சிறுகதைகள்
Trending

வியாசை- பிரவின் குமார்

“டேய் எவ்ளோ நேரன்டா வெய்ட் பண்றது… கலை வருவானா மாட்டானா…?”

வெளிப்புறம் பார்த்து ஆட்டோவில் அமர்ந்திருந்த அருண் சட்டென்று முகத்தை கோணலாக வைத்துக் கொண்டு கேட்டான். பல வருடங்களாகப் பழுதடைந்து போன கார்ப்பரேஷன் தண்ணீர் பம்பிற்கு அடியில் கவியும் சகாவும் செல்போனை நோண்டிக் கொண்டு அமர்ந்திருந்தனர். மனோஜ் ஆட்டோவின் அருகில் பைக்கை சாய்வாக நிறுத்திக்கொண்டு யாருடனோ செல்போனில் பேசிக் கொண்டிருந்தான். அருணுடைய குரலை அவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. மூவரும் அவர்கள் போக்கில் இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

“டேய் உங்களத் தான்டா கேக்குறேன்.. கானாக்கு டைம் ஆய்டுச்சி… ஓத்தா இப்டியே ஊம்பிட்டு இருக்க போறீங்களா”

செல்போன் நோண்டிக் கொண்டிருந்த கவி நாக்கை மடித்துக் கொண்டு அருண் பக்கம் திரும்பினான்.

“ஏய் அவனுக்கு என்னமோ கானா நடக்கப் போறதே தெரியாத மாதிரி பேசுற… நீயும் அவனும் சேர்ந்துதான கானாக்கு ஓகே சொன்னீங்கோ. பெரம்பூர் போறேன் நைட் வந்துர்றேன்னான். போன் பண்ணா ஸ்விட்ச் ஆப்னு வர்து… இப்போ எங்கள எதுக்கு கத்துற நீ?”

சொல்லி முடித்ததும் கவி செல்போனில் மீண்டும் மேலும் கீழுமாக எதையோ நோண்டிக் கொண்டிருப்பதிலேயே ஆர்வம் காட்டினான்.

“அவன் எதுக்குடா பெரம்பூர் போனான்”

“அவன் குஜிலி* வூடு மாறினு போனதுல இருந்து ஒரு எடமா உக்கார மாட்றான்… அந்தப் பொண்ணுக்கும் அவனுக்கும் ஏதோ சண்ட போல. அதான் போய்ருக்கான்”

“ஓத்தா இந்த டாபருக்கு இதே வேலையாப் போய்ச்சுடா… நேரம் பாத்து சொதப்புவான்”

மனோஜ் செல்போனில் பேசிக் கொண்டிருப்பவரின் அழைப்பை துண்டித்து விட்டு அருண் பக்கம் திரும்பினான்.

“டேய் அருணே பதினோரு மணிக்கு தான் வர சொல்லி இருக்காங்கோ… ரொம்ப துள்ளாத என்ன”

“ஹே சப்போஸ் அவன் வர்லனா இன்னாடா பண்ணுவ… நீயா டோலாக்கு அடிப்ப…? ஓத்தா பேசுற”

“ஒன்னும் பிரச்சன இல்ல… எப்டி இருந்தாலும் கானா கேட்க கோயிந்தனுங்க* கொஞ்ச பேரு வருவானுங்கோ… அவன்கள்ல எவனா ஒருத்தன வுட்டு அடிக்கச் சொல்லலாம். அப்டி வேணானா… ஆயாபால வர சொல்றேன். அவன் அடிப்பான்”

மனோஜ் கொடுத்த யோசனை சகாவிற்கு சரியாகப்படவில்லை என்பதால் சட்டென்று சகா எழுந்து கொண்டான்.

“அய்ய ஆயாபாலா..! அவன் சரியான ஜோபிடா*.. அவன் எல்லா வேல ஆவ மாட்டான். சாவுக்கு வரவனுங்க எல்லா கிசாவுல* இருப்பானுங்கோ. அவன அடிக்க வுட்டா சிக்கமாய்டும்* அப்புறம் சவுந்தர் தம்பி நம்மள தான் நிமித்துவான்*

“ஆமாடா கிருமி… நீ சொல்ற ஐடியா சிக்கம் கொடுக்கும். அதத் தட்டிவிடு* வேற ஆள் அரேஞ் பண்ணிப்போம்”

கவியும் சகாவுக்கு ஆதரவாக தூது பாடினான். மனோஜை ஏரியாவில் சிலர் கிருமி என்று அழைத்தார்கள். ஏரியாவில் நடக்கும் பல சண்டைகளை ஆராயத் தொடங்கினால் அது மனோஜ் செய்த அடாவடித்தனங்களே காரணமாக இருக்கும். பின் பக்கம் கழுத்திற்குக் கீழ் டிராகன் வடிவில் பச்சை குத்தியிருக்கும் அவன் பெயரை அனைவரும் பார்க்கும்படி எப்போதும் சட்டை பட்டன்களை அவிழ்த்துவிட்டு முதுகிற்கு கீழ் தொங்க விட்டுக் கொண்டு தெனாவட்டாக நடந்து கொண்டிருப்பான். எப்போதும் ஏதாவது துடுக்குத்தனங்களை செய்து விட்டு அங்கிருந்து தப்பித்துவிடுவது மனோஜின் வழக்கம். அவனால் அவனது நண்பர்கள் தேவையில்லாத பல வம்புகளில் தலையிடும்படியும் நேர்ந்ததுண்டு. அதனாலேயே நண்பர்கள் மத்தியில் கிருமி என்று வேறொரு பெயரும் பெற்றிருந்தான்.

“அங்க வரவனுங்க எல்லாரும் கலைமணியத் தான்டா கேட்பானுங்கோ… அவன் டோலாக்கு அடிக்குறதுக்குனே தனியா காசு கிடைக்கும். கானா ரவி கூட ஆல்பம் பண்ணுதுல இருந்து அவன் நல்லா பேமஸ் ஆய்ட்டான்… அவன் இல்லனா கானாவ செரியாவே நடத்த முடியாது”

மனோஜ் சொல்லி முடித்ததும் பழையபடி முகத்தை சோகமாக வைத்துக் கொண்டான். நால்வரும் கொஞ்ச நேரத்திற்கு எதுவும் பேசிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தார்கள்.

சவுந்தர் அண்ணன் சாவிற்கு இன்னமும் கூட்டம் வந்து கொண்டுதான் இருந்தது. சாமியார் தோட்டம், பில்லர், சாமந்திப்பூ காலனி என்று சத்திய மூர்த்தி நகருக்கு ஆட்டோவிலும், பைக்கிலும் கூட்டம் இடைவிடாது வந்து கொண்டிருந்தன. சவுந்தர் அண்ணன் ஏரியாவில் செல்வாக்கு நிறைந்தவராக இருந்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளராகவும் இருந்தார். ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டையாக இருந்த அத்தொகுதியில் சவுந்தர் அண்ணன் ஒருவரே பிரசாரங்களில் அதிகமாக பங்கெடுத்துக் கொண்டிருந்தார். கட்சி ஆட்களின் மீது இருந்த வெறுப்பே காலப்போக்கில் அவரைக் கட்சியில் இருந்து தனியாகப் பிரிந்து செல்லும்படி நேரக் காரணம் . நிச்சயம் அவர் இறப்பிற்கு நடத்தும் மட்ட கானாவைக்* கேட்பதற்கென்று பல ஏரியாக்களில் இருந்தும் கட்சியைச் சேர்ந்த ஆட்கள் வருவார்கள். இது போன்ற பெரிய தலைகளின் இறப்பின் போது நடத்தும் மட்ட கானாவை எந்த ஒரு இடையூறும் இல்லாமல் நடத்த வேண்டுமென்பதில் அருண் எப்போதும் கவனமாக இருப்பான். இப்போது டோலாக்கு அடிப்பதற்கு கலைமணி இல்லாமல் போனது அவனுக்கு மேலும் பதற்றத்தை உண்டாக்கியது.

கலைமணி மீது எப்போதுமே அருணுக்குத் தனி பிரியமுண்டு. இருவரும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள் என்பதால் பல இடங்களுக்கு ஒன்றாகவே திரிந்து கொண்டிருப்பார்கள். சுற்றி இருக்கும் நண்பர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் முதல் ஆளாக அடிதடியில் இறங்குவது கலைமணி ஒருவனாகத்தான் இருப்பான். அதனாலேயே கலைமணியிடம் ஏதாவது உதவிகள் கேட்டு அவன் பின்னே ஏரியா இளசுகள் சுற்றிக் கொண்டிருப்பார்கள். கலைமணியின் ஒப்புதல் இல்லாமல் அருண் எந்த ஒரு கானா கச்சேரியையும் நடத்தத் துணிந்ததில்லை. மதியம் சவுந்தர் அண்ணனின் தம்பி கேட்கும் போது கூட கலைமணியின் கண் அசைவு ஒப்புதலைப் பார்த்த பிறகு தான் அருண் மட்ட கானா நடத்துவதற்கே ஒப்புக் கொண்டான். கலைமணி இல்லாத கானா கச்சேரியை இதுவரை அவர்கள் நடத்தியதில்லை. மட்ட கானாவிற்கு ஒப்புக்கொண்ட பிறகு எப்படிப் பின்வாங்குவதற்கு என்று தெரியாமல் அருண் மீண்டும் புலம்பத் தொடங்கினான்.

“அந்த டாபர் வேற அதிகமாக் குடிக்க ஆரம்பிச்சுட்டான்டா… ஏதோ இப்போத் தான் கொருக்குப்பேட்ட பசங்க கூட சேர்ந்து ஆல்பம் பண்ணிட்டு இருக்கான். கானா பாலா கூட அப்பிடியே பண்ணு சினிமாவுல சான்ஸ் கிடைக்கும்னு சொன்னாரு. ஆனா இவன் வேல ஆவ மாட்டான் போல”

“இப்போ எதுக்குடா பொலம்பினு இருக்க… அது எல்லாம் அவன் கரெக்ட்டா இருப்பான். டேய் கிருமி காடிய* தட்டு. டேய்… நீங்க சாவாண்ட போங்க. நாங்க டோலாக்கு எத்துன்னு அப்பிடியே பசங்ககிட்ட சொல்ட்டு வந்துர்றோம்”

நால்வரும் அங்கிருந்து கிளம்பத் தயாரானார்கள். சகா தான் கட்டி இருந்த பர்மா லுங்கியை தொடை வரை தூக்கிக்கொண்டு பைக்கின் மீது அமர்ந்தான். அருணும் கவியும் ஆட்டோவை ஸ்டார்ட் செய்து அவுசிங் போர்டுக்கு விரைந்தார்கள்.

******

சவுந்தர் அண்ணன் மாரடைப்பால் இறந்து போனதை ஏரியாவில் உள்ளவர்களால் அவ்வளவு சுலபத்தில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சிலரின் மரணம் கத்தியைக் கொண்டுதான் நடந்தேறும் என்று அவர்கள் வாழ்வின் நீட்சியைக் கொண்டே தீர்மானித்துக் கொள்ளத் தோன்றும். சவுந்தர் அண்ணனின் மரணமும் அப்பிடித்தான் நடந்தேறும் என்று சுற்றியுள்ளவர்கள் நினைத்தார்கள். சவுந்தர் அண்ணனின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை ஹவுசிங் போர்ட் சுவர், முல்லை நகர் பஸ் ஸ்டாண்ட், பில்லர் பிரிட்ஜ் என்று பார்க்கும் இடங்களில் எங்கும் ஒட்டி இருந்தார்கள். அங்கங்கே குழுவாக நின்று கொண்டு கடந்த கால வாழ்வில், அவர் செய்த சம்பவங்கள் குறித்தும், அவரின் ஆள் பலத்தைக் குறித்தும், அவர் பெயரில் நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறித்தும் ஏரியா இளசுகள் பேசிக் கொண்டிருந்தார்கள். மட்ட கானாவிற்குச் செல்வதாகச் சொல்லி அருண் ஆட்டோவில் ஏறியதும் ஏரியா இளசுகள் பலரும் உடன் ஏறிக் கொண்டார்கள். அருண் அங்கு செல்லும் போது சவுந்தர் அண்ணன் பிரேதத்திற்கு முன் மட்ட கானா நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. “அருண் கானா டீம்” அன்றிரவு மட்ட கானா நடத்தப் போவதை அறிந்த பலரும் அங்கு வந்திருந்தார்கள். வந்திருந்தவர்களில் பலரும் தெருக்களில் நிறுத்தப்பட்டிருக்கும் ஆட்டோவில் அமர்ந்து கொண்டு மறைமுகமாக சரக்கு அடித்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் கூட்ஸ்செட் சுவரை தாண்டிக் குதித்து ஒருவரின் முகத்தை ஒருவர் காண முடியாத இருளில் அமர்ந்து சவுந்தர் அண்ணனின் இறப்பைப் பற்றி பேசிக் கொண்டே கஞ்சா வலித்தார்கள்.

