இணைய இதழ்இணைய இதழ் 74தொடர்கள்

வெந்தழலால் வேகாது; 02 – கமலதேவி

தொடர் | வாசகசாலை

உயிர்ப்பின் வெளி 

இருளிலே வராதே; ஔியிலும் வராதே!
உன் வருகையின் புனிதத்துவத்தைத் தாங்கப்
பகலுக்கு யோக்யதை போதாது;
அதன் இனிமையைத் தாங்க இரவுக்குச்
சக்தி இல்லை. ஆனால்,
இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட
சந்தியா காலத்தின் வெளிச்சத்தில்,
இருள் மிருதுவாகவும்
ஔி மிருதுவாகவும்
இருக்கும் போது வா.

வில்லியம் சிட்னி வால்கர்

‘உன் கடிதத்தை இவ்வாறாக எதிர்பார்த்தேன்’ என்று கி.ராவிற்கு கு.அழகிரிசாமி எழுதுகிறார்.

கு.அழகிரிசாமி கி.ராவுக்கு எழுதிய கடிதங்கள் ‘கு.அழகிரிசாமி கடிதங்கள்’ என்ற நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. அதன் முன்னுரையில் கி.ரா இந்தக் கடிதங்கள் காதல் கடிதங்களின் அளவிற்கு உணர்வுப்பூர்வமானவை என்கிறார். இந்த நூலின் வழி இன்னொரு அழகிரிசாமியை நம்மால் தரிசிக்க முடிகிறது. நண்பரை அளவு கடந்து நேசிக்கும் ஒருவரின் அலைக்கழிப்புகளும், அன்பின் பித்தும் நிறைந்த கடிதங்கள் இவை. சென்னையில் இருந்து இடைச்செவலிற்கு தினமும் ஒரு கடிதம். அழகிரிசாமிக்குத்தான் அனைத்து அலைக்கழிப்புகளும். கி.ரா, கு.அழகிசாமியின் அழியா அன்பின் மீது நம்பிக்கை வைத்து ‘பயல்’ எங்கே போய்விடப்போகிறான் என்று இருந்திருக்கலாம். 

ஆனால், கி.ரா அப்போது நோயின் தீவிரப்பிடியில் மருத்துவமனைகளில் இருந்தார். சயரோகம் என்று அழைக்கப்பட்ட ட்யூபர்குளோசிஸ் [TB] இன்பெக்ஷனால் பாதிக்கப்பட்டிருந்தார். அழகிரிசாமி, கி.ராவிற்கு எழுதிய கடிங்களின் வரிகளில் சில:

“எதற்காக வாழ்வது, இவ்வளவு கஸ்ட்டத்தோடு?” என்று எனக்கு எழுதியிருக்கிறாய்.
ஏன்; எனக்காக என்றே வைத்துக்கொள்ளேன்.

நீ எனக்கு இந்தச் சூனியக் காட்சியைப் பிரதிபலிப்பதால், நானும் சூனியமாக,வெறும் பாழ்வெளியாகப் போய்விடுகிறேன்.

நீ அடிக்கடி நீண்ட கடுதாசுக்களை எழுதிக் கொண்டிருக்க வேண்டும். அவை ஏற்படுத்தும் உற்சாகத்தால் நான் நாவல் எழுத வேண்டும்.

பெயர்களை எடுத்துவிட்டு வாசித்தால் அசல் காதல் கடிதங்களே.. ஆனால், ஏன் அப்படிக்கூற வேண்டும்? நட்பில் இந்தமாதிரியான அன்பு இருக்கக்கூடாதா என்ன?

இலக்கியம் எப்போதும் மானுட உணர்வு நிலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. நாம் இன்னும் கொஞ்சம் தாராளமாக அன்பைச் செலுத்தலாம் என்றே இவர்களின் கதைகளும், கடிதங்களும், நட்பும் நமக்குச் சொல்கின்றன. உலகமயமாக்கலின் மாற்று விளைவாக நம் முன்னே நிற்பது, தனித்தனி தீவுகளாகிப்போன தனிமனித மனம். இந்த காலகட்டத்தில் ஒரு பிரதேசத்தின், ஒரு இனக்குழுவின் மனிதர்களும், அவர்களின் வாழ்க்கையும் உயிர்ப்புடன் படர்ந்து கிடக்கும் வெளியாக இவர்களின் கதைகள் உள்ளன. இன்று ஒவ்வொரு நாடும் இந்த வெளியைத்தான் தேடுகின்றன. முன்வைக்கின்றன.

