கதைக்களம்

வன்மம்

சிறுகதை:- லைலா எக்ஸ்

1.

மாலா தன் மார்பில் அத்துமீறி அலையும் விரல்களால் விளைகின்ற குழப்பமான சுகங்களினால் ஆக்கிரமிக்கப்படும் வினாடிகளை, ஆழமான தத்துவத்தை அறிந்து கொள்ள விழையும் முனைப்புடன் முழு கவனத்தையும் கொடுத்துக் கவனித்திருந்தாள். அதைத்தவிர்த்துச் செய்வதற்கு ஏதுமற்றவளாக கண்களை மூடியபடி, மூச்சை இழுத்துப்பிடித்து அசையாமல் ஆழ்ந்த தூக்கத்திலிருப்பதாக பாசாங்கிலிருந்தாள். அவளுக்குள் அந்தக் கணங்கள் வழக்கத்திலிருந்து மாறுபட்டு உணர்ந்து கொண்டாட முடியாத சுகத்தின் பங்களிப்பை இறைத்தவாரிருந்தன. சுவாசத்தை இயல்பாக வெளியேற்ற முடியாமல் நெஞ்சில் கணம் ஏறியவாறிருந்தது. ஏற்கனவே நன்கு அறியப்பட்ட சித்தப்பனின் நகர்தல்களை மேலும் நிச்சயப்படுத்திக் கொல்பவளைப்போல் நினைவுகளில் படிந்திருந்த தொடுதல்களை ஒப்பிட்டவாறு, சித்தப்பனின் விரல்கள் மென்மையாக முலையின் மேடேறுவதை குறுகுறுப்புடன் அனுபவித்தாள். விரல்கள் முலைக்காம்பை அடைந்து இருமுறை அழுந்தப்பற்றிப் பார்த்த பின் தொழில் முறைத்திருடனின் லாவகத்துடன் எவ்விதச் சாட்சிகளையும் உதிர்க்காமல் மாலா இயல்பாகத் திரும்பிப்படுத்தாள். சிற்றப்பன் பதறி விலகிச்சென்று படுத்ததை உறுதிசெய்துகொண்டு தளர்ந்து, அசைந்து வசதியாகப் படுத்துக்கொண்டாள். நாளுக்கு நாள் ஏறிக்கொண்டிருந்த பருவத்தின் தகிப்பினை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளத்துணிவின்றி மாலாவுக்கு சட்டென உற்சாகக்குறைவு வந்தடைந்தது. நடைபெறுவனவற்றை உணராதது போல் நடித்துக்காட்டும் நாடகத்தில் அவனும் பங்கெடுத்து உணர்த்தாதது போல் பாவிக்கிறானா அல்லது அப்படியான பாவத்தை அவள் மாத்திரம் நடத்திக்கொள்கிறாளா என்று யோசித்தவாறிருந்தாள், இது அந்நிகழ்வுகளின் பின் எப்போதும் மாலாவுக்கு வரும் வாடிக்கையான நினைவுதான். எண்ணங்களை அந்தக் கணத்திலிருந்து விடுவித்துக்கொண்ட மறுவினாடியே சுயஇன்பத்திற்கான தேவை இயல்பாக மாலாவுக்குப் பெருகியது, எப்போதும் போலில்லாமல் அசதி அத்தேவையை வெகுவாக புறக்கணித்து மாலாவைத் தூக்கத்திற்குள் தள்ளியது.

மாலா வழக்கத்திற்கு மாறாக அன்று சீக்கிரமாக எழுந்தாள், மேலும் ஐந்து நிமிடம், பத்து நிமிடம் என்று கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டு கற்பனைகளை அனுபவித்துக்கொண்டோ, தூங்கிக்கொண்டோ இருக்கும் மாலாவிற்கு ஆழமாக உணர்ந்து பார்த்துக்கொள்ள விரும்பாத சிலப்பல எண்ணங்களால் தூக்கம் ஓடிமறைந்துவிட்டிருந்தது. கடந்த இரவின் நிகழ்வுகள் கனவைப் போலிருந்தது, அவை அன்றைய புழுக்கத்தை அதிகப்படுத்துவதாய் தோன்றியது, மாலாவுக்கு குளிக்கவேண்டும் போல் கசக்கசவென்றிருந்தது. அறையை விட்டு வெளியே வந்து நிலைவாசலில் கைகளை ஊன்றிக்கொண்டு குளியலறைப்பக்கம் பார்த்தாள். அம்மா தேவகி வழக்கம் போல் மாலாவையும், மாலாவின் அப்பாவையும் கரித்துக்கொட்டியபடியும், முன் விழுந்த முடிக்கற்றைகளை இழுத்துவிட்டவாரும் பாத்திரம் விலக்கிக்கொண்டிருந்தாள். மாலா சிரித்துக்கொண்டாள். தேவகி அனேகமாக எல்லா நாட்களிலும் மாலாவையோ, மாலாவின் அப்பாவையையோ வைதுகொண்டே பத்து தேய்ப்பாள், துணி கசக்குவாள். தேவகி திட்டுவது வெகுவாக தெளிவில்லாமலும், சம்மத்தப்பட்டவர்கள் மாத்திரமே உணரும் விதமாகவும் இருக்கும். அம்மாவின் வைதல்களைப்பற்றிய உருத்தல்கள் ஏதுமின்றி சாவதானமாக அம்மாவைக்கடந்து குளியலறைக்குச்சென்று மாலா தாளிட்டுக்கொண்டாள். சடுதியில் குளித்துவிட்டு வீட்டை நோக்கி விரைந்து கொண்டிருந்தவளை தேய்ப்பதை நிறுத்திவிட்டு அம்மா முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்ததை மாலா உணர்ந்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை. ”எருமை மாட்டு மேல மழை பேஞ்ச மாதிரி போகுது பாரு, சூடு சொறனை இருந்தாதானே, அப்படியே…. ” என்பதோடு அம்மா நிறுத்திக்கொண்டது மாலாவிற்கு சுருக்கென்றது. கண்ணாடியின் முன் நின்று தன்னை ஏறெடுத்துப் பார்த்துக்கொள்ள விரும்பாதவளைப்போல் நிமிடத்தில் தலையை வாரி முடிந்துகொண்டாள், எத்தனை அலட்சியமாக தயாரானாலும் நின்று பார்க்கவைக்கும் எழிலை இயல்பிலேயே பெற்றிருப்பதைப்பற்றி அந்த நொடியில் மாலாவுக்கு அலட்டிக்கொள்ள இயலவில்லை. புத்தகத்தில் பார்வைகளை ஓடவிட்டவாரும், சிந்தனைவசப்பட்ட மனதைக்கொண்டவாரும் அம்மா செய்து வைத்திருந்த பழைய சோற்றை ஊருகாய் தொட்டுக்கொண்டு சாப்பிட்டாள். தேவகி பாத்திரங்களை அடுக்களையில் கவிழ்த்தவாறே போகும் போதும் வரும் போதும் மாலாவையேப் பார்த்துக்கொண்டு சென்றதை மாலா உணர்ந்தாலும் அசைந்துகொடுக்காமல் அழுத்தமாக உட்கார்ந்துகொண்டு நிதானமாகச் சாப்பிட்டாள். ”எங்க லாத்துரதுக்கு கிளம்பிருக்க?” தேவகி குத்தலாகக்கேட்டாள். மாலா அமைதியாக மெதுவாக தயாராகி படியிறங்கி “இதோ வந்திடறேம்மா, பார்வதி வீடு வரைக்கும் போய்ட்டு சட்டுனு வந்திடறேன்” என்றாள் சத்தமாக. “ரெண்டும் கூட்டுக் களவானிங்க எவன் குடியக் கெடுக்க கிளம்பிருக்குங்களோ” என்றவாறு அம்மா அடுக்களையில் உருட்டிக்கொண்டிருந்ததையும். ”என்னடி காலங்காத்தாலயே தொனதொனன்னுட்டு இருக்க, வாயமூடிட்டு வேலையப்பாரு இல்லன்னுவை இழுத்து ஒன்னு உட்டேன்னா தெரியும்” என்ற அப்பாவையும் கவனித்தவாறே மாலா செருப்புகளை கால்களில் நுழைத்துக்கொண்டாள். ”ஆமா உன் ஜம்பமெல்லாம் என்ண்ட்ட மட்டும் தான் பலிக்கும்..” என்று அம்மா கூறியதைக்கேட்ட மாலா இப்போதெல்லாம் அம்மா அப்பாவிற்கு கூர்மையாக பதிலடிகொடுப்பதையும், நாளுக்கு நாள் ஏறிக்கொண்டிருந்த மாலாவின் மீதான அம்மாவின் வெறுப்பின் காரசாரம் சமீபமாக மாலாவிற்கு விரும்பத்தகாத வகையில் குறைந்து வருவதையும் நினைத்து ஆச்சரியப்பட்டவாறே சாலையை நோக்கி நடந்தாள்.

