
மௌனத் திரைப்படத்தின் பீஷ்ம பிதாமகர் அல்லது முன்னத்தி ஏரான செர்ஜி ஐஸென்ஸ்டின் பெயர் சொன்னதும் அவரது திரைக் காவியமான போர்க்கப்பல் பொடம்கின் Battleship Potemkin படம் தான் சினிமா ஆர்வலர்களுக்கு உடனடியாக நினைவுக்கு வரும். கொஞ்சம் யோசித்து கெ விவா மெக்ஸிகோ என்ற அவரது முழுமையடையாத திரைப்படத்தின் பெயரை நினைவு கூர்வது இயல்பு. இருபதாம் நூற்றாண்டின் இரண்டாவது பத்தாண்டுகளில் தொடர்ந்து சாதனை நிகழ்த்த இயலாமல் செர்ஜி இறந்து பட்டார். இன்றைக்கும் ஒடசா ஸ்டெப்ஸ் (Odessa Steps) என்ற பெயரில் அறியப்படும் பேட்டில்ஷிப் பொடம்கின் படக் காட்சி பார்வையாளர்களைச் செயல் மறந்து பார்க்க வைக்கக் கூடியது. அதே போல் எடுத்த வரைக்குமான கெ விவா மெக்ஸிகோ மௌனப் படம் அதன் அற்புதமான திரையாக்கத்துக்காகக் காணவேண்டியது.
செர்ஜி ஐஸென்ஸ்டினின் படம் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் விரிவாக அலசலாம். இப்போது அதே பெயரில் அண்மையில் வெளியான கெ விவா மெக்ஸிகோ என்னும் புது அலைத் திரைப்படம் பற்றி கொஞ்சம் பேசலாம். உரக்கப் பேசும் படம் இது. அங்கதமும், தொட்டதற்கெல்லாம் ஸ்பானிஷ் எக்காளமும், சீராக ஒலிக்கும் முரசும் கூடவே நாட்டியமுமாக நகரும் கதையோட்டம்.
கிராமப் புர இளைஞனாக, சாமானியனாக நகரம் வந்து வாழ்க்கைத் தரத்தில் வெகு வேகமாக முன்னேறியவன் பாஞ்சோ. அழகான மனைவி, மகள், சகல வாழ்க்கை வசதிகள் என்று பெரிய பங்களாவில் ஆடம்பர வாழ்வு வாழ்கிறான். அவன் மிகப் பெரிய பதவி வகிக்கும் தொழிற்சாலை உடமையாளர், பாஞ்சோ மேல் ஏகப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறார். வாயைத் திறந்தால் கெட்டவார்த்தை மழை பொழிகிற இந்த ஆசாமியை, மாதம் பிறந்தால் அள்ளிக் கொடுக்கிற சம்பளத்துக்காகப் பொறுத்துக் கொள்கிறான் பாஞ்சோ. உடமையாளர் நஷ்டக் கணக்கு காட்டி ஏகப்பட்ட தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்ப பாஞ்சோவிடம் உத்தரவிடுகிறார். கடுமையாக ஆட்சேபித்துத் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் இறங்குவார்களே என்று பாஞ்சோ சொல்ல, ’பொதுவுடமை வாதிகளை எனக்கு வாய்வழி உபசாரம் செய்யச் சொல்லு’ என்கிறார் அவர் அலட்சியமாக. ஆட்குறைப்பு செய்யும் பொறுப்பு பாஞ்சோ தலையில். செய்யாவிட்டால் அவன் உத்தியோகம் தொலைந்துவிடும். சகல டென்ஷனோடும் நாள் நகர்த்தி விடிந்து அடுத்த நாள் அது தொடர ஆபீஸ் போகிறான் பாஞ்சோ.
பாஞ்சோவின் அப்பா சொந்த ஊரிலிருந்து அவனுக்கு அவசரமாக தொலைபேசுகிறார். தாத்தா செத்துப் போயிட்டார் என்று தகவல் சொல்வதோடு அவனை உடனடியாக ஊருக்கு வரச் சொல்கிறார். அந்த ஊருக்கு அண்மையில் கட்டித் தங்கம் வெட்டியெடுக்கக் கிடைக்கிறது என்று பரவலான நம்பிக்கை இருக்கிறது. தாத்தாவும் சிறுவனாக பாஞ்சோவும் இருபது வருடம் முன்பு மற்ற ஊர்க்காரர்கள் போல் அங்கே அவ்வப்போது தங்கம் தேடி மண்வெட்டியோடு கிளம்பியிருக்கிறார்கள். ’தாத்தா பாடுபட்டதெல்லாம் பயனில்லாமல் போகவில்லை. அவருக்குப் பிரியமான பேரன் நீ. ஊருக்கு வா. நேரில் பேசலாம்’ என்று அப்பா அழைக்க பாஞ்சோ குடும்பத்தோடு ஊரைப் பார்க்கக் கிளம்புகிறான். அங்கே அவனுக்கு தாத்தா பழைய பீரோவில் பதுக்கி வைத்த தங்கம் கிடைக்கிறது. பாஞ்சோவுக்கு பொன் கிடைத்த செய்தி கிடைத்து அவன் அப்பா, அம்மா, பாட்டி தொடங்கி நெருங்கிய உறவினர் முதல் அண்டை அயல், தூரத்துச் சொந்தம் வரை தங்கத்தில் பங்கு கிடைக்க மும்முரமாக முயல்கிறார்கள். சகோதரன் சம்சாரம் வலிய வந்து அவனோடு உறவு வைத்துக்கொள்கிறாள். உள்ளூர் போலீஸ் உத்தியோகஸ்தனும் சொந்தக்காரனுமான ஒருத்தன் விஷயம் தெரிந்து அதிகாரமாக தனக்கும் தங்கம் கேட்டு, பாஞ்சோவை சிறையில் தள்ளுகிறான். மூன்று நாள் விடுமுறையில் ஊருக்கு வந்தவன் அதிகநாள் தங்கியதால் உத்தியோகம் போகிறது பாஞ்சோவுக்கு. தங்கமும் கிடைக்காமல் வேலையும் போய் பாஞ்சோ அதே தொழிலகத்தில் துப்புரவுப் பணியாளன் ஆகிறான். கதை முடிகிறது.
