இணைய இதழ் 111சிறுகதைகள்

நேசப் பிரவாகம் – ரவி அல்லது

அதிகாலையில் இரயில் நிலையத்தில் இறங்கியதும் தொற்றிய உணர்வை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. இரயில் நிலையம் முற்றிலுமாக மாறி இருந்தது. வெளியில் வரிசையாக ஆட்டோக்கள் நின்று கொண்டு இருந்தது.

“சாய் கார்த்திக் ஹோட்டல் போக வேண்டும்.”

அவர் கேட்ட தொகையை எதுவுமே சொல்லாமல் ஏற்று ஆட்டோவில் ஏறி விட்டேன். இரயில் நிலையம் நுழையும் இடத்தில் இருந்த மரக்கடை அதே பழைய ஓட்டுக்கட்டடத்தில் பழுதாகி பூட்டிக்கிடந்தது. இது எனக்கு முந்தைய செட்டில் இங்கிலீஸ் மீடியத்தில் படித்த கண்ணாடி கணேஷின் இடம் என்று ஹனிபா சொன்னார்.

ஆட்டோ வெளியே வந்ததும் இதுதான் அதிராம்பட்டினம் ரோடு என்று நினைத்துக் கொண்டேன். எதிர்புறம் இருந்த வீட்டிற்கு இன்னும் பிரச்சினை தீரவில்லை போலும்.. சுவற்றில் முளைத்திருந்த ஆலமரம் செடி பெரிய நிழல் கொடுக்கும் மரமாக வளர்ந்து இருந்தது. அதன் கீழ் ரோட்டில் சைக்கிள் தள்ளு வண்டிகள் தார்ப்பாய் சுற்றி நிறுத்தப்பட்டு இருந்தன.

ஆட்டோ பஸ் ஸ்டாண்டு வந்தபோது பெரியார் நின்று கொண்டு இருந்தார். பெரிய குளமாக இருந்த இடம் பேருந்து நிலையமாக மாறி இருந்தது. வழக்கம் போலவே முகப்பில் தஞ்சாவூர் பஸ் நின்றது. ஆவின் பால் கடையில் சிலர் பாலோ டீயோ குடித்துக் கொண்டு இருந்தனர்.

பழைய பஸ் ஸ்டாண்டை பார்த்ததும் முனையில் தஞ்சாவூர் பஸ் நிற்பது நினைவுக்கு வந்தது. சந்திரா பஸ், பெரியநாயகி அம்பாள், திருமுருகன் பஸ், ரவி பஸ், மீரா பஸ், ராஜ்கபூர், எஸ்.கே.நாதன் இவைகளெல்லாம் இப்போதும் ஓடிக்கொண்டிருக்குமா என்று தெரியவில்லை. அரசு மருத்துவமனையை ஒட்டி இருந்த சிறைச்சாலை புதிய முகப்புச் சுவராக மாறி இருந்தது. அதன் பக்கத்தில் ரிஜிஸ்டர் ஆபீஸ் புதிதாக கட்டி இருந்தார்கள். பழனியப்பன் தெரு பழைய அடையாளமற்று இருந்தது.

மணிக்கூண்டு டவரை உடைத்து சிறிய கடிகாரம் ஒரு தூணில் வைத்து இருந்தார்கள். மணிக்கூண்டும் காந்தி பார்க்கில் அடிக்கும் சங்கும்தான் ஊரின் சிறப்பான அடையாளம். இப்பொழுதெல்லாம் சங்கு அடிப்பார்களா என்று தெரியவில்லை.

ஆட்டோவை விட்டு இறங்கும்போது தான் கவனித்தேன் முன்னால் ஆட்டோ டிரைவர் ஓஷோவின் ‘கடவுள் உங்கள் உள்ளே இருக்கிறார்’என்ற புத்தகத்தை செருகி வைத்திருந்தார். அது ரொம்ப பழைய புத்தகமாக இருந்தது. இது தமிழில் வந்த ஓஷோவின் முதல் புத்தகங்களில் ஒன்று. வேடிக்கை பார்க்காமல் இவரிடம் பேசிக்கொண்டு வந்திருக்கலாமோ என்று தோன்றியது.

இங்கு வந்ததே ஊரைப் பார்க்க வேண்டும். சிலரைச் சந்திக்க வேண்டும் என்பதனால் கூட அவரிடம் பேச முடியாமல் போயிருக்கலாம்.

மூன்று முப்பதுக்கு இரயில் வந்ததிலும் ஒரு வசதி இருந்தது. லாட்ஜில் லக்கேஜை வைத்துவிட்டு ஊரை ஒரு முறை சுற்றி வந்துவிடலாமென கீழே இறங்கியதும் இடதுபக்கம் செல்வோமா வலதுப் பக்கம் செல்வோமா என்ற குழப்பம் வந்தது.

மணிக்கூண்டு வழியாக செல்லலாமென நடந்த பொழுது கடைத்தெரு முற்றிலும் மாறி இருந்தது. இரத்தினம் பிள்ளை டாக்டர் போர்டைப் பார்த்ததும் ஐந்து ரூபாய் டாக்டர் விஜய்-யின் படம் ஞாபகம் வந்தது. உண்மையிலையே இவர்தான் ஐந்து ரூபாய் டாக்டர்; இல்லை அவர் அப்போது இரண்டு ரூபாய் வாங்குவார்.

முன்பு ஒரு முறை ஜனாதிபதி வெங்கட்ராமன் அண்ணன் வீடு மட்டும் மாறாமல் இருக்கிறது என்று எவரோ சொன்னது நினைவுக்கு வர, திருப்பிப் பார்த்தால் அப்படி ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. பூம்புகார் ஜவுளி ஸ்டோர்ஸ் அப்படியே இருந்தது. கொழும்பு ஸ்டோர் சாகர் என்று மாறி இருந்தது. ஊரின் மிகவும் உயரமான கட்டிடம் கொழும்பு ஸ்டோர்.

சின்னையா தெரு அதன் பழைய நிலையிலிருந்து முற்றிலும் மாறி வேறு ஏதோவொரு தெருவில் நடப்பதாகத் தோன்றியது.

வீரா தியேட்டர் நீண்ட காலமாக மூடிக்கிடப்பதற்கான அடையாளமாக புற்கள் காடு போல மண்டிக்கிடந்தது. நீலா தியேட்டர், முருகையா தியேட்டர், அய்யா தியேட்டர், தேவா தியேட்டர் இவைகளில் எதுவெல்லாம் இருக்குமெனத் தெரியவில்லை.