கி.ரா 1963 லிருந்து 1969 வரையான காலகட்டத்தில் தாமரை,சாந்தி, ஆனந்த விகடன், தீபம், கதிர் மற்றும் கண்ணதாசன் போன்ற இதழ்களில் எழுதிய கதைகளும், கு.அழகிரிசாமி 1944 லிலிருந்து 1948 குள் பிரசண்ட விகடன், கலைமகள், சக்தி, காண்டீபம் போன்ற இதழ்களில் எழுதிய கதைகளும் இந்தக் கட்டுரைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

கு.அழகிரிசாமியின் வெந்தழலால் வேகாது மற்றும் விட்டக்குறை போன்ற கதைகளில் ‘மதுரை ஆலவாய் அழகன்’ மனிதர்களின் உலகில் இயல்பாக வந்து செல்கிறவராக இருக்கிறார். நக்கீரரை எரித்த ஈசன் அவருக்கு விமோசனம் வழங்கியப் பிறகு, அவர் இயல்புக்குத் தகுந்த மாதிரி ‘சிவனே’ என்று இல்லாமல் அகத்தியரை அழைத்து நக்கீரருக்கு இலக்கியம் கற்பிக்கிறார். அழகரின் மன ஆழத்தில் தான் செய்த இரண்டு காரியங்களுமே சரியில்லை என்ற உணர்வு அலைக்கழிக்கிறது. தன் பள்ளியறை மஞ்சத்தில் உறக்கமில்லாமல் இருக்கிறார். மனவேதனை உடல் வெப்பமாக மாறி ஈசனே தணல் போல கொதிப்பதை உணர்ந்த அன்னை, “இதெல்லாம் தேவையா?” என்று வழக்கமான மனைவியாகி கண்டிக்கிறார். இவர் பேய், பூதகணங்களோடு தாண்டவமாடிவிட்டு வந்த பிறகும் உணர்வுகள் கொஞ்சமேனும் வழி கொடுப்பதாக இல்லை. தருமியும் தனக்குக் பரிசாகக் கிடைத்த பொன்னை ஆலயத்தின் படிகளில் வைத்துவிட்டு சென்று விடுகிறார். இத்துடன் வெந்தழலால் வேகாது கதை முடிகிறது.

இந்தப் பித்தன் நக்கீரனை எரித்ததோடு விட்டிருக்கலாம். புலவனுக்கு பெறுமையாவது மிஞ்சியிருக்கும். விமோசனம் அளித்து இலக்கணம் கற்பிக்கிறேன் என்று ஒரு நாடகமாடி சங்கத்தின் ஸ்திரத்தன்மையை குழைத்து விட்டான் என்று கபிலர் நினைப்பதிலிருந்து விட்டக்குறை கதை தொடங்குகிறது. நக்கீரரும் சங்கத்தில் இருந்தும் இல்லாதவராக ஒதுங்கிவிட்டார். ஒரு தலைமை பீடத்தில் விழுகிற நியாயமற்ற அதிகாரத்தின் அடி அதன் கீழ் உள்ள அனைத்தையும் பாதிக்கிறது. புலவர்களுக்குள் பூசல். “நக்கீரனார் தர்க்க வாதம் செய்து வெற்றி கண்டாரா? உயிர்பிச்சை வாங்கி பிழைத்தவர் தானே. நாம் சிவனிடமே செல்வோம்” என்ற பேச்சு எழுகிறது. துயரம் என்ற வெப்பம் தாளாது வடவைக்கனல் போல தகிக்கும் அழகனிடமிருந்து தன்னைப் பிரித்துக்கொண்டு மீனாட்சி எட்ட நிற்கிறாள். “பெருமையளிக்கும்படி நக்கீரனிடம் நீங்கள் தோற்றிருக்கலாம். ஆனால், அவனை எரித்ததனால் என்ன ஆனது?” என்று மீனாட்சி, அழகரை கேள்வி கேட்கிறாள். இறுதியில் இடைக்காடனுக்குள்ளும், தன்னுள்ளும் இருப்பது நக்கீரனே என்று அழகர் உணரும் போது தணிகிறார்.

குஅழகிரிசாமியின் முருங்கை மர மோகினி ஒரு த்ரில்லருக்கான வேகம் உள்ள கதை. இந்தக் கதையைப்பற்றி கு.அழகிரிசாமி, கி.ராவிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 21/5/45 ல் அவர் எழுதிய கடிதத்தின் பகுதி: “முருங்கை மர மோஹினி”யை நான் ஒரு சிறந்த கதையாகவே மதிக்கிறேன். தனக்கே புரியாமல், ஒரு பொருளின் மீது தப்பித்தவறி விழுந்த ஆசையைப் பிடிவாதமாக நிறைவேற்ற எண்ணித்தவிக்கும் மனித வாதையைப்பற்றி என்னால் முடிந்தமட்டும் நல்ல அடிப்படையுடனும் உருவத்துடனும் கதையாகச் சித்திரித்துள்ளேன். முதலில் விழுந்த ஆசை, பலவீனமடைந்த உள்ளத்தை எப்படி ஆட்டிக்குலைக்கும் என்பதை எழுதியிருக்கிறேன்”

