இணைய இதழ் 108சிறுகதைகள்

யாரவன் – ச.ஆனந்தகுமார்

சிறுகதை | வாசகசாலை

இப்படி நடக்குமென கனவிலும் நினைத்ததில்லை. அதெப்படி இவ்வளவு சுவாதீனமாக எந்த பதட்டமும் இன்றி ஒருவன் இப்படி செய்து விட முடியும்? அவனுக்கு இந்தப் படம் முதலிலேயே பரிச்சயப்பட்டிருக்க வேண்டும். சரியாக படத்தின் கிளைமாக்ஸ்கிற்கு ஐந்து நிமிடம் முன்பு மிக  சாதாரணமாக அது நடந்தது.

கார்னர் சீட்டாக இருந்ததால் அவனுக்கு மிகவும் வசதியாக போயிற்று. கடைக்கு போய் தேநீர் ஆர்டர் செய்வது மாதிரி..பேட்ஸ்மேன் காத்திருந்து வருகிற பந்தை பெவிலியனுக்கு அனுப்பவது போல.. என் முகம் தொட்டு திருப்பி உதட்டோடு உதட்டை அழுத்தமாய் நிதானமாக பொருத்தி விட்டு காதில் எதோ ரகசியமாக சொல்லிவிட்டு எந்த பதட்டமுமின்றி எழுந்து போய் விட்டான்.

மொத்த உடம்பும் அப்படியே கூசிப்போனது. உடம்பு முழுக்க இடைவெளிகள் இல்லாமல் மண் புழுக்கள் ஊர்கிற மாதிரி இருந்தது. தியேட்டரே தட்டாமாலை சுற்றியது. கத்தி கூப்பாடு போட்டு எல்லோரையும் எழுப்பி பிடிக்கச் சொல்ல வேண்டும்

எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவனை அவனைப்…. பிடித்து மனசும் திசுக்களும் பரபரக்கிறது. ஆனால், அதிர்ச்சியில் நாக்கு அப்படியே மேலண்ணத்தில் ஒட்டி கொண்டு விட்டது. நடந்தது கனவா என்று என்னை நானே வேறு கிள்ளிப்பார்த்து கொண்டேன். நிஜம்தான்.. வலிக்கிறது.

சிட்டி என்ன அவ்வளவு கெட்டு கிடக்கிறதா.. ஒன்றும் புரியவில்லை. எப்போது வந்தான். இடைவேளைக்கு முன்பு அவனைப் பார்த்த மாதிரி நினைவில்லை. அதெப்படி சரியாக வந்து என் பக்கத்தில் அமர்ந்தான்? எங்கே என்னை பார்த்திருப்பான்? எத்தனை நாள் என்னை தொடர்கிறான்?

மிகச்சமீபத்தில்தான் இந்த பெருநகருக்கு வந்திருக்கிறேன். தெரிந்தவர்கள் மிகக் குறைவு. ஆனால், இதை அப்படியே விட்டு விடவும் மனசில்லை. குழம்பிக் கொண்டிருக்கும்போதே படம் முடிந்து எல்லோரும் எழுந்து விட்டார்கள். வெளியே வந்தோம்

“எதாவது சாப்பிட்டுட்டு ரூமுக்கு கெளம்பலாமா” என்றாள் கௌசி.

என் கல்லுரி தோழி. இவள் இருக்கிற தைரியத்தில்தான் இந்த ஊருக்கே நான் வந்தேன்.

“ம்” என்றேன் சுரத்தேயில்லாமல்

“என்னடி படம் பிடிக்கலையா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லடி.. லேசா தலை வலிக்குது”

“என்னடி இடைவேளைல கூட நல்லாத்தான இருந்த.. சரி வா. சூடா ஒரு கப் காபி சாப்பிடலாம். கொஞ்சம் பெட்டரா பீல் பண்ணுவ”

அவளே ஆர்டர் பண்ணி விட்டு என்னருகில் வந்தமர்ந்தாள். சொல்லி விடலாமா.. யாரிடமாவது சொல்லி யோசனை கேட்டால் தேவலை என்று தோன்றியது. பொதுவாக ஊரில் இருக்கும் அம்மாவிடம்தான் எல்லாமே பகிர்ந்து கொள்ளுவேன்.