ப்ரைட் ஸ்வீட் கடை அதே சைசில் புதுப்பொலிவுடன் காணப்பட்டது. ஓனர் பாய் வெள்ளிக்கிழமை வாரா வாரம் தவறாமல் படம் பார்க்க கூடியவர். ராஜாமணி தியேட்டரில் 1.50 பைசா டிக்கெட் இல்லாததால் நான் கவுண்டரை விட்டு வெளியே வரும்போது அவர்தான் முதல் வகுப்பு 04.50 டிக்கெட் வாங்கிக் கொடுத்தார். நான் எவ்வளவோ மறுத்தும் டிக்கெட்டைப் பையில் வைத்துவிட்டு அவர், ‘படம் போடப்போறாங்க வாப்பா’ என்றபடி  உள்ளே போய்விட்டார். என்னால் கடைசிவரை அந்த 04:50ஐ சேமித்துக் கொடுக்க முடியவில்லை.

கோர்ட் புதிதாக மாறி இருந்தது. இங்கு குதிரை வண்டிகள் வாடகை கார்கள் எல்லாம் இருக்கும். அவைகள் இருப்பதற்கான எந்த அடையாளமும் தற்போது இல்லை. காலம்தான் எத்தனை மாற்றங்களைக் கொடுத்து விடுகிறது!

 ஆண்கள் பள்ளி ரோட்டில் திரும்பினால் முனையில் கனகேசா மருத்துவமனை பெரிய கட்டிடமாக இருந்தது . பாலகிருஷ்ணன் டாக்டர் வீரா தியேட்டருக்கு முன்பு உள்ள சந்தில் ஓட்டு வீட்டில் இதற்கு முன் இருந்தார். அதன் வழியாகத்தான் கெமிஸ்ட்ரி பாலசஞ்சீவி சார் வீட்டிற்கு போகவேண்டும்.

மாறி இருக்கும் கட்டிடங்களைப் பார்க்காமல் கண் பள்ளியின் நுழைவாயிலைத் தேடத் துவங்கியது. பேருந்துகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரமாக நிறுத்தி இருந்ததில் தூரத்திலிருந்து பார்ப்பது சிரமமாக இருந்தது. அநேகமாக இந்த மருத்துவமனை வைத்திருப்பவர்கள்தான் இந்த பேருந்துகளின் உரிமையாளராக இருக்கவேண்டும்.

ஸ்கூல் காம்பவுண்ட் புதிதாக கட்டி அதில் ஓவியங்களும் பொன்மொழிகளும் எழுதப்பட்டு இருந்தது. முன்பிருந்த வழியிலையே புதிதாக நுழைவு வாயில் வளைவு கட்டி இருந்தார்கள்.

இந்த என்ட்ரன்சில்தான் சைக்கிளில் பால் வியாபாரம் செய்பவர் என் மீது மோதி என் முட்டியில் சிராய்த்து இரத்தம் வழிந்தது. ஹெட்மாஸ்டர் மாப்பிள்ளைய்யன் சார்தான் கைத்தாங்கலாக அழைத்துச்சென்று அவர் ரூமில் டின்ஞ்சரை வைத்துவிட்டார். அந்தப்பழக்கம்தான் எனக்கு பின் நாளில் படிப்பிற்கான பல கையெழுத்துகள் பெற உதவியாக அமைந்தது. நல்ல மனிதர்.

எதிரில் அண்ணுசாமி ஐயா வீடு அப்படியே இருந்தது. அண்ணுசாமி ஐயா வீட்டிற்கு பக்கத்து வீடு இடித்து பேக்கரியாக மாறி இருந்தது. ஐயா வீட்டின் காம்பவுண்டும் அப்படியே இருந்தது. அது மூன்றடியாக உயரம் குறைந்து இருந்தது. அதில் அப்பல்லோ கம்ப்யூட்டர் எஜூகேஷன் என்று ஆங்கிலத்தில் எழுதி இருந்தார்கள்.

இந்த காம்பவுண்டு ஓரமாகத்தான் பன்னீர் அண்ணன் காமிக்ஸ் புத்தகம் விற்பார். அதற்கு அடுத்து பாட்டி குச்சி மிட்டாய், கடலை மிட்டாய், குருவி ரொட்டி, இலந்தைப்பழம், நெல்லிக்காய் விற்கும். அதற்கு அடுத்து சையது அண்ணன் பாத்திமா ஐஸ் பெட்டியை சைக்கிளில் வைத்து குச்சி ஐஸ் விற்றுக்கொண்டு இருப்பார்.

இந்த சையது அண்ணன் ‘தேன் கூடு’ என்று கையெழுத்துப் பிரதி அவர் நண்பர்களுடன் நடத்தினார். அவர்கள் இருவரின் பெயர்கள் கார்த்திகேயன் என்று நினைக்கிறேன். யூமா வாசுகி அவர்கள் ஒரு நேர்காணலில் அவரது ஆரம்ப கால நண்பர் முகமது காசிம் என்பவருடன் வீடு வீடாக புத்தகம் சர்குலேஷன் போடுவோம் என்று சொல்லி இருப்பார். அவரது அண்ணன்தான் இந்த சையது பாய். ஹனிபாவுக்கும் அண்ணன்தான். இவர்கள் மூவருமே எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்கள். மூவருமே தொழில் செய்வதில் வல்லவர்கள். சையது அண்ணன் வித விதமாக அப்பொழுதே ஐஸ் போட்டுக் கொண்டு வருவார். ஸ்கூலில் பசங்க ‘இமய மலையிலிருந்து ஐஸ் வெட்டி எடுத்துக்கிட்டு வர்றாங்க’ என்று பேசிக் கொள்வார்கள். சையது அண்ணன் கையெழுத்து அச்சுக் கோர்த்தது மாதிரி அழகாக இருக்கும்.

பன்னீர் அண்ணன் கடையில் விதவிதமான பழைய காமிக்ஸ் புத்தகங்கள் இருக்கும். பாக்கெட் நாவல், க்ரைம் நாவல், சூப்பர் நாவல், குடும்ப நாவல், ராணி முத்து இன்னும் ஆனந்த விகடன், குமுதம், குங்குமம், கல்கி, தாய், சாவி, இதயம் பேசுகிறது மற்றும் இவைகளில் வந்த தொடர்கதைகளை இரண்டு மூன்று பாகமாக தைத்து வைத்து இருப்பார். இவைகள் இல்லாமல் பெரிய நாவல்கள் பைண்டிங் செய்து தனியாக அடுக்கி வைத்திருப்பார்.

