
இயல்பு நிலைக்கு திரும்புதலே மனிதர்களின் ஆகப் பெரும் எதிர்பார்ப்பு. இயல்பாக இருத்தலே வாசிப்பிற்கும் எழுதுவதற்குமான காலம். மழையை ரசிக்கும் மனம், தொடர்ந்து பெய்யும் மழையை ரசிப்பதில்லை. வெயிலை மனம் தேடத் தொடங்கிவிடும். சிலருக்குக் கவிதையே மழையாகவும் பனியாகவும் வெய்யிலாகவும் இருந்து கொண்டிருக்கிறது.
‘சித்து’ எனும் முதல் தொகுப்பில் இறகொன்றில் காதைக் குடையும் போது காற்றின் பெருங்குரலைக் கண்டடைந்து கொள்ளும் ஆசை, இக்கவிதை மூலம் பறக்கத் தொடங்கி விடுகிறார்.
‘ஒரு எளிய கோடு வளைந்து
உருப்பெற்றது ஒரு முட்டை
சட்டென்று கோட்டை அழித்துவிட்டு
அதிலிருந்து பறந்துசெல்கிறது
முன்னெப்போதும் பறந்திராத
ஒரு பறவை.’
காற்றை உணர்வதும், காற்றில் மிதக்கும் உயிரியாக உருமாற்றம் கொள்ளச் செய்தலும் கவிதைக்கான மொழியை அடையத் தொடங்கியதன் அடையாளமாகி விடுகின்றன. ஆசையின் முதல் தொகுப்பான ‘சித்து’வில் அதற்கான தடங்களைக் காண முடிகிறது.
பறவைகள் இவ்வுலகை அழகுபடுத்திக் கொண்டிருக்கின்றன. அதன் இறக்கைகள் அழகோவியம். அதன் குரல் ஸ்வரங்களுக்கு அப்பாற்பட்டவை. நம் வாழ்வில் நிறைய அத்தியாயங்கள் அவற்றுக்கானவை. வளர்ப்புப் பறவை தொடங்கி, வான் மிதக்கும் பறவைகள் வரை நம்மைக் கவர்ந்திழுத்தபடியே இருக்கும். வசீகரம் மிக்க பறவை கொண்டலாத்தி. அதற்கு நியாயம் செய்யும் வகையில் ஆசையின் ‘கொண்டலாத்தி’ தொகுப்பைக் கண்கவர வடிவமைத்துள்ளனர் க்ரியா பதிப்பகத்தினர். ஆசை, பறவைகளின் வாழ்வியலை நெருக்கமாகப் பார்த்துள்ளதை வெளிப்படுத்துவதாக உள்ளது இத்தொகுப்பு. வானத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க ஏதேனும் ஒரு பறவையோ, பறவைக் கூட்டமோ கடந்து சென்று நமை மகிழ்விக்கும். ஏதுமற்ற நாளில் மேகங்கள் பறவைக் கூட்டமாகி மிதந்து சென்று நமை ஏமாற்றம் கொள்ளாதிருக்கச் செய்யும். பறவைகள் நம்மை மகிழ்விக்கும் தேவதைகள்.
கொண்டலாத்தியில் எனை மிஞ்சிட முடியாது உங்களின் எழுத்து என கரிச்சான், தேன்சிட்டு, மைனா, தவிட்டுக்குருவி, தையல் சிட்டு போன்ற பறவைகள் நம்மைப் பார்ப்பதாகவே படுகிறது.
கொக்கை ஓரேர் உழவனாக்கி இருப்பது, காற்றைத் தன்னொலியாக்குவதோடு நம் ஒலியாக்கிச் செல்வதைக் காட்சிபடுத்தியிருப்பதும் ரசிக்கத்தக்கதாக இருந்தது.
‘கொத்திக் கொத்தி எடுத்தாள் காற்றிலிருந்து/ ஒவ்வொரு ஒலியாய்’ எனும் ‘மழைக்கொத்தி’ கவிதை மனம் கொத்திச் செல்கிறது.
