இணைய இதழ்இணைய இதழ் 70பத்தி

வாதவூரான் பரிகள்; 02 – இரா.முருகன்

பத்தி | வாசகசாலை

யணம் செய்யத் தயாராவது பயணத்தைப்போல் சுவாரசியமான விஷயமாக ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. விரிவாகத் திட்டமிட்டு, எல்லா நூற்றாண்டுகளிலும் சீனா, அரேபியா, போர்ச்சுகல், இத்தாலி, இங்கிலாந்து என்று பல நாடுகளிலிருந்து உலகம் சுற்றக் கிளம்பி வந்து, பயணத்தில் முக்கியப் பகுதியாக தென்னிந்தியாவில் பயணிகள் ஆர்வத்தோடு அலைந்திருக்கிறார்கள். 

இபன் பதூதா, பாஹியான், மார்க்கோ போலோ, யுவான் சுவாங் என்று கிட்டத்தட்ட எல்லாப் பயணிகளும் பயணம் முடித்து ஊர் திரும்பி, உடுப்பைத் துவைக்கப் போட்டுவிட்டு வீட்டுச் சமையலை ருசித்தபடி, மற்றவகை விருந்துக்குக் காத்திருக்கும் நேரத்தில் பயணக் கதை எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். 

இவர்களில், போய்ப் பார்த்த இடங்கள், சந்தித்தவர்கள் பற்றி விரிவாகக் குறிப்பு எடுத்து வந்து அவற்றை எல்லாம் கொட்டிக் கிளறி அடுக்கி நாள்வாரியாக பயணக் குறிப்பு எழுதியவர்கள் பலரும். ஞாபகம் கலைந்துபோய், கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் நிஜம் என்று எழுதியவர்களும் உண்டு. மார்க்கோ போலோ பயணக் குறிப்புகள் இப்படிப்பட்டவை – சுவாரசியம். எனில், முழுக்க நம்ப முடியவில்லை.-

பதினேழாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவுக்கு வந்த இத்தாலியப் பயணி வல்லே (Pietro Della Valle) உலகம் சுற்றவே அவதாரம் எடுத்தவர். தாயகத்துக்கு திரும்பப் போய் இதயம் பேசாமல் அங்கங்கே பார்த்தது கேட்டது அனுபவப்பட்டதை சோம்பலின்றி உடனே கடிதங்களாக எழுதி வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார். கூரியர் சர்வீஸும் அஞ்சலும் இல்லாத அந்தக் காலத்தில் வல்லே எழுதி அனுப்பியதெல்லாம் வரல்லே என்று தொலைந்து போகாமல், சரியாகப் போய்ச் சேர்ந்தனபோல. அவர் ஊர்போய் உடனே அதையெல்லாம் எடுத்து அடுக்கி புத்தகமாக்கி வெளியிட்டிருக்கிறார் அது மட்டுமல்ல, இத்தாலிய மொழியில் அமைந்த இந்த நூலை இங்கிலீஷில் உடனுக்குடன் மொழிபெயர்த்து ஆங்கிலம் கூறும் நல்லுலகில் பரப்பப்பட்டது. ‘The Travels of Pietro Della Valle in India ‘ என்று 1624-ல் வெளியான இந்த நூலை 1800-களில் மறுபிரசுரம் செய்திருக்கிறார்கள். படிக்க வேண்டிய புத்தகம். 

வல்லேவின் நூல் முகப்பு

கர்னாடகத்தில் வடக்கு கன்னட பிரதேசத்திலும், கோவாவிலும், கோழிக்கோடு, கண்ணூரிலும் பாதம் பதித்துப் போயிருக்கிறார் வல்லே. இப்போது குக்கிராமமாகத் தேய்ந்து போன, அந்தக்கால நகரமான கெருஸொப்பா, உள்ளால், ஹொன்னாவர் என்று வந்திருந்து தங்கிப் போயிருக்கிறார். அவர் சொல்வது- அந்தப் பிரதேசத்தில் ஆண்களும் பெண்களும் காது மடல்களில் பெரிய ஓட்டை போட்டு நகை அணிந்திருக்கிறார்கள். காது தோள்வரை தொங்க, மடலைக் கிழித்திருந்தார்கள் அவர்கள். இதை அப்படியே கொடுத்து விட்டு பதிப்பாசிரியர் அடிக்குறிப்பாக எழுதிச் சேர்க்கிறார் – பர்மாவில் காது ஓட்டைக்குள் பாதி பிடித்த சுருட்டைச் செருகி வைத்துக் கொள்கிறார்கள். வல்லே சுற்றிவந்து அனுபவித்ததின் அடிப்படையில் கன்னடத்தில் அப்பா என்றால் தந்தை, அம்மா என்றால் தாய் என்று சொல்ல, பதிப்பாசிரியர் அவசரமாக அடிக்குறிப்புக்குப் பிடித்து இழுத்து துளு மொழியில் அப்பா என்றால் தாய், அம்மா என்றால் அப்பா என்று புதுப்புது அர்த்தங்களைச் சொல்கிறார். இதெல்லாம் இருந்தாலும் புத்தகம் திரட்டித் தரும் தகவல்களால் சிறப்பாகிறது.

