
1.
குடிசையில் இரண்டு சுட்டி விளக்குகள் சுடர்ந்தபடியிருந்தன. சுற்றப்பட்டு மூலையில் நிமிர்த்தி வைக்கப்பட்டிருந்த ஓலைப்பாயின் மேல் விளிம்பில் பல்லியொன்று நின்றது. குடிசையின் வாசலில் தொங்கியபடியிருக்கும் பெரிய மஞ்சள்நிற சங்கில் திருநீறு நிரப்பப்பட்டிருந்தது. மூத்தவர் எங்கு போனார் என்று தெரியாமல் காத்திருந்தான் வீரன். குடிசைக்குப் பின்னால் நிற்கும் கிஞ்ஞா மரத்தின் கீழே அவர் அமர்ந்திருக்கக் கூடுமென நினைத்து அங்கும் பார்த்தான். அவரில்லை. மூத்தவரைப் பார்த்து கொஞ்ச நேரம் கதைத்தால் ஆசுவாசம் வருமெனத் தவித்த வீரன் சுட்டிவிளக்குகள் சுடரும் மூத்தவர் குடிசையின் முன்னால் அமர்ந்தான். கூடு திரும்பும் பறவைகளின் சிறகசைப்பில் இருண்ட பொழுதின் தாளம். தொலைவிற்குப் போன பகலின் வெளிச்சம் கூடடையும் பறவைகளின் அலகினில் சிறிய தானியமாய் எஞ்சி நிற்கிறதென்று வீரன் நினைத்துக் கொண்டான்.
சில வேளைகளில் மூத்தவர், வீரபத்திரர் கோயிலுக்குப் போயிருக்கலாமென்று வீரனுக்குப் பொறி தட்டியது. ஆனால் இந்த நேரத்தில் அங்கே செல்வதற்கு அவனுக்கு பயமாகவிருந்தது. இன்னும் அரை மணித்தியாலம் காத்திருந்து விட்டு தன்னுடைய வீட்டிற்குப் போக முடிவு செய்தான். இரட்டைச் சுட்டி விளக்குகளில் ஒன்று கூடு பத்தி எரிந்து அணைந்தது. மூத்தவர் வரவில்லை. அவன் அங்கிருந்து வெளிக்கிட ஆயத்தமான நிலையில் தூரமாக யாரோ நடந்து வருவது தெரிந்தது. வீரன் பார்த்துக் கொண்டு நின்றான். அழகிய மஞ்சள் நிறச் சீலையுடுத்தி, நீரொழுகும் ஈரக் கூந்தலோடு நடந்து வரும் அந்தப் பெண்ணின் முகச்சாயல் வீரனின் ஓர்மைக்குள் யாரையோ இழுத்து வந்தது. அவள் நெருங்க நெருங்க பூமியின் மடையுடைத்துக் குங்கும வாசம் பெருகியோடத் தொடங்கியது. வீரனுக்கும் அவளுக்கும் இடையில் பத்தடிக்கும் குறைவாக தூரம் இருக்கையில் குங்குமச் சிலைபோல வாசம் கமழ கரைந்தாள். வீரன் உறைந்து போய் அதிலிருந்து மீண்டு திடுக்கிட்டு ஒரு போர்க் குதிரையாகி ஓடத் தொடங்கினான்.
அவனின் ஒவ்வொரு குளம்படிகளிலும் நிலமொரு துடியாய் அதிர்கிறது. கரைய மறுக்கும் துயரங்களைக் கடந்து குதிரையின் நான்கு கால்களும் பாய்கிறது. இரவில் பறக்கும் விஷ வண்டுகளையும், ஊர்கிற மட்டத் தேள்களையும் மோதியும், மிதித்தும் குதிரை எங்கே போகிறது? நிலத்தின் இதயம் பரவசம் ததும்பும் தன்னுடலின் ரத்தநாளங்களை அறுத்து ஒரு பாடல் இசைக்கிறது. அந்தக் குதிரையின் கனைப்பொலியில் கடலளவு தளும்பும் பெருங்காற்றின் சுவடுகளை இந்த இரவு அறியும். சினத்தின் இரைச்சலோடு தன்னையே பலி கொடுக்கும் இந்தக் குதிரையை நிலத்தின் திசைகள் எழுந்து வணங்கின.
வேட்கையின் மாட்சிமை காலையில் சூரியனாய் எழுந்தது. வீரன் கண்களைத் திறந்து பார்க்கையில் திக்குத்திசை தெரியாத காட்டின் நடுவேயுள்ள வாகை மரமொன்றின் கீழே தானிருப்பதை உணர்ந்தான். வாகைப்பூக்கள் அவனின் உடலை மூடி மலர்ந்திருந்தன. அவனுக்கருகில் குங்கும வாசம் வீசும் நீர்ச்சுனை. சகதியான அந்தக் காட்டின் சருமத்தில் குதிரைத் தடங்கள். அக்காட்டின் அனைத்து மரக் கிளைகளிலும் செண்பகப் பறவைகள் தத்தித் தாவியபடி பேரிகையாய் சத்தமிட்டன. வீரனுக்கு எதுவும் விளங்கவில்லை. இப்போது அவன் காட்டிலிருந்து ஊருக்குள் நுழைய வேண்டும். நேற்றைக்கு இரவின் ஞாபகம் அவனுக்குள் விரிந்தது. மூத்தவரின் இரட்டைச்சுட்டி விளக்கு குடிசையின் முன்னால் அமர்ந்திருந்ததைத் தவிர அவனுக்கு வேறேதும் தெரியவில்லை. குதிரைத் தடத்தை வழிகாட்டியாக வைத்துக் கொண்டு நடந்தான்.