வலியதின், பெரியதின் இடம்
கீழே இருக்கிறது;
மெலியதின், மிருதுவின் இடம்
மேலே இருக்கிறது.
– தாவோ தே ஜிங் குறிப்போடு ஆரம்பிக்கும் ‘சிறியதின் இடம்’ கவிதையில் நமக்கான இடத்தையும் தேடச் செய்திடுகிறார் ஆசை.
கிளி
கொத்தும் பழத்தையும் கொடுக்குமென் கரத்தையும்
சித்தம் மயங்கிச் சரியும்- முத்தமிடக்
குனிகையில் எச்சமிடும் கையில் மகிழ்ந்து
பனிபோல் குளிரும் மனது.
கிளிகள் மீனாட்சியின் தோள் அமர்ந்து வணங்குவோரை ஆசிர்வதிப்பவை மட்டுமல்ல, பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் நம்மை பச்சையாக்கும் அற்புதம் மிக்கவை.
கொண்டலாத்தி நம்மைப் பறவையாக்கும் வனம்.
‘கொண்டலத்தி‘ தொகுப்பிற்குப் பின் நீண்ட காத்திருப்பில் தன்னுள் இருந்த காளியை கண்டடைந்து களமாடி இருக்கிறார் ‘அண்டங்காளி‘ தொகுப்பில்.
“இந்தக் கவிதைகளை எழுதிய குறுகிய காலத்தில் தான் கடந்த 20 ஆண்டுகளில் நான் மிகவும் பரவசமாக இருந்தேன். அதீத விழிப்பு நிலையை உணர முடிந்தது. எல்லா உணர்வுகளும் அவற்றின் உச்ச நிலையில் என்னிடமிருந்து வெளிப்பட்டன” என்று ஆசை முன்னுரையில் கூறியிருப்பதின் உண்மையைப் பிரதிபலிக்கின்றன கவிதைகள். தன்னைத் தானே உணர்ந்து கொள்ளச் செய்யும் தன்மை கவிதைகளுக்கு உண்டு.
‘யாதுமாகி நின்றாய் காளி- எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மை யெல்லாம் காளி! – தெய்வ லீலை யன்றோ’ என்று நம் முன்னோடி பாரதி கொண்டாடிய காளியை, ஆசை அண்டங்காளியாக்கியுள்ளார். நடனக்காளி, இருட்காளி, கொடுங்காளி, பேயிருட்காளி, பேய்க்காளி என காளிக்குப் பல்வேறு பிறப்புகளை கொடுத்துள்ளார். காளி, தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம் எனும் நிலையை தொகுப்பில் அடையச் செய்துள்ளார். மொத்த உலகையும் தன் திரட்சியான முலைக்குள் பாலாக்கிப் பாதுகாப்பதாகப் பரிணமிக்கச் செய்துள்ளார்.
“இருமுனை முடிவின்மையின்
நடுவெளி நர்த்தனம் நீ
தொடுஊழி தரையிறக்கும்
தத்தளிப்பு நீ
கடல்புரியும்
தாண்டவத்தின் தெறிப்பும் நீ
எரிஜோதி இடைபறக்கும்
கொடும் பறவை நீ
அனலுமிலும் கனல் மயக்கும்
பேய்ச்சிரிப்பு நீ
நாத்திகனின் கனவில் வரும்
நடனக்காளி நீ.”
மென்மேடுடைய யோனியுள் மீண்டும் உட்சென்று கருவறை இருட்டின் கதகதப்பில் உறங்கச் செய்யும் உன்னதம் கவிதைக்கு உண்டு. ‘யாதுமாகி நின்ற காளி’ போல் எதுவுமாகி நிற்கச் செய்கின்றன காளியைக் கவிதைகள்.
சுண்டக் காய்ச்சுதல், சொற்சிக்கனம் போன்ற தன்மையை இத்தொகுப்பில் காண முடியாது. கொஞ்சமாக தாராளப்படுத்தியுள்ளார். கவிதைகளின் ஓசை லயத்திற்கு அதன் தேவையைக் கவிதைகள் ஏற்கின்றன. இப்படியான மரபின் தொடர்ச்சியை நினைவூட்டும் தொகுப்பும் அவசியமே.