“இன்னா அர்ணே மத்த பசங்க எங்க? நீங்க மட்டும் வந்திருக்கீங்க…”

“டோலாக்கு எத்துனு வர போய் இருக்கானுங்கனா.. இந்த கலைமணி வேற எங்கப் போனானே தெர்ல”

“அவன் இல்லாம எப்படிடா… டைம் ஆகுதுல”

“கரக்ட் டைம்க்கு ஸ்டார்ட் பண்ணிடலாம்னா… சர்மா நகர் பசங்கள வர சொல்லி இருக்கேன் அவங்களும் வந்துடுவான்க நீ கைமால்* ஆகாம பாத்துக்கோ. போன கானா அப்போ கூட லூர்து அண்ணன்தான் ரொம்ப சிக்கோ குத்துனு இருந்தாரு”

“அதெல்லாம் ஒன்னும் ஆகாதுடா அர்ணு. இப்போதான் பசங்ககிட்ட சொல்லிட்டு இருந்தேன்.. உங்க பசங்கள தவுர நடுவுல வேற எவனையும் பாட வுடாதீங்கோ… அப்புறம் தேவ இல்லாம பிரச்சனதான் வரும்”

ஃபிரீசர் பாக்ஸ் பெட்டியின் மேல் தலையை குப்புற கவுத்திக் கொண்டும், சவுந்தர் அண்ணனின் முகத்தைப் பார்த்துக் கொண்டும் வயது முதிர்ந்த பெண்கள் சிலர், “என் சீமானே…. என் ராஜாவே” என்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள். ரோஜா மாலையின் வாசம் அவ்விடம் முழுவதும் பரவி இருந்தது. பிரேதத்திற்கு அருகில் சற்று ஓரமாக அனைவரும் குடிப்பதற்கு பிளாஸ்டிக் குடத்தில் தண்ணீர் வைத்திருந்தார்கள். வெளிச்சத்திற்காக மாட்டப்பட்ட போக்கஸ் பல்புகளை சுற்றி பூச்சிகள் வட்டமிட்டபடி இருந்தன. அழுது முடித்த களைப்பில் சடலத்தைச் சுற்றி அமர்ந்திருந்த பெண்கள் சிலர் தலையில் கை வைத்தபடி எவ்வித சலனமுமின்றி அமர்ந்திருந்தனர். ஒரு புறம் கானா தொடங்குவதற்கான ஏற்பாடுகளை இறப்பிற்கு வந்தவர்களே எடுத்துச் செய்யத் தொடங்கினர். அனைவருக்கும் கேட்கும்படி ஸ்பீக்கர் ஒன்றை செட் செய்து, பாடகர்கள் பாடுவதற்கு தோதுவாக மைக் ஒன்றையும் தயார் செய்தார்கள். தார்பாய் ஒன்றை எடுத்து வந்து தரையின் மீது விரித்ததும் சுற்றி இருந்தவர்கள் கானாவை ரசித்துக் கேட்பதற்கு அவர்களுக்கு சௌகர்யமான இடத்தில் சேரைப் போட்டு அமர்ந்து கொண்டார்கள். சொல்லி வைத்தது போல் சாமியார் தோட்டம், ஏரிக்கரை, மல்லிகைப்பூ காலனி, கல்யாணபுரம் என்று பல ஏரியாவில் இருந்து இளைஞர்கள் குழுவாக வந்திருந்தனர். வந்திருந்தவர்கள் பலரின் மீதும் மதுவின் வாசம் வீசிக் கொண்டே இருந்தது. மனோஜ், சகா இருவரும் வராததை நினைத்து அருண் பதற்றத்துடனே இருந்தான். இருவரில் யாரையாவது அழைக்கலாம் என்று செல்போனை எடுக்கும் நேரத்தில் மனோஜும் சகாவும் பைக்கில் வந்து சேர்ந்தார்கள்.

“ஏய்… டோலாக்கு எத்துனு வர்றதுக்கு இவ்ளோ நேரமா?”

“இவன்தான்டா மாவா வாங்கப் போறேனு லேட் பண்ணிட்டான்”

மனோஜ் சகாவைக் கை காட்ட… சகா லுங்கியைத் தூக்கி இடுப்பில் இறுக்கிக் கொண்டே மாவாவில் கரைந்திருக்கும் எச்சிலைக் கீழே துப்பினான்.

டோலாக்கு அடிப்பதற்கு கலைமணியைத் தவிர வேறு யாரையும் அவ்விடத்தில் பொருத்திப் பார்க்க அருணுக்கு மனம் வரவில்லை. கலைமணியை நினைத்து உள்ளுக்குள் வெதும்பிக் கொண்டிருந்த கோவம் மேலும் அதிகரிக்கவே செய்தது. டோலாக்கு அடிப்பதற்கு ஆட்கள் யாரும் இல்லாததை நினைத்து அருண் மீண்டும் புலம்பத் தொடங்கினான்.

“இதுக்கு மேல கலை வர மாட்டானு நினைக்குறேன்”

“சரி அய்வ்வாத வுடு… ஆயாபால் ஆட்டோகிட்ட கவியாண்டதான் பேசினு இருக்கான். அவனே வாளிண்டரியா கேட்டான். டோலாக்கு அடிகட்டுமானு. அவன வெச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் வுடு”

மனோஜ் டோலாக்கு அடிப்பதற்கு மாற்று வழி சொன்னாலும் கூட அருண் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. அருணைப் பொறுத்தவரை அவன் பாடலுக்கு ஏற்றபடி டோலாக்கின் தாளம் இருக்க வேண்டும். அருண் குரலை ஏற்றி இறக்கிப் பாடும் நேரங்களில் எப்படி டோலாக்கைத் தட்ட வேண்டும் என்னும் நுணுக்கங்களை கலைமணி ஒருவனே அறிந்திருப்பான். அதனாலேயே கலைமணி இல்லாத பல கானாக்களைத் தவிர்த்திருக்கிறான். இடையில் டோலாக்கை மற்றவரிடம் கை மாற்றிவிட்டு சரக்கு குடிப்பதற்கும் கஞ்சா அடிப்பதற்கும் எழுந்து போகும் பழக்கம் எல்லாம் கலைமணியிடம் இல்லை. கானா நிறைவு பெறும்வரை அமர்ந்திருந்த இடத்தை விட்டு சிறிதும் நகராமல் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை அவன் ஒருவனே டோலாக்கு அடித்துக் கொண்டிருப்பான்.

கானா தொடங்கும் நேரமும் வந்தது. போகஸ் பல்ப்பின் வெளிச்சம் முகத்தில் நன்கு பிரதிபலிக்கும் படியும், இவர்களின் முகம் அனைவருக்கும் தெரியும்படியும் சௌகர்யமாக தார்பாயில் அமர்ந்தார்கள். என்னென்ன வகை பாடல்கள் பாடலாம், எந்த ரீமிக்ஸ் கானாவுடன் சவுந்தர் அண்ணன் வாழ்வியலை ஒட்டிப் பாடுவது இது போன்ற விஷயங்களில் அருணும், சகாவும் அவர்களுக்குள்ளே விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

“மாப்பி தலக்காணி* வெச்சிருந்தா குடேன்”

பாளையம் யாருக்கும் கேட்காதபடி கவியின் காதில் ரகசியமாகக் கேட்டான். கவி தனது சட்டையின் மேல் பாக்கெட்டில் இருந்த கூல் லிப் கவரை பிரித்துக் கொண்டே…

“டேய் ஆயாப்பால் வழக்கமா ஐப்ரோ-டென்* தானே போட்டுனு சுத்துவ… இப்போ இன்னா விஸ்பர்* எல்லாம் கேக்க ஆரம்பிச்சுட்ட”

“நிறைய பேரு வீட்ல இருக்குறவங்க கிட்ட பின்னடிக்குறான்ங்கடா* எந்தத் தேவ்டியா புள்ள இந்த வேல செய்துனே தெர்ல… அதான் கொஞ்ச நாளிக்கு ஸ்டாப் பண்ண்ட்டேன்”

பாளையம் கீழ் உதடை வலித்து கூல் லிப்பை ஓரமாக சொருகிக் கொண்டான்.

“ஓத்தா குசுமிங்க* கூட சுத்திட்டு இருந்தா அப்பிடிதான்”

கண்கள் இரண்டும் சிவந்த நிலையில் எப்போதும் போதையில் மிதந்து கொண்டிருப்பது போலவே பாளையத்தின் தோற்றம் இருக்கும். அதிகம் வம்பு தும்புகளில் ஈடுபடுபவனாகவும் ஏரியாவில் பெயர் பெற்றிருந்தான். சிறிய வயதில் அவன் ஆயாவிடம் பால் குடித்து வளர்ந்ததாக செய்திகள் பரவ நண்பர்கள் அவனை ஆயா பால் என்று கிண்டலடிக்க ஆரம்பித்தார்கள். காலப்போக்கில் பாளையம் எனும் அவனுடைய உண்மையான பெயர் மறைந்து ஆயாப்பால் என்னும் அடைமொழியே ஏரியாவில் நிலைத்து விட்டது. சகா ஒருவனைத் தவிர மற்ற அனைவரும் ஜீன் பாண்ட் அணிந்திருந்தார்கள். அதில் மனோஜ் மட்டும் தலை முடியை இடதுபுறம் முழுவதும் வழித்து வலது பக்கம் நீளமாக தொங்கவிட்டிருந்தான். கழுத்தில் அணிந்திருக்கும் ஜபமாலை, இரண்டு பக்க காதில் அணிந்திருக்கும் கருப்பு நிறத்திலான கம்மல், கைகளிலும், கழுத்திலும் குத்தப்பட்டிருக்கும் டாட்டூ என்று கானா பாடும் அந்த அணியில் மனோஜ் மட்டும் தனித்தே தெரிந்தான்.

பாளையம் மடியின் மீது டோலாக்கை வைத்துக் கொண்டு தயார் நிலையில் இருந்தான். திட்டமிட்டது போல் முதல் பாடலாக மாதா பாடல் ஒன்றை அருண் பாடத் தொடங்கினான்.

“ஏத்தி வெச்ச மெழுகுவத்தி… எரியுதம்மா உன்ன சுத்தி…
பாட வந்தேன் உன்ன பத்தி… பிறந்ததம்மா நல்ல புத்தி…

அடுத்த பாடல் இரங்கல் பாடலாக இருக்க வேண்டுமென்பதை எழுதப்படாத விதியாகவே கடைபிடித்தார்கள். சகா அடுத்த இரங்கல் பாடலைப் பாடத் தொடங்கினான்.

“இந்த மனிதனின் உயிரோ… கண்களுக்கு தெரியாத காற்று…
மனிதன் உயிர் உலகில் இருக்கும் வரைக்கும் எத்தனையோ கூத்து…
நீ தெரிஞ்சு நடந்துக்கப்பா பாத்து…

உயிரோடு இருக்கும் போது ஊத்த மாட்டான் பால…
கால நீட்டி படுத்துக்கிட்டா கழுத்து நிறைய மால…
உதவாத மாலைக்கெல்லாம் ஆப்பிள் தொங்கும் கீல…
இங்க கூடி இருக்கும் கூட்டத்துக்கு கானா பாட்டு வேல…
மனிதன் இறந்துவிட்டா பாடுவது எங்களோட வேல…
எங்களோட வேல…”

“இந்த மனிதனின் உயிரோ… கண்களுக்கு தெரியாத காற்று…
மனிதன் உலகிலே இருக்கும் வரைக்கும் எத்தனையோ கூத்து…
நீ தெரிஞ்சு நடந்துக்கப்பா பாத்து…

வாயக்கட்டி வயித்தகட்டி வைக்கதப்பா சேத்து…
சேத்து வெச்சினாக்கா போயிடுவ செத்து…
இறந்து போன எங்க பவுல் அண்ணனுக்கு.. நாளை தென்னை ஓலை கீற்று…
ஆளுக்கொரு மாலை போட்டு…
நாளை ஒத்தையடி மோளத்துக்கு ஆடுவோமே கூத்து… ஆடுவோமே கூத்து…
இந்த மனிதனின் உயிரோ….

இறப்பைப் பற்றியும் இறப்பில் மறைந்துள்ள கானா பாடகர்களின் வாழ்வியலைக் குறித்தும் இரண்டாவது பாடலை சகா பாடினான். தன் கைகளால் பல பாவனைகளை செய்து கொண்டும் தான் பாடும் வரிகளுக்கு அர்த்தம் கற்பிப்பது போல் சுற்றி இருப்பவர்களைப் பார்த்து தலையை ஆட்டிக் கொண்டும் சகா ராகமாக பாடிக் கொண்டிருந்தான். சகாவின் குரல் அங்கிருந்தவர்களுக்கு அடித் தொண்டையில் ஏதோ செய்தது. அடுத்து இறப்பை பற்றிய இன்னொரு பாடலை தான் எழுதிய வரிகளை தமிழ் சினிமா பாடலோடு இணைத்துப் பாடத் தொடங்கினான்.

“ஒத்தை அடி பாதையிலே… ஊரு சனம் தூங்கையில….
ஒத்தையில போனதப்பா சவுந்தர் அண்ணன் உசுரு.. உசுரு…
வெத்தலப்போல் வாடுதப்பா குடும்பத்தின் மனசு..