பத்து பைசா, இருபது பைசா, இருபத்தி ஐந்து பைசா என்று ஒவ்வொன்றுக்கும் வாடகை வைத்திருந்தார். வகுப்பிற்கு செல்லும்போதே பலர் வாங்கிக்கொண்டு செல்வார்கள். மதியம் கொடுத்து விடுவார்கள். தமிழ் நாட்டிலையே எங்கள் பள்ளி மட்டும்தான் காலையில் ஒன்பதுக்கு ஆரம்பித்து மதியம் ஒரு மணியுடன் வகுப்புகள் முடிந்துவிடும் பள்ளிக் கூடம்.

நான் பி.டி பீரியட் அல்லது மதியம் ஒரு மணிக்கு கிளாஸ்விட்ட பிறகு வாங்கிப் படிப்பேன். புத்தகத்தை கிழிக்காமல் கொடுப்பதால் மட்டும் இல்லை; அண்ணன் அடுத்த செட் புத்தகங்கள் வாங்குவதற்குள் நான் அவர் வைத்திருக்கும் காமிக்ஸ், நாவல்களை படித்து விடுவதாலும் என்னை அவருக்கு ரொம்பப் பிடிக்கும்.

பன்னீர் அண்ணன்தான் சென்னை பிராட்வேயில் சினிமா பாட்டுப் புத்தகம்,கோலப் புத்தகமெல்லாம் வரவழைத்து இங்குள்ளவர்களுக்கு கொடுப்பார். அதில் ஒருவர் நீலா தியேட்டர் வாசலில் விற்றுக்கொண்டு இருப்பார். அங்கு மூனு சீட்டு, கொட்டை குலுக்குவதெல்லாம் காண்டா விளக்கு வெளிச்சத்தில் நடக்கும். அண்ணன் பாட்டுப் புத்தகம் விற்கிறவரிடம் பணம் வாங்க வந்தவர் நான் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து திட்டினார்.

“உன்னைய நல்லப் பையன்னு நினைச்சேன். இந்தக் காவாலித்தனம் வேற பண்ட்றியா.”

“ஐய்யோ. அண்ணே… நான் வேடிக்கைப் பார்த்தேண்ணே. அது விளையாடல்லாம் என்கிட்ட ஏதுண்ணே காசு? உங்களுக்கே நான் நாப்பது காசு கொடுக்கனும்ண்ணே. அதுவே ஆறு மாசமா கொடுக்க முடியாம இருக்கேன்.”

அண்ணனுக்கு என் மேல் இரக்கம் வந்துவிட்டது.

“போலீஸ் வந்தா வேடிக்கை பார்த்தவன். விளையாண்டவன்னு பார்க்க மாட்டாங்க. ஸ்டேசன்ல வச்சி உரிச்சி எடுத்துருவாங்க. அங்க குலுக்குறான் பாரு அவன். கூட்டத்தில் நிக்கிற மூனு பேரு எல்லாம் கூட்டாளி பயலுவ. எல்லாரு மேலயும் கேஸ் இருக்கு. உள்ள போயிட்டு வெளியே வந்தவுடனே இதைத்தான் பண்ணுவாங்க. அடுத்த வாட்டி பார்த்தேன். உங்கள் வீட்டில வந்து சொல்லிருவேன்.” என்றார்.

அடுத்த நாள் மோக முள் படித்துக் கொண்டிருந்தபோது வீட்டைப் பற்றிக் கேட்டார். ‘அப்பா இறந்ததும் அம்மா காரியத்துக்கு ஊருக்கு போனவர்கள் திரும்பி வரவில்லை. எனக்கு இங்கே இருந்து ஊருக்கு போகப் பிடிக்கவில்லை. அம்மா ப்ரண்ட் வீட்டுத் திண்ணையில் தங்கி இருக்கிறேன். மாதா மாதாம் மணி ஆர்டரில் பணம் வரும். அதை வைத்து தான் செலவு செய்து கொள்கிறேன்’ என்றேன்.

அதன் பிறகு ஒரு நாள் என்னை அண்ணா நகர் பூமியாங்குளத்தில் உள்ள அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பனை மட்டை வேய்ந்த கூரை வீடு. கருவேல மரங்களுக்கு இடையில் பன்றிகள் நிறைய மேய்ந்து கொண்டிருந்தது. அங்குதான் பலபேர் மலம் கழிப்பார்கள் என்பது சொல்லாமலேயே தெரிந்தது. அண்ணன் இந்த இடம் வாங்கி ஆறு மாசமாச்சு என்றது. அண்ணன் சொந்த வீடு என்றதும் பார்த்த அத்தனை அசௌகரியங்களும் மறைந்துவிட்டது. கண்ணகி அக்கா ஆறு மாத பெண் குழந்தையை கையில் வைத்து இருந்தது.

அம்மா ஊருக்குச் சென்றதிலிருந்து நான் இங்கு எவர் வீட்டிலும் சாப்பிட மாட்டேன் என்பது பன்னீர் அண்ணனுக்குத் தெரிந்ததால் என்னை அவர் ஒன்றும் சொல்லவில்லை. அக்காதான் ரொம்பவும் மல்லுக்கட்டிக்கிட்டே இருந்தது. ‘டீயாவுது குடிடா ‘என்று சொன்னதும் தண்ணீர் குடித்துவிட்டு கிளம்பிவிட்டேன்.

‘அநாதைப் பய சோத்துக்கு வீங்கி சாப்பிட வந்துட்டான்னு யாராவது சொல்லிருவாங்க. பார்த்துப் பத்திரமா இருந்துக்கப்பா’ என்று அம்மா ஊருக்கு போகும்போது சொல்லிவிட்டுச் சென்றதை வைராக்கியமாக கடை பிடித்தேன். அதுதான் எனக்கும் அம்மாவுக்குமான கடைசி சந்திப்பு உரையாடல் எல்லாமே.

பனிரெண்டாம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு நெருங்கிக்கொண்டிருக்க பணம் வராததால் ஊருக்குப் போனேன். அம்மா இறந்து போனதாகச் சொன்னார்கள். இங்கு வந்து இதை நான் நண்பர்கள் யாரிடமும் சொல்லவில்லை. அம்மாவின் ப்ரண்டிடம் மட்டும் சொன்னேன். அவர்கள் என்னைக் கட்டிப்பிடித்து அழுதார்கள்.

