இணைய இதழ்இணைய இதழ் 72பத்தி

வாதவூரான் பரிகள்; 04 – இரா.முருகன்

பத்தி | வாசகசாலை

1970களில் புதுவை என்னும் புதுச்சேரியில் பதின்ம வயதினராகச் சஞ்சரித்துக் கொண்டிருந்தவர்கள் அந்தக் காலத்தின் அடையாளமாகக் கைக்கொண்டது முகப்பரு க்ரீம் கிளியரசில், கால் கொண்டது ஹெர்குலிஸ் சைக்கிள். இவற்றோடு தியூப்ளே வீதி இந்தியா காபி ஹவுஸ்ஸில் சாயந்திரம் காப்பி, ரோமன் ரோலந்த் நூலகத்தில் நெபொகோவின் லோலிடா போன்ற புத்தகம் வாங்கிப் படித்தல், அல்லயன்ஸ் பிரான்ஸே என்ற ப்ரஞ்சு மொழிக் கழகத்தில் ஃபிரஞ்ச் கற்கச் சேர்தல், மற்றும் லாஸ்பேட்டை காலேஜில் பியூசி, பிஎஸ்ஸி படிப்பது. குழலாகச் சுருட்டிய ஜே.எஸ்ஸையும் இதில் சேர்க்கலாம். 

பட்டியலில் கடைசியில் இருக்கும் ஜேஎஸ் என்ற ஜுனியர் ஸ்டேட்ஸ்மேன் 1967 முதல் 1977 வரை பத்தாண்டு காலம் கொல்கத்தாவில் இருந்து வெளியான, பதினைந்து நாட்களுக்கு ஒன்று என வந்த ஃபோர்ட்நைட்லி. விலை முப்பத்தொன்பது பைசாவோ என்னவோ. ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகைக் குழுமம் வெளியிட்ட ஜேஎஸ் இந்தியாவின் முதல் இளைஞர் பத்திரிகை. இதுவரை இரண்டாவது வரவில்லை. டெஸ்மண்ட் டைய்க் ஆசிரியராக இருந்த இந்தப் பத்திரிகை தொடங்கிய சில மாதங்களில் 40000 பிரதிகள் விற்பனையும், தேடி வந்த அதிக விளம்பர வருவாயுமாக, தாய்ப் பத்திரிகையான ஸ்டேட்ஸ்மேனின் தினசரியின் விற்பனையோடும் வருமானத்தோடும் போட்டி போடுவதாக வளர்ந்தது. 

டெஸ்மண்ட் கூட இருந்த ஜேஎஸ் பத்திரிகை துணையாசிரியர் குழு முழுக்க இளைஞர்களால் ஆனது. நல்ல ஆங்கில மொழிவீச்சும், கற்க ஆர்வமும் மிகுந்த பள்ளி மாணவர்கள் கூட ஜேஎஸ் குழுவில் வெளிவட்ட உறுப்பினர்களானார்கள். புகழ்பெற்ற பத்திரிகையாளர் எம்.ஜே.அக்பர் பள்ளிச் சீருடையாக ஷார்ட்ஸும் அரைக்கை சட்டையும், ஸ்கூல் நோட் புத்தகத்தில் கிழித்தெடுத்த தாள்களில் எழுதிய கதையுமாக வந்தபோது உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்று டெஸ்மண்ட், அக்பரை உட்காரச் சொல்லிவிட்டுக் கதையைப் படித்துவிட்டு உடனே பள்ளிக்கூட நேரம் பாழாகாமல் மாணவப் பத்திரிகையாளராக அவரைத் தேர்வு செய்தார். சசி தரூர் கிட்டத்தட்ட இதே போல் ஜேஎஸ் பத்திரிகையின் இன்னொரு பதின்ம வயது மாணவ உதவி ஆசிரியர் ஆனார். 

