ஒளியும் நிழலும்
ஓவியங்களைப் பார்ப்பது எனக்கு தியானம் செய்வதற்கு சமம். தமிழில் ஓவியங்கள் குறித்து எழுதிய முக்கியமானவர்களில் எஸ்.ராமகிருஷ்ணனும் ஒருவர். சிற்பமும் ஓவியமும் தன்னை எப்படி ஒரு பார்வையாளனிடம் வெளிப்படுத்திக்கொள்ளும் என்பதை ஒருமுறை ஏஸ்.ரா அழகாகக் கூறினார். எப்படி மனிதர்கள் முதல் சந்திப்பில் நெருக்கமாவதில்லையோ அதேபோலத் தான் சிற்பங்களும் ஓவியங்களும். ஒவ்வொருமுறைப் பார்க்கும் போதும் ஓவியங்கள் புதுப்புது அர்த்தங்களைக் கொடுக்கின்றன.
ஓவியங்களை யாராவது வெறுக்க முடியுமா? ஒருபோதும் யாராலும் ஓவியங்களை வெறுக்க முடியாது ஆனால் பயந்திருக்கிறார்கள். மேற்குலக துறவிகள் ஓவியங்களையும் இசையையும் கண்டு பயந்திருக்கிறார்கள, எல்லா துறவிகளும் அல்ல சில பாரம்பரிய துறவிகள். அதாவது இவை இரண்டும் கடவுளிடம் மனிதனை ஒன்றவிடாமல் செய்துவிடுகின்றன என்று அஞ்சி தங்கள் பாரம்பரியத்தில் ஓவியங்களும் இசையும் இல்லாமல் செய்திருக்கிறார்கள். கிறிஸ்துவம் பிறந்த தொடக்கத்தில் இது பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. Iconoclasm என்றறியப்பட்ட இம்மாபெரும் பிரச்சனையில் பல்வேறு பழைய ஓவியங்களும் சிற்பங்களும் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட புரிதலில் இசையும் ஓவியமும் சிற்பமும் மனித மனங்களை கடவுளோடு ஒன்றிணைக்கும் பெரிய அதிசயங்கள் என்று புரிந்துகொண்டார்கள்.
அதையொட்டிப் பிறந்தது தான் 17வது நூற்றாண்டு தொடங்கி ஐரோப்பிய நாடுகளில் செழித்த பரோக் யுகம் (Baroque). பித்துப் பிடித்தது போல மக்கள் செல்வங்களை கலை கலாசார செயல்பாடுகளுக்கு வாரியிறைத்தார்கள். பரோக் பாணியில் அமைந்த கட்டிடங்களைப் பார்க்க வேண்டுமென்றால் மேற்குலகில் ஏதாவது ஒரு ஆப்ரா அரங்கத்துக்குள் சென்று வாருங்கள். நினைத்துப் பார்த்தாலே மெய் சிலிர்க்கிறது. சொர்க்கத்துக்குள் சென்று வந்தது போல இருக்கும். பரோக் பாணியில் அமைந்த எந்த கலை வடிவங்களும் கதை அம்சத்தை நோக்கியதாக இருக்கும். முக்கியமாக கிரேக்க இதிகாசங்களையும் பைபிள் கதைகளையும் தழுவியதாக இருக்கும். அதற்கு முன்பாகவும் இவை இரண்டையும் பொக்கிஷங்களாக பயன்படுத்தி பல்வேறு ஓவியங்களை தீட்டியிருக்கிறார்கள். அவர்களில் முக்கியமாக டாவின்சி, மைக்கலஞ்சலோ, ரஃபேல் ஆகியோரைச் சொல்லலாம். இந்த மூவரும் இத்தாலியர்கள். இத்தாலிய ஓவியர்களில் என்னை மிகவும் கவர்ந்தவர் கரவாஜியோ (முழுப்பெயர் Michelangelo Merisi da Caravaggio). இவரைப் பற்றி பிறகொருமுறை விரிவாகப் பார்க்கலாம் ஆனால் இப்போது பார்க்கவிருக்கும் ரெம்ப்ரண்ட் (Rembrandt) எனும் டச்சு ஓவியருக்கு முன்னோடி கரவாஜியோ என்பதால் ஒரேயொரு செய்தியை சொல்லலாம். கரவாஜியோ தன் ஓவியத்தில் ஒளியையும் நிழலையும் அற்புதமாக காட்சிப்படுத்தியிருப்பார். ஆனால் அதன்பிறகு ஓவியம் வரைய ஆரம்பித்த ரெம்ப்ரண்ட் ‘Master of Light and Shadow’ என்றழைக்கப்பட்டார்.
