கலைகளில் நெளியும் நிலங்களின் கதை – கே.பாலமுருகன் – பகுதி 01
தொடர் | வாசகசாலை

மலேசியத் தமிழ்த்திரைப்படம் ஓர் அறிமுகம்
மலேசியத் தமிழ்த் திரைப்படத்தின் வரலாறு என்பது கடந்த 2000க்குப் பின்னர்தான் விரிவாக உருக்கொள்ளத் துவங்கியது. அதற்கு முன் 1969-இல், ‘ரத்தப் பேய்’ என்கிற ஒரு படமும் அடுத்ததாக 1991ஆம் ஆண்டில் சுகன் பஞ்சாட்சரம் அவர்கள் நடித்து இயக்கிய, ‘நான் ஒரு மலேசியன்’ என்கிற ஒரு படமும் வெளிவந்தன. இவ்விரண்டு படங்களும் அவரவர்களின் சுய முயற்சியால் வெளியிடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பத்தாண்டு இடைவெளிக்குப் பின்னரே அடுத்தடுத்த மலேசியத் திரைப்படங்கள் மெல்ல வெளிவரத் துவங்கின. பிரேம்நாத் இயக்கத்தில் 2005இல் வெளியான, ‘உயிர்’ என்கிற பேய்ப்படம், 2006இல் தீபக் இயக்கிய, ‘செம்மண் சாலை’, நாகராஜ் இயக்கத்தில் 2008ஆம் ஆண்டில் வெளியான, ‘உருவம்’ என ஏறக்குறைய 2000 முதல் 2010 வரை மொத்தமே 15 மலேசியத் தமிழ்த் திரைப்படங்கள் மட்டுமே வெளியாகியிருந்தன. அவற்றுள் சில திரைப்படங்கள் திரையரங்கில் வெளிவரவில்லை. டி.வி.டி-யில் வெளியிடப்பட்டுள்ளன. தீபக் இயக்கிய செம்மண் சாலை உலகத் திரைப்பட விழாவிற்காக இயக்கப்பட்டு மலேசியாவில் GSC என்கிற திரையரங்கத்தின், ‘உலகத் திரைப்படத் திரையிடல்’ என்கிற அங்கத்திற்குக் கீழ் சில இடங்களில் மட்டுமே திரையிட்டது.
1980ஆம் ஆண்டில் மலேசியத் திரைப்படங்களின் வளர்ச்சிக்காகத் தோற்றுவிக்கப்பட்ட மலேசியத் திரைப்பட வளர்ச்சி நிறுவனம் (FINAS) அந்தக் காலகட்டத்தில் மலாய்த் திரைப்பட வளர்ச்சிக்காக மட்டுமே செயல்பட்டது. ஆகவேதான் மலேசிய மலாய்ப் படங்களின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் ஏறக்குறைய 40 ஆண்டுகள் வரலாறு உண்டு. இன்று மலேசியாவில் மலாய்ப் படங்கள் வசூலில் முதலிடத்தில் இருக்கின்றன. 2004ஆம் ஆண்டு முதல் FINAS நிறுவனம் மலேசிய சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சின் கீழ் அரசு சார்ந்த இயக்கமாக சேர்க்கப்பட்டது. அதன் பின்னர் மலேசிய ஐந்தாண்டு காலத் திட்டங்களை வரையறுக்கும்போது உள்ளூரில் இருக்கக்கூடிய மலாய், சீன, தமிழ் படைப்புகள் தொடர்பான திட்டங்களை அரசு முன்மொழிந்து செயல்படுத்தத் தொடங்கியது. 2011ஆம் ஆண்டில்தான் மலேசியத் தமிழ், சீனப் படங்களுக்குக் கட்டாயம் உள்ளூர் திரையரங்கில் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு திரையிடல் தர வேண்டும் என்கிற அரசுக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னரே தமிழ்த் திரைப்படங்களை உள்ளூர் திரையரங்குகளில் வெளியிட அனுமதி கிடைக்கத் தொடங்கியது. அதனால்தான் 2010ஆம் ஆண்டு வரை மலேசியாவில் தமிழ்த் திரைப்படங்கள் அதிகம் வெளியாகாமல் இருந்தன.