ஊரிலிருந்து வந்த பிறகு நான் சோகமாக இருப்பதைப் பார்த்த பன்னீர் அண்ணன் விவரங்கள் சொன்ன பிறகு எனக்கு லைப்ரரி டோக்கன் வாங்கிக் கொடுத்தார். காசாங்குளத்தில் உள்ள கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆபீஸை பழக்கிக் கொடுத்தார். அங்குதான் ரஷ்யக் கதைகள் எனக்கு அதிகம் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. அந்த தருணத்தில் எனக்கு அந்த கதைகள் மிகவும் ஆறுதலாக இருந்தது.

நான் பனிரெண்டாம் வகுப்பு முடிக்கும்போது கதை, கவிதை எழுதுவதில் தேர்ந்து இருந்தேன். ‘விடாமல் எழுதுடா உனக்கு எழுதுறது நல்லா வருது’ என்றார் பன்னீர் அண்ணன். நான் இங்கிருந்து கிளம்பும்போது ஆனந்த விகடனில் ஒரு துணுக்கு வெளியாகி இருந்தது. என்னைவிட பன்னீர் அண்ணன் ரொம்பவும் சந்தோஷப்பட்டார்.

விகடனிலிருந்து வந்த காக்கி கவரில் எனது முகவரி டைப் செய்து ஒட்டி இருந்ததை தடவிக்கொண்டே இருந்தார். அந்த வார ஆனந்த விகடனை பைண்டிங் செய்து எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்.

அதன் பிறகு அண்ணனுக்கு ஒரு கடிதம் அதற்கு பதில் கடிதம் பெறக்கூட முகவரி இல்லாத சூழல். அடுத்தடுத்து இடப்பெயர்வு எனக் காலம் எங்கேயோ தூக்கிக்கொண்டு சென்றுவிட்டது.

இந்தப் பன்னீர் அண்ணனைத் தேடித்தான் நாற்பது ஆண்டுகள் கழித்து இங்கு வந்திருக்கிறேன். எனக்கு இங்கு யாரையுமே தெரியாது. எவருடனும் எந்தத் தொடர்பும் இல்லை.

அண்ணுசாமி ஐயா வீடு அப்படியே இருந்தது பெரிய ஆறுதல். இந்த நேரத்தில் எதுவும் தொந்தரவு செய்ய முடியாது. விடிந்ததும் வந்து கேட்டுப் பார்க்கலாமென உள்ளே பார்வையைச் செலுத்தியபோது அவர் புகைப்படத்தில் லைட் எரிந்து கொண்டிருந்தது. துளிர் விட்ட ஒற்றை நம்பிக்கையும் கருகிப்போன சோர்வில் நடக்க ஆரம்பித்தேன்.

இத்தனை ஆண்டுகள் கழித்து நான் தேடிவந்த நபரை அறிவதற்கான எந்தவொரு குறிப்பும் என்னிடம் இல்லை என் வேலைகளுக்கு இடையில் இந்தப் பயணம் அவசியம் என்று தோன்றியது. அதற்கு சரியான காரணமும் இருந்தது.

மணிக்கூண்டு அருகில் செருப்பு தைத்துக் கொடுக்கும் காளி அண்ணன் என்று ஒரு வயதானவர் இருந்தார். இங்கிருந்த நாட்களில் நான் இரண்டு செருப்புகள்தான் வாங்கி இருக்கிறேன். அவைகளை இத்தனை ஆண்டுகள் பாவிக்க வைத்ததற்கு காளி அண்ணன்தான் காரணம்.

அந்த வயதில் சிறுவர்களிடம் செருப்பைப் பின்னாடி மிதித்து விளையாடும் பழக்கம் இருந்தது. அப்படி மிதிக்கும் எல்லோருமே தடுமாறி குப்புற விழுவார்கள் மற்றவர்கள் சிரிப்பார்கள். எனக்கு ஒரு முறை அதுபோல நடந்து செருப்பு கிழிந்ததில் நான் பட்ட வேதனை கொஞ்சம் நஞ்சமல்ல. ஒரு பைசாவாக இருந்தாலும் எண்ணி எண்ணி செலவு செய்ய வேண்டும். பல நாட்கள் தண்ணீர் மட்டும் குடித்து படுத்துக் கிடந்திருக்கிறேன்.

ஒரு முறை சென்னையில் திக்குத் தெரியாமல் தெருக்களில் திரிந்த பொழுது ஹனிபா, குமார், செந்தில் இவர்களை பாரீஸ் கார்னரில் பார்த்தேன். ‘வி.ஜி.பி போகிறோம். வர்றீங்களா?’ என்றார்கள். இரண்டு நாள் சாப்பிடாததால் அவர்களுடன் செல்வோமா என தயங்கியபோது ஹனிபா வற்புறுத்தினார். வி.ஜி.பியில் வட்டமாக இரும்பு கம்பியில் உட்காரும் சேர் மாதிரி மூன்று பேர் அமருமாறு சிறுவர்கள் சுற்றி விளையாடுவதற்கு ஒன்றை அமைத்திருந்தார்கள். அதில் செந்தில் உட்கார்ந்ததும் நானும் ஹனிபாவும் சுற்றினோம். அவர் கத்த ஆரம்பித்து விட்டார். நான் விடாமல் சுற்றினேன். அவர் குரலெடுத்து கத்தினார். நாங்கள் பயங்கரமாகச் சிரித்தோம். சுற்றியது நின்ற பிறகு அவர் வேறொரு இடத்தில் அமர்ந்து விட்டார். அவர் முகம் வாடியது. கண்கள் உள்ளே போய்க் கருவளையம் கண்களுக்கு கீழே வந்திருந்தது.

அவர்களைவிட்டு நான் பிரியும் வரை அவர் வாடிய முகம் மாறவில்லை. நான் டாய்லெட் போய்விட்டு வரும்போது குமாரிடம் இப்படியாக செந்தில் சொல்லிக்கொண்டு இருந்தார்.

“என் வாழ்க்கையில் இது மறக்க முடியாத நாள்டா. நான்தான் வரலேன்னு சொன்னேன். அப்புறம் என்னைய என்ன மயித்துக்கு கூட்டிக்கிட்டு வந்தே?”

