
எங்கள் ஊர் காந்தி வீதியில் புது புரோட்டா ஸ்டால் தொடங்கும்போதோ, தெருமுனை வீட்டுப் பெண் பெரியவளாகி சடங்கு சுற்றும் சுபநிகழ்ச்சி என்றாலோ, வெகுவாகக் கவனத்தைக் கவர ஐம்பது வருடம் முன் ஏற்பாடான நிகழ்வு சவுண்ட் சர்வீஸ் ஒலிபரப்பு. ‘விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்’ என்று சீர்காழி கோவிந்தராஜன் கணீரென்று பாடி ஒலிபரப்பைத் தொடங்கி வைத்தால், காதும் மனசும் அவரிடம் ஓடிவிட, விழா களைகட்டிவிடும். அசரீரி பாடும் சினிமா பாட்டா, பக்திப் பாடலா, தத்துவப் பாடலா, ஹை பிட்சில் பாடுவதில் அவரை அடித்துக்கொள்ள யாருமில்லை.
இந்தியில் சற்று மிருதுவான குரல்தான் பெரும்பாலும் பாடகர்களுக்கு. பாபி படம் வந்து நரேந்திர சஞ்சல் ‘பேஷாக் மந்திர் மஜ்ஜித் தோடோ’ என்று உச்ச ஸ்தாயியில் பாடி அறிமுகமானார். இன்னொரு வெங்கலக் குரல் பாடகர் ‘ரஸியா சுல்தான்’ படத்தில் ‘ஆயே ஸன்ஸீர் கி ஜம்கார்’ என்று உச்சம் தொட்ட கப்பன் மிர்ஸா. கொஞ்சம் போல் சி.எஸ்.ஜெயராமன் குரலின் சாயல். ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் பீம்சன் ஜோஷி குரல் கம்பீரமும் கார்வையுமாக சத்தம் கூட்டி ஒலிக்கும். ‘மாஜெ மாஹரு பண்டரி’ என்று ஜோஷி மராத்தி பக்திப் பாடல் (அபங்க்) பாடினால் அடுத்து ரெண்டு நாள் காதுக்குள் அந்தப் பாடல்தான் ஒலித்துக் கொண்டிருக்கும். அவர் வாரிசாக சங்கர் மகாதேவன் உரக்கப் பாடும் சந்ததியை ஏற்றெடுத்துக் கொண்டிருக்கிறார். கர்னாடக சங்கீதத்தில், ‘என்ன பாட்டு பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை’ என்று நீலமணி ராகத்தில் உச்ச ஸ்தாயியில் உரக்கப் பாடி ரசிகர்களை ஈர்த்த மதுரை சோமு ‘மருதமலை மாமணியே முருகையா’ என்று தர்பாரி கனடாவில் உருக்கமும் குரலெடுப்புமாக இசைபாடி சினிமா ரசிகர்களையும் கவர்ந்தார். கர்னாடக சங்கீதத்தில் மிகப் பிரபலமான பாடகரான சஞ்சய் சுப்ரமணியன் ஒரு பத்திரிகை நேர்காணலில் சொன்னது நினைவு வருகிறது – ‘மைக் புழக்கத்துக்கு வரும் முன்னால் நல்ல சத்தமாகப் பாடினால் தான் கடைசி வரிசை ரசிகருக்குக் கேட்கும் என்று இசைக் கலைஞர்கள் பயிற்றுவிக்கப்பட்டார்கள். சத்தமாகப் பாட வரலியா, நீ பாட லாயக்கில்லே, வாத்தியம் வாசிக்கக் கத்துக்கோ’ என்று சீனியர்கள் கைகாட்டினார்கள். மதுரை மணி ஐயர் சொன்னார் – ‘கீழே (கீழ் ஸ்தாயியில்) பாடினா பண்டிதர்களுக்குப் பிடிக்கும். மேலே பாடினா பாமரர்களுக்குப் பிடிக்கும்’.

சத்தம் போட்டுப் பாடி நிறைய கைதட்டு வாங்கி எப்போதும் அப்படியே பாட எதிர்பார்க்கப்பட்ட சில அற்புதமான மேதமையுள்ள இசைக்கலைஞர்கள் தொண்டையைக் கிழித்துக்கொண்டு (நிஜமாகவே vocal chord rupture ஆகி) பாடவே முடியாமல் போனதும் இங்கே நடந்திருக்கிறது. நமக்குத்தான் உச்ச ஸ்தாயியில் பாடுவதில் மயக்கம் என்றில்லை. எகிப்திய இசையரசியான உம் குல்தும் (Umm Kulthum) 2-வது ஆக்டேவ்வில் இருந்து (கீழுக்கும் கீழுமான ஸ்தாயி அது) 8-வது ஆக்டேவ் வரை (எட்டுக்கட்டை விட்டெறிந்து) பாடிப் புகழ் பெற்றவர். ‘ஒரு வினாடிக்கு 14000 தடவை’ தொண்டை அதிரப் பாடியவர் அவர் என்று எகிப்தியர்கள் சொல்வார்கள். அந்தளவு vocal vibration ஆகும்போது மைக் பக்கத்தில் இருந்தால் அது எகிறி ரிப்பேராகி விடும் என்பதால் இரண்டு மீட்டருக்கு அப்பால் மைக்கை நிறுத்திப் பாட வைத்துக் கடலென ஆர்பரித்துக் கைதட்டி ரசித்தார்களாம்.