பின்னர், ஒவ்வொரு ஆண்டும் மலேசியாவில் சராசரியாக பத்து தமிழ்ப் படங்கள் வெளிவரத் தொடங்கின. கடந்த 2022ஆம் ஆண்டில், ‘பூச்சாண்டி’, ‘செந்தோழன் செங்கதிர்வானன்’, ‘நரிகள்’, ‘அவள் தேடியது’, ‘விமன்’, ‘அருள்மொழி’, ‘கம்பத்துக் கண்ணம்மா’, ‘மூன்றாம் அதிகாரம்’, ‘கஜன்’, ‘undercover rascals – 2’ என்று பத்துப் படங்கள் வெளியாகியுள்ளன. 2023ஆம் ஆண்டில், ‘நாம் கற்ற இசை’, ‘நினைவோ ஒரு பறவை’, ’அடைமழைக் காலம்’, ’இராஜ தந்திரம்’, ’கண்நீரா’, ’விண்வெளி தேவதை’, ’கிளாப் ஹவுஸ்’, ’சாவடிக்காப் பேய்’, ’ஆதித்தியா அருணாச்சலம்’, ’தள்ளிப்போகாதே’ என்று மொத்தம் பத்துப் படங்கள் வெளியாகியுள்ளன. கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக வரலாறு, அரசியல், கலை, இலக்கியம் என்று மலேசிய மண்ணிலே வேரூன்றிவிட்ட தமிழ் மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையிலான கலைகள் உருவாக்கம் உண்மையில் திருப்தியளிக்கும் வகையில் உள்ளதா என்கிற கேள்வியை முன்வைத்து இந்தக் கட்டுரையைத் தொடங்குகிறேன்.
வருடத்திற்குப் பத்துப் படங்கள் வெளியாவது என்பது கடந்த காலங்களை ஒப்பிடும்போது ஆறுதல் அடைந்துகொள்ள வேண்டிய வளர்ச்சிதான் என்பதில் சந்தேகமில்லை. சிறுபான்மைச் சமூகமாக வாழும் தமிழர்களின் சார்பில் வருடத்திற்குப் பத்துப் படங்கள் படைக்கப்படுவதென்பது இப்போதைக்கு ஆரோக்கியமான தொடக்கமாகவே கருதுகிறேன். 2011ஆம் ஆண்டில், வீடு தயாரிப்பு நிறுவனத்தின் வெளியீடான, ’விளையாட்டுப் பசங்க’, ’அப்பளம்’, ’Zha The Movie’ என மொத்தமே மூன்று படங்கள்தான் இயக்கப்பட்டுள்ளன. மேலும், 2012ஆம் ஆண்டில், ’வஜ்ரம்’, ’அடுத்த கட்டம்’ என்று இரண்டே படங்கள்தான் தயாரிக்கப்பட்டிருந்தன. முன்னரே சொன்னது போல உள்ளூர் திரையரங்கில், ‘Wajib Tayang’ (கட்டாயத் திரையிடல்) என்கிற அரசுக் கொள்கை தமிழ், சீனப் படங்களுக்குக் கொடுக்கப்பட்ட பின்னரே மலேசியத் தமிழ்த் திரைப்படங்கள் மெல்ல அதிகரிக்கத் துவங்கின. அரசாங்கத்தால் புதியதாக உருவாக்கப்பட்ட இந்த வாய்ப்பால் 2014ஆம் ஆண்டிலிருந்து வருடத்திற்குக் குறைந்தது ஒன்பது படங்கள் வரை வெளிவரத் தொடங்கின. 2014ஆம் ஆண்டு வெளிவந்து வசூல் சாதனை செய்த, ’மைந்தன்’ படம் மலேசியத் தமிழ்த் திரைப்படத்திற்கான புதிய தொடக்கம் என்று சொல்லலாம்.
