
கற்றட்டு
“ஒரு சமையல் குறிப்புக்கு உயிர் கிடையாது. அதன்படி சமைக்கிற நீங்கள் தான் அதற்கு உயிரூட்டுகிறீர்கள்.”
– Thomas Keller, Famous Chef
பிற மொழி இலக்கியம், முக்கியமாக நாவல் படிக்க எடுக்கும்போது என்ன மாதிரி உணவு வகைகள் அந்தப் படைப்பில் சொல்லப்பட்டுக் கடந்து போகின்றன என்று கவனித்துக் கொண்டு போவது சுவாரசியமானது. தம் பிரியாணியில் இதைத் தொடங்கலாம்.
நான் வாசனை பிடித்து மயங்கிய நாவல், என் நண்பரும் பிரபலமான மலையாள எழுத்தாளருமான என்.எஸ்.மாதவன் எழுதிய ‘லந்தன் பத்தேரியிலெ லுத்தினியகள்’. படிக்க ஆரம்பித்து உள்ளே போனதுமே கம்மென்று தம் பிரியாணி வாடை. நாவலின் முக்கிய கதாபாத்திரமான ஜெசிக்காவின் ஞானஸ்நான விழா கொண்டாடும்போது பிரியாணி சமைக்கிறார்கள். என்.எஸ்.மாதவனும் என்னைப்போல் நல்ல உணவு ரசிகர். தம் பிரியாணி சமைத்ததை இப்படி எழுதுகிறார் –
“வெங்காயமும் இஞ்சியும் மற்றதும் வறுபட்டு நல்ல வாசனை வர ஆரம்பித்து, சமையல் கொட்டகையில் பரவியபோது எட்வின் சேட்டன் அந்த கொப்பரையில் மாமிசத் துண்டுகளை இட்டுக் கலந்தார். இறைச்சி சிவந்த போது, தயிரும், கசகசாவும், உப்பும் சேர்த்து வறுத்தார்.
அரிசி ஈரம் உலர்ந்தபோது கொப்பரைக்குள் தண்ணீர் விட்டு, அதை மூடி வைத்தார். “சர்க்காரியாவே, சோறு கொழஞ்சுடாம பார்த்துக்க. பிரியாணியிலே பாதி வேலை அரிசி வேக வைக்கறது தான். வெந்த அரிசிக்குள்ளே அந்த அரிசிமணியோட கண்ணு தெரியணும்”.
பாதி வெந்த இறைச்சியோடு எலுமிச்சைச் சாறும், அரிந்து வைத்திருந்த கொத்துமல்லித் தழையும் சேர்த்து தம் மசாலாப்பொடியை நகமுனையால் அளந்து தூவினார்”.
பிரியாணி சமைக்க, தம் வைக்க சமையல் குறிப்பை விவரமாகச் சொல்வதோடு சேர்மானங்களின் விவரத்தையும் விரிவாகத் தருகிறார் இப்படி :
இளசான ஆட்டு மாமிசம் – 10 ராத்தல்
பிரியாணி அரிசி – 5 படி
வெங்காயம் – 5 ராத்தல்
உள்ளிப்பூண்டு – ½ ராத்தல்
பச்சை மிளகாய் – 1 ராத்தல்
இஞ்சி – ½ ராத்தல்
பச்சை கொத்துமல்லி – 10 கட்டு
கிருஷ்ண துளசி – 5 கட்டு

