
வாழ்தலும் புரிதலும்
கண்ணிற்குத் தெரியாத உயிர்
காற்றிற்கு உண்டு
வலிமையும் திறமையும்
கைப்பேசி அறிவால்
வாழ்வின் பயம் போகிறது
பயமில்லா மெளனத்தின் துடிப்பில்
பசியின் சுய நலம்
நியாயம் புரிகிறது
சமரசம் சமத்துவம்
சேவையின் தோப்பில்
மரம் வளர்கிறது
காய்த்து உதிர்ந்து
விறகாக பூவாக
இலையாக கனியாக
சாம்பலாக உரமாக
வாழ்தலின் உதவுதல்
தரையில் பாயும் நீர் பள்ளம்
மரம் தன்னை
காட்டிக்கொள்வதேயில்லை
மரமாக
வாழ்தலும்
தன்னைப் புரிதலும்
நம்பிக்கையும்
இயற்கையின் கொடை
கடவுள் என்பது
கடந்து வந்த மனிதம்
கண்ணிற்குத் தெரியாத
உயிர்க்குத் தெரியும்
என்னைப் பற்றி.
*** *** ***
காலத்தின் காட்சி
உலகின் பதற்றம்
என் கனவில் தென்பட்டது
ஆகப்பெரும் சக்தியொன்றாய்
வலுவிலக்காத சூரியன்
வெறுமையின்
விளிம்பு நிலைப் பரவசமொன்று
தவவெளித் திருவிழாவை நடத்தியது
காலத்தின் வாகனம்
எட்டுவழிச் சாலை வழியாகச் செல்கிறது
விரும்பாத உறவொன்று
பெயர் சூட்டப்படாத
தெருவோரத்தில் நிற்கிறது
காலமற்றுத் தவிக்கும்
புழுதிப் பாதையில்
நான் அவர்கள்
வானத்தின் இருளின் திசையில்
கருணைப் பாலை ஊற்றுகிறேன்
ஒவ்வொருவரின்
நினைப்பைப் போலவே
எண்ணங்கள்
குறிக்கோளற்று நிற்கின்றன
ஒரு கருத்த பறவை
சங்கீத பாஷையில்
எங்களிடம் உரையாற்றுகிறது
அளவிடமுடியாத
சத்தம் ஒன்று எனது
காதை நெருங்குகிறது
அமைதிகள்
நெருங்காத நிகழ்வை
நிகழ்த்துகிறது காலம்
உதவாத நதியிடம்
மாற்ற முடியாத முகவரியை
கேட்கிறேன்
பயிர் தொழில் பழகு
என்று விடையிட்டது
கனவின் கண்களை
மூடிய பிறகு
அக்காட்சி
விரைவு இரயில் ஏறிச்சென்றது.
*** *** ***
பிழைகளின் முகங்கள்
இரவு முடியுமுன் எழுந்தேன்
இரவின் பசியை
எலக்ட்ரால் சமன் செய்தது
சோம்பல் நதியென
இரத்த நாளங்கள்
தடையோடு ஓடின உடம்பில்
புனித நீராட வேண்டி
வாய் மூடிக் கிடந்தன தண்ணீர் குழாய்கள்
யோக நிலையை அடைய
தியான அறையைத் திறக்கிறேன்
மவுனச் சிரிப்புகள் ஒலிக்கின்றன
ஜனன விதைகளை விதைக்க
ஆயுட்கால உறுப்பினர்
சங்கத்தில் கையொப்பமிடுகிறேன்
கனவோடு கலந்த
இசையின் சீற்றத்தை
நினைவு கூர்கிறேன்
காகிதத்தால் ஆன
சிலேட்டில் ஓவியம் வரைகிறேன்
ஆசானின் தோற்றம்
அசலாகிறது
தொலைத்த
கண்ணீர்த் துளியோடு வாழ்கிறேன்
கோட்பாடுகளையும் தத்துவங்களையும்
மொழிப்பெயர்க்கத் தொடங்கிவிட்டேன்
பிழைகளின் முகங்கள்
கண்ணாடியில் தெரிகின்றன
கனவுகள் வேகமாக வளர்கின்றன
காலத்தின் நினைவுகளை
உயிர்ப்புடன்
சேகரித்து வருகிறேன்
நகரத்தின் மரங்களை
பார்த்தபடி இருக்கிறேன்
தண்ணீர் வற்றிய ஆறு
என்னைப் பார்த்துக்கொண்டேயிருந்தது.
வாழ்தலும் தன்னைப் புரிதலும் நம்பிக்கையும் இயற்கையின் கொடை
? Awesome