புச்சினி (Puccini) எழுதி இசையமைத்த இத்தாலிய ஓபராவில் பாடி நடித்துப் பிரபலமான இத்தாலிய டெனர் (மேல் ஸ்தாயி இசைக்கலைஞர்) லூசியானோ பாவரொட்டி (Luciano Pavarotti) கீழே C#3-யிலிருந்து மேலே F8 உச்சஸ்தாயி வரை பாடுவதை யுடியூபில் பார்த்தால் நமக்குத் தொண்டை வலிக்கும். Nessen Dorma (தூக்கமில்லை) என்று தொடங்கும் ஓபரா பாடல் அது. இதை உச்ச ஸ்தாயியில் பாவரொட்டி மட்டும் இல்லை, இன்னும் இரண்டு டெனர்கள் சேர்ந்து பாடியதைக் கேட்பதும் மற்றொரு மேலான, நேற்று ராத்திரி தூக்கம் போச்சு அனுபவம் தான். பாவரொட்டியும், உம் குல்துமும் இப்போது இல்லை. யூடியூபில் உண்டு.
************
நான் பார்த்த முதல் விளம்பரங்கள் வசீகரமானவை. மலச்சிக்கல் கழிந்திட வல்லாரை லேகியமும், சகல குறைபாடுக்கும் மயில் தைலமும் விற்கச் சந்தை ஓரம் நின்று கூட்டம் கூட்டி வாசாலகமாகப் பேசியவர்கள் செய்தவை அவை. ஐம்பது வருட முந்திய அந்தக் காலத்தில் சினிமா காட்சி ஆரம்பிப்பதற்கு முன் சிறு படமாக சார்மினார் சிகரெட்டும் சினிமா நட்சத்திரங்களின் சோப்பான லக்ஸ் சோப்பும் விளம்பரமானது அதிகம். லக்ஸ் குளியல் தீவிரம் தணிந்து ஹாவென்று அருவியில் நீராடியபடி மாடல் அழகி கரன் லூனெல் பாடும் லிரில் விளம்பரம் அடுத்து வந்தது. இன்றைக்கும் காணப் புத்துணர்ச்சி தரும் விளம்பரம் அது. கொடைக்கானலில் வெடவெடவென்று குளிரக் குளிர அருவியில் எடுத்த அந்த விளம்பரத்துக்காக கரனுக்கும் டைரக்டருக்கும் பிராண்டியும் காப்பியும் ஒவ்வொரு ஷாட் எடுத்து முடிந்ததும் பருகத் தந்ததாகத் தகவல்.
பத்திரிகை, சினிமாவோடு டெலிவிஷனும் சேர இந்திய விளம்பரத் துறை பெரிதானது. அம்பி பரமேஸ்வரனின் புத்தகம் ‘Nawabs, Nudes, Noodles: India through 50 Years of Advertising’ புத்தகம் விளம்பரத்துறை பற்றி, திரும்பிப் பார்த்து, முன்னே நோக்கி வாசாலகமாகக் கதைக்கிறது.
சுதந்திரம் பெற்று 1950, 60, 70 என்று மூன்று பத்தாண்டுகள் வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக மக்களையும் பொருளாதாரத்தையும் பாதித்தது; கூடவே விளம்பரத் துறையையும் பாதித்தது, எந்த வேலை, எங்கே வேணுமானாலும், என்ன சம்பளம் என்றாலும் ஏற்கத் தயார் என்று அலைந்த இளைஞர்கள் அந்தக் காலகட்டத்தின் பத்திரிகை விளம்பரங்களை வழிநடத்தினர். மங்கிய வெண்மை நிறத்தில் சட்டை தரித்து வேலைக்கான இண்டர்வியூவுக்குப் போனவன் பளீரென்று வெள்ளை நிறச் சட்டை போட்டுப் போனவனிடம் வேலை வாய்ப்பை இழக்கிறான். சலவை சோப் விளம்பரமான இக்குறும்படத்தில் அம்மா அந்த சோப்பை வாங்கிப் பயன்படுத்தி மகனுடைய சட்டையை வெண்மையாகத் துவைத்துத் தர, உற்சாகமாக நம்பிக்கையோடு அணிந்து போகிறானவன்.
