கவிதைகள்

வே.நி. சூர்யா கவிதைகள்

வே.நி சூர்யா

தலைப்பிடப்படாதது

1
வற்புறுத்தி கொடுக்கப்படும் திருட்டுப்பரிசென
சலிப்பு உடலுக்குள் திணிக்கப்படுகிறது
காலத்தை திசைதிருப்பிய புத்தகங்கள்
படிக்கப்பட்டு படிக்கப்பட்டு சோர்ந்துபோயிருக்கின்றன
இன்னும் சோம்பிப்போகாதது
நம் மூளை மட்டும்தான்
எவருக்கும் ரகசியமாக இருக்கும்
உரிமை கிடையாது
மூக்குச்சளிபோல வெளியே வந்தேயாகவேண்டும்
அல்லது
சுக்கிலத்துளிபோல் வழிந்தேயாக வேண்டும்
ராட்டினத்தில் கடிகாரமுட்கள் பாடுகின்றன
உன் தூக்கத்தை தூக்கிக்கொண்டு ஓடு
பேருந்து போகிறது பார்,
உன் தூக்கத்தை தூக்கிக்கொண்டு ஓடு
காற்றில் பெயரில்லா நிழல்கள் நடக்கின்றன
மேலும் அவை எதிர்பாராவிதமாய்
தம் கால்களை இழந்திருக்கின்றன
ஒருவன் எனக்கு நேசிக்கத்தெரியுமென்றான்
அடுத்தநாள்
அவன் சவத்தை எறும்புகள்
இழுத்துச்சென்று கொண்டிருந்தன
சுழற்நாற்காலியிலமர்ந்தும் சன்னல்களுடேயும்
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்
எச்சாவாலும் என்னை
துக்கமடையச் செய்யமுடியாது
ஏன் என் சாவு உட்பட
மற்றொருவன் எனக்கு அழுகை
வருகிறதென்றான்
நானவனை ஆச்சரியத்தோடு கண்டேன்
முழங்காலிட்டு
எனக்கும் கற்றுக் கொடுங்களென்றேன்
அருகாமையை வெறிக்கிறது தொலைதூரம்

2
ஒரு நெடிய தவத்திற்கு பிறகு எல்லோரும்
வரமளிக்கின்றனர்
அப்பார்ட்மென்ட் எனும் கிரகம் பூமியைவிட
வேகமாக சுழல்கிறது
சரிந்து கிடந்தால் ஆம்புலனஸ்
நிமிர்ந்து நடந்தால் வீடு
அற்புதங்கள் நிகழ்ந்தாலும்
வியக்க ஒரு நாதியுமில்லை
வெங்காயங்களை மண்டைக்குள் மூட்டைக்கட்டி
வைத்திருக்கிறேன்
இன்னும் சிலரோ மண்டைக்குள் தேவாலயங்களை
மூட்டைக்கட்டி வைத்திருந்தனர்
உள்ளே யாரோ
முழங்காலிட்டு அழுதுகொண்டிருக்கிறார்
இது மூட்டைக்கட்டுதலின் நூற்றாண்டு
ஒர் உச்சரிப்பில்
வாழ்க்கை மனம்திரும்பிவிடாதா
சலிப்பிலிருந்து வியப்பிற்கு செல்ல
இருக்காதா ஒரு புஷ்பக விமானம்
அம்மாயத்தை நிகழ்த்தும்
ஒரு சொல்லை தேடினேன்
எங்குமே இல்லை யது
ஒரு சிட்டுக்குருவியென என்றேனும்
ஒருநாள் அது வரக்கூடுமென்று
சன்னல்களை திறந்து
சும்மா இருந்தேன்
இப்போதெலாம்
அதனூடே ஒரு பூச்சி வருகிறது
சிலநேரம்
அதுவும் வருவதில்லை
ஆனால் வரும்போதெல்லாம் அப்பூச்சி
பாஷையற்ற பாஷைகளில்
சிறிதுசிறிதாக உணர்த்தியது
நீ உயிரோடிருப்பதே
ஒரு மாயஜாலத்திற்கான
மந்திரம்தானென்று