நீண்ட அடிகளை எடுத்துவைத்துச் சென்றுகொண்டிருந்த மாலாவின் நடையின் வேகம் எதனாலோ துரத்தப்படுவதைப்போலிருந்தது, பெரும்பாலும் குனிந்த வாக்கில் பாதையிலேயே பார்வைகளைப் பாய்ச்சியவாறு சென்று கொண்டிருந்தவளுக்கு நினைவுகள் பின்னோக்கி நகர்வதைக் கட்டுப்படுத்த முடியவில்லை, அவற்றிற்கு இசைந்து கொடுத்து எண்ணங்களை கவனித்தவாரிருந்தாள். மனம் நகரும் போக்கும், அதன் காரணக்காரியங்களும் திட்டவட்டமாக மாலாவிற்குத் தெரிந்திருந்தது, காலத்தில் பின்னோக்கி எண்ணங்களால் இயங்குவதன் மூலம் நடைபெறுகிற கணத்தின் வேதனைகளை விலக்கி முன்னோக்கி நகருகின்ற பாதைகளை மனதளவில் இலகுவாகச்செய்யும் உக்தியை மாலா பெரும்பாலும் கையாண்டவாரிருந்தாள். நிகழ்காலத்தைப் புறக்கணிக்கும் விலகல் நடைபெறுகிற கணத்திலிருந்து தப்பித்துக்கொள்ள மாலாவிற்கு அப்போது அவசியம் தேவையாக இருந்தது. அலைக்கழிக்கப்படும் எண்ணங்களை சமநிலைப்படுத்தும் நோக்கத்துடன் முழு கவனத்தையும் திசைமாற்றி தன் வாழ்வில் மூலையில் பதுக்கப்பட்ட துன்பங்களை, சம்பாசனைகளை, ஏக்கங்களை, வலிகளைத் தோண்டி எடுத்து காட்சிப்படுத்திப்பார்ப்பதினூடாக ஒருவகை சுதந்திரம் அந்த கணத்திலிருந்து கிடைக்குமென்பதாக நம்பிக்கை கொண்டிருந்தாள். மேலும் அந்தச் சந்தர்ப்பத்தில் அனைத்தையும் நினைத்துப்பார்த்துக்கொள்வது அவளுடைய அப்போதைய மனநிலைக்கு உவப்பாக இருக்குமென்று முடிவெடுத்துக்கொண்டாள். அவளுடைய இறுகிய மனதிலிருந்து வெளிப்படும் அப்படியான நினைவுகளுடனும், எண்ணங்களுடனும் அவற்றினூடாக கனவுகளுடனும் அவள் நெருக்கமாக உறவுகொண்டிருந்தது நிச்சயமாக எதேச்சையாக நடைபெறும் ஒன்றல்ல. அது அவளால் வெகுவாக வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட ஒன்றுதான்.

2.

மறக்கடிக்கப்பட விரும்பும் காட்சிகளும், பிம்பங்களும், சோகங்களும் மாலாவிற்குள் மின்னல்களாக தொன்றி மறைந்தவாரிருந்தன. மாலாவின் பால்யம் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத காட்சிகளால் மனதில் குழப்பமாக வேயப்பட்டிருந்தது. இருள் மண்டிய முன்னறையில் கதவைச்சாத்திவிட்டு நேரம் செல்லச்செல்ல இறுகிக்கொண்டிருக்கும் முகத்துடன் சன்னலின் நின்று கொண்டிருக்கும் அம்மாவைப்பற்றிய பிம்பம் தான் அவளுக்கு என்றென்றும் வரும் முதல் நினைவு, அதைத்தொடர்ந்து பூட்டிய கதவின் பின்னிருந்து அம்மா அடிவாங்கும் ஓசையும் அதன்பின்னான அம்மாவின் அழுகையும், சலசலப்புகளும் அவற்றை கதவின் இடுக்கிலிருந்து குனிந்து பார்த்துக்கொண்டிருக்கும் தன்னுடைய பிம்பமும் அவளுக்கு நினைவிற்கு வரும். அதன் பிறகான எண்ணங்கள் எந்த வரிசையையும் கோராமல் அதனதன் இஷ்டத்திற்கு வந்து போகும்.

மாலா மழையில் நனைந்த கோழிக்குஞ்சாய் சுவரோடு சுவராக ஒட்டிக்கொண்டு தூங்கிக்கொண்டிருப்பதாக பாசாங்கிலிருக்கிறாள், அம்மா உள்ளறையிலிருந்து இழுக்கப்படும் அப்பாவின் கரங்களிலிருந்து விடுவித்துக்கொண்டு, காது கிழிந்து, ஒரு கையில் காதணியை வைத்துக்கொண்டு மற்றொரு கையில் இரத்தம் சொட்டும் உதட்டைப் பொத்திக்கொண்டு அழுதவாறு உட்கார்ந்திருப்பதை உணர்ந்து, மனதிற்குள் பதறியபடியே தூக்கத்திலிருப்பதாக பாசாங்கை தொடர்கிறாள். அடுத்த நாள் வெகுவான ரகசியத்தைப் பாதுகாக்கும் உத்வேகத்தோடு இயல்பாக விடிகிறது, அம்மா முகத்தில் கருணை சொட்டச்சொட்ட அடிக்கும் கரங்களை அணைக்கும் நோக்கில் அப்பாவிற்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தாள்….. ”தேவுடியா, நான் தூங்கறப்ப எவனோட போய் இருந்துட்டு வந்த” என்ற சொற்களின் அர்த்தங்களும், அப்பாவின் வார்த்தைகளில் விளையாடும் குறியீடுகளின் புதிர்கள் உடைந்த காலகட்டங்களில் மாலாவிற்குள் அழுந்தப்படிந்திருந்த மௌனங்கள் வலிகளுடன் பிணைக்கப்பட்ட ஆழமான குரோதங்களாக உருமாற்றமடைந்தவாரிருந்தன. வார்த்தைகள் சுமக்கும் அர்த்தங்களை உணராததைப்போல் அவற்றை வாடிக்கையாக எடுத்துக்கொள்ளும் அம்மாவாலும் நாள்பட அவ்வெறி ஏறிக்கொண்டேயிருந்தது….. ஒரு அகால இரவில், சந்தேகத்தின் கண் கொண்டு பார்த்த சூழலினைப்பற்றிய கற்பனைகளை காதுகொடுக்க இயலாத சொற்களின் துணையுடன் அம்மாவிடம் கேட்டுக்கொண்டிருந்த அப்பாவின் வார்த்தைகளால் துரத்தப்பட்டு, வீட்டில் வெளியில் கட்டியிருந்த ஊஞ்சலில் மாலா ஆடிக்கொண்டிருந்தாள், மனிதர்களுக்குப் பயப்படுபவர்களை பேய்கள் ஏதும் செய்வதில்லை என்று யோசித்துக்கொண்டே சலசலக்கும் மரத்தடியில் பார்வையை அழுந்தப்பதிந்தாள். முகமறியா ஒருவன் கைலியைத் தூக்கிக்காட்டியவாறு நின்றிருக்க மாலா பேயைக்கூட எளிதாக எதிர்கொண்டுவிடலாம் என்று நினைத்துக்கொண்டாள், அதன் பிந்தைய நாட்களில் உள்ளறையிலேயே பதுங்கிக்கொண்டு தொலைக்காட்சியை அதிக சத்தத்துடன் ஒலிக்கவிட்டவாறு இருந்துகொள்ளத்துவங்கினாள்…. அவர்களது வீட்டை இறுகிய அமானுஷ்ய போர்வை மூடியிருப்பதாக மாலா உணர்ந்துவந்தாள். இரவுகள் ஒவ்வொன்றுமே மாலாவுக்கு பெரும் பீதியைத்தருவனவாக அமைந்திருந்தன. அடுத்த நாளைய விடிதலின் வெளிச்சம் அவளுடைய நேற்றைய இருண்ட இரவுகளின் நிகழ்வுகளை கச்சிதமாக அழித்தவாறிருந்தது மாலாவிற்குள் விரக்தியைக் கொண்டுவந்து சேர்த்தவாறிருந்தது….. அதிகபட்சமாக மாலா ஒரு நாளுக்கு இரண்டு வாக்கியங்கள் எவரிடமாவது பேசினால் அதிசயம் மௌனத்தை வார்த்தைகளாக்கும் கலையோ அதற்கான தேவைகளோ மாலாவிற்கு வாய்க்காமல், தனிமையிலிருந்து வெளியேற விரும்பாமல் இருந்துவந்தாள். மாலாவின் அப்பா தோல்வியின் பாதையில் பயணிக்கும் சுவடாக வலிகளையும் வேதனைகளையும் பிறரிடம் தூவிக்கொண்டே பயணித்துவருவதையும், அவற்றைப் பாக்கியதையாக அதிகாரத்துடன் கைப்பற்றும் ஜீவ நதியாக அம்மா அப்பாவின் பாதைகளைச் செழிப்பாக்கியவாறே பயணித்து வருவதையும், பிரதிபலனாக அப்பா குடித்துவிட்டு அம்மாவை இழுத்துப் போட்டு அடிப்பதை ஆரம்பத்தில் கட்டுக்கடங்காத கோபத்துடனும் ஆத்திரத்துடனும் எதிர்கொண்டிருந்த மாலா, காலம் செல்லச்செல்ல அது அம்மாவின் இயலாமை மற்றும் சுயநலத்திற்கான வினை என்று எல்லளுடன் எதிர்கொள்ளத் துவங்கினாள். சமுதாயம் தூற்றாமல் இருப்பதையும், தன் கணவனிடம் கற்பை, தன்னை நிரூபிப்பதையும் விட வேறு பேறே இல்லை என்று தன் அம்மா முடிவு செய்து கொண்டதாக நம்பிய பொழுதில் தன் வீட்டைப் பாதுகாப்பற்ற இடமாக மாலா உணர்ந்தாள்.

