![](https://vasagasalai.com/wp-content/uploads/2019/04/kaviyarasu-780x405.jpg)
சொல்
உன் பெயர் என்ன ?
” சொற்கள் ”
புரியும் மொழியில் பதிலளி
தப்பிக்கலாம் !
” கபாலத்திலிருந்து வெளியேறும்
ஒளிப்பிழம்பில் மொழி இல்லை
மின்னல்கள் தெறிக்கின்றன ”
திமிராக நிற்காதே
மண்டியிடு !
” குரல்வளை தெரிகிறது
குரல் தெரிகிறதா ?”
யார் உனக்குத் தலைவன் ?
” கூட்டுக்குள் முளைக்கும் குஞ்சுகள்
சிறகு முளைத்தால் பறக்கின்றன ”
எதற்காகப் பயணம் செய்கிறாய் ?
” மலையைக் குடையும் எறும்பு
குகைப் பாதையை சமைக்கிறது ”
உன்னுடன் மொத்தம் எத்தனை பேர் ?
” இரண்டாகக் கிழித்தால் இரண்டு
நான்காக உடைத்தால் நான்கு ”
போதை தரும் வஸ்தை
எங்கே ஒளித்திருக்கிறாய் ?
” தேனெனப் பருகும் அமுதம்
சல்லி சல்லியாகப் பிளக்கிறது மூளையை”
நேரடியாகப் பேசவே மாட்டாயா ?
” மண்ணுக்குள்ளிருந்து நீர் வருகிறது
தங்கம் கூடத் தோண்டியே எடுக்கிறார்கள்”
ஏன் இப்படி
எப்போது மாறினாய் ?
” நான் பார்க்க ஆரம்பித்தேன் ”
நீ பேசும் மொழி
எங்களைச் சித்ரவதை செய்கிறது
போதும் நிறுத்து
ரத்தம் கசிகிறது.
” ஆமாம் எனக்குள்ளும் கிளிஞ்சல்கள்
ஒவ்வொரு நாளும் வெடிக்கின்றன”
உன்னை விட்டு விடுகிறோம்
ஆனால்
மீளவும் சந்திக்கும் போது
புரியும் மொழியில் பேசு !
இப்போதாவது சொல்
நீ பிறக்கும் போது வைத்த பெயர் என்ன ?
” கவிதை “.