ஜக் சுரையா

டெஸ்மண்டின் வலதுகையான ஜக் சுரய்யா தன் ஜேஎஸ் பத்திரிகை அனுபவங்களை ‘JS and the Times of My Life’ என்ற புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். ஜேஎஸ் மட்டுமின்றி அவருடைய ஒட்டுமொத்த பத்திரிகையாளர் வாழ்க்கையைச் சித்தரிக்கும் சுவாரசியமான புத்தகம் இது. நூறு வருடப் பாரம்பரியம் மிகுந்த கல்கத்தா தினப் பத்திரிகை ஸ்டேட்ஸ்மென் குழுமத்தில் இருந்து ஜூனியர் ஸ்டேட்ஸ்மென் பத்திரிகையை வாரம் ஒரு முறை அல்லது இரண்டு வாரத்துக்கு ஒன்று எனப் பதிப்பிக்க திட்டமிட்டபோது முழம் நீள பெயர் வைக்காமல் ஜேஎஸ் என்று இனிஷியல்களை மட்டும் பத்திரிகைப் பெயராக்க யோசனை வந்தது. உடனே அது நிறைவேற்றப்பட்டது. ஜேஎஸ் பத்திரிகையின் கோட்பாடாக வரிந்து கொள்ளப்பட்டது- ‘இளைஞர்களுக்கு புத்தி சொல்லிப் பேசாது, தோளில் கை போட்டுப் பேசும்’. ( not talk to youth, talk with youth). நிர்வாகம், ஜேஎஸ் குழுவுக்கு புது மேஜை, நாற்காலி தர, தாய்ப் பத்திரிகை ஆசிரியர் குழுவினர் ஜெலூசில் குடித்தார்கள். அது போதாதென்று ஜேஎஸ் குழு அந்தக்கால ஃபேஷனான நீளத் தலைமுடி, பெல்பாட்டம் பேண்ட், ஜீன்ஸ் என்று கேஷுவலாக ஆபீஸ் வர அனுமதி. சட்டையை பேண்டுக்குள் இன்செர்ட் செய்து ட்ரிம் ஆக வரவேண்டியதில்லை. மேலும் ஜேஎஸுக்கு கட்டற்ற எழுத்து சுதந்திரம் கிடைத்தது. அவர்கள் பத்திரிகையில் பிரசுரித்தது, அப்போது வங்காளத்தில் பரவிய நக்ஸல்பாரி இயக்கத்தைச் சேர்ந்த நக்ஸல் இளைஞனோடு நேர்காணல், கொல்கத்தா சோனாகாச்சியில் உடல் விற்கும் பெண் செக்ஸ் ஊழியரோடு நேர்காணல், எவரெஸ்ட் சிகரத்தில் முதலில் பாதம் பதித்த எட்மண்ட் ஹில்லரியோடு நேர்காணல், நேபாளத்தில் cult movie ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ படப்பிடிப்பில் தேவ் ஆனந்த் நேர்காணல், செர்ஜெண்ட் பெப்பர்ஸ் ஆல்பம் மூலம் புகழ் உச்சத்திலிருந்த பீட்டில்ஸ் இசைக்குழுவோடு நேர்காணல் என்று நேர்காணலுக்கு இலக்கணம் வகுத்த நேர்காணல்கள். 

இவற்றோடு ஜேஎஸ் என்றால் என் நினைவில் எழுந்தது – இத்தனை வருடம் கழித்தும் மறக்க முடியாத நீச்சல் சாம்பியன் நஃபிஸா அலியோடு நேர்காணல். வசீகரமான உடலமைப்பு கொண்ட அந்தப் பெண்மணியின் பிகினி உடுத்த போஸ்டர் புகைப்படம் என்னை அப்போது பித்தனாக்கியது. நஃபீஸா பின்னாட்களில், அதாவது இப்போது, பெண்ணுரிமைக்காகப் பாடுபடும் சமூக சேவகி. தேவ் ஆனந்த் அறிமுகப் படுத்திய ஜீனத் அம்மானும் தேவ் நேர்காணலில் உள்ளம் கவர்ந்தபடி இருந்தார். அவர் இப்போது மூதாட்டி. தன் ஜேஎஸ் சந்திப்பில் எட்மண்ட் ஹில்லரி சொன்னது – ‘எந்த மலையையும் அடக்கி ஆள முடியாது. உங்களை நீங்கள் அடக்கி வேணுமானால் ஆளலாம்.’ ஜேஎஸ் பேட்டிக்கு வந்த நக்சல் இளைஞன் ‘எல்லோரையும் கொல்லணும்’ என்று மட்டும் மூன்று முறை சொல்லி விட்டு வெளியேறிப் பரபரப்பான கொல்கத்தா தெருக்கூட்டத்தில் கலந்து மறைந்தான். இவ்வளவும் எளிய ஆனால் சுவாரசியமான இங்க்லீஷில் கட்டுரையானது. 