எனக்கு மனதுக்கு சங்கடமாக இருந்தது. நான் கேட்டது அவர்களுக்குத் தெரியாது. ஒட்டுக் கேட்டுவிட்டதாக நினைப்பார்களோ என்று தயங்கினேன். அப்பொழுதெல்லாம் நான் எதற்குமே மிகவும் தயங்கக் கூடியவன். அன்று செந்திலிடம் கேட்க வேண்டிய மன்னிப்பு இன்னும் எனக்குள் அப்படியே இருக்கிறது. எந்தச் செயல் எவரை எப்படி நோக வைக்குமென்று எவருக்கும் தெரியாது. பொதுவாக நான் கிண்டலடிப்பேனே ஒழிய எவரையும் மன வேதனைப்படுத்த மாட்டேன். அன்றிலிருந்து இன்றுவரை எவர் மனதையும் நோகடித்ததில்லை. அன்று ஹனிபா யாருக்கும் தெரியாமல் என் பையில் ஐநூறு ரூபாய் வைத்தார். நான் எவ்வளவோ தடுத்தும் பிறகு எனக்கு கொடுத்துவிடுங்கள் என்றார். அந்தப் பணத்தை வைத்துதான் நான் பம்பாய் சென்றேன். வேலை செய்து கொண்டே டிகிரி படித்தது போன்றவை எல்லாம் அதன் பிறகுதான் நடந்தது. அவருக்கும் அந்தப் பணம் கொடுக்கப்படவேயில்லை.

தலையாரி தெருவில் இரு பக்கமும் கட்டடங்கள் நெருக்கமாக உயர்ந்திருந்தது. வாசன் ஆடியோஸில் லக்கி ஜவுளிக்கடை பெரிய கட்டிடமாக கட்டப்பட்டு படிகளில் மேலே ஏறுவது போல கடை உயரமாக கட்டி இருந்தார்கள். என் மனப் போக்கிற்கு சற்று நேரம் உட்கார்ந்தால் தேவலாம் என்று தோன்றியது. வாட்ச்மேன் ஸ்டூலில் உட்கார்ந்து ஷட்டரில் தலையை சாய்த்து படுத்துத் தூங்கிக்கொண்டு இருந்தார்.

எதிரே கண்ணன் ஸ்டோர் இரண்டு கட்டிடங்களாக மாறி இருந்தது. பழையதற்கு பக்கத்தில் நாட்டு மருந்துக்கடை, பூஜைப் பொருட்கள், டெக்கரேசன் பொருட்கள் எனப் புதிதாக கடையும் திறந்து இருந்தார்கள். பழைய கடையின் உள் பகுதியில் கதவைத் திறந்தால் அவர்கள் அவர்களின் வீட்டிற்குள் சென்றுவிடலாம். இந்தக் கடை ஓனரின் இரண்டு மகன்களில் மூத்தவர் எழுத்தாளர். இரண்டாவது மகன் இந்த கடையில் இருப்பார். எப்பொழுதாவது எழுத்தாளர் கண்ணாடி போட்டு டீ சர்ட்டில் உட்கார்ந்து இருப்பார். எழுத்தாளரின் கதைக்கு விமர்சனம் எழுதுவதாக நினைத்து அவர் எழுதிய நாவலின் அத்தனை வார்த்தைகளையும் எண்ணி ஒரு விமர்சனம் எழுதி அனுப்பினேன். இதைப் பன்னீர் அண்ணனிடம் சொன்னபோது திட்டினார். ‘பத்திரிக்கையில் பெயர் வரனும்ன்னு எதையும் எழுதாதே. அறிவுப்பூர்வமாக. உணர்வுப் பூர்வமாக எழுதக்கத்துக்க’ என்றார். இன்று வரை அதைத்தான் கடைபிடிக்கிறேன்.

எழுத்தாளர் அப்பா வெள்ளை வேட்டி சட்டையில் சட்டையை இரண்டு கைகளின் முட்டிக்கு மேலே மடித்துதான் போடுவார். அவரது இரண்டாவது மகன் ஒல்லியாக டக்ப் பண்ணி இருப்பார். கிழக்குப் பக்கமாக பார்த்து கல்லாப் பெட்டி மேஜையில் அவர் உட்கார்ந்து இருப்பதும் அவரது இரண்டாவது மகன் பவ்யமாக கைகட்டி வடக்குப் பக்கம் என்னை நோக்கி நின்று ரோட்டைப் பார்ப்பதுபோல பழைய நினைவு காட்சியாக ஓடியது.

“சார். இங்கெல்லாம் உட்கார கூடாது ஏந்திரிங்க சார்” என்றார் வாட்ச்மேன்.

ரோட்டில் வாகனங்கள் ஒன்றிரண்டு செல்ல ஆரம்பித்துவிட்டது. நான் பக்கத்தில் இருந்த கவரிங்க் கடைப்படியில் உட்கார்ந்தேன். இந்த இடத்தில்தான் வாசன் ஆடியோஸ் அண்ணாத்துரை கடை இருந்தது.

பயணக் களைப்பில் தூங்கி எழுந்தபோது மணி மதிய நேரத்தைக் கடந்து இருந்தது. சாப்பிட்டு முடித்து பூமியாங்குளத்திற்கு செல்ல ஆட்டோவில் இரயில்வே கேட்டைத் தாண்டியதுமே என் பழைய பதிவுகள் எதனோடும் அண்ணா நகர் ஒத்துப் போகவில்லை. பூமியாங்குளத்தில் பன்னீர் அண்ணனைப் பற்றி எந்தத் தகவலும் எடுக்க முடியவில்லை. இந்த மனச்சோர்வுக்கு டீ சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

பஸ் ஸ்டாண்டில் இறங்கி மெரினா ஹோட்டலில் டீ வாங்கி குடித்துக் கொண்டிருந்தபோது இருவர் யாரையோ ஒருவருவரைக் காட்டி பேசிக்கொண்டு இருந்தார்கள்.

“அதோ தாடி வச்சுக்கிட்டு உட்கார்ந்து இருக்கிறார் பாரு.. அவருதான் மெரினா ஆறுமுகம் இந்தக் கடை ஓனர். கம்யூனிஸ்ட் இங்கையே பல இடங்களில் கடை வச்சிருக்கார். வெளியூர்லயும் நிறைய கடைகள் வச்சிருக்காராம். ரொம்ப சிம்பிளாக இருப்பார். எல்லோரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பழகுவார்.”

அவர்கள் கம்யூனிஸ்ட் என்றதும் பன்னீர் அண்ணனைப் பற்றி கேட்கலாமா என்று தோன்றியது. ஆனால், அன்றைய காலகட்டத்தில் மெரினா ஹோட்டல் என்பதே இல்லாமல் இருந்ததால் அவரிடம் கேட்பதில் பலன் இல்லை என்று டீக்கு பணம் கொடுத்து விட்டு திரும்பி வந்தவன் மறுபடியும் உள்ளே சென்று அவரை மீண்டும் ஒரு முறை பார்த்தேன். சிவப்பு துண்டு போட்ட நான்கு பேர் உட்கார்ந்து இருந்ததில் ஒருவர் சொல்லிக் கொண்டு இருந்ததை அவர் தாடியைத் தடவியபடி கேட்டுக்கொண்டு இருந்தார்.