வல்லே பயணம் வந்த ஊரில் ஒரு வாத்தியக்கார் இறந்துபட, அவருடைய மூன்றாம் மனைவி தானும் உயிர் நீப்பேன் என்று அறிவிக்கிறாள். கணவரின் உடலை எரியூட்டும்போது கூடவே எரிவது இல்லை இது. ஒரு மாதம் தினசரி சாயந்திரம் நாலு தெரு சுற்றி ஊர்வலமாக வருகிறாள். கையில் முகம் பார்க்கும் கண்ணாடியில் அடிக்கடி முகம் பார்த்தபடி மற்ற கையில் வைத்த எலுமிச்சம் பழத்தை முகர்ந்தபடி இருக்கிறாள் அவள். கண்ணாடி சிற்றின்பத்தை விலக்கப் போவதையும், எலுமிச்சையானது தீ தீண்டப்போகும் உடலாலும் மனதாலும் அவள் பரிசுத்தமாவதையும் காட்டுகிறதாம். அந்தப் பெண்ணோடு மொழிபெயர்ப்பாளர் மூலம் உரையாடி அவளை உயிர்த் தியாகம் செய்துகொள்ளாமல் தடுக்க வல்லே அவள் வீட்டுக்குப் போகிறார். அடுத்த வாரம் சதிமாதாவாக அக்னியில் உயிர்விட நாள் குறிக்கப்பட்ட அந்தப் பெண் அதைப் பற்றிய கவலையே இல்லாமல் சிரித்துப் பேசிக்கொண்டிருக்க வல்லே போய்ச் சேருகிறார். ஏழு வயதிலும் எட்டு வயதிலும் இரண்டு சிறு குழந்தைகள் அவளுக்கு. ‘உனக்காக இல்லாவிட்டாலும் குழந்தைகளுக்காக நீ வாழ வேண்டாமா ‘ என்று அவர் கேட்டதை அந்தப் பெண் லட்சியம் செய்வதில்லை. ‘என் சக்களத்திகள் அதுகளை வளர்ப்பாங்க ‘ என்று ஒரு வரி பதில் வேறு தருகிறாள். வல்லே திரும்பும்போது அவள் சொல்கிறாள் ‘நாளை உங்களைச் சந்திக்க நீங்க இருக்கற இடத்துக்கு வருவேன் ‘. வருகிறாள். வல்லேவிடம் பிச்சை கேட்கிறாள் – ‘அடுத்த வாரம் என்னை எரிக்கப் போறோம். அதுக்கு விறகு வாங்கணும், நெய் வாங்கணும். சாவுச்சடங்கு செய்யணும். ஏழைப்பட்ட குடும்பம் எங்களோடது. உங்களுக்கு புண்ணியமாகட்டும் முடிஞ்ச காணிக்கை கொடுங்க ஐயா. ‘ 

இந்த ஒரு சித்தரிப்புக்காகவே வல்லேவுக்கு வணக்கம்.

*****

‘ஆடு மேய்ச்ச மாதிரியும் இருக்கணும், அண்ணனுக்குப் பொண்ணு பார்த்த மாதிரியும் இருக்கணும் ‘ என்பது தெற்கத்தி சீமையில் பரவலாக உதிர்ந்த பழமொழி. இப்போது பழமொழியின் இடத்தை சினிமா பஞ்ச் டயலாக் அபகரித்துக் கொண்டிருக்கிறது. நிற்க.