ஊருக்குள் நுழைவதற்குள் மதியம் ஆகியிருந்தது. இராணுவத்தின் பெரிய முகாமொன்றைத் தாண்டி தெருவில் காலூன்றிய போது, மூத்தவர் எதிரே நடந்து வந்து கொண்டிருந்தார். அவரின் கையில் கள்ளுமுட்டி இருந்தது. வீரனைப் பார்த்ததும் மூத்தவர் கையக்காட்டி “வா” என்றார். வீரன் அருகில் போனதும் சொன்னான்.
“நேற்றைக்கு இரவு உங்களைச் சந்திக்க வந்தனான், நீங்கள் வீட்டில இல்லை”.
மூத்தவர், வீரனின் கையைப் பிடித்துக் கொண்டு எதுவும் கதையாமல் தன்னுடைய குடிசைக்கு கூட்டி போனார். கையில் கிடந்த கள்ளுமுட்டியை பத்திரமாக மணல் கும்பியில் வைத்து விட்டு வீரனைப் பார்த்துச் சொன்னார். ”அடுப்பை மூட்டு கருவாடு சுடலாம்”. வீரன் சுள்ளி விறகுகளை எடுத்து அடுப்பை மூட்டினான். சுட்ட கருவாட்டிலும் சூடைக்குத்தான் ருசி என்ற மூத்தவர், ஒரு ஜொக்கு கள்ளை ஒரேயடியாக குடித்தார். வீரனையும் குடிக்குமாறு சொன்னார்.
வீரன் மிக அண்மைய வருடங்களில்தான் குடிக்கவே பழகியிருந்தான். தன்னுடைய இருபதாவது வயதில் இயக்கத்திற்குப் போன வீரன் முள்ளிவாய்க்காலில் சரணடையும் நாளில் முப்பத்தேழு வயதில் இருந்தான். பிறகு தடுப்பு முகாமில் மூன்று ஆண்டுகளாக இருந்தவன் விடுதலையாகி வெளியே வந்தான். தடுப்பு முகாமில் கூட சில போராளிகள் பொலிஸிடம் காசு கொடுத்து சிகரெட் வாங்கிப் புகைக்கத் தொடங்கியிருந்தனர். வீரன் தன்னுடைய நண்பர்களைக் கூட இதன் பொருட்டு அருவருத்தான். போர்க்களத்தில் நின்றாலும், இராணுவத்திடம் அகப்பட்டாலும் போராளி எப்பவும் போராளிதான் என்று தன்னுடைய நண்பர்களோடு மல்லுக்கு நின்றான்.
இன்றைய நாட்களில் வீரன் கள்ளுக் குடிக்கவும் எப்போதேனும் பீடி அடிக்கவும் பழகியிருந்தான். ஆனால் மூத்தவரின் முன்னால் அவன் ஒருநாளும் குடித்ததில்லை, புகைத்ததில்லை. இப்போதும் கூட தயங்கி வேண்டாமென்று மறுத்தான். மூத்தவர் அதெல்லாம் ஒன்றுமில்லை குடி என்று அவரின் ஜொக்கிலேயே வார்த்துக் கொடுத்தார். வீரன் கள்ளைக் குடித்தான். சுட்ட கருவாட்டை எடுத்து சாப்பிட்டான். மூத்தவர் இருமினார், நெஞ்சுச் சளியை இழுத்து நாக்கில் நிறுத்தி வெளியே துப்பி விட்டு மீசையைத் துடைத்துக் கொண்டார். வீரன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“நேற்று ராவு என்ன விஷயமாய் என்னைச் சந்திக்க வந்தனீ, இப்ப சொல்லு”
“சும்மா உங்களோட கதைக்க வேணும் போல இருந்தது.”
மூத்தவர் புருவங்களை வியப்பில் உயர்த்தினார். இன்னொரு தரம் கள்ளை அருந்தி, கருவாட்டை கடித்துக் கொண்டே கேட்டார்.
“வீட்டில எதாவது பிரச்சினையோ”?
“இல்லையில்லை. எப்பவாவது இருந்திட்டு நடக்குது. சமாளிக்கலாம்”
மூத்தவர் மீண்டும் இருமி நெஞ்சுச்சளியை நாக்கில் நிறுத்தித் துப்பி, மீசையைத் தடவிக் கொண்டு சொன்னார். “வீரா அது கொஞ்ச நாளில முற்றாக இல்லாமல் போயிடும். எல்லாத்தையும் என்ர வீரபத்திரர் சரியாக்குவார்”
“ஓம், எங்களை எல்லா விஷயத்திலையும் கடவுள் தான் காப்பாற்ற வேணும்”
“டேய், இது தந்தை செல்வாவோட வசனமெல்லே”
இந்த வசனத்தைத் தந்தை செல்வா ஒருக்கால் தான் சொன்னவர், நாங்கள் இஞ்ச ஒவ்வொரு நாளுமெல்லே சொல்லுறம்.”
மூத்தவர் தலையாட்டினார். “எங்களைக் கடவுள்மாரும் காப்பாற்றேல்ல, தலைவர்மாரும் காப்பாற்றேல்ல. என்னைப் பொறுத்தமட்டில இப்பவும் நாங்கள் காப்பாற்றப்படேல்ல. ஆனால் வீரபத்திரர் இப்ப ஒரு ஆறுதல்”.
வீரன் பதிலுக்குக் கதையாமல் இருந்தான். மூத்தவர் அப்படியே முற்றத்தில் விழுந்து படுத்தார். வீரன் அங்கிருந்து புறப்பட்டான். அவன் நடந்துபோகும் ஒற்றையடிப் பாதையின் ஓரிடத்தில் நாசியை அடைக்கும் குங்குமவாசம் நீர்மையாகத் தேங்கி நின்றது. அவன் அந்த இடத்தில் நீண்ட நேரமாய் குத்திட்டு நின்றான். இரையைத் தீண்டும் ஒரு பறவையைப் போல அந்த இடத்தில் கனலும் மர்மத்தை அவன் தரிசிக்க எண்ணினான். அவனுக்கு எதுவும் துலங்கவில்லை.
