இணைய இதழ்இணைய இதழ் 76சிறுகதைகள்

விருந்து – ந. சிவநேசன்

சிறுகதை | வாசகசாலை

‘வா உனக்கு பிரியாணி செஞ்சிப் போடுறேன்’ என அவளிடமிருந்து பதில் வந்திருந்தது.

இவனுக்கு ஒரு மாதிரி வியர்த்தது. ‘எப்போ?’ என அனுப்பினான்.

‘எப்போனா? எப்ப வேணாலும் செஞ்சி தர்றேன்’

இவன் துணிச்சலாக அடுத்த கேள்வியைக் கேட்டான்.

‘ஓ அப்படியா நான் நைட்டு வரட்டுமா?’

‘ம் வா பாத்துக்கலாம்’ என்ற செய்தியைப் பார்த்ததும் இவனுக்கு நெஞ்சு ஒருமாதிரி படபடத்தது.

கேட்பதற்கு அநாவசியமான ஒன்றை அவன் டைப் செய்தான். முகம் சிரிப்பில் மலர்ந்திருந்தது.

‘இந்த ராத்திரியில கறிக்கு என்ன பண்ணுவ?’ 

‘நிஜமாவே நீ கறி திங்கத்தான் போறியாடா வெண்ண.. ‘ என இவனை இவனே திட்டிக்கொண்டான். 

அவளிடமிருந்து வடிவேலு படம் போட்டு ‘முடியல’ என மீம் வந்திருந்தது. 

இவன் ‘எத்தனை மணிக்கு வரட்டும்?’ என்றான். கொஞ்ச நேரம் பதில் வராதது கண்டு படபடப்பு அடைந்தவன் பொறுக்கமாட்டாமல் நெட்டை அணைத்து வைத்தான். மாலை கருக்கல் அதிகமாக ஏறியிருந்தது. அவன் எதிர்கொள்ள வேண்டிய அந்த இரவுக்கு இன்னும் அதிக நேரமிருப்பதாகத் தோன்றியது. அதுவரை எழுமிந்த பதட்டத்தை எப்படி ஊதியணைப்பது என்று தெரியவில்லை. 

காலையில் பூர்ணாவோடு வாட்ஸப்பில் பேசியது நினைவுக்கு வந்தது‌. 

‘ஆனா நீ எதுவோ தப்பு பண்றடா.. அது என்னானு என்னால கண்டுபிடிக்க முடியல. ஆனா அது தெரியறப்போ உன்ன கொல பண்ற  அளவுக்கு எனக்கு உன்மேல லவ் வளர்ந்துருக்கு’

‘அதெல்லாம் ஒண்ணுமேயில்லடி. உன்ன நினைக்கலன்னாலும் நான் பாப்பாவ நினைக்காம இருப்பனா? டோண்ட் இமாஜின் எனிதிங்க’ என வாய்ஸ் நோட் அனுப்பிய பிறகு அவளிடமிருந்து பதிலில்லை. அந்த மௌனம் இப்போதுவரை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. 

இதற்கு முன்பும் பலமுறை அவளிடம் எசகுபிசகாக மாட்டியிருக்கிறான். கடைசியாக அவனது அலுவலகத் தோழி ஸ்டேட்டஸில் இருந்த படத்துக்கு விட்டிருந்த இரண்டு ஹார்ட்டினும் மிஸ் யூவும் பெரிய சண்டையை ஏற்படுத்தியது. 

‘அன்னிக்கு என் ஆபிஸ் ப்ரண்ட் வருண் ஜெயம் ரவி படத்துக்கு டிக்கெட் புக் பண்ணப்போ என்ன குதி குதிச்ச? இத்தனைக்கும் அவன் குடும்பத்தோட தான் வரச் சொன்னான். இப்போ இந்த மிஸ் யூ வ பிரண்ட்லியா எடுத்துக்க சொல்ற? எப்படிடா உன்னால இப்படிலாம் யோசிக்க முடியுது?’ என அவள் கேட்ட கேள்விக்கு இவனால் பதில் சொல்ல முடியவில்லை. 