ஒவ்வொரு கலைப் படைப்பிற்கும் பொருளாதார வெற்றி என்பது அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். 2011ஆம் ஆண்டு கானாவின் நடிப்பில், சசிதரன் ராஜூ அவர்களின் எழுத்தில் வெளியான, ‘அப்பளம்’ திரைப்படம் 5 லட்சம் வரை வசூலித்துச் சாதனை படைத்தது. ஆகவே, 2011ஆம் ஆண்டிற்குப் பின்னரே மலேசியத் தமிழ்த் திரைப்பட வளர்ச்சி மலேசியாவில் ஆழமாகவும் விரிவாகவும் வேரூன்றத் தொடங்கியது என அடையாளப்படுத்தலாம். திரைத்துறையில் பல்லாண்டு அனுபவங்கள் உடைய கவிஞரும் படத் தயாரிப்பாளருமான சிவா பெரியண்ணன் அவர்கள் மலேசியத் தமிழ்த் திரைப்படத்தின் வளர்ச்சியையும் அதன் தீர்க்கமான அடைவையும் இன்னும் 15 ஆண்டுகள் கடந்த பின்னரே முடிவு செய்ய முடியும் என்கிறார். ஒவ்வொரு கலைத்துறையும் குறைந்தது 25 ஆண்டுகள் நகர்ந்து சென்ற பின்னரே அதனுடைய வளர்ச்சியை முழுமையாகத் தொகுத்துக்கொள்ள முடியும். மலேசியத் தமிழ்த் திரைப்படத் துறை இப்பொழுது அதன் தொடக்க காலக்கட்டத்தில்தான் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.
இரண்டுவிதமான அணுகுமுறைகள்
மலேசியத் தமிழ்த் திரைப்படங்களைப் பொருத்தவரை இரண்டு விதமான அணுகுமுறைகளைக் கலைஞர்கள் கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளன. ஒன்று தமது படைப்பைச் சந்தைப்படுத்தும் உத்திகளை அறிந்திருக்க வேண்டும். இல்லையெனில் மக்களின் கவனத்தைத் தங்கள் படைப்புகளின் பக்கம் ஈர்ப்பதில் தொய்வடைய வாய்ப்புண்டு. மக்களைத் திரையரங்கம் நோக்கி ஈர்ப்பதற்குக் குறைந்தபட்ச விளம்பர முயற்சிகளை ஒரு படக்குழு மேற்கொள்ள வேண்டியுள்ளது. அடுத்ததாக, கதை, திரைக்கதை, இயக்கம் சார்ந்த தரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எதைக் கொடுத்தாலும் மக்கள் பார்த்துவிடுவார்கள் என்று நம்புவதைக் கைவிட வேண்டும். ஆகையால்தான், எண்ணிக்கை என்கிற அளவுக்கோல்களை மட்டுமே கொண்டு மலேசியத் தமிழ்த் திரைப்படங்களை அணுகுவது ஆரோக்கியமானதாகிவிடாது. வருடத்திற்கு மிகக் குறைந்த எண்ணிக்கையில் வெளிவரும் திரைப்படங்களை நோக்கி விமர்சனக் கண்ணோட்டங்கள் அதிகமாக வெளிவருமாயின் மக்களின் இரசனைகளை ஒன்று திரட்ட வாய்ப்புக் கிடைக்கும். ஒரு துறையில் நிகழ்த்தப்படும் விவாதங்களும் விமர்சனங்களும் அடுத்து வரக்கூடிய தலைமுறைக் கலைஞர்களுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும். அவர்கள் ஆரோக்கியமான விமர்சன சூழலை எதிர்க்கொள்ளும்போது அதிலிருந்து கற்றுக்கொண்டு ஆர்வமும் தேடலும் அதனுடன் போதிய அனுபவங்களோடும் ஈடுபட வாய்ப்புகள் அதிகமாகின்றன.