**********
2.
வீரனின் குழந்தைக்கு உடம்பு சுகமில்லை.ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்று குழந்தையைக் காண்பித்த அன்றைக்கிரவு வீரனின் மனைவி சிவகலை வீட்டுக் கிணற்றுக்குள் விழுந்தாள். வீரனும் உற்றாரும் சேர்ந்து அவளைக் கிணற்றில் இருந்து தூக்கினார்கள். பழக்கமான ஒரு காரியத்தைச் செய்து முடித்தவர்கள் போல “வீரண்ணா நாங்கள் போயிட்டு வாறோம்” என்று சொல்லி உற்றார் போயினர்.
சிவகலையின் ஆடைகளை மாற்றி அவளுக்கு அருகிலேயே வீரன் இருந்தான். குழந்தை இரண்டு போர்வைகள் மடிக்கப்பட்டு தரையில் விரிக்கப்பட்டிருந்த படுக்கையில் கிடந்தது. காய்ச்சலில் இடையிடையே அழுதது. சிவகலையைத் தனது மார்போடு அணைத்தபடி வீரன் அழுதான். அவனின் கண்ணீர் உலர்வதற்கு வழியில்லை. சிவகலை நீரில் விழுந்த குஞ்சுப்பட்சியைப் போல அவனின் நெஞ்சுக்குள் ஒடுங்கியிருந்தாள். வீரபத்திரர் கோவிலில் வைத்து பூசை செய்த தேசிக்காயை எடுத்து அவளின் கையில் வைத்திருக்கச் சொல்லிக் கொடுத்தான். சிவகலை வீரனின் கண்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இருவருக்கும் இடையில் பூமியின் இருள். அதனை ஊடறுத்து பறந்த ஈசல். சொன்ன பல்லியின் சப்தம். மழைக்கு முந்தைய மந்தாரம் சொல்லும் குளிர் காற்று. அந்த நொடியில் வீரன் அவளை இறுக அணைத்து முத்தமிட்டு இதழ் சூழ்ந்த ஈரக்குகையில் எச்சிலால் ஆனந்தித்தான். குஞ்சுப்பட்சியாக இருந்த சிவகலையின் உடலில் பிராந்தின் உச்ச பறப்பு. காய்ச்சலில் கிடக்கும் குழந்தையின் அழுகை தொடங்குவதற்கு முன்னர், உயிர்த்த இருவரின் பசியும் தீரும் வகையில் இருளும் உடல்களும் நனைந்தன. தசையோடையில் பாய்ந்த வெம்மையில் கலவியின் பெருமிதம் துள்ளியோடியது. சிவகலை களைத்துக் கிடந்தாள். குழந்தை அழாமல் நித்திரையில் புரண்டது. வீரன் எழுந்து சென்று கிணற்றில் நீரள்ளிக் குளித்தான். அவனுடைய மேனியில் இருந்து குங்குமமாய் வழிந்தது. அதன் வாசத்தின் சில்லிப்பை ஈரம் தேக்கி வைத்திருந்தது.
சிவகலையின் தந்தையார் அரச ஆதரவில் இயங்கி வந்த தமிழ் ஆயுத அமைப்பொன்றினால் யாழ்ப்பாணத்தில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்டார்.அவருக்கு புலிகள் இயக்கம் வழங்கிய நாட்டுப்பற்றாளர் பட்டத்தோடு யாழ்ப்பாணத்தில் வாழ முடியாது போக, சிவகலையும், தாயாரும் வன்னிக்குள் வந்தனர். உடையார்கட்டு பகுதியில் அவர்கள் வாழ்வதற்கு இயக்கம் வீடு வழங்கியது. தங்களுடைய சொந்தக்காரர்கள் சிலரும் அந்தவூரில் இருப்பதால் அந்த இடம் உவப்பானதாக இருக்கிறது என சிவகலையின் தாயார் இயக்கத்திற்கு நன்றி சொன்னார். உடையார்கட்டில் இருந்த முகாம் ஒன்றிற்கு பொறுப்பாக இருந்த வீரனுக்கும் சிவகலைக்கும் காதல் ஏற்பட்டது.
வீரன் திருமணம் செய்யப் போவதாக இயக்கத்தின் தலைமைக்குக் கடிதம் எழுதினான். தன்னுடைய பிரிவின் உயர்மட்ட பொறுப்பாளர்களுக்கு இந்தச் சங்கதியைத் தெரியப்படுத்தினான். எல்லாத்தரப்பிலுமிருந்து சம்மதங்கள் வருவதற்கிடையில் எல்லாமும் ஓய்ந்து போயிற்று. சிவகலையை இறுதி நாட்களில் அவன் காணவில்லை. கடைசியாக ஆச்சி தோப்பிற்குள் இடம் பெயர்ந்து இருக்கையில் அவளைக் கண்டான். பிறகு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. இவன் மே பதினேழாம் திகதி வரை களத்தில் நின்று அதன் பிறகு சரணடைந்தான். தடுப்புக் காலத்தில் கூட நிறையப் பேரிடம் விசாரித்துப் பார்த்தான். சிவகலை பற்றி எதுவும் அறிய முடியாதிருந்தது.