தாத்தா மூலம் பொன்னும், கூடவே பிரச்சனையும் கிளம்பியதால் வெறுத்துப் போய் தாத்தா சமாதியில் பாஞ்சோ மலம் கழிக்கிற குமட்டல் காட்சி, விஸ்தாரமான கலவி என படத்தில் அங்கங்கே ஸ்பானிஷ் இசையோடும் நடனத்தோடும் வந்து போகிறது.
ஊருக்குக் குடும்பத்தோடு காரில் வரும் பாஞ்சோவை கொள்ளையர்கள் வழிப்பறி செய்கிறார்கள். வாட்ச், செயின், பெண்டாட்டியின் நகைகள் என்று கேட்டுக் கேட்டுப் பிடுங்கிக் கொள்கிற கொள்ளையர் தலைவன் பாஞ்சோ அருகே வந்து உற்றுப் பார்க்கிறான். “ஏண்டா, நீ என்னோடு கூட எலிமெண்டரி ஸ்கூல்லே ஒண்ணா படிச்சியே, நினைவு இருக்கா” என்று பழைய நினைவு கிளர்த்துகிறான். பால்ய சிநேகிதர்கள் அந்தக்கால நினைப்பில் மூழ்கி இருக்க, “எல்லாத்தையும் பத்திரமாக எடுத்துப் போடா” என்று பாஞ்சோ தன் நண்பனுக்கு சகலமானதையும் அளிக்க முன்வர, “சே சே அது சரியில்லே. என் தோஸ்த் நீ. உன் கிட்டே வழிப்பறி செய்யக்கூடாது. இந்தா எல்லாத்தையும் திருப்ப வாங்கிட்டுப் போ” என்று கொள்ளைக்காரன் பெரிய மனதோடு தருகிறான். இப்படி ஒரு கொள்ளைக் காட்சியை நான் இதுவரை பார்த்தது இல்லை.
மெக்ஸிகோ அரசை விமர்சிக்கும், இந்த வருடம் (2023) வெளிவந்த திரைப்படம் இது. இயக்குனர் பிரபலமானவர் – லூயிஸ் எஸ்ட்ராடா.
செர்ஜி ஐஸென்ஸ்டின் தன் ’கெ விவா மெக்ஸிகோ’ மௌனப் படத்தை முடித்துப் போயிருக்கலாம்.
*****
முத்து மீனாட்சி என்றதொரு நாவல் படித்தேன். 1903-ம் ஆண்டு வெளியானது. எழுதியவர் அ.மாதவய்யர். இவர் அடுத்தடுத்து எழுதிய நாவல்கள் அ.மாதவையா என்ற பெயரில் வெளி வந்தது குறிப்பிட வேண்டியது.
மகனுக்குக் கல்யாணம் செய்விக்க பெண் வீட்டுக்குப் போகிறார் ஒரு நடுவயதுக்காரர். மனைவியை இழந்தவர் அவர். பெண்ணுக்குக் கல்யாணப் பரிசாக ஏற்கனவே சம்மதித்த தொகையை அளிக்கப் போகிறார். அப்போது பெண் வீட்டுக்காரர்கள் அந்தத் தொகைக்கு மேலதிகமாகக் கொடுத்து நடுவயதுக்காரருக்கே பெண்ணை கல்யாணம் செய்துதர சம்மதிக்கின்றனர், மகனுக்கு மனைவி கொண்டு வரப் போனவர் அவனுக்குப் புது அம்மாவோடு திரும்புகிறார்.