3

இவ்வறைக்குள்தான்
எங்களது எண்ணங்கள் எப்போதுமே
படிக்கப்படாத புத்தகங்களென
அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்
உள்ளேயிருந்து ஒருவன்
மிகஅரிய மெனக்கெடலுடன்
வெளியே வந்து வாந்தியெடுத்தான்
நண்பா உனக்கு
பெண்பிள்ளையென கோஷித்தோம்
பக்கத்து அறையில்
பெட்ரோல் நிலையமாக மாறிவிட்டவன் சைக்கிளுக்குள்
தன்குழாயை செருகிக்கொண்டிருந்தான்
இளையராஜா
அந்த நிலாவைத்தான் கையில புடிச்சேன் எனச்சொல்ல
ரஹ்மான்
பார்க்காதே ஒருமாதிரி என்றார்
இதற்கு மத்தியில்
மொட்டைமாடி விளிம்பை கனவு காணும்
கால்களுடன் சவரம் செய்யப்படாத முகமுடைய ஒருவன்
Fare nd Lovelyஐ
தின்றுகொண்டிருப்பான்
எங்கோ
புயல் கரையை வெள்ளம் வீடுகளை
கடந்திருக்கும்
அவர்கள் இவ்வதிகாலையில்
என்னை
நம்ப நிர்பந்திக்கிறார்கள்
தம்பி, நீ சந்தோஷமாகத்தான் இருக்கிறாய்
நம்பு தம்பி என்னை நம்பமாட்டாயா
எனது சிகரெட் புகைகளுடன்
தெருக்களினூடே செல்கிறேன்
வீட்டிற்கு அல்ல
விடுதிக்கு திரும்பவேண்டும்
காதலுக்காக ஏமாற்றும் ஒருத்தி
தன் கையிலணிந்திருக்கும் தேள்கடிகாரத்தை
பார்க்கிறாள்
அது நீ ஏற்கனவே இறந்துவிட்டாய் என்கிறது
இன்னொரு சவாரிக்கென ஒரு ஆட்டோ
நரகத்திற்கு திரும்புகிறது
வாழ்க்கையற்ற வாழ்க்கையை இன்றும்
வழக்கம்போல வாழ்ந்தாகவேண்டும்

4

என் நண்பனின் காதலிக்கு
மிகவும் நன்றாக
மறக்கத்தெரியும்
அழகாக மறப்பாள்
அன்று மறந்துபோய்
என் கனவுக்கு
இரவு உடையில் வந்திருந்தாள்
காலையில்
என் நண்பனிடம் சொன்னேன்
அவன் தன் காதலியிடம்
இதுபற்றி கேட்டான்
அதற்கு அவள் சொன்னாளாம்
நிஜத்தை கூட கனவு என மறந்துபோய்
உளறும் பைத்தியகாரனோடெல்லாம்
பழக்கம் வைத்திருக்கிறாயே
நீயெல்லாம் ஒரு ஆண்தானா
என் நண்பனுக்கு
நான்காவது காதல் தோல்வி சம்பவித்தது
நாங்களதை கொண்டாடினோம்
இடையே ஒருவன் சொன்னான் அடுத்தது அவள்
எதை மறக்கப்போகிறாளென்று எனக்கு தெரியும்
அதுஎதுவென்று அவன் சொல்லும்வரை
நாங்கள் விடவேயில்லை
ஒரு சிகரெட் வட்டவட்டமாக புகைவிட
ரயில் புறப்பட்டது
நாங்கள் இழந்தவையெல்லாம்
அந்த ரயிலில்
உட்கார்ந்திருந்தது
ஒருபோதும்
திரும்பவேப் போவதில்லை அந்த ரயில்
எனது பூமி பாட்டிகளை கதைகளை அமானுஷ்யங்களை
இழந்துவருகிறது

