சிலைகள் – பால கணேசன்

“இந்த பாட்டைப் பாரு… இது உங்க ஊர்ல எடுத்ததுதான். பாட்டோட முதல் வரியே ஜெர்மனின்னுதான் ஆரம்பிக்கும்“ என்று என் மொபைல் போனில் ஒலிக்க ஆரம்பித்த ‘ஜெர்மனியின் செந்தேன் மலரே’ பாடலை ஜெர்மனியில் இருந்து எங்கள் நிறுவன இயந்திரம் ஒன்றைப் பழுது பார்க்க இதோடு நான்காம் முறை இந்தியா வந்திருக்கும் ஃபெலிக்ஸ் அண்டோனியிடம் காண்பித்துக் கொண்டிருந்தேன்.
அவன் அந்தப் பாடலில் காட்டப்படும் நிர்வாண சிலைகளை எல்லாம் பார்த்து விட்டு, “இது எந்த வருஷம் எடுத்த பாட்டு?” என வினவ, என் இன்னொரு மொபைலில் படம் வெளியான வருடத்தை தேடி, “1980 ரிலீஸ்” என்றேன்.
“இருக்கும். அந்த காலகட்டங்கள்ல இப்படி நிறைய சிலைகள் அங்க வச்சாங்க. நல்ல டூரிஸ்ட் அட்ராக்ட் பண்ற இடமா இதெல்லாம் அப்போ இருந்ததுன்னு கேள்விப்பட்டிருக்கேன். பாட்டும் நல்லா பெப்பியா இருக்கு. எனக்கு அந்த ரிதம் பிடிச்சிருக்கு” என்றவனிடம் ‘இளையராஜா புகழை சற்று பாடலாமா?’ என்று தோன்றிய உணர்வை அடக்கிக் கொண்டேன்.
அந்த ஜூன் மாதத் தொடக்கத்தில் நாங்கள் இருவரும் மற்றும் எங்கள் இயந்திரமும் நின்று கொண்டிருந்த இடம் உத்திரப்பிரதேசத்தின் கோண்டா நகருக்கு அருகில் இருந்தது. லக்னோவில் இருந்து 130 கிலோ மீட்டர்தான் என்றாலும் கூட, சாலைகளின் நிலையும், அதுபோக வரும் வழியில் இருக்கும் மூன்று ரயில்வே கேட்டுகளின் காரணமாகவும் கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் ஆகும் இங்கே வந்து சேர. ஜெர்மனிக்காரனுக்கு வசதியாக உணவு இருக்கவேண்டும் என்பதால் லக்னோவில் தங்குவதே உசிதம் என்று அங்கே அறை ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால், காலையும் மாலையும் சேர்த்து மொத்தம் ஏழு மணி நேரத்திற்கும் அதிகமாக பயண நேரம் ஆவதால் மாற்று வழி யோசித்துக் கொண்டிருந்தோம்.
“சார், பேசாம நீங்க ஏன் அயோத்தியால தங்கக்கூடாது?” என்று முந்தைய நாளே இயந்திரத்தின் ஆப்பரேட்டர் சொன்ன யோசனை நியாயமாகப்பட்டது. ஆனால், அயோத்யா நகரத்திற்கு வெளியே, நெடுஞ்சாலையில் இருக்கும் இரண்டு பெரிய ஹோட்டல்களிலும் நான் ஏற்கனவே தங்கியிருந்ததால் ‘அவனுக்கு இது சரிவருமா?’ என்கிற கேள்வியும் உடனே எழுந்தது.
“இல்லடா, அதுல சாப்பாடு இவன் கேட்குற மாதிரி கிடைக்கிறது கஷ்டம். அதுபோக ரூம் ஒன்னும் அவ்ளோ நல்லா இல்லையே அங்க”
“சார், ஹோட்டல் ராமாயணா புதுசா தொறந்திருக்காங்க. அங்க வசதியா இருக்கும் சார். ஃபைவ் ஸ்டார் மாதிரி” என்று அவன் சொன்னதும் உடனே கூகிளில் தேடினேன். அட. ஆமாம்! இத்தனை நாள் இந்த ஹோட்டலை எப்படி தவறவிட்டேன் என்று எனக்கே தெரியவில்லை. நான் இதற்குமுன் தங்கிய இரண்டு ஹோட்டலும் கோவில் இருக்கும் இடத்திற்கு அப்பால் இருந்தது. இந்த ராமாயண ஹோட்டலோ ஃபைசாபாத் நகரத்தைக் கடந்ததும் நெடுஞ்சாலையின் ஓரத்திலேயே இருந்தது. கூகிளில் இருந்த புகைப்படங்கள் அந்த ஹோட்டலின் தரத்தைக் காட்டியது. இன்று அதிகம் அலைய வேண்டியதில்லை என்கிற ஆசுவாசத்தோடு உடனே ஹோட்டலுக்கு தொலைபேசி, அவனுக்கு ஒன்றும் எனக்கொன்றுமாக இரண்டு அறைகளை முன்பதிவு செய்து வைத்திருந்தேன்.
