அடிக்கடிப வீடியோ காலில் பேசுவது என்ற லாஜிக் மீறலும் , வேலைக்கு என்றழைத்து வந்த இடத்தில் எதிர்பாரா கொடுமைகளுக்குள்ளான தர்ஷனாவை அத்தனைக் கட்டுப்பாடுகளையும் தடைகளையும் மீறி அந்த இடத்தில் இருந்து ரோஷனால் எப்படி மீட்டெடுக்க முடிந்தது?” போன்ற கேள்வியும் உறுத்தாமல் இல்லை. ஆனாலும் லாக் டவுனை சரியான படி பயன்படுத்தி செய்யப்பட்ட புதியதொரு முயற்சிக்காக அதைக் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளலாம்.
மூளைச்சாவு அடைந்தபின்னும், உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நம் ஹிதேந்திரனின் மரணத்தில் உதித்த சிறு பொறியை மையப்படுத்தி டிராபிக்; அனாதரவாக சுற்றும் மனநலம் குன்றிய மற்றும் பிச்சைக்காரர்களின் பசி போக்கும், மதுரையை சார்ந்த நாராயண் கிருஷ்ணனின் நிஜ வாழ்க்கையால் உந்தப்பட்டு உஸ்தாத் ஹோட்டல்; 46 இந்திய செவிலியர்கள் (nurses) ஈராக்கில் ISIS ஆல் கடத்தப்பட்ட சம்பவத்தைக் கருவாகக் கொண்டு கிளம்பிய டேக் ஆஃப் (take off) என நிஜத்தில் நம்மை பாதித்த, உலுக்கிய சம்பவங்களை அடிநாதமாகக் கொண்டு அவ்விடே எடுக்கப்பட்ட படங்களின் வரிசையில் (டேக் ஆஃப் படத்தை இயக்கியதும் இப்படத்தின் இயக்குநரே) கடவுளின் தேசத்தில் இருந்து அடுத்ததாக வந்திருக்கும் ஒரு தரமான படைப்பு இது எனத் துணிந்து சொல்லலாம்.
C U SOON : படத்தைப் பார்க்காதவர்கள் please watch it soon
நடிப்பில் மிளிரும் அனுவைப் பற்றி
எழுத்தில் மிளிர்ந்து
கொண்டிருக்கும் அனு – அருமையான கட்டுரை
மனிதர்கள் புனிதமானவர்களும் இல்லை,பாவியும் இல்லை என்ற வரிகள் நச்