“அம்ம்ம்…மா, என் புக் ஷெல்ஃப் ஏன் இப்படி கலைஞ்சு கிடக்கு” – ஸ்கூலில் இருந்து வந்த சவிதா கத்தினா.
அம்மா கமலம், ”இல்லைடி மத்யானம் ஷங்கு வந்திருந்தானா, பழைய கல்யாண ஆல்பம் எடு அக்கா, இப்ப பாக்க வேடிக்கையா இருக்கும்னான். என் ரூம்ல, அப்பா ரூம்ல காணலை, ஒரு வேளை உன் ஷெல்ஃப்ல இருக்குமோனு தேடினேன். இதுல வேடிக்கை என்ன தெரியுமோ, அந்த ஆல்பம் ஹால்லயே உன் ஷீல்ட், கப்லாம் வைக்கறயே அந்த கண்ணாடி அலமாரி.. அதுலதான் இருந்தது.
“என் ரூம்ல வந்து எல்லாத்தையும் கலைக்காதேனு எத்தனை தடவை சொல்றது” சவிதா இன்னும் பலமா இரைச்சல் போட்டா.
“என்னடி, வரவர ரொம்பதான் எகிறரே, அப்படி என்ன ரகசியம் உன் கிட்ட எங்களுக்குத் தெரியாம? 14 வயசுக்கே இந்த ஆட்டம், இரு உன் அப்பா வரட்டும் ஒரு வழி பண்றேன்.”
சவிதாவோட அப்பாகிட்ட இதைச் சொன்னதுக்கு, ”சும்மா அவ கூட மல்லுக் கட்டாதே. அந்த அடலசென்ட் வயசுல கொஞ்சம் பிகேவியர் அப்படித்தான் மாறும், தானா சரியாப் போயிடும், கொஞ்சம் அமைதியா உக்காந்து யோசிச்சுப் பாத்தோம்னா அந்த வயசுல நாமளும் அப்படித்தான் இருந்திருப்போம். என் அம்மா கூட ஒரு காரணம் இல்லாம எத்தனை சண்டை போட்டிருக்கேன் தெரியுமா? பாவம் அவ இருக்கறப்ப அருமை தெரியலை. இப்ப தினமும் நினைச்சிக்கறேன். எதுக்கெடுத்தாலும் ஒரு பழமொழி,என்னை யாரும் ஒரு சொல் சொன்னா பொறுக்க மாட்டா, அம்மான்னா அம்மாதான்”- தன் கண்களில் துளிர்த்த கண்ணீரை மேல் துண்டால் துடைச்சிட்டார்.
கமலத்துக்கு இவர் கிட்ட போய் புகார் பண்ணினோமேனு ஆயிடுச்சு.
கமலத்துக்கு தன் 14வது வயது ஞாபகம் வந்தது. மனதில் எண்ணங்கள் ஓடியது.
நானும் சவிதா மாதிரிதான் இருந்தேனோ அந்த வயசுல.
சாத்தூர் அப்ப சின்ன ஊர். மேல் படிப்பு, நல்ல ஆஸ்பிடல் எல்லாத்துக்கும் விருதுநகருக்குதான் ஓடணும். நாங்க இருந்தது ஈஸ்வரன் கோவில் தெரு.கோவில் திருநாள் வந்தா ஊரே அமர்க்களப்படும். அதுவும் வைகாசி விசாகம்னா பத்து நாள் திருவிழா. மூலவர் சிதம்பரேஸ்வரர், தாயார் சிவகாமசுந்தரி ரெண்டு தெய்வங்களும் அர்ச்சகர்கள் செய்யும் அலங்கார அமர்க்களத்தில் திக்குமுக்காடிப் போவா.
மதுரை, விருதுநகர், சிவகாசினு எல்லா ஊர் சிவபக்தர்களும் இங்கேதான்.
அப்ப நான் ‘ஏத்தல் ஹார்வி கேர்ல்ஸ் ஸ்கூல்ல’ படிச்சிட்டிருந்தேன். அப்படி ஒண்ணும் படிப்புல சூரப்புலி இல்லை. டான்ஸ், டிராமா, பேச்சு இதுலதான் இன்ட்ரஸ்ட்.