ஒத்தை அடி பாதையிலே… ஊரு சனம் தூங்கையில….
ஒத்தையில போனதப்பா சவுந்தர் உன்னோட உசுரு.. உசுரு…
வெத்தலப்போல் வாடுதப்பா குடும்பத்தின் மனசு…

முத்துமணி மால ஒன்னு தினம்தோறும் கோத்து வெச்சேன்….
சவுந்தர் அண்ணன் உன் கல்லறையில் மலராக சூடிடுவேன்…

உன் ஆருயிர் மகளான மலரு உன்னை நினைத்துடுவா..
தினம் உந்தன் முகத்தை காண எப்பொழுதும் ஏங்கிடுவா…
உன் அதட்டலும் கொஞ்சலும் இனி அவளுக்கு கிடைத்திடுமா…?

சகா சவுந்தர் அண்ணன் மகளைச் சுட்டிக்காட்டிப் பாடிய அடுத்த நொடி சட்டென்று சவுந்தர் அண்ணனின் மகள் எழுந்து சென்று அவரின் முகத்தைப் பார்த்துக் கதற ஆரம்பித்தாள். சவுந்தரின் மகள் அழ ஆரம்பித்ததும் இறப்பின் மௌனம் அங்கு நிலை கொள்ள ஆரம்பித்தது. சகா எவ்வித தடுமாற்றமும் இடைவெளியும் இல்லாமல் தொடர்ந்து பாடிக் கொண்டே இருந்தான். சகாவின் குரலும் டோலாக்கின் சத்தமும் தூக்கக் கலக்கத்தில் இருந்தவர்களையும் தட்டி எழுப்பியது.

சகாவின் பாடல் முடிந்ததும் அருண் அனைவருக்கும் பிடித்த, “ஆடி அடங்காத உசுரு… இப்போ ஆறடி பள்ளத்துக்கு” இரங்கல் பாடலைப் பாட ஆரம்பித்தான்.

அருணின் குரலை ரசிப்பதற்கென்று அவனுடைய நண்பர்கள் சிலர் மட்ட கானாவிற்கு வந்திருந்தார்கள். அவன் பாடிக் கொண்டிருக்கும் பொழுது இடையில், “வா சொன்ன அருணே…”,  “சூப்பர்டா மாப்பி” என்று கூச்சலிட்டு இளசுகள் பலர் அவனை ஊக்குவித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு சில பெண்கள் எழுந்து வந்து அருண் பாடிய பாடலுக்கு பரிசாக அவன் தலையைச் சுற்றி பணத்தை அவன் கரங்களில் திணித்துச் சென்றார்கள். மது தயார் நிலையில் இருப்பதாகக் கூட்டத்தில் நின்றிருந்த மந்துவானி முறைமுகமாக சிக்னல் கொடுக்க பாடிக் கொண்டிருக்கும்போதே ஒவ்வொருவராக எழுந்துச் சென்று ஆட்டோவிற்கு பின் மறைவாக நின்று கொண்டு சரக்கு அடித்துவிட்டு வந்தார்கள். சர்மா நகரிலிருந்து வந்த இளைஞன் ஒருவனிடம் டோலாக்கை மாற்றி விட்டு சகாவும், பாளையமும் இறுதியாக எழுந்துச் சென்றார்கள்.

கவியும் ஏரிக்கரையில் இருந்து வந்த கானா சுரேஷும் போட்டி கானாவில்* ஈடுபடத் தொடங்கினர். ஒருவனின் மனம் ஒருவர் நோகாதபடி பாடல் வரிகளைப் பிரயோகித்து ஒருவரை மாற்றி ஒருவர் கிண்டலடித்துக் கொண்டார்கள். ஜடை பின்னலைப் போல் ஏதேதோ வார்த்தைகளை பாடலுடன் இணைத்து நக்கலாகவும், எதிர் போட்டியாளரிடமிருந்து தன்னை உயர்த்திக் காண்பித்தும் அவர்கள் பாடிய பாடல் சுற்றி இருந்தவர்களுக்கு சிரிப்பை வர வைத்தது. துவக்கத்தில் சோகமாக நகர்ந்து கொண்டிருந்த கானா கவியின் வார்த்தைப் பிரயோகங்களால் திசை மாறி கொஞ்ச நேரத்திற்கு சிரிப்பும் கொண்டாட்டமாக நடந்து கொண்டிருந்தது. சவுந்தர் அண்ணனின் இறப்பையும் மறந்து சிலர் கவியின் பாடலை ரசித்தபடி ஓயாது சிரித்துக் கொண்டிருந்தார்கள். சகாவும், பாளையமும் தெரு முனைக்குச் செல்லும் போது மந்துவானி அவ்விருவருக்காக காத்திருந்தான். பாளையம் அவனை நெருங்கிக் கொண்டே,

“இன்னா மந்த்தே… கிசாவுல இருக்க போல. எங்களுக்கு கொஞ்சம் பேலன்ஸ் வெச்சுருக்கியா இல்லையா…?”

“ஹா… அது எல்லாம் இருக்குடா. இந்தா… கீர* இவ்ளோ தான் இருக்கு. உங்க ரெண்டு பேருக்கு இது போதும்ல. சரக்கு… ஆட்டோ சீட் பின்னாடி வெச்சிருக்கேன் எவ்ளோ வேணுமோ எத்துக்கோங்கோ…”

மந்த்துவானி பின் பாக்கெட்டில் வைத்திருந்த கஞ்சாப் பொட்டலத்தை எடுத்து பாளையம் கையில் திணித்தான்.

“செர்டா மந்த்தே… தேங்க்ஸ்டா. ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு. உனக்கு ஏன்டா மந்த்துவானினு பேரு வெச்சாங்கோ…?”

“ஏய்… இப்போ தெரிஞ்சு என் பேர்ல இன்னா செலையா வெக்க போற.. போடா”

மந்த்துவானி கோவித்துக் கொண்டு அங்கிருந்து கானா நடக்கும் இடத்தை நோக்கி நகரத் தொடங்கினான். தெருமுனையில் ஆட்டோவின் அருகில் அமர்ந்து கொண்டு யாருக்கும் தெரியாதபடி சகாவும் பாளையமும் கஞ்சா வலிக்கத் தொடங்கினார்கள். தொலைவில் பாடிக் கொண்டிருந்த அருணுடைய குரல் மட்டும் சன்னமாகக் கேட்டுக் கொண்டே இருந்தது.

“கருப்பு குல்லா* மச்சா அவரு… அவரு ஆர்ட் அட்டாக்ல செத்தத என்னால நம்பவே முடில”

பாளையம் இரண்டாவது வலி இழுப்பதற்குத் தயாரானான்.

“டேய்… எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் கூட.. அவன் சாவ அவனால கூட தீர்மானிக்க முடியாது”

“நீ சொல்றதும் கரட்டு தான் மாப்பி… ஆனா மத்தவன் சாவ நாம தீர்மானிக்க முடியும்ல”

“ஆமா… அப்பிடியே இவுரு நாலு மட்ட பண்ணி கிழிச்சுடுவாரு. போடா… சரி… மந்த்த எதுக்குடா கலாய்ச்சுனு இருக்க…?”

“இல்ல மாமே… சீரியஸ்ஸா தான் கேக்குறேன்… அவனுக்கு யாரு மந்த்துவானினு பேரு வெச்சாங்கோ… அவன் பேரே ஒரு கோக்கு மாக்கா இல்ல”

“உனக்கு எப்படி ஆயப்பால் பேருக்கு ஒரு பிளாஸ்பேக் இருக்கோ… அதே மாதிரிதான் அவனுக்கும். மந்த்துவானினு ஒரு பாதரு பர்மாகாரங்களுக்கு, அப்புறம் வேற ஊர்ல இருந்து பொழைக்க வந்தவங்களுக்குனு நெரியா பேருக்கு வூடு கட்டி கொடுத்தாராம்டா. அவுருணா ஏரியால இருக்குறவங்களுக்கு எல்லாருக்கும் ரொம்ப புடிக்குமாம். அதான் மந்த்தொட ஆயா அவரு நாபகமா இவனுக்கு அந்த பேர வெச்சிருக்கு”

“ஓ… இவன் பேருக்கு பின்னாடி இவ்ளோ பெரிய மேட்டர் இருக்கா…! இவனே ஒரு அக்காடி* இவனுக்கு போய் பாதருங்க பேரு எல்லாம் வெச்சிருக்காங்கோ…”

கஞ்சாவின் போதையில் பாளையத்தின் கண்கள் இரண்டும் சொக்கிக் கொண்டு போனது. முகத்தை மேலும் கீழுமாக சுழல விட்டு சகாவைப் பார்த்து வினோதமாக சிரித்தான். சகா கழுத்தைத் திருப்பி அந்நடு இரவிலும் தண்ணீர் குடத்தை தூக்கிக் கொண்டு போகும் இரண்டு இளம் பெண்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“யாரடா பாக்குற சித்தராவையா… டேய் அது சரியான மூஞ்சு கோய்ந்தம்மாடா* அதப் போய் பாத்துட்டு இருக்க”

“ஏரியா பொண்ணுங்கள தப்பாப் பேசுறதே உன் வேலையா போச்சு… ஓத்தா நானே உன்ன லவட்ட* போறேன் பாரு”

“டேய்… நான் என்ன பொய்யா சொல்றேன். சி பிளாக் பசங்கதான் யாருக்கும் தெரியாம மேல கூப்ட்னு போயி மஞ்சா காசுனானுங்கோ* அம்மன் தாயி தான் சொல்ட்டு இருந்தான்”

“நீ இப்டியே ஓல் ஓத்துனு சுத்திட்டு இர்றா… அதான் ஏரியாவுல உன்ன ஒருத்தனும் மதிக்க மாட்டேங்குறான். சரி வா அர்ணு கத்துவான்”

இருவரும் மீண்டும் கானாவிற்குள் இணைந்தார்கள். மதுவின் வலிமையும் கஞ்சாவின் போதையும் கானாவில் லயிக்க மேலும் அவர்களை உள்ளுக்குள் உசுப்பேற்றிக் கொண்டிருந்தது. சுற்றி இருப்பவர்கள் கையில் பணத்தைக் கொடுத்து அவர்கள் விரும்பும் பாடலைக் கேட்க முகத்தில் வியர்வை நீராய் வழிந்து கொண்டிருந்த போதிலும் கவியும், அருணும் மாறி மாறி அவர்களுக்கு சமர்பித்துக் கொண்டிருந்தார்கள். கஞ்சாவின் போதை பாளையத்தை நிலை கொள்ளாமல் செய்தது. இடை இடையில் டோலாக்கு அடித்துக் கொண்டே “ஆமா.. ஆமா…” , “ஆண்டவரே… சோத்துரமப்பா” , “கிளுகிளிப்பி” என்று அவனுக்குத் தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு ஏதேதோ மொழில் உளறிக் கொண்டிருந்தான். பாளையத்தின் போக்கைப் பார்த்து சிலர் அவர்களுக்குள்ளே சிரித்தும், “ஆயா பால் அடங்கே” என்று கண்டித்துக் கொண்டும் இருந்தார்கள். மணி இரண்டைக் கடந்ததும் சங்கு ஊதும் சாங்கியம் வந்தது. சங்கு ஊதி முடிக்கும் நேரம் வரை கானாவை கொஞ்ச நேரத்திற்கு நிறுத்தி வைப்பார்கள். அருகில் உள்ள வீட்டிலிருந்து டீ, காப்பி எடுத்து வரும் பெண்கள் சாவில் முழித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், கானா பாடகர்களுக்கும் கொடுப்பார்கள். அனைவரும் போதையின் மிதப்பில் இருந்ததால் யாரும் காப்பி குடிக்கும் நிலையில் இல்லை. டோலாக்கையும், மைக்கையும் அங்கேயே வைத்துவிட்டுக் குழுவாக ஆட்டோ நிறுத்தி வைக்கும் இடத்திற்கு சென்றார்கள். ஒரு பக்கம் சங்கு ஊதும் சாங்கியமும், ஓலை எரிக்கும் சாங்கியமும் நடந்துக் கொண்டிருந்தன.

“கவி பூஸ்ட்* இருந்தா குட்றா. ஏ… ஆயாப்பால் நீ என்ன ரொம்ப சிக்கம் கொடுத்துட்டு இருக்க… அமைதியா இருக்க மாட்டியா நீ… எல்லாரும் கேவலமாப் பாக்குறாங்கோ”

அருண் கவியிடமிருந்து மாவா வாங்கிக் கொண்டு அதை வாயில் அசை போட்டபடி பாளயத்தைக் கண்டித்தான்.

“அர்ணே… கானானா ஜாலியா இருக்கணும்டா. அப்போ தான் சவுந்தர் அண்ணன் மேல மாப்பா சுத்துவாரு”

சொல்லி முடித்ததும் கைகள் இரண்டையும் விரித்துக் காட்டி ஆடிக் கொண்டிருந்தான். மீண்டும் கலைமணி பற்றிய சிந்தனைகள் அருண் மனதில் ஓடத் துவங்கியது.

“கிருமி கலை போன் எதனா பண்ணானா…? இன்னும் ஆளக் காணோம். மறுபடியும் ட்ரை பண்ணிப் பாரேன்”

மனோஜ் பல தடவை முயற்சித்தும் ஸ்விட்ச் ஆப் எனும் பதிலே திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது. மனோஜ் விரக்தியில் போனை கட் செய்து அருண் பக்கம் திரும்பினான்.