குழந்தைப் பருவத்தில் வயோதிகனுக்குக் கல்யாணம் ஆகி அவன் இறந்துபோக தலை மொட்டையடித்து புகுந்த இடத்தில் சதா வேலை பார்க்கிற யந்திரமாகக் கஷ்டப்படும் பெண்ணின் கதை இது. வேறு கதைகள் இப்படி ஒரே மாதிரி தடம் பதித்துப் போனது உண்டு. விதவைப் பெண்ணுக்கு மறுவிவாகம் செய்ய முற்படுவதும் மற்ற சில புதினங்களில் வருவதுண்டு. எனில் அந்த இரண்டாம் கணவனாகப் போகிறவன் அவளை ’அடி பெண்டாட்டி’ என்று அழைத்துக்கொண்டு அவளது மொட்டைத் தலையில் திரும்பவும் தலைமுடி வளரக் காத்திருப்பதைச் சொல்லிப் புன்னகை வரவழைக்கும் நாவல் இது.
விதவைகளை மட்டுமில்லை, பிள்ளைப்பேறு இல்லாத பெண்களையும் துச்சமாக மதித்த பூமி இது. முத்து மீனாக்ஷி நாவலில் கதைசொல்லி முத்தம்மாள் கூற்றாக மாதவையர் சொல்கிறார் –
குழந்தை பிறக்க ஓன்றும் பயன்படாமையைக் கண்டு, என் மாமி, என்னைப் பிள்ளைப் பூச்சியை விழுங்கச் சொன்னாள்.
சேற்றிற் கிடக்கும் பூச்சி யொன்று. மிகவும் சங்கியமானது. பயங்கரமானது. அதைச் காணவே நான் பதறுவேன். அதை உயிரோடு விழுங்குவதெப்படி?
ஒரு கனிந்த வாழைப் பழத் துண்டத்துக்குள் ஒரு பூச்சியை வைத்து என்னை விழுங்கச் சொன்னாள். அதைக் கையில் வாங்கவும் நான் பதறியதால் அவளே ௮தை என் வாயில் போட்டாள்.
மூன்று முறை குமட்டி வாந்தி செய்துவிட்டேன். கண்விழி பிதுங்கிவிட்டது. எப்படியானால் என்ன ? என் மாமியா விட்டுக் கொடுப்பவள் ?
கடைசியில் அவள் திட்டுக்கும் அதட்டுக்கும் அஞ்சி, எவ்வண்ணமோ ஒரு பூச்சியை விழுங்கினேன். அன்று முழுவதும் மனங் குமட்டி. ஒவ்வொரு நிமிஷமும் வாந்தியாகி விடும் போலிருந்தது. என் மாமி அதட்டிக் கொண்டே இருந்தாள். இப்படி நாலைந்து பூச்சிகளை விழுங்கியும் ஒன்றும் பயன்படவில்லை.

பெண்களை இப்படி எல்லாம் வதைத்தவர்கள் பெண்களே என்பதை நினைத்தால் துக்கமாக அல்லவோ இருக்கிறது.
*****
ஆகஸ்ட் 2023 முதல் வாரத்தில் போபாலில் நடைபெற்ற உன்மேஷ் 2023 நான்கு நாள் இலக்கியத் திருவிழாவில் பேச வாய்ப்பு கிடைத்தது. கலாசார அமைச்சகமும் சாகித்ய அகாதமியும் ஏற்பாடு செய்திருந்த விழா இது. 22 ஆட்சிமொழிகள், மற்றும் பத்துக்கு மேற்பட்ட பழங்குடி மொழிகளில் பேசும், எழுதும், கலையும் இலக்கியமும் செழிக்கச் செய்யும் இந்திய மொழிக் குடும்பத்தின் எழுத்தாளர்களும் கலைஞர்களும் கலந்து கொண்ட கொண்டாட்டம் இது.
நான் கற்பனை வடிவாக்கம், அறிவியல் புனைகதை பற்றிய கலந்துரையாடலில் (fantasy and science fiction) பத்து நிமிடம் fantasy பற்றி என் இரண்டு பைசா மதிப்பான கருத்துப் பகிர்ந்து கொண்டேன். செயற்கை அறிவியலும் அறிவியல் புதினமும் குறித்துப் பேச உத்தேசம். (Artificial Intelligence and Science Fiction). சிலப்பதிகாரத்தில் வரும் இடாகினிப் பேய் பற்றிச் சொல்லும்போது துண்டுச் சீட்டு அனுப்பப்பட, அடுத்த இரண்டு நிமிடத்தில் பேச்சை நிறைவு செய்ய வேண்டி வந்தது. பல மொழி சுவாசிக்கும் எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் சிலப்பதிகார fantasy பற்றி அறிந்த உவகையோடு தேநீர் இடைவேளைக்கு நடந்தார்கள்.
மற்றப்படி ஐநூறுக்கு மேற்பட்ட இலக்கியவாதிகளுக்கு நான்கு நாள் சுவையான உணவும், சௌகரியமான தங்குமிடமும், போக்குவரத்து வசதியும் அளித்து விழாவைச் சிறப்பித்த சாகித்திய அகாதமிக்கு தாராளமாக நன்றி சொல்லலாம்.
(தொடரும்…)