கிபிர் தாக்குதலில் தாய் இறந்து போக சிவகலை புதுமாத்தளனில் இராணுவத்தின் பகுதிக்குள் போயிருக்கிறாள். நூற்றுக்கும் மேற்பட்ட சனங்கள் அந்த நாளில் மட்டும் இராணுவத்திடம் போனார்கள். சிவகலைக்கு யாருமில்லை. ஆனால் அந்த நிமிடங்களில் யாருக்கும் யாருமில்லை. ஆயினும் சிவகலையையும் இன்னும் பத்துக்கு மேற்பட்ட பெண்களையும் இராணுவம் தனியாகப் பேருந்து ஒன்றில் ஏற்றியது. அதில் பதினான்கு வயது சிறுமியும் அடக்கம். சனங்கள் ஆர்ப்பரித்து அழுதனர். தங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள் என மன்றாடினார்கள். ஒரு தாய் கையில் கிடைத்த பனங்கொட்டையால் இராணுவத்தை நோக்கி எறிகையில் தோட்டா வெடித்தது. அந்தத் தாயின் உடலைத் துளைத்து திகைத்து வெளியேறிய தோட்டாக்களுக்கு எண்ணிக்கையில்லை,
பேருந்தில் ஏற்றப்பட்ட தங்கள் பிள்ளைகளை விடுமாறு எஞ்சியோர் கேட்டு அழுதனர். அற்புதங்கள் நிகழாத யுத்தப் பெருங்குகையின் குருதிச் சேற்றில் சனங்கள் மண்டியிட்டு இரந்து அழுதனர். பனைகள் அடர்ந்து நின்ற அந்த பாழ்வெளியில் ஒவ்வொரு பெண்ணும் நிலம் போல துடித்தனர். பனைகளின் உச்சியில் மனிதக்குடல்களை அலகில் வைத்தபடி காகங்கள் இருந்தன. பேருந்தின் உள்ளேயே குருதி பெருகின. சனங்கள் கண்களை மூடியபடி தனது பிள்ளைகளைக் காப்பாற்றுமாறு கடவுளை வேண்டினர். ஒரு பனைமரத்தில் இருந்து காவோலை தரையில் விழுகையில் பனை நோக்கிப் பாய்ந்தது தோட்டா.
பேருந்தினுள்ளே குருதி மணக்கும் போதில் மூச்சிரைத்து இறந்து போன சிறுமியை அப்படியே விட்டு தமது உடலை மட்டுமே தூக்கிக் கொண்டு வந்த தங்கள் பிள்ளைகளை அணைத்துக் கதறியபடி சனங்கள் நடக்கத் தொடங்கினர். பனைகள் வெட்கமூர்ந்து பட்டுப் போயின. மதுரையை எரித்த கண்ணகி வற்றாப்பளையில் இருந்தபடி மிஞ்சிய இன்னொரு முலையை இந்த நாட்களில் அறுத்தெறியாமல் வேடிக்கை பார்த்தாள். முன்னையிட்ட தீ, பின்னையிட்ட தீ, அன்னையிட்ட தீ போல முல்லையிட்ட தீயாய் தன் முலை திருகி எறியாது எழுந்திருந்தாள். அற்புதம் நிகழ்த்தாது நின்ற அந்த ஒற்றை முலைச்சியின் தீர்த்தக்கரையில் தலைச்சன் பிள்ளைகளின் பிண மலைக் குன்றுகள் உயர்ந்தன. உப்பு நீரில் விளக்கெரிக்கும் வல்லமை பொருந்தியவளின் காலடி வரைக்கும் பாவியது அவள் பிள்ளைகளின் குருதிப் பேரலை. சனங்கள் கூக்குரலோடு கண்ணகியின் திசை நோக்கி கேட்டனர், “நீயோ தெய்வம், நீயோ தெய்வம்”.அக்கணம் எல்லாத் தெய்வங்களும் தலை தாழ்ந்து நின்றனர்.
**********
3.
சிவகலை செட்டிகுளம் முகாமில் அடைக்கப்பட்டாள். பல்லாயிரக்கணக்கான சனங்களை ஊழ் விழுங்கி மூளியாக்கி இருந்தது. அலறல் பெருத்த அந்த வெளியில் வெக்கை தீயாய் நின்றது. குழந்தைகள் கருகினர். அங்கு வருகை தந்த இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சுற்றி நின்ற சனங்கள், “காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்” என்றனர். அவர்கள் மேலும் கீழுமாய் தலையை ஆட்டினர். “யுத்தம் முடிந்து போனது இனியொன்றும் பிரச்சினை இல்லை” என்றனர். சனங்கள் கைதூக்கி அழுகையில் மேகமில்லை. எல்லாம் வெறித்திருந்தது. யுத்தச்சீழ் அன்றைய நாளில் நோவெடுத்தது. நெறி கட்டிய சூரியன் வலியில் துடித்து உக்கிரமாய் எரித்தது. சனங்களின் ஆன்மா கூக்கிரலிட்டது.
எல்லா நாடுகளிலும் இருந்து வந்தவர்கள் சுற்றிச் சுற்றி புகைப்படம் எடுத்தனர். தங்களிடம் இருந்து என்ன வேண்டுமெனக் கேட்டார்கள். எப்போதும் போலவே அவர்கள் சில கேள்விகள் எழுப்பினர்.
அரசு உங்களை மரியாதையாக நடத்துகிறதா?
இராணுவம் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனையைத் தருகிறதா?
உங்களுக்கு பாலியல் ரீதியான சித்ரவதைகள் நிகழ்கின்றனவா?
புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் அப்பாவிகள் துன்புறுத்தப்படுகின்றனரா?
நிகழும் அநீதிகளுக்குப் பதிலற்றவர்கள் அவர்கள். ஆனால் பலி வாங்கப்படுபவர்களிடம் பலி பீடத்தில் வைத்தே கேள்விகள் கேட்டனர். இப்படியொரு தடவை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த வெளிநாட்டு அதிகாரி, மூன்றாவது கேள்வியை இரண்டு பிள்ளைகளின் அம்மாவான பள்ளி ஆசிரியர் ஒருவரிடம் கேட்ட போது, தனது பிள்ளைகளைக் கூடாரத்திற்கு வெளியே போகச் சொன்னாள். அதன் பிறகு அவள் அணிந்திருந்த பாவாடையை அவிழ்த்தாள். திகைப்புற்ற உறைவு அந்தக் கூடாரத்திற்குள் படிந்தது. அவளின் யோனி வெள்ளைநிற நூலினால் மூடித் தைக்கப்பட்டிருந்தது. அதிகாரிக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் கைகளை எடுத்து முகத்தை மூடிக் கொண்டு, “மன்னித்துக்கொள்,சகோதரியே” என்றார். பதிலுக்கு அவள் சொன்னாள், “நீங்கள் யாரும் யுத்தம் முடிந்து போயிற்று என்று மட்டும் சொல்லாதீர்கள்”
அவளின் கூடாரத்தை விட்டு அதிகாரி வெளியே வந்தார். கொளுத்தும் வெய்யிலில் போர்க்காயங்களோடும் ஓலங்களோடும் சனங்கள் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
தன்னுடைய தமிழ் மொழிபெயர்ப்பாளரை அழைத்து,
“நீ தமிழன் தானே?”