அடுத்தவர் தோட்டத்து முருங்கைக்காய்கள் மேல் ஆசை கொண்டு அதைப் பறிப்பதுதான் கதை. மனம் முதலில் நம்மை எச்சரிக்கவே செய்கிறது. அதைக் கடந்து நாம் ஏன் ஒரு தவறான செயலைச் செய்கிறோம் என்ற பதில் தெரியாத ஆழத்தை தொட விழைவது கதையின் முக்கியத்துவமாகும். இவரின் அடுத்த கதை ‘மனசும் கல்லும்’ . வீட்டில் ஒரு மதியப்பொழுதில் கதை நடக்கிறது. கணவன் தன் அங்கவஸ்திரத்தை கதவில் போட்டுவிட்டு புத்தகம் வாசிக்க அமர்கிறான். மனைவி குழந்தையை தொட்டிலில் போட்டுவிட்டு சமைக்கிறாள். அந்த அங்கவஸ்திரத்தின் அசைவு அவனை வாசிக்கவிடாமல் தொந்தரவு செய்கிறது. குழந்தை அழுது சமையலுக்கு இடையூறு செய்கிறது. இந்தக்கதையும் உருவகக்கதைதான். நாம் உத்தேசித்த செயல்களுக்கு வரும் தடைகள் என்று அசையும் அங்கவஸ்திரத்தையும், குழந்தையின் அழுகையையும் வைத்துக்கொள்ளலாம். 

“இந்த இருபது கதைகளின் கதாபாத்திரங்கள் தங்களுக்குள் அடையும் தனிமை முக்கியமானது. அன்றாடத்தின் எளிய மனிதர்களுக்குள்ளும் அது இருக்கிறது. 
தெய்வீகத்தன்மை கொண்ட மனிதர்களுக்கு அதை விட பதின்மடங்காக அந்தத் தனிமை பெருகி நிற்கிறது. காலகாலமாக கதைகள் அதைத் தொட்டுவிடவும், விளக்கவும், உணர்த்தவும் எத்தனிக்கின்றன”

கி.ரா வின் சிநேகம் என்ற கதை பால்ய காலத்து நட்பின் கதை. அனாதை பெண்குழந்தையான ராமி இந்த ஊரின் ஒரு வீட்டில் அடைக்கலமாக வருகிறாள். அதிகாலை கொடும்பனியில் மேல்சட்டை கூட இல்லாமல் கைகளைக் கட்டிக்கொண்டு கம்பங்கதிர்களை தின்ன வரும் பறவைக்கூட்டங்களை விரட்டும் காவல் வேலை செய்கிறாள். குளிருக்கு இதமாக ஒரு மடி இல்லை அவளுக்கு. வயிற்றுப் பசி வேறு. வெயில் ஏறி வந்து அவளின் பிஞ்சு உடலை ஆதரவாகத் தொடுகிறது. பக்கத்துவயல் ராஜா அவளுக்காக கொண்டுவந்த அவலைத் தருகிறான். இருவரும் விளையாடத் தொடங்குகிறார்கள். கதை சொல்லி, பாட்டும் பாடும் ராமியை, ராஜாவிற்கு மிகவும் பிடித்துவிடுகிறது. ஆனால், இந்த ஊருக்கு வந்ததைப்போலவே ஒருநாள் காணாமல் போகிறாள். ராமி ஒரு திருமணத்திற்காக மறுபடி ஊருக்கு வருகிறாள். ராஜாவைப் பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்தவளை மனைவியை பார்க்க வந்த பெண் என்று நினைத்து ராஜா கண்டுகொள்ளாமல் சென்று விடுகிறான். அவள் ராமி என்று நினைவிற்கு வந்ததும் இவன் விசேச வீட்டிற்குச் செல்கிறான். அழைத்துப் பேச தைரியமில்லை. கூட்டு வண்டியில் ஏறும் வரை ராமியும் திரும்பவில்லை. வண்டி கிளம்பி சென்றபின் யாரும் அறியாமல் கண்ணீரை துடைத்துக் கொள்கிறான். அவளும் பணிந்து வந்து பேசவில்லை. இவனும் ஓடிப்போய் அவள் இருக்கும் இடத்தை அடைந்தும் பேசவில்லை. ஆனால், மனதிற்கு இது எதுவுமே தடையில்லை. அது இஷ்டம் போல அன்பு செய்து கொண்டுதான் இருக்கிறது. அது இஷ்டத்திற்கு செல்லமுடியாத தவிப்புதான் வாழ்க்கை என்றும் சொல்லலாம்.