வந்த இரண்டு நாளும் உபயோகமான தகவல் எதுவும் பன்னீர் அண்ணனைப் பற்றி கிடைக்கவில்லை. நான் தங்கி இருந்த திண்ணை வீட்டை விற்று விட்டு அம்மாவின் தோழி வேறு ஊருக்கு சென்று விட்டார்களாம். ப்ரைட் ஸ்வீட் கடை பாய் இறந்து போய் இருந்தார். அந்த 4:50 பணத்தை இப்போது திருப்பிக்கொடுத்து அதை அவர் வாங்கி இருந்தால் அவர் முகபாவனை என்னவாக இருக்கும் என்பதை நினைக்கும் போதே மகிழ்ச்சியாக இருந்தது.

குருவி சோப்புக்கு எதிராக காசாங்குளம் செல்லும் வழியில் குணசீலன் டெய்லர் இருந்தார். அவர் பத்திரிக்கைகளுக்கு துணுக்கு, கேள்வி பதில்கள் பகுதிக்கு கடிதம் அனுப்புகிறவர். குமுதம் அரசு பதில்களில் ஆர்.குணசீலன் என்று பெயர் வரும். அவர் கடையும் பூட்டி இருந்தது. ‘ரெண்டு மூனு நாளாக பூட்டி இருக்கு. அவரோட ப்ரண்ட் கவுன்சிலர். பிள்ளையார் கோயில் கிட்ட வீடு இருக்கு. கேளுங்கள்’ என்றார்கள். அவரின் வீடும் பூட்டி இருந்தது.

அரச மர பிள்ளையார் கோயிலைக் கடந்து காசாங்குளத்தில் உள்ள பார்ட்டி ஆபீஸில் தோழர் பக்கிரிசாமியைத் தேடினால் அவர் டெல்லிக்கு மாநில மாநாட்டிற்கு போய்விட்டதாக சொன்னார்கள். பன்னீர் அண்ணனைப் பற்றி எதுவும் தெரியாது என்று சொன்னார்கள்.

நான் பன்னீர் அண்ணனைத் தேடும் வேலையைக் கைவிட்டு இரவு 01:30 இரயிலைப் பிடிக்க அறை நோக்கிக் கிளம்பினேன். என் வாழ்வில் இந்த இரண்டு நாட்கள் மகத்தானது. நான் ஓடித்திரிந்த ஊர் அல்ல இது. இது முற்றிலும் மாறிப்போன வேற ஊர். ஒரு வேளை பன்னீர் அண்ணனைப் பார்த்திருந்தால் மீண்டும் உறவு வேர் விட்டிருக்குமா என்று தெரியவில்லை.

ஸ்விச் ஆஃப் செய்திருந்த போனை ஆன் செய்யலாமா என்று தோன்றியது. பாவம் முனியாண்டி எத்தனை சிரமங்களுக்கு ஆட்பட்டானோ தெரியவில்லை.

சாய் கார்த்திக் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு மேலே ரூமிற்கு படி ஏறலாம் என்று திரும்பும்போது பருத்திப்பால் வண்டி மணி அடித்துக்கொண்டு அன்று இருந்ததுபோல் அவரே வயதானவராக இப்பொழுதும் தள்ளிக்கொண்டு போனார். எனக்கு ரெக்கை முளைத்ததுபோல அவரிடம் பறந்து சென்றேன்.

“குடிக்கிறீங்களா… பார்சலா சார்.”

“குடிக்கனும். உங்கள் கிட்ட கொஞ்சம் பேசணும் சார். பாவா மெடிக்கல் ஓரமாக நிறுத்துங்க.”

அவர் ஓரமாக வண்டியை நிறுத்தினார்.

“சொல்லுங்க சார்.”

“பாய்ஸ் ஹைஸ் ஸ்கூல்க்கிட்ட பன்னீர்ன்னு ஒருத்தர் காமிக்ஸ் புத்தகங்கள் போட்டு வைத்திருப்பாரே. அவரைத் தெரியுமா.”

“ஓ…. நம்ம பன்னீரா. அவன் செத்து இருவது வருஷசமாச்சே சார். துக்கத்துக்கு நான் போயிருந்தேன். கருமாதி அன்னைக்கு அவன் வச்சிருந்த புத்தகத்தை எல்லாம் ஒரு டாடா ஏசி புல்லா ஏத்துனாங்க. அவன் பொண்டாட்டி அழுதது இன்னும் என் கண் முன்னாடி நிக்குது. மருமகன் குடிகாரப் பய. வீட்டை விற்கனும்ன்னு அதை ஏதோ தஞ்சாவூர்க்காரங்ககிட்டே ஆயிரத்துக்கோ ஐநூறுக்கோ கொடுத்ததா பேசிக்கிட்டாங்க.”

எனக்கு அண்ணன் இறந்துவிட்டார் என்றதும் கண்ணில் நீர் வழிய ஆரம்பித்தது. கர்சீப்பை எடுத்து துடைத்துக்கொண்டேன். அண்ணன் உயிரோடு இருந்தால் நாமே இடம் வாங்கி ஒரு வீட்டைக்கட்டி அதற்குப் பக்கத்தில் லைப்ரரி கட்டிக் கொடுத்திருக்கலாமே என்று தோன்றியது. சிறிது நேரம் கழித்து அவரே தொடர்ந்தார்.

“நாலஞ்சு வருசத்துக்கு முன்னாடி அவன் மகளை மீன் மார்க்கெட்லப் பார்த்தேன். பூமியாங்குளம் வீட்டை அது புருஷன் வித்து குடிச்சே அழிச்சுட்டு இறந்துட்டானாம். அம்மாவும் இறந்துருச்சாம். அதுவும் அது மகனும் பெருமாள் கோயிலுக்கு முன்னாடி போகிற ஆத்துக்கரையில குடிசையில் இருக்கிறோம்ன்னு சொன்னிச்சு. அது பையன் எங்கயோ வேலை பார்க்கிறானோ ஏதோன்னு சொன்னிச்சு. ஞாபகம் வரமாட்டேங்குது சார். வயசாயிருச்சுல்ல.”

“அது பேர் என்ன சார்.”