நமக்குப் பிடித்தவர்களோடு நாம் ஆடும் ஆட்டத்தில் ஒருவித லயிப்பு உருக்கொள்ளும். கவிக்கும் காளிக்குமான ஆட்டத்தில் எழும் ஓசை ரசிக்கத்தக்கதாக உள்ளது.
பேயவள், தாயவள், மாயவள், தூயவள், தீயவள் என காளிக்குப் பல அவதாரங்களைக் கொடுத்துக் களமாட வைக்கிறார் ஆசை.
“உலகம் அழிப்பேன் நான்
உன்மத்தம் திறப்பேன் நான்
ஓங்கிய கதவடைத்து
ஒழிவுநிலை கொள்வேன் நான்
பாதிப் பிறப்பைச் சுமந்து
மீதிப் பிறப்பைத் தேடுவேன் நான்
உடலுக்குள்ளே நீச்சலடித்து
ஒதுங்கியேறிச் செல்வேன் நான்
புள்ளியதைத் தாண்டிச் சென்று
புள்ளினமாய் வருவேன் நான்.”
தொகுப்பில் காளியைத் தெய்வமாக மட்டும் பார்க்கவில்லை ஆசை. ஏமாற்றப்பட்ட, தன் வலியை வெளிச் சொல்ல இயலாத பெண்களின் மனக் குமுறலுக்கு உருவம் தந்தால் அது காளியாக இருக்கும் என்பதை உணர்த்தியிருக்கிறார் ஆசை.
“பத்ரகாளி
படமெடுத்தாடும் தீலி
மிதித்தாடி
நீ சிதைத்தழித்துச்
சென்றதில்
மிச்சமுள்ள
சூனியம்தான் இது
என்ற ஏளனமா உனக்கு
மிஞ்சியது
சூனியம்தான்
ஆனால்
கருக்கொண்ட சூனியம்
அதில் உருக்கொண்டு
மீண்டும் முளைத்து
உன்மீது குதித்தாடியுனை
சிதைத்தழிக்கும்
நீதந்த
என் கவி.”
காளியைச் சவாலுக்கு இழுக்கும் இக்கவிதையில் படைப்பாளி தன் கவிமீது வைத்துள்ள நம்பிக்கையை நமக்கான நம்பிக்கையாகவும் கொள்ளச் செய்கிறது அண்டங்காளி.
*
‘இந்த வெப்பம் உடலின் குரல்… நீ என் வெப்பமாகும்போது/ நான் வெப்பத்தின்/ குரலாவேன்’ எனத் தொடங்கும் ‘குவாண்டம் செல்ஃபி’யின் கவிதைகள் உடலையும், அதில் உருவாகும் இசையையும் கொண்டாடச் செய்கின்றன.
தன்னை ரசித்து, தன் உடலைக் கொண்டாடுபவர்கள், தனக்கானவர்களையும் கொண்டாடும் இயல்புடையவர்களாகி, காமத்தில் உருக்கொள்ளும் அதிருப்தியைக் கடந்து களிப்படைபவர்களாக இருப்பார்கள். தொகுப்பில் இருக்கும் கவிதைகளில் அதற்கான சன்னதங்களைக் காண முடிகிறது.
உடலின் எல்லையை அறியத் துடிக்கும் மனம், மரணத்தை உடலுக்கு எதிரான கலகமாக பார்க்கப்படுவது வாழ்வு குறித்த புரிதலின் முதிர்வு. ‘உடலின் எல்லை எதுவரை’ எனத் தொடங்கும் கவிதையில் இதனை நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளார்.
