அவள் உரு மாறுகிறாள்
———————————————-
பரிசுத்த ஆவியைப் போல..
கருவுறா முகிலின் கன்னிமை போல…
காத்திருந்த கிள்ளையின் மனம் நோக
வெடித்துப் பறக்கும் இலவம் போல…
தாய்மடி முட்டியருந்தும் கன்றின்
வாய் நுரைத்து வடியும் அமுதுபோல…
சவக்காரம் போட்டு தானே வெளுத்த
பாட்டனின் பழைய வேட்டி போல…
அவளின் ஆதிவண்ணம் அத்துனை வெண்மை.
நெஞ்சதிரச்செய்யும் சொல்லறியும்வரை..
நிலமதிரச்செய்யும் வலியறியும்வரை
கண்ணீரும் குருதியும் காணும்வரை..
கையிடுக்கில் கழுத்துநெறிபடும் வரை..
அவளின் எண்ணம் அத்துனை மென்மை.
நுண்கணைகள் துளைத்து வெளியேறிய
நுண்ணொடிப்பொழுதில் அவள் கனலத்தொடங்கினாள்.
ஆதிவண்ணத்தின் அணுக்களில்
சொட்டுசொட்டாய் சிவப்பேற்றிக்கொண்டாள்..
பச்சிளஞ்சிசுவின் பாதமென்மை விடுத்து
வரையாட்டுக் குளம்பினை வரித்துகொண்டாள்..
உடல்வழியும் உப்பின் உவர்ப்பேற்றி
உவப்பாய் உருமாறிக்கொண்டிருக்கிறாள்.
வெள்ளைமலராய் விரலிடுக்கில் பொருந்தியவள்
முகர்ந்து கசக்கி எறிய இடங்கொடாது
செந்தீயாகித் தணலாகித் திகுதிகுவென
ஓங்காரமாய் எரியத் தொடங்குகிறாள்.