
1.
அந்த ஆராய்ச்சி நிலையக் குடுவைகளில் கலந்துகொண்டிருக்கும் கரைசல்கள் குடுவைகளின் ஓரங்களில் பட்டு மீளும் மிக மெல்லிய சத்தத்தைத் தவிர அங்கு வேறு ஒலிகளின் சத்தம் கேட்கவே இல்லை. அங்கு பணிபுரிந்துக்கொண்டிருக்கும் ஐம்பது பேரும் ஏதேனும் ஒரு கரைசலை கலந்துகொண்டோ, மைக்ரோஸ்கோப் வழியாக எதையேனும் ஒன்றை பெரிதாக்கி பார்த்துக்கொண்டோ, அமிலக்கரைசலில் ஏதேனும் உலோகத்தையோ தனிமத்தையோ கரைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்களே தவிர ஒருவர் முகத்தை ஒருவர் கூட நிமிர்ந்து பார்த்துக்கொள்ளவில்லை. அப்படியே நான்காவது வரிசையில் உயரமாக இலேசாக வளர்ந்திருந்த தாடியோடும் பெரிய கண்களில் அணிந்திருந்த கண்ணாடியோடும் ஒழுங்கற்ற வடிவமுள்ள நிறைய துளைகள் உள்ள உலோகத்தின் மீது துளித்துளியாக ஏதோ ஒரு அமிலத்தை வைத்து அதன் நிறம் நொடிக்கு நொடி மாறுவதை உற்றுப்பார்த்துக்கொண்டே இருந்தான் சித்தார்த். இந்த ஆராய்ச்சி கூடத்தின் ஆராய்ச்சியாளர்களில் புதிதாக வந்து சேர்ந்துகொண்டவன். ஆராய்ச்சிக்கான படிப்புகளில் முனைவர் பட்டம் பெற்றவன். நாசா வரை இவனது குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிகளின் காரணமாகப் பேசப்படுபவன். நாத்திகவாதி. கடவுளை சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் மறுத்துக்கொண்டே இருப்பவன்.
அவனுக்கும் அவன் மனைவி ரோகினிக்கும் ஒத்துவராத ஒரே விசயம் கடவுள்தான். ரோகினி கடவுளை எவ்வளவு நேசிக்கிறாளோ, அந்தளவுக்கு சித்தார்த் கடவுளை வெறுத்து அறிவியலை நிலைநாட்ட முற்படுபவன். ஆராய்ச்சிகளில் மூன்று வகை உண்டு. இவன் வரலாற்றுப் பொருட்களை ஆராய்ச்சி செய்பவன். வரலாற்றுக் கதைகளின் அடிப்படையிலும் அதன் ஆசிரியர்களின் நம்பகத்தன்மைக்கு ஏற்றவாறு சிறிய பொருட்கள் கிடைத்தாலும் அதனை தீவிரமாக ஆராய்ந்து பார்ப்பவன். அந்தப்பொருளைப்பற்றி உலகிற்குத் தெரிவிப்பது இரண்டாம் பட்சமாக இருப்பினும், அவனுக்கு முதலில் உண்மைகள் தெரிய வேண்டும். வரலாற்றின் வழியாக இந்த பூமியும் அதன் தொடக்கமும் எவ்வாறு இருந்திருக்குமென யோசித்துக்கொண்டே இருப்பவன். அந்த வரலாற்றின் வழியே உண்மையை அறிந்து அறிவியல்தான் பெரிது என நிரூபிக்க போராடிக்கொண்டிருப்பவன். போதாததற்கு சமீபத்தில் கண்டறியப்பட்ட ‘ஹிப்ஸ்போசான்’ என்றழைக்கப்பட்ட கடவுள் துகளின் கண்டுபிடிப்பும், சித்தார்த்தின் மனைவி ரோகினியின் அதீத முருக பக்தியும் சேர்ந்து கொள்ள, எப்படியாவது இந்த கடவுள் எல்லாம் பொய் எனக்கண்டுபிடித்து நிரூபித்துவிட வேண்டும் என மனதில் கங்கணம் கட்டிக்கொண்டு இராப்பகலாக ஆராய்ச்சி கூடத்திலேயே கிடந்தான். கடும் உழைப்பாளி. வேலை என வந்துவிட்டால் வேறு எதைப்பற்றியும் அவன் கவலைப்படமாட்டான்.