சிறு வயதில் இருந்தே எனக்கு அவள்தான் முதல் பிரண்ட்.. எல்லா பிரச்சனைகளுக்கும் எதாவது ஒரு தீர்வு வைத்திருப்பாள். ஆனால், இதை அவளிடம் சொல்ல முடியாது. நிச்சயம் பயந்து விடுவாள். அதுவும் ஊரை விட்டு வெகு தூரம் தள்ளி இருக்கிறேன். சொல்ல முடியாது.. உடனே கிளம்பி வந்து விடு என்பாள்.

இப்போதுதான் கொஞ்சம் அக்கடா என்று உட்கார்த்து இருக்கிறாள். அப்பா போனதிற்குப் பிறகு துணிகள் தைத்துதான் என்னைப் படிக்க வைத்தாள். அதுவம் தீபாவளி பொங்கல் சமயங்களில் எல்லாம் ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரம் உழைத்து ஓடாகத் தேய்ந்து போவாள்.

இப்போது நான் வேலைக்கு வந்த பிறகுதான் அவளை திட்டி ஓய்வடுக்க சொல்லி இருக்கிறேன்.

“என்னடி யோசனை பலமா இருக்கு..?” என்றாள் கௌசி

“அ…அது.. வந்து.. “ தயங்கி தயங்கி விஷயத்தைச் சொன்னேன்.

“வாட்.. உண்மையாவா.. நம்பவே முடியலடி.. கனவு கினவு ஏதும் இல்லியே” என்றவள் என் முறைப்பை பார்த்தவுடன், “சரி சரி.. இவ்வளவு தைரியமா ஒருத்தனுக்கு இருக்கும்.. ராஸ்கல். உடனே கத்தி கூப்பாடு போட்ருக்க வேண்டியதுதான.. அவன அங்கேயே உண்டு இல்லன்னு பண்ணியிருக்கலாம்”

“எனக்கு அதிர்சியில ஒண்ணும் புரியலடி.. வாய திறந்து கத்தணும்னு நெனைச்சேன். ஆனா, முடியல..கொஞ்சம் பயமா இருக்குடி”

“ச்சே..ச் சே இதுக்கெல்லாம் யாராவது பயப்படுவாங்களா.. பாத்துக்கலாம்”

“அதுக்கில்லடி ஒருவேளை அவன் என்னை பாலோ பண்ணுவானோன்னு..”

 இப்போது கொஞ்சம் சீரியாசகவே யோசிக்க ஆரம்பித்தவள்..“சரி ஒரு நிமிஷம் இரு எங்க அப்பாவோட திக் ப்ரெண்ட் இங்க கமிஷ்னரா இருக்கார். அவர்கிட்ட பேசி பாக்கலாம்”

“போலீஸ் கீலீஸ்னு போனா எதுவும் பெரிய பிரச்சனை ஆகாதா?” என்றேன்.

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. காதும் காதும் வெச்ச மாதிரி அங்கிள் டீல் பண்ணுவார்” என்று சொல்லி விட்டு உடனே ஒரு அப்பாய்ண்ட்மெண்டும் கையோடு வாங்கி விட்டாள்.

 கமிஷ்னர் ஆபீஸ். ஒரு பத்து நிமிட காத்திருப்புக்கு பின் உள்ளே கூப்பிட்டார்கள். பொதுவான நலம் விசாரிப்பிற்கு பின், “சொல்லும்மா என்ன பிரச்சனை..“ என்றார். சொன்ன அனைத்தையும் தடை செய்யாமல் கேட்டு முடித்தவர், “நீ சமீபத்தில யாரோடயாவது சண்டை போட்டியா.. இல்ல யாரைவது திட்னியா.. அபீசியலா கூட இருக்கலாம்.. நல்லா யோசிச்சு சொல்லு..சின்ன தகராறு.. இல்ல டிப்பரண்ஸ் ஆப் ஒபினியன்.. ஒரு வேளை யாராவது ப்ரொபோஸ் பண்ணி இருக்கலாம்”

