இணைய இதழ் 112சிறுகதைகள்

… என்று சொல்கிறவர்கள் – வண்ணதாசன்

சிறுகதை | வாசகசாலை

இது மருத்துவமனை அறை போல இல்லை. வீடு மாதிரித்தான் இருக்கிறது. முக்கியமாக, தென் பக்கத்தில் இருந்த உயரமான ஜன்னல். துடைக்கப்படாத அதன் வெளிப்பக்கக் கண்ணாடிக் கதவுடன் வீட்டில் நான் உபயோகிக்கும் அறை போலவே .

ஈஸ்வரி காண்டீனில் டீ வாங்கிக் கொடுத்தாள். நர்ஸ்களிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு வீட்டுக்குப் போய்விட்டாள். இனிமேல் காலையில்தான் வருவாள். இன்று நண்பகல் அனுமதிக்கப்பட்டேன். அப்போதே இரவுக்கு யார் துணையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அப்படிச் சொன்னதில் ஈஸ்வரிக்கு வருத்தம், சிறு சண்டை கூட வந்தது. ’அம்மா ஹெல்ப்புக்கு இருக்கட்டுமே சார்’ என்று நர்ஸ் ஒருவர் கூடச் சொல்லிப் பார்த்தார்.

நான் தனியாக இருக்க விரும்பினேன். மோசமான சொப்பனங்களுடன் அல்லது சொப்பனமே இல்லாமல் காலியாக உறங்க விரும்பினேன். எல்லா வர்ணங்களும் கலந்து வழிகிற ஒரு பெய்ண்ட் கம்பெனி விளம்பரம் போல, தூக்க மருந்தின்  முறுக்கிப் பிழிவில் மூளைக்குள் ஒன்றோடு ஒன்று கலந்தும் கலவாத நிறங்கள் பரவினால் எப்படி இருக்கும்?

செல்லப்பன் வந்து கொஞ்சநேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டுப் போக வருவதாகச் சொல்லியிருக்கிறார். அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. எட்டுமணி வரை ஆகும். இப்போது ஆறு இருக்குமா? மழை பெய்வதால் இருட்டிக் கிடக்கிறது. கதவைத் திறந்துதான் போட்டிருக்கிறேன் என்றாலும் மூடாக்கில் அறை நிரம்பியிருக்கிறது.

மழை பார்த்துக்கொண்டு நின்றேன். எத்தனை பேர், சிகிட்சைக்கு வந்த இடத்தில் இப்படி என்னைப் போல மழை பார்த்துக்கொண்டு இருப்பார்கள்? மின்னலும் இடியுமாக அடித்துப் பெய்கிற மழையைப் பார்த்துக்கொண்டு நிற்பது கூட ஒரு கூடுதல் மருத்துவம். மழை பார்க்கும் போது எனக்கு எல்லாம் மறந்து போகும். என் பெயரைக் கேட்டால் என்னால் சொல்ல முடியுமா தெரியவில்லை. தீயை விட மழையே உடனடியாகப் புடம் போடும். பஸ்பமாக்கும்.

இரண்டாவது தளத்து அறை என்றாலும் எங்கோ மிக உயரத்தில் மலை முகட்டில் இருந்து பார்க்கையில் நனையும் காடாகக் கீழே தெரிந்தது. மரங்கள் ஈரத்தில் தணிந்து காற்றில் தம்மை உதறுவதே தெரியாமல் உதறிக் கொண்டன. அந்தத் தணிதலும் உயர்தலும் ஒரு மாயம்.

அது என்ன வகை மரம்? இந்தப் பக்கத்து மரவகையாகத் தெரியவில்லை. வாகை மரம் இல்லை. கிட்டத்தட்ட அதே அடர்த்தியான, கிளையே தெரியாத இலைகள். கருநீல நிறச் சிறு குருவிகள் கொத்துக் கொத்தாக உச்சி மரங்களில் அமர்ந்திருப்பது போல் அடுத்தடுத்துப் பூக்கள். யாரையாவது கூப்பிட்டுக் காட்டலாம். நான் படுத்திருந்த கட்டிலைத் திரும்பிப் பார்த்தேன்.