அம்மா என்பவளைத் தியாகத்தின் உருவாக்கி என்றைக்கும் உழைத்துக் கொண்டே இருக்கும் இயந்திரமாக வைத்திருப்பதில் இருக்கும் கயமையை நம்மிடமிருந்து அகற்றி, அவர்களுக்கும் உணர்ச்சிகள் உண்டென்பதை உணர்ந்து, அவர்களின் தனிப்பட்ட விருப்பங்களையும் பொருட்படுத்த வேண்டிய அவசியத்தை, அம்மாவின் மீது நம்மிடம் இருக்கும் உண்மையான பிரியம் எது என்பதை,
“நான் இருக்கிறேன் என்று
பார்க்காதே
அம்மா
சரசமாடு
உன் காதலனுடன்
தயக்கமேதுமின்றி
இடுப்பில்
எனைச் சுமந்தபடி.
……
……..
காதல் செய்
காதல் செய்
அப்பா தவிர்த்த
காதல் செய்
அப்போதுதான்
நீ அழகு.”
எனும் நீண்ட கவிதையில் ஆசை உணர்த்துகிறார்.
காதல் எனும் உணர்வு எதையும் தனதாக்கிக்கொள்ளும். சாத்தியமில்லாதவற்றைச் சாத்தியப்படுத்தும்.
“… உன் முலைக்காம்புகளின்
வழியே
இந்த உலகத்தைப் பார்ப்பதற்குப்
பெயரும்
காதல்தான்.”
என முடிவுறும் கவிதையில் காதலின் தகிப்பை உணர முடிகிறது.
பெண்களை நேசித்தல் என்பது அவர்களை உணர்ந்து கொள்வதிலிருந்து தொடங்க வேண்டும். நிலம் விழும் மழை நீர் திரண்டோடி, வேர்களைக் கண்டடைந்து, மரங்களுடன் கலப்பதை ஒத்ததாக இருக்க வேண்டும் அவர்களை உணர்ந்து கொள்ளுதல். மகிழ்வில் பங்கெடுக்கும் ஆண், வலியில் பங்கெடுக்காது, அது அவர்களின் பிரச்சினை, நாம் என்ன செய்வது எனத் தத்துவம் பேசிக் கடப்பதே அதிகம். மாதவிடாய் என்பது மாதச் சுழற்சி. உள்ளும், புறமும் எரிச்சல் மிக்க நாட்கள் அவை. ஆண் கூடுதல் நேசிப்பைச் செலுத்த வேண்டிய நாட்கள் அவை. புரிந்தவர்கள் ஆசையின் இக் கவிதையை கொண்டாடச் செய்வார்கள்:
‘உன் மாதவிடாய் வலியைத்
தன்மேல் பூசிக்கொள்ளத்
தெரியவில்லை என்றால்
இக்கவிதை உயிரற்றது
என்று அர்த்தம்’
எனத் தொடங்கும் கவிதை நாம் எத்தகையானவர்களாக இருக்கிறோம் என்பதைக் காட்டும் கண்ணாடியாக இருக்கிறது.
காதலின், காமத்தின் தீவிரத் தன்மைகளைக் காட்சிபடுத்தும் ‘குவாண்டம் செல்ஃபி’ தொகுப்பு நம்மை நாம் ஆராதித்து வாழ்ந்து பார்க்கச் செய்யும்.
*
நூல்களின் விவரங்கள்:
1.சித்து
க்ரியா வெளியீடு
ஆண்டு: 2006
பக்கங்கள்: 116
விலை: ரூ.75
(தற்போது அச்சில் இல்லை)
2.கொண்டலாத்தி
(முழுக்கவும் பறவைகளைப் பற்றிய,
வண்ணப் படங்களுடன் கூடிய
கவிதைத் தொகுப்பு)
க்ரியா வெளியீடு
ஆண்டு: 2010
பக்கங்கள்: 64
விலை: ரூ.180
தொடர்புக்கு: 7299905950
3.அண்டங்காளி
டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு
ஆண்டு: 2021
பக்கங்கள்: 88
4.குவாண்டம் செல்ஃபி
டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீசு
ஆண்டு: 2021
பக்கங்கள்: 152
மேற்கண்ட இரண்டு நூல்களுக்கும் தொடர்புக்கு: 8754507070