“ம்”
“எங்களைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?
“மன்னிக்க வேண்டும்”, பதில் சொன்னால் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும்.
“ பரவாயில்லை ஒரு நண்பனாக சொல்”
“படுகொலைகளை எண்ணுபவர்கள்”
பெளர்ணமி நாளின் இரவொன்றில் முகாமின் கூடாரங்களுக்குள் ஊசியோடும், நூல் கட்டையோடும் பெண்கள் மறைந்தனர். அவர்களின் வலி பெருத்த அழுகைக்கு ஒலியில்லை. வானத்தில் இருந்து கூடாரங்களின் துளை வழியாக பெண்டிரைக் கண்ட முழுமதி விழி பிதுங்கி மேகத்திற்குள் மறைந்தது. அதன் பின்னர் தேய்ந்த நிலவு அவர்கள் பார்க்கும் வானத்தில் வளர்பிறையாகவில்லை. இந்தக் கதைசொல்லியின் அக்காவும் அம்மாவும் தமது யோனியை தைப்பதற்கு நூல் தேடித் திரிந்து இறுதியில் யாரிடமோ வாங்கி வந்து மூடினர். சாவு தம்மை மூடாதது குறித்துப் பொருமினர்.
சிவகலையின் அப்பாவின் நண்பர் ஒருவரின் அரசியல் செல்வாக்கினால் அவள் முகாமை விட்டு வெளியேற முடிந்தது. இரண்டு மாதங்கள் கழித்து வீரன் உயிரோடு இருந்தாலும் இருக்கலாம் என்று தேடினாள். அவளுக்கு மனதளவில் நிறைய பிரச்சனைகள் தோன்றியது. தனது தந்தையின் நண்பர் வீட்டில் இருந்த நாட்களில் அந்த இடர்கள் தொடங்கியிருந்தன. சிவகலை நித்திரையில் அந்தச் “சின்னப் பிள்ளையையாவது காப்பாற்றுங்கோ”என்று கத்திக் கொண்டே நிலத்தில் கிடந்து இரண்டு கால்களையும் தூக்கித் தூக்கி எறிவாள்.
தன்னுடைய கைகளை இறுக்கிப் பிடித்தபடி வீட்டின் ஜன்னல் கண்ணாடியை ஓங்கிக் குத்திக் கொண்டே “அந்தச் சின்னப் பிள்ளையையாவது காப்பற்றுங்கோ” என்று கத்தத் தொடங்குவாள். அவளுக்கு மூளை சுகமில்லாமல் போயிற்றோவென்ற சந்தேகம் சிவகலையின் அப்பாவின் நண்பருக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் வந்தது. உச்சபட்சமாக ஒருநாள் வீட்டின் சமையலறையில் உலை கொதித்துக் கொண்டிருந்த அடுப்பில் கை வைத்து, “அந்தச் சின்னப்பிள்ளையையாவது காப்பாற்றுங்கள்” என்று கத்தினாள். அவளின் வலதுகை மணிக்கட்டுக்கு கீழ் எரிந்து உருகியது. சிவகலையை இனிமேல் தனது வீட்டில் வைத்திருப்பது ஆபத்தானது என்று நினைத்து அவளைக் கொண்டு போய் வேறொரு வீட்டில் விட்டார்.

**********
4.
வீரன் தடுப்புமுகாமில் இருந்து விடுதலையான நாட்களில் சிவகலையைத் தேடி திரிந்தான்.அவள் உயிரோடு இருக்கிறாள் என்பதில் கூட இவனுக்கு நிச்சயமில்லை. எல்லாமும் ஊசலாடி உதிர்ந்த பின்னரும் நிலமெங்கும் புற்கள் முளை விட்டிருந்தன. சிவகலையின் சொந்த ஊரான யாழ்ப்பாணக் கிராமமொன்றிற்கு வீரன் பயணித்தான். சிவகலையை அவன் கண்டடைந்தான். வீரன் அவளுக்கு முன்னால் நிற்பதையும், சிவகலை அவனுக்கு முன்னால் நிற்பதையும் காலமும் நம்ப மறுத்தது. சிவகலையைக் கூட்டிக் கொண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சிக்குப் பேருந்து ஏறினான் வீரன்.
தன்னுடைய கிராமமான இரணைமடுவிலுள்ள சிறிய வீட்டில் சிவகலையை அணைத்துக் கொண்டு அவன் படுக்கையில் கிடந்தான். சிவகலை விசும்பினாள்.
“நீங்கள் செத்துப்போயிருந்தால் நான் அப்படியே இருந்திருப்பேன் வீரன் “
“அதுதான் நான் சாகவில்லை போலும்”. இனிமேல் நீர் ஒருதடவையும் அழக்கூடாது”
“நான் இன்றைக்குத்தான் வீரன் அழுகிறன். இந்த மூன்று வருஷத்தில இண்டைக்குத்தான் அழுறன்.”