எவ்வளவோ எச்சரிக்கையாக இருந்தும் தவறிவிட்டதை நினைத்து தனக்குத்தானே ‘ஷிட்’ சொன்னான். எப்போதும் அலுவலகம் முடிந்ததும் பாதி வழியில் பைக்கை நிறுத்தி அனைத்து சாட்களையும் துடைத்துவிட்டு பிறகு வீட்டுக்கு வருவான். ‘இப்போ எப்படிடி கண்டுபிடிப்ப?’ என்ற இறுமாப்பு முகத்தில் மலர்ந்தாடும். ஆனால் வாசலில் காத்திருப்பவளைக் கண்டதும் மீண்டும் பதட்டம் தொற்றிக் கொள்ளும். சரியாக அனைத்தையும் நீக்கினோமா என்ற சந்தேகம் வந்து தொலைக்கும். இதனாலேயே வண்டியை நிறுத்தியும் நிறுத்தாமலும் அவசரமாக  கழிவறைக்கு ஓடுவான். பேசினில் அமர்ந்து மீண்டும் ஒருமுறை அனைத்தையும் சோதித்த பிறகே நிம்மதியோடு வெளியே வருவான். அன்றும் அவன் அனைத்தையும் நீக்கியபிறகு போனை சார்ஜில் இட்டு உடை மாற்றச் சென்ற நேரம் இவள் எடுத்துப் பார்த்திருக்கிறாள். அதன்பிறகு வந்து விழுந்த குறுஞ்செய்தி அன்றைய கலவரத்தை ஆரம்பித்திருந்தது. 

இரவில் கண்ணீர் பொங்கக் கிடந்தவளை எப்படியெப்படியோ தேற்றினான். ஆனாலும் அந்தப் பிணக்கு முற்றிலுமாக முடிவுக்கு வரவில்லை. 

மறுநாள் அலுவலகம் சென்றதும் தோழியிடம் எகிறினான். லிப்ட்டில் வைத்து அவன் தந்த முத்தத்தில் கிறங்கிவிட்டதாகவும் அந்த உணர்ச்சிமயத்தினால் தவிர்க்க முடியாமல் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டதாகவும் கூறி அவள் மன்னிப்புக் கேட்டாள். அந்தப் பிரச்சினைக்குப் பிறகு அவள் எண்ணை ப்ளாக் செய்துவிட்டு நல்லபிள்ளையாக கொஞ்சநாள் நடந்து கொண்டான்‌. இனிமேல் எந்த தவறும் நேரவேக்கூடாதென இவன் நினைத்திருந்த போதுதான் மற்றொரு அலுவலகத்தோழன் கிஷோர் மூலமாக இவள் அறிமுகமானாள். தினமும் பேருந்திலேறி பெருநகரம் நோக்கி பணிக்குச் சென்று வருபவளை கிஷோர் வீட்டு விசேஷத்தில் பார்த்த முதல் சந்திப்பிலேயே இவனுக்கு ஈர்ப்பு அளவை மீறியிருந்தது.

மறுநாளிலிருந்து அவளைச் சந்திக்க பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கத் தொடங்கினான். பார்த்தவுடன் சாதாரண ஹாய், ஹலோவுக்குப் பிறகு ‘எனக்கு டிரைவிங் தெரியாதுப்பா.. டெய்லி இங்கயிருந்து ஷேர் ஆட்டோ தான்’ என அவளே முதலில் தொடங்கி வைத்தாள். 

பைக்கில் கொண்டு சென்று ட்ராப் செய்ததும் எதிர்பார்த்தது போலவே வீட்டுக்குள் அழைத்தாள். ஈர முகத்தோடு வந்து தேநீர் கொடுத்தாள். பியர்ஸ் வாசம் அவளுக்கு புது ஒப்பனை தந்திருந்தது. ‘பிள்ளைங்க ஸ்கூல் முடிச்சிட்டு அம்மா வீட்ல இருப்பாங்க. அப்பா தான் ஈவ்னிங் கூட்டிட்டு வருவார். ஹப்பி அடிக்கடி பிஸினஸ் டூர் போய்டுவார். இப்போதைக்கு நான் தனியா தான் இருக்கேன்’ எனச் சிரித்தாள். அந்த ‘தனியா’வில் ஒரு கிசுகிசுப்பான அழுத்தம் மிகுந்திருந்ததாக அவனுக்குப் பட்டது.