அவிழ்க்க முடியாத புதிர்களால் நிறைந்திருந்த வாழ்வில் மற்றுமொரு புதிராக மாலா பெரிய மனுசியான போது அம்மாவின் முகத்தில் துளிர்த்த சந்தோசத்தைப்பார்த்து மாலா அதிசயப்பட்டாள், தாவணிகளும், கண்ணாடிகளும், வளையல்களும் குவிந்தவண்ணமிருந்த தன் மீதான கவன ஈர்ப்புகளை சுவாரஸ்யமாக உணர்ந்தாள். தோழிகளின் பேச்சுகளிலும், சொல்லாடல்களிலும் ஆண்களைக்கவரும் பெண்ணுடலைப்பற்றிய சிலாகித்தல்களை மிகப்பெரிய மர்மங்களான விசயங்களைக் கிரகித்துக்கொள்ளும் நுட்பத்துடன் கேட்டுக்கொண்டாள். ஏக்கங்களின் சாயல்களைக்கொண்டுள்ள ஆண்களின் பார்வைகளை அனுமானிப்பதன் லாவகம் அவளுக்குக் கிடைக்கப்பெற்றது, தன்னை முன்னிட்டு நடைபெறும் ஆண்களின் செயல்பாட்டு மாறுதல்களைக் கண்டுகொள்ளும் லாவகத்தை பல்லாங்குழி ஆடும் லாவகத்துடன் கைவரப்பெற்றாள், முத்தெடுக்கும் கணக்காக ஆண்களை ஈர்க்கும் கணக்கும் அவளுக்கு அத்துபடியாயின. ஆட்டங்களின் இலாவகத்தை அறிந்திருக்கும் மாலாவின் நகர்தல்களைப் பற்றிய கணக்குகளை அம்மா எளிதாகக் கண்டுகொண்டு கவன ஈர்ப்பை மட்டும் நிகழ்த்திப்பார்க்கும் மாலாவின் நகர்தல்களைக்கூட அம்மா மூர்க்கமாக வெறுக்கிறாள் என்பதை மாலா குறிப்பெடுத்துக்கொண்டாள். கனவுகளைத் துரத்திச்சென்றவாரும், அம்மாவை, வீட்டை எதிர்த்தும் இயங்கத்துவங்கியிருந்த மாலாவிற்கு அம்மாவின் ஏச்சு பேச்சுக்கள் அதிகமாவது உள்ளூர குரூரமான இன்பத்தைத்தந்தது. உடலைப்பற்றிய தீவிரமான பிரக்ஞை அவளுக்குள் வரத்துவங்கிய சிறிது நாட்களிலேயே மகள் முறை என்றும் பாராமல் மாலாவை சித்தப்பன் தொட்டபோது மறுண்டாள். அதைப்பற்றிய குற்றச்சாட்டுகளை வைக்கின்ற அளவு பக்குவப்படாமல் சித்தப்பனை பார்த்து பதறி விலகியவாறிருந்தாள். அம்மா வீட்டிலில்லாத போது வீட்டிற்கு வரவே பயந்து பள்ளியிலேயே திரிந்தவாரிருந்தாள். கிருஸ்துவத் தோழியின் அறிவுரைப்படி DGS தினகரனுக்கு அனைத்தையும் கடிதம் எழுதி சேர்ப்பித்தை மாலா மிகவும் ஆறுதலாக உணர்ந்தாள். தேவகி மாலாவிடம் அப்படி கடிதம் எழுதிப் போட்டுவிடுவது கூட மிகவும் நல்லது, மனதின் சுமைகள் குறையும் என்றவுடன், இனி அம்மாவிற்கு எந்த விதத்திலும் ஒத்துழைப்பு கொடுக்கப் போவதில்லை என்று முடிவு செய்துகொண்டாள். அதீதமாக உடலாலான ஒழுங்கமைவிற்குள் புழங்கும் அம்மா, இப்படியான உறவின் குழைவை சிறு மிரட்சியுடன் தவிர்க்கமுடியாத நிகழ்வைப்போல் எடுத்துக்கொண்டதற்கு மாலா குழப்பமடைந்தாள். மாலாவிற்குள் அதுவரை இருந்துவந்த கொஞ்ச நஞ்ச வெகுளித்தனமும் சுத்தமாக விலகிவிட்டது, என்றோ அரிசி மில்லில் தன்னைத் தூக்கி சுற்றியவனின் ஸ்பரிசத்தை சட்டெனச் சந்தேகித்தாள், அவளை மடியில் இருத்திக்கொண்ட பலரையும் அவர்களின் தொடுதல்களையும் சந்தேகித்தாள்.

ஒழுக்கத்தைப்பற்றிய வரையறைகளுக்குள் வரமறுப்பதன் மூலமாக, வரையறைகளைப்பற்றிய அச்சுறுத்தல்களிலிருந்து வெளியேறுதல் சாத்தியப்பட்டுவிடுகிறது. மாலா அவள் மீதான பிறரின் மீறல்களைப்பற்றிய பதட்டங்களிலிருந்து வெளியேறும் வண்ணம் தொடுதல்களை இரசிக்கத்தொடங்கினாள், அக்கணம் இயல்பாக மாலாவின் மேல், பட்டாம்பூச்சி பூவில் அமர்ந்தது போல் அமர்ந்தது. மாலாவிற்குள் இருந்த மிதமிஞ்சிய தயக்கமும், தன்னுள்ளேயே சுருங்கிக்கொள்ளும் நத்தைப்போன்ற இயல்பும் தொடுதல்களைப்பற்றிய குறைபாடுகளை அவளுக்குள்ளேயே புதைத்துக்கொள்ளவைத்தன. அவ்விசயங்களில் அவள் ஒரே நேரத்தில் சமநிலையையும், முரண்பாட்டையும் கொண்டிருந்தாள். மாலா தனக்குக் கிடைக்கப்பெற்ற உலகத்திலிருந்து வெளியேறவும், அவளுக்கேயான உலகத்தை திருஷ்டித்துக் கொள்ளும் எத்தனிப்பாகவும் எதேச்சையாக இவ்விசயங்களை உள்வாங்கிக்கொண்டாள். வாழ்வின் எல்லா நகர்தல்களும் பல்வேறு சாத்தியங்களை உருவாக்கியவண்ணம் இருக்கிறது, இப்படியான ஒரு சாத்தியப்பாட்டிற்குள் காலம் அவளை நகர்த்தியது இயல்பாக நடந்தேறியதாக மாலா முழுமையாக நம்பினாள். பயணங்களில் கனவுகளுக்கு மனதைக்கொடுத்து இன்பித்திருக்கும் பொழுதுகளிலிருந்து விடுவித்து பின்னால் இருந்து தன்னுடலுடன் விளையாடும் கைகளை விலக்கத்தோன்றாமல் அனுபவிக்கத்துவங்கினாள். சினிமா கொட்டகையில் பக்கத்து இருக்கையிலிருந்து கைகள் தன் கைகளில் தெரியாமல் பட்டது போய், தெரிந்தே வைக்கும் ஆண்களை அதிகமாக ரசித்தாள். தன் கால் தொடும் காலையும், கைகளையும் மிக்க இலாவகமாக வைப்பவர்கள் தவறாக நினைக்காதது போலும், தவறாக நினைத்தாலும் பரவாயில்லை என்பது போலும் இருந்துகொள்ளத்துவங்கினாள். ஆண்களில் இருந்த காமத்தை இன்பமாக மாற்றிக்கொடுக்கும் உணர்ச்சியை போதை போல் உணர்ந்தாள், அந்நிகழ்வுகள் அவளின் வெற்றுக் கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் போதையூட்டி நிகழ்காலத்தின் வேதனைகளில் தன் காலைப்பாவாமல் இருக்கச்செய்வதாகவும், தகப்பனின் போதைக்கு சற்றும் குறைவில்லாதது என்றும் யோசித்துக்கொண்டாள். .

3.

மாலா சட்டென நினைவுகளிலிருந்து வெளியேறி நிகழ்காலத்திற்கு வந்தாள், மாந்தோப்பில் பாவாடை சரசரக்க வேகமாக அடி எடுத்து வைத்துச் சென்று கொண்டிருந்தாள். அம்மாவிடம் பார்வதியைப் பார்க்கப்போவதாகச் சொல்லிவந்ததே மாலாவிற்கு ஏகக்கலிப்பாக இருந்தது, ஒருபக்கம் சிறிது படபடப்பாகவே இருந்தாலும் மற்றொரு பக்கம் உவப்பாகவும் இருந்தது. ”அம்மா கவலைப்பட்டே சாகட்டும்” என்று நினைத்துக்கொண்டு மறுகணம் ”ஏன் இப்படி குரூரமாக நினைத்துக்கோள்கிறோம் அம்மாவும் பாவம் தான்” என்றவாரும் யோசித்துக்கொண்டே சென்றாள். மாலா தவறு செய்வதாய் மறுகும் பொழுதுகளில் அம்மா மீது ஏகப்பட்டக் கரிசனம் வந்துவிடும். மாலா செய்யும் தவறுகளை, வீட்டின் சூழலினாலான துன்பங்களுக்கு சமன் செய்வதாக நினைத்துக்கொண்டு அம்மா மேல் மென்மையான உணர்வுகளை சமீபமாக வளர்த்து வந்தாள். மாலாவிற்குக் கிடைக்கப்பெற்ற சூழல்களிலிருந்து வெளியேற எத்தனிப்பதாய் எண்ணிக்கொண்டு மாலா செய்துவந்த காரியங்களுக்கு அச்சாரமிட்டு, உறுதுணையாய் நின்றுகொண்டிருக்கும் பார்வதியையும், மிஞ்சிய வாழ்க்கையும் அசைபோட்டவாறே நடந்தாள்.