போன வாரம் அந்த ஆராய்ச்சிக் கூடத்திற்கு கடலிலிருந்து கிடைத்ததாக ஒரு சிறிய பெட்டி வந்து சேர்ந்தது. அந்த சிறிய இரும்புப்பெட்டியை பார்த்ததுமே நன்கு தெரிந்துவிட்டது. அதில் எந்த பொக்கிஷங்களும் கிடைத்துவிடப்போவதில்லை. ஏனெனில் அது பழங்கால பெட்டி அல்ல. ஒரு நூறு ஆண்டுகளுக்கு முந்தைய பெட்டியாகத்தான் அது இருக்க வேண்டும். அந்த இரும்புப்பெட்டியின் நீலநிறப்பூச்சு அங்காங்கே திட்டுத் திட்டாக விழுந்து இரும்பின் நிறம் துருப்பிடித்துத்தெரிந்தது. அந்த ஆராய்ச்சி கூடத்தின் தலைவர் கார்த்திகேயன் என்ன நினைத்தாரோ தெரியவில்லை..சித்தார்த்தை அழைத்து, “சித்தார்த், இந்தப்பெட்டியை நீ அணுகிய விதமே உனக்கு இந்தப்பெட்டி அவ்வளவு சுவாரஸ்யம் தரவில்லை என்பதை உணர்த்துகிறது. ஆனால், என்னோட உள்மனசுக்கு இந்தப்பெட்டியில் ஏதோ ஒரு அற்புதம் இருப்பதாகப்படுகிறது. திறந்து பார்த்துவிட்டேன். ஒரு இலையில் சுற்றிய ஓலைச்சுவடிகள் போன்ற காகிதங்களும் வேல் வடிவமுடைய ஒரு கூர்மையான பொருளும் உள்ளன. அது ஓலைச்சுவடியும் இல்லை; காகிதங்களும் இல்லை. நன்கு பதப்படுத்தப்பட்ட பனை ஓலையோ இல்லை வேறு ஏதேனும் பொருளா எனத் தெரியவில்லை. அதுவே எழுதுவதற்கு காகிதங்களாகப் பயன்பட்டிருக்கிறது. நிறைய சிவனுடைய ஓவியங்கள் நடராஜ சிற்பங்கள். லிங்கத்துடைய ஓவியங்கள், அதன் பாகங்கள் இவற்றை அந்தக் காகிதத்தில் எழுதுவதற்கு வேல் போன்ற ஒரு எழுத்தாணி. ஆம்! சித்தார்த் அது எழுத்தாணியாகத்தான் இருக்க வேண்டும். இவைகளே அந்த சிறிய பெட்டி முழுவதும் நிறைந்திருக்கின்றன. கடலில் உள்ள மணலின் தன்மையை ஆராய்ந்து பார்க்கும் வேதாரண்யம் பகுதி மாணவர்களால் கடலிருந்து கண்டறியப்பட்டு இது எந்த வருடத்தை சார்ந்தது எனும் ஆராய்ச்சிக்காக நமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீ தான் வரலாற்று ஆராய்ச்சியில் ஆர்வம் உள்ளவனாயிற்றே.. இனி இது உன் பொறுப்பு. சீக்கிரம் கண்டறிந்து பதிலை சொல்” எனச்சொல்லி விட்டு சிரித்துக்கொண்டே சித்தார்த்தின் தலைமுடியை லேசாகக் கலைத்து விட்டு பிரியமாக கன்னத்தை தட்டிவிட்டு நகர்ந்து சென்றார்.
அவருக்கு சித்தார்த்தின் வேலைகளின் கச்சிதத்தன்மை மேல் எப்பொழுதும் நம்பகத்தன்மை உண்டு. அந்தப்பெட்டியை அலட்சியமாகப் பார்த்தான் சித்தார்த். அதைத்தொட்டுத்திறக்கும் போதே பெட்டியின் பாகங்கள் உதிர்ந்து விழத் தயாராக இருந்தன. உள்ளிருந்த காகிதங்களை மெதுவாக எடுத்து, ஒவ்வொன்றாக மெதுவாக புரட்டி உன்னிப்பாகப் பார்த்தான். சிதம்பர நடராஜர் ஆடல் கோலம் காஸ்மிக் அணுக்களின் நகர்தலைக் குறிக்கிறது என்பது அறிவியலால் நிரூபிக்கப்படாத உண்மை. ஆனால், அது சின்னக்குழந்தைக்கு கூட இந்தக்காலத்தில் தெரிந்திருக்கிறது என எண்ணிக்கொண்டே அடுத்தப்பக்கத்தை திருப்பினான். சடாரென அந்த ஆய்வுக்கூடத்தின் மூலையில் “பூம்” என சத்தத்தோடு ஏதோ ஒரு பொருள் மீது நெருப்புப் பற்றிக்கொண்டது. உடனே தீயை அறிந்ததும் அலரும் அலாரம் கத்தத்தொடங்கியது. ஆராய்ச்சிக்கூடத்தின் அந்த அறை முழுவதும் மழை போல நீர் பொழியத்தொடங்கியது. சித்தார்த் கையிலிருந்த காகிதத்தின் லிங்க வடிவம் முழுவதும் அபிஷேகம் போல நீரால் நனையத்தொடங்கியது. ஆனால், அந்த ஓவியம் நீர்ப்பட்டு கலையவே இல்லை. ஸ்படிக கல் போல மின்னுவதாக சித்தார்த்திற்கு பட்டது. அந்த ஓவியம் மேலும் நீரால் நனையாமல் இருப்பதற்காக, அணிந்திருந்த வெள்ளை கோட்டிற்குள் அந்த காகிதங்களை வைத்தான். அந்தக்காகிதங்கள் சித்தார்த்தின் நெஞ்சுப்பகுதியில் பட்டதும் ஒருகணம் எதிரே தோன்றிய காட்சிகள் அனைத்தும் மறைந்து, தான் ஒரு வெள்ளை பனி மலையில் இருப்பதாகவும், எதிரே ஒரு மனிதர் கம்பீரமாக அமர்ந்துக்கொண்டு ஏதோ தன்னிடம் சொல்வது போலவும் ஒரு காட்சி கண்முன்னே விரிந்து மறைந்தது.
“சே, என்ன இது மூடத்தனம் லிங்கம் மின்னுவதாவது பனிமலையாவது. இரண்டு நாட்களாக சரியாகவே தூங்கவில்லை. முதலில் இந்த வேலையைத் தொடங்குவதற்கு முன்பு வீட்டிற்கு போய் நல்லா ஓய்வு எடுக்கணும். இதற்குள்ளாகவே ஆயிரம் தடவை போன் பண்ணிருப்பார்கள் அம்மாவும் பையனும். மொபைல் என்னிடம் இருக்காது.. அதை அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு தான் ஆராய்ச்சி கூடத்தின் உள்ளேயே போகவேண்டும் என எத்தனை தடவை அவர்களிடம் சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.” ஆப்பிள் பழம் மாதிரி குண்டுக்கன்னங்களோடு இருக்கும் தனது மகன் குகன் நினைவுக்கு வந்ததுமே அவனை தூக்கிக் கொஞ்ச வேண்டும் என ஆவலெழுந்தது சித்தார்த்திற்கு. அவனது பலமும் பலவீனமும் குடும்பம்தான். அவனை தொந்தரவு பண்ணாமல் இயங்கும் குடும்பம். அவனின் வரவை ஆவலோடு எதிர்ப்பார்க்கும் குடும்பம். இப்படியாக இருவகையும் அவர்களேதான். வீட்டு ஞாபகம் வராத வரைதான் அவனால் தெளிவாக வேலை செய்யமுடியும். வீட்டு ஞாபகம் வந்துவிட்டால் சென்று பார்த்துவிட்டு வந்தால்தான் மனம் ஒருநிலைப்படும்.