ஷங்கர் என்னை விட ஒண்ணரை வயசு சின்னவன். நான் அவன் கூட சண்டை போடாத நாள் இல்லை. என் அம்மா என்னைதான் தினம் திட்டுவா. “ஆம்பளைக் குழந்தைக்கு சமமா ஏண்டி சண்டை போடறே. எருமை மாடு மாதிரி திமுதிமுனு வளந்ததுதான் மிச்சம். புத்தி மட்டும் கழுதை லத்தி”
இதெல்லாம், நான் வயசுக்கு வரதுக்கு முன்னால. அதுக்கப்பறம் என்னைப் பொத்தி பொத்தி வளத்தாங்க. சொந்த தம்பிதான் இந்த வாலு ஷங்கர். ஆனா, அவன் கிட்ட கூட தள்ளி நின்னு பேசணும் தொட்டுப் பேசக் கூடாதுனு ஆயிரம் அடக்குமுறைகள். மாமா,சித்தப்பானு யார் வந்தாலும் ஒரு தூரத்துல இருந்துதான் பேசணும். இது அம்மாவின் எழுதாத சட்டம்.
உறவுகளுக்கும் ஒரு எல்லை உண்டுனு சொல்லிக் கொடுத்தது என் அம்மாதான்.
இவ்வளவு கட்டுப்பாடு, கண்கொத்திப் பாம்பா என்னை கவனிக்கற அம்மா இருந்தும் ஒரு நாள் என்னாச்சு தெரியுமா?
எங்க தெரு பசங்கள்லாம் சேந்து ஒரு கிரிக்கெட் டீம் வச்சிருந்தாங்க (கிரிக்கெட் மட்டுமில்லை சீசனுக்கு தகுந்த மாதிரி ஃபுட்பால், பேஸ்கட்பால், பேட்மிடன்னு கேம் மாறும்) அதுல நாலஞ்சு பசங்க சகஜமா வீட்டுக்கு வரவங்கதான், மாமி குடிக்க தண்ணி கொடுங்கனு.
நடராஜன்தான் இவங்க கேப்டன்,சீனியர். இவன் தலைமைல மத்த தெரு டீம் கூட விளையாடி ஜெயிச்சதா சரித்திரமே இல்லை. ஆனா, அவ்வளவு அலட்டல் பண்ணிப்பான்.
இந்த தண்ணி கேட்டு வர பசங்களையும் இப்பல்லாம் வீட்டுக்குள்ளே நுழையறதை அம்மா சாமார்த்தியமா கையாண்டு மெதுவா நிப்பாட்டிட்டா.
ஒரு வெள்ளிக்கிழமையன்னிக்கு கோவில்ல மஞ்சக்குடி சாஸ்திரிகள் உபன்யாசம்னு அம்மா சாயந்திரம் ஆறு மணிக்கே போயிட்டா. நான் கூடத்துல சப்பளிக்க உக்காந்துட்டு மல்லிகாவோட சரித்திர நோட்ஸை என்னோட நோட்டுல காப்பி அடிச்சிட்டிருந்தேன். ‘மாமி’னு சத்தம் கேட்டது.
தலையைத் தூக்கிப் பாத்தா இந்த கேப்டன் நடராஜன் கூடத்துல பின்னந்தலையைச் சொறிஞ்சிட்டு நிக்கறான். நான் என்னன்ற மாதிரி தலையைத் தூக்கி அசைத்தேன்.
“மாமி இல்லையா?”
“ம்ஹூம்”
“ஷங்கர் இல்லையா?”
“ம்ஹூம்”
டக்னு பேண்ட் பாக்கெட்ல இருந்து ஒரு கோடு போட்ட மடிச்ச காகிதத்தை என் நோட் மேல தூக்கிப் போட்டுட்டு தலையையை குனிஞ்ச வண்ணம் நின்னான்.