“இன்னும் ஸ்விட்ச் ஆப்னு தான்டா வருது… எங்கனா பிரச்சன பண்ணி மாட்டிகிட்டானா?”

“எனக்கும் அதான்டா கிருமி பயமா இருக்கு… அவனுக்கு கானா தான்டா உசுரு. எல்லா கானாவுக்கும் நமக்கு முன்னாடியே அவன்தான் ரெடியா இருப்பான். இப்போ எங்க இருக்கான்… என்னப் பண்ணிட்டு இருக்கான்னே தெர்ல”

அந்நேரம் பார்த்து சவுந்தர் அண்ணனின் தம்பி துண்டு சீட்டில் எதையோ எழுதி எடுத்து வந்து அருணிடம் நீட்டினார். சவுந்தர் அண்ணனின் உறவினர்கள், மனைவி, மகன், மகள், உயிர் நண்பன் அனைவரின் பெயரும் அதில் எழுதி இருந்தது. அருண் எச்சிலை ஓராமாகத் துப்பி விட்டு…

“செர்ணா நான் பாத்துக்குறேன்”

என்று சொல்லி விட்டு துண்டு சீட்டை பாக்கெட்டில் திணித்துக் கொண்டான். கானா கச்சேரியின் பொழுது பலரும் அவர்களது சொந்த வரிகளைக் கொண்டும், மெட்டுகளைக் கொண்டும் பாடல் தயாரித்து வைத்திருப்பார்கள். அதில் அருண்தான் சொந்தமாக எழுதி மெட்டுப் போட்டு படிக்கும் பாடல்கள் மட்டும் எப்போதும் தனித்தன்மையுடன் இருக்கும். காதலைக் குறித்தும், சமூகத்தின் அவலங்களைக் குறித்தும், வாழ்வின் தத்துவங்களைக் குறித்தும், நட்பைக் குறித்தும் அவன் பாடிய பல பாடல்கள் பிறரால் கவரப்பட்டு இன்றும் பல கானா கச்சேரிகளில் அவன் அனுமதியின்றி ஒலித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தான் மெட்டெடுக்கும் ஒரு சில நிமிடங்களிலேயே அதற்கான வரிகளை அந்நொடிகளில் எடுத்து விடுவதில் அருண் கைதேர்ந்தவனாக இருந்தான். அவன் செல்லும் பல மட்ட கானாக்களின் பொழுது அழுகையை வெளிபடுத்தத் தெரியாமல் அதிர்ச்சியிலும், சங்கடத்திலும் மௌனமாக அமர்ந்து கொண்டிருப்பவர்களைத் தன் பாடலின் வரிகளைக் கொண்டே கண்ணீரை வெளிக்கொணர்ந்து சடலத்தின் முன் நிறுத்துவான். அருண் குரலுக்கும் அவன் மெட்டு படிக்கும் வரிகளுக்கும் அப்படி ஒரு அசாத்தியத் திறன் இருந்தது. தன் அப்பாவின் இறப்பில் இருந்து மீள முடியாமல் ஒரே இடத்தில் தன் பார்வையை செலுத்தியபடி வெறுமையில் அமர்ந்து கொண்டிருக்கும் சவுந்தர் அண்ணன் மகன் சுகுமாரின் கண்ணீரை சடலத்தின் முன் வெளிக்கொணர வேண்டுமென்பதே அங்கிருப்பபவர்களின் வேண்டுகோள். குடும்ப உறுப்பினர்களின் இரங்கல் பாடலாகவும் அது சுகுமாரை அழத்தூண்டும் வகையில் அப்பாடல் இருக்க வேண்டுமென்றும் சவுந்தர் அண்ணனின் தம்பி அருணிடம் கேட்டுக் கொண்டார். மாவாவை அசை போட்டுக் கொண்டே அதற்கான பாடல் வரிகளை அருண் தன் மனதுக்குள் எழுதிக் கொண்டிருந்தான். சங்கு ஊதும் சாங்கியம் முடிந்ததும் மீண்டும் தார்பாயில் அமர்ந்து கானாவை தொடங்குவதற்கு ஆயத்தமானார்கள்.

அருண் பாடல் வரிகளை மனதுக்குள் ஒரு முறை ஒத்திகை பார்த்துவிட்டு பாடத் தொடங்கினான்.

சவுந்தர் அண்ணன் வாழ்ந்த வாழ்க்கை இலக்கணம்.
நீ மறுபடியும் உன் மகன் சுகுமார் கூட இருக்கணும்…
ஒன்றாய் இருந்தாயப்பா… அன்பாய் வாழ்ந்தாயப்பா…
உந்தன் ஆசை மகன் சுகுமார் இப்போ கலங்குறானப்பா..

சுகுமார் கண்ணீர் இப்போ கடல் அலையா ஆனதே…
சவுந்தர் அண்ணன் தன் குடும்பத்தை விட்டு இவ்வுலகில் இருந்து மறைந்ததே…
உன்ன மறக்க முடியல… மறக்காம நினைக்க முடியல…
உன் நினைவாலே உன் மகன் சுகுமாருக்கு உறங்க பிடிக்கல…

நீ இறப்பதற்கு இறைவன் எதற்கு படைக்கனும்?
உன் மகள் மலரு வயிற்றில் மகனாக நீ பிறக்கணும்…
இனி உன்ன பார்க்க முடியாதையா… எங்க துன்பம் தீராதையா…
உன் மகன் சுகுமார் இப்போ அப்பானு அழைக்க ஏங்குறானையா…

நீ இல்லனா சுகுமாருக்கு ஆறுதல் சொல்ல யாரு..?
உன் பிரிவ நினைச்சு மனசுக்குள்ள துடிக்குறான்னா பாரு…
நீ திரும்பி வாயேனா… நீ எழுந்து வாயேனா..
சுகுமாரோட சோக முகத்த உன் கையில் ஏந்தனா…

அருண் பாடிய வரிகள் சவுந்தர் அண்ணன் மகனின் மனுதுக்குள் ஓர் அதிர்வை ஏற்படுத்தியது. எவ்வித சலனமுமின்றி எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனின் முகத்தில் விழியோரம் கண்ணீர் துளி தேங்கி நின்றது. அருண் பாடிக் கொண்டிருக்கும் போதே உடைபட்டுப் பீறிட்டு ஓடும் அணையைப் போல் “அப்பா….!” வென்று கத்திக் கொண்டே சடலத்தின் மீது விழுந்து அழத் தொடங்கினான். அதுவரை வெறுமனே சுற்றி அமர்ந்திருந்த பெண்களும், அவனது உறவினர்களும் அவனுக்குத் துணையாக கத்திக் கொண்டு அழ ஆரம்பித்தார்கள். கானாவில் ஒலித்த அந்த ஒற்றைக் குரல் பல குரலின் அழுகை ஓலங்களை ஒரு சேரக் கலங்க வைத்தது. தன் பாடலின் குரல் வழியே உணர்வின் வலிகளை வெளிக்கொணரச் செய்யும் சூட்சமத்தை அருண் எப்போதோ கற்றிருந்தான். பலரது அழுகை ஓலங்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்ததும் தாமாகவே அருணுடைய குரலும் டோலாக்கின் சத்தமும் பின்வாங்கிக் கொள்ள ஆரம்பித்தன. வெறுமனே கானாவை ரசித்து மகிழ்ந்து கொண்டிருந்தவர்கள் கூட சவுந்தர் அண்ணனின் மகன் அழுகையைப் பார்த்து கண் கலங்கிக் போனார்கள். மட்ட கானாவின் பாடல்கள் அப்பாடலோடு நிறைவு பெற்றது.

தங்கள் கானா குழு சார்பாக முன்னமே வாங்கி வைத்திருந்த மாலையை அருண் தன் நண்பர்களுடன் சேர்ந்து சவுந்தர் அண்ணன் சடலத்தின் மீது போர்த்தி தன் இரங்கலை அங்கு நிறுவினான். சவுந்தர் அண்ணனின் முகத்தைப் பார்த்து தேம்பிக் கொண்டிருந்த சுகுமார் சட்டென்று அருணையும் சகாவையும் அரவணைத்துக் கொண்டு, “அப்பா என்ன அனாதையா வுட்டு போய்ட்டார்டா அர்ணே” என்று அழ ஆரம்பித்தான். தெருமுனையில் நின்று கதை பேசிக் கொண்டிருந்தவர்கள், சாவிற்கு சற்றுத் தள்ளி அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் சவுந்தர் அண்ணனின் சடலத்தை நோக்கி வர ஆரம்பித்தனர். கூட்டம் கூட அழு குரல்கள் மேலும் அதிகரிக்கவே செய்தன. ஓயாது பாடிக் கொண்டிருந்த அருணுடைய குரல் ஆறுதல் வார்த்தைகளை வெளிக்கொணர முடியாமல் சடலமாய் உள்ளுக்குள் புதைந்திருந்தது. அழுகையை உணருகையில் உள்ளுக்குள் இழுபட்டுக் கொண்டிருந்த வார்த்தைகளை சிரமப்பட்டுப் பேச ஆரம்பித்தான். “அப்பா எங்கியும் போலடா சுகு… நம்ம கூட தான் இருப்பாரு”. தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மீண்டும் அருண் இயல்புக்கு திரும்பினான். டோலாக்கை எடுத்துக் கொண்டு அங்கிருந்து அனைவரும் நகரத் தொடங்கினார்கள். லுங்கியால் தனது கண்ணீரை துடைத்துக் கொண்டே சவுந்தர் அண்ணனின் தம்பி அவர்களை பின் தொடர்ந்து வந்தார்.

“இந்தா அருணே… பசங்களுக்கு பிரிச்சு கொடுத்துடு…. நாளைக்கு சாயங்காலம்தான் அண்ணன எடுக்குறோம் வந்துடுங்க”

தெரிந்த ஒருவரின் மரணத்திற்கு முன்னமே கானா நடத்தும் தொகையைப் பேசி வைக்கும் பழக்கம் எல்லாம் அருணிடம் இல்லை. அவர்கள் கேட்டதும் உடனே ஒப்புக் கொள்வான். கானாவிற்கான பணத்தை அவர் கையில் கொடுக்கும் போது கூட அருண் அதை எண்ணிப் பார்க்கவோ எவ்வளவு தொகை உள்ளது என்று கேட்கவோ இல்லை. சட்டையின் மேல் பாக்கெட்டில் பணத்தைத் திணித்துக் கொண்டு அங்கிருந்து நகரத் தொடங்கினான். பாளையம் மட்டும் தன் பங்கு காசை வாங்கிக் கொண்டு ரெயில்வே கூட்சில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருக்கும் தன் நண்பர்களை பார்க்கச் சென்றான்.

முல்லை நகர் பஸ் டிப்போ அருகில் ஆட்டோவையும் பைக்கையும் நிறுத்திக் கொண்டு நால்வரும் கலைமணி இன்னும் வீடு வந்து சேராததைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். மனோஜ் பெரம்பூரில் தனக்கு நன்கு அறிமுகமான நண்பர்களுக்கு கால் செய்து கலைமணி பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான்.

“டேய் அவங்க அம்மா வேற நிமிஷத்துக்கு நிமிஷம் கால் பண்ணிட்டு இருக்காங்க… மணி மூனு ஆவுது இன்னும் அவன ஆளக் காணோம் என்னடா பண்றது”

கவியின் கேள்விக்கு எந்த பதிலும் இல்லாமல் அருணும் சகாவும் அமைதி காத்தனர். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு மனோஜ் அவர்கள் அருகில் வந்தான்.

“டேய்… நானும் எல்லார்கிட்டயும் கேட்டுட்டேன். யாரும் அவன பார்க்கலனுதான் சொல்றான்ங்க”

மனோஜ் வியாசர்பாடியைச் சுற்றி உள்ள பல ஏரியாக்களில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் அவ்வப்போது கலந்து கொள்வான். அதனாலேயே அவனுக்கு பல ஏரியாவில் இருந்தும் நண்பர்கள் அறிமுகமானார்கள். புட்பால் விளையாடுபவர்கள், மெக்கானிக் கடை வைத்திருப்பபவர்கள், வழிப்பறியில் ஈடுபடுபவர்கள், ஏரியாவில் தன்னை முக்கியப்புள்ளிகளாக அடையாளப்படுத்திக் கொண்டு ரௌடிசம் செய்பவர்கள் என்று மனோஜ் அனைவரையும் அறிந்து வைத்திருந்தான். ஆனாலும் கூட கலைமணி பற்றிய எந்த விவரமும் அவனுக்குக் கிடைக்காமல் இருந்தது.

“எங்கடா போயிருப்பான்… பெரம்பூர்ல இவ்ளோ நேரம் இருக்க மாட்டானே… வீட்ல யாருக்கும் தெரியாம ஹௌசிங் போர்ட் மேல பத்துனு இருக்குறானா? எதுக்கும் அவங்க வீட்ல இருக்குறவங்கள மேல பாக்க சொல்லு”

கவி தலையைக் கோதிக் கொண்டு கோவமாக சொன்னான்.