வெறும் ஒரு மணி நேரப் பயணம்தான் அயோத்தி என்பதால் வேலையை ஆறுமணி வரை இழுத்து விட்டே அங்கிருந்து கிளம்பினோம். ஃபெலிக்ஸ் தனது மொபைலை நோண்டிக் கொண்டிருந்தான். நான் வண்டியோட்டிக் கொண்டிருந்தேன். மதியம் அருகிலிருந்த தேநீர்க் கடையில் நான் இரண்டு சமோசாக்களை தின்றது மட்டும்தான் என்பதால் நன்கு பசி எடுத்தது. நானாவது பரவாயில்லை. காலையில் ஏழு மணிக்கு முன்பே கிளம்பியதால் லக்னோவில் அவன் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து இரண்டு சாண்ட்விச் மட்டுமே அவன் எடுத்து வந்திருந்தான். வரும் வழியில் அதை உண்டதோடு சரி. தேநீர் கூட அவன் குடிக்கவில்லை இடையில்.
“பசிக்குதா?” என்று உரையாடலை ஆரம்பித்தேன். “அதெல்லாம் பிரச்சினை இல்ல. சமாளிச்சிக்கலாம்” என்கிற மாதிரியான ஒரு உடல்மொழியை வெளிப்படுத்தினான்.
“உனக்கு விருப்பமான உணவு எது உங்க ஊர்ல?” என்று கேட்டுக்கொண்டே கியரை மாற்றினேன்.
“அது பேர் சொன்னா உனக்கு தெரியுமான்னு தெரியலையே”
“அது பிரச்சினை இல்ல. அது எதுல செய்றதுன்னு சொல்லு. கற்பனை பண்ணிக்கிறேன்”
“ஃபோர்க்-ல பண்ற ஒரு டிஷ் அது. லைக் கட்லெட் மாதிரி. ரொம்ப பிடிக்கும் எனக்கு. இங்க ஃபோர்க் கிடைக்குமா?”
“நான் உத்திரப்பிரதேசத்துல சாப்பிட்டது இல்ல. எங்க ஊர்ப்பக்கம் கிடைக்கும்”
“சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத… பீஃப் வச்சி பண்ற ஒரு ரோல் எங்க ஊர்ல ரொம்ப ஃபேமஸ். அதுவும் நிறைய சாப்பிடுவேன்” என்றுவிட்டு ஏதோ தவறு செய்தவன் போல முகத்தை வைத்திருந்தான்.
“இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு?”
“இல்ல நீங்க மாடை கடவுளா கும்புடுவீங்கள்ல. உங்க நம்பிக்கையை அது காயப்படுதும்ல”
‘இதை இவனிடம் யார் எப்படி, எப்போது சொல்லியிருப்பார்கள்?’ என்று உள்ளுக்குள் எனக்கு யோசனை ஓடத்தொடங்கியது. இப்போது இவனிடம் நான் அதில் இருக்கும் அரசியல், வடக்கு தெற்கு என இந்தியாவின் அத்தனை சமகால நோக்குகளையும் விரிவாக விளக்கினால் மட்டுமே அவனுக்கு பாதியேனும் புரிபடும். அதை சற்றே ஓரமாக ஒதுக்கிவிட்டு, “நான் மனுஷக்கறியை தவிர எல்லாமே சாப்பிடுவேன். அதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்ல” என்று சொல்லிவிட்டு அவனை நோக்கிப் புன்னகைத்தேன். அவனும் பதிலுக்கு மெல்லச் சிரித்துக்கொண்டே, “அப்போ ஓகே. பிரச்சினை இல்ல” என்றுவிட்டு தனது இயர்போனை மாட்டிக்கொண்டு எப்போதும் போல் ஒரு ஜாஸ் இசையை கேட்டவாறே தனது கண்களை மூடி நன்கு சாய்ந்து கொண்டான். அவனது ஜெர்மனி சராசரி உயரத்திற்கு அந்த கால் நீட்டும் இடைவெளி குறைவுதான் எனினும் அவன் அதைப்பற்றி இரண்டு மூன்று நாட்களில் எதையுமே குறையாகச் சொல்லவில்லை என்பதைப் பற்றியும் நான் சிந்தித்துக் கொண்டே, வண்டியை நெடுஞ்சாலையில் செலுத்தினேன்.