அடுத்தநாள் காலையில் மூத்தவரின் வீரபத்திரர் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். மூத்தவரின் காலில் விழுந்து வணங்கினர். ஊரில் உள்ள சிலர் வந்து இருவரையும் வாழ்த்தி விட்டுப் போயினர். சிலர் தபால் உறையில் காசை வைத்து வீரனின் உள்ளங்கைக்குள் மடக்கினர். அன்றைக்கு ஊர் கூடிச் சொன்னது.
“சந்தோசமாய் இருங்கோ”
இருவரும் அன்றைக்கிரவு கூடுவதற்கு முன்னர், சிவகலை தனது கால்களுக்கிடையில் மூடித் தையிலிடப்பட்டதை அவிழ்த்தாள். வீரன் உடல் நடுங்க அவளை இறுக அணைத்து இறுகிப் போய் வார்த்தை வராமல் கேவினான்.
“அழாதேங்கோ வீரன்”
அந்த இரவில் அசைந்த யாவற்றிலும் குருதியின் தீப்பொறி விழுந்து எரிந்தது. பூமியின் எல்லைக் கோடுகளிலும் யுத்த காலத்துச் சடலங்கள் அடுக்கப்பட்டன. தங்கள் சாபத்தில் சாம்பலாகப் போகும் பூமியின் நடுக்கத்தை சிவகலையும் வீரனும் உணர்ந்தார்கள். கதைத்துக் கொண்டிருந்துவிட்டு அப்படியே உறங்கிப் போயினர். அடுத்த நாள் காலையில் வீரன் வீட்டிற்கு வந்திருந்தார் மூத்தவர். வீரன் கடைக்குப் போயிருப்பதாகச் சொன்னாள்.
“நான் வந்தனான் என்று சொல்லுங்கோ பிள்ளை” சொல்லி விட்டு வெளிக்கிட்டார் மூத்தவர். வீரன் வீட்டிற்கு வந்ததும் மூத்தவர் வந்த தகவலைச் சொன்னாள். மூத்தவரைப் பார்க்கச் சென்றான்.
சிவகலை சமையல் செய்து கொண்டிருந்தாள் .திடீரென அந்தப் பதினாலு வயதுச் சிறுமி அவளின் குசினிக்குள் தோன்றி, “அக்கா” என்று கூப்பிட்டதைப் போல உணர்வு. மீண்டும் அந்த ரூபம் அவள் முன்னால் தோன்றியதும் அக்கா என்றொரு குரல் கேட்டது. உலைப் பானை மூடியிருந்த தட்டில் கொதிக்கும் குமிழ்களின் ஒலி வெம்மை சிவகலையை அந்தப் பேருந்திற்குள் விழுத்தியது. அவள் கைகளில் குருதி வழியப் பெரிதாகச் சத்தமிட்டபடி உலைப் பானையை தட்டி விட்டாள். தனக்கு மேலே கூரைகளில் நடந்து திரியும் இராணுவத்தின் உருவங்களை தீக்கட்டையால் அடித்துக் கொண்டிருந்தாள். கூரை தீப்பிடித்து வீடு பற்றியது. அவள் அப்படியே மயங்கிப் போனாள். கடவுள் சித்தமாக அப்போது வீட்டிற்கு திரும்பி வந்த வீரனும் மூத்தவரும் ஓடிப் போய் மயக்கத்தில் கிடந்த சிவகலையைத் தூக்கினர்.மேலே எரிந்து கொண்டிருக்கும் தீக்கங்குகளின் மீது எத்தனையோ காளிகளின் தாண்டவம். மிலேச்சரைக் கொல்லும் ஆவேசம்.
சிவகலை தனது கால்கள் ரெண்டையும் உதறிக்கொண்டு அந்தச் சின்னப்பிள்ளையையாவது காப்பற்றுங்கோ என்று அரை மயக்கத்தில் கத்திக்கொண்டிருந்தாள்.எரியும் தீவெக்கையின் முன்னால் அவளை தன்மடியில் கிடத்தி முகத்திற்கு தண்ணீர் அடித்தான். மூத்தவர் தன்னுடைய இடுப்புப்பட்டியில் இருக்கும் வீரபத்திரரின் திருநீற்றை சிவகலையின் நெற்றியில் பூசினார்.அவள் மீண்டும் மீண்டும் தீனமாய்ச் சொன்னாள்.
“அந்தச் சின்னப்பிள்ளையையாவது காப்பற்றுங்கோ”.
சிவகலை மயக்கம் தெளிந்து எரிந்தடங்கிய வீட்டின் சாம்பல் தடத்தைப் பார்த்தாள். என்னவென்று தெரியாமல் அவனைப் பார்த்தாள். வீரன் சிரித்துக் கொண்டு சொன்னான்.
“அதொண்டுமில்லை, ஒரு அஞ்சு இஞ்சி ஷெல் விழுந்து போச்சுது”.
சிவகலைக்கு எதுவும் தெரியாது. அவள் சுயமழிந்து கொதிப்பு உயர்கையில் நடந்த விபரீதங்கள் பற்றி யாருக்கும் தெரியாது. எப்படி வீடு பற்றியது என்றோ, நீ ஏன் மயங்கினாய் என்றோ அவளிடம் தான் கேட்கக் கூடாது என நினைத்துக் கொண்டான். மூத்தவர் இருவரையும் அழைத்துக் கொண்டு கோவிலில் வைத்து நீறு போட்டு நூல் கட்டி விட்டார்.
ஒரு வெள்ளிக்கிழமை நாளின் மாலை நேரத்தில் வீரபத்திரர் பிரகாரத்தை கழுவிக் கொண்டிருந்தாள் சிவகலை. இராணுவத்தின் இரண்டு வாகனங்கள் கோவில் வீதியால் போனது. அவள் மூத்தவரை திரும்பிப் பார்த்தாள். கிணற்றடியில் நின்று தட்டுக்களையும், விளக்குகளையும் புளியும் சாம்பலும் போட்டு பொச்சுத்தும்பால் மினுக்கிக் கொண்டிருந்தார். வீரபத்திரர் இருந்த மூலஸ்தானத்தை பார்த்தாள். கண்கள் சொருகி மயக்கம் வருவதைப் போலிருந்தது. அப்படியே கோவில் தூணைப் பிடித்துக் கொண்டு மூத்தவரே என்று அனுங்கி கூப்பிட்டாள்.