5

ஆற்றில் குளிக்கும்போது கேள்விக்கேட்க
கற்றுத்தந்தார் அப்பா
அப்புறம்
நானாகவே திக்கித்திணறி
கேள்விகேட்க பழகினேன்
என் முதல்கேள்வி என்ன
என்பதே என் முதல்கேள்வியாகயிருந்தது
அதன்பிறகு நேரம் கிடைக்கும்போதெலாம்
பதில் தெரிந்தும்
கேள்வி கேட்பதை பழக்கமாக வளர்த்துக்கொண்டேன்
ஒருமுறை போலிஸ் ஒருவரை கேள்விகேட்டேன்
அவர் என் கேள்வியின் கன்னத்தில் அறைந்து
என் நண்பனின்
இருசக்கரவாகனத்தை பிடுங்கிக்கொண்டார்
அவன் சத்தியம் வாங்கிக்கொண்டான்
அல்லது
உன் வாயை வைத்துக்கொண்டு சும்மா இரு என்றான்
அதன்பிறகு
நான் கேள்விகேட்பதை
வெகுவாக ரகசியமாக்கிக்கொண்டேன்
நேற்று
நான் கேள்விகேட்டேயாக வேண்டிய நிர்பந்தம்
வேறுவழியின்றி அக்கேள்வியை அவரிடம் கேட்டேன்
“சார், இது உங்க பொண்ணா?”
அவர் என் சட்டையை பிடித்தார்
உலகத்திலுள்ள
எல்லோரின் சட்டையும் பிடிக்கப்பட்டது
கரும்பலகையின் நிறத்திலிருந்தது வானம்
அதிலொரு மேகம்
சிலுவையின் வடிவிலிருந்தது

6

எவருக்கும் தெரியாது கைவிடப்படல் இனிதென்பது
அவனுக்கு இன்னும் மதுவளியுங்கள்
அவனுக்கு இன்னும்..
கடைசி ஆசையை நிறைவேற்றினோம்
சர்வதேச சந்தையில் வாழ்க்கையின் மதிப்பு
சரிந்து வருகிறது
குளிர்சாதனபெட்டியில்
ஒரு அழகிய தக்காளிப்பழமென
இன்னும் சாகவில்லை எனும் நினைவு
உறைந்து கொண்டிருக்கிறது
உங்களுக்கு மட்டுமல்ல உங்களது இதயத்திற்கும்
ஹெல்மட் கட்டாயம்
முதுகெலும்புகளை மனைவிகளை ஏலத்தில் எடுக்கலாம்
நிலையங்களில்
ஒரு ரயிலென நீங்கள் ஓடவேண்டும் அல்லது
தண்டவாளத்தில் தலைவைத்து நகைக்கவேண்டும்
எவனோ சுவற்றில் எழுதியிருக்கிறான்
கேலிசெய் அல்லது கேலிக்குள்ளாகு
செய் அல்லது செத்துமடி என்பதைவிட
வலிமையான வாசகமது

7

நீ உண்மையான ஆணென்றால்
அழு பார்ப்போம்
அவருக்கு அறவே போய்விட்டது
தன்னால் துன்பமடையமுடியுமென்ற நம்பிக்கை
விடியற்காலையில்
ஒருவன் பசைகளை சுவரில் தடவிவிட்டு
தன்னை அதில் ஒட்டிக்கொள்கிறான்
என் கண்ணுக்கு
அது காணவில்லையென்ற சுவரொட்டியாக தெரிந்தது
ஒலிப்பெருக்கிகள் இந்நகரமெங்கும்
தோரணமென கட்டப்பட்டிருக்கின்றன
ஒவ்வொன்றிலும் பேசுகிறார்கள்
விதவிதமான குரல்களில்
விதவிதமான ஞாபகங்களை
எவரும் எம்மை துன்பமடையச் செய்யமுடியாதென
முனகிக்கொண்டே அதனூடாக நடக்கிறேன்
யாருக்கும் யார் பேசுவதும் கேட்கவில்லை
நான் நடக்கிறேன்
ஆழியின் முதுகுத்தண்டில்
மலைமுகட்டின் உச்சந்தலையில்
பாதாளத்தின் வயல்வெளிகளில்
நான் நடக்கிறேன்

••

மேலும் வாசிக்க

வாசகசாலை

வணக்கம், எங்கள் அனைவருக்கும் முதன் முதலில் முகநூல் வாயிலாகத்தான் இறுக்கமான, இணக்கமான நட்பு உண்டானது.இலக்கிய வாசிப்பை பொதுப்பண்பாகக் கொண்டு அமைந்த ஒரு குழுமத்தின் மூலமே இத்தகைய நட்புகள் கிட்டப்பெற்றன.காலம் சென்றுக்கொண்டே இருக்க, வெறுமனே பேச்சு, பதிவு, அரட்டை என்பதோடு நம் இலக்கிய ஆர்வம் தேங்கிப் போக வேண்டுமா ? என எங்களுக்குள் அடிக்கடி கேள்விகள் ஒவ்வொரு நண்பர்களிடமிருந்தும் வந்த வண்ணமிருந்தது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button