சக்கர நாற்காலி ஒன்று அப்போதுதான் அறைக்குள் வந்துகொண்டு இருந்தது. ஒரு பெண் தள்ளிக்கொண்டு வந்தார். கண்ணாடியை நெற்றியையும் தாண்டி வகிட்டில் ஏற்றிவிட்டிருந்தார். நாற்காலியில் இருந்தவருக்கு எழுபது வயது இருக்கும். பழுத்திருந்தார். ரொம்ப காலமாகப் பழுத்துக்கொண்டே வந்து, மேலும் பழுப்பதை நிறுத்திக் கொண்ட வழவழப்பான தோல். கண் இடுங்க நிறையச் சிரிப்பவராக இருக்கும். கண் ஓரங்களிலும் வாய் ஓரத்துக் கன்னங்களிலும் கோடுகள். இப்போதும் அவர் முகத்தில் சிரிப்பு இருந்தது. அவர் காலியாக இருக்கும் என்னுடைய கட்டிலின் திசையைப் பார்த்துக் கொண்டு, பின்னால் இருக்கும் பெண்ணிடம், ‘நாம் சரியான அறைக்குத்தானே வந்திருக்கிறோம்?’ என்று கேட்டார்.

‘ஆமாம். 202 தான் இது’ அந்தப் பெண் அவருக்கு மட்டும் கேட்கிற குரலில் குனிந்து சொன்னது. ஜன்னல் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த நான் அவர்களைப் பார்க்க வந்து வணக்கம் சொன்னேன். அவர் ‘நமஸ்காரம்’ என்று சொல்லிக் கைகளைக் கூப்பினார். நீள நீள விரல்களுடன் இரண்டு கைகளும் பொருந்த அவர் வணங்குவது அழகாக இருந்தது.

சக்கர நாற்காலியின் இரு பக்க முனைகளையும் பிடித்தபடியே அந்தப் பெண் குனிந்து தலையை அசைத்தார். நல்ல உயரமாகவும் உருவிவிட்டதாக ஒன்று போல உடல் வாகு உடையவராகவும் இருக்க வேண்டும். அந்தச் சக்கர நாற்காலியை விட்டு விலகித் தனியாக அவர் நிற்பதைப் பார்க்க விரும்பினேன். நீண்ட காலம் புற்று நோயைத் தாக்குப் பிடித்து நலமடைந்து, கொரோனா நாட்கள் ஒன்றில் இறந்து போன ஃப்ளோரா அண்ணியின் தோற்றம் இப்படித்தான் இருக்கும். நான் ஃப்ளோரா அண்ணியின் கைபேசி எண்ணைப் பதிவிலிருந்து இன்னும் அகற்றவில்லை. ஒருபோதும் அது முடியாது.

‘மழை பார்த்துக் கொண்டிருந்தேன்’ – என்னுடைய உரையாடலைப் பெரியவருடன் அப்படித்தான் ஆரம்பித்தேன்.

பெரியவர் கண்களை அகலமாக விரித்துக் கை தட்டினார். ‘ஒரு மருத்துவமனை அறைச்சுவர் மழை பார்த்துக்கொண்டிருந்தேன் என்று சொல்கிற ஒரு உள் நோயாளியை முதல் முறையாகக் கேட்டிருக்கும்’ என்றார். ‘இல்லையா சசி?’ என்று பின்பக்கம் திரும்பாமலே குரலைப் பின்னால் அனுப்பினார். சசி ஒப்புதலாக என்னைப் பார்த்தபடி ‘ஆமாம்’ என்று குனிந்து சொன்னார்.

சசியை சக்கர நாற்காலியின் பின்னிருந்து அகற்றி முழுதாக நான் பார்க்கும்படி நிறுத்த வேண்டும். அறையில் ஒரே ஒரு நாற்காலி இருந்தது. கை இல்லாதது. ‘நீங்கள் உட்காரலாமே, சசி’ என்று பெயரைச் சேர்த்தே சொன்னேன். இதில் என்ன இருக்கிறது? சொல்வதற்குத்தானே பெயர். பெரியவருக்கு நான் அப்படிப் பெயர் சொல்லியதில் ஒப்புதல் இருந்தது. ஒரு மெல்லிய சிரிப்புடன் ஆங்கிலத்தில் ‘மேகநாதன் என்று நான் அழைக்கப்படுகிறேன்’ என்றார். நான் ‘சுந்தரம்’ என்று சொல்லிக் கை குலுக்கினேன். பெரிய பச்சைக் கல் வைத்த வெள்ளி மோதிரம் . மோதிர விரலில் அல்ல, சுட்டு விரலில்.