**********
5.
அவள் கர்ப்பமுற்று மூன்று மாதங்கள் இருக்கும் ஒருநாள் அதிகாலையில் கிணற்றடிக்கு ஓடிப்போய்,அந்தச் சின்னப்பிள்ளையையாவது காப்பாற்றுங்கோ என்று கத்திய சத்தம் கோவில் மணிக்கு முன்பாகவே ஊரை எழுப்பியது.சத்தம் கேட்டு வீரன் எழும்பி ஓடுவதற்கிடையில் அவள் கிணற்றுக்குள் விழுந்தாள்.வீரன் உடனே குதித்து அவளைக் காப்பாற்றினான்.அவள் வீரனிடம் இறைஞ்சிக் கொண்டே இருந்தாள்.
”அந்தச் சின்னப்பிள்ளையையாவது காப்பாற்றுங்கோ”
மூத்தவர் வீரனை அழைத்துச் சொன்னார்.”அவளுக்கு மனசில ஆறாத ஏதோவொரு காயமிருக்கு. அவள் அதில இருந்து மீள முடியாமல் துடிக்கிறாள். இந்தப் பிரச்சினையை நாங்கள் கவனப்பிசகா விட முடியாது. அவளோட எப்பவும் துணைக்கு இருக்க வேணும். அவளின்ர கண்ணில தோன்றுகிற சில ரூபங்கள் அவளை இப்பிடிச் செய்யச் சொல்லுது. குரல்கள் அவளை அலைக்கழிக்குது. இண்டைக்கு இரவு நீ மட்டும் கோவிலுக்கு வா”.
வீரபத்திரர் கோவிலின் பெரிய பூவரசம் மரத்தின் உச்சிக்கிளையில் நின்ற மூத்தவரின் கையில் ஒரு சிறிய வாள்,அதன் கூர் முனையில் தேசிக்காய் குத்தப்பட்டிருந்தது.மரத்தின் கிளைகளில் தாவித்தாவி மூத்தவர் பாடத் தொடங்கினார். கீழே குளித்து முடித்து ஈரத்தோடு கைகளில் உடுக்கை வைத்துக் கொண்டு நின்றான் வீரன். மூத்தவர் ஒரு தேசிக்காயை உச்சியில் இருந்து வீரனில் படும்படி அந்த இருளில் எறிந்து, “குஞ்சு,அந்தப் பிஞ்சப் பிசாசுகள் கொண்டுட்டுது. கேக்குதா ?
வீரன் “ஓம்” என்கிறான். கிளைகளில் ஒரு குரங்கின் லாவகத்தோடு பாய்ந்து தாவுகிறார் மூத்தவர்.
கேள், அந்தக் பிஞ்சை பிசாசுகள் பலியெடுத்ததை உன்ர குஞ்சு பார்த்திருக்கிறாள், கேக்குதா?
“ஓம்” வீரனின் கையில் உடுக்கு நடுங்குகிறது.
“உறங்கிப் போயிற்றடா வானம், கேக்குதா “
“ஓம்”
“அந்தக் குஞ்சுவுக்கு நீயொரு ஆலமரமாய் இரு, கேக்குதா “
“ஓம்”
வேற எதவாது கேக்கிறியா?
“இல்லை”
கிளைகள் அசைந்தன. மரத்தில் தெய்வீகத் தூய்மை. ஒவ்வொரு கிளை விட்டும் கீழே இறங்குகையில் உடுக்கொலி மெல்ல மெல்ல ஒலித்தடங்கியது. மூத்தவர் வாளோடு கீழே இறங்கி கிணற்றில் நீரள்ளி குளித்தார்.
நாட்கள் அழுந்தி நகர்ந்தன. சிவகலை ஐயிரண்டு திங்கள் அங்கமெல்லாம் நொந்து தன் மகவைப் பெற்றாள்.பிறந்த பெண் குழந்தையை வாரி அணைத்தபடி ஆசுபத்திரி மருந்து நெடியில் இருந்து தப்பி வீட்டுக்கு வந்தனர்.இராணுவத்தின் புதிய இராணுவ முகாமொன்று வீரனின் கிராமத்திற்குள் வரவிருப்பதாக செய்திகள் வந்தன.அதனை உறுதி செய்யும் விதமாக ஏற்பாடுகள் நடந்தன.சிவகலைக்கு மாதங்கள் ஆகியும் இரத்தப்பெருக்கு நின்றபாடில்லை.
சிவகலைக்கு நீண்ட நாள் கழித்து அந்த ரூபம் மீண்டும் தெரிந்தது. ஆனால் இப்போது சுவரில் அல்ல, வெளியில் அல்ல. தனது பிள்ளையில் அந்தச் சிறுமியின் ரூபம் வளர்ந்தது. குழந்தை அழுகிற ஒவ்வொரு வேளையிலும் சிவகலைக்கு கண்கள் மயக்கமுற்று புலன் அடைத்து விழுந்து விடுவாள்.