“அப்படி எதுவும் இல்ல சார்”

“அவசரம் இல்லம்மா.. டேக் யுவர் டைம்.. நல்லா யோசி. ஒரு சின்ன விஷயம் கூட அவனை கண்டுபிடிக்க ஹெல்ப் பண்ணும்.. இப்ப உடனே நடந்துருக்கணும் இல்ல.. கடைசி ஆறு மாசம் இல்ல ஒரு வருசத்துக்கு முன்னாடி கூட இருக்கலாம்”

“இல்ல சார்.. யாரோடயும் எந்த தகராறும் இல்ல.. காலேஜ் படிக்கிறப்ப சிலர் டிஸ்டர்ப் பண்ணியிருக்காங்க.. பட், இப்ப அவங்க யாருமே டச்ல இல்லை”

“சரி, அவன் எப்படி இருந்தான்.. ஐ மீன்.. என்ன உயரம்.. எதாவது அடையாளம்..?”

“சாரி சார்.. இருட்டுல ஒண்ணும் தெரியல” உதட்டைப் பிதுக்கினேன். ஏறக்குறைய அழுது விடுவேன் போலிருந்தது.

“அது பரவாயில்லம்மா.. அவன் எதோ உங்ககிட்ட ரகசியமா சொன்னான் இல்ல.. அது என்னன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க”

கண்கள் மூடி நினைவுகளை ரீவைண்ட் செய்து பார்த்தேன். ‘என்ன சொன்னான்..என்ன சொன்னான்.?’.

“சார் ..அவன் கையி்ல ஹெல்மெட் இருந்தது… தொப்பி.. சரி, நாளைக்கு பாக்கலாம்னு சொன்னான்னு நினைக்கிறன். பட் சரியா தெரியல”

“சரி.. அப்ப தியேட்டர் பார்கிங்க்ல சிசிடிவி புட்டேஜ் கிடைக்குதான்னு பார்க்கலாம். நாளைக்கு எடுத்து வெக்க சொல்றேன். அப்புறம் உன்னோட மொபைலை அடுத்த ஒரு வாரத்துக்கு நாங்க டேப் பண்றோம். நிச்சயமா அவன் உன்ன திரும்பவும் கூப்பிடுவான். கைல மாட்டட்டும்.. அப்புறம் இருக்கு அவனுக்கு..” என்றார் ஆத்திரத்துடன்.

“ரொம்ப தேங்க்ஸ் அங்கிள். அப்ப நாங்க கிளம்பறோம்.. “ என்று எழுந்து கொண்டாள் கௌசி.

“ஒரு நிமிஷம் உங்க டிக்கெட் நம்பர் கொடுங்க.. உங்க பக்கத்துல உட்கார்ந்த கார்னர் சீட்தான.. ஒரு வேளை ஆன்லைன்ல புக் பண்ணி இருக்கான்னு செக் பண்ணிரலாம்.. பயப்படாதம்மா” என்றார் ஆறுதலாய்

மரியாதையுடன் கை கூப்பி விட்டு வெளியே வந்தேன். ரூமுக்கு வந்ததும் பேசாமல் படுத்துக்கொண்டு விட்டேன். இன்னொரு ரும் மேட் ராஜி அவள் அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லை என்று ஊருக்கு போய் இருக்கிறாள். அதனால் ரூமே அமைதியாக இருந்தது.

அவள் இருந்திருந்தால் நிச்சயமாக கலகலப்புடன் எதாவாது பேசி கொண்டிருப்பாள். இந்த பிரச்சனைகள் எல்லாம் ஒருவேளை மறந்து போய் இருக்க கூடும். அன்று கௌசியும் என்னை பெரிதாகத் தொந்தரவு செய்யவில்லை.

சிசிடிவி புட்டேஜில் எவ்வளவு முயன்றும் அவனைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை. ஒரு மூன்று நாட்கள் எந்த தடங்கலும் இல்லாமல் போனது.நான்காவது நாள் மதியம் கௌசியிடம் இருந்து போன்.