எழுபதுகளின் கொல்கத்தாவை வார்த்தைச் சித்திரமாக அங்கங்கே வரைந்திருக்கிறார் ஜக். கொல்கத்தா லின்ஸே தெரு புது மார்க்கெட் நூறு வருடமாக அதே பெயரோடு தான் இருக்கிறது. அலிபாபா குகை போல, அங்கே கிடைக்காதது எதுவுமில்லை. சௌரங்கி ஸ்கொயரில் ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகை அலுவலகத்துக்கு அருகே சிறிய ஹோட்டல் – நேற்றைய கோழிக்கறி வாடையும், கூந்தல் தைல வாடையும், காப்பியில் ஹேர் ஆயில் ருசியுமாக எல்பின் ரெஸ்ட்ராண்ட் இருண்டு கிடந்தது. திங்கள்கிழமை கல்கத்தா ஹோட்டல்கள் பகலில் லஞ்ச் அல்லது ராத்திரி டின்னர் மட்டும் தான் விற்பனைக்கு வைக்க வேண்டும். உணவு தானியக் கட்டுப்பாடு இருந்த அந்தக் காலத்தில் உணவுப் பொருளைச் சேமிக்க அந்தச் சட்டதிட்டம் வழி செய்ததாம். வியாழனன்று மாமிச உணவு விற்கக் கூடாது. மாமிசத்தைத் தரும் வீட்டு விலங்குகள் பெருக இத்திட்டமாம்.

கல்கத்தாவில் தெரு சூதாட்டம் பட்டப்பகலிலேயே நடந்தபோது அதைப் பற்றி எழுத ஜக்கை, டெஸ்மண்ட் அனுப்பி வைத்தார். அந்தப் பழைய கட்டிடத்துக்கு உள்ளே அழுக்கு ஹாலின் நடுவில் நீள வெட்டி வைத்த பள்ளம். முச்சீட்டு களிக்காரர்கள் பள்ளத்துக்கு இந்தப் பக்கம் உட்கார்ந்து விளையாடுவார்கள். காவலர்கள் வந்தால் பள்ளத்துக்கு அந்தப் பக்கம் மேஜை நாற்காலியைப் போட்டுவிட்டு பள்ளத்தைச் சாடி அந்தப் பக்கம் உட்கார்ந்து சூதாட்டத்தைத் தொடர்வார்கள்.ஆமாம், பள்ளத்தின் இந்தப் பக்கம் கொல்கத்தா மாநகரம். அந்தப் பக்கம் 24 பர்கானா மாவட்டம். கொல்கத்தா போலீஸ் பள்ளத்தைத் தாண்டி பர்கானாவுக்குள் நுழைய மாட்டார்கள். பர்கானா போலீஸும் அதுபோல் பள்ளத்தைத் தாண்டிக் கொல்கத்தாவுக்குள் குதிக்க மாட்டார்கள்.

 

ஜேஎஸ் பத்திரிகை வளர்ச்சி ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகைக்குள்ளேயே நிறைய விரோதத்தைத் தேடி வைத்ததாக ஜக் சுரய்யா குறிப்பிடுகிறார். 40000 காப்பி விற்பனையை எட்டிச் சாதனை புரிந்த அந்த இதழ் ஒரு காலை நேரத்தில் பாதி அச்சாகிக் கொண்டிருந்தபோது, நிர்வாகம் அச்சகத்துக்கு தாக்கீது அனுப்பிவைத்துப் பத்திரிகை நின்று விட்டது- ‘மேற்கொண்டு இந்த இதழை அச்சடிக்க வேண்டாம்’. ஜேஎஸ் ஆசிரியர் குழு இந்தச் செய்தியை யாரோ சொல்லிக் காதில் விழுந்ததாகத்தான் முதலில் தெரிந்து கொண்டது. பெரு முதலாளிகளோ, தொழிலாளி வர்க்கமோ, மத்திய, மாநில அரசாங்கமோ காரணம் இல்லை ஜேஎஸ் நிற்க. பத்திரிகை அறம் அறிந்த சீனியர் பத்திரிகையாளர்களே தங்கள் வர்க்கத்தில் இளையோரை இயங்க விடாமல் குரூரமாக சுவாசம் நிறுத்தியதே காரணம். 

ஜக் சுரையாவோடு துக்கம் பகிர்ந்து கொண்டு புத்தகத்தை மூடி வைக்கிறேன். ஜக் சுரையாவைப் பற்றி அண்மையில் ஒரு பத்திரிகைக் கட்டுரையில் சஷி தரூர் சொல்வது சிரிக்க வைக்கிறது- “ஜக் ஜேஎஸ் பத்திரிகையில் யாரும் உபயோகிக்காத, அகராதி தேட வேண்டிய கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்திக் கட்டுரை எழுதுவார். ஆனால், படிக்க சுவாரசியமாக இருக்கும்”. ஜக் எழுதுவது இப்போது புரிகிறது. தரூர் எழுத்துதான் புதுசு புதுசாகச் சொற்களோடு மிரட்டுகிறது.

