
பறவைகளின் மூன்று வேலைகள்
பள்ளி நண்பர்களைப் போல
தோற்றமளிக்கும் சில பறவைகள் உண்டு
அவை நாள்தோறும்
மூன்று வேலைகளைச் செய்கின்றன
துல்லியமான தருணத்தில்
மரத்தின் ஓர் உறுப்பாக இருப்பது
பறக்கும்போது
மேகங்களைப் போல நடித்துக் காட்டுவது
அப்பறவைகளின் பெயரிலேயே மீதம் வாழ்வது என
மூன்று வேலைகளைச் செய்கின்றன.
***
இரு வாழ்வி
மூழ்கிய போதெல்லாம்
தண்ணீரில் வாழும் உயிர்களோடு பேசியதாக
என் அம்மா சொல்லி இருக்கிறாள்.
அவளுக்கு இரண்டு உடல்கள் இருந்தன
மகிழ்வதற்காக ஒரு தளிர் உடல்.
உழைக்கவும் அப்பாவின் வதைகளை
சகித்துக் கொள்ளவும் ஒரு உடல்.
இரண்டு உடல்களையும்
கவனமாக கையாளத் தெரிந்த அவளுக்கு
தண்ணீரோடு பேசுவதற்கு
தனியே ஒரு வாய் நிச்சயம் இருந்திருக்கும்.
***
தட்டச்சர்
அவர் எப்பொழுதும்
ஒரு பணியாளராக
தனது கைகளால் பேசினார்.
பல ஆண்டுகளாக
இரண்டு ஊர்களில்
ஒரே நாளில்
இரு மொழிகளில்
தனது கைகளின் பேச்சால் பணியாற்றினார்.
விபத்தில் ஒரு கையை இழந்ததும்
உண்டான மௌனம் நிறைய பேசுகிறது.
***
பறவையை விழுங்கியவன்
வாயில் பாதி விழுங்கிய பறவையோடு நிற்கிறவன்
குழந்தைகள் யாரும் அவனைப் பார்க்கக் கூடாது என்று
முதலில் பிரார்த்தனை செய்தான்.
இதைப் படிக்கும் நீங்கள் கூட
அவனைக் கோபமாகத்தான் பார்க்கக்கூடும்.
அவன் தொண்டையில் மாட்டி கிழித்த மீன் முள்ளை
அலகில் கொத்திக் கவ்வியபடி
ரத்தம் பூசிக்கொண்டு அப்பறவை
வெளியே வருகிறது பாருங்கள்.
அப்பறவை மீது ஊற்றி கழுவுவதற்கான தண்ணீர்க் குடத்தை
யார் எடுப்பது என்ற போட்டியில்
நீங்கள் எல்லோரும் இருப்பீர்கள்
நானோ ஒரு குவளைத் வெண்ணீரை எடுத்துக்கொள்கிறேன்
அவன் தொண்டைக்கு ஒத்தடம் தர.
***
இரகசியமாகக் காத்திருக்கிறேன்
இரவுகள் முகத்தில் விழுகின்றன,
பகல்களும் முகத்தில் விழுகின்றன.
அவை ஒன்றுடன் ஒன்று சேர்ந்து
எனக்கான ஒழுங்கற்ற நாட்களை உருவாக்குகின்றன
காற்றிலும் மாறும்
அவற்றின் எடை
எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை
சில நேரங்களில் அவை மேலே இருந்து விழுந்து
பள்ளங்களை உருவாக்குகின்றன
மற்ற நேரங்களில்
அவை சிறிய இலைகளின் மீது சாய்ந்து
நிழலை விட்டுச்செல்கின்றன.
நான் அவற்றை அளவிடுகிறேன்,
வாரங்கள் மாதங்கள் பருவங்கள் வருடங்கள் என பிரிக்கிறேன்
அவற்றின் எல்லா பிரிப்பிலும்
திரும்பி போய்விடுகிறேன் என்று சொல்லுகிறேன்
ஆனாலும் அன்பானவர்களின் முகத்தின் அருளைப் பெற
ரகசியமாகக் காத்திருக்கிறேன்.
********