கமிஷ்னர் அலுவலகத்திற்கு உடனே கிளம்பி வரச்சொன்னாள். அவசரம் என்று சொன்னதால் ஒரு ஆட்டோ பிடித்து அடுத்த அரை மணி நேரத்தில் அங்கிருந்தேன். கௌசி எனக்கு முன்பே வந்து விட்டிருந்தாள்.

“வாம்மா உட்காரு.” என்ற கமிஷனர், “ஆளு இவன்தான்” என்று அங்கிருந்த ஒருவனை காட்டினார். ஓடிசலாக இருந்த அவன், “சாரி சிஸ்டர்” என்றான். “ஆனா, கௌசிதான் உன்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு நடவடிக்கை எடுக்கலாம்னு சொல்றா..”

“எங்கிட்ட கேட்டுட்டா.. “ என்ற நான் “இதுல கேக்க என்ன இருக்கு சார்.. இவனையெல்லாம் வச்சு செய்யனும் சார். இந்த நாளை வாழ்கையில இவன் மறக்கவே கூடாது” என்றேன் கோபத்துடன்.

“டிக்கெட் புக் பண்ண மெயில் ஐடிய கண்டு பிடிச்சிட்டோம்.. ஆனா, இதுல என்ன ஆச்சர்யம்ன்னா அந்த மூணு சீட்டுக்களையும் ஒருத்தரேதான் புக் பண்ணி இருக்காங்க”

“என்ன சார் சொல்றிங்க.. அப்படின்னா..” கோபமாய் கௌசியை திரும்பிப் பார்த்தேன்

அதற்குள் அவசர அவரசரமாக உள்ளே வந்த ராஜி, “தகவல் கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்டி” என்று கௌசியின் கையைப் பிடித்துக் கொண்டாள்.

 கமிஷனர் பக்கம் திரும்பியவள், “சார்.. ப்ளீஸ் அவர ஒண்ணும் பண்ணிடாதீங்க.. உங்கள கை எடுத்து கும்பிட்றேன்.. இவங்ககிட்ட நான் பேசிக்கறேன்” என்றாள்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை.. “யாராவது இங்க என்ன நடக்குதுன்னு சொல்றிங்களா..” என்றேன்.

தொண்டையை செருமிக்கொண்ட கமிஷனர், “நாங்க புக்கிங் மெயில் ஐடிய ட்ராக் பண்ணி பாத்தப்பதான் தெரிஞ்சது. உங்க ப்ரெண்ட் ராஜிதான் இந்த மூணு டிக்கெட்டும் புக் பண்ணி இருக்கா..இது முதல் தடவை இல்ல. முன்னாடியே நிறைய டைம் இந்த மாதிரி நடந்திருக்கு”

“ஆனா, அன்னிக்கு பர்சனல் எமர்ஜென்சின்னு ஊருக்கு போனதால அவளுக்கு எடுத்த டிக்கெட்ல நீ போய் உட்கார்ந்திருக்க”

“அப்பா ஐசியுல இருக்கிற டென்ஷன்ல தியேட்டருக்கு வரமுடியலன்னு அவ லவ்வருக்கு தகவல் சொல்லாததுதான் இத்தனை குழப்பத்துக்கும் காரணம். இப்ப சொல்லும்மா என்ன பண்ணலாம். என்னை பொறுத்த வரைக்கும் இது தப்புதான்.. நீ சொல்ற மாதிரியே நடவடிக்கை எடுத்தரலாம்” என்றார்.

“எங்க அப்பாகிட்ட பேசிட்டண்டி.. அவரு கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டார்.. இந்த ஒரு தடவை மன்னிச்சு விட்ருடி” என்றாள் ராஜி என்னை பார்த்துப் பாவமாக.

இது எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்து என்று புரிந்தவுடன் மனசு லேசானது.

“ஒரு நல்ல மௌத் பிரெஷ்னர் வேணும்டி வாய் கொப்பளிக்க ” என்றேன் புன்னகையுடன்.

vidaniru@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button