கு. அழகிரிசாமியின் சுப்பய்யா தேவரின் கனவு என்ற கதை பணத்தால் உறவுக்குள் வரும் சிக்கலை சொல்கிறது. காலகாலமாக பணத்திற்கும் அன்பிற்குமான உறவு சிக்கலானது. அண்ணன் யாரும் அழைக்காமல் தங்கை வீட்டு வாசலில் வந்து நிற்பார். பிள்ளைப்பேறு பார்க்க வந்த கிழவி யாரோ என்று நினைத்து, ‘பொண்ணு பிறந்திருக்கு’ என்பாள். கிருஷ்ணம்மாளிடம் நான் வந்திருக்கிறேன் என்று சொல்லு என்று சொல்லிவிட்டு அண்ணன் காத்திருப்பதோடு கதை முடியும். ஒரு விவசாயியின் கடன் அவருடைய நிலத்தையும், உறவையும் சிதைக்கிறது. கடன் வாங்கியதால் ஏற்படும் வடுவே கதையின் ஆன்மா.

இவரின் மளிகைக்கடை சரஸ்வதி என்ற கதை உருவகக் கதை. கலை, இலக்கியம் என்ற செயல்பாடுகள் பணமுள்ளவர்களுக்கு எப்படியாக இருக்கிறது அல்லது அவர்களிடம் மாட்டிக்கொள்கிறது என்பதை ஒரு கடை முதலாளி நடத்தும் சரஸ்வதி பூஜையின் வழியாக நகைச்சுவையுடன் இக்கதை சொல்கிறது.கி.ராவின் கோமதி முப்பதுவயது கோமதி செட்டியாரின் பாலின மாறுபாட்டை பற்றிப் பேசுகிறது. கோமதி தன்னை பெண்ணாக பாவித்துக்கொண்டு பெண்களுடன் இருக்கிறான். ரகுபதி நாயக்கரின் வீட்டிற்கு சமையல் வேலைக்குச் செல்கிறான். அவனுக்குள் இருக்கு பெண்தன்மை நடை, உடை ,பேச்சில் வெளிப்படுவதை வேடிக்கையாக எடுத்துக்கொண்டு பெண்கள் சிரிக்கிறார்கள். ரகுபதி நாயக்கரின் அழகான பெயரன் ரகு ஊருக்கு வருகிறான். அவனைப்பார்த்து கோமதி அகத்தில் முழுப் பெண்ணாக மாறுகிறாள். ரகு முதலில் கோமதியை வெறுத்து அவமானப்படுத்துகிறான். பின் அவளுக்கு செவ்வந்திப் பூக்களும், கருவளையல்களையும் வாங்கிக் கொடுத்துவிட்டு ஊருக்குச் செல்கிறான். கைநிறைய கருவளையல்களுடன், தலையில் செவ்வந்திப்பூக்களுடன் ரகுவின் படத்தைப் பார்த்தபடி அமர்ந்திருக்கும் அவளின் முழு பெண்மைக் கோலத்துடன் கதை முடிகிறது. ரகுவைக் காணும் போது சட்டென்று கோமதி அகத்தில் மாறுதல் நிகழ்கிறது. அது வரை சிரித்து கலகலப்பாக இருந்தவள் தனிமைக்குள், காதலின் துயரத்திற்குள் நுழைகிறாள். இதை ரகு உணர்கிறான். அதனாலேயே பெண்ணிற்குரிய அலங்காரப் பொருட்களை வாங்கிக்கொடுத்து, ‘நீ பெண்தான்’ என்று அங்கீகரித்துச் செல்கிறான். அந்த அங்கீகரத்தையே திருநங்கைகள் பெரிதும் விரும்புகிறார்கள். இன்னொரு தளத்தில் பார்த்தால் அவன் கொடுத்த அடையாளங்கள் என்பது அவனேதான். இந்தக்கதை அவர்களின் உணர்வுகளை அழகாக நமக்குக் கடத்துகிறது.

அழகிரிசாமியின் தேவையும் தெய்வமும் என்பது பத்திரிக்கையாளராகும் கனவில் செல்வத்தை இழக்கும் ராமகிருஷ்ணன் நாயுடு என்ற பத்திரிகையாளரின் கதை. பத்திரிக்கைத் துறையின் உண்மையான பாடுகளை காட்டும் கதை என்பதுடன், அன்றாட சிக்கலிற்கு மத்தியில் தெய்வம் அன்னியமாகிவிடும் அபத்தத்தை இக்கதை சொல்கிறது. ‘ஒரு சட்டை தான் இருக்கு. அதுவும் துவைக்க போட்டாயிற்று’ என்று பத்திரிகையாளர் சொல்கிறார். பசியில் கிடந்து வயிறு உணவை ஏற்காமல் போகிறதால் சாப்பிடாமல் கோவிலுக்குச் செல்கிறார். தெய்வத்தின் முன் நிற்கும் போதும், வெளியே விட்டு வந்த புதுச் செருப்பின் நினைவுடன் மயங்கிச் சரிகிறார். மயக்கத்தில் கூட செருப்பைப் பற்றிய உளறல் வருகிறது. தெய்வம் இருக்க வேண்டிய ஆழத்தில் செருப்பு இருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்லும் இந்தக்கதை மனிதப்பாடுகளின் அவஸ்தையை நமக்குக் காட்டுகிறது.