1964-இல் ஜவஹர்லால் நேரு இறந்தபோது இந்தியா முழுக்க 55 டெலிவிஷன் பெட்டிகள் தான் இருந்தன.1975-இல் இந்திரா காந்தி எமர்ஜென்சி கொண்டு வந்தபோது ஒரு லட்சம் டிவிக்கள் இருந்தன. 1982-இல் தில்லி ஏஷியன் விளையாட்டுகளின்போது இருபது லட்சம் பெட்டிகள். 1991-இல் மன்மோகன் சிங் பொருளாதார மாற்றம் கொண்டு வந்தபோது மூன்று கோடியே நாற்பது லட்சம் டிவி செட்டுகள் நாட்டில் இயங்கிக் கொண்டிருந்தன. மோடி பிரதமரான 2014-இல் 60% இந்திய வீடுகளில் டெலிவிஷன் வந்திருந்தது.
வீட்டுக்கு வந்த டெலிவிஷன், ஆயுர்வேத லேகியம், ஜீரணத்துக்கான புளிப்பு மிட்டாய், மூலிகைப் பல்பொடி என்று இயற்கைக்கு அருகே நகரச் சொல்லும் விற்பனைப் பொருள்களை மையமாக்கி விளம்பரம் செய்கிறது. மராத்தி, இந்தி மேடை, திரைப்பட நடிகர் ஸ்ரீராம் லாகு, தாபுர் சியவனபிராஸ் லேகியத்துக்கு நடித்த டிவி விளம்பரத்தைக் குறிப்பிடும் அம்பி பரமேஸ்வரன், லாகு எம்.பி.பி.எஸ் படித்து அலோபதி மெடிக்கல் டாக்டராக இருந்தவர் என்பதைச் சொல்ல மறக்கிறார். டாக்டர் சிபாரிசு செய்த லேகியம் என்ற தொனி இந்த விளம்பரத்தில் முக்கியமானது.
நூடில்ஸ், பிஸ்கட் போன்ற உணவுப் பொருளுக்கான டிவி விளம்பரத்தில் ஒரு சூட்சுமம் இருக்கிறதாம். சாதாரணமாக விநாடிக்கு 24 ப்ரேம் நகரும் காமிரா, உணவு விளம்பரத்துக்காக வினாடிக்கு 1000 ப்ரேம் போகிறதாம். கூடவே அந்த உணவுப் பொருளை வெகு நெருக்கமாக எடுத்த க்ளோஸ் அப் ஷாட், வீட்டு முன்னறையில் பார்க்கும்போது டிவி ஸ்கிரீனை நாவால் ருசிக்கத் தூண்டும்!

பிராண்ட் யுத்தம் பற்றி அம்பி பரமேஸ்வரன் சொல்வது சத்தியம் தான். அதிகம் விற்கும் சலவை சோப் கையிலும் துணியிலும் அப்புவது போல் இல்லை புது சோப்பு என்று ஒரு பெரும் சோப்பு நிறுவனத்தையே புறமுதுகு காட்டி ஓட வைத்தது புது சோப்பு விளம்பரம் தான். அல்பமான மூட்டு வலி மருந்து விஷயமாகக் கூட ப்ராண்ட் யுத்தம் நடந்திருக்கிறது. ‘அந்த மூட்டுவலி களிம்பைத் தேய்த்தால் உடுப்பு எல்லாம் களிம்பு பிடித்து வாடை அடிக்கும். எங்கள் மருந்து அப்படி இல்லை நகருய்யா’ என்று இடம் பிடித்த கதை கேட்க சுவையானது. கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கோகோ கோலா, பெப்சி இடையே நிகழ்ந்த கோக் யுத்தங்கள் நமக்குத் தெரியுமே. அம்பி பரமேஸ்வரன் சொல்வதில் தப்பில்லை – இந்திய இளையோரான இந்தத் தலைமுறை பணத்தை சொத்தாக மதிப்பதில்லை. சொத்து வாங்க வழிசெய்யும் பொருளாகவே நினைக்கிறது- this generation does not value money as an asset, but rather as an enabler. அம்பி தரும் இன்னொரு புள்ளிவிவரம் – அவுட்லுக் சர்வே புள்ளிவிவரப்படி தென்னிந்தியர்களில் 80% அசைவ உணவு உண்பவர்கள். வட இந்தியாவில் நான் – வெஜிடேரியன்கள் 48%. அப்படியா?