அணிந்திருந்த ஆராய்ச்சிக்கூட சீருடையை களைந்துவிட்டு, கழுத்தில் அணிந்திருந்த அடையாள அட்டையின் மூலமாக, ஆராய்ச்சி கூடத்தின் கதவைத் திறந்துக்கொண்டு எல்லா சோதனைகளையும் முடித்துவிட்டு அலுவலகத்தில் மொபைலை வாங்கிக்கொண்டு கார் இருக்கும் இடத்திற்கு விரைந்தான் சித்தார்த்.
2.
இரவு உணவை விசாகனுக்கும் விக்னேஷ்வரனுக்கும் பரிமாறிக்கொண்டிருந்தாள் அந்தரி. எந்த உணவாக இருந்தாலும் அடுப்பிற்கு பக்கத்திலேயே அமர்ந்து சூடாக செய்ய செய்ய சாப்பிட்டு விட வேண்டும். ஒரு நிமிடம் தாமதமாகிவிட்டால் கூட உணவு பொழிந்துக்கொண்டே இருக்கும் பனி மழையின் குளிர்ச்சியால் உறைந்து விடும். அந்த கண்டத்தில் எங்கு பார்த்தாலும் பனி. பனியால் சூழப்பட்ட வெண்ணிற மலைகளும் குன்றுகளும் தான் அந்தக்கண்டத்தில் நிறைந்திருந்திருந்தன. அந்தக்கிரகத்தின் பெயர் ‘சோமாஸ்’ பனியால் சூழப்பட்ட வெண்மை நிறக்கிரகம் அது.
அடுப்பில் கொழுக்கட்டை வேக வைத்து அவித்துக்கொண்டிருந்த அந்தரி, ”விசாகா, இரவு உணவு தயாராக இருக்கிறதெனக்கூறி தந்தையை அழைத்து வா. அப்படியே உனது தந்தையின் சேவகர்களையும் உணவு உண்பதற்கு அழைத்து வா.” என்றாள்.
விசாகன் எழுந்து உடைகளை திருத்திக்கொண்டு வெளியே வந்துப்பார்த்தான். தியானத்தில் அமர்ந்திருந்திருந்த ‘ஹரா’வும், அவரை சுற்றி அமர்ந்திருந்த காளை மாடு முகத்தின் சாயலில் இருந்த ‘லவா’வும் தெரிந்தனர். அதோடு பலவகையான முகத்தோற்றத்திலும் வடிவத்திலுமிருந்த சேவகர்கள் அமைதியாக அமர்ந்து ஏதோ முக்கியமான விசயத்தைப்பற்றி மெதுவாக பேசிக்கொண்டிருந்தனர்.
“அப்பா, வாங்க உங்கள அம்மா சாப்பிடக்கூப்பிடுறாங்க” என்றதும் கண்களைத்திறந்த ஹரா எதுவும் பேசாமல் விசாகனை ஆழமாகப்பார்த்துவிட்டு, எதோ யோசித்துக்கொண்டே எழுந்து வந்தார். கூடவே அவரது சேவகர்களும்.
ஹரா அந்தக்கிரகத்தின் தலைவர். அவர் சோமாஸ் என்னும் கிரகத்தை ஆண்டதால் சோமேஸ்வர் என்ற பெயரும் அவருக்கு உண்டு அவரது மனைவி அந்தரி. சோமாஸ் கிரகத்தின் மஹாராணி. ஹராவிற்கு தகுந்தமாதிரி ஆற்றல்கள் அந்தரிக்கும் உண்டு என்றாலும் கணவனையும் குழந்தைகளையும் கவனிப்பதில் அவளுக்கு பெரும் விருப்பம் இருந்தது.
ஹராவிற்கு காலையிலிருந்து எதோ நடக்கப்போவதாக உள்ளுணர்வு உறுத்திற்று. போன வாரம்தான் விசாகனுக்கு ‘பூமி ‘என்னும் கிரகத்தை உருவாக்கி அதனைப் பராமரிக்குமாறு தந்திருக்கிறார். பூமியானது சோமாஸ்லிருந்து பதிமூன்று ஒளியாண்டுகள் தூரத்திலிருந்தது. விக்னேஷ்வரனுக்கு ‘நாமி‘ என்ற கிரகத்தை ஏற்கனவே தந்தாகிவிட்டது.
விசாகனும் பூமி கிரகத்தில் நிறைய உயிரினங்களை புதிது புதிதாக உருவாக்கி பராமரித்து வருகிறான். சோமாஸ் கிரகத்தில் உள்ள யானை முக மனிதர்கள், காளை முக மனிதர்கள், சிங்க முக மனிதர்கள், பன்றி முக மனிதர்களைப்போலவே சில உயிரினங்களை உருவாக்கி அதற்கு ‘விலங்குகள்’ எனப் பெயரிட்டிருக்கிறான். இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து பூமியில் தாவரங்களையும் விலங்குகளையும் உருவாக்கி ஆட்சி செய்து வருகிறான். இந்த விசாகனை சின்னப் பையன் என நினைத்தோம் எந்தனை அழகானதாக பூமியை உருவாக்கி வைத்திருக்கிறான். நாளை எத்தனை வேலைகள் இருந்தாலும் ஒதுக்கி வைத்துவிட்டு விண்கலத்தில் பூமிக்கு சென்று பார்த்து வர வேண்டும் என எண்ணியவாறே உணவருந்த அந்தரி முன்னே அமர்ந்தார் ஹரா.