கி.ராவின் தர்மராஜ்ஜியம் கதையில் ஏட்டுக்கல்விக்கும் நடைமுறை வாழ்விற்குமுள்ள இடைவெளி பேசப்படுகிறது. சுடலையாண்டித் தேவரை, வயல்காரரின் மகன் வேலைக்கு அழைத்துச் செல்ல வருகிறான். அவர் உறக்கத்தை கலைக்க விரும்பாமல் சென்றுவிடுகிறான். அன்று அவர் உணவிற்கே அல்லாடும் நிலை ஏற்படுகிறது. “தூக்கத்திலே எழுப்பறது பாவமில்லையா?” என்று நாராயணசாமி கேட்பான். தேவரின் மனம், ‘திங்கிற சோத்தில மண்ணப் போட்டியேடா பாவி நீ நாசமா போக’ என்று சொல்லும்.

கி.ராவின் சாவு என்ற கதையில் உறங்கிவிழிக்கும் அதிகாலையில் ராமானுஜ நாயக்கருக்கு திடீரென்று நெஞ்சுவலி வருகிறது. மனைவி ஜக்கு, சுடுநீர் எடுத்து வருவதற்குள் இறந்து போகிறார். தர்மதேவனின் வருகையை கி.ரா அந்த தேவனுக்கு உரிய அழகியலுடன் சொல்கிறார். ‘யாரோ கதவைத்தட்டியது போல இருந்தது. மாட்டின் குழம்படி தரையில் பதிந்திருந்தது. கோழிகள் படபடத்தன. கன்று தும்பை அறுத்து விடுவதைப்போல பதறி துள்ளி ‘அம்மா’ என்று அழைத்தது’ என்று எழுகிறார். வாழ்வின் நிலையின்மையின் குரூரத்தை எத்தனை கதைகள் பேசினாலும் தீராத மானுட துக்கம் இந்தக்கதையில் உள்ளது. அவத்தொழிலாளி என்ற கதையில் பெயரனின் மரணத்திற்கு வரமுடியாமல் போகும் கிழவியின் கதை. பேருந்து ஓட்டுனர், நடந்துனர் மற்றும் இடைத்தரகர்களின் அலட்சியத்தைக் காட்டும் கதை இது. இந்தக்கதை 1965 ஆம் ஆண்டில் நடந்தது. ‘யார் யாரிடமோ தாங்கள் பட்ட துன்பங்களை, யார் யார் மீதோ தாங்கள் காட்ட வேண்டிய ஆங்காரத்தை இந்த அனாதையிடம் காட்டிக்கொண்டிருந்தார்கள்’ என்று இந்தக்கதையில் ஒரு இடம் வரும். அப்போது கதை ‘போக்குவரத்து துறை’ என்ற தன் பேசுபொருளை கடந்து என்றைக்குமான கதையாக ஆகிறது.

நாற்காலி என்ற கதை ஊருக்குள் முதன்முதலாக ஒரு நாற்காலியின் வரவு எப்படியாக இருந்தது என்பதைக் காட்டுகிறது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அத்தனை பேரின் எதிர்பார்ப்புகளைச் சுமந்து கொண்டு வந்த நாற்காலியின் நிலை என்னவாகிறது என்பதை சுவைபட கூறியிருக்கிறார். கதையிலிருந்து ஒரு வரி: ‘எங்கள் ஊரில் இறந்தவர்கள் தரை டிக்கெட்டிலிருந்து நாற்காலிக்கு வந்துவிட்டார்கள்’. சுருக்கமாக இது ஊர் பாட்டாவின் கதையடிக்கும் தன்மை கொண்ட கதை. ஒரு காதல் கதையில் மரபான திருமணம் மற்றும் காதல் திருமணம் பற்றிப் பேசப்படுகிறது. திருமண உறவில் ஏற்படும் பிரிவிற்கான காரணங்கள் சில சமயங்களில் மிக எளிய காரணங்களாக இருந்து விடுவதுண்டு. இந்தக் கதையில் பிரிவிற்கான காரணம் என்று எதுவும் வெளிப்படையாக சொல்லப்படாதது கதையை நம் மனதில் விரியச்செய்கிறது.