பார்வை என்பது என்னவென்று சற்று ஆழ்ந்து யோசித்தால் நாம் எப்படி ஒளியையும் நிழலையும் உள்வாங்கிக் கொள்கிறோம் என்பதே. எனவே ஓவியம் என்பதும் ஒளியும் நிழலும் தான். இவையிரண்டையும் காட்சிப்படுத்தினால் அற்புதமான ஓவியம் பிறக்கும். ரெம்ப்ரண்ட் அதில் வல்லவராக இருந்திருக்கிறார். சிலமுறை தன் ஓவியத்தில் தூரிகையின் பின்புறத்தைக் கொண்டு செதுக்கி தனக்கு வேண்டிய காட்சியை கொணர்ந்திருப்பதாக கூறுகிறார்கள். இவருடைய பல ஓவியங்கள் பைபிளை மையப்படுத்தியதாகவே இருந்தன. அதேபோல தன் சொந்த வாழ்வையும் தன் ஓவியங்களில் காட்சிப்படுத்தியிருக்கிறார். இது கலைஞர்கள் அனைவரும் செய்துப்பார்க்கும் முயற்சி என்றே நினைக்கிறேன். தன்னுடைய பல ஓவியங்களுக்கு குடும்பத்தினரையே மாதிரிகளாக பயன்படுத்தியிருக்கிறார். தாவீது அரசர் தன் அரச அலுவலர் ஒருவரின் மனைவி குளிப்பதை மறைந்திருந்துப் பார்த்து பின்னர் அவளை தன் மனைவியாக்கிக் கொள்கிறார். அவ்வலுவலரை போரில் அரசரே ஆள் வைத்து கொன்றுவிடுகிறார். தாவீது விரும்பிய அந்தப் பெண்ணின் பெயர் பெத்ஷேபா. அவள் குளிப்பதை படமாக ரெம்ப்ரண்ட் படமாக வரைந்திருக்கிறார். அதில் பெத்ஷேபாவாக இருப்பது ரெம்ப்ரண்டின் காதலி.
பாஸ்டனில் மைல்ஸ் கார்னர் (Myles Connor) என்ற நபர் ரெம்ப்ரண்டின் ஓவியத்தை திருடியதற்காக சிறையில் அடைக்கப்பட்டார். அதே போல 1990ஆம் ஆண்டு ஸ்டூவர்ட் கார்டனர் அருங்காட்சியகத்திலிருந்து பல்வேறு கலைப் பொருட்கள் களவு போகின்றன. அவைகளின் மொத்த மதிப்பு 200 மில்லியன் டாலர்கள். அதில் ரெம்ப்ரண்டின் சில ஓவியங்களும் அடங்கும். எல்லோரும் மீண்டும் மைல்ஸ் கார்னரை சந்தேகித்தார்கள் ஆனால் அவரோ சிறையில் இருந்தார். இன்று வரை அவ்வோவியங்களும் கலைப்பொருட்களும் எங்கிருக்கிறது என யாருக்கும் தெரியாது. அதில் ரெம்ப்ரண்ட் வரைந்த மிக முக்கியமான ‘கடல் சீற்றத்தை அடக்குதல்’ என்றழைக்கப்பட்ட பைபிள் சார்ந்த ஓவியமும் அடங்கும்.
ரெம்ப்ரண்ட் வரைந்த ஒரே கடல் சார் ஓவியம் இதுதான் என்கிறார்கள். இயேசு தன் சீடர்களுடன் கடலில் செல்லும் போது கடல் சீற்றம் கொள்கிறது. சீடர்கள் பதறுகிறார்கள். இயேசுவோ தூங்கிக்கொண்டு வருகிறார். பயந்த சீடர்கள் இயேசுவை எழுப்பிவிடுகிறார்கள். அந்த எழுப்பிய தருணத்தை ரெம்ப்ரண்ட் காட்சிப்படுத்தியிருக்கிறார். இவ்வோவியத்தின் நகல் இன்று உலகப் பிரபலம் அடந்துவிட்டது. இதைப் பார்க்கும் போதே சீடர்களின் பதற்றம் நமக்குள்ளும் தொற்றிக்கொள்ளும். ரெம்ப்ரண்டை அறிய நீங்கள் இந்த ஓவியத்தைப் பார்த்தால் போதும். இதில் ரெம்ப்ரண்ட் செய்திருக்கும் இன்னொரு நுணுக்கத்தை நிறையப் பேர் தவறவிட்டுவிடுவார்கள். ஓவியத்தில் இருக்கும் மனிதர்கள் பதற்றத்துடன் இருப்பார்கள். யாரும் பார்வையாளர்களை பார்க்கமாட்டார்கள் ஆனால் ஒரேயொரு முகம் மட்டும் ஓவியத்தை ரசிக்கும் நம்மை உற்று நோக்கிக்கொண்டிருக்கும். அதுவேறு யாருடைய முகமும் அல்ல ரெம்ப்ரண்டின் முகம் தான். யார்யாரெல்லாம் தன் ஓவியத்தைப் பார்க்கிறார்கள் என்பதை ஆர்வமாக ஓவியத்தில் வரும் சிறு கதாப்பாத்திரமாக பார்த்துக்கொண்டேயிருக்கிறார்.
பாஸ்டனில் நடந்தேறிய திருட்டை மையப்படுத்தி This is a Robbery என்ற ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. இவ்வளவு சுவாரசியமான ஆவணப்படத்தை நான் பார்த்ததேயில்லை. தவறாமல் பார்த்துவிடுங்கள். உலகமெங்கும் இப்படியான ஓவியங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. பார்வையாளர்கள் இல்லையென்றால் ஓவியம் தன் அர்த்தத்தை இழந்துவிடுகிறது. காலம் கடந்து கலைஞர்கள் தங்கள் கலை வடிவத்துடன் அடையாளப்படுத்தப்படுவதும் அவைகளின் மதிப்பு கட்டுக்கடங்காமல் உயர்ந்திருப்பதைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.
(தொடரும்…)