ஹோட்டல் ராமாயணாவை அடைந்தபோது மணி ஏழரை ஆகியிருந்தது. எதிர்பார்த்தது போலவே வெளிப்புறம் நன்கு பிரமாண்டமாய் தோற்றமளித்தது. அயோத்தியில் கோவில் கட்ட முடிவெடுத்ததில் யாருக்கு லாபமோ இல்லையோ, இந்த ஹோட்டலை அதற்காக காட்டியதில் எனக்கு எக்ஸ்டரா சில மணி நேர தூக்கமும், தேவையில்லாத அலைச்சல் குறைப்பும் லாபமாக ஆனது. அதுபோக நம்மை நம்பி ஜெர்மனியில் இருந்து வந்தவன் நிம்மதியாக உண்டு உறங்கி எழுவதும் நிகழப்போகிறது என்பதில் ஒரு சின்ன சந்தோஷம் இருந்தது எனக்கு.
ஹோட்டல் வரவேற்பு அறையில் மிகப்பெரிய சாண்டிலியர் விளக்குகள் பிரமாண்டமாக தொங்கிக் கொண்டிருந்தன. பக்கவாட்டில் சுவரோரமாக சந்தன நிற சோஃபாக்கள் இரண்டு இடதும் வலதுமாக போடப்பட்டிருந்தது. அந்த சுற்றுப்புறமே மனதிற்கு ரம்மியமாக இருந்தது. அங்கங்கே தென்பட்ட ஹோட்டல் ஊழியர்கள் ஒரே நிற உடை அணிந்து மரியாதையாக வரவேற்றதும் பிடித்திருந்தது.
செக் இன் செய்யும்போதுதான் ரிஷப்சனில் கொட்டை எழுத்துக்களில் “இங்கே மாமிசம் எக்காரணம் கொண்டும் அனுமதி இல்லை” என்கிற அறிவிப்பு ஆங்கிலம், இந்தி இரண்டிலும் சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டிருந்ததை நான் கவனித்தேன். நான் ஃபெலிக்ஸை மெல்ல அழைத்து அந்த அறிவிப்பை காண்பித்தேன். அவன் அதைப் படித்துவிட்டு, “இது ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்தானே? இங்க என்ன பிரச்சினை?” என்று சன்னமான குரலில் என்னிடம் கேட்டான்.
நான் தொண்டையை மெல்ல செருமிக்கொண்டு, “இங்க மாமிசம் அனுமதி இல்லையா? உங்க ரெஸ்டாரண்ட்லயும் கிடைக்காதா?” என்று தனது சட்டையில் முகேஷ் ஷர்மா என்று பெயர் பொருத்தியிருந்த, எப்போதும் புன்னகை தரித்திருந்த அவனிடம் கேட்டேன்.
“இல்ல சார். இங்க மாமிசம் எங்க ரெஸ்டாரண்ட்லயும் கிடைக்காது. வெளியில இருந்து வாங்கிட்டு வரவும் அனுமதி இல்ல” என்று மிகவும் தன்மையுடன், முகத்தில் மாறாத புன்னகையுடன் சொன்னான். உலகின் மிகப்பெரிய வன்முறையாளர் ஒருவர் சிரித்துக்கொண்டே யாரையோ படுகொலை செய்வது போல எனக்கு அது தோற்றமளித்தது. என் முகத்தில் உடனடியாய் தோன்றிய பெரும் ஏமாற்றத்தை முடிந்தளவு வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஃபெலிக்ஸை நோக்கித் திரும்பினேன். அவன் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். நான் இப்போது முகத்தை முடிந்தளவு சோகமாக்கிக் கொண்டு என் உதடுகளைப் பிதுக்கினேன்.
“But Why?” என்று தலையை ஒருபக்கம் சாய்த்தவாறு கேட்டான்.
“Its Ayodhya man. It has all the reasons. ரூம் போயி ஃப்ரெஷ் ஆகிட்டு வா. ஏதாவது சாப்பிடு முதல்ல. எனக்கும் பசிக்குது” என்று கூறிவிட்டு, கடந்த இரண்டு நாட்களாய் அத்தனை நேரம் வண்டி ஓட்டியும் வராத களைப்பை சற்றுநேரத்தில் உணர்ந்தவனாக அறைக்குச் சென்று தயாரானேன்.