கு. அழகிராசாமியின் ஏமாற்றம், மீனா என்ற இரு கதைகளும் ஆண்,பெண் உறவு சார்ந்தவை. ஏமாற்றம் என்ற கதை இளம் கணவனான கிருஷ்ணமூர்த்திக்கும், மனைவி லட்சுமிக்கும் முதன் முதலாக ஏற்படும் சிறு ஈகோவை மையமாகக் கொண்டது. சென்னையிலிருந்து அவன் தசரா விடுமுறைக்கு வருகிறான். இருவரும் எப்பொழுது தனிமை வாய்க்கிறதோ அப்பொழுதெல்லாம் ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். பால்யகாலத்திலிருந்து எதிர்காலம் வரை பேச்சு நீண்டுகொண்டே செல்கிறது. காதலின் தொடக்கநிலையில் நம்பிக்கை ஏற்படவில்லை; பாசாங்குடன் நடந்துகொண்டேன் என்று மனைவி யதார்த்தமாக கூறுகிறாள். இதனால் கணவன் ஏமாற்றம் கொள்கிறான். சென்னைக்கு சென்றபின் அவனுக்கு முன்பு போல உற்சாகமாக கடிதம் எழுதமுடிவதில்லை. தான் ஏன் முதலில் கடிதம் எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. நான்காம் நாள் தன் ஈகோவை தள்ளிய பின் அன்பு முன்பிருந்ததைவிட பெரிய ரூபமெடுக்கிறது. கதையில் வரும் வரி…’எழுத எழுத கடிதம் பார்சலாகி விடுமோ என்ற நிலையில் வளர்ந்துகொண்டே வந்தது. அன்பிற்கு இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் என்று ஒன்றில்லை’ என்று நாயகன் கூறுகிறான். சாதாரணமான காதல் கதை, இந்த இடத்தில் அன்பை விசாரிக்கும் கதையாக மாறுகிறது. மீனா என்ற கதையானது முதன்முதலாக காதல் என்ற உணர்வால் கதையின் நாயகனை, இசையால் அணுகிய விழியிழந்த பெண்ணின் நினைவுகளைச் சொல்கிறது.

கி.ராவின் குடும்பத்தில் ஒரு நபர் என்ற கதையில் மயிலைக்காளையின் இறப்பைச் சுற்றி கதை நடக்கிறது. அயிரக்கா, கன்றிலிருந்து தான் வளர்த்த சந்தனபுல்லையை புகுந்த வீட்டிற்கு சீதனமாகக் கொண்டுவருகிறாள். தொட்டண்ணனுக்கு மனைவியோடு சேர்த்து ஒரு மயிலைக்காளையும் வருவதில் மகிழ்ச்சி. இனி தானும், மனைவியும், மயிலையும், இணைந்து வயலில் கிடந்து கடனை அடைத்து விடலாம். ஒற்றை காளை வைத்திருக்கும் இன்னொருவருடன் இணைந்து தன் வயலை உழுவதற்கு அவன் ஒப்பந்தம் செய்து கொள்கிறான். தன் வயலை உழுதபின் காளைக்கு காணநோய் வந்து படுத்துவிடுகிறது. மயிலைக்கு பதிலாக அவனே கலப்பை இழுக்க வேண்டியதாகிறது. கடனில் வட்டியை கட்டிவிட்டு ஒரு புடவைக்கும் ஒரு வேட்டிக்கும் கனவு காண்கிறார்கள். உழவுக் காளையும், அந்தவீட்டின் கனவும், அதன் மீதான அன்பும் பின்னிப்பிணைந்த கதை இது.

