
பரியேறும் பெருமாள் படத்தின் ‘நான் யார்’ பாடலில் ஆற்றுக்குள் இருக்கும் நபரை ஒரு போலிஸ் பெரிய தடியால் அடிப்பதைப் போல ஒரு காட்சி வரும்.மாஞ்சோலை டீ எஸ்டேட் தொழிலாளர்களின் நிர்வாகத்திற்கு எதிரான போராட்டத்தை ‘The Bombay burmah trading corporation’ என்கிற தனியார் கம்பெனியும் அப்போதைய திமுக அரசும் எப்படி ஒடுக்கியது என்பதை அப்படியே பதிவு செய்த காட்சி அது.மறக்கவே கூடாத ஒரு வரலாற்றுத் துயரத்தின் நினைவுக்கூறல்.
The Bombay burmah trading corporation என்ற கம்பெனியின் சுரண்டலை எதிர்த்து மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய தொடர் போராட்டங்களில் சுமார் 600 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்படுகின்றனர்.கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை விடுதலை செய்யக்கோரியும் நியாயப்படி சேர வேண்டிய கூலி உயர்வைக் கேட்டும் மாவட்ட ஆட்சியரிடம் பேரணியாக சென்று மனு கொடுப்பது என்று முடிவு செய்யப்படுகிறது.
அதன்படி, “விலக்கு… விலக்கு… 600 அப்பாவி தொழிலாளர்களின் கைவிலங்குகளை விலக்கு!'”
“உங்க சொத்தையா கேட்டோம்? நாங்க செத்துப்போறதுக்குள்ள எங்க கூலியதான கேட்டோம்?”
“கெஞ்சமாட்டோம் கெஞ்சமாட்டோம் உங்க காலில் விழுந்து கெஞ்சமாட்டோம்”
“அஞ்சமாட்டோம் அஞ்சமாட்டோம் உங்கள் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்” என்கிற உரிமை முழக்கங்களோடு 600 பேரின் விடுதலைக்காகவும்,நியாயமான ஊதியத்துக்காகவும் நடந்த போராட்டத்தில்தான் அரசு இந்த கொடுரமான ஒடுக்குமுறையை ஏவியது.
குழந்தை வைத்திருக்கிற பெண்களை போலிஸ் அடிக்காது, தண்ணிருக்குள் இறங்கினால் பூட்ஸ் அணிந்திருக்கிற போலிஸ் பாவம் பார்த்து விட்டுவிடுவார்கள் என்று நம்பிய அப்பாவி மக்களின் நம்பிக்கை கண்முன்னே தவிடுபொடியானது.காவல்துறையின் லத்திகளும்,பூட்ஸ் கால்களும் ஆண்,பெண்,குழந்தைகள் என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல் சுழன்றது.முடிவு… ஒன்றரை வயது குழந்தை உட்பட்ட 17 பேரை ஒரு தனியார் கம்பெனிக்காக துள்ளத் துடிக்க கொன்றது அன்றைய திமுக அரசு.
‘ஒரு தனியார் கம்பெனியை எதிர்த்துதானே போராடுகிறோம், ஜனநாயக முறைப்படிதானே போராடுகிறோம் நம்மை பாதுகாக்கத்தான் போலிஸ் இருக்கிறதே…’ என்ற நம்பிக்கையுடன் வந்த அப்பாவிகளை நிற்க வைத்து கழுவில் ஏற்றினார்கள்.ஒரு தனியார் கம்பெனிக்கு எதிரான போராட்டத்தில் அரசு ஏன் தன் சொந்த மக்களையே சுட்டுத்தள்ள வேண்டும் என்ற கேள்வியில்தான் அத்தனை அரசியலும் அடங்கி இருக்கிறது.கீழவெண்மனி தொடங்கி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடு வரையிலான வரலாறுகளும் இந்த அரசு முதலாளிகளுக்கானது என்பதைத்தான் மீண்டும் மீண்டும் அழுத்தந்திருத்தமாக கூறிக்கொண்டே இருக்கின்றன.
‘அரசாங்கங்கள்’ மாறலாம் ‘அரசு’ மாறாது.அது முதலாளிகளுக்கானது,உழைக்கும் மக்களுக்கு எதிரானது என்ற உண்மையை உழைக்கும் வர்க்கம் உணரும்பட்சத்தில் அது அரசை தூக்கியெறிந்து தங்களுக்கு பொருத்தமான ஒன்றை அமைத்துக்கொள்ளும்.
மாஞ்சோலை தியாகிகளுக்கு வீரவணக்கம்..