***********
நெட்ஃப்ளிக்ஸில் La Familia Perfecta ‘சரியான குடும்பம்’ படம் பார்த்தேன். ஸ்பானிஷ் படம். எங்கேயோ பார்த்த தெஜாவு Déjà vu. மேட்ரிட் மாநகரில் நடப்பது. பணம் படைத்த குடும்பம். வெளிநாடு போய் பட்டம் பெற்று வந்த பையன். அப்பா விண்வெளி சயண்டிஸ்ட். அம்மா சமூக சேவகி; வீட்டை சதா சுத்தமாக நிர்வகிப்பவர். இந்தப் பையன் பாப்லோ காதலிக்கும் பெண் சாரா அதே மேட்ரிட்டில் ஏழை பாழைகள் வசிக்கும் தெற்குப் புறத்தில் அப்பா, அம்மா, தம்பியோடு வசிக்கிறாள். அவள் ஜிம்மில் வேலை பார்க்கிறாள். அங்கே வந்து போய் இருவருக்கும் நேசம் வளர்ந்தது. படம் ஆரம்பிக்கும்போதே பையன் அம்மா அப்பாவை தன் காதலி குடும்பத்தோடு பரிச்சயம் செய்து வைக்க அழைத்துப் போகிறான், அவர்களுக்கு சுத்தமாகப் பிடிக்காது போனது சாரா குடும்பத்தை. Astronomy, Astrology வித்தியாசம் தெரியாத குடும்பம். பையனின் அம்மா லூசியா எப்படியாவது கல்யாணத்தை நடக்கவிடாமல் செய்ய நினைக்கிறாள். ஆனால், விதி என்று ஒரு cinematic சமாச்சாரம் இருக்குதே. லூசியாவை சாராவின் அப்பா மிகியூல் –அவர் ஒரு தச்சர்- மும்முரமாகக் காதலிக்க ஆரம்பித்து விடுகிறார் மெல்ல மெல்ல லூசியாவும் அவரைக் காமுற, பசங்களின் கல்யாண ராத்திரியில், லூசியா, மிகியுலோடு உறவு கொள்கிறாள். எல்லோருக்கும் தெரிந்து போகிற கள்ளத் தொடர்பு அது. ‘முத்தம் மட்டும் தான் கொடுத்தேன். வேறே எதுவும் நடக்கவில்லை’ என்று அவள் சீரியஸாகச் சொல்வதை யாரும் நம்பத் தயாரில்லை. ஆகவே ஏதோ convulted logic படி, உண்மையாகவே உறவு கொள்ளத் தீர்மானிக்கிறார்கள்; கொள்கிறார்கள், லூசியாவும் தச்சரும். அது மழை இரவும் கூட.

வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு பள்ளிக்கூட டீச்சரம்மாவாகிறாள் லூசியா. அவளுடைய கர்ப்பிணியான மருமகள் சாரா அதே ஸ்கூலில் ஸ்போர்ட்ஸ் வாத்தியாரம்மா ஆகிறாள் .. என்று போகிறது படம். அங்கே இங்கே வெள்ளிச் சுத்தியலால் தட்டிக் கொட்டினால் நம் 1970-களின் திரைப்படம் ஆகிவிடும் இந்த ஸ்பானிஷ் படம். தலைப்பு வீட்டுக்கு வீடு சங்கமம்? நினைவு வந்தாச்சு. மாப்பிள்ளையின் அப்பா மருமகளின் அம்மாவைக் காமுறுவது இந்தியில் வந்திருக்கிறது. ஷியாம் பெனகலின் ‘சூரஜ் கா சத்வன் கோடா’ படத்தில் அந்த ‘அலையறான் பாரு’ பாத்திரத்தில், மறைந்த அம்ரிஷ் பூரி அருமையாக நடித்திருப்பார். ஒரு புதுக் கதாபாத்திரம், பிரம்மாண்டமான பஸ் டிரைவராக வரும் பெண்ணின் அம்மா ஆம்பரோ. அதில் பெருமை அவளுக்கு. சம்பந்தி லூசியா பணம் படைத்திருந்தாலும் வீட்டு நிர்வாகம் முழுக்கச் செய்வாள் என்று கேட்டதும் ஓங்கியடிக்கிறாள் – ‘அந்தம்மா சமையல் செய்யட்டும், சரி. டாய்லெட் ப்ளஷ் அடைச்சுக்கிட்டா என்னைப்போல குத்தி விடுவாளா?’ பஸ் பெண் டிரைவர் சம்பந்தியும் பையனின் அப்பாவும் இன்னொரு புது ஜோடியாகி விடுவார்களோ என்று பயந்து கொண்டே அமர்ந்திருக்க, லூசியாவுக்குப் பேரன் பிறந்ததோடு எல்லோரும் மகிழ்ச்சியாக, சுபம். ஸ்பெயின் என்றால் பெட்ரோ அல்மொடோவர் படங்கள் மட்டும் என்று நினைத்திருந்தால் மகா தப்பு.
(வரும்)