இன்னொரு பழைய புத்தகம் படிக்கக் கிடைத்தது. சில நூறு வருடம் முன், என்றால் கிட்டத்தட்ட ஆயிரத்து அறுநூறாம் ஆண்டு முதல் நகரத்தார் என்ற நாட்டுக்கோட்டை செட்டியார் இனத்தவர் அவ்வப்போது மேற்கொண்ட பக்திப் பயணம் பற்றிப் பேசுவது. அவர்கள் திரைகடல் ஓடியும் திரவியம் தேடிய காலம் அது. முக்கியத் தொழில் வட்டிக்கடை நடத்துதல். வட்டிக்கு விட்டு வருமானம் ஈட்டுவது மட்டும் போதாது என்றுபட நியாயமான மற்ற தொழில் என்ன செய்யலாம் என்று யோசனை. உப்பு விற்றால் என்ன? இதற்கிடையே, குலதெய்வம் பழனி முருகன் சன்னிதிக்கு யாத்திரை போய் தரிசனம் செய்து வர ஒரு நகரத்தார் வீட்டில் ஓயாமல் வற்புறுத்தல். உப்பு விற்பனையும் பழனிக்கு யாத்திரையும் ஒரே கோட்டில் சந்திக்க, அவருக்கு ஒரு யோசனை – கடற்கரையில் இருந்து உப்பை வாங்கிக் கடகங்களில் எடுத்துப்போய் பழனியிலும் சுற்று வட்டாரத்திலும் விற்று வரும் லாபத்தில் சிறு சதவிகிதத்தை காணிக்கையாகப் பழநி முருகனுக்குத் தந்தால் என்ன? காணிக்கை நிறைய வேண்டும் என்று முருகன் விருப்பப் பட்டால் அவன் தான் உப்பு விற்பனையை அதிகமாக்க வேண்டும். 

நகரத்தார் அறப் பட்டயங்கள் நூல் முகப்பு

பழநிக்கு ஒரு சிறு கூட்டமாக பயணம் போக வேண்டியது. நாலு ஆட்களை உப்பு மூட்டை தலையில் சுமக்க வைத்து பழனி அடிவாரத்தில் அதை விற்கக் கடை போட வேண்டியது. கூடவே பழநிக் கோவிலில் சாமி தரிசனம் நடத்தித் தர உள்ள பண்டாரத்தார் வீட்டில் தங்கி எல்லோருக்கும் மூணுவேளை ஆகாரம். தரிசனத்துக்கு அப்புறம் பழநி முருகனுக்கு லாபத்தில் பங்கை உண்டியலில் போட வேண்டியது. பண்டாரத்தாருக்கு காணிக்கை, ஆகாரத்துக்கும் தங்கியதற்குமான தொகை என்று தரவேண்டியது. காலி உப்புச் சாக்கும், கைப்பையில் உப்பு விற்ற காசும், மனதில் முருகனுமாக ஊர் திரும்ப வேண்டியது. இப்படி இந்த நகரத்தார் வர்த்தகர்கள் இரண்டு மூன்று வருடம் செய்ய மற்ற நகரத்தார்களும் அதே மாதிரி உப்போடு புறப்பட்டு விட்டார்கள். 

நிகழ்வுகள் மறுபடி மறுபடி நிகழ்ந்து நாளாவட்டத்தில் சடங்குகளாகும். பழநி யாத்திரைக் குழுக்கள் அதிகமாகி, யாத்திரைக்கு அடுத்து யாத்திரையாகப் போய்வர, கொஞ்சம் கொஞ்சமாக பழனிப் பயண விதிகளும் சடங்குகளும், விற்பனைக்காக உப்பு வாங்குவதில் தொடங்கி, பண்டாரத்தாருக்கு சம்மானம் தருவது, அன்னதானம் வரை விரிவாக ஏற்படுத்தப்பட்டு விட்டன. 

‘நகரத்தார் அறப் பட்டயங்கள்‘ என்ற நூல் 1608-ஆம் ஆண்டு நெட்டெழுத்து கையொப்பமான பட்டயம் தொடங்கி, 1800-கள் வரை தீர்மானிக்கப்பட்ட விதிமுறைகள் பற்றிய புத்தகம். அதன் கிட்டத்தட்ட நானூறு வருடத் தமிழ் சுவாரசியமானது. பேச்சுக்கும் எழுத்துக்கும் அதிக வேற்றுமை இல்லாத பழந்தமிழுக்காகப் படிக்க வேண்டிய நூல் –