“அது எல்லாம் பாத்தாச்சு… அவன எங்கியும் காணோம்”

“எங்கனா பிரச்சன பண்ணி தடிங்ககிட்ட* மாட்டிகிட்டானா…? லூசுக் கூதி… போன கூட ஆன் பண்ணி வைக்க மாட்டேங்குறான்”

“அவன் டப்பில* எப்போவும் சார்ஜ்ஜே இருக்காதுடா… நானும் எவ்ளோ தடவ அட்வைஸ் பண்ட்டேன். இப்போ பாரு அர்ஜெண்ட்க்கு ஒன்னும் பண்ண முடில”

சகா ஆட்டோவில் அமர்ந்து கொண்டே தன் பங்கிற்கு கலைமணியின் மீது இருக்கும் கோவத்தை வெளிப்படுத்தினான்.

“அவன் பெரம்பூர்தான் போனானு உங்களுக்கு நல்லா தெரியுமா?”

“அந்தப் பொண்ணு கால் பண்ணி பாக்க கூப்டுச்சுனு மதியானம் தான்டா சொல்ட்டு இருந்தான்… ஆனா எத்தன மணிக்கு கிளம்புனானு தெர்ல. நைட் கானாக்கு வந்துறேனுதான் சொல்ட்டு போனான்”

“இனிமே அவன தேடுறது வேல ஆவாது… நம்ம ஏரியா பசங்ககூடத்தான் எங்கனா சுத்தினு இருப்பான். எதுவா இருந்தாலும் காலைல பாத்துப்போம். இப்போ எல்லாரும் காலி ஆவுங்கோ”

அருண் ஒரு தீர்மானத்திற்கு வந்திருந்தான். நால்வரும்  அவரவர்களின் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.

*******

லைமணி எங்கு சுற்றிக் கொண்டிருந்தாலும் எங்கு இருக்கிறேன், என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை எப்போதும் அருணுக்கு போனில் தெரிவித்துக் கொண்டே இருப்பான். இன்று அவனிடமிருந்து எந்தத் தகவலும் வராமல் இருந்தது அருணுக்கு மேலும் ஓர் பயத்தை உண்டு பண்ணியது. கலைமணி பற்றிய சிந்தனைகளே அவன் மனதில் ஓடிக் கொண்டிருந்தன. தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தவன் இடையில் சகாவுக்கு கால் செய்து கலைமணி பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான்.

தொண்ணூறுகளில் அருணுடைய மாமாவும் கலைமணியின் அப்பாவும் ஸ்டேஜ் கானா நடத்துவதில் பிரபலமாக இருந்தார்கள். மாட்டு வண்டியின் மீது அமர்ந்து அருணுடைய மாமா கானாவை எடுத்து விட அதற்கு ஏற்றார் போல கலைமணியின் அப்பா அலுமினிய குண்டாவை குப்புற கவுத்திக் கொண்டு தலையை ஆட்டியபடி தாளம் போடுவார். அருணும் கலைமணியும் அவர்கள் அருகில் அமர்ந்து கொண்டு கை தட்டியும் கத்திக் கொண்டும் கானாவை ரசித்துக் கொண்டிருப்பார்கள். அப்போதிலிருந்தே இருவரும் எந்த ஒரு கானா கச்சேரிகளையும் தவற விடுவதில்லை. எப்போதெல்லாம் கானா கச்சேரி நடத்தச் செல்கிறார்களோ அப்போதெல்லாம் அவர்களுடன் இருவரும் சென்று விடுவார்கள். அப்போது கானாவில் கிடைத்த நெருக்கம் தான் நாளடைவில் இவர்களை இணைபிரியா நண்பர்களாக உருமாற்றியது. “ஆனா ஆவென்னா அம்பேத்கார பாரன்னா…” பாடலை அருணுடைய மாமா பாட அதற்கு ஏற்றார் போல் குண்டானை வைத்துக் கொண்டு கலைமணி தாளம் போடுவான். “அழகு அழகு அழகு… தமிழ் நாடு அழகு” பாடலை அருண் பாட கலைமணியின் அப்பா தாளம் போடுவார். இப்படி சிறு வயதில் நடந்த பல நினைவுகளை அருண் அன்றிரவு முழுக்க நினைத்துக் கொண்டே இருந்தான். மறுநாள் நாள் காலை சகா வந்து அருணை எழுப்பிய போதுதான் அவனுக்கு விழிப்பு தட்டியது.

“என்னடா காலைலியே வந்துட்ட… சரி கலை வந்துட்டானா?”

உடலை ரப்பர் போல் வளைத்து சோம்பல் முறித்துக்கொண்டே கேட்டான்.

“வந்துட்டான். நீ வா கொஞ்சம் ஸ்டான்லி வரைக்கும் போய்ட்டு வருவோம்”

சகாவின் முகத்தில் சோகத் தீற்றல் பரவி இருந்தது. ஏதோ தவறாக நடந்திருக்கிறது என்பதை மட்டும் அருண் யூகித்தான்.

“ஸ்டான்லி-கா ஏன்டா என்ன ஆச்சு…?”

“நீ வா சொல்றேன்”

அருணும் சகாவும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்து சேர்ந்த போது கலைமணியின் குடும்பத்தினர்கள் வார்ட் வராண்டாவில் நின்று கொண்டிருந்தார்கள். கலைமணிக்கு என்ன நேர்ந்ததென்று அவர்களிடம் விசாரித்தான். பேப்பர் மில்ஸ் ரோட்டில் கலைமணி குடித்து விட்டு நடு இரவில் தடுப்பு சுவரின் மீது மோதி விழுந்து கிடந்ததாகவும் ரோட்டில் சென்று கொண்டிருந்த வண்டி கலைமணியின் கையில் ஏற்றிச் சென்று விட்டதாகவும், கை சிதைந்து விட்டதால் சரி செய்ய முடியாமல் போக, பாதி கையை டாக்டர்கள் எடுத்து விட்டதாகவும் கலைமணியின் அம்மா மருத்துவமனையே அதிரும்படி கதறிக் கொண்டு சொன்னாள். கலைமணிக்கு நேர்ந்த விபத்தால் அவனுடைய கையை பாதி எடுக்கும் அளவிற்கு நேரும் என்று அருண் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் அப்படியே மெளனமாக நின்று கொண்டிருந்தான்.

விபத்தாலும் அடிதடியாலும் பாதிக்கப்பட்டு காயமடைந்த பல நோயாளிகள் வரிசையாக அந்த வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். கை கால்கள் உடைந்து, தலையில் அடிபட்டு ரத்தக் கரையுடன் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களை அவ்வளவு சுலபத்தில் கடந்து போக முடியாமல் அருண் அவதிக்குள்ளானான். கலைமணி அனுமதிக்கப்பட்டிருக்கும் படுக்கையைத் தேடி விரைவாக நடந்தான். வார்ட் முழுவதும் பல மருந்துகளின் நெடி வீசிக் கொண்டிருந்தது. கலைமணியின் அக்கா ஓர் படுக்கைக்கு அருகில் உட்கார்ந்து இருப்பதைப் பார்த்ததும் அவளை நெருங்கினான்.

அருண் நெருங்கி வந்த கொண்டிப்பதைப் பார்த்து கலைமணியின் அக்கா அழத் தொடங்கினாள். கழுத்து வரை போர்வை போர்த்தப்பட்டு கலைமணி மயக்க நிலையில் படுத்திருந்தான். யாரும் எந்த வார்த்தையும் பேசிக் கொள்ளாமல் மௌனமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அருண் பொறுமையாக வலது பக்கம் சென்று அவன் மேல் போர்த்தப்பட்டிருக்கும் போர்வையை லேசாக தூக்கிப் பார்த்ததும் அடுத்த கணமே நிலை கொள்ள முடியாமல் போர்வையைப் போட்டுவிட்டு படுக்கையின் கம்பியை பிடித்து நின்று கொண்டான். கோவமும் அழுகையும் ஒரு சேர கலந்து உள்ளுக்குள் அவனை என்னமோ செய்தது. டோலாக்கின் இசையைக் கொண்டு பலரைக் கொண்டாட்டத்தில் மிதக்கச் செய்தவன் இப்படி கை இழந்த நிலையில் படுத்திருப்பதைப் பார்க்க அருணிற்கு மனமில்லை. சட்டென்று அந்த வார்டை விட்டு வெளியே வந்தான். சகாவும் அவனைப் பின் தொடர்ந்து வெளியே சென்றான். சகா மருத்துவமனையிலுள்ள கான்டீனுக்கு அருணை அழைத்துச் சென்று தண்ணீர் கேன் வாங்கிக் கொடுத்தான். பதற்றத்திலிருந்தும் கோவத்திலிருந்தும் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயற்சித்த அருண் தன் கண்ணீரை அடக்க முடியாமல் தலையைக் கோதிக்கொண்டே தேம்பித் தேம்பி அழத் தொடங்கினான். அருண் இப்படித் தேம்பித் தேம்பி அழுவதை சகாவோ மற்ற நண்பர்களோ கூட இதுவரை பார்த்ததில்லை. அருண் அழுது கொண்டிருப்பதை பார்க்க சகாவிற்கும் அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அவன் தோளின் மீது கை வைத்து…

“அர்ணே அய்வாத மச்சா… சரி பண்ணிடலாம் டா”

“இல்லடா சகா.. இப்போ தான் அவன் ஃலைப் கொஞ்சம் நல்லா போயிட்டு இருந்துச்சு… சொந்தமா ஆல்பம் பண்ணனும்… ட்ரம்ஸ் வாங்கனும்னு என்னென்னமோ பிளான் வெச்சிருந்தான். எல்லாம் வேஸ்ட் ஆய்டுச்சு. நேத்து மட்டும் நாம அவன் கூட இருந்துருந்தா அவனுக்கு இது மாதிரி நடந்து இருக்காதுல”

இருவரும் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் கவியும், மனோஜும் மேலும் சில ஏரியா புள்ளிகளும் உடன் வந்தார்கள். எந்த ஒரு சமாதான வார்த்தைகளையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் யாரும் இல்லை. அந்த இறுக்கமான சூழலில் அடுத்து என்ன செய்வதெனத் தெரியாது கலைமணியின் நிலையை நினைத்து அனைவராலும் அனுதாபப்பட மட்டுமே அப்போது முடிந்தது. கலைமணி மயக்கம் தெளிந்த பிறகு அவனை விசாரிக்கும் போது தன் காதலியுடன் சண்டை போட்ட கோவத்தில் கொளத்தூர் பாருக்கு சென்று அதிகமாக குடித்ததாகவும், வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது போதையில் நிலை தடுமாறி தடுப்பு சுவரின் மீது மோதி எழ முடியாமல் மயங்கி விழுந்ததும், அதன் பிறகு வலியில் துடித்தது வரைதான் தனக்கு நினைவு இருப்பதாகவும் விசாரிக்கும் ஒவ்வொரிடமும் இதையே சொல்லிக் கொண்டிருந்தான். இது சம்மந்தமாக போலிஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து விசாரிக்கவும் செய்தார்கள். விபத்தில் கலைமணி கை இழந்தது பற்றியே ஏரியாவில் பலர் அரசல் புரசலாக பேசிக்கொண்டிருந்தார்கள். ஏரியாவில் வசிக்கும் பெண்கள், இளசுகள், கானாவால் அறிமுகமான நண்பர்கள் என்று கூட்டம் கூட்டமாக வந்து அவ்வப்போது கலைமணியை நலம் விசாரித்துச் சென்றார்கள். கலைமணியின் காதலியும் மருத்துவமனைக்கு வந்து தலையில் அடித்துக் கொண்டு மருத்துவமனையே அதிரும்படி கதறிக் கொண்டிருந்தாள்.

கலைமணிக்கு வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துச் செல்வது, மருத்துவனையில் அவனைக் கழிவறைக்கு அழைத்துச் செல்ல உதவுவது என்று அருண் எந்நேரமும் கலைமணியுடனே இருந்தான். மாதங்கள் கழிந்து அவனை டிசார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வந்த போதும் கலைமணியுடன் பேசிக்கொண்டிருப்பதிலேயே அருண் தன் நேரத்தை செலவழித்தான். கலைமணியின் உடல் தேறி அவன் சகஜமாக சிரித்துப் பேசத் தொடங்கினாலும் கூட கலைமணியால் இனி டோலாக்கு அடிக்க இயலாது எனும் வருத்தம்தான் அருணை உள்ளுக்குள் வதைத்துக் கொண்டிருந்தது. கலைமணிக்கு நடந்தது விபத்து என்று பலர் நம்பத் தொடங்கினாலும் அருணுக்கு மட்டும் உள்ளுக்குள் ஓர் சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. நிச்சயம் இது விபத்தாக இருக்க வாய்ப்பில்லை. கலைமணி மீது இருக்கும் பகையின் வன்மத்தினால் யாரோ ஒருவர்தான் இதைச் செய்திருக்கக் கூடும் என்று நம்பத் தொடங்கினான். கலைமணியின் நிலைக்கு யார் காரணமாக இருக்கக்கூடுமென்று அருணும் அவனது நண்பர்களும் அவர்களுக்குள்ளாகவே விவாதிக்கத் தொடங்கினார்கள். சண்முகா தியேட்டரில் கொடுங்கையூரை சேர்ந்த இளைஞர்களிடம் சண்டை போட்டது, சத்திய மூர்த்தி நகர் மைதானத்தில் கிரிக்கெட்டுக்காக சண்டை போட்டது, கவியின் தம்பியை அடித்ததற்காக பச்சையப்பா கல்லூரி மாணவர்களிடம் சண்டை போட்டது, மட்ட கானாவின் போது கன்னிகாபுரத்தில் சண்டை போட்டது என்று முடிந்தும் முடியாமலும் போன சம்பவங்களை நினைவுப்படுத்தி அவர்களுக்குள்ளாகவே பேசிக்கொண்டிருந்தார்கள். எந்த ஒரு சண்டையிலும் முதல் ஆளாக அடிதடியில் இறங்குவது கலைமணியாகத்தான் இருக்கும் அதனாலேயே அவன் மேல் பலருக்குத் தீராத பகை இருந்து வந்தது. கலைமணியின் நிலைக்குக் காரணம் இவனாக இருக்கும் அவனாக இருக்குமென்று யூகிக்க முடிந்ததே தவிர எந்த ஒரு தீர்மானத்திற்கும் அவர்களால் வர முடியவில்லை. கலைமணியின் நண்பர்கள் பலருக்கும் கால் செய்து சமீப நாட்களில் யாருடனாவது பிரச்சனை ஏற்பட்டதா? யாராவது அவன் மீது பகையாக இருக்கிறார்களா? என்று விசாரித்தார்கள். அருணும் சகாவும் தான் சந்தேகிக்கும் நபர்களை நேரில் சென்று அவர்களை மிரட்டவும், எச்சரிக்கவும் செய்தார்கள். ஆனாலும் கூட கலைமணியின் நிலைக்குக் காரணமானவர்கள் யார் என்பதை எவ்வளவு முயன்றும் இறுதி வரை கண்டுபிடிக்க முடியவில்லை.