கவனிக்கத்தக்க மலேசியத் தமிழ்த் திரைப்படங்கள்
மலேசியாவின் உயரிய விருதான 28ஆவது மலேசியத் திரைப்பட விருது விழாவில் பொதுப்பிரிவில் போட்டியிட்ட மலாய், சீனப் படங்களின் வரிசையில் சஞ்சய் இயக்கிய, ‘ஜகாட்’ திரைப்படம் மலேசியாவிற்கான சிறந்த பட விருதை வென்றது குறிப்பிடத்தக்க சாதனையாகும். அதுவரை மலேசியத் தமிழ்த் திரைப்படங்களின் மீது கவனமற்று இருந்த பலருக்கும், ‘ஜகாட்’ திரைப்படம் புதிய வாசலைத் திறந்துவிட்டது எனலாம். மலேசியத் தமிழ்த் திரைப்படங்களை, ‘ஜகாட்டிற்கு முன்; ஜகாட்டிற்குப் பின்’ என்று பிரித்தரியும் வகையில் அப்படம் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கியது. அதேபோல் பிரகாஷ் இராஜாராம் இயக்கி, விகடகவி நடித்து வெளியான, ’வெண்ணிற இரவுகள்’ திரைப்படமும் மலேசிய ரசிகர்களின் பெரும்பான்மையான கவனத்தை ஈர்த்த படமாகும். வித்தியாசமான காதல் கதையைப் பின்புலமாகக் கொண்டு எடுக்கப்பட்ட அப்படம் வந்த காலக்கட்டத்தில் மலேசிய விமானம் MH370 காணாமல் போய்விட்டதால் ஏற்பட்ட துயர அலையைத் தாண்டியும் இரண்டு லட்சம் வசூல் செய்தது. பிறகு, அப்படத்தை அஸ்ட்ரோ தொலைக்காட்சி நிறுவனம் வாங்கி வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கதாகும். செந்தில் குமரன் முனியாண்டி இயக்கிய, ‘ஜெராந்துட் நினைவுகள்’, கவிநந்தன் இயக்கிய, ‘வெண்பா’, கார்த்திக் ஷாமளன் இயக்கிய, ‘அடைமழைக் காலம்’ என்று இன்னும் முக்கியமான திரைப்படங்கள் மலேசியத் தமிழ்த் திரையுலகில் வெளியாகி கவனம் பெற்று வருகின்றன. இது போன்ற திரைப்படங்கள் பலரின் கவனத்தை எட்டுவதற்கு விருதுகள் மட்டும் காரணமல்ல. ‘ஜகாட்’ திரைப்படத்தையொட்டி நான் மூன்று விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளேன். அதேபோல வெண்ணிற இரவுகள், ஜெராந்துட் நினைவுகள் போன்ற படைப்புகள் பற்றி மலேசியத் தமிழ் நாளிதழில் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. ‘ஜகாட்’ திரைப்படத்தை ஒட்டி சஞ்சயுடன், ’வல்லினம்’ இலக்கிய இதழ் விரிவான நேர்காணல் செய்துள்ளது. செந்தில் தொடர்ந்து இலக்கியத்தை முன்வைத்துப் படம் இயக்க வேண்டும் என்கிற தேடலிலும் ஆர்வத்திலும் இருக்கிறார். இப்படியாக, சினிமாவும் எழுத்துத் துறையும் ஒன்றரக் கலந்து வளரும் இடம் மலேசியக் கலைக்கு அவசியமாகும். அது போன்ற விமர்சன சூழல் இன்னும் அதிகமாக வேண்டியுள்ளது.
மலேசியத் தமிழ்த் திரைப்படங்களும் விமர்சனங்களும்
சமீபத்தில் வெளிவந்த மலேசியத் திரைப்படங்களின் விமர்சனங்கள் குறித்து இணையத்தில் எவ்வளவு அலசினாலும் கிடைப்பதில்லை. தமிழ்ச் சூழலில் குறிப்பாக தமிழ்த் திரைத்துறையில் கலைத் தர்க்கம் சார்ந்த விமர்சனங்கள் முன்னெடுக்கப்படுவது குறைந்துவிட்டது. அப்படி எழுதுபவர்களையும், “நீ வந்து படம் எடுத்துப் பாரு அப்புறம் தெரியும்” என்று வம்புக்கு இழுக்கும் விதண்டாவாதப் போக்குகளே பலமுறை எதிர்க்கொள்ளப்படுவதைக் காண்கிறேன். கலைஞர்கள் விமர்சனங்களை எதிர்க்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அடுத்து, விமர்சிப்பவர்களும் கலை சார்ந்த பின்புலத்திலிருந்து விமர்சன நேர்த்தியுடன் கருத்துகளை முன்வைக்க வேண்டியுள்ளது. போகிற போக்கில், ’இதெல்லாம் படமா?’ போன்ற அலட்சியத்தனத்துடன் பார்வையை முன்வைக்கும்போது அது போன்ற வார்த்தைகள் கலைஞனைக் கோபத்திற்குள்ளாக்கும் வாய்ப்புகள் உள்ளன. மலேசியத் திரையரங்கில் பத்துப் படங்களே வந்து கொண்டிருக்கும் இச்சூழல் மாறுபட்டு பொற்காலம் தோன்ற வேண்டுமென்றால் படைப்பாளிகளும் தங்களைச் சமக்காலத்திற்கு ஏற்ற வகையில் புதுப்பித்துக்கொள்வதோடு சுயவிமர்சனம் செய்துகொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அடுத்து, மலேசியத் தமிழ் மக்களும் அவர்கள் தயாரிக்கும் படங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும்.