கி.ராவின் ஒரு சிறிய தவறு மற்றும் ஜெயில் என்ற இரண்டுகதைகளும் பள்ளிக்கூடத்தை அறவே வெறுக்கும் பையன்களை மையக்காதாபாத்திரமாகக் கொண்ட கதைகள். கி.ரா சிறுவர்களை விவரிப்பதே அலாதியானது. ‘அவனைப்பார்த்தால் குண்டூசியின் ஞாபகம்தான் வரும். அந்த மெலிவிலும் கழுத்தில் சதை மடிப்பின் வரிககள் விழுந்திருப்பதும் ஒரு அழகாக இருக்கும். நெற்றி மேட்டில் ஒரு சுழி. குளுமையான பேசும் கண்கள்’ என்று கதை நாயகனான ஆறுவயது ராகவலுவை விவரிக்கிறார். பயல் பயந்தவன். கர்ப்பிணியாக இருந்த பொழுது தாய் ஊஞ்சலில் இருந்து நழுவி விழுந்ததால் ஏழு மாதத்தில் பிறந்த பிள்ளை எதற்கெடுத்தாலும் மருண்ட பிள்ளையாக இருக்கிறான். அவனைக் காப்பற்றி எடுப்பதே பெரும்பாடாக இருப்பதால் அம்மா தன்நெருக்கத்திலேயே வளர்த்து விடுகிறாள். அம்மாவும் கொஞ்சம் பயந்த மாதிரிதான் என்கிறார். அவன் பள்ளியில் கையில் பிரம்புடன் மிரட்டும் வாத்தியாரைக் கண்டு பக்கத்திலிருந்த செடியை கட்டிப்பிடித்துக் கொள்கிறான். பின் பள்ளிக்கூடமே செல்வதில்லை என்று பிடிவாதமாக இருக்கிறான். கெஞ்சி, கொஞ்சி, அடித்தும் வேலைக்காவதில்லை. அவனுக்கு அம்மா முன்போல செல்லமாக இல்லை என்ற ஆதங்கம். ஒருநாள் பள்ளிக்கு சென்றேன் என்று பொய் கூறுவதால் அம்மாவிற்கு கோபம் வந்து அதிகமாக அடித்துவிடுகிறாள். ஓடிவந்து அவளையே கட்டிக்கொள்ளும் அவனுக்கு மறுமடி பழைய அம்மா கிடைக்கிறாள். அதேபோல் ஜெயில் கதையின் நாயகன் ராமசாமி இன்னும் கொஞ்சம் வளர்ந்த பிள்ளை. வயல் வேலைகளையெல்லாம் சரியாகச் செய்வான். பள்ளிக்கூடம் போகிறேன் என்று போவான் ஆனால், வேப்பமரத்தில் ஏறி ஔிந்து கொள்வான். அவனுக்கும் வீட்டிற்குள்ளேயே தனிமையில் இருக்கும் ஒரு குழந்தைக்கும் அன்பு பிறக்கிறது. ஒரு நாள் அந்தக் குழந்தையின் அழுகைக்காக வீட்டின் பூட்டை உடைக்கிறான். குழந்தை தாவிவந்து அவனை கட்டிக்கொள்கிறது. இரு குழந்தைகளின் அன்புப் பரிமாற்றம் அலாதியானது. ஆனால், பூட்டை உடைத்தது தவறென்று வீட்டுக்காரர்கள் வந்தவுடன் ஓடித் தப்புகிறான். இந்த இரு கதைகளில் ஒருவன் மேலும் ஒடுங்கிப்போகிறான். ஒருவன் வேறொன்றாய் மாறத்தொடங்குகிறான். இந்தக்கதைகள் மையத்திற்கு வெளியே நிற்கும் சிறுவர்களின் மனநிலையைச் சொல்வதற்கான கதைகளாக இருக்கின்றன.

“கி.ரா இந்தக் கடிதங்கள் காதல் கடிதங்களின் அளவிற்கு உணர்வுப்பூர்வமானவை என்கிறார். இந்த நூலின் வழி இன்னொரு அழகிரிசாமியை நம்மால் தரிசிக்க முடிகிறது. 
நண்பரை அளவு கடந்து நேசிக்கும் ஒருவரின் அலைக்கழிப்புகளும், அன்பின் பித்தும் நிறைந்த கடிதங்கள் இவை.”