வீட்டைத் தாண்டி வந்தபிறகு அவளுடனான தனிமையை மனம் கற்பனை செய்து அரற்றியது. அதன் பிறகான அவர்களது அலைபேசி அழைப்புகள் நீண்டு கொண்டே சென்றதை வீட்டுக்குத் தெரியாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டான். ஆனால் பூர்ணாவுக்கு இவனது நடத்தைகள் மீதான சந்தேகம் பற்றுக்கொடியாக வளர்ந்து கொண்டே வந்தது. பணி முடித்து வீட்டுக்குள் நுழைந்ததும் போனை முடிந்தவரை கைக்கு அருகிலேயே வைத்திருப்பான். ஆனாலும் இவன் தூங்கிய பிறகு அவள் எடுத்துப் பார்த்து விடுவாள். ‘பாத்ரூமு போனா கூட போனும் கையுமா அலையுறடா நீ?’ என்று பலமுறை கடிந்திருக்கிறாள். அதில் கோபத்தை விட தன் தூய அன்பிலிருந்து விடுபடுதலை நோக்கி அவன் நகர்கிறானோ என்ற பயம் மேலோங்கியிருப்பதை அவனும் அறிவான். இதனாலேயே பணி நேரத்தில் மட்டும் போன் செய்யுமாறு அவளிடம் கெஞ்சும் குரலில் கேட்டுக் கொண்டான். 

‘ஏன் அப்படி சொல்ற? நாம வெறும் ப்ரண்ட்ஸ் தான?’ என அவள் சிரித்ததில் உடனே இல்லையென்ற பதிலை சொல்லத் தூண்டும் கிறக்கம் மிகுந்திருந்தது. ஆனால் அவள் வேறெதுவும் கேட்காமல் அவன் சொன்னது போல பணி நேரத்தில் மட்டும் அழைக்கத் தொடங்கியது அவர்களுக்குள் இருந்த நெருக்கம் அதிகரித்திருந்ததை அப்பட்டமாய் வெளிக்காட்டியது. 

அவள் சொல்லும் அந்த இரவுக்கு இன்னும் ஐந்து மணி நேரம் இருந்தது. பாப்பாவை கொண்டு போய் பூர்ணாவின் தம்பி வீட்டில் விட்டுவிட்டு வந்தான். தான் நண்பர்களுடன் பௌர்ணமி கிரிவலம் செல்வதாக பொய் சொன்னான். அதுவரை தனிமையை சமாளிக்க முடியாதென நினைத்தவன் மூர்த்திக்கு போன் அடித்தான். இருவரும் ஈவ்னிங் ஷோ படத்துக்குப் போனார்கள். படம் முடிந்ததும் வீட்டுக்குப் போய் தயாராகிச் சென்றால் சரியாக இருக்குமெனப் பட்டது. அலைபேசியை எடுத்துப் பார்த்தான். ‘10.30’ என அனுப்பியிருந்தாள். இவனுக்கு குதூகலமாக இருந்தது. பின்னாடியே பூர்ணாவின் செய்தி வந்தது. ‘என்னடா பண்ற லூசு புருஷா?’ எனக் கேட்டு இரண்டு ஹார்டின்களை விட்டிருந்தாள். ‘மூவி’ என ஒற்றை வார்த்தையில் பதிலளித்துவிட்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். 

‘யாருடி லூசு.. என்னை கன்ட்ரோலா பண்ற?இன்னிக்கு நைட் என்னோட நைட்டுடி’ எனப் பொங்கிய மனப்பிரவாகத்தில் அணையை உடைக்கும் ஆவல் பெருகியிருந்தது. 

ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை அவள் சாட் செய்து கொண்டே இருந்தாள். நடுவில் குளித்து முடித்து ஈரம் சொட்டும் கூந்தலோடு இருக்கும் நெற்றியை படமெடுத்து அனுப்பியிருந்தாள். படம் முடிந்ததும் மூர்த்தி இவனை சரக்கு போட அழைத்தான். வேறு இரவாக இருந்தால் நிலைமை தலைகீழ். ஆனால் இன்றைய இரவு எத்தனை நித்தியமாகக் கழியப் போகிறது? ‘உனக்குத் தெரியுமாடா முட்டாள்’ என நினைத்துக் கொண்டே அவசரமாக மறுத்தான். 

“சரிடா சாப்பிடவாவது வா..எனக்குப் பசிக்குது” என்றவனை வெறுப்பாகப் பார்த்தவன் பின்தொடர்ந்தான். 

“எனக்கு எதுவும் வேண்டாம்டா. சாப்பிட்டுட்டு சீக்கிரம் கிளம்பு”

“ஏன்டா இவ்வளவு அவசரம்? இதுக்கு மேல வீட்டுக்கு ஓடி என்ன  பண்ணப்போற? இந்த ஓட்டல்ல இறால் சில்லி சூப்பரா இருக்கும். சாப்பிட்டு பாரு” என அவன் ஆர்டர் கொடுப்பதை இவன் மௌனமாய் பார்த்தவாறு அமர்ந்திருந்தான். இந்த நேரத்தில் சினிமாவுக்கு வந்திருக்கவே கூடாதெனத் தோன்றியது.

மூர்த்தி ஒரு ப்ளேட் இறாலை இவன் பக்கம் நகர்த்தியபோது “பழக்கமில்லை” என்றான். 

“எது பழக்கமில்லையா? இனிமே பழகிக்கோ. இதோட டேஸ்ட்ட எந்த அசைவமும் அடிச்சிக்க முடியாது” என வற்புறத்தியதில் வேண்டாவெறுப்பாக நான்கைந்து துண்டுகளை உள்ளே தள்ளினான். அதற்குள் அவளிடமிருந்து ‘சமையல் ரெடி’ என வந்திருந்தது. இவன் பரபரப்போடு எழுந்து மூர்த்தியை நகர்த்திக் கொண்டு வெளியே வந்தான். பைக்கில் உட்காரும்போது மூர்த்தி எதுவோ நினைவுக்கு வந்தவனாக ஓடித் திரும்பினான். கையில் பாட்டில் இருந்தது.

“நீ தான் வேணாம்னு சொல்லிட்ட. நான் போய் வீட்ல சாப்டுக்குறேன்”

ஒருவழியாய் மூர்த்தியை இறக்கிவிட்டு வீட்டுக்குத் திரும்பியபோது மணி பத்தாகியிருந்தது. கழிவறைக்கு ஓடி சின்னதாய் புத்துணர்ச்சி அடைந்துத் திரும்பி உடை மாற்றினான். லேசாக தொண்டை கவ்வுவது போலிருந்தது. உடல் முழுக்க வியர்க்கத் தொடங்கியிருந்தது. லேசான அஜீரணம் என நினைத்துக் கொண்டு வெந்நீர் வைத்துக் குடித்தான்‌.

அவளிடமிருந்து ‘கிளம்பிட்டியா?’ என மீண்டும் செய்தி வந்திருந்தது.  ‘ஆன் தி வே’ என பதில் அனுப்பிவிட்டு பைக் சாவியை எடுத்தான். ஆனால் இப்போது வயிறு வலிக்கத் தொடங்கி அது லேசாக நெஞ்சுப் பகுதியை நோக்கி முன்னேறத் தொடங்கியிருந்தது. இவனுக்கு இவன் மீதே சொல்லமுடியாத கோபமும் வெறுப்பும் வரத் தொடங்கியது. 

வயிற்றைப் பிடித்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்தான். ‘ச்சை.. சனியன் பிடிச்ச வலி இப்பவா வரணும்..’ என வாய்விட்டு முனகியவனுக்கு சிரிப்பு வந்தது. 