மலேசியத் தமிழ்த் திரைப்படங்கள் எதிர்க்கொள்ளும் சிக்கல்கள்
இந்தியாவிலிருந்து வெளிவரக்கூடிய தமிழ்ப் படங்கள் பெரும்பாலான சமயங்களில் உள்ளூர் படங்களுக்குச் சவாலாக இருந்ததோடு மட்டுமல்லாமல் உள்ளூர் படம் பொருளாதார ரீதியில் சிக்கல்களைச் சந்திக்கவும் காரணங்களாக அமைந்துள்ளன. தமிழ்நாட்டிலிருந்து வரக்கூடிய, ‘மாஸ்’ கதாநாயகர்களின் படங்கள் வெளிவந்த சமயங்களில் அதே காலக்கட்டத்தில் வெளியான மலேசிய உள்ளூர் தமிழ் சினிமாக்கள் திரையிரங்கில் பார்வையாளர்கள் இல்லாமல் காட்சிகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. மலேசியத் தமிழ் மக்களைப் பொருத்தவரை தமிழ்நாட்டிலிருந்து வரக்கூடிய படங்களால் மட்டுமே தங்களை மகிழ்விக்க முடியும்; உள்ளூர் படைப்பாளிகளின் திரைப்படங்கள் தரமில்லை என்கிற பார்வை கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்திருக்கின்றது.
ஆனால், சமீபத்தில் அந்தப் பார்வை மாறியிருப்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். நகைச்சுவையை மையாகக் கொண்டு எடுக்கப்பட்ட, ’வெடிகுண்டு பசங்க’ என்கிற படம் 2018ஆம் ஆண்டில் வெளிவந்து 13 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதிக வசூல் செய்த முதல் மலேசியத் தமிழ்த் திரைப்படம் அதுவே. அதேபோல் 2022ஆம் ஆண்டில் வெளிவந்த, ’பூச்சாண்டி’ திரைப்படம் எட்டு லட்சம் வசூல் செய்து மீண்டுமொரு சாதனையை உருவாக்கியது. இவையாவும் மலேசியத் தமிழ் மக்கள் தரமான படங்களுக்கு எப்பொழுதும் ஆதரவு கொடுப்பார்கள் என்பதைக் காட்டுகின்றன. அதோடு மட்டுமல்லாமல் கலைஞர்களுக்குத் தங்களின் படைப்பை விளம்பரப்படுத்தும் பலவகையான உக்திகளையும் கையாளத் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும். இக்காலகட்டத்தில் அனைத்தும் சந்தைப்படுத்தும் உத்திகளுக்கு உட்பட்டுதான் பெருந்திரளைச் சென்றைடைவதற்கான சாத்தியங்களை உருவாக்க முடிகிறது.