அடுத்த நாள் பொழுது விடிந்தது. அந்த சோமாஸ் கிரகத்திற்கு மிகச்சிறிய சூரியன்களாக கிழக்குப் பகுதியில் ஒன்றும் மேற்குப் பகுதியில் ஒன்றும் என இரண்டு சூரியன்கள் தோன்றின. இரண்டு சூரியன்கள் இருப்பினும் அவை அதிக வெப்பம் தருபவைகளாக இல்லை. அவை தோன்றி விடிந்ததை அறிவித்தன அவ்வளவுதான். அன்று அனைவரும் வெகு விரைவாக கிளம்பி அந்த இடத்தின் மையத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கு ஏற்கனவே கூட்டம் வரத்தொடங்கியிருந்தது. மாதத்திற்கு ஒருமுறை கூடும் அவை அது.
பேரண்டத்திலுள்ள எல்லாக்கிரகங்களை ஆள்பவர்களும் அவ்விடத்தில் கூடியிருக்க வேண்டும் என்பது தலைவரின் கட்டளை. அதன்படியே அனைத்து கிரகத்தின் தலைவர்களும் அங்கே கூடியிருந்தனர். அனைவருக்கும் தலைவராக ஒருமனதாக மிக ஆற்றல் உள்ளவராக இருந்த ஹரா அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அதனால் அனைவரும் சோமாஸ் கிரகத்திலேதான் ஒன்றாகக் கூடுவர். தலைவருக்கும் ஏனைய சிறுதலைவர்களுக்கிடையே பேசுவதற்கு அனைவருக்கும் பொதுவான மனிதராக கருதப்படும் ‘நரேஷ்’ பத்துக்கைகளோடு ஏதோ ஒரு இசைக்கருவியை கையில் சுமந்துகொண்டு அமர்ந்திருந்தார். அங்கு காணப்பட்ட அனைவருக்குமே நான்கு கைகளுக்கு மேல் இருந்தது. சிலருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட தலைகள் இருந்தன. சிலருக்கு விலங்கு சாயலுடைய முகங்கள் இருந்தன. அங்கு அவற்றை யாருமே வித்தியாசமாக வேறுபட்டு பார்க்கவில்லை. அவர்கள் இயற்கையாகவே அப்படிதான் இருந்தார்கள். அவர்களுக்கு பேச்சுத்திறன் இருந்தது. அவர்களுக்குள் சாதாரணமாக பேசிக்கொண்டார்கள்.
நேரம் செல்லச் செல்ல கூட்டத்தில் சப்தம் அதிகரிக்கத் தொடங்கியது. உடனே நரேஷ் தொண்டையை கனைத்துக் கொண்டு, “சற்று அமைதியாக இருங்கள் முக்கியமான ஒரு விசயத்தைப்பற்றி இன்று பேசப்பட உள்ளது. விசயம் என்பதை விட அதை ஒரு வரம் எனலாம். புதிதாக கிரகங்களைப் பெற்ற சிறியவர்களுக்கு மிக அவசியமான வரம் இது. அதனால் புதிதாக ஆட்சிக்கு வந்தவர்கள் கவனமாகச் செயல்பட்டு அவ்வரத்தை பெற வாழ்த்துக்கள்.” எனக்கூறிவிட்டு அனைவருக்கும் தலைவனான ஹராவை பார்த்தார் ‘ஹரி’ நீரால் சூழப்பட்ட ‘துவா’ என்னும் கிரகத்தின் தலைவர். ஹராவிற்கு அடுத்தபடியாக அனைவராலும் போற்றப்படுபவர். உடனே ஹரா முகத்தை தீவிரமாக்கிக்கொண்டு, “நரேஷ், நீ கொண்டுவந்திருக்கும் அந்த ஞானம் எனப்படும் வரத்தின் பெருமைகளை கூறு.” என்று நரேஷை பார்த்துக்கூறிவிட்டு, தானும் நரேஷ் சொல்வதைக்கவனிக்கத் தயாரானார்.
“அனைத்து கிரகங்களின் தலைவர்களுக்கு இந்த நரேஷின் வாழ்த்துக்களும் வணக்கங்களும். நமது ஆராய்ச்சிக் கூடத்தில் நடந்துக்கொண்டே இருக்கும் ஆராய்ச்சிகளின் விளைவாக ஒரு புது வரத்தை உருவாக்கியிருக்கிறோம். இந்த வரத்தின் மூலம் ஓரறிவுடைய உயிரோ ஈரறிவுடையோ உயிரோ எத்தனை அறிவுடைய உயிராக இருந்தாலும், அதற்கு இந்த வரத்தின் ஃபார்முலா மூலம் பகுத்தறிவையும் பேசும் திறனையும் உண்டாக்கலாம். தற்போது உண்டாகி வளர்ந்து கொண்டிருக்கும் பூமி, நாமி, தாமி முதலான கிரகங்களுக்கு இந்த வரம் மிகவும் இன்றியமையாதது. இதில் பூமியின் தலைவன் விசாகன், தாமியின் தலைவன் பத்ரன், நாமியின் தலைவன் விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இந்த வரம் மிக இன்றியமையாததாகும். தாங்கள் ஆண்டு கொண்டே உருவாக்கிக்கொண்டிருக்கும் கிரகங்களின் உயிரினங்களுக்கு இவை மிக முக்கியமான வரமாகும். ஆனால், இந்த வரத்தைப் பெற போட்டி உண்டு. இதில் இவர்களோடு அனைத்து இளம் அரசர்களும் கலந்துக்கொள்ளலாம். இளம் அரசர்களில் யார் முதலில் இந்த பேரண்டப் பிரபஞ்சம் முழுவதும் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கே இந்த ஞானம் எனும் வரத்தின் ஃபார்முலா சொல்லித்தரப்படும்” என சொல்லி முடித்தார் நரேஷ்.
