
ஒரேயொரு ஆறுதல்
உன் நினைவலைகள் வரும்போதெல்லாம்
கடல் அலைக்குப் பயந்தோடும்
பறவைகளாய்ப் பதறும் என் மனம்
மணல் வரிகளைப் போல
நீ விதைத்த வார்த்தை வரிகள்
நெளிந்தோடும் என்னுள்
காதலியின் பாதச் சுவடில்லாது
தனியாய்ப் பதியும் காதலனின் பாதத்திற்கு
எவ்வளவு வலியோ
அவ்வளவு வலியில் சீற்றமடையும்
என் மன சமுத்திரம்
இவ்வளவுக்கும் மத்தியில்
அலைகள் கரையைத் தீண்டும்போதெல்லாம்
முத்தத்தின் சத்தம் மட்டுமே ஆறுதல்.
***
ஜிமிக்கி கம்மல்
பொதுவாக காதுகள்
எப்போதும் காதுகளாகவேதான் இருக்கின்றன
ஜிமிக்கிகள் அணியும்போது மட்டும்தான்
மற்றவர் கவனத்தை ஈர்க்கும்
அபாரமான நாட்டியத் தாரகைகளாகின்றன!
***
உறங்காத இரவுகள்
ஒவ்வொரு செங்கல்லாய்
உடைத்தெடுக்கும் திருடன் போல
நீயும் என் உறக்கச் சுவரைத் தகர்த்தெறிகின்றாய்
நிரம்பாத மாபெரும் கனவுப்பெட்டகத்திற்குள்
வெறும் காற்று சூழ்ந்து கொள்கின்றது
கள்வனே…இவ்வளவு தூரம் வந்துவிட்டாய்
ஏதாவதொரு முத்திரையையாவது
விட்டுச் செல்லேன்!
***
வாலறுந்த நான்
இருகைகளையும் விரித்து
பறக்க முடியாத விமானமாய்த்
தரையினில் கிடக்கின்றேன்
என் உயரம் உன்னிடம்
என் உயிரும் உன்னிடம்!
***
இயல்பைத் தொலைத்த வீடு
விடுமுறைக்குப் பிறகு
குழந்தைகள் உயிர் எழுத்துக்களோடு
உருள்கின்றனர் பள்ளியில்
வண்ணவண்ணப் புன்னகைத் துகள்கள்
ஒடிந்து விழுந்த அழுகை முனைகள்
ஒருவருக்கொருவர் பூசிக்கொண்ட பல்நிற வம்புகள்
தடுமாறிய காய்ந்த பருக்கைகள்
கெஞ்சலின் தூசிகள்
கொஞ்சலின் நூலாம்படைகள்
வீட்டுப் பாடங்களிலிருந்து விழுந்த சொற்கள்
மழலை மொழி இசைத்துணுக்குகளென்று
ஒருவாரக் குறும்புகளாய்
வீட்டின் மூலை முடுக்கில்
சிதறிக் கிடந்தவைகளை
மணிக்கணக்காய் பெருக்கித் துடைத்தால்
குழந்தைமையின் துகள்களின்றி
மௌன விரதத்தில்
இயல்பின்றித் தவிக்கின்றது வீடு!
*********