அதை எடுத்து மடிப்பை நீக்கிப் பாத்தேன். சிரிப்பை அடக்கிட்டு பலமாவே படிச்சேன்.
“பொட்டுக் கடலை-10 பைசா, தேங்காச் சில்லு-2, அஞ்சு பைசா டீ
பாக்கெட்-2, இஞ்சி-5பைசா, வெள்ளை சீனி-4 அணா”.
“அச்சச்சோ அது பழனிச்சாமி நாடார் கடை லிஸ்ட் கொடு இங்கே”ன்னு குனிஞ்சு பிடுங்கிட்டான். திரும்ப பேன்ட் பாக்கெட்ல தேடி இன்னொரு மடிச்ச கடிதத்தைக் கொடுத்தான்.
ஆனா, அதைப் பிரிச்சு படிக்கறதுக்குள்ள ஓடிட்டான்.
நான் அசுவாரஸ்யமா அதைப் பிரிச்சு படிச்சேன். முதல்ல சிரிப்பு வந்தது ‘அன்பே என் ஆராரோனு’ ஆரம்பிச்சு ஏதோ என்னை வர்ணிச்சு தப்பு தப்பா பேத்தியிருந்தான். எனக்கு கார்ட்டூன் வரைய பிடிக்குமா உடனே அந்த காகிதத்துலயே ஒரு பொண்ணு உக்காந்திருக்கற மாதிரி, ஒரு பையன் திரும்பி ஓடற மாதிரி கார்ட்டூன் வரைஞ்சு தலைப்பு வேற அதுக்கு, ‘நடடா ராஜா நடராஜானு’. அப்படியே என் ஹிஸ்டரி புக்ல அந்த லெட்டரை மடிச்சு வச்சேன். அதை ஏன் கிழிச்சுப் போடலைனு தெரியலை.
அந்த லெட்டர் முதமுத ஒரு பையன் நமக்கு எழுதினதுன்றதாலயோ என்னவோ ரொம்ப நாள் அதைப் பாதுகாத்தேன். மத்தபடி அவன் மேல ஒரு ஈர்ப்பும் கிடையாது. எப்பவோ ஒருநாள் அது அம்மா கைல கிடைச்சு விசிறிக் காம்பாலே நாலு முதுகுல வச்சு அந்த கடங்காரன் ஆராரோனு எழுதிக் கொடுத்தா உனக்கு புத்தி எங்கே போச்சு, ஏன் வாங்கினே கைலனு அதைக் கிழிச்சு எறிஞ்சா. அப்பறம் அவன் எங்கே போனான் யாருக்கு ஆராரோ பாடினானோ எனக்குத் தெரியாது.
அந்த வயசுல அந்த சின்ன சலனம் அதுதான் இவர் சொன்ன அடலொசென்ட் வயசோ? இப்பதான் ஞானோதயம் ஆச்சு, என் பொண்ணு சவிதாவும் ஹிஸ்டரி சப்ஜெக்ட்ல வீக், அடிக்கடி கிளாஸ்மேட் பத்மாவோட நோட்ஸ் வாங்கிட்டு வந்து காப்பி பண்ணுவா. நான் அப்ப வரைஞ்ச மாதிரியே கண்ட பேப்பர்ல கார்ட்டூன் கூட வரைவா. அப்படியேவா கார்பன் காப்பி மாதிரி குணங்கள் கூட அமையும்?
சட்னு அவ ரூமுக்கு போனேன். அவ புஸ்தக அலமாரில அவ ஹிஸ்டரி புக்கை தேடி எடுத்தேன். புரட்டினா, எதிர் பாத்த மாதிரி ஒரு லெட்டர் இருந்தது. இதுல ஆராரோ இல்லை. ஆனா, மை டியர் ஸ்வீட் ஹார்ட்னு ஆரம்பிச்சு கான்வென்ட் ஸ்கூல் காதல் ரசம்.
விசிறிக்காம்பை தேடற காலம் இல்லை இது. அவர் கிட்டதான் கேக்கணும் இதை எப்படி ஹேண்டில் பண்றதுனு..!