இணைய இதழ்இணைய இதழ் 78கட்டுரைகள்

The Hunt for Veerapan – ராணி கணேஷ்

கட்டுரை | வாசகசாலை

The Hunt for Veerapan 

Netflix –  செல்வமணி செல்வராஜ்

வீரப்பன் –  காட்டு ராஜா – சந்தனக்கடத்தல் வீரப்பன் –  குற்றவாளி எனப் பெயர் பெற்ற வீரப்பனைக் குறித்து நிறைய வாசித்தும் பார்த்தும் இருக்கிறோம். இரண்டு படங்கள் கூட கன்னடத்தில் வெளிவந்தன. 2013 ல் கிஷோர் நடித்த, ’அட்டகாசா’ பின்னர் 2016 ல் வெளியான, ’Killing Veerappan’ என்னும் படம். முதன்முதலாக உண்மைக்கு நெருக்கமான டாக்குமெண்டரியாக நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது, ’The Hunt for Veerapan’! 

வீரப்பன் சமகாலத்தில் வாழ்ந்து மறைந்துபோன ஒரு குற்றவாளி! குற்றவாளியாக இரு மாநில அரசாங்கத்தால் தேடப்பட்டுக்கொண்டே இருந்த சத்தியமங்கல ராபின் ஹூட். கர்னாடகம், தமிழ்நாடு, கேரளம் என அந்த காட்டுப் பகுதிகளை ஆண்டுகொண்டிருந்த நபர் வீரப்பன்.  வீரப்பனுக்கான வேட்டை அரசாங்கத்தால் பல வருடங்களாய் நடத்தப்பட்டது, பல கோடி செலவு செய்யப்பட்து. அதற்கென்றெ ஸ்பெஷல் டாஸ்க் நியமிக்கப்பட்டது. வீரப்பனைப் பிடிப்பதை வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருந்தனர் சில அதிகாரிகள். சிலர் மறைந்தும் போனார்கள். உண்மையில் வாழ்ந்த காலத்தில் வீரப்பனை அறிந்துக்கொண்டவர்கள்  கொண்டாடத்தான் செய்தார்கள். குற்றவாளி என முத்திரை குத்திய பின்னும் கூலிங்கிளாஸ், தங்கச் சங்கிலி சகிதம் மீசையை நீவியபடி பேட்டி கொடுத்த அந்த தெனாவெட்டு வீரப்பனை ஒரு ஹீரோவாக உருவமைத்தது. மேலும் வீரப்பன் நேரிடையாக பொதுமக்களை துன்புறுத்தியதாக எந்தத் தகவலும் இல்லை. கொலை செய்யப்பட்ட வரிசையில் அவனுக்கு துரோகம் செய்தவர்களும், அதிகாரிகளும்தான் முதன்மையாக இருந்தார்கள். 

சரித்திரத்தில் கர்ணன், ராவணன், வாலி துவங்கி நிஜத்தில் சீவலப்பேரி பாண்டி, சந்தனக் கடத்தல் வீரப்பன் – படத்தில்,  கே.ஜி.எப் ராக்கி(ராக்கி நிஜமா தெரியவில்லை), மாமன்னன் ரத்னவேல் என எல்லாக் காலகட்டத்திலும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தைக் கொண்டிருக்கிறார்கள் ஆன்ட்டி ஹீரோக்கள். வில்லனாகப்  பறைசாற்றப்பட்டாலும் மக்களுக்கு  இவர்களை ஏன் பிடிக்கிறது? 

வில்லனானவன் கதாநாயகனையோ, அரசாங்கத்தையோ எதிர்த்தாலும் சமயங்களில் அவர்களின் நற்பண்புகள்  தீய பக்கத்தை மறைத்து விடுகின்றது. எல்லா குணங்களையும் ஒருசேரக் கொண்டவர்கள்தானே மனிதர்கள். நல்லது, கெட்டது என வரையறுத்து அதனைப் பின்பற்றி மனித இனம், கூட்டமாக, குடும்பமாக வாழத் தலைப்படுகிறது.  குற்றச்செயல் என வரையறுக்கப்பட்தைச் செய்தால் தப்ப முடியுமா? குற்றங்களை நியாயப்படுத்த முடியுமா? கொலை செய்தல் குற்றம், ஆனால் வன்புணர்ச்சி செய்த ஒருவனைக் கொலை செய்தல் மக்களுக்கு நியாயமாகப்படும் இல்லையா? இப்படித்தான் சில குற்றவாளிகள் நம் கண்களுக்கு கதாநாயகனாய் தெரிகிறார்கள். 