உடனேயே அனைவரும் அங்கு அமர்ந்திருந்த அனைத்து கிரகங்களின் தலைவர்களையும் வணங்கிவிட்டு அவரவர்களுக்கான விண்கலத்தில் ஏறி அண்டத்தைச் சுற்றிவரக் கிளம்பினர். விசாகனும் அவனுக்கு வடிவமைக்கப்பட்ட மயில் போல தோற்றத்திலுள்ள விண்கலத்தில் ஏறி இந்த பிரபஞ்சத்தை சுற்றி வரக் கிளம்பினான். ஏனைய சிறு தலைவர்களும் போட்டியில் கலந்துக்கொண்டு பிரபஞ்சத்தை சுற்றிவரக் கிளம்பினர்.
விக்னேஷ்வரன் மட்டும் தாய் தந்தையரை வணங்கியபடியே அங்கேயே நின்றுக்கொண்டிருந்தார். பிறகு அனைவரையும் வணங்கிவிட்டு தயக்கத்தோடு பேசத்தொடங்கினார்.
“நரேஷ் மாமா, நான் மற்றவர்களை தரக்குறைவாகவோ குறைத்து மதிப்பிட்டோ இதைச் சொல்லவில்லை. விசாகன் அவனது பூமி கிரகத்தில் விலங்குகள் என்னும் உயிரை உருவாக்கி வைத்திருக்கிறான். அதனால் யாருக்கு என்ன பிரயோஜனம்? நான் நம்முடைய சாயலைப் போலவே உள்ள மனிதர்கள் என்பவர்களை ‘பிருத்துவி’ மாமாவின் உதவியோடு உருவாக்கி இருக்கிறேன். அவர்கள் முழுமையானவர்கள். சில குறைகளை தவிர்த்து அழகாக முழுமையாகச் சிறந்தவர்களாக உருவாக்கி இருக்கிறேன். எனக்கு இந்த வரம் கிடைத்தால் இந்த மனிதர்களை சிறந்த சிந்தனையாளர்களாக உருவாக்குவேன். அவர்களை பேசும் திறனோடு உலாவ விடுவேன். நமக்கு அவர்கள் உதவியாக இருப்பார்கள். அனைவரும் யோசித்துப்பார்த்துச் சொல்லுங்கள். இந்த அண்டத்தைச் சுற்றுவதும், தாய் தகப்பனை சுற்றுவதும் ஒன்றுதான்.” என அனைவரையும் பார்த்து கைகூப்பி நின்றான் விக்னேஸ்வரன்.
விசாகன் பிரபஞ்சம் முழுவதும் சுற்றி முடித்து அந்த அவையை முதலாவதாக வந்து அடைந்தான். அனைவரும் மிகவும் அமைதியாக இருந்தனர். யாரும் விசாகனை ஆவலோடு உற்சாகமாக வரவேற்காமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தனர். விசாகனுக்கு அந்த அவை வேறுபட்டுத் தோன்றியது. விக்னேஷ்வரன் நடுநாயகமாக அமர வைக்கப்பட்டிருந்தான். விக்னேஷ்வரனுக்கு அந்த ஞான பார்முலா சொல்லிக்கொடுக்கப்பட்டதன் அடையாளமாக தலையைச் சுற்றிலும் ஒளிவட்டம் போன்ற அமைப்பு ஏற்பட்டிருந்தது. இது எப்படி நிகழ முடியும்? தனக்கு முன்னால் இந்த பிரபஞ்சத்தை யாராலும் சுற்றி வந்திருக்கவே முடியாது. ஏதோ தந்திரத்தால் தான் மற்றவர்களால் ஏமாற்றப்பட்டோம் என உணர்ந்து கொண்டு, யாரிடமும் எதுவும்பேசாமல் விண்கலத்தில் ஏறி அமர்ந்து அவ்விடத்தை விட்டு விரைவாக கிளம்பினான்.
3.
அதிகமான கோபத்தில் மூச்சிரைத்தது விசாகனுக்கு. கோபத்தில் கைகளை விண்கலத்தின் சுவற்றில் ஓங்கி ஓங்கிக் குத்திக்கொண்டிருந்தான். அவன் கூடவே இருக்கும் மயிலன், விசாகனுக்கு முன்பே வந்து விண்கலத்தில் ஏறி இருந்தான். அவனுக்கு விசாகனின் அத்தனை குணங்களும் அத்துப்படி. இந்த விசயம் நிச்சயமாக விசாகனுக்கு கோபத்தை வரவழைக்கும் என மயிலனுக்குத் தெரிந்திருந்தது. விசாகனுக்கு மயிலன் உயிர் தோழன் மட்டுமல்ல.. விசாகனின் தளபதியும் அவன்தான். மயிலனின் முகச்சாயலிலேயே பூமியில் கூட மயில் என்ற பறவையை உருவாக்கி அதை அத்தனை அழகுள்ள இறக்கைகளோடு படைத்திருந்தான். இன்னும் சொல்லப்போனால் விசாகன் பறந்து செல்லும் விண்கலமே மயிலன் முக சாயலில் மயில் போலவே உருவாக்கப்பட்டிருக்கும்.
“நண்பா, எழுந்திரு கோபத்தில் இருந்து என்ன பிரயோஜனம்? ஹராவும் இதற்கு சம்மதித்திருக்கிறார் எனில் அதில் ஏதாவது நன்மை இருக்கும். நீ வருந்தாதே கோபத்தின் உச்சத்தில் அனைத்துமே தவறாகத்தான் தெரியும். சிறிது காலம் அதனை ஆறப்போட்டு அவர்கள் இடத்திலிருந்து யோசித்து பார்.. உண்மையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வரும். எழுந்திரு.. பூமியை நெருங்கி விட்டோம். இந்த விண்கலத்தை எப்படி நிறுத்த வேண்டும் எனச் சொல்” என்று கூறினான் மயிலன்.