கி.ராவின் பேதை என்ற கதையானது கரிசல் கிராமத்திற்கு கூலிவேலைக்காக வரும் வலசைக்காரர்களில் பேச்சி என்ற பேதைப் பண்ணின் கதை. உலக விவரங்களை சரிவர அறியாத வளர்ந்த குழந்தை அவள். பேச்சியை கி.ரா வருணிக்கும் போது, ‘சிங்கப்பல், உடைமரம் போன்ற பரட்டை தலை, திட்டுத்திட்டாய் அழுக்கு படிந்த உடல்’ என்று விரித்துக்கொண்டே சென்று, இவ்வளவு பிறவி கோணல்களுக்கு மத்தியில் கோயில் சிலைகளை விஞ்சக்கூடிய ஒரு அப்சரஸின் ஸ்தனதன்யங்களை பெற்றிருந்தாள் என்று எழுதுகிறார். இது தாய்மையின் குறியீடு. அறியா குழந்தையென வேப்பமரத்தடியில் உறங்கும் போது அவளே அறியாது பலாத்காரம் செய்யப்படுகிறாள். ஊரில் பெண்களுக்கு ஆண்களின் மேல் அசூயை பரவுகிறது. அமைதியான குளத்தில் விழும் முதல் கல். இது பேச்சிக்கும், ஊருக்கும் பொருந்தும். பேச்சிக்கு ஊரே சேர்ந்து பிரசவம் பார்க்கிறது . ‘சிரசிலடிக்கும் படியாக மடுவின் வேகத்தோடு நிறைய பால் இருந்தது. பேச்சி தொலைவில் வரும் போதே மனிதப்பாலின் கொச்சை நெடி கொல்லும்’ என்று எழுதுகிறார். பேச்சி அது வரை எந்த உணர்வையும் அடைந்தவள் இல்லை. தன்னை யாரோ மோசம் செய்ததைக்கூட உணரத்தெரியாதவள், தாய்மையை உணர்ந்து கொள்கிறாள். அவளின் உடலும் மனமும் அந்த ஒற்றை உணர்வால் ஆளப்படுகிறது. மெல்ல மனம் தெளியத்தொடங்கும் நேரத்தில் தொற்று நோயால் குழந்தை இறந்துவிடுகிறது. யாராலும் அந்தக் குழந்தையை அளிடமிருந்து பிரிக்க முடியவில்லை. குழந்தையின் உடல் வீணாகத்தொடங்கும் போது, அவளுடைய ஊர் ஆட்கள் அவளை அடித்து உதைத்து குழந்தையைப் பிடுங்கி மையானத்தில் புதைத்துவிட்டு, இவளை ஊருக்கு இழுத்துச் சென்று வீட்டில் அடைக்கிறார்கள். பூட்டப்பட்ட வீட்டின் கூரையை பிய்த்துக்கொண்டு வெளியேறி மயானத்திற்கு ஓடிவருகிறாள். கதையில் அவளின் மயான காட்சி மனதை பதைக்கவைப்பது. அவளுக்கு பயந்து ஊரார் வீட்டுக்கதவை அடைத்து உறங்கப்பழகுகிறார்கள். கொஞ்ச காலத்திற்குப்பிறகு ஒரு நாள் நள்ளிரவில் பூமியதிர நிறைமாத கர்ப்பவதியாக, நிர்வாணமாக அவள் தெருவில் நடந்து வரும் சித்திரத்துடன் கதை முடிகிறது. என்னடா பண்ணுவீங்க..என்பது மாதிரி அந்த நடை இருக்கும். அந்த இடத்தில் நம் கண்கள் நிறைவதை கதையின் வெற்றியாகக் கொள்ளலாம். பேச்சி என்ற நாட்டார் தெய்வம் கையில் குழந்தையுடன் இருப்பது. பீறிடும் உணர்வை தன் அழகியலாகக் கொண்ட கதை. குறிப்பாக இந்தக்கதையில் பேச்சியின் கனவில் ஒரு குழந்தை வரும். சிரிக்கும், தொட்டு விளையாடும், இவள் தன்னை மறந்து சிலிர்ப்பாள் அப்போது அவளுக்கு போதம் சரியாகவே இருக்கும். தாய்மையே அவள் மனதிற்கான விடுதலை. தாய்மையே அவளின் மூர்க்கத்திற்கான காரணி. தாய்மையே அவளை மனுஷியாக உணரச் செய்கிறது. தாய்மையே அவளை பெரும் மூர்க்கம் கொள்ள வைக்கிறது. அதீத உணர்வின் உச்சமான தெய்வீகத்தன்மைதான் நாட்டார் தெய்வங்களுக்கானது. இந்தக் கதையின் பேச்சி, தாய்மை என்ற உணர்வால் தெய்வீகத்தை எட்டுகிறாள்.

இந்த இருபது கதைகளின் கதாபாத்திரங்கள் தங்களுக்குள் அடையும் தனிமை முக்கியமானது. அன்றாடத்தின் எளிய மனிதர்களுக்குள்ளும் அது இருக்கிறது. தெய்வீகத்தன்மை கொண்ட மனிதர்களுக்கு அதை விட பதின்மடங்காக அந்தத் தனிமை பெருகி நிற்கிறது. காலகாலமாக கதைகள் அதைத் தொட்டுவிடவும், விளக்கவும், உணர்த்தவும் எத்தனிக்கின்றன. இந்தக் கதைகளில் அன்னியோன்ய தம்பதிகளாக இருப்பவர்களில் இருந்து, அன்னையும் மகனுமான சதை கொண்ட உறவு வரை அந்தத் தனிமை விளையாடாத களம் இல்லை. பெரும்புலவரான கபிலரும், நக்கீரரும் தனிமையை உணர்கிறார்கள். உடலை சரிபாதி உமைக்கு கொடுத்த ஈசனுக்கும் அதே நிலைதான். எதுவுமே அறியாத பேதைக்கு ஒரு சின்னஞ்சிறு குழந்தை பற்றுக்கோடாக இருக்கிறது.

“நாய் அங்கே தனியாக செத்து கிடக்கிறது. நான் தனியாயாய் நடந்து வருகிறேன். செல்லய்யா [அழகிரிசாமி] தூரத்தில் தனியாக உட்கார்ந்திருக்கிறான். திடீரென்று எனக்கு என்னவோ செய்தது. பாதையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்துவிட்டேன்” என்று கி.ரா ‘அழகிரிசாமி நினைவுகளில்’ என்ற கட்டுரையில் எழுதியிருக்கிறார். 

இந்த வாழ்க்கை விளங்கிக்கொள்ள முடியாத புதிர்களும் எதிர்பாராமைகளும் நிறைந்தது. இந்தக்கதைகள் அந்த விளங்காமையை தன் பேசுபொருளாகக் கொண்டிருக்கின்றன என்று இப்போது நினைக்கிறேன்.

படங்கள்: நன்றி – புதுவை இளவேனில், இணையம்

(தொடரும்..)

முந்தைய கட்டுரை

kamaladevivanitha@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button