அதில் வீரப்பனும் ஒருவன். வீரப்பனைப் பற்றி செய்திகளில் வாசித்தும், தொலைக்காட்சிகளில் நிஜக்காட்சிகளாகவும், படமாகவும் கண்டு இருக்கிறோம். இப்பொழுது ஆவணப்படமாய் நெட்பிளிக்ஸில் காணக் கிடைக்கிறது. வீரப்பனின் கதையை நான்கு அத்தியாயத்தில் அடக்கி நியாயம் செய்ய முயற்சித்து இருக்கிறார்கள். பெரும்பாலும் வீரப்பனைச் சுற்றி இருந்த மனிதர்களின் நேர்காணல்தான் சத்தியமங்கல காட்டினூடே பயணிக்கிறது. இறுதியில் வீரப்பன் பேசிய குரல் பதிவு, வீடியோ பதிவு, இரு மாநில தலைவர்களின் பேச்சு, பத்திரிக்கைச் செய்திகள் என நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கின்றனர்.  வீரப்பனின் மனைவி முத்துலெட்சுமியின் பேட்டி நக்கீரனில் வந்ததாக ஞாபகம். தன்னுடைய குழந்தை பிறந்து இறந்தது குறித்தும், அழவும் நேரமின்றி தப்பிக்கும் ஓட்டத்தில் இருந்ததாகவும் கூறியிருப்பார். மேலும் காவல்துறை அவரைப் பிடித்து நிர்வாணமாக்கி, சித்திரவதை செய்து விசாரனை என்று செய்த கொடுமைகளை எல்லாம் வாசித்த ஞாபகம் உள்ளது. நிழலான ஞாபகங்கள். அது முத்துலெட்சுமி பேட்டியா இல்லை அவர்கள் கூட்டத்தில் உள்ள வேறு பெண்ணின் பேட்டியா என்று பழைய பத்திரிக்கைகள் கிடைத்தால்தான் தெரியும்.  ஆனால் இந்த ஆவணப் படத்தில் அந்தத் தகவல்கள் பெரிதாக வெளிக்காட்டப்படவில்லை. 

முத்துலெட்சுமியின் பேச்சு ஏனோ ஒட்டாமல் தனியாக நின்றது. சொல்லிக் கொடுத்து  நடிப்பதாய் நினைத்துப் பேசினாரா? இல்லை, இதையெல்லாம் சொன்னால் போதும் என்று அறிவுறுத்தப்பட்டதா எனத் தெரியவில்லை. பேசும்போது ஒட்டுதல் இல்லாமல் பேசுவது போல இருந்தது. இல்லையென்றால் அவர் பேசும் இயல்பே அப்படித்தானா? உணர்ச்சி ததும்பல் பெரிதாக இல்லாமல் அசால்டாக பேசுகிறார். குழந்தையை நினைக்கையில் மட்டும்தான் லேசாகக் கலங்கினார். ஒருவேளை எடிட்டிங்கில் சில காட்சிகள் போய்விட்டதா தெரியவில்லை. 

மனைவிக்கு, Fair&lovely முதற்கொண்டு வாங்கிக் கொடுத்து அந்தக் காட்டுக்குள்ளும் தன்னால் முடிந்தமட்டும் பிரியமாய் வைத்திருந்த வீரப்பனுக்காக ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தாத முத்துலெட்சுமி ஆச்சரியம். ஒருவேளை நிஜமாகவே வீரப்பன் எங்கேயோ இருக்கிறாரோ என்ற அசட்டுதனமான எண்ணங்கள் கூடத் தோன்றியது. அவருடைய பேச்சு கொஞ்சம் நாடகத்தன்மையோடு இருந்தது படத்திற்கான மைனஸ். உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பத்தினரிடம் பேசியிருந்தால் இன்னொரு பக்க இழப்புகளும், அதிகாரிகளின் குடும்பத்தினரின் வலியும் பதிவாகி இருக்கும். மேலும் வன்கொடுமை செய்த சிலர் சட்டத்தின் பிடியில் கூட மாட்டவில்லை என்பது கொடுமை. விடுதலை படம் ஞாபகத்தில் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.  நிர்வாணமாய் அலையும் காட்டுவாசிகள் கூட அதற்கு நிர்பந்திக்கப்பட்டால் தவறுதானே? குழந்தையை தொட்டுக் கொஞ்சுவது கூட தவறெனக் கூறும் காலகட்டத்தில் இந்த அனுகுமுறை எத்தனை மோசமானது? உடலை வைத்து பெண்ணை அசிங்கப்படுத்தும் போக்கு மாறவே இல்லை.