“ஏமாற்றம் எனக்குப் புதிதல்ல. நான் பிறந்தவுடனே பெற்றோரால் வளர்க்கப்படவில்லை. தாயன்பு என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. அதற்காக நான் வருத்தப்படவில்லை. எனது அப்பா இந்த ஞான பார்முலாவை அண்ணனுக்குத் தருகிறேன் என்று சொல்லியிருந்தால் நானே மனமுவந்து மகிழ்ச்சியாக தந்திருப்பேன். ஆனால், போட்டி என்று பொய் சொல்லி அனைவரும் என்னை ஏமாற்றியதுதான் தாங்கவில்லை மயிலா” என்று தலையில் கைவைத்துக்கொண்டு புலம்பும் விசாகனைப்பார்த்து, “பூமி நெருங்கி விட்டது நண்பா. இந்த விண்கலத்தை எப்படி நிறுத்த வேண்டும் என சொல்” என்று பதட்டத்தோடு கூறிய மயிலனை நோக்கிய விசாகன், “பொறுமையாக இரு மயிலா. இன்னும் நெருங்கட்டும். உயர உயரமான கோபுரங்கள் தெரிகிறதா? ஊருக்கு நடுவே பெரிய இடத்தில் விண்கல ஓடுதளங்களைப்போல பெரிய கோபுரங்களுடைய அமைப்பு தெரிகிறதா ? அதுதான் கோவில். அங்கேதான் விண்கலங்களை நிறுத்த வேண்டும் என்ற அடையாளம்தான் அந்த கோபுரங்கள். அங்கே விண்கலத்தை இறக்கி லிங்க வடிவம் போல தோற்றம்கொண்ட அமைப்பில் விண்கலத்தை பொருத்து. அப்பொழுதுதான் இந்த விண்கலத்தின் அமைப்பு திறக்கும். அந்த லிங்க அமைப்பே இந்த விண்கலத்தின் அச்சு. புரிகிறதா?”, என்றவனுக்கு தலையை ஆட்டிக்கொண்டே “புரிகிறது நண்பா. நம்மைப் போன்ற அனைத்து கிரகவாசிகளுமே இப்படித்தான் பூமியில் இறங்க வேண்டுமா?” எனக்கேட்டான் மயிலன்.
“ஆம், பூமிக்கு வரவேண்டுமெனில் கோயில்களே விண்கல இறங்குமிடம். லிங்கமே விண்கல அச்சு. அதில் பொருத்தினால்தான் விண்கலம் சுழன்று கதவு திறக்கும்” எனச் சொல்லிக்கொண்டிரும் பொழுதே, லிங்க அமைப்பில் விண்கலத்தைப் பொருத்தவும் , அது இரண்டு சுற்று வேகமாக சுழன்று கதவைத் திறந்துக்கொண்டது. இருவரும் பசுமையாக தாவரங்களால் சூழப்பட்ட பூமியை ரசித்துக்கொண்டே விண்கலத்திலிருந்து இறங்கினர்.
“இது என்ன மலை? ஏன் இதனை மேலே இந்த கோவிலை நிர்ணயித்திருக்கிறாய் விசாகா?” என்று கேள்வியுடன் நோக்கிய மயிலனைப் பார்த்து, ” மிகக்குளிரான சோமாஸ் கிரகத்திலிருந்து வந்து இந்த பூமியின் வெப்பத்தை உன்னால் தாங்க முடியவில்லை. மலைப்பகுதிகளில்தான் வெப்பம் குறைந்துக் குளிர்ச்சியாக இருக்கிறது.” என்று சொல்லிவிட்டு புன்னகைத்தான் விசாகன்.
“மேலும் இப்படி உயரமாக கோபுரங்களைக்கட்டி கோவில்களை உருவாக்கி வைத்துவிட்டோமானால் நமது விண்கலம் இறங்கும் வழித்தடமும் தெரிந்து விடும். மேலும், அந்தக்கோவில்களில் நாம் தங்கிக்கொள்ளலாம். பூமியில் தற்போது இருக்கும் நிலையில் நாம் வெட்ட வெளிகளில் தங்க முடியாது. நான் உருவாக்கி இருக்கும் உயிரினங்களின் பெயர் விலங்குகள். அவை ஆபத்தானவை. ஆக்ரோஷமானவை சமயத்தில் நமக்கே கூட அது தீங்கு விளைவித்து விடும். அதனால்தான் அந்த ஞானத்தின் பார்முலா மூலம் இந்த உயிரினங்களுக்கும் பேசும் திறன், பகுத்தறிவு முதலியவற்றைக் கொண்டுவர நினைத்தேன். இந்த விலங்குகள் நம்மைப்போன்று உள்ளவர்களை விட மிக பலசாலி. அண்ணன் விக்னேஷ்வரன் முக சாயலில் நான் உருவாக்கிய யானை எனும் பெரிய விலங்கை பழக்கப்படுத்தித்தான் இந்தக் கோவில்களை கட்டினேன் தெரியுமா? இதில் என் தாய், தந்தை, அண்ணன், ஏன் உனக்கு கூட தங்குவதற்கு அறைகள் கட்டி வைத்திருக்கிறேன். அனைத்தும் நல்லவிதமாக நடந்தால் உங்களனைவரையும் அழைத்து வந்து காண்பிக்க வேண்டும் என்றுதான் யாரையுமே நான் பூமிக்கு இதுவரை அழைத்து வரவில்லை. ஆனால், இப்படி கோபத்தால் இங்குவரும்படி உனது வருகை ஆகிவிட்டதே.” என்ற விசாகனை கட்டியணைத்துக்கொண்டான் மயிலன்.