பழனிக் கோவிலுக்கு வந்து ஆவணிமூல வீதிக்கும் கீள்புரம் தெய்வநாயக பண்டாரத்து மனையில் வந்து இறங்கி, உப்புக் கடகமும் இறக்கி வைத்து உப்பு மாறி (விற்று) ஒரு பணம் லாபத்திற்கு அரைக்கால் பணம் மகமையெடுத்து தெய்வநாயக பண்டாரத்தின் பெண்சாதி பார்வதியம்மாளிடம் ‘எங்களுக்கும் தங்கள் வீட்டிலுள்ளவருக்கும் மூன்று பரதேசிக்கும் சோறு வடித்துப் போடவேணும். பண்டாரத்தையாவை மலைக்கு வரும்படி சொல்லி சுவாமி தெரிசனம் செய்து வைக்கும்படியாகவும் செய்ய வேண்டியது அம்மாள் ‘ என்று சொல்ல… பண்டாரத்துக்கு ஒரு பணமும், அம்மாளுக்கு ஒரு பணமும் கொடுத்து, ‘மருவளி (மறுபடி) வருவோம். உப்பு மாற வருவோம். இனி வந்தால் தங்கள் வீட்டில் தான் வருவோம் ‘ என்று சொல்லி..

விதிமுறைப் பட்டயம் புரியும் பழைய தமிழில் ஆரம்பிப்பது இப்படித்தான். நகரத்தார் இந்தத் தமிழை இன்னும் திருப்பூட்டுதல் (திருமணம்) மங்கல நிகழ்வில், இசைக் குடிமானம் (திருமண ஒப்பந்தம்) எழுத சரளமாக உபயோகிப்பதைப் பார்த்திருக்கிறேன். 

******

மலையாளத்தில் பிரசித்தி பெற்றவை பெயர் இல்லாத ஒரு நம்பூத்ரியை நாயகனாக்கிய நகைச்சுவைக் கதைகள்–நம்பூத்ரி ஃபலிதங்கள். அவற்றை நூலாகத் தொகுத்திருக்கிறார் கவிஞர் குஞ்ஞுண்ணி. அதிலொரு நம்பூத்ரி பயணக் கதை – 

அது ரயில் வண்டி இந்தியாவில் முதல்முதலாக வந்த காலம். நம்பூத்ரி ஷோரனூர் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய் திரூர் போக டிக்கெட் எடுத்து ரயில் ஏறினார். ஸ்டேஷன், ரயில் எல்லாமே பிரமாதம். இன்னும் பிரமாதமாக ஆகணும் இந்தப் பிரயாணம் என்று தீர்மானித்து செல்லப்பெட்டியைத் திறந்து வெற்றிலை எடுத்து வாயில் போட்டு மென்று கண்ணாடி ஜன்னல் இருப்பதை கவனிக்காது தாம்பூல எச்சிலை அந்தப்பக்கம் துப்பினார். துப்பினது அடுத்தாற்போல் வெள்ளையும் சள்ளையுமாக உட்கார்ந்திருந்த சகபயணி ஒருத்தர் மேல் விழுந்து வடிந்தது. அந்த ஆள் எழுந்து நம்பூத்ரி கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டு அமர்ந்தான். நம்பூத்ரி ஒண்ணுமே சொல்லவில்லை. திரூர் ஸ்டேஷன் போய் இறங்கிய அவரிடம் யாரோ ரயில் பயணம் எப்படி இருந்தது என்று விசாரித்தார்கள். அவர் சொன்னார் – 

பிரமாதம், எல்லாம் பிரமாதம். எடக்குளம் ஸ்டேஷன் வந்ததும் கன்னத்திலே பளீர்னு ஒரு அறை கொடுக்கறாங்க பாரு. அதுதான் அவ்வளவு நல்லா இல்லே.

******

கவிஞர் குஞ்ஞுண்ணி மாஷ்

குஞ்ஞுண்ணி மாஷ், என்றால் குஞ்ஞுண்ணி வாத்தியார், எழுதிய மலையாள நுறுங்கு கவிதகள் (குறுங் கவிதைகள்) பிரபலமானவை. ஹைகூவும் அபத்தக் கவிதையும் கலந்த அபூர்வமான வடிவம் அது. குருவாயூர் பயணம் போக வழி கேட்டுத் தெளியும் கவிதை இப்படி –

குருவாயூரூரேக்குள்ள
வழி வாயிச்சுக் கேள்க்கவே
என்னில் நின்னு என்னிலேக்குள்ள
தூரம் கண்டு அம்பரன்னு ஞான்.

குருவாயூர் போக வழி எது என்று
விசாரித்தேன். படித்துச் சொன்னபோது
என்னில் இருந்து எனக்குள்ள
தூரம் கண்டு மலைத்தேன்.

(வரும்)

முந்தையது | அடுத்தது

– eramurukan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button