நான் என்.எஸ்.மாதவன் சாரின் தம் பிரியாணியில் மயங்கி அவருடைய அனுமதி பெற்று நாவலை ‘பீரங்கிப் பாடல்கள்’ என்று மொழிபெயர்த்தது பின் கதை என்றால், அதற்கும் பின்னால் இன்னொரு தகவலும் உண்டு. சமையல் குறிப்பில் வரும் கிருஷ்ண துளசி என்ன மாதிரியான விஷயம் என்று எனக்கு உற்றாரும் உறவினருமான அன்னையரை விசாரிக்க, அது கறுப்பு துளசி என்றார்கள் உடனே பலரும். துளசியை ஏன் பிரியாணியில் போடணும்?
மாதவனையே கேட்டேன் – சார், கிருஷ்ண துளசி என்று தம் பிரியாணிக்குச் சேர்க்க வேண்டிய பொருட்களின் பட்டியலில் கொடுத்திருக்கிறீர்களே, அது என்னவாக்கும்?
அவர் சொன்னார் – அது புதினா. கிருஷ்ண துளசி பழைய பெயர். இந்தத் தலைமுறை மலையாளிகளுக்கும் அது அவ்வளவாகப் பரிச்சயம் இல்லாதது.
1950 – 60களின் கேரள அரசியல், மதம், சமூகம், கலை, இலக்கியம் பற்றி விரிவாகப் பேசும் அந்த முத்திரை பதித்த iconic நாவலில் இன்னும் கூட இரண்டு சமையல் குறிப்புகள் உண்டு – மட்டன் பஸந்த் செய்முறையும், மக்ரோனி பாயசம் காய்ச்சும் விவரமும்.
********************************************************
அது அண்டை அயல் இலக்கியம் என்றால் இது கடல் கடந்து வந்தது-
நோபல் பரிசு பெற்ற எகிப்திய எழுத்தாளர் நக்யுப் மஹ்ஃபுஸின் ‘கெய்ரோ மூன்று நாவல் தொகுதி’ படித்தேன். எகிப்திய தி.ஜானகிராமன் என்று அவரை நான் சொல்லத் தயார். சிதறிக் கொண்டிருக்கும் குடும்பங்கள், சின்னச்சின்ன சோரங்கள், மனக் குமைச்சல், இசை மேல் விருப்பம் என்று பொதுவான நகாசும், கதை முடிச்சுகளும் தட்டுப்படுகின்றன. மாமியார் மருமகள் சண்டை மருமகளின் அப்பாவை வரவழைத்து நீதி கேட்பதில் நிற்கிறது. சிக்கலான பிரச்சனை. சிர்கேஸிய பாணி கோழிக்கறியை அவர்களில் யார் யாருக்குச் செய்யக் கற்றுக் கொடுத்தார்கள் என்று அடித்துக் கொள்கிறவர்களை விலக்கி, நீங்க சொன்னது தான் சரி என்று அவசர நீதி பிரகடனம் செய்து தன் மகளை அவளுடைய மாமியாரிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்கிறார். அப்போதைக்கு அமைதி நிலவுகிறது.
மஹ்ஃபுஸ் மிதமான நகைச்சுவையோடு சொல்லும் இந்த அத்தியாயம் தவிர சிரிப்பு அபூர்வமான, எனில் சுவையான இந்த நாவல், காலைச் சிற்றுண்டிக்கு கோதுமை ரொட்டி தயாரித்து, ஒரு மத்தியதரக் குடும்பம் கூடியிருந்து உண்பதில் தொடங்குகிறது. முட்டை, பாலாடைக்கட்டி, அவரை, எலுமிச்சை ஊறுகாய் என்று ரொட்டிக்குப் பக்கவாத்தியம் ஒத்து சேர்கிறது. வீட்டுப் பெரியவர்கள் முதலில் திருப்தியாக சாப்பிட்டு எழுந்த பின்னர் இளைய தலைமுறையும் குழந்தைகளும் மீதி இருப்பதை உண்ணும் கலாசாரம் அவர்களுடையது. மறுபடி பிற்பகலில் குடும்பம் கூடி உட்கார்ந்து அரட்டை அடித்தபடி காப்பி குடிப்பது விஸ்தாரமாக வருகிறது. போகிற போக்கில் அராபிய இனிப்பு பக்லவாவும் குறிப்பிடப்படுகிறது.

சென்னையில் அந்த துருக்கி-அரேபிய இனிப்பு கிடைக்குமா என்று கூகுள் தேடல் செய்த ஐந்தாவது நிமிடம் டன்ஸோ வினியோக சேவை நிறுவன ஊழியர் வாசல் மணி ஒலிக்க, பக்லவா வந்து சேர்ந்தது. உலர் திராட்சை, பாதாம், பிஸ்தா சீவல் என்று தேன்பாகில் சீவிப் போட்டு அவசரமாகப் பிடித்த சுவைக்கட்டியாக அசட்டு இனிப்புச் சுவையோடு பக்லவா இருப்பதைச் சொல்லாமல் இருக்க முடியாது.
*******************************************
ஓரான் பாமிக்கின் ‘இஸ்தான்புல்’ அல்புனைவு நூல் அடுத்துப் படிக்கக் கிடைத்தது. இஸ்தான்புல் நகரின் அழகை உயர்த்திக் காட்டும் டான்யூப் நதிக்கரைக்கு புத்தகம் நகர்கிறது. கரையோரம் நடக்கும் எழுத்தாளர் பழைய நினைவுகளை அசைபோடும்போது அங்கே கூவிக்கூவி சிறு வியாபாரிகள் விற்கும் ‘காகித அல்வா’ வாங்கி உண்டதை நினைவு கூர்கிறார்.
எனக்கு அங்கே கொறிக்க காகித அல்வா கிடைத்தது. காகிதத்தைப் போட்டு அல்வா கிண்டித் தின்ன முடியுமா? அல்லது, நம்ம கோழிக்கோடு மிட்டாய்த்தெரு இனிப்புப் பலகாரக் கடைகளில் கோழிக்குஞ்சு எசென்ஸ் ஊற்றிக் கலந்து கோழி அல்வா செய்து பரபரப்பான விற்பனையில் இருப்பது மாதிரியா இந்த அரேபிய இனிப்பு?