அரைமணி நேரம் கழித்து அவனும் கீழிறங்கி வந்தான். அத்தனைப் பசியிலும் இருவருக்கும் அங்கே எதுவும் உண்பதற்கு மனதில்லை. வெட்டி வைத்த பழங்கள் மட்டும் உண்டுவிட்டு உறங்கலாமா என கேட்டதற்கு அவன் எந்த பதிலும் சொல்லாமல் ஏதோ யோசனையில் இருக்க, நான் மொபைலை எடுத்து அருகில் ஏதேனும் ஓரளவு நன்றான இறைச்சி உணவகம் இருக்கிறதா என சோதித்தேன். ஃபைஸாபாத் உள்ளே ஒன்றிரண்டு காட்டியது.
“நீ வா. நாம போயி சாப்பிட்டு வரலாம். இங்க வேணாம்” என்றதும் அவனும் சற்றே உற்சாகமாகி கிளம்பினான். மீண்டும் காரை எடுத்துக்கொண்டு முக்கிய சாலையில் ஏறி ஃபைசாபாத் நோக்கி செல்லலானோம். காரில் இளையராஜா ‘சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப்போல வருமா?’ பாடிக்கொண்டிருந்தார்.
2018-க்கு முன்பு வரை ஃபைஸாபாத் நகரம்தான் மாவட்டத்தின் தலைநகரமாக இருந்தது. இப்போதும் பெயர் மட்டுமே மாறியிருக்கிறதே தவிர நகரம் அப்படியேதான் இருந்தது. சற்றே நெருக்கடியான ஊர்தான் எனினும் சில நகரங்களின் வாசனை நம்மை எப்போதுமே சிநேகத்தோடு அணைத்துக் கொள்ளும். 2017-இல் அங்கே பணி நிமித்தமாக வந்திருந்தபொழுது, நகரின் ஒதுக்குப்புறமாக இருந்த அயோத்தியாவுக்கு அருகில் நுழையும்போதே இருந்த ஒரு சிறு உணவகத்தில் உண்ட ருமாலி ரொட்டியும், அதனோடு தரப்பட்ட மட்டன் கறியும் கூட அந்த நகரத்தின் வாசனையை இன்னும் அதிகமாக எடுத்துரைத்து மனதிற்குள்ளேயே தங்க வைத்திருந்தது என்றும் கூறலாம்.
அப்படியான ஒரு உணவகத்தைதான் தேடிக்கொண்டே மெல்ல வண்டியை செலுத்திக் கொண்டிருந்தேன். பஜாஜா பகுதியை தாண்டி செல்லும்போதுதான் கவனித்தேன் பெயர்ப்பலகைகளில் எல்லாமே சுபாஷ் நகர் என்று மாறியிருந்தது. பஜாஜா என்றால் உருதுவில் ‘துணி சந்தை’ என்று பொருள். ஆனாலும் கூட கடை வைத்திருந்த பெரும்பாலானவர்கள் உருது பேசும் முஸ்லிம்களாகத்தான் இப்போதும் இருக்கிறார்கள் என பெயர்ப்பலகையிலேயே விளங்கியது.
பஜாஜா தாண்டி பஹு பேகம் கல்லறை இருக்கும் இடம் வரை வந்தும் அப்படி எந்தவொரு கடையும் தென்படவேயில்லை. ஃபெலிக்ஸ் எதுவும் பேசாமல் தனது மொபைலில் அவனது காதலியோடு வாட்சப்பிக் கொண்டிருந்தான். எனக்கு பசி இப்போது பலமடங்காகி இருந்தது. சற்றே விசாலமாக இருந்த அந்த சாலையின் முனையில் வண்டியை நிறுத்திவிட்டு, “போய் விசாரிச்சிட்டு வர்றேன்” என அவனிடம் கூறிவிட்டு இறங்கி நின்று நாலாபுறமும் கண்களை ஓடவிட்டேன்.
நான் வண்டியை நிறுத்திய இடத்திற்கு அருகிலேயே இருந்த ஒரு பான் விற்கும் கடையில் சிகரெட் ஒன்றை வாங்கிப் பற்றவைத்துக் கொண்டே, “பாய், இங்க நல்ல நான்-வெஜ் சாப்பாடு கிடைக்கிற கடை பக்கத்துல எங்க இருக்கு?” என மெல்ல வினவினேன்.