“விசாகா, நீ எத்தனை புத்திசாலி. எத்தனை திறமைசாலி. இந்த கோவில்கள் உனது மதிநுட்பத்தையும் உனது கட்டட அமைப்பு திறமையும் உண்மையில் அனைவரையும் பாராட்ட வைக்கப்போகிறது பார். நாம் அனைவருமே அனைவரோடும் எண்ணங்களால் தொடர்பு கொள்ள முடியும் என்பது அறிந்ததுதானே! நமது சிந்தனைகளையும் கேள்விகளையும் உச்சந்தலையில் நிறுத்தி எண்ணங்களை கூர்மையாக்கி பிரபஞ்சத்தில் அவற்றை வெளிவிடுவதன் மூலம் அதே எண்ண அலை வரிசையுடைய நபரால் ஈர்க்கப்பட்டு அதற்கான பதிலை பெறுவோம் தானே! இப்பொழுது எனது சிந்தனை ஹராவால் ஈர்க்கப்படுகிறது. நான் நினைக்கிறேன் அவர்கள் அனைவரும் உன்னைத்தேடி வருகிறார்கள். ஹராவிற்கு எதுவுமே சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அவருக்கு பூமியைப்பற்றி அனைத்தும் இந்நேரம் தெரிந்திருக்கும்.” என மயிலன் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே விண்கலம் வரும் சத்தம் அருகாமையில் கேட்டது.
“விசாகா என் அருமைத் தம்பியே நீயில்லாமல் நான் மட்டும் அங்கிருந்து என்ன செய்வது? எங்கே இருக்கிறாய் விசாகா? இங்கே வந்துபார் ! உனக்காக தாமி கிரகத்திலிருந்து என்ன கொண்டு வந்திருக்கிறேன் பார்” என கூறியபடியே தொட்டில் போன்ற ஒரு அமைப்பை கைகளில் ஏந்திக்கொண்டு விக்னேஷ்வரன் முதலில் வந்தான். அண்ணனில் குரல் கேட்டும் கேட்காதது போல கோபத்தில் திரும்பி நின்று கொண்டிருந்த விசாகனின் தோள்களைத் தொட்டுத் திருப்பி நெஞ்சோடு அணைத்துக்கொண்டு அழுதாள் அந்தரி. இவர்கள் மூவரையும் அன்பின் பரவசத்தில் அணைத்துக்கொண்டார் ஹரா. இவற்றைக் கண்டதும் “ஹோவென“ கத்திக்கொண்டு ஆனந்தக் கூச்சலிட்டனர் ஹராவோடு வந்திருந்த சேவர்கள்.
விசாகனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இவர்களைக்காணவே கூடாது. தனி உலகத்தில் வாழ்ந்து விடுவோம் என எண்ணித்தான் இந்த பூமிக்கே கோபித்துக்கொண்டு வந்தான். பலத்திலும் சிறப்பிலும் ஆற்றலிலும் தன்னை விடச்சிறந்து விளங்கும் மூவரும் தன் முன் நின்று கெஞ்சும் போது உள்ளம் ஒரு புள்ளியில் இளகிற்று. இளகத்தானே வேண்டும் அதுதானே இயல்பு.
அணைத்திருந்த கைகளை விலகிவிட்டு அண்ணன் கொண்டுவந்திருந்த தொட்டிலைப் பார்த்தான் விசாகன். அவை நாமி கிரகத்தில் விக்னேஷ்வரன் உருவாக்கியிருந்த மனிதக் குழந்தைகள். அவை விசாகனைப்பார்த்து சிரித்தன.
“அண்ணா, இவைகளுக்கு சிரிக்கத் தெரியுமா?” எனக்கேட்ட விசாகனைப் பார்த்து “சிரிக்கும், சிந்திக்கும், அழும், அழவைக்கும், அன்பிருக்கும், குரூரமுமிருக்கும். இனப்பெருக்கம் செய்யும், பேராடும், பொறாமைப்படும், அடித்துக்கொண்டு சாவும். கூடவே மனித தன்மை என்ற ஒன்றும் இருக்கும். இவற்றின் மூளையின் ஆற்றல் அளப்பரியது. அவை போகப் போகத்தான் தெரியும். மேலும் ஞானத்தின் பார்முலாவை இவர்களிடம் உபதேசித்திருக்கிறேன். அதனால் மிகுந்த பகுத்தறிவோடும் வளர்வார்கள். இவர்களை உனக்கு பரிசாக நான் தருகிறேன். இவையும் இந்த பூமியில் வாழட்டும்.” என்றான் விக்னேஷ்வரன்.
“சரி அண்ணா, அனைவரும் மிகவும் பசியாக இருப்பீர்கள். நீங்கள் இந்தக் கோவிலிலுள்ள அறைகளில் தங்கிக்கொள்ளுங்கள். நானும் மயிலனும் சேவர்களும் உணவு தயாரிக்கிறோம். அனைவரும் வந்ததுதான் வந்து விட்டீர்கள். இங்கு அனைவரும் சேர்ந்து சிறிது காலம் தங்கிச்செல்லலாம். இந்த பூமி மிக அழகு. கடற்கரைகள், தாவரங்கள், பசுமையான மலைகள் என பார்த்துக்கொண்டே இருக்கலாம். இந்தக்கோவில் எல்லா வசதிகளோடும் கட்டப்பட்டது. சமைப்பதற்கு கூட இங்கே தனியிடம் உண்டு. பெரிய அறையில் தந்தையும் தாயும் தங்கிக்கொள்ளட்டும். நாம் மற்ற அறைகளில் தங்கிக்கொள்வோம். சரியா அண்ணா? நீங்கள் வேண்டுமானால் நுழைந்தவுடன் முதலில் இருக்கும் அறையை எடுத்துக்கொள்ளுங்கள். அண்ணா இந்தக் குழந்தைகள் என்ன சாப்பிடும்?” என்று வினவிய விசாகனிடம். ”இவை சற்று பெரிய வளர்ந்த குழந்தைகள் தான். சோறு குழைவாக வடித்துக்கொடுக்கலாம் தம்பி.” என்றான் விக்னேஷ்வரன். இருவர் பேசுவதையும் பார்த்துக்கொண்டிருந்த ஹராவும், அந்தரியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.