அருண், சகா, மனோஜ், கவி நால்வரும் எப்போதும் கலைமணி அருகிலேயே இருந்தார்கள்.
அன்றைக்கு ஒரு நாள் குடிக்காமல் இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காதே என்று அருண் கலைமணியைப் பார்க்கும் போதெல்லாம் திட்டிக் கொண்டிருந்தான். தன் காதலி தன்னிடம் சண்டை போட்ட விரக்தியில்தான் அன்று குடித்ததாக கலைமணி தன் தரப்பு நியாயத்தைச் சொன்னான். எப்போதும் பொய் பேசி பொய் பேசி குடித்துக் கொண்டிருப்பதால்தான் அன்று சண்டை போடும்படி நேர்ந்துவிட்டதாகக் கலைமணியின் காதலியும் தன் பக்கம் நியாயத்தைச் சொன்னாள். தன்னை நிராதிபதியாக காட்டிக் கொள்ள பலரிடத்தில் காரணங்கள் பல இருந்ததாலும் கூட கலைமணி கையை இழந்ததற்கு மூலக் காரணமே குடிதான் என்று அனைவரின் மனதிலும் அழுத்தமாகப் பதிந்தது.

மாதங்கள் சென்று கொண்டிருந்ததே தவிர எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை. குடி போதையில் கலைமணியே ஏதாவது வண்டியின் மீது விழுந்திருக்கலாமென்றும், எதிர்பாராமல் வண்டி ஏதாவது அவன் கை மீது ஏறிவிட்டு சென்றிருக்கலாமென்றும் போலிசார் கேசை முடித்துக் கொண்டார்கள்.

ஆட்டோ சவாரி முடிந்ததும் அருண் நேராக கலைமணியின் வீட்டிற்குச் சென்று விடுவான். சினிமா, அரசியல், ஏரியாவில் நடக்கும் சம்பவங்கள் என்று ஹவுசிங் போர்ட் மாடியில் அமர்ந்து கொண்டு இருவரும் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பார்கள். கலைமணி கையை இழந்ததிலிருந்து அருணுடைய துணை இல்லாமல் வெளியில் எங்கும் செல்லவதில்லை. வெளியே செல்லும் நேரங்களில் மட்டும் செயற்கையான பிளாஸ்டிக் கையைப் பொருத்திக் கொண்டு கலைமணி வெளியே செல்வதை வழக்கமாக்கிக் கொண்டான். பெரும்பாலான நேரங்களில் செயற்கைக் கையைப் பொருத்த அருண்தான் உதவி செய்வான். அப்படி உதவி செய்யும் நேரங்களில் அந்த செயற்கை கை அருணுடைய கழுத்தை நெரிப்பது போலவும், அவனை அறைவது போலவும் அவன் உள்மனதுக்கு தோன்றும். கலைமணியைச் சந்திக்கும் ஒவ்வொரு பொழுதும் கலைமணியைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதை நினைத்து குற்றவுணர்ச்சியால் மேலும் அவதிக்குள்ளாவன்.

கலைமணி இல்லாமல் தான் இனி எந்த ஒரு கானா கச்சேரியையும் நடத்தப் போவதில்லை என்னும் முடிவுக்கும் வந்து விட்டான். கலைமணி தன் கையை இழந்த கணத்திலிருந்தே, “அருண் கானா டீம்” அவர்களின் குரல்களையும், இசையையும் இழந்தார்கள். அவர்களின் குரலில் கலைமணியின் நிலையை நினைத்து வருந்தும் கதறல் மட்டுமே நிலைத்திருந்தது. தங்கள் இசையையும் குரலையும் இனி எப்பொழுதும் மீட்டெடுக்க இயலாது எனும் முடிவிற்கும் வந்திருந்தார்கள்.

மாதங்கள் செல்லச் செல்ல அனைவரின் வாழ்க்கை தடமும் திசை மாறத் தொடங்கியது. கலைமணி தன் கையை இழந்த நிலையிலும் எம்.கே.பி. நகரில் சொந்தமாக ரீசார்ஜ் கடை ஒன்றை வைத்துக் கொண்டான். எந்நேரமும் தன் காதலியுடன் செல்போனில் பேசிக் கொண்டிருப்பதிலேயே அவனுடைய நாட்கள் கரைந்து கொண்டிருந்தன. விரைவில் அவனுக்குத் திருமணம் முடிப்பதற்கான ஏற்பாடுகளும் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தன. அருண் பகல் முழுவதும் தன் சவாரியை முடித்து விட்டு இரவு நேரத்தில் மட்டும் கலைமணி வைத்திருக்கும் கடைக்குச் சென்று அவனுடன் பேசிக் கொண்டிருப்பான். இந்த இரண்டு வருட இடைவேளையில் அருணுக்குத் திருமணம் முடிந்து அவனது மனைவி ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தாள். மருத்துவமனைக்கும், கோவிலுக்கும், கடைக்குமாக எந்நேரமும் தன் மனைவியை ஆட்டோவில் ஏற்றி சுற்றிக் கொண்டே இருந்தான். அதனாலேயே அவனது நண்பர்கள் அருணைப் பார்க்கும் போதெல்லாம் அவனது திருமண வாழ்வைக் குறித்து கிண்டலடிக்கத் தொடங்கினார்கள். சகாவும் கவியும் பாரிசிலுள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். சர்மா நகர் மார்கெட்டில் சொந்தமாக ஒரு ஷோரூம் வைக்கும் திட்டத்தில் இருந்ததால் அது சம்மந்தமாக பணம் புரட்டுவது, இடம் பார்ப்பது என்று தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். மனோஜ் ஏரியாவில் சின்ன சின்ன அடிதடி வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டு தன் வாழ்க்கைப் பிழைப்பை தேடிக் கொண்டான். அரசியலில் தனக்கென ஏதாவது ஆதாயம் கிடைக்குமென்ற எண்ணத்தில் பல அரசியல் புள்ளிகளுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தான். இப்படியாக எதிர்கால சிந்தனையை நோக்கி பயணப்பட்டாலும் கூட தங்கள் வாழ்வியலோடு கலந்திருந்த கானாவும் இசையும் காணாமல் போனதை அவர்கள் உணராமல் இல்லை. எப்போதும் குழுவாக சந்தித்துப் பேசும் அந்த இடம் இப்போது குப்பைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இருந்தும் அவர்கள் தங்கள் சந்திப்புகளை அந்த இடத்திலேயே நீடித்துக் கொண்டிருந்தார்கள். எதேச்சையாக கானா பாடல்களைக் கேட்க நேர்ந்தாலோ, கானா பாடகர்களை சந்திக்க நேர்ந்தாலோ அனைவரும் தாங்கள் அனுபவித்த கானா நாட்களைத் தங்கள் மனத்திரையில் ஓட விட்டு ரசித்துக் கொண்டிருந்தார்கள். கலைமணி மட்டும் எப்போதாவது மனம் வருந்தும் நேரங்களில் படுக்கைக்குக் கீழ் வைத்திருக்கும் தன் டோலாக்கை எடுத்து அதை வருடியும், முத்தமிட்டும் தன் நினைவுகளில் புதைந்திருக்கும் இசையை அந்நினைவுகளாலேயே மீட்டெடுத்துக் கொண்டிருந்தான்.

****************

லைமணியின் வீட்டிற்கு வந்த அருண் விடாப்படியாக அந்நடு இரவில் அவனை வெளியே அழைத்துச் சென்றான். எங்கு செல்கிறோம், எதற்காக செல்கிறோம் என்று கலைமணி பல தடவை காரணம் கேட்டும் “வாடா உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு… நீயே தெரிஞ்சுப்ப” என்று மட்டும் சொல்லிக் கொண்டிருந்தான். இருவரும் ஜே.ஜே. நகரை கடந்து சுவர் ஏறி குதித்து கூட்ஸ் செட்டிற்குள் புகுந்து முல்லை நகர் மைதானத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். அருண் எங்கே அழைத்துச் செல்கிறான் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே நாளை தனக்கு பிறந்தநாள் வர இருப்பது சட்டென்று கலைமணிக்கு நினைவில் தோன்றியது.

“இன்னா… என் பொறந்தநாளுக்கு கேக்கு வெட்டப் போறீங்களா? என்னடா… இன்னும் குசுமிங்க மாதிரியே பண்ணிட்டு இருக்கீங்க”

“ஆமாடா கலை கேக்கு தான் வெட்டப் போறோம் ஆனா இது கொஞ்சம் வித்யாசமான கேக்கு… நீ கொஞ்சம் அமைதியா வா”

ஒருத்தரின் முகத்தை ஒருவர் அடையாளம் காணமுடியாத அந்த இருண்ட மைதானத்தின் நடுவில் நின்று கொண்டு பாளையம் செல்போனில் லைட் அடித்து சிக்னல் கொடுத்தான். அந்த லைட்டின் வெளிச்சத்தைப் பார்த்தபடி அருணும் கலைமணியும் அவனை நெருங்கினார்கள். இருவரும் அங்கு சென்ற போது சகா, கவி, மனோஜ், பாளையம் நால்வரும் ஆட்டோவையும் பைக்கையும் நிறுத்திக் கொண்டு ரகசியமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். “இந்த டைம்ல இங்க இன்னாடா பண்ணிட்டு இருக்கீங்க” என்று கலைமணி கேட்டுக் கொண்டிருக்கும் போதே மனோஜ் ஆட்டோவினுள் இருந்து ஒருவனை வலித்து வந்து கீழே போட்டான். கைகள் இரண்டும் பின் பக்கமாகக் கட்டிப் போடப்பட்டிருந்த நிலையில் புழுதி மண் முகத்தில் உரச அவன் வலியால் முனங்கியபடி தரையில் விழுந்தான். கவி ஆட்டோவின் ஹெட் லைட்டை ஆன் செய்ததும் மனோஜ் அவன் தலையைப் பிடித்து கலைமணிக்கு அவனது முகம் நன்கு தெரியும்படி நிறுத்தினான். கன்னங்கள் வீங்கியும் உதடுகள் கிழிந்தும் அடையாளம் காணமுடியாத அளவிற்கு அவனது முகம் ரத்தக்கறையுடன் காட்சியளித்தது. கலைமணி அருகே நெருங்குகையில் அவனது முகமும் கன்னிகாபுரத்தில் மட்ட கானாவின் போது நடந்த சம்பவமும் கலைமணி நினைவுகளில் விருட்சமாகத் தொடங்கின.