அது கோடையின் மதியான வேளை, அப்போது மாலா பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். வரிசையாக மரநிழல்கள் படர்ந்திருந்த பாதையில், இலைகள் அசையாமல் அமைதியை உதிர்த்தவாரிருந்த ஆளரவமற்ற மண் சாலையில் மாலா அப்பாவுடைய டிவிஎஸ் ஸில் மிதமாக வேகத்தில் சென்றுகொண்டிருந்தாள். வண்டி ஓட்டுவதின் உற்சாகம் செயற்கையான மென்சோகத்தை மறைத்து இயல்பான உற்சாகத்தைக் கொடுத்திருந்தது. வலதுகை பற்றியிருந்த மென்முட்களாலான ஆக்ஸிலரேட்டரைத் எவ்வளவு திருகியும் வேகம் அதிகரிக்காமல், வேகம் மெல்லக் குறைந்து ஒரேயடியாக நின்று விட்டபோது மாலாவுக்கு தனிமையில் திகில் மண்டியது. பதைபதைப்புடன் சிறிது நேரத்தைக்கடத்திய பின் அமைதியைக் கிழித்துக்கொண்டு வந்த புல்லட் சத்தத்தை மாலா பரிட்சயமானதாக உணர்ந்தாள், நெருங்க நெருங்க சத்தம் குறைவதைக் கவனித்தவள் வேகமாக இருமுறை கிக்ஸ்டார்ட் செய்து வண்டி பழுதாகி நின்கிறதென்பதை உணர்த்திக்காட்டினாள். “வண்டி நின்னுடுச்சாப்பா, தள்ளு நான் டிரை பண்ணரேன்” என்றவாறே வேலன் இறங்கிவந்தான். ரிசர்வில் போட்ட சற்றுநேரத்தில் வண்டி ஓடத்துவங்க, “தேங்க்ஸ்” என்று மட்டும் கூறிவிட்டு மாலா உற்சாகமா ஓட்டிக்கொண்டுபோனாள். அதே பாதையில் சில நாட்கள் கழித்து சமீபமாக தோழமையாய் பழகிய மாலாவுடன் படிக்கும் பார்வதியுடன் மிதிவண்டியைத் தள்ளிக்கொண்டு சென்றுகொண்டிருந்த போது மாலாவை நோக்கிவந்த வேலன் சிறிதும் தயங்காமல் மாலாவை நெருங்கி “நான் உன்னைக்காதலிக்கிறேன், உன் முடிவை யோசிச்சி சொல்லு” என்று கூறிவிட்டு கணமான ஒரு புன்னகையை உதிர்த்துக்கொண்டு, ஊடுவிப்பார்த்துக்கொண்டு நின்றான். மாலா கேனத்தனமான சிரிப்புடன், இதயம் வெகுவாகத்துடிக்க, வேலனை விலகி வேகமாக மிதிவண்டியில் சென்றுவிட்டாள்.

சுட்டெரிக்கும் வெயில் நாளொன்றில் பார்வதி மாலாவை என்றுமில்லாமல் பார்வதியின் வீட்டிற்கு வற்புறுத்திக் கூப்பிட்டுச்சென்றாள், பார்வதியின் வீட்டில் திகைப்பூட்டும் வகையில் தனிமை நிறைந்திருந்தது, சற்று நேரத்தில் அங்கே வந்த வேலனைப்பார்த்து மாலாவிற்கு தூக்கிவாரிப்போட்டது, ”செத்த இரு மாலா, தண்ணி மொண்டுட்டுவரேன்” என்றுவிட்டு உள்ளறையில் மறைந்த பார்வதியை எதிர்பார்த்தது காத்திருந்த நேரம் திணரடிக்கும் வகையில் நீண்டுகொண்டிருந்தது. வேலனுடனான தனிமையில் மாலாவுக்கு உடல் நடுங்கியது, தீவிரமாக பிரக்ஞையை தருவித்துக்கொண்டு அந்தக் கணத்திலிருந்து வெளியேற எத்தனித்து கதவின் பக்கம் நகர்ந்தாள், வேலன் அவளுடைய கரங்களை அழுத்தமாகப்பற்றி நிறுத்த மாலா அதிர்ச்சியடைந்தாலும் சற்று நிதானித்து வேலனை மூர்க்கமாய் தடுத்து தள்ளிவிட்டு விலகி உட்கார்ந்துகொண்டாள். ”உன் பிரண்ட் பிரகாசோட ரூம்ல இருக்கா, இப்போதைக்கு அவ கதவை திறக்கமாட்டா, அவங்க என்னல்லாம் செய்திட்டு இருக்காங்களோ நீ என்னடாண்ணா..” என்றவாறு மாலாவிடம் நெருங்கினாள். சுயநினைவு இல்லாதவளைப்போல் அமர்ந்திருந்தவளை வேலன் நெருங்கி ”மடியில படுத்துகிட்டா?” என்றவாரே மடியில் படுத்துக்கொண்டபின்னரே சுயநினைவிற்கு வந்தவளாக பலமுறை மாலா எழுந்துகொள்ள முயன்றாள், வேலனின் அழுத்தமான பற்றுதல்களுக்கு கடைசியாக விட்டுக்கொடுத்து சும்மா இருந்துகொண்டாள். முதன்முதலான ஆணின் நெருக்கமும் மாலாவின் இயல்பும் அந்தக் கணத்தில் பலவீனமாக்கி வீழ்த்தி மாலாவை வேலனிடம் அசைத்து நகர்த்தியவாரிருந்தது, ஆனாலும் வேலன் எழுந்து அமர்ந்து நெருங்கிய போது மூர்க்கமாக விலகி, முத்தம் கேட்டபோது ஒரேயடியாக மறுத்துவிட்டாள். மாலாவுக்கு வேலன் காதலைக்கூறியதை விட, நெருங்கியிருக்கக்கேட்டது இயல்பாகவும், இசைவதற்கு ஏதுவானதாகவும் இருந்தது. வேலனுக்கு மாலாவின் உடல் தான் வேண்டுமென்பதை மாலா பட்டவர்த்தனமாகவே அறிந்துவைத்திருந்தாள். தனக்கும் அப்படித்தான் இருப்பதாக நினைத்துச் சிரித்துக்கொண்டாள்.

மாலா எதிர்பார்த்திருந்த நாள் வெகுவிரைவிலேயே அவளை அடைந்தது, வெப்பம் தகிக்கும் மதிய வேளையில் பார்வதி மாலாவை பூங்காவிற்கு அழைப்பதற்காக வந்து நின்ற நோக்கத்தைப்புரிந்து கொள்ள பெரிய சாமர்த்தியம் எதுவும் தேவைப்படப்போவதில்லை என்று மாலா யோசித்துக்கொண்டு பார்வதியை ஏறெடுத்தும் பார்க்காமல் இருந்தாள். அம்மா சிறுபிள்ளைகளின் விளையாட்டாக எண்ணி மாலாவை சமாதானப்படுத்தி பார்வதியுடன் அனுப்பியதற்கு மாலா தலையிலடித்துக் கொண்டாள். பார்வதியுடன் பேசாமலேயே நடந்துவந்தாள், ஆனாலும் பார்வதி மாலா நினைத்ததைப்போல மோசமானவள் இல்லை, வேலனுக்கு மாலாவின் உடல் தான் வேண்டும் என்றும் அதனால் வேலனிடம் கடுமையாக நடந்துகொண்டு வேலனை விலக்கிவிட எச்சரித்தபடி வந்தாள். பார்வதியை அவர்கள் மிகவும் வற்புறுத்தியதால் தான் மாலாவை அழைத்து வர எத்தனித்ததாகக் கூறிக்கொண்டிருந்தாள். மாலாவிற்கு அந்த சொல்லாடல் மிகவும் திருப்தியாக இருந்தது, பார்வதியின் மீதான கசப்பை நொடியில் விலக்கிவிட்டு சந்தையில் கேட்ட அனைத்து பொருட்களும் கிடைத்துவிட்ட குழந்தைபோல பார்வதியுடன் நடந்தாள். வேலனை சிறிது நேரம் மாலா கெஞ்ச விட்டுப்பார்த்துக் கொண்டிருந்தாள், இருவருக்குமான எல்லையில் வேலனுக்குப் பணிந்தவளை குழந்தைகள் விளையாடும் சிமெண்டினாலான சறுக்கு மரத்தின் கீழே வேலன் அழைத்துப்போனான், அவ்விடம் மறைவாக இருவர் தனிமையில் துவல ஏதுவாக இருந்தது. ஆழமாக இதழுடன் இதழ் இழைத்து, இயல்பான அணைத்தலுடனான நீண்ட முதல் முத்தத்தில் மாலா முழுவதுமாக துவண்டாள். அதற்குப்பிறகும் தன்னிடமிருந்த உடலைப்பற்றிய பிரக்ஞையை மாலா ஆச்சரியமாக உணர்ந்தாள். உடலில் வேலன் தேடித்திளைக்கும் பகுதிகளை ஆவலுடன் அறிந்து உணர்ந்து கொண்டாள், அனேகமாக எல்லா தொடுதல்களுக்குமே மாலா வெகுவாகச்சிலிர்த்தாள். மாலாவின் சிலிர்ப்புகளும், பயிற்பும் அவளுடைய கன்னித்தன்மையை பறைசாற்றி வேலனை வெகுவானப்போதையில் தள்ளியது. வேலன் மூர்க்கத்தனத்தைக்கையாளத்துவங்கிய போது, வேலனின் கடுங்கோபத்தை கண்டு கொள்ளாமல், ஜாக்கெட்டின் ஹூக்குகளைப் போட்டுக்கொண்டு, தாவணியைச் சரிசெய்துகொண்டு விரைந்து எழுந்து சென்றுவிட்டாள். அன்றுமுதல் மாலா உடலின்பத்தின் சூட்சமத்தை அறிந்தாள், வேலனின் தொடுதல்கள் இன்பத்திற்கான வாசலைக் காட்டியது. அன்றிரவு மாலா சுய இன்பத்தின் சில வகைகளைக் கையாளத்துவங்கினாள். எப்படி நடந்ததென்றே தெரியாமல் அவ்விசயங்களைக் கற்றாள், அன்றிலிருந்து தன் கற்பனையில் இருவர் இணைவதையும், தனக்குப் பிடித்தவர்களுடன் வாழ்வதையும் யோசித்துப்பார்ப்பதில் ஆர்வம் செலுத்தத்துவங்கினாள். கற்பனைகளைத்தாண்டி ஓர் உலகம் இருப்பதை புணர்விற்காக மட்டுமே நேசிக்கத்துவங்கினாள். வேலன் வீட்டு மாடுகளுக்கு கலனித்தண்ணீர் கொடுப்பதாகச் சென்று அங்கிருந்த கொட்டகையில் வேலனுடன் முதன்முதலில் இணைந்தாள். அதன் பிறகான நாட்களை அதை உத்தேசித்தே நகர்த்தத்துவங்கினாள். கற்பனையை விட நேரான புணர்வு நன்றாக இருப்பதாக கற்பனைப்புணர்விலும், துணையுடனான புணர்வை விட கற்பனையுடனான சுயஇன்பம் நன்றாக இருப்பதாக துணையுடனான புணர்விலும் யோசித்தாள்.