சசி தரூர்

**********

பிபிசி-யின் தலை சிறந்த பத்து டிவி சீரியல்கள் எவை எனக் கூறு என்று யாராவது கேட்டால், எனக்கு மனசு இருந்தால் பட்டியல் அடுக்கும் பத்தில் நிச்சயம் எஸ் மினிஸ்டர், எஸ் ப்ரைம் மினிஸ்டர் இருக்கும். பிரிட்டிஷ் அரசியலை, அரசாங்கத்தை நையாண்டி செய்வதில் இந்த சீரியல்களை அடித்துக் கொள்ள முடியாது. இவற்றை வாராவாரம் விடாமல் ரசித்தவர்களின் பட்டியலில் பாதி பிரிட்டன் இருக்கும். பிரிட்டிஷ் பிரதமராக இருந்த மார்க்ரெட் தாட்சர் ‘எஸ் மினிஸ்டர்’ ரசிகையாக முதல் இடத்தில் இருந்தார். அவர் ரசனையைச் சற்றே நீட்டி ‘எஸ் மினிஸ்டர்’ கதாபாத்திரங்களான அமைச்சர் ஜேம்ஸ் ஹாக்கர், தந்திரமான அரசுத்துறை காரியதரிசி சர் ஹம்ஃப்ரீ ஆப்பில்பி ஆகியோரோடு மார்கரெட் தாட்சரே பிரதமராக மேடையில் தோன்றி ஒரு ஐந்து நிமிட குறுநாடகத்தை அரங்கேற்றினார். எழுதி இயக்கியவரும் மார்கரெட் தாட்சரே தான். 

“மாகி, இதைவிட காமெடியாக நீங்க பிரதம மந்திரியா நிஜமாகவே இருக்கறீங்களே. அதைவிடவா ட்ராமாவிலே நடிக்கறது” என்று தாட்சரை அன்று வகைதொகை இல்லாமல் வஞ்சப் புகழ்ச்சி செய்தார்களாம். 

இவ்வளவு தூரம் பிரபலமாக எஸ் மினிஸ்டர் மற்றும் எஸ் ப்ரைம் மினிஸ்டர் சீரியல்கள் இருந்தாலும், அவற்றுக்கு திரைக்கதை வசனம் எழுதிய ஜோனதன் லின், ஆண்டனி ஜே என்ற இருவர் அணியை யாரும் மதிக்கவில்லை. அந்த சீரியல்களில் நடித்த நடிகர்கள் BAFTA போல் நிறையப் பரிசு வாங்கி, சராசரி மக்களிடையே பிரபலமானாலும் அவர்களைப் பேச வைத்த வசனகர்த்தாக்களை, பரிசு தராவிட்டாலும் பரவாயில்லை, பரிசு விழா அழைப்பு கூட அனுப்பாமல் புறக்கணித்து விட்டார்கள். வசனகர்த்தாக்களில் ஒருவரான ஜோனதன் லின் எழுதிய ‘Comedy Rules From the Cambridge Floodlights to Yes Prime Minister நூலில் தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்கிறதோடு தன் வசனகர்த்தா வாழ்க்கைக் குறிப்பை இடையே வரலாறாக எழுதி வாசிப்பை சுவாரசியமாக்குகிறார்.

ஜொனாதன் லின் & ஆண்டனி ஜே

மேடை நாடகத் துறையிலும் மும்முரமாக இருக்கும் ஜோனதன் லின், பிரிட்டனில் எப்படி நாடகத்தை விளம்பரபடுத்துகிறார்கள் என்று சொல்வது இது – பெரிய இடங்களில் லஞ்சம் புழங்குவதைப் பற்றிய நாடகத்தின் அரங்கேற்றத்தின்போது பழுப்புக் கவரில் நிறையக் கரன்சி வைத்து நாடக விமர்சகர்களுக்கு அழைப்போடு கொடுத்தார்களாம். அவர்கள் அதிர்ச்சி அடையலாமா, ஆனந்தப் படலாமா என்று முடிவுக்கு வருவதற்குள் தெரியவந்தது – அது கரன்சி நோட் சாயலில் அச்சடித்த வெறும் காகிதமாம். நம்மூர் நாடக நடிகர்கள் வாயில்லாப் பிராணிகள். பிரிட்டீஷ் நாடக நடிகர்களில் சிலர் சதா நச்சரிக்கும் ரகமாம். நாடக போஸ்டரில் என் பெயர் இவ்வளவு செண்டிமீட்டர் நீளத்துக்குக் குறையாமல் இருக வேண்டும் என்று காண்ட்ராக்ட் எழுதும்போதே விதித்து விடுவார்களாம். கையில் ஸ்கேலோடு அலைகிற நடிகர்கள் போஸ்டரில் பெயரை அளந்து பார்த்து திருப்தி அல்லது அதிருப்தியடைவது உண்டாம். 