ஒருநாள் அதிகாலையில் சிவகலை நித்திரையில் கிடந்தபடி, “அந்தச் சின்னப் பிள்ளையையாவது காப்பாற்றுங்கோ” என்று சொல்லிக் கொண்டே தனது கால்களை மேலும் கீழும் உயர்த்தி திணறுகையில் வீடு பேருந்தைப்போல ஆடியது. குடல்களைக் கவ்வியபடி பனைகளில் இருந்த காகங்கள் சிறகடித்து பறக்கையில் கால்களுக்குள் மிதிபடும் பெண்டிரின் சரீரம் திமிறித் திமிறி விழுகிறது. பெண் பனைகள் இலைகள் உதிர்க்கும் முகமாக காவோலைகள் விழுகின்றன. வீடெங்கும் குருதி வெள்ளம் குபுகுபுவென நுழைந்து வீரன், சிவகலை, குழந்தை ஒளவையாழ் ஆகியோரை மிதக்கச் செய்கிறது. பதினான்கு வயதுச் சிறுமி சாவின் இறுதி நொடியில் அழைத்த, “அக்கா” எனும் தீனச் சிறகு மூவரையும் மூடுகிறது. மூச்சுத்திணறி கண்களைத் திறந்த சிவகலை படுக்கையில் இருந்து எழும்பி செத்தையில் குத்தப்பட்டிருந்த தையல் ஊசியை எடுத்தாள். வெள்ளை நிறத்திலான நூல் கட்டையையும் சேர்த்து எடுத்தபடி குழைந்தையத் தூக்கினாள். ஒளவையாழ் திடீரென அழத் தொடங்கினாள். அழுகையின் சத்தம் கேட்டு வீரன் கண் விழித்துப் பார்க்கிறான்.
சிவகலையின் கையில் குழந்தை. அவளுக்குப் பின்னால் நூல் கட்டை சுழன்றபடி போகிறது. வீரன் ஓடிப்போய் பிள்ளையை சிவகலையிடம் இருந்து வாங்கித் தனது நெஞ்சொடு பிள்ளையை அணைத்துக் கொண்டான். சிவகலையை அவன் கன்னத்தில் அறைந்திருக்கக் கூடாது என்று நினைக்குமளவிற்கு வெறி கொண்ட கோபத்தோடு அறைந்தான். சிவகலைக்கு இந்தச் சம்பவங்கள் எதுவும் ஓர்மையில் நடத்தப்படவில்லை.
இப்போதெல்லாம் அவளுக்கு எப்போதாவதுதான் அந்த ரூபமும் குரலும் பார்க்கவும் கேட்கவும் முடிகிறது. சில வேளைகளில் அலறியடித்துக் கொண்டு கிணற்றில் விழுகிறாள். அந்தக் கிணற்றைப் பலகை கொண்டு மூடி இப்போது நாட்களாகி விட்டன. வீரனுக்கு இப்போது அடிக்கடி காட்சி தரும் அந்த மஞ்சள் சீலையுடுத்தி நீரொழுகும் ஈரக்கூந்தலோடு வருகிற பெண்ணின் சாயலில் ஒளவையாழ் வளர்ந்து வருகிறாள்.
நேற்றைக்கு அமாவாசை இரவில் அந்தப் பெண் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். ஈரப்பிலாக்காய் வாங்கிக் கொண்டு வீட்டிற்குத் திரும்பி வருகையில் அவளைக் கண்டான். எத்துணை வடிவாக இருந்தாள். அம்புலி அடை காத்த குஞ்சு போல ஜொலிப்பு. பத்தடி தூரத்தில் நின்று கொண்டு கரைந்தாள். வீரன் அப்படியே உறைந்து போகையில், குதிரையின் குளம்பொலிகள் ஊருக்குள் கேட்டது. அப்படியொரு வேகம். தணல் வீசும் ஒலி. மூத்தவர் தன்னுடைய குடிசைக்குள் படுத்திருந்தபடி யுத்தக் குதிரையின் சப்தத்தைக் கேட்டார்.
“குளம்படி நாதம்”.
ஊழி யுகத்தின் கோட்டைகள் சரிக்கும் பிரம்மத்தின் குளம்படி. இந்த நாதம் எழுக எழுகவே என்று சொல்லியபடி சுடரும் சுட்டி விளக்குகளைப் பார்த்தார். அந்தச் சுடரிலும் போர்க்குதிரைகள் அசைந்தன. “வீரபத்திரரே” என்று கும்பிட்டபடி மூத்தவர் எழுந்து வெளியே வந்தார்.
நீரொழுகும் கூந்தலுடன் மஞ்சள் சீலையுடுத்தி நின்ற பெண்ணை பார்த்தார். ஆர் என்று கேட்டதுமே அவள் குங்குமமாய் கரைந்தாள். மூத்தவர் சிரித்துக் கொண்டு, “வீரபத்திரரே” என்றார். இயல்பாக நெஞ்சுச் சளியை இழுத்து நாக்கில் நிறுத்தித் துப்பி விட்டு அவள் கரைந்து போன இடம் நோக்கி நடக்கலானார். ஒரு கும்பியாக வாசம் கமழும் குங்குமம் இருந்தது. மூத்தவருக்குள் ஒரு களிப்பு. ஒரு கம்பீரம். ஒரு நிமிர்வு. குடிசைக்குள் நுழைந்த மூத்தவர் சுட்டி விளக்குகளையே பார்த்தபடியே படுக்கையில் இருந்தார்.
போர்க்குதிரையின் குளம்பொலியை நிலம் இறைத்துக் கொண்டேயிருந்தது.
**********
இன்று தான் படித்தேன் அகரமுதல்வனின்
“வீழ்த்தப்பட்டவர்களின் புரவி ”
மனதை காயப்படுத்திய கதை வீரபத்திரர் எத்தனை நாட்களுக்குத்தான் இப்படி பார்த்துக் கொண்டிருப்பார் என்று தெரியவில்லை என்றாவது ஒருநாள் அவர் பார்வையை நிறுத்திவிட்டு களத்தில் இறங்கி நம்மளை எல்லாம் காப்பார் என்று எண்ணிக்கொண்டிருக்கும் நமது தாய் உறவுகள் மிக அழகாக சொல்லாடலை பயன்படுத்தி எழுதியிருக்கிறார் அவருக்கு எனது வணக்கங்களும் வாழ்த்துக்களும் வாரி வழங்குகிறேன்.
மணவை கார்னிகன்
என்றென்றும் உனது வாசகன்