‘இப்போ எதுக்கு டென்ஷன் ஆகுற? ஒண்ணுமேயில்ல. வெறும் நெஞ்சுப் பொறுமல் தான். பி ரிலாக்ஸ்’ என்றபடியே சமையலறைக்குள் புகுந்து உருட்டத் தொடங்கினான். ஐந்து நிமிடத்தில் தயாரான கஷாயமும் கேட்கவில்லை. இதுபோன்ற அவசரங்களுக்கென்றே மாத்திரைகள் வைத்திருப்பான். அதை தேடத் தொடங்கியபோது அவளிடமிருந்து இம்முறை அழைப்பு வந்தது. அவசரமாய் கட் செய்தான். பூர்ணா எந்நேரமும் போன் செய்து சோதித்துப் பார்ப்பாள். ‘கம்மிங்’ என அனுப்பிவிட்டு பைக்கை நோக்கி ஓடினான். மெடிக்கலில் வாங்கிவந்த மாத்திரைகள் டேங்க் கவரில் அப்படியே இருந்தன. அவற்றைப் பிரித்து வாயிலிட்டு நீர் பருகிவிட்டு சோபாவில் அமர்ந்தான். 

கால்களை தரையில் உதைத்து கடவுளை கெட்ட வார்த்தையில் திட்டினான்.இப்போது கொஞ்சம் வலி சரியானது போலிருந்தது. மணியைப் பார்த்தான். பதினொன்று. அவளிடமிருந்து குறுஞ்செய்தி வருவது நின்றிருந்தது. இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை என சமாதானம் செய்து கொண்டே எழுந்து உடையை சரிசெய்து வெளியே வந்து கதவைச் பூட்டினான். சீப்பை எடுத்து தலையை லேசாக ஒதுக்கிவிட்டு அலைபேசியை எடுத்து முகம் பார்த்தான். திக்கென்றிருந்தது. இடது கண்ணின் மேலிமை வீங்கிப் பருத்திருந்தது. கன்னம் தாடையென ஆங்காங்கே புடைத்து தடுப்புகள் எழுந்திருந்தன. அதிர்ந்துப்போய் மீண்டும் வீட்டுக்குள் ஓடியவன் கண்ணாடியில் நன்றாகப் பார்த்தான். முகம் வேறு யாரோ போல மாறியிருந்தது.

மூச்சு லேசாக அடைத்து வரத் தொடங்கியது தெளிவாகத் தெரிந்ததில் எதுவோ விபரீதமாகப்பட்டது. மூர்த்திக்கு போன் செய்தான். எடுக்காதது கண்டுத் திட்டினான்.

‘சரக்கடிச்சி மட்டையாய்டான்.. கிறுக்கன்’

இந்த ராத்திரியில் யாரை அழைப்பதென குழம்பிக் கொண்டிருக்க இன்னும் அடைப்பு அதிகமானது. நிற்க முடியாமல் சுவற்றைப் பிடித்துக் குனிந்து வாயால் மூச்சை முடிந்தமட்டும் உள்ளிழுத்தான். வேறுவழியற்று பூர்ணாவின் தம்பியின் எண்ணை எடுத்தான்.

மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் நான்கைந்து முறை அவள் போன் செய்துவிட்டாள். எல்லாம் கோபக் கால்கள். பிரபு தலையைத் திருப்பாமல் “யாரு மாமா அக்காவா? ” எனக் கேட்டான்.

ஆமாம் எனச் சொல்லிவிட்டால் மறுநாள் போன் செய்து பூர்ணாவிடம் ‘இந்த நேரத்துக்கு இத்தன மணிக்கு போன் செய்தாயா?’ எனக் கேட்பான். எல்லாம் ஒரே மாதிரி டிடெக்டிவ் மூளை. 

அவ்வளவு அவஸ்தையிலும் யோசித்து “தெரியலப்பா.. ஏதோ ராங் கால் காலைல இருந்து வருது. நீ வேகமா ஓட்டு” என்று மீன் மாதிரி மூச்சு விட்டான். 