நான்கு வருடத்திற்கு முன் கன்னிகாபுரத்தில் மட்ட கானா நடத்த கலைமணி தன் நண்பர்களுடன் சென்றிருந்தான். இறந்து போனவன் இளைஞனாக இருந்ததால் கன்னிகாபுரத்தைச் சுற்றியுள்ள அவனது நண்பர்கள் பலரும் அவன் சாவிற்கு வந்திருந்தார்கள். இறந்து போனவனின் நெருங்கிய நண்பனான சரத் என்பவன் மட்டும் குடி போதையில் ஓயாது பிரேதத்திற்கு முன் அழுதும், கத்திக் கொண்டும் ஆர்பாட்டம் செய்து கொண்டிருந்தான். பல மட்ட கானாவில் இது போன்று பிரச்சனைகள் விளைவிப்பவர்களைப் பார்த்துப் பழகி விட்டதால் அருணும் அவனது நண்பர்களும் கண்டும் காணாதது போல் கானா கச்சேரியை நடத்தத் தொடங்கினார்கள். ஆனாலும் கூட சரத் அவர்களை வம்பிழுத்துக் கொண்டே இருந்தான். அருண் பாடிக் கொண்டிருக்கும் போது இடையில் புகுந்து தன் நண்பனின் புட்பால் திறமையைப் பற்றி கானாவில் பாடச் சொல்லியும், “ஒழுங்கா பாடுங்கடா இல்லனா பாடுறதுக்கு குரல் இருக்காது” என்று அவர்களை மிரட்டிக் கொண்டும் இருந்தான். சுற்றி இருந்தவர்கள் சரத்தைக் கண்டித்தார்கள். ஆனாலும் கூட அவன் நிறுத்துவதாக இல்லை. சரத்தை அங்கேயே ஒரு கை பார்த்துவிடலாமென்று கலைமணிக்கு தோன்றினாலும் தன் கோவம் முழுவதையும் டோலாக்கு அடிப்பதிலேயே காண்பித்தான். பொறுமை இழந்த அருண் சரத்தை வேறு விதமாகத்தான் கையாளவேண்டுமென்று தன் பாடல் வரிகளாலே அவனை சீண்டத் தொடங்கினான்

ஏ… கச்சேரி வெச்சவன் கம்முனுகிறான்… பார்க்க வந்தவன் கத்தினுகிறான்…
தேவ இல்லாம சுத்தினுகிறான்… வொயர புடிச்சு வலிச்சுனுகீறான்….
இவன தூக்கி பின்னாடி போடுங்கோ..
மூனு மீட்டர் கயிற வாங்கி கட்டி போடுங்கோ…
இவன தூக்கி பின்னாடி போடுங்கோ.. மூனு மீட்டர் கயிற வாங்கி போடுங்கோ…

துக்கமான பாட்டு பாட வைக்குறாங்க கானா…
இவன் ஓசிகுடிய குடிச்சுப்புட்டு சண்ட வலிப்பான் வீனா…
பாட வந்த பசங்ககிட்ட காட்டுவாங்க சாமான்…
அவரு எங்க ஊர்ல மாட்டிகிட்டா போய்டுவாரு கோமா…
ஏ… கச்சேரி வெச்சவன் கம்முனுகிறான்… பார்க்க வந்தவன் கத்தினுகிறான்…

சும்மானா கானாவுல கொடுத்துன்னு இருப்பான் குரல…
ஐயோ போலிஸ் வந்து எட்டி பார்த்தா எங்க இருப்பான்னு தெர்ல…
பணத்த கொடுத்து நடத்துறவன் கொடுக்க மாட்டான் தொல்ல…
ஐயோ ஊருக்குள்ள இருக்குதுங்க இவன மாதிரி தத்திரம் புடிச்ச புள்ள..

ஏ… கச்சேரி வெச்சவன் கம்முனுகிறான்… பார்க்க வந்தவன் கத்தினுகிறான்…

கானா பாடும் பசங்ககிட்ட பேசுங்கப்பா அன்பா…
அடுத்த முற கூப்ட்டுனாக்கா வந்துடுவோம் தெம்பா..
ஐயோ கானா காரனா கலாய்ச்சனா ஆக்சிடண்ட் ஆயி செத்துடுவ…
உன் கானாவுக்கு இருவதாயிரம் வாங்கும்படி வெச்சுடுவ…

ஏ… கச்சேரி வெச்சவன் கம்முனுகிறான்… பார்க்க வந்தவன் கத்தினுகிறான்…

அருண் பாடி முடித்ததும் கலைமணியும், மனோஜும் சரத்தைப் பார்த்து சத்தமாகச் சிரித்தார்கள். கானாவைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு அவர்கள் சரத்தை குறி வைத்துத்தான் பாடுகிறார்கள் என்பது நன்றாகவே விளங்கியது. சிலர் சரத்தை நேரிடையாகப் பார்க்காமல் தன் பார்வையை வேறு எங்கேயோ செலுத்தியபடி சிரித்துக் கொண்டிருந்தார்கள். சரத்திற்கு அவமானத்தில் உடலெங்கும் தீ ஜூவாலை பற்றி எரிந்து கொண்டிருப்பது போல் இருந்தது. கோவத்தில் தன் பொறுமையை இழந்தவன் “அடிங் ஓத்தா யார நக்கலடிச்சு பாடுரீங்கோ… பொட்ட பாடுங்களா” என்று சொல்லி கலைமணி வைத்திருந்த டோலாக்கை எட்டி உதைத்தான்.

இதற்கு மேலும் பொறுமை காப்பது தன் குனாதிசியங்களில் சேராது என்பதை கலைமணி அக்கணத்திலேயே உணர்த்தினான். சரத் டோலாக்கை எட்டி உதைத்த அதே வேகத்தில் எழுந்து சரத் வாயைக் குறி வைத்து ஒரு குத்து விட்டான். தொலுக்கென்று சத்தம் கேட்டதும் கலைமணியின் அடியைத் தாங்கும் போதிய வலு உடலில் இல்லாமல் சரத் நிலை தடுமாறி கீழே விழுந்தான். சரத்தின் முன் பற்கள் உடைந்து வாயில் ரத்தம் கசிந்ததை அனைவரும் வாய் பிளந்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்கள். தன் வலியைப் பொருட்படுத்தாமல் சரத் சேரை தூக்கிக் கொண்டு கலைமணியை அடிக்கத் துணிந்தான். அதற்குள் கானாவை கேட்டுக் கொண்டிருந்தவர்கள் சுதாரித்துக் கொண்டு சட்டென்று சரத்தைத் தடுத்து நிறுத்தினார்கள். கலைமணியும் சரத்தை அடிக்கப் பாய்ந்தான். அருணும் அவனது நண்பர்களும் கலைமணியைத் தடுக்க முயற்சித்தனர். இருவரும் அடிதடியில் இறங்க அவ்விடமே களேபரத்தால் லைட்டும், சேர்களும் உடைந்து சாவிற்கான இயல்பையே இழந்திருந்தது.

சாவிற்கு வந்திருந்த முக்கியஸ்தர்கள் சிலர் தலையிட்டு சண்டையைத் தடுத்து நிறுத்தினார்கள். சவுந்தர் அண்ணனும் மற்றும் சில ஏரியா நண்பர்களும் சாவிற்கு வந்து சமரசம் பேசி அப்பிரச்சனையை அன்றோடு முடித்துக் கொண்டார்கள். அந்த சண்டைக்குப் பின் கன்னிகாபுரத்திலோ வேறு எங்கையாவது சரத்தை சந்தித்தாலோ கூட கண்டும் காணாதது போலத்தான் இருந்து வந்தார்கள். இரண்டு வருடங்கள் கழிந்தும் சரத்திற்குள் புதைந்திருந்த வன்மம் கலைமணியின் கையை உடைக்கும் அளவிற்கும் செல்லும் என்று யாரும் எதிர்பார்ககவில்லை. அருண் பின்னாலிருந்து அவன் தோளை தொடும் போதுதான் கலைமணி பழைய நினைவுகளிருந்து நிகழ் உலகிற்கு திரும்பினான்.

“என்ன கலை இந்த தேவடியா புள்ள யாருனு தெர்தா…? ரெண்டு வருஷமா உன் கை மேல வண்டிய ஏத்துனவன் யாருனு தெரியாம குழம்பினு இருந்தோம்டா. இப்போ தெரிஞ்சுடுச்சு… இந்த பாடு தான்டா எல்லாத்துக்கும் காரணம்”

“சரத்தா…! உனக்கு எப்புடி டா தெரியும்”

“கொஞ்ச நாளைக்கு முன்னாடி அசோக் கல்யாணத்துக்கு போய்ருந்தேன்… அப்போ கன்னிகாபுரம் பசங்ககிட்ட உன்ன பத்திப் பேசிட்டு இருக்கும் போது ரெட்ட வாலு தனியா கூட்டிட்டுப் போய் சீக்ரெட்டா ஒரு மேட்டரு சொன்னான்… இந்த பொறம்போக்கு தான் சின்ன யான* வெச்சு உன்ன ஏத்துனான்னு. விசாரிக்கும் போதுதான் தெரிஞ்சுது. மாதவரத்துல ஏதோ கண்ணாடி கம்பெனில இவன் வேல செய்யுறானாம். சில சமயம் டிரைவர் இல்லனா இவன் தான் லோடு எத்துனு போவான் போல. உனக்கு கை உடைஞ்ச அன்னைக்கு இவன் தான் லோடு எத்துனு போயிருக்கான். அப்போ நீ ரோட்ல வுயுந்து கிடக்குறதப் பார்த்து உன் மேல இருக்க காண்டுல உன் கைய ஏத்தி இருக்கான். விஷயம் தெரிஞ்ச அப்போவே ஏரியா பூந்து இவன செய்யணும்னு இருந்தேன்டா கலை.. பசங்க தான் நேரம் பார்த்து தட்டலாம்னு சொன்னானுங்கோ… இன்னைக்கு வேற உன் பொறந்த நாளுல அதான் ஸ்பெஷலா பண்ணிடலாம்னு…”

பாளையம் ஆட்டோ சீட்டுக்கடியில் இருந்து ஸ்டீலைக் கொண்டு செய்யப்பட்ட கத்தியை எடுத்து வந்து கலைமணியின் கையில் கொடுத்தான். லைட்டின் வெளிச்சத்தில் கலைமணி பிடித்திருந்த அந்த கத்தி கண்கள் கூசும் அளவிற்கு அந்த இருளிலும் மின்னியது. மனோஜும் தன் இடுப்பில் சொருகி வைத்திருந்த வேறொரு கத்தியை எடுத்துக் கொண்டு தயார் நிலையில் இருந்தான். சகா தான் எடுத்து வந்திருந்த சின்ன கத்தியை எடுத்து வந்து அருணிடம் நீட்டினான். ஐந்து பேரும் சரத்தை சுற்றி நின்று கொண்டு அவன் உடலின் பாகங்களை சிதைக்க தயார் நிலையில் இருந்தார்கள். அருண் தன் சட்டையின் கை மடிப்பை மேலே தூக்கிக் கொண்டு…

“இவன இவ்ளோ நேரம் ஃபைல்ல வுக்கார* வெச்சதே நீ இவன செய்யனும்ங்குறதுக்கு தான்டா. உன்ன லெப்ட்டு கைல சாப்புட வெச்சவனோட ரெண்டு கையும் வெட்றா கலை”

அருணுக்குள் இருக்கும் கோவமும் வெறியும் அவனுடைய குரலில் வெளிப்பட்டது. கலைமணி கத்தியை இறுக்கமாக பிடித்துக் கொண்டு சரத்தையே வெறித்தபடி நின்றிருந்தான். தன் உடலில் உள்ள உயிர் இன்னும் சிறுது நேரத்தில் பிரிக்கப்படப் போவதை நினைத்து சரத் பயத்தில் ஓயாது மண்ணில் புரண்டபடி “டேய்… டேய்… என்ன விட்டுடுங்கடா. ப்ளீஸ்டா அன்னைக்கு ஏதோ கோவத்துல பண்ணிட்டேன்டா. எனக்கும் ரெண்டு கொழந்த இருக்குடா விட்டுடுங்கடா.. ப்ளீஸ்டா.” என்று புலம்பிக் கொண்டே இருந்தான்.

“ஓத்தா… பின்னாடி இருந்தா குத்ற… பொட்ட பாடு…” என்று சொல்லி கவி பின் பக்கம் நின்று அவன் முதுகில் ஓங்கி உதைத்தான்.

“டைம் இல்லடா கலை. யோசிக்காத… செய்டா அவன… நாங்க கேஸ் வாங்கிக்குறோம்… அவன் தலைய வெட்டி அவன் வீட்டு வாசல்ல போட்டாத்தான்டா என் மனசு ஆறும்…..”

அருண் கலைமணியின் தோள்களைத் தட்டி நான்கு வருட பகையை முடித்துக்கொள்ள அவனை தூண்டிக் கொண்டிருந்தான்.

அம்மாவின் உதவியால் மலம் கழித்தது, டோலாக்கு அடிக்க முடியாமல் அதைப் பார்த்து பல நாட்கள் கண்ணீர் சிந்தியது, வெளியில் எங்கும் செல்ல விருப்பமில்லாமல் அறையே கதி என்று தனிமையில் இருந்தது, தான் எப்போதும் ஓட்ட விரும்பும் அப்பாச்சி பைக்கை ஓட்ட இயலாமல் போனது… இப்படி இந்த இரண்டு வருட இடைவேளையில் அவன் இழந்த சந்தோஷங்களும், அவன் அனுபவித்த ரணங்களும் அடுக்கடுக்காய் அவன் மனதில் தோன்றின. கத்தியை இறுக்கப் பிடித்துக் கொண்டு சினத்தோடு சரத்தை நெருங்கியவன் யாரும் எதிர்பாராத வகையில் சரத்தின் கரங்களை பிணைக்கப்பட்டிருக்கும் முடிச்சுகளை அவிழ்க்கத் தொடங்கினான்.