“நீங்கள் இருவருமே பேசிக்கொண்டிருந்தால் போதுமா? எங்களது ஒப்புதல் வேண்டாமா?” என்ற அந்தரியின் கைகளை பிடித்துக்கொண்டு, “அம்மா, தயவுசெய்து கொஞ்சகாலம் இங்கே இருங்கள் அம்மா. அப்பாவிடம் சொல்லுங்கள்.” என்ற மகனைப்பார்த்து சரி சரி யென இரகசியமாக சமிக்கை செய்தாள். அவளுக்கு அந்த கோவில் மிகப்பிடித்திருந்தது.
“விசாகா, சோமாஸ் கிரகத்திற்கும் பூமி கிரகத்திற்கும் கால நேரத்தில் மிகுந்த வேறுபாடு உண்டு அங்கே ஒரு நிமிடம் என்பது இங்கு ஒரு வருடம். அப்படியெனில் நான் சோமாஸ் கிரகத்தின் கணக்குப்படி இங்கு ஒரு நாள் தங்கிப் போகிறேன். சரியா? மகிழ்ச்சி தானே உனக்கு.” எனக் கேட்டு விட்டு அவருக்கு அந்தக்கோவிலில் ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றார் ஹரா.
நாட்கள் போனதே தெரியவில்லை. அனைவரும் மனிதக்குழந்தையோடு விளையாடினார்கள். அவர்களுக்கு மனிதக்குழந்தைகளை மிகவும் பிடித்திருந்தது. அக்குழந்தைகளுக்கு அனைத்து விசயங்களும் அரைகுறையாகப் புரிந்திருந்தன. இரவுகளில் தூக்கம் வராத பொழுது அந்தரி அவளது இருப்பிடம் பற்றியும் ஹராவைப் பற்றியும் விசாகன், விக்னேஷ்வரன் பற்றியும் சில கதைகளைக் கூறி அவர்களைத் தூங்க வைப்பாள். அந்த மனிதக்குழந்தைகள் அனைத்தையும் கிரகிக்கும் ஆற்றலோடு இருந்தார்கள்.
அனைவரும் சோமாஸ் கிரகத்திற்கு செல்லும் நாள் வந்தது. “மயிலா, நான் தந்தையோடு சோமாஸ் கிரகத்திற்கு சென்று விட்டு, சில வேலைகளை முடித்துவிட்டு அரைநாளில் திரும்பி விடுவேன். அதுவரை இந்த பூமியை பார்த்துக்கொள். முக்கியமாக இந்த மனிதக்குழந்தைகள் பத்திரம்.“ என்ற விசாகனையும் மற்றவர்களையும் பார்த்து கையை அசைத்து ஒப்புதல் சொன்னான் மயிலன்.
நாட்களோடின வருடங்களோடின விசாகன் திரும்பி வரவில்லை. என்னநடந்தது என மயிலனுக்குப் புரியவே இல்லை. அவன் விசாகனிடம் கற்றுக்கொண்ட அறிவால் நிறைய கோவில்களையும், லிங்க அச்சுகளையும் உருவாக்கிக்கொண்டே அந்த மனிதக் குழந்தைகளுக்கு சில அடிப்படையான விசயங்களை சொல்லிக்கொடுத்துவிட்டு விசாகனுக்காக காத்திருந்து காத்திருந்து இறுதியில் மரித்துப்போனான். ஆனால், விசாகன் திரும்பி பூமிக்கு வரவே இல்லை. அந்த மனிதக்குழந்தைகள் வளர்ந்து இனப்பெருக்கம் செய்தன. தங்களுக்குத் தெரிந்த அரைகுறை வரலாற்றை வைத்துக்கொண்டு வாழ்ந்து வந்தன.
4.
கார் கதவு திறந்து கொண்டு தலைகீழாக கீழே விழுந்து கிடக்கிறோம் என்பது புத்திக்கு உறைத்தது. எத்தனை நாழிகை இவ்வாறு கிடந்தோம். எப்படி விபத்து நிகழ்ந்தது என்று சரியாக ஞாபகத்தில் இல்லை. விபத்து நடந்திருக்கிறது ஆனால், அடியோ இரத்தமோ எதுவும் இல்லை என்பது நிம்மதியாக இருந்தது சித்தார்த்திற்கு. அடிபட்டிருந்தால் ரோகிணி மிகவும் பயந்து விடுவாள். நல்ல வேளை அடிபடவில்லை. எப்படி இந்த விபத்து நடந்தது என யோசிக்கும் பொழுது மயில் ஒன்று திடீரென சாலையைக் கடக்க முயற்சி செய்ய, அதன் மேல் கார் படாமலிக்க முயற்சித்தபொழுது விபத்து ஏற்பட்டிருக்கிறது என மூளைக்குப் புரிந்தது. அதோடு கனவு போல கண்ட காட்சிகள் அனைத்தும் நினைவுக்கு வந்தது. இது நிஜமாக நடந்ததா? தனது ஆராய்ச்சின் பலனாக நமது உள்ளுணர்வு சொன்னதா? இல்லை விபத்தினால் மூளையில் ஏற்பட்ட அதிர்வில் உண்டான காட்சியா? புரியவில்லையே என யோசித்துக்கொண்டே குனிந்தவன் சட்டையில் ஆராய்ச்சிக் கூடத்தில் நெஞ்சோடு அணைத்துக்கொண்ட ஓலைச்சுவடியில் வரையப்பட்ட வேலின் அச்சு தெரிந்தது.
புரிந்தும் புரியாமலுமாய் சில செய்திகள் அவன் மூளைக்கு கடத்தப்பட்டது. சித்தார்த் மௌனமாக காரை வீட்டை நோக்கி ஓட்டிக்கொண்டிருந்தான். வழியில் தென்பட்ட கோபுரத்தைக்கண்டதும் மனது விசாகனை நினைத்துக்கொண்டது.
*******