இரசனை மேம்பாடு
அடுத்து, நம் உள்ளூர் இரசிகர்களின் இரசனையை மேம்படுத்துவதற்கான தேவைகளையும் திரைப்பட இயக்குநர்கள் கவனப்படுத்த வேண்டியுள்ளது. தமிழ்நாட்டுப் படங்களைத்தான் மக்கள் இரசிப்பார்கள் என்று அங்குள்ள சினிமாவைப் போல மீளுருவாக்கம் செய்யும் எண்ணங்களைக் கைவிட வேண்டும். தமிழகத்துத் திரைப்படங்களைப் போல மலேசியாவில் பிரதியெடுத்துத் தள்ளும் படங்களை உள்ளூர் மக்கள் வெகு இயல்பாகப் புறந்தள்ளிவிட்டுப் போய்விடுவார்கள். இன்று மக்களின் இரசனை காலத்திற்கேற்றவாறு மாறி வருகின்றது. கோவிட் பெருந்தொற்றுக் காலக்கட்டத்தில் நெட்ப்ளிக்ஸ், அமசோன் போன்ற ஓ.டி.டி தளங்களில் உலகலாவிய படங்களைப் பார்க்கத் தொடங்கிய பின்னர் எல்லையற்ற இரசனை தாவுதல் சாத்தியப்பட்டுள்ளது. அரைத்த மசாலாவை மீண்டும் எப்படி அரைத்துக் கொடுத்தாலும் வெகு எளிதாக இப்பொழுதுள்ள ரசிகர்கள் கண்டுபிடித்துவிடுகிறார்கள். அத்தனை துல்லியமான இசையில் நடக்கும் திருட்டுகளையே ரசிகர்கள் கண்டறிந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துவிடுகிறார்கள். ஆகவே, மலேசிய நிலத்திற்கென்று உள்ள தனித்துவங்களை நோக்கி நம் கலைஞர்கள் அடுத்தக்கட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் உள்ளூர் திரை ரசிகனாக எனது எதிர்பார்ப்பாகும். அசலான மலேசியத்தன்மை கொண்ட படங்களை உருவாக்கும்போதுதான் இந்நாட்டு மண்ணைச் சார்ந்த படைப்பென்று ரசிகர்கள் கொண்டாடத் தொடங்குவார்கள். கலைஞர்கள்தான் அவர்களின் முன்னே இருக்கக்கூடிய ரசிகர்களின் ரசனையை வடிவமைக்க வேண்டும்.
‘அதைச் சொல்ல நீ யார்?’ என்று தயவுசெய்து எந்தவொரு ரசிகரையும் பார்த்துக் கேட்டுவிடாதீர்கள். ரசிகர் என்பவன் ஒருவரல்ல. ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டு மனத்தின் செயல்பாடு. நாம் எழுதும் அல்லது இயக்கும் படைப்புகள் சமூகத்திற்கானவை. நாம் இயக்கி வீட்டில் பூட்டி வைத்துக் கொள்ளப்போவதில்லை. ரசிகர், கலைஞரை வெற்றியடையச் செய்கிறார். கலைஞர், ரசிகரை மகிழ்விக்கிறார். தமக்கு ஒவ்வாத படைப்புகளை ஓர் ரசிகர் விமர்சிக்க முயல்கிறார். ஒருவேளை அவருடைய ரசனை வெளிப்பாட்டில் குறை இருந்தால் அதனை ஓர் ஆரோக்கியமான விவாதங்களில் ஈடுபடுத்துவதன் மூலம் கலைத்துறை களைய முடியும். இங்கு திறந்த போக்குடைய விவாதங்கள், கலந்துரையாடல்கள் நடப்பதில்லை. இலக்கியங்களைப் பொருத்தவரை வாரம் ஒரு கலந்துரையாடல் நடந்து கொண்டிருக்கின்றது. மலேசியத் தமிழ்த் திரைப்படங்கள் வருவது வருடத்திற்குப் பத்து எனும்போது அவற்றை விரிவாகவும் தீவிரமாகவும் கலந்துரையாடி அதனை விமர்சனமாக எழுதி ஆவணப்படுத்தும் போக்கு மலேசியத் தமிழ்த் திரையுலகிலும் எழுத்துத் துறையிலும் அதிகமாக வேண்டும்.
அவ்வகையிலான தேவைகளைக் கருத்தில் கொண்டுதான் வாசகசாலை இணைய இதழில் மலேசியத் தமிழ்த் திரைப்படங்கள் குறித்தான விரிவான விமர்சனங்களை முன்னெடுக்கவுள்ளேன். என்னுடன் இன்னொரு வாசகனுக்கு மாற்றுக் கருத்துகள் தோன்றலாம். அதனாலென்ன? முரண்கள்தான் ஒரு செயல்பாட்டையும் அதையொட்டிய சிந்தனைகளையும் விரிவாக்கும். அடுத்த அத்தியாயத்தில் மலேசியத் தமிழ்த் திரைப்படங்கள் தொடர்பாக மேலும் உரையாடுவோம்.
(தொடரும்…)