பேப்பர் அல்வா என்பது மெல்லிய தகடுகளாக அல்வாத்துண்டைச் சீவி இரண்டு தகடுகளுக்கு நடுவே இனிப்பு மாவாவோ உலர்திராட்சை, பாதாம்பருப்போ இட்டுத் தருவது என்று ஒரு சாரார் சொல்ல, அது வேபர் அல்வா, எனில், பொறுபொறுவென்று வறுவல் மாதிரியான பிஸ்கட்டுக்கு நடுவே அல்வா வைத்துத் தின்னத் தருவது என்று இன்னொரு குழுவினர் அபிப்பிராயப்படுகிறார்கள்.
*********************************************
உடைப்பு Things Fall Apart நாவல் அடுத்து கிடைத்தது. நைஜீரிய எழுத்தாளரான நோபல் பரிசு பெற்ற சினுவா அச்பெ எழுதிய இந்த நூலை மறுவாசிப்பு செய்தேன். சின்னச்சின்ன சம்பவங்கள் மூலம் நகரும் கதை இது. அவ்வப்போது விருந்தினர்களாக நைஜீரியர்கள் பயணம் வைத்து நண்பர்களையும், உறவினர்களையும் சந்திக்கும்போது கோக்கோ கொட்டைகளைத் தின்னக் கொடுத்து உபசரிப்பது நாவலில் சீராக நடக்கிறது.
ஃபூ-ஃபூ என்ற வாழைக்காய்ப்பொடி கரைத்துச் சமைத்ததையும், சர்க்கரை வள்ளிக்கிழங்கு கூட்டையும் பரிமாறி உபசரிக்கிறார்கள். விருந்தினருக்கு உணவாகப் பரிமாறவே வீட்டுக்கு வீடு வள்ளிக்கிழங்கு சாகுபடியாகிறது.
விருந்தாளி தலை தட்டுப்பட்டதும் மரக் கலுவங்களில் மேற்படி கிழங்கும் வாழைக்காய்ப்பொடிச் சத்துமாவும் வேகவைக்க மண் அடுப்பில் ஏறுகின்றன. கடலுக்கு வெகு தொலைவில் இருக்கும் பிரதேசம் என்பதால் அபூர்வமான பொருளான உப்புக்கட்டிகளைப் பார்த்துப் பார்த்து இட்டுக் கிண்டிக் கிளறி மரவைகளில் நிரப்பி எடுத்து வந்து வயிற்றுக்கு வஞ்சனையில்லாமல் சாப்பிடுகிறார்கள்.
***********************************************
நைஜீரியாவில் உண்ண நிரப்பும் மரவை, கர்னாடகத்தில் அகழ்வாராய்ச்சி செய்யும்போது கிடைத்த புராதனப் பொருட்களில் ஒன்றை நினைவு படுத்துகின்றது. கருங்கல் சாப்பாட்டுத் தட்டு தான் அது. விஜயநகரப் பேரரசின் பதினேழாம் நூற்றாண்டு காலத்தானது.

கருங்கல்லில் குழித்து பெரிய நீள்சதுரக் குழியில் சோறும் அடுத்திருக்கும் சிறு வட்டக் குழிகளில் வியஞ்சனமும், புளிக்குழம்பும் வைத்து விளம்பிய கல் தட்டு. தட்டின் தாராளமான நீள அகலம் மற்றும் ஆழம் பார்க்கும்போது வயிறு நிறைய, தற்போதைய மூன்று சராசரி ஆட்கள் உண்ணும் ஆகாரத்தை அந்தக்கால மனுஷர் ஒருத்தரே உண்டதாகத் தெரிகிறது. இந்த வரலாறு படைத்த கல் தட்டு – கற்றட்டுக்கு என் மிளகு நாவலில் ஓர் இடம் கொடுத்தேன். நம்மாலானது.
****************************************************
நெட்ஃப்ளிக்ஸில் ஜப்பானிய டிவி சீரியல் காந்தரோ (Kantaro) பார்த்தவர்கள் கையசைக்கவும்.
புத்தக வெளியீட்டு நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதியான கதாநாயகனுக்கு ஸ்வீட் என்றால் உயிர். தினசரி வேலையை எப்படி சீக்கிரம் முடித்துவிட்டு டோக்கியோவில் அங்கங்கே இருக்கப்பட்ட புகழ் பெற்ற மிட்டாய்க்கடைகளில் நுழைந்து, அந்தக் கடைகளில் அதிக விற்பனையாகும் இனிப்பு ஆர்டர் செய்து அணு அணுவாக ரசித்து, வாயும் வயிறும் நிறையச் சாப்பிடுவது என்று திட்டமிட்டுச் செயலாற்றுகிறவன்.

இந்த ஒன்லைனை வைத்துக்கொண்டு அதகளப்படுத்தியிருக்கிறார்கள். டோக்கியோ மிட்டாய்க்கடைகளை இண்டு இடுக்கு விடாமல் காட்டி அவை விற்பனைக்கு வைக்கும் இனிப்புகளை உடனே வாங்கித் தின்ன ஆசையைக் கிளப்பும் படப்பிடிப்பு. கதாநாயகன் காந்தரோவாக வருகிறவர் ஜப்பானிய மரபு நடனமான கபூகி ஆட்டத்தில் பெயர் பெற்ற மத்ஸ்யூ ஓனே.
தேடி வந்த ஸ்வீட் கிடைத்து வாயிலிட்டு முதல் சுவை நாவில் தட்டுப்பட போகம் போல உடல் சிலிர்த்து ஒரு வினாடி கண்மூடி அனுபவிக்கும் அவரது அபிநயம் அலாதியானது. டொடெமொ அமாய்! So Sweet.
(வரும்)