டாக்டர் ஆற அமர பரிசோதித்து இரண்டு ஊசிகள் போட்டபிறகே சுவாசம் சீரானது. விகாரமாக இருந்த முகம் இயல்புக்குத் திரும்புவது போலிருந்தது. நீண்ட உறக்கத்துக்குப் பிறகு கண் விழித்தான்.

“ஸீ மிஸ்டர்.. பழக்கமில்லாத உணவுப் பொருள எதுக்கு சாப்பிடணும்? அதுவும் ஹோட்டல்ல ஹைஜீனிக்கா இருக்காது. அதான் அலர்ஜி ஆகிடுச்சு. இனிமே இறால் சாப்பிடாதீங்க” எனக் கூறிவிட்டுச் சென்றார்.

பிரபு நெட்டில் தேடியெடுத்து “ஆமாம் மாமா. சிலருக்கு இறால் ஒத்துக்காதாம். அதுவும்  நீங்க வேற அவசரத்துக்கு கண்ட மாத்திரைய முழுங்கிட்டீங்க போலருக்கு. கொஞ்சம் விட்டிருந்தா எல்லாம் சேர்ந்து தூக்கி விட்டிருக்கும்” எனச் சிரித்தான். அதில் ‘உன்னோட பௌர்ணமி கிரிவலம் இதானா?’ என்கிற கேலி இருந்தது.

இதற்குள் தகவலறிந்து  பூர்ணாவின் உறவினர் கூட்டம் வந்துவிட்டிருந்தது. 

“அப்படி பழக்கமில்லாத பொருள இந்த ராத்திரியில என்னதுக்கு திங்கணும்? அதுவும் எம் புள்ளைய விட்டுட்டு..” என மாமியார் ரூமுக்கு வெளியே யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தாள். 

இவனுக்கு ஒரே வெட்கமாகப் போய்விட்டது.  விடிந்து வீடு திரும்பும் வரை இவன் யாரிடமும் எதுவும் பேசவில்லை. எல்லோரும் சென்றபிறகு ஒரு அபூர்வத் தருணத்தை தவற விட்டதன் தோல்வியோடும் ஏமாற்றத்தோடும் போனை எடுத்துப் பார்த்தான்.எதிர்பார்த்தது போலவே வாட்ஸ் அப் அவளால் நிரம்பி வழிந்திருந்தது.

அவளுக்குக் கீழேயே பூர்ணா செய்தி அனுப்பியிருந்தாள். ‘என்னடா புருஷா  ஆச்சு? பாத்து சாப்பிட மாட்டியா? நல்லா ரெஸ்ட் எடு. காலையில பேசுறேன்’ என பூங்கொத்து வந்திருந்தது கண்டு அவன் கண்களை இறுக மூடிக்கொண்டான். மனம் கனத்து அறையெங்கும் வெப்பம் பரவுவது போலிருந்தது. ஐந்து நிமிட இடைவெளியில் மீண்டும் கைகள் பரபரத்தன. பூர்ணாவிடமிருந்து விலகி அவளது சாட்டை நோக்கி நகர்ந்தான்.

‘ஸாரி‌. அவசர வேலை. அதான் வர முடியல’ என அனுப்பினான். நீண்ட நேர சமாதானத்துக்குப் பிறகு அவள் கொஞ்சத் தொடங்கியிருந்தாள். 

செல்லமாய் கோபித்தக் குரலொன்று அதன் பிறகான அவள் செய்திகளில் ஒளிந்திருந்ததை இவன் பழைய பரவசத்தோடு இரசித்துக் கொண்டே அடுத்த கேள்வியைக் கேட்டான்.

‘சரி.. என்னவோ எனக்காக ஸ்பெஷலா சமைச்சு வச்சிருந்தேன்னு சொன்னியே.. என்ன அது?’

‘இறால் பிரியாணி வித் இறால் கார்லிக் ஃப்ரை’ என பதில் அனுப்பினாள். இவனுக்கு மீண்டும் மயக்கம் வருவது போலிருந்தது.

*******

nsivanesan1988@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button