**********

குஞ்ஞுண்ணி மாஷ் என்னும் கவிஞர் குஞ்ஞுண்ணி தொகுத்த மலையாள பாரம்பரிய நகைச்சுவைக் கதைகளான ‘நம்பூதிரி ஃபலிதங்கள்’ பற்றி இங்கே பார்த்தது நினைவிருக்கலாம். Generic ஆன ஒரு நம்பூதிரியின் சாமர்த்தியம், வெகுளித்தனம், நகைச்சுவை, சுய எள்ளல் பற்றிக் கதைக்கும் மலையாள நம்பூத்ரி கதைகள் போன்றவை தமிழில் பம்மல் சம்பந்த முதலியார் 1936-இல் எழுதிய (தொகுத்த?) தீட்சிதர் கதைகள் என மனம் திறந்து சொல்ல முடியாது. நம்பூத்ரியின் புத்திசாலித் தனத்துக்கும், அப்பாவித்தனத்துக்கும் தீட்சிதரின் அச்சாபிச்சுத்தனம் உறைபோடக் காணாது. 

உதாரணத்துக்கு – சமீபத்தில் கணவன் காலமான சோகத்தை தினம் விடிகாலையில் பிலாக்கணம் பாடி அழுது தெருவே சோகமாக விடியச் செய்கிறாள் ஒரு விதவை. தீட்சிதர் ஒரு கம்பளியைப் போர்த்துக் கொண்டு அந்தம்மாள் வீட்டு வாசலில் உட்கார்ந்து எசப்பாட்டாக ஒப்பாரி வைக்கிறார். அந்தம்மாள் நாணத்தோடு தன் துக்கம் கொண்டாடுவதை நிறுத்துகிறாள். இப்படியான கதைகளில் சில முத்துகளும் தட்டுப்படுகின்றன. 

உதாரணம் – ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் வடசென்னையில் வைகுண்ட வாத்தியார் என்று ஒருவர் ஏகப் பிரபலமாம். யாராவது அக்கம் பக்கத்தில் இறந்து போனால் முதல் வேலையாக வைகுண்ட வாத்தியார் வீட்டுக்கு ஆளனுப்பி, இன்னார் இறந்து போனார் என்று தகவல் சொல்ல, வாத்தியார் ஓர் ஓலையில் அதை எழுதி, பெறுநர் விலாசமாக வைகுண்டம் என்று குறிப்பிட்டு, ‘இவரை உள்ளே அனுமதிக்கவும்’ என்று நாலணா தட்சணை வாங்கிக்கொண்டு அனுமதி ஓலை கொடுப்பாராம். செத்தவரை எரிக்கிறபோது இந்த அட்மிஷன் கடிதாசையும் வைத்து எரித்துவிட்டால், அன்னார் நேரே வைகுண்டம் புகுவார் என்று பரவலான நம்பிக்கை. 

இந்த வைகுண்டம் டிக்கெட் சமாசாரத்தைக் கவனித்த தீட்சிதர் தடபுடலாக வைகுண்ட வாத்தியார் வீட்டுக்குப் போய், அவரைப் பெறுநர் என்று to address போட்ட ஓர் ஓலையைக் கொடுக்கிறார். சாட்சாத் விஷ்ணு பகவான் வைகுண்ட வாத்தியாருக்கு எழுதியது என்னவெனில் – ‘இப்பவும் வைகுண்டம் நிரம்பி வழிகிறது. எனவே மேற்கொண்டு யாரையும் ஓலை கொடுத்து அனுப்ப வேண்டாம். இப்படிக்கு…’ வைகுண்ட வாத்தியார் அப்புறம் ஓலை கொடுப்பதே இல்லை. அவர் பெயரில் அவர் இருந்த தெரு இன்னும் இருக்கிறதாம், தீட்சிதர் கதைகளை அண்மையில் சந்தியா பதிப்பகம் மறுபதிப்பு செய்துள்ளது.

(வரும்)

முந்தையது | அடுத்தது

eramurukan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button