4.

மாலா வீட்டிற்கு விலக்காகாமலேயே மூன்று நாட்களை நடித்துக்கடந்திருந்தாள், அந்தத் திருட்டுத்தனத்தை அம்மா உணர்ந்திருப்பாளென்று முழுமையாக நம்பினாள். தவறு செய்கிறோமா என்று மறுகத்துவங்கியதை தோல்வியாய் உணர்ந்து, தலையை வெகுவாய் ஆட்டிக்கொண்டு தனக்குள்ளேயே மறுத்துக்கொண்டாள். வெளியேறுதலென்பது அனேகமாக இல்லாமல் போய்விட்ட பின் இருப்பின் வலிகளை எதிர்நோக்கும் கலைகளை பெரும்பாலும் எவருமே கற்பதில்லை, அப்படியான சூழலில் உழலுபவர்களுக்கு மற்றவர்களிடம் இறக்கி வைக்கப் போதும் போதுமெனும் அளவு எதிர்ப்புகளும், குரோதங்களும் இருக்கின்றன. ஆண்/பெண் துணையிடத்தில், தன்னை நெருக்கமாக உணருகின்ற உறவுகளிடத்தில் வெளிப்படும் வன்மம் பெரும்பாலும் சுயவெறுப்பின் அடையாளமாகவே உள்ளதாக அவளுக்குப்பட்டது.

மாலா தன்னுடைய மோசமான நடவடிக்கைகள் மூலமாக தன்னைப்பற்றிய மாற்று உருவங்களை எதிர்ப்புகளாக்கிக் காட்டியவாறு இருந்தாள், எதிர்த்து இயங்கும் துருவமாகவும், விலக்கிவிட முடியாத மோசமான நிஜத்தைப்போலவும் மாலாவின் இருப்பு வீட்டில் பிணைந்தும், குலைந்தும் இருந்துவந்தது. எத்தனை முடியுமோ அத்தனை தூரம் வீட்டில் எதிர்மறையான நிகழ்வுகளை மாலாவிற்கு மனம் பிறளிவிட்டதாக தேவகி நினைக்குமளவு மாலா பதிவு செய்து கொண்டேயிருந்தாள். மாதவிலக்கை அலட்சியமாகக் கையாண்டாள், சரியாக துணிகளையோ, உபகரணங்களையோ மாலா உபயோகித்துக்கொள்ளவில்லை, ஒவ்வொரு சமயம் உள்ளாடை கூட விலக்கு நாட்களில் உபோகிக்காமல் முழுவதும் இரத்தத்தால் ஆன கரையுடன் பாவாடைகளை வேண்டுமென்றே குளியலறையில் விட்டுவிட்டுச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தாள். கரைபடிந்த துண்டுத்துணிகளை பரணியில் பெற்றோரின் கல்யாணப்பானைகளிலும், பரணிமேலிலிருந்த அப்பனின் ஜாமான்கள் இருந்த இரும்புப்பெட்டுயிலும் போட்டு அவர்களுடைய திருமணத்தை மாலா கேலிக்குட்படுத்துவதாக நுட்பமான நுணுக்கங்களைக்கையாண்டாள். வேண்டுமென்றே விலக்கு நாட்களில் சாமி வைத்திருந்த இடத்திற்குச் செல்வதையும், அரிசிப்பெட்டியில் கைவிடுவதையும் மற்றும் சாஸ்திர சம்பிரதாயங்களாக அவர்கள் நினைக்கும் மதிப்பீடுகளை மாலா பரிகசிப்பதைப்போல் மீறிக்காட்டினாள். இப்படியான விபரீத முயற்சிகள் எல்லையற்ற சாத்தியங்களைக் கொண்டிருந்தது, மாலா தனக்கான எல்லையாக எந்த ஒன்றிலும் நின்றுகொள்ளவில்லை. “உன்னால் நீ இப்படியான வாழ்வில் உள்ளதால் தான் மாலாவும் இப்படி இருப்பதாக” அம்மாவிடம் அனைத்து காரியங்களிலும் உணர்த்திக்கொண்டே இருந்தாள். அம்மாவை மாலா எல்லாவற்றிக்கும் காரணமாக்குவதைக்கண்டு அம்மா கொதிப்பதை அம்மாவுடைய கரித்துக்கொட்டப்பட்ட வார்த்தைகளில் கண்டெடுத்தாள். அனாலும் குறிகள் தெரியப்படுத்திருக்கும் அப்பனை எவ்வளவு அவசரமாகப் போர்த்தினாலும் மாலா பார்த்துவிடக்கூடிய சாத்தியப்பாடு முற்றிலுமாக இல்லாதிருக்காது என்ற இயலாமையை அம்மாவால் கடந்துவிடவே முடியாதென்று நினைத்துக்கொண்டாள். போதையில் அம்மாவை புணர்ச்சிக்கு அழைக்கும் அப்பாவின் செயலையும், அப்பாவின் வார்த்தைகளை மாலா கேட்டுத் துடித்துக்கொண்டு காதைப்பொத்திக் குறுகிக்கொண்டு படுத்திருப்பதையும், அம்மையும், காமாலையும் வந்து மாலா படுத்திருந்த போதும் அம்மாவை மாலாவிடம் அண்ட விடாமல் அப்பா செய்த கொடுமைகளையும் அம்மாவால் என்ன செய்து சமன் செய்ய முடியும் என்று பைத்தியம் போல் மீண்டும் மீண்டும் யோசித்துக்கொண்டாள். அப்பன் வாந்தி எடுப்பதைப் பார்த்து, தாண்டிக்குதித்து வெளியேறிவிடும் மாலா அப்பனை கையோங்கி அவன் தலையில் கட்டுப்போட வைத்த மாலாவாக மாறி நின்றாள்.

மாலாவிற்கு மாலாவின் தேவைகளைப்பற்றிய தெளிவான புரிதல் எப்போதுமே இருந்ததில்லையென்றும், அமைதியான வாழ்வில் பிணைத்துக்கொள்ளத் திராணியில்லையென்பதாகவும் நினைத்துக்கொண்டாள். எந்தப் பிரச்சனைகளுமின்றி நகரும் நாட்களில் மாலா அமைதியிழக்கத்துவங்குவாள், அமைதியைப்பற்றிய கண்ணோட்டமே மாலாவிற்குள் முரண்பட்டு உருவேறியிருந்தது. கனவுகளில் புனையும் வாழ்க்கையில் கூட வேதனைகளும் வலிகளும் தேவையாயிருந்தன. துரத்துவது அவளாகவே இருக்க மாலா ஓட வேண்டிய எல்லை, இல்லாத ஒன்றாக இருந்துவந்தது. தேவகியின் நிலையைப்பற்றி மாலா அறிந்தவளாகவும், அறியாதவளாகக் காட்டிக்கொள்பவளாகவும் இருந்துவந்தாள். தேவகி பல வழிகளில், பலவிதமான மாலாவின் மனநிலைகளில் எவ்வெப்படியோ சமாதானம் கூறி தேவகியின் மீதான மாலாவின் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்துக்கொள்ளும் முயற்சிகள் மாலாவிடம் எடுபடவில்லை. முறைதவறி நடந்ததாக நம்பப்படும் அப்பாத்தாவின் அனைத்து குணத்தையும் மாலா கொண்டிருப்பதாக அம்மாவிற்குள் இயல்பான எரிச்சலும், வெறுப்பும் மாலாவிடம் இருந்துவருவதும், எங்கே தாயைப்போல் பிள்ளை என்று மாலாவைக்கொண்டு அப்பா அம்மாவை சந்தேகித்துவிடுவானோவென்று அம்மா வெளிப்படையாகவே விமர்சிப்பதையும் மாலா குரோதத்துடன் அணுகினாள். மாலா முறை தவறிப்போவதை விட, அதனால் அம்மாவிற்கு ஆகக்கூடிய கெடுதலை மாத்திரமே நிறுவிப்பார்க்கும் அம்மாவின் சமன்பாடுகளும், கணவனைத் தண்டிக்கும் விதமாக மாலாவின் வாழ்க்கை நகருவதாக கணக்குகளை சமன் செய்வதும் எதிர்மறையான குணமுள்ள மாலாவை மேன்மேலும் மௌனமாக்கி மாலாவின் மனதை இருண்மையாக்கியது. அவர்கள் இருவருக்குமான இடைவெளிகள் இட்டு நிரப்பக்கூடிய அளவிலேயே இருந்தாலும், இருவர் பக்கங்களிலிருந்தும் அவர்கள் பங்கிற்கு அந்த இடைவெளிகளை அதிகப்படுத்தும் நிகழ்வுகளையே நிகழ்த்திக்கொண்டிருந்தனர், அதை அவர்கள் முழுமையான பிரக்ஞையில்லாமல் தான் செய்துவருகிறார்களா என்று மாலா எப்போதும் குழம்பினாள். தேவகியின் சாமர்த்தியமின்மை மற்றும் மாலாவின் மீதான அலட்சியம் மாலாவைக் கையாளும் விதத்தில் வெளிப்படையாகவே தெரிவதாகவும், அம்மாவுடைய பேச்சுக்களும் நடத்தைகளும் சுயநலம் சார்ந்து இருப்பதாகவும் மாலா கடுமையாக விமர்சித்தாள், சித்தப்பனால் மாலா தொடப்படுவதை அம்மா அரசல்புரசலாக அறிந்து கொண்டபோதும் அம்மாவால் எதுவும் செய்யமுடியாததை மாலா குத்திக்காட்டினாள், அதற்கு, ”அவன் என்னிடமே வேலையைக்காட்டினான், அதை உங்கப்பனிடம் சொல்லப்போய் நான் பட்ட மரண அவஸ்தை எனக்குத்தான் தெரியும், நான் சமாளித்ததைப்போல் ஒழுக்கமான பெண்ணாயிருந்தால் நீயும் சமாளித்திருக்க முடியும், அருவாமணையைத் தூக்கிக்கொண்டு வெட்டப்போன என் செயலின் வீரியம் உன்னிடம் ஏன் இல்லை” என்று அம்மா பதிலளித்தது மாலாவிற்கு மாலா கட்டமைக்க முற்படும் முழுமையான அடையாளத்தை அடையயிலாமல் செய்து வேதனைக்குரியதாய் இருந்து வந்தது.