உயிரைக் கொல்வது குற்றச்செயல், நீதிமன்றம் தூக்குதண்டனை கொடுப்பது நியாயம், போர்வீரர் நாட்டின் எதிரியைச் சுட்டு வீழ்த்துவது வீரம். கொலைகளும் அதன் நியாயங்களும் இடத்திற்கேற்ப மாறுபடும். குழந்தைகளுக்காக உருகும் ஒரு சாதாரண தகப்பன்தான்,  தங்கைக்காக முதல் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.  அதுவும் மிகக் கொடூரமாக. அந்த பகுதியைச் சார்ந்த மக்களுக்கும், வீரப்பனின் சொந்த பந்தங்களுக்கும் இழைக்கப்பட்ட கொடுமை மேலும் மேலும் தவறுகள் செய்யத் தூண்டுகிறது. சாதரணமாய் சின்ன திருட்டுகளில் ஈடுப்பட்ட ஒரு நபர் இப்படியான தூண்டுதலில் கொள்ளை மட்டுமல்லாமல் கொலை, கடத்தல் என மிகவும் மோசமாகி பெருங்குற்றவாளியாக மாறுகிறார். 

வீரப்பன் இறந்த நேரத்தில் சதியால் கொல்லப்பட்டான் எனப் பெரும்பாலனவர்கள் பேசினார்கள். அதற்கு ஏத்தாற்போல காவல்துறையினரின் பேச்சு முன்னுக்குப் பின் முரணாக அமைந்தது. பத்திரிக்கையாளர் சிவசுப்புரமணியம் சேகரித்த தகவல்கள், அவர் அளித்த பேட்டிகளைப் பார்த்தால் நிறைய அனுமானங்கள் தோன்றும்.  சரணைடைந்தாலோ, உயிரோடு பிடிக்கப்பட்டாலோ யாருக்குப் பிரச்சனை? மரித்துவிடும் எண்ணம் வீரப்பனுக்கு இம்மியும் இல்லை. எங்காவது போய் குடும்பத்துடன் வாழும் ஆசையே அவர் வார்த்தைகளில் வெளிப்படுகிறது. மீசை மழிக்கப்பட்டு ஒரே இடத்தில் குண்டு வாங்கி, அத்தனை குண்டுகள் பாய்ந்த வண்டியின் வழியாக முகத்தில் வேறு எங்கும் பெரிதாக காயம் படாமல் இறந்து போன வீரப்பனை வெறுக்க எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் கொண்டாடவும் பல காரணங்கள் இருந்துகொண்டே இருக்கின்றன.

தன் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்ததும், பதிலடி கொடுத்தது மட்டுமல்லாமல் நடிகர் ராஜ்குமாரைக் கடத்தி அவரை விடுவிக்க போட்ட நிபந்தனைகளும் ஒரு காரணமாய் இருக்கலாம். விதி வலியது. ஆயுதம் ஏந்தியவன் அந்த ஆயுதத்தாலேயே வீழ்ந்தான். 

காவல்துறைக்கு அவர்கள் பணியை அவர்கள் செய்து முடிக்க வேண்டும். எப்படி செய்து முடிக்க வேண்டும் என்ற வரைமுறைகள் இல்லை. அதைத்தான் பேட்டியிலும் கூறுகிறார் ஒரு காவல்துறை அதிகாரி.  ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸின் நோக்கம் வீரப்பனைப் பிடிப்பதுதான். பின்னால் அது சுட்டுப் பிடிப்பது என்று மாற்றம் பெற்றது. அது துரோகம் என்றாலும் அதைப் பற்றிய கவலை வேண்டியதில்லை. மறைந்திருந்து வாலியின் மீது அம்பெய்ததை துரோகம் என்றறிந்தாலும் யாருக்கும் அதில் அக்கறை இருக்கவில்லைதானே.

இத்தனை பேட்டி எடுத்தவர்கள் ஏன் நக்கீரன் கோபாலை பேட்டி எடுக்க முற்படவில்லை என்பது இன்னொரு ஆச்சரியம். வீரப்பனை பொதுமக்கள் அறியக் காரணமாய் இருந்தவர் நக்கீரன் கோபால். அரசாங்கமே அவரை நம்பித்தான் இருந்தது நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட போது.  

நடிகர் ராஜ்குமார் வீரப்பனைப் பிரியும்போது உகுத்த கண்ணீர் நமக்குச் சொல்லும் செய்தி வீரப்பன் அத்தனை மோசமானவன் இல்லை. அவனது கோரிக்கைகளும் கூட அதை உணர்த்தும். அன்றைய காலகட்டத்தில் நடிகர் ராஜ்குமார்  எதாவது செய்து வீரப்பனுக்கு உதவி காப்பாற்றலாமே, நல்வழிப்படுத்தலாமே என நினைத்ததுண்டு. மேலும் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டபோது அவர் அழுதிருப்பாரா என்றெல்லாம் யோசித்ததுண்டு. தைரியமாக வாழ்வது என்பது எல்லோருக்கும் அமைவதில்லை. மேலும் காட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட  புத்தகங்கள் இன்னுமொரு ஆச்சரியம்.