அவர் தனது தாடியை மெல்ல நீவிக்கொண்டே, “இங்க கிடைக்கிறது கஷ்டம். மெயின் ஏரியால இருந்த முக்காவாசி கடை இப்ப எடுத்துட்டாங்க கோவில் வந்ததுல இருந்து. குலாப் பரி பக்கத்துலதான் நல்ல கடை இருக்கும். இல்லைன்னா இங்க சின்னதா சுமாராதான் இருக்கும்” என்றுவிட்டு அடுத்து வந்தவருக்கு பான் மடிக்க ஆரம்பித்தார்.
நான் இப்போது எனது ஐந்து நாளைய தாடியை மெல்ல தடவிக்கொண்டே புகையை ஆழமாக உள்ளிழுத்துக் கொண்டிருந்தேன். கடைக்காரர் வெளியில் வந்து என் அருகில் நின்று, ”வண்டியில யாரு? வெளிநாடா” என்றார்.
“ஆமா. ஜெர்மனிக்காரன்”
“ம்ம். கோவில் வந்ததுல இருந்து நிறைய மாறிடிச்சி. நாளைக்கழிச்சி எலக்ஷன் ரிசல்ட் வந்ததும் அது இன்னும் மாறும். அவ்ளோ கடை இருந்தது பஜார்ல. வெளியூர் யாவாரிங்க நிறைய வந்துட்டாங்க இப்போ குஜராத் சைடுல இருந்து. நிறைய கைமாறுது. அதான் சாப்பாடு கடையும் மாறிட்டிருக்கு. நீங்க உள்ள போங்க. ரெண்டு மூணு நல்ல கடைங்க இருக்கு” என்று அவர் கூறிக்கொண்டே இருந்தபோது, காரின் கண்ணாடியை இறக்கி ஃபெலிக்ஸ் அழைத்தான் என்னை.
“வா போகலாம். வர்ற வழியில ஒரு பழக்கடை இருந்தது. வாங்கிக்கலாம் ஏதாவது. நாளைக்கு நாம லக்னோலயே தங்கிக்கலாம். I don’t feel any good vibe here…” என்றான். நான் சிகரெட்டை அணைத்துவிட்டு வண்டியை அந்த பழக்கடை நோக்கி செலுத்த ஆரம்பித்தேன்.
மறுநாள் காலையில் இயந்திர வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு மதியமே லக்னோ நோக்கி கிளம்பிவிட்டோம். ஹோட்டலில் அவனை இறக்கி விட்டுவிட்டு, “உனக்கு நாளைக்கு எத்தனை மணிக்கு ஃபிளைட்?” என்று கேட்டேன்.
“காலையில பத்தரை மணிக்கு”
“நான் எட்டு மணிக்கு உன்னை பிக்கப் பண்ணிக்கிறேன். கரெக்ட்டா இருக்கும்” என்றுவிட்டு எனது அறைக்குச் செல்லும் வழியிலேயே அங்கே சுமாராக இருக்கும் ஒரு கடையில் ஹண்டி பிரியாணி ஒன்றை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டேன்.
காலை ஏழுமணிக்கு எழுந்து தயாராகி, ஃபெலிக்ஸை அழைத்துக்கொண்டு விமான நிலையத்தில் அவனுக்கு பிரியாவிடை தந்துவிட்டு, நேராக அலுவலகம் சென்றுவிட்டு இருந்த சில வேலைகளை முடித்துவிட்டு மீண்டும் அறைக்குத் திரும்பும் வழியெங்கும் பட்டாசுகள் வெடிக்கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. ‘மீண்டும் அவர்கள் ஆட்சிதான் என்பது அதற்குள்ளாகவா முடிவாகிவிட்டது?’ என்று யோசித்துக்கொண்டே அறைக்கு வந்து தொலைக்காட்சியை ஓடவிட்டேன்.
“முக்கியத் தொகுதியான அயோத்யாவில் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் திரு.அவதேஷ் பிரசாத் கிட்டத்தட்ட 54 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்” என ஒலித்த செய்தியைக் கேட்டவாறு ஸ்விக்கியில் ஒரு மட்டன் பிரியாணி ஆர்டர் செய்துவிட்டு அப்படியே என் நாற்காலியில் சரிந்து கொண்டேன்.
தூரத்தில் இன்னும் பட்டாசு சத்தம் கேட்டுக்கொன்டே இருந்தது.