“ஏய் மாமே…! இன்னா பண்ணிட்டு இருக்க… அவன கண்ட துண்டமா வெட்றானா அவன ரிலீஸ் பண்ணுற… நாங்களே அவன செஞ்சிருப்போம். உனக்கோசம் தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம்”

பாளையம் நாக்கைக் கடித்துக் கொண்டு கலைமணி முடிச்சுகளை அவிழ்ப்பதைத் தடுத்தான். கவியும் கலைமணியின் சட்டையை பிடித்து பின் பக்கமாக வலித்துக் கொண்டே,

“பொழைச்சு போனு விடுறதுக்கு இது ஒன்னும் கேம் இல்லடா… லைப்ஃபூ. இனி எந்தப் பொறம்போக்கும் நம்ம பக்கம் திரும்பவே கூடாது. பாவம் எல்லாம் பார்த்துனு இருக்காத. போட்றா கலை”

கலைமணி மீண்டும் கீழே குனிந்து கட்டை அவிழ்க்கத் தொடங்கினான். தன் இடது கையைக் கொண்டு முடிச்சுகளை அவிழ்க்க முயற்சித்தால் அவ்வளவு சுலபத்தில் முடிச்சுகளை அவிழ்க்க முடியாமல் போனது. சலிப்போடு எழுந்து நின்று ஐந்து பேரையும் பார்த்தான்.

“நானும் இத்தன வருஷமா எனக்கு நடந்தது ஆக்சிடென்ட்டா இருக்கும்னுதான்டா நினைச்சுட்டு இருந்தேன். ஆனா இப்போதான் தெரியுது என் மேலயும் ஒருத்தன் கொல வெறில இருந்துருக்கான்னு. இவன மட்ட பண்ணுறதுனால மட்டும் எல்லாமே திரும்பக் கிடைச்சுடாதுடா அர்ணே.. உன் வைஃப் மாசமா இருக்கு… எனக்கும் சுதாக்கும் கல்யாணம் ஆகப் போது.. நம்ம எல்லாருக்கும் ஒரு லைஃப் இருக்கு… தோ இவனுக்கும் கூட ஒரு ஃலைப் இருக்கு. இத பத்தி எல்லாம் யோசிக்க மாட்டீங்களா?”

“ஹே… கலை… மொக்க நாயம்* பேசினு இருக்காத… உள்ள போனா மூனு வருசமோ ரெண்டு வருசமோ.. அதெல்லாம் வெளில வந்துர்லாம்.. நீ இவன செஞ்சுட்டு மட்டும் கிளம்பு. மத்தது எல்லாம் நாங்க பாத்துக்குறோம்..”

“இப்போ இவன அவுத்து வுட போறீங்களா…? இல்லையாடா..?”

கலைமணி அருணை பார்த்துக் கோவமாகக் கேட்க ஐந்து பேரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் அமைதியாக நின்றிருந்தார்கள். சிறிது நேரத்திற்கு பிறகு சகா அருணை நெருங்கினான்.

“இன்னாட அர்ணே இவன் இப்படி பண்ணினு இருக்கான்… இவனுக்காக தான்டா ரிஸ்க் எடுத்து இவனத் தூக்கினு வந்தோம்…

“எங்க பிரச்சன நடந்தாலும் இவன்தான் பர்ஸ்டு கை வுடுவான்… இப்போ இன்னாடானா எந்த பிரச்சனையும் வேணா காம்பிரமைஸ் ஆய்டலாங்குறான். கலை ரெண்டு வருசமா நீயும் வலியோட தான் வாழ்ந்துட்டு இருந்த அத மறந்துடாதா…”

“உண்ம தாண்ட அர்ணே.. ஆனா அந்த வலிக்கு பிரண்ட்ஸ்சு, லவ்வு, பேமிலினினு மருந்து இருந்துச்சு. அந்த மருந்து இல்லனா அவமானத்துல எப்போவோ செத்துருப்பேன்… இப்போ எல்லாமே ஸ்மூத்தா போதுடா. இதுக்கு மேல நாம ஏன் பிரச்சனைல மாட்டனும்”

இனி வாழப் போகும் நாட்களிலாவது கலைமணி தன் மேல் எந்த ஒரு கறையும், பகையும் இல்லாமல் மனநிம்மதியோடு வாழ நினைத்தான். பட்ட காயங்களுக்கு பதிலாக அவன் மீண்டும் ரத்தத்தைப் பார்க்க விரும்பவில்லை. பகையை முடித்துக் கொள்வதற்கும் அதை வளர்த்துக் கொள்வதற்கும் இடைப்பட்ட காலத்தில் அனுபவித்த காயங்களும் அதன் வலிகளுமே வாழ இருக்கும் காலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. கலைமணி அதை நன்றாகவே உணர்ந்துவிட்டான்.

“சரி… கிருமி நீயும் ஆயாப்பாலும் இவன கன்னிகாபுரத்துல வுட்டுட்டு அட்டியான்ட* வந்துடுங்க. நாங்க வெயிட் பண்றோம்”

“ஐய்ய…! வா சூப்பர்ரா சொன்ன… தூக்கினு வந்தவனையே தொணைக்கு அனுப்புற. இப்டியே வுட்டு வாங்கடா செத்தா சாவுறான்… இல்ல பொழைக்குறான்”

பாளையம் விருப்பமில்லாமல் தன் பைக்கை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து கிளம்பத் தயாரானான். அருண் கோவத்தில் நாக்கைக் கடித்துக் கொண்டு…

“வெறுப்பேத்தாதடா பாளையம்.. சொன்னத செய்… கிருமி இவன் கூட தொணைக்குப் போ மச்சா… ஆட்டோ எடுத்துனு போங்கோ”

எதுவும் பேசிக்கொள்ளாமல் மனோஜும், பாளையமும் சலித்துக் கொண்டே அங்கிருந்து கிளம்பினார்கள். அருண், கலைமணி, சகா, கவி நால்வரும் அவர்கள் எப்போதும் அமர்ந்து பேசும் அருண் வீட்டுக்கு அருகில் ஆட்டோ நிறுத்தி வைக்கும் இடத்திற்குச் சென்றார்கள்.

மணி இரண்டைக் கடந்திருந்தது. நாய்களின் சத்தமும் தெருமுனையில் குடித்து விட்டு ஒருவன் தன் மனைவியுடன் சண்டை பிடித்துக் கொண்டிருக்கும் சத்தமும் கேட்டுக் கொண்டே இருந்தன. அரைமணி நேரத்தில் மனோஜும், பாளையமும் அந்த இடத்திற்கு ஆட்டோவில் வந்து சேர்ந்தார்கள்.

“என்னடா அவன வுட்டுட்டீங்களா” கவி சிகரெட்டை வலித்துக் கொண்டே பாளையத்தை பார்த்துக் கேட்டான்.

“ஹா… அதெல்லாம் வுட்டாச்சு…” கவி பிடித்துக் கொண்டிருந்த சிகரெட்டை வாங்கிக் கொண்டே கலைமணி பக்கம் திரும்பினான் பாளையம்.

“இன்னா மாமே…! பொருளுக்கு வேல இல்லாம பண்ணிட்ட.. கேக்கு வெட்றதுக்கு பதிலு அந்தத் தேவ்டியா புள்ள தலைய வெட்டலாம்னு நினைச்சா இப்படி சிக்கம் கொடுத்துட்ட… இன்னாவோ ஹாப்பி பொறந்தடே டா மாப்பி”

பாளையம் கையை உயர்த்தி ஆசிர்வதிப்பதைப் போல் கலைமணியைப் பார்த்து வாழ்த்துச் சொன்னான். கலைமணி ஆட்டோவில் சாய்ந்து கொண்டே..

“வுட்றா பிரண்டுக்கு இதக் கூட பண்ண மாட்டீங்களா…”

அருண் கலைமணியை நக்கலாகப் பார்த்தான்.

“அதான் வுட்டோமே வேற இன்னா பண்ணனும் அதையும் சொல்லு”

“ஒன்னும் புடுங்க வேணாம். அவனவன் அவனோட லைஃப்ப பாருங்க. அது போதும்.

ஆறு பேரும் ஒருவரைப் பார்த்து ஒருவர் சிரித்துக் கொண்டிருந்தனர். யாரும் எதிர்பாரா நேரத்தில் அருண் சட்டென்று

“வியாசர்பாடி ஊருக்குள்ள கேளு….

முதல் வரியை அருண் ராகம் கலந்த தொனியில் வலிக்க அவனைப் பின் தொடர்ந்து…

“எங்க கலைமணி போல நண்பன் இங்க யாரு…

என்று கவி இடையில் குறுக்கிட்டு அடுத்த வரியைப் பாடினான். ஆறு பேரும் தெருவே அதிரும்படி சத்தம் போட்டுச்சிரித்தார்கள்.

“வியாசர்பாடி ஊருக்குள்ள கேளு….
எங்க கலைமணி போல நண்பன் இங்க யாரு…
ரொம்ப நாளா வாழ்க்கையில தொலைச்சுபுட்டோம் கானா
கலைமணி பொறந்தநாளுல மறுபடியும் தொடங்கப் போறோம் சீன்னா..

இரண்டு வருடமாக கலைமணியின் நிலையை நினைத்து உள்ளுக்குள் வருந்திக் கொண்டிருந்த அருணுடைய குரல் இப்போது அவனது புகழ் பாட அடித்தொண்டையில் இருந்து வார்த்தைகளைத் தேடி மேலோங்கி வந்தது. பாளையம் சிரித்துக் கொண்டே தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டி பைக்கின் டாங்கின் மீது தாளம் தட்டினான். நாலு பேரும் இப்போது கோரசாக சேர்ந்து பாடினார்கள்.

“வியாசர்பாடி ஊருக்குள்ள கேளு….
எங்க கலைமணி போல நண்பன் இங்க யாரு…

அருண் பாடலின் இரண்டாம் சரணத்தை பாட எத்தனிக்கும் முன் சகா சட்டென்று கையை நீட்டி தடுத்த அதே வேகத்தில் தொடர்ந்தான்.

பகைய மறக்க வெச்சான்… வாழ்க்கைய புரிய வெச்சான்…
கலைமணி யாருனு அவன் எதிரிக்கும் தெரிய வெச்சான்…
வாழ்க்கையில ஜெயிப்பதற்கு கலைமணி துணை இருக்கு…
இன்னும் பல காலத்துக்கு அவனோட நட்பு இருக்கு….

கலைமணிக்காக நாங்க இன்னா வேணா பண்ணுவோம்
ஒரே தட்டுல சோற போட்டு ஆறுப் பேரும் துண்ணுவோம்…
எங்களுக்கு யாரும் தூங்க இப்போ புடிக்கல…
விடியுற வர கானா பாடி கத்தினுப்போம் வியாசர்பாடில…

ஹே.. ஹாப்பி ஹாப்பி பொறந்தநாள்டா மாப்பி..
நீ பிரெண்டா கிடைச்சது எங்களோட லக்கி…

“வியாசர்பாடி ஊருக்குள்ள கேளு….
எங்க கலைமணி போல நண்பன் இங்க யாரு…

கலைமணி கூச்சத்தில் இடைவிடாது சிரித்துக் கொண்டே இருந்தான். “டேய் போதும்டா டேய்… ஓவர் சீன்னா இருக்குடா”

ஆனால் அவர்கள் நிறுத்துவதாக இல்லை இடைவிடாது ஒருவரை மாற்றி ஒருவர் கலைமணியை சுட்டிக்காட்டி தங்கள் கானா குரலாலும், கானா வரிகளாலும் கலைமணியை அலங்கரித்துக் கொண்டே இருந்தார்கள். வியாசை முழுவதும் உறங்கிக் கொண்டிருந்த அந்த நடு இரவில் இவர்களின் குரல் மட்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது. இனி எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

**********

(*) வட்டார வழக்குச் சொற்களுக்கான அர்த்தங்கள்:

குஜிலி – காதலி
ஜோபி – வேலைக்கு ஆகாதவன்
கோயிந்தனுங்க – கூட்டமாக சுற்றும் இளைஞர்கள்
கிசா – போதை
சிக்கம் – பிரச்சனை
நிமித்து – முதுகெலும்பை உடைப்பது
தட்டிவுடு – கழட்டி விடு
மட்ட கானா – இறுதி சடங்கில் நடத்தும் பாடல் கச்சேரி
போட்டி கானா – கச்சேரியில் யார் சிறந்தவர் என்று போட்டி போடுவது
காடி – வண்டி
கைமால் – கைசண்டை
தலக்காணி – ஹான்ஸ்
ஐப்ரோ-டென் – போதை மருந்து
விஸ்பர் – ஹான்ஸ்
பின்னடி – மாட்டிவிடுவது
குசுமி – சிறுவர்கள்
கருப்பு குல்லா – கைதேர்ந்தவன்
அக்காடி – எதற்கும் உதவாதவன்
மூஞ்சு கோய்ந்தம்மா – பாலியல் தொழில் செய்பவர்
லவட்ட – அடிப்பது
மஞ்சா காசு – உடலுறவு கொள்வது
பூஸ்ட் – மாவா
தடி – போலிஸ்
டப்பி – செல்போன்
பைல்ல வுக்கார வை – ரவுண்டு கட்டுவது
மொக்க நாயம் – அர்த்தமற்ற பேச்சு
அட்டி – நண்பர்கள் கூட்டமாக இணையும் இடம்
சின்ன யானை – டாட்டா ஏஸ் வண்டி

பாடல் உதவி – டோலாக்கு பாலாஜி, கானா மணி, கானா வினோத்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. மிக அருமையான முயற்சி….சிறப்பு பிரவீன் குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button