எத்தனையோ வரலாறுகளின் உண்மைத் தன்மை வெளியே வருவதில்லை. அது வேண்டுமென்றோ, சிலருக்கு வேண்டாமென்றோ மறைக்கப்படுகிறது.  வீரப்பன் கொன்று குவித்த யானைகளின் புகைப்படங்கள் வெளிவந்ததா தெரியவில்லை. புஷ்பா படத்தைப் போல இவர்கள் திருட்டுத்தனமாய் சந்தன மரம் கடத்தியதாகத் தெரியவில்லை. எப்படி செக்போஸ்ட் தாண்டி சிக்கல் இல்லாமல் மீட்டுக்கொண்டு போயிருப்பார்கள்? யார் இவர்களுக்கு விற்றுக் கொடுத்தார்கள்? பணம் யாருக்கு கைமாறியது? ஏன் வீரப்பனிடமோ, கூட்டாளிகளிடமோ, சொந்தங்களிடமோ அப்பணத்தின் வாசனை கூட இல்லை? காசு கிடைத்தது என வீரப்பனைச் சார்ந்தவர்கள் கூறும் தொகை மிகச் சிறியதாகத்தான் இருக்கும்.

 கொன்ற யானைகளின் உடலோ, வெட்டிய மரங்களின் நிஜக் கணக்கோ யாருக்கும் தெரியாது. அத்தனை மரங்களை ஒற்றை ஆளாக வெட்டி இருக்க முடியாது இல்லையா? அப்படியென்றால் ஊர்க்காரர்கள் அனைவரும் கூட்டாகத்தானே இருந்திருக்க வேண்டும்? காட்டுவாசிகளுக்கு காடே வீடு, மரங்கள் அவர்கள் சொத்து. தனக்குத் தேவையானதை காடு கொடுப்பதாக நம்புவார்கள். ஆனால் இத்தனை சந்தன மரங்கள் யாருக்குத் தேவையாக இருந்த? தடை செய்யப்பட்ட சந்தன மரம் எப்படி பொருட்களாக, சோப்பாக, பலவிதங்களில் சந்தையில் புழக்கத்தில் உள்ளது? வீரப்பனும் , கூட்டாளிகளும் உபயோகித்த அத்தனை ஆயுதங்களும், வெடிகுண்டுகளும் எங்கே யார் மூலமாக அவர்களுக்கு கிடைத்த

ஏன் விடுதலைப் புலிகளின் பெயரை உபயோகித்து வீரப்பனை சதித்தார்கள்? இப்படி என்னவெல்லாம் நடந்து வெளி உலகிற்குத் தெரியாமல் இருக்கிறது. தோராயமாக முப்பத்தி ஆறு ஆண்டுகள் தண்ணி காட்டிய ஒருவன் எப்படி நம்பி மோசம் போனான்? மனைவியை போலீசார் பக்கம் சாய்ந்ததாகக் கருதிய வீரப்பன் எப்படி விடுதலைப் புலிகளில் ஒருவரே தனக்கு உதவுவதாக நம்பினான்? ஒரு பிஸ்கெட்டைக் கூட அடுத்தவரை நம்பி சாப்பிடாத வீரப்பனுக்கு விஷம் வைத்திருக்கக் கூடுமா? எப்படி சுட்டார்கள்? எப்படிப் பிடித்தார்கள்? எத்தனையோ அதிகாரிகளை சுத்த விட்ட வீரப்பனுக்கு அன்று மூன்று கூட்டாளிகளோடு வேனில் இருந்து தப்பியிருக்க முடியாதா? உண்மையில் என்ன நடந்தது என்பதை எந்த போலீஸாரும் சொல்ல முடியாத ஒரு ரகசியமாய்தான் பார்க்க வேண்டி இருக்கிறது. இப்படி பல கேள்விகள் வீரப்பனோடு புதைந்தே கிடக்கின்றன

எங்கோ போய் யாரையோ பார்ப்போம், எப்படியும் பிழைத்து வாழ்வோம் என்ற கனவில் பயணித்த பயணம் தன் இறுதிப் பயணம் என அறியாத வீரப்பன் நிச்சயமாய் நினைவில் நிற்கும் மனிதன்தான். ’Hunt for Veerapan’ நிச்சயமாய் பார்க்க வேண்டிய ஒரு ஆவணப் படம். ’Veerapan’s confession’ என ஒரு டாக்குமெண்டரி கிடைக்கப் பெற்றிருந்தால் நிறைய மர்மங்கள் விலகி இருக்கும்.  இதில் பேசிய எல்லோரும் எல்லாமும் சொல்லிவிடவில்லை என்பதும் நம் அனைவருக்கும் தெரியும். 

********

naga.shunmugam@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button