“எனக்குத் தெரியல சார். ஆத்து வாய்க்கால் தூர் வாரியதுல. கரையில இருந்த குடிசைகளை அப்புறப்படுத்துனதா போன வருசம் கடைத்தெருவுல பேசிக்கிட்டாங்க சார் ஆமா நீங்க யாரு சார்?”

“அவர் ப்ரண்ட்” என்றேன்.

பருத்திப் பாலை பார்சல் கட்டச்சொல்லி வாங்கிக்கொண்டு கிளம்பும் போது அவர் என்னைக் கீழிருந்து மேல் வரை ஒரு முறை பார்த்தார். பன்னீர்க்கு இப்படி ஒரு நண்பரா என்பதுதான் அந்தப் பார்வை.

பனிரெண்டு மணிக்கு பாய்ஸ் ஹைஸ் ஸ்கூலுக்கு முன்னாடி வந்துவிட்டேன். அண்ணுசாமி ஐயா வீட்டு சுவருக்கு பக்கத்தில் சூப் கடை வியாபாரம் செய்தவர்கள் அந்த இடத்தை சுத்தம் செய்து இருந்தார்கள். கீழே ஈரமாக இருந்தது. மசால் வாடை அடித்துக்கொண்டு இருந்தது. நேற்று அவர்களிடம் கேட்ட போதும் அவர்களுக்கு எந்த விவரமும் தெரியவில்லை. நான் எதிர்ப்புறம் உள்ள கொடிக்கம்பக் கட்டையில் உட்கார்ந்தேன். மேலே பார்த்தால் மரத்திற்குள் எந்தக் கட்சிக்கொடி என்று தெரியவில்லை.

பழைய நாட்களைப் பற்றி யோசித்துக்கொண்டு இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. நான் எதிரே உள்ள அந்த இடத்திற்குச் சென்றேன். ஞாயிறு இரவு என்பதால் சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தது.

எனது பேக்கிலிருந்த அந்த விருதை எடுத்துக் கீழே வைத்து எனது போனில் புகைப்படம் எடுத்தேன். வலது கையில் பிடித்து இடது கையால் ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டேன்.

உலக எழுத்தாளர்கள், கவிஞர்கள் எல்லோரும் ஏங்கிக்கொண்டிருக்கும் இந்த விருதை அதன் வரலாற்றில் ஒரு பழைய சுவற்றுக்குப் பக்கத்தில் வைத்து படம் எடுத்தது. இதுதான் முதல் முறையாக இருக்கும். எனக்கு கிடைத்த இந்த இலக்கியத்திற்கான உலகின் உயரிய விருதை பன்னீர் அண்ணனிடம் காட்ட வேண்டும் என்றுதான் இங்கு வந்தேன். அவர்தான் என்னை எழுது எழுது என்று இலக்கியத்திற்குள் தள்ளி விட்டவர்.

நான் இரயில் நிலையம் கிளம்பலாமென நினைக்கும்போது எனக்குப் பக்கத்தில் ஒரு ஆட்டோ ரிவர்ஸ் எடுத்து வந்து நின்றது.

“சார்… இங்க என்ன பண்றீங்க?”

“இரயில்வே ஸ்டேசன் போக நிக்கிறேன்ப்பா. ஏய்…அன்னைக்கு என்னைய கூட்டிக்கிட்டு வந்தப் பையன்தானே.”

“ஆமாம் சார். கிராஸ் பண்ணிப்போயிட்டேன். சைட்ல தீடீர்ன்னு பார்த்தப்ப தெரிஞ்ச ஆளாக இருந்ததால ரிவர்ஸ் எடுத்துகிட்டு வந்தேன் சார். ஏறுங்க சார். ஸ்டேஷன்ல விட்டர்றேன்.”

புகைப்படங்கள் எடுத்ததில் நான் ஒரு புதிய உணர்வுக்குத் தள்ளப்பட்டு இருந்தேன். பன்னீர் அண்ணனுக்காக எடுத்து வந்த ஐந்து லட்சம் ரூபாயை பற்றி நான் யோசிக்காமலையே இருந்துவிட்டேன்.

“கரம்பயம் மாரியம்மன் கோயில் விடியக்காலம்பர காப்புக்கட்டப் போறாங்க சார். வீட்ல இருந்தேன். கஸ்டமர் போன் பண்ணி அன்னப்பூர்ணா தியேட்டருக்கு எதிர்ல ரதி மீனாவுல கோயிலுக்கான மணி பார்சல் வந்திருக்கு. காப்பு கட்டுறதுக்கு முன்னாடி கோயில்ல கொண்ட குடுத்திருப்பான்னாரு. போகும் போது தான் உங்களைப் பார்த்தேன் சார்.”

அவன் இப்போது ‘புல் தானாக வளர்கிறது’ என்ற ஓஷோ புத்தகம் வைத்திருந்தான்.அதுவும் பழைய புத்தகமாக இருந்தது.

திடீரென்று ஒரு எண்ணம் தோன்ற.

“தம்பி, உனக்கு அம்மா இருக்காங்களா.”

“இருக்காங்க சார்.”

“நீ யாரு என்னான்னு எனக்குத் தெரியாது. நீ நல்லவனா கெட்டவனான்னும் எனக்குத் தெரியாது. நான் எனது நண்பரைத் தேடி இங்கு வந்தேன். அவருக்காக பணம் கொண்டு வந்தேன். நான் இனி இங்கு இதுபோல் தனியாக வர முடியுமா இல்லை இனிமேல் இங்கு வரவே முடியாதான்னு எனக்கு எதுவுமே இப்போ தெரியாது. இதில் ஐந்து லட்ச ரூபாய் இருக்கு. நீ இரண்டரை லட்சம் எடுத்துக்க. இரண்டரை லட்சத்தை உன் அம்மா பேர்ல பேங்க்ல போட்டு அவரிடம் அதைக் கொடுத்துடு.”

ஆட்டோ கம்பியைப் பிடித்து முன்பக்கம் எம்பி ஓஷோ புத்தகத்தின் மீது பணப்பையை வைத்தேன். ஆட்டோ இரயில் நிலையத்திற்குள் நுழைந்து விட்டது.

“நான் சொன்னதற்கு மாற்றமாக செய்யமாட்டேன்னு. சத்தியம் செய்துவிட்டு. இதை எடுத்துக்க.”

அவன் வேகமாக வண்டியை ஸ்டேசனில் நிறுத்தி விட்டு என்னைத் திரும்பிப் பார்த்து ஏதோ சொல்ல முற்பட்டான்.