5.

மாலாவிற்கு தொடர்ந்து வந்த நினைவுகளும், நீண்டுகொண்டே இருப்பதாகப்படும் பாதைகளும் அயர்ச்சியைத்தந்தது. ஆனால் மாலா திரும்பிப்போக முடியாத தூரத்தை அடைந்திருந்தாள். விட்ட இடத்திலிருந்து நினைவுகளைத்துவங்கி அந்தக் கணம் வரையிலான நிகழ்வுகளை நினைவில் ஒட்டிப்பார்க்கும் தொலைவே பார்வதியின் வீடு இருக்குமென்று யூகித்தாள். அப்படியில்லாவிட்டாலும் பார்வதியின் வீட்டை அடையும் வரை நினைவுகளை நீட்டித்துக்கொள்ளவோ சுருக்கிக்கொள்ளவோ முடியுமெனவும் சமாதானம் செய்துகொண்டாள். நினைவுகள் துரத்த ஓடும் எத்தனிப்புடன் வாழ்வில் நடந்த மிச்ச சொச்சத்தையும் நினைவுகளில் ஓட்டிக்கொள்ளத்துவங்கினாள்.

இயல்பிலேயே அதீதக் காமத்தைக்கோரும் அனைவருக்குள்ளுமே, போலியான சம்பிரதாயங்களை மீறி உடல் இச்சைக்கு இசைந்து நடந்துகொள்ள முடியாததைப்பற்றிய பதற்றம் இருந்தும் இல்லாமலும் நிறைந்துள்ளது. அப்படியான ஆசைகள் முற்றுப்பெறாததாகவும் அலைச்சலுக்குரியதாய் தொடர்ந்து இருந்துவருமென்றும், அவை மாலாவுடைய இயல்பின் மீதான பிம்பத்தினை பெரும் குழப்பத்திற்குள்ளாக்குவதாகவும் மாலா உணர்ந்தாள். தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் நுட்பத்துடன் நிதர்சனமான அவ்வுணர்வுகளை விலக்கி சமாதானப்படுத்திக்கொண்டு புணர்வுகளுக்கானத் தேவைகளை வாழ்வின் வன்மங்களிலிருந்து மாலா விதவிதமாக கண்டெடுத்தவாறிருந்தாள், அவளுடைய மறுபக்கமாகக் கட்டமைத்த வாழ்க்கை அவளுக்கு பூரண திருப்தியைத் தந்தது, கற்பனைகளில் புனையும் ஆசைகளை நடைமுறைப்படுத்தும் வாய்ப்புகளை அதிகப்படுத்திக்கொள்ளும் விதமாக புதிய ஆண்களைத் தொடுவதிலும், புதிய ஆண்களால் தொடப்படுவதிலும் தேடல் இருப்பதாக மாலா உணர்ந்தாள். ஆணால் தொடப்படும் பூரிப்பினாலான சுவடுகளை மாலா அம்மாவிடம் வேண்டுமென்றே வெளிப்படுத்தியவாரும் இருந்தாள், மாலாவின் நடத்தைகள் எல்லை மீறிப் போகும் பதட்டத்தைக்கூட்ட ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் நெருக்கமாக இருப்பதை அம்மாவிற்குத் தெரியுமளவிலும் பார்த்துக்கொண்டாள். அப்பாவிடமோ, மற்றவர்களிடமோ சொல்லமுடியாத துயரத்தை அம்மா சூடுபோட்டு தணித்துக்கொண்டாதாக நினைத்த மாலா அப்படியான அம்மாவின் செயல் மாலாவின் வெற்றி என்றும் இறுமாந்தாள். மாலா பல ஆண்களுடன் செல்வதை தேவகியிடம் மறைக்கமுடிந்தாலும் வேண்டுமென்றே தேவகிக்குத் தெரியுமளவிலும், பலருக்கும் தெரியாதவாரும் இருந்துகொண்டாள். தேவகி சூடு போட்டதற்கும் சேர்த்து அதிகம் புணர்ந்தாள். வேலனுடன் ராகவனை தற்செயலாகப் பார்த்தபோது வெகுஇயல்பாக ராகவன் மேலான மாலாவின் விருப்பத்தை மறைமுகமாக வெளியிட்டாள். இப்படியான அழைப்புகளை ஆண்கள் எப்படியும் அறிந்து கொள்வார்கள் என்று நம்பினாள். எதிர்பார்ப்புகள் பொய்க்காமல், ராகவனுடன் இருக்க நேர்ந்த பொழுதுகளில் ராகவன் காட்டிய தீவிரமும், கொடுத்த புதிய அனுபவங்களையும் முரட்டுத்தனமாகச் சேர்தலையும் மாலா அதிகம் விரும்பினாள். காமத்தைப்பற்றிய எந்தவிதமான ரசனையுமற்ற வேலனின் அவசரத் தொடுதல்களும், கழிப்பறை போல் தன்னை பயன்படுத்தும் விதமும் மாலாவுக்கு எரிச்சலைத்தந்தது. இத்தனைக்கும் மேலும் வேலனிடம் உள்ள மாலாவின் மீதான காதலை, வேலன் மீதான மாலாவுடைய மென்னுணர்வை வெகுவாக உதாசீனப்படுத்தினாள், வேலன் அவளை இத்தனை நடந்த பிறகும் காதலிப்பது வேலனை முற்றிலுமாக துரக்கவேண்டியதற்கான முதல் காரணமென்று நினைத்துக்கொண்டாள். எல்லாவற்றிற்கும் இந்த உலகில் ஒரு தேவையிருக்கிறது, நல்லவையோ கெட்டவையோ என்று சிரித்துக்கொண்டாள். உடலுடன் ஏற்படுத்திக்கொள்ளும் பிணைப்பு, மனதுடனான பிணைப்பைவிட மாலாவுக்கு ரசிக்கக்கூடியதாய்பட்டது.

விளையாட்டின் சுவாரஸ்யமான திருப்பங்களைப்போல் ராகவன் ராகவனுடைய நண்பனைக் கூட்டிக்கொண்டு வந்தது மாலாவிற்கு அடியோடு பிடிக்காமல் இருந்தாலும் வந்தவன் மாலாவை முரட்டுத்தனமாக புணர்விற்கு உட்படுத்தினான். காம உணர்வு மிருகத்தைப்போல பசியுடையது, உடலில் பாய்ந்து புரண்ட மிருகத்தை மிருதுவான மாலாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சிறிது நேரத்தில் காமத்தினால் தூண்டப்பட்ட உணர்ச்சியால் விளையும் அயர்ச்சியை மாலாவினால் புரிந்து கொள்ள இயலுவதில்லை. பிடிக்காமலேயே தொடப்பட்டால் கூட நேரம் ஆக வலிமை இழந்து காம உணர்வாலேயே அவர்களுக்கு ஒத்துப்போவதாய் மிரண்டாள். ராகவன் இரண்டு மாதங்கள் மாலாவை நச்சரித்து, ராகவனுடனும், ராகவனுடைய நண்பனுடனும் ஒன்றாக புணருவதற்குச் சம்மதம் பெற்ற நாள் முதல், மாலா நிகழப்போகும் சேர்தலின் கற்பனையை மனதில் ஓட்டிப்பார்த்துக்கொண்டே இருந்தாள். மாலா அந்த விசயங்களில் மட்டும் முரண்பட்டு பெரிதாக எதையும் எதிர்க்க முனையாமல் அந்தந்த கணத்திற்குரியவளாக, நண்பர்களின் தேவைகளை மறுக்காதவளாக வெகுஇயல்பாக இருந்துவந்தாள். இருவருடனும் இணைவது அப்படி மரண அவஸ்தையாகிப் போகும் என்று மாலா சற்றும் எதிர்பார்க்கவில்லை. காலம் மாலாவை வஞ்சம் தீர்ப்பதைப்போல் நண்பர்கள் இருவரும் மாலாவைப் பழிவாங்கியிருந்தார்கள், ஒருவனுடைய ஆண்மையை மற்றவனுக்குக்காட்டும் மேடையாக அவளை உபயோகித்திருந்தார்கள். மாலாவின் மார்புக்காம்புகள் புண்ணாகி உள்பாடியில் ஒட்டிக்கொண்டு வலியால் துடித்தாள், மேலும் உடலெங்கும் இரத்தம் கட்டிக்கொண்டு கண்ணிப்போயிருந்தது. இரண்டு, மூன்று நாட்கள் நடக்கவேமுடியாமல் துன்பினாள். வயிற்றுவலி என்று படுத்தே கிடந்தாள் மாலா காமத்தை, உடலின்பத்தைக்கண்டு முதன் முதலில் சற்று அறுவெறுப்படைந்தாள். அதிகபட்சமான சுயத்தாக்குதலாக உணர்ந்துகொண்டு தவித்தாள். இவ்வளவு வன்மங்களை அவளுக்குள்ளேயே நிகழ்த்திக்கொள்ளும் செயல்களின் தேவைகளை கேள்விக்குட்படுத்திக் கொள்ளத்துவங்கினாள். அதே மாதத்தில் மாலாவிற்கு நாட்கள் தெள்ளிச்செல்ல தன் கர்ப்பத்திற்கு இவன் தான் காரணம் என்று சொல்லமுடியாதை யோசித்தவேரே இருந்தாள். அது பெரிய பிரச்சனையில்லையென்றாலும் யாரிடம் போய் கர்ப்பத்தை கலைத்துத்தரச்சொல்லி நிற்பது என்பது மாலாவின் பெரும்பாடாக இருந்தது.

வெறுப்பிற்கும் விருப்பத்திற்குமான இடைவெளியென்று ஏதும் இல்லாமல் கவிந்துவிட்டபின் மாலாவிற்கு விசேசமாகச் செய்யக்கூடியவை காரணமேயின்றி சாத்தியமற்றுப்போயின. பொதுவாகவே நாமே நம்மை செலுத்திக்கொள்ளும் அபாயங்கள் சுவாரஸ்யமானவையென்றும், மற்றவர்கள் திணிக்கும் அபாயங்களே தப்பித்தல்களை கோருமென்றும் மாலா யோசித்துக்கொண்டாள். இத்தனைக்கும் மேல் கர்ப்பத்திற்கு இன்னார் தான் காரணமென்று சொல்ல முடியாதது மாலாவிற்கு அந்தக் கணத்திலும், சூழலிலும் சிரிப்பாக இருந்ததும், உற்சாகத்தைக் கொண்டு வந்து சேர்த்ததும் மாலாவிற்கு வினோதமாக இருந்தது. மாலாவிற்கு அவள் செய்வது எதுவும் தப்பு என்ற எண்ணம் வருவதில்லை, செய்யக்கூடாது என்ற அளவில் மாலா எதையும் யோசித்துக்கொண்டதில்லை, திணிக்கப்பட்ட வரையறைகளுக்குள் மாலா என்றுமே இருந்ததில்லை, அப்படியான இருத்தலை மதிப்பிற்குரியதாய் உணர்ந்ததும் இல்லை. மாலாவிற்கு இப்படியான கருவைச் சுமப்பதும் உற்சாகமான நிகழ்வாகவே தெரிந்தது. தப்பித்தல்கள் எல்லையற்றவை, ஏதோவொன்றிலிருந்து ஓடிக்கொண்டேயிருப்பது தொடர்ந்து அயர்ச்சியையே தரும் என்பதாகவும், அந்தந்தக் கணத்தை அனுபவிப்பதன் மூலமாகத் தப்பித்தல்கள் நிற்குமென்பதாகவும் சட்டென தன் இயல்பிலிருந்து முரண்பட்டு நம்பத்துவங்கினாள். ஆனாலும், கர்ப்பம் வீட்டில் பிரளயத்தையே உண்டுபண்ணுமென்றும், அவளுடைய பெற்றோர்களை தண்டிக்கப் போதுமானதாக இருக்குமென்றும் யோசித்துக்கொண்டு அவளை நியாயப்படுத்திக்கொண்டாள்.

6.

மாலா இப்படியான இக்கட்டான சூழலிருந்து தன்னை விடுவிக்க வேலனால் மட்டுமே முடியுமெனவும் வேலனிடம் தான் அதிகாரத்துடன் சென்று நிற்க முடியுமெனவும் உணர்ந்திருந்தாள். வேலனிடம் நேராகக் கேட்கக் கூசிக்கொண்டு உதவிக்காக பார்வதியின் வீட்டை அடைந்திருந்தாள். சற்று நேரத்தில் பார்வதியுடன் வந்த வேலன், வந்ததும் வராததுமாக ஒரேயடியாகக் குதித்தான், மாலாவிற்கு உதவவே முடியாது என்றும், அதற்கு வேறு ஆளைப்பார் என்றும் மல்லுக்கட்டினான். மாலா சற்றும் கலங்கவில்லை வேலன் வந்திருந்ததே அவளுக்குப் போதுமானதாக இருந்தது, சொல்லிவைத்துக்கொண்டு நாடகமாடும் லாகவத்துடன் அந்தக் கணம் எந்த விசேசங்களுமின்றி இயல்பாக நடந்தேறியது. உள்ளுணர்வில் கிடைத்த சமாதானத்துடன் மாலா தீர்க்கமாக வேலனைப்பார்த்து முறைத்துவிட்டு வெளியேறினாள்.

வாழ்க்கை வெகுவாகத்திட்டமிட்ட இலாவகங்களை அனைத்து விசயங்களிலும் நடந்தேற்றியவாறே இருக்கிறது, புனைவின் வெளியில் பட்டவர்த்தனமாகத்தெரியும் அந்தத் திட்டமிடல் நடைமுறையில் ஆச்சரியப்படுமளவில் இயல்பினாலானது. இருப்பைப்பற்றிய பயங்கரங்களையும், மீறிச்செல்லும் அச்சுறுத்தலையும் நிழத்தியவாறு ஒரு உடலிருப்பாகக் குற்ற உணர்வில்லாமல் இயல்பாகவே மாலா அந்தக் கணங்களை கடந்துகொண்டிருப்பதின் சாட்சியாக அன்று முன் இரவிலேயே ஆழ்ந்த தூக்கத்திலிருந்தாள். மாலாவினுடைய நகர்தல்களையும் வேகமான இயல்பையும் அறிந்திருந்த வேலன் அன்று இரவே மாலாவின் கருவின் தோராயமான வயதைக்கணித்து அதற்கேற்றார் போல் மாத்திரைகளை வாங்கி வைத்து மாலாவிடம் கொடுப்பதற்கான ஏதுவான சமயத்தைப்பார்த்துக்கொண்டிருந்தான். மாலாவை தன்னவளாக ஆக்கிக்கொள்ள, தன்னுடனே நிறுத்திக்கொள்ள அமைந்த சந்தர்ப்பத்தை முழுவதுமாக உபயோகித்துக்கொள்ளும் விதமாக வேலன் மாலாவின் மேல் அந்தச் சந்தர்ப்பத்திலும் மிகவும் வாஞ்சையாக இருந்தான். தேவகி வீட்டிலிருந்து இடதுபுறமாக திரும்பி நேரம் ஒன்பது ஆகியிருந்தும் வராத கணவனைத் தேடிப்போக, தேவகியின் கணவன் வலதுபுறமாக தேவகி பார்க்காத சந்தர்ப்பத்தில் வீட்டில் முன்கட்டிலில் கவிழ்ந்துவிட்டிருந்தான். தேவகியைக் கவனித்த வேலன், தேவகியின் கணவனைக் கவனிக்காமல் விதியின் வலிமையான கரங்களில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு மாலாவை சந்திக்க மாலாவின் வீட்டை அடைந்திருந்தான். முன் அனுமானங்களை ஒரேயடியாகப் புரட்டிப்போடும் சாகசத்தைக் காலம் அங்கே அன்று நடத்திக்காட்டியது. தேவகியின் அவதானித்தலும், வேலனின் அவதானித்தலும் ஒன்றாக பொய்த்துப்போய் அன்று இருவரும் காலத்தின் கோரவாயில் விழுந்து, மாலாவின் அப்பாவிடம் ஒன்றாகச் சிக்கிக்கொண்டார்கள். காலம் கொடுமையான நொடிகளை அவர்கள் வீட்டில் நகர்த்திவிட்டு நடப்பவற்றை வேடிக்கைபார்க்கத்துவங்கியிருந்தது.