“நீ பேசுவதற்கோ, நான் விளக்கம் சொல்வதற்கோ இப்பொ நேரமில்லை. வண்டி வந்து கொண்டிருப்பதாக அறிவிப்பு பண்ணிட்டாங்க. நம்ம ரெண்டு பேருக்கும் ஆண்டவனுக்கு மட்டும் இந்த விசயம் தெரிந்ததாக இருக்கட்டும். நீ ஏதாவது பேச ஆரம்பிச்சா இங்க இருக்கும் அத்தனை பேருக்கும் தெரிஞ்சிடும்.”

“ஒரு விசயம் மட்டும் தோனுது சொல்றேன் சார். நான் கெட்டவனாகவே இருந்தால்கூட உங்களைப் போன்ற நல்லவர்களிடம் கெடுதலாக நடந்து உங்களைப் போன்றவர்களின் நம்பிக்கைகளை பொய்யாக்க கூடாது சார்.”

அவன் சொன்னது எனக்குப் பிடித்து இருந்தது. அவன் முகத்தில் கவலையைக் காண முடிந்தது. மேலும் பேசுவதற்கு அஞ்சினான். அந்தப் பையை எடுக்கும்போது அவன் கைகள் நடுங்கியதைக் கவனித்தேன். என் பையிலிருந்து நூறு ரூபாயை அவன் பையில் வைத்துவிட்டு ‘என்னைப் பின் தொடராதே’ என்று சொன்னதும் அவன் கண்கள் கலங்கியதைப் பார்த்தேன். அவன் எனக்குப் பின்னால் வந்து கொண்டு இருந்தான். இரயில் பிளாட் பாரத்தில் நுழைந்து விட்டது.

நான் சிரிக்காமல் அவனைப் பார்த்ததும் அவன் செய்வதறியாது நின்றுவிட்டான். நான் எனது பெட்டியில் ஏறிவிட்டேன்.

இந்தப் பயணம் சிறப்பாக முடிந்ததாக மனம் லேசாகி இருந்தது. போனில் எடுத்த புகைப்படங்களைப் பார்த்தேன். வலது கையில் விருதை வைத்து எடுத்தப் புகைப்படத்தில் அப்பல்லோ கம்ப்யூட்டர் எஜூகேஷன் விளம்பர ஆங்கில எழுத்தின் ஏபி க்கு இடையில் விருது இருந்தது. பன்னீர் அண்ணன் இனிஷியலும் ஏ தான். அண்ணன் கையில் விருது கொடுத்தது போல் மனம் மகிழ்ச்சியில் நிரம்பியது.

போனை ஆன் செய்ததும் முனியாண்டி கால் வந்தது.

“சார்…நல்லா இருக்கீங்களா. பிபிசி காரங்க உங்கள இண்டர்வியூ பண்ண வந்துருக்காங்க. உங்களுடன் ஒரு நாள் இருந்து அப்படியே சூட் பண்ணனுமாம். அமெரிக்கா ஆட்சி மாற்றம் வரப்போகுது. ட்ரம்ப் ஜெயித்து வெளிநாட்டு கொள்கையில பல அதிரடி முடிவுகள் எடுக்கப் போகிறார் என்று கணித்து. இங்கே எல்லோரும் உங்களைத்தேட்றாங்க சார். புரோட்டோ கால் இஷ்யூங்கிறாங்க. நீங்கள் எங்கேன்னு கேட்டு, தெரியாதுன்னவுடனே, பிரதமர் ரொம்ப கடுப்பாகிட்டார். எனக்குப் பயமா இருக்கு சார்.”

“நாளைக்குக் காலையில பத்து மணிக்கு எனக்கு ஃப்ளைட். இன்னைக்கு இரவை மட்டும் எப்படியாவது சமாளிச்சுரு. முடியலையா.. பெட்டர் நம்மூர் அரசியல்வாதிகள் மாதிரி ஹாஸ்பிடல்ல படுத்துக்கோ.”

“சார். மேட்டர் சீரியசாக இருக்கு.”

“சரிப்பா. நான் போனை ஆஃப் பண்றேன். நான் எல்லாத்தையும் நாளைக்கு

பார்த்துக்கிறேன்.”

போனை ஆஃப் செய்துவிட்டு திரும்பினால் ஆட்டோ பையன் என்னைக் கருப்புக் கண்ணாடியில் முகத்தை வைத்து அழுத்தி உள்ளே தேடிக்கொண்டு இருந்தான்.

நான் எழுந்து கதவை திறந்து

“தம்பி இங்கே இருக்கேன்.”

“ஸார். நீங்கள் கொடுத்த நூறு ரூபாயோட இந்த டாலரும் வந்துருச்சு. நீங்கள் அங்கேப் போய் தேடுவீங்க. இந்தாங்க.”

நான் சிரித்துக்கொண்டே வாங்கிக்கொண்டேன். இரயில் நகர ஆரம்பித்தது. நான் டாலர் நோட்டைப் பார்த்தேன். கவர்னர் என்ற இடத்திலிருந்த எனது கையெழுத்து என்னைப் பார்த்து சிரிப்பதுபோல எனக்குத் தோன்றியது.

நான் வெளியே தலையை நீட்டி ஆட்டோப் பையனைப் பார்த்தேன். அவன் கையில் பையுடன் நடந்து சென்று கொண்டிருந்தான். எனக்கு தூக்கி வாரிப்போட்டது.

‘தம்பீ…’ என்று கத்தினேன். அவனுக்கு அது கேட்கவில்லை. எனது பெட்டி பிளாட்பாரத்தைக் கடந்து சென்று கொண்டு இருந்தது.

அவன் வலது கை தோள் பட்டையைக்கீழே இறக்கி இடது கை தோள்ப் பட்டையை மேலே தூக்கி, காலை அகட்டியதுபோல நடந்து போய்க் கொண்டு இருந்தான். அப்படியே பன்னீர் அண்ணன் நடப்பது போல இருந்தது. அண்ணன் எவ்வளவோ முயற்சி செய்து மாற்றப் பார்த்தார். அது குடும்ப வாகு முடியாது என்று விட்டுவிட்டார். பருத்திப் பால்காரரிடம் ‘ஆட்டோ ஓட்டுகிறான் என் மகன்’ என்று பன்னீர் அண்ணன் மகள் சொன்னதை அவர் மறந்துவிட்டார். இரயில் வேகமெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. நான் அதற்கு வெளியே உற்சாகமாக பறந்து கொண்டிருந்தேன்.

ravialladhu@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க
Close
Back to top button