மாலா ஆழ்ந்த உறக்கத்திலிருந்து ஆரவாரம் கேட்டு எழுந்துவந்த போது அவளுடைய அப்பா அம்மாவைக் கண்மண் தெரியாமல் அடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தாள். வேலன் அப்பாவைத் தடுத்துக் கொண்டிருப்பதையும், சிலமுறை வேலனும் அடிவாங்கிக் கொண்டிருந்ததையும் கண்ட மாலாவிற்கு எதுவும் விலங்கவில்லை. சற்றே பொருத்து நடந்திருக்கக்கூடியவற்றை ஒருவாராக யூகித்தாள். மாலா எத்தனைக்கூறியும் கேட்காமல் மாலாவின் அப்பா அம்மாவை இழுத்துப் போட்டு அடித்துக்கொண்டே இருந்தான். ஒரு அடிவிட்டால் சுருண்டிபடுத்துவிடக்கூடிய ஆகிருதியுள்ள அப்பாவிடம் வேலன் அடிவாங்கிக்கொண்டிருந்தது மாலாவிற்கு எரிச்சலாக இருந்தது. தன்னைப்பார்க்கத்தான் வேலன் வந்தான் என்று அப்பாவை நோக்கி மாலா காட்டுக்கத்தல் கத்தினாள். வேலனிடம் சென்று அப்பாவைத் தடுக்குமாறும் ”நீயெல்லாம் ஒரு ஆம்பலையா உன்னை நம்பினேன் பாரு என்னைச் சொல்லனும்” என்று மாலா கத்தினாள். தேவகியை அடித்துக்கொண்டிருந்த மாலாவின் அப்பாவை வேலன் பலமாக இழுத்து விலக்கிவிட்டு, ”கொன்று போட்டுவிடுவேன்” என்று மிரட்டவும் மாலாவின் அப்பா வாந்தியெடுத்தவாறே கீழே விழுந்தான். நடப்பதைப்பற்றிய பிரக்ஞையில்லாமல் தேவகி கணவன் தள்ளிவிட்ட வாக்கிலேயே அமர்ந்திருப்பதையும், மாலாவின் அமைதியையும் கவனித்த வேலன் சற்று நேரம் நின்றிருந்துவிட்டு சோர்வாக வெளியேறினான். சற்று பொருத்து தேவகி மெதுவாக எழுந்து வாந்தியைக்கழுவ எத்தனிக்கவும் மாலா சற்று ஆறுதலடைந்து, வெளி அறையிலேயே படுத்துக்கொண்டாள். அடிக்கடி எழுந்து அப்பாவின் அருகில் படுத்திருந்த அம்மாவைப் பார்த்துக்கொண்டாள். இவர்கள் அடித்துக்கொள்வதும் பின்னர் காலையில் இயல்பாவதும் வழக்கம் தான் என்றும், அசம்பாவிதமாகவே இருந்தாலும் நிகழக்கூடியவற்றை என்னவென்று எப்படியென்று தடுக்கமுடியுமென்றும் சமாதானம் செய்துகொண்டு தூங்கிப்போனாள். அடுத்தநாள் இயல்பாகவே நேரம் சென்று மாலா எழுந்த போது, மயான அமைதி அவர்கள் வீட்டைக் கவிந்திருந்தது, தேவகி எல்லாப் பாத்திரங்களையும் எடுத்துப்போட்டு வழக்கத்திற்கு மாறாகக் கரித்துக்கொட்டாமல் அமைதியாக விலக்கிக்கொண்டிருந்ததை சற்று நேரம் அசையாமல் பார்த்த மாலா அவளுக்குள் ஏதோவொன்று வலியுடன் விலகுவதைத் தாங்க முடியாத வெதனையுடன் உணர்ந்தாள், முந்தைய இரவின் தாக்கம் சற்றும் இல்லாமல் அனைத்தும் இயல்பாக நகர்வதின் கணம் மாலாவை வெகுவாக வீழ்த்திக்கொண்டிருந்தது. மாலாவுடனான தேவகியின் இருக்கமான எதிர்கொள்ளலைத் தாங்கிக்கொள்ள இயலாததாலேயே தேவகியை உளுக்கியெடுக்கக்கூடிய வித்தைகளை மாலா கையாண்டவாரிருந்தாள், மாலாவிற்கும் தேவகிக்குமிடையேயான பகிர்வு சாத்தியமற்றுப்போய், மாலாவினுடைய வெளியேறுதல்கள் சமநிலையிலிருந்து முரண்பாடு நோக்கியதாய் அமைந்துவிட்டிருந்தது. அவர்கள் அவர்களை அப்படியான சிதைவுகளை விளைவித்த விசயங்களினூடாகவே எதிர்கொள்ள நேர்ந்திருந்தது. அன்றும் மாலா அம்மாவின் இருக்கத்தை எதிர்கொள்ள இயலாமல் சட்டென குளித்துக்கிளம்பி பத்தே நிமிடங்களில் வெளியேறினாள்.

மாலா அன்று இரவு வீடு் திரும்பிய போது தேவகி கணவனுக்குச் சூடாக சோற்றைப் பரிமாறிக்கொண்டிருந்தாள். வீட்டில் நுழைந்த மாலாவைப்பார்க்கவும், ”வந்து உட்காரு சாப்பிடலாம்” என்று அழைத்தாள். மாலாவின் அப்பாவும் அமைதியாக போதையின்றி உட்கார்ந்திருக்க மாலாவிற்கு உலகம் காலடியில் நழுவுவதைப் போல் இருந்தது. மாலா இருவரையும் முறைத்தவாறே உள்ளறைக்கு நகர்ந்தாள். அவளுக்கு ஏதோ எதிர்பார்த்தது நடக்காதது போலும், என்ன எதிர்பார்த்தோம் என்பது விலங்குவது போலும், விலங்காதது போலும் இருந்தது. கணவன் வெளியில் கிளம்பிய உடன் தேவகி மாலாவின் அருகில் அமர்ந்து வேலன் கொடுத்த மாத்திரைகளையும், ஒரு சிறிய கோப்பையில் கசாயத்தையும் கொடுத்துக் குடிக்கச்சொன்னாள். வாழ்க்கையை அதன் போக்கில் எடுத்துக்கொண்டு செல்லுமாறும், வேலனை தேவகி சந்தித்ததைப்பற்றியும், வேலன் மாலாவைக் கல்யாணம் செய்துகொள்ள விரும்புவதாகவும், மாலா மேல் உயிரையே வைத்திருப்பதாகக் கூறியதாகவும் சொல்லிக்கொண்டிருந்தாள். மாலா கற்பனையும் செய்யமுடியாத அளவிற்கு மாறுதல் நிச்சயம் நிகழுமெனவும், மாலாவின் வேதனைகளை, எண்ணவோட்டங்களை அறிந்துகொண்டவளாக உணர்த்திக்கொண்டு ஆறுதலாகப் பேசிக்கொண்டிருந்தாள். மாலாவிற்கு எப்போதும் இல்லாமல் ஆங்காரத்துடன் அழுகை முட்டிக்கொண்டு வந்தது. சந்தர்ப்பத்தைப்பயன்படுத்த விளைந்த வேலன் மேல் தாங்க இயலாத ஆத்திரமும், கோபமும் மாலாவிற்கு வந்தது. மாலா இலேசாக அழத்துவங்கி, தேம்பி, விசும்பி பெரிதாக அழ ஆரம்பித்தாள், அத்தனை ஆங்காரத்தையும் அழுகையில் கரைக்க முற்படுபவளாக மாலா அழுதுகோண்டே இருந்தாள். அம்மா கடனை செவ்வனே செய்துவிட்டு எவருக்கும் பெரிதாக பாதிப்பில்லாமல் காய்களை நகர்த்தி வைத்திருந்ததையும், அம்மாவின் பக்கம் பாதிப்பு முற்றிலும் இல்லாமல் போவதை ஊர்ஜிதம் செய்துகொள்வது தான் அம்மாவின் தலையான பாடாக இருந்திருக்கும் என்றும் யோசித்து அழுதுகொண்டிருந்தாள். அம்மாவிடம் மிஞ்சியிருந்த சொற்பமான சாமர்த்தியத்தின் பலானாக மாலாவிடம் முரட்டுத்தனம் காட்டாததையும், அப்பாவிற்கு தூபத்தை போடும் விதத்தில் போட்டு தற்காலிகமாகவாவது குடிக்கவிடாமல் அடித்திருந்ததையும் மாலா தன்னுடைய தோல்வியாக உணர்ந்தாள். கேள்விகளைத் தவிர்த்த ஆறுதல்களும், சண்டைகளைத் தவிர்த்த சமாதானங்களும், வெறுப்புகள் தவிர்த்த அன்பும் எதிர்மறையான குணமுள்ள தன்னை நீர்த்துப்போகவைப்பதாகவும் மேலும் பிறந்ததிலிருந்து நடந்தவற்றையும் எண்ணியவாறு நாட்கணக்கில் அழுதுகொண்டே இருந்தாள், மாலாவின் அழுகை எப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து அந்த வீட்டில் ஒலித்துக்கொண்டே இருந்தது, மரங்களும், ஊஞ்சலும், மாலா வளர்த்த மல்லிகைக்கொடிகளும், பூப்பூக்கும் செடிகளும் மாலா அடுத்து என்ன செய்வாள் என்ற புதிர் அவிழுமா என்று பார்த்துக்கொண்டிருந்தன. ஒன்று மட்டும் நிச்சயம், மாலா சராசரியான பெண்கள் செய்யக்கூடிய எதையும் செய்யப்போவதில்லை. அந்த வீட்டில் சராசரியான வீட்டில் நடந்திருக்கக்கூடிய சாத்தியப்பாடுள்ள விசயங்கள் நடந்திருக்கவில்லை, நடக்கப்போவதற்கான அறிகுறிகளும் இல்லை.

(இந்த சிறுகதை மணல் வீடு ஜூன்-2016, இதழ் எண் – 26 –ல் வெளியானது. ஆசிரியரின் முறையான அனுமதி பெற்று கதைக்களம்பகுதிக்காக சேர்க்கப்பட்டுள்ளது.)

மேலும் வாசிக்க

வாசகசாலை

வணக்கம், எங்கள் அனைவருக்கும் முதன் முதலில் முகநூல் வாயிலாகத்தான் இறுக்கமான, இணக்கமான நட்பு உண்டானது.இலக்கிய வாசிப்பை பொதுப்பண்பாகக் கொண்டு அமைந்த ஒரு குழுமத்தின் மூலமே இத்தகைய நட்புகள் கிட்டப்பெற்றன.காலம் சென்றுக்கொண்டே இருக்க, வெறுமனே பேச்சு, பதிவு, அரட்டை என்பதோடு நம் இலக்கிய ஆர்வம் தேங்கிப் போக வேண்டுமா ? என எங்களுக்குள் அடிக்கடி கேள்விகள் ஒவ்வொரு நண்பர்களிடமிருந்தும் வந்த வண்ணமிருந்தது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button