‘நேற்று முன் தினம் வரை இந்த அறையில் சிவகாமி இருந்தார். அவரைப் பார்க்கத்தான் வந்தேன்’. மேகநாதன் கட்டிலைப் பார்த்துக் கொண்டு சொன்னார். இன்னும் அவர் குறிப்பிடும் சிவகாமி அந்தக் கட்டிலில் உட்கார்ந்திருப்பது போல அவர் கண்களில் ஒரு வெளிச்சம் வந்துவிட்டு நகர்ந்தது.

நான் முதலில் எனக்கு முடிகிற கற்பனையில் ஒரு சிவகாமியை அந்தக் கட்டிலில் உட்கார்த்தி வைக்க முயன்றேன். எந்த முயற்சியும் இல்லாமல் அப்படி நான் உட்கார்த்திய இடத்தில் சசி உட்கார்ந்திருப்பது போல இருந்தது. சசியா அது ஃப்ளோரா அண்ணியா?

‘அந்த நாற்காலி யாராவது உட்கார்வதற்குத்தான்’ என்று சசியைப் பார்த்துச் சொன்னேன். சக்கரநாற்காலியில் இருந்தவர்க்கு அவருடைய உரையாடலின் திசையில் நான் போகாதது ரசிக்கவில்லை அல்லது சசியின் மேல் என் கவனம் முழுவதும் இருப்பதைப் புரிந்து கொண்டிருக்கிறார்.

‘சேரை இழுத்துப் போட்டு இந்தப் பக்கமா உட்காரேன் சசி.. ஒருத்தரை ஒருத்தர் முகம் பார்த்துப் பேசுவது சுலபமாக இருக்கும். அவர் இன்னும் மழை பார்க்கும் ஆர்வத்திலேயே இருக்கிறார். அறைக்குள் கூட. இல்லையா சுந்தரம்?’ அவர் இப்படிச் சொல்வதைக் கேட்டவுடன், சசி அவர் பின்னால் இருந்து நகர்ந்து சத்தமே இல்லாமல் நாற்காலியை நகர்த்தி உட்கார்ந்தார். கண்ணாடியை இன்னும் மூக்கிற்கு இறக்கி விடவில்லை. வகிட்டின் மேலேயே இருந்தது. மடியில் பேரங்காடிப் பெயர் எழுதப்பட்ட பையை, ஒரு வளர்ப்புப் பூனையைப் போல வைத்துக் கொண்டார். நான் பார்ப்பதைத் தவிர்க்க விரும்புகிற விதத்தில் சற்று இறுக்கமாகச் சுற்றியிருந்த சேலைத் தலைப்பைத் தளர்த்தியபடி பேச ஆரம்பித்தார்.

‘அவர் எங்களுக்கு நெருக்கமானவர். அவர் குணமடைந்து வீட்டுக்குப் போயிருந்தால் எங்களுக்கு மகிழ்ச்சிதான். உங்களுக்கு விபரம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் வேண்டுமானால் நர்ஸ் ஸ்டேஷனில் போய் விசாரித்து வரட்டுமா?’ என்று என்னிடமும் அவரிடமுமாகச் சொல்லிவிட்டு எழுந்திருந்தார்.

நானும் கவனித்திருந்தேன். பணியில் நர்ஸ்கள் இருக்கும் பகுதிக்கு ‘நர்ஸ் ஸ்டேஷன்’ என்று பலகை தொங்க விட்டிருந்தார்கள். சிகிட்சைக்கு வருகிறவர்கள் அவரவர் ஸ்டேஷனில் ஏறி அவரவர் ஸ்டேஷனில் இறங்கிக் கொள்ள வேண்டும் போல.

நாற்காலியில் உட்கார்ந்த பொழுதைவிட இப்போது எழுந்திருக்கும் போது சசி மேலும் செழித்து வளர்ந்து விட்டிருந்தார். மேகநாகன் ஒன்றும் குத்தலாகச் சொல்லவில்லை. உண்மையாகவே சசி மீது மழை பெய்திருந்தது. போகிற அவர் பின் தோற்றத்தையே பார்த்துக்கொண்டு இருந்தேன்.

‘சுந்தரம், உங்களுக்கு சசி யார் போல இருக்கிறார்? அல்லது யாராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?’ அவர் அப்படிக் கேட்கும் போது சக்கர நாற்காலியில் இருப்பது போல் இல்லை. நாடகங்களில் அரசர்கள் அவர்களது சிம்மாசனத்தில் ஒரு பக்கம் லேசாகச் சாய்ந்துகொண்டு பேசுவார்களே அப்படி இருந்தது.

நான் கட்டிலில் போய் அமர்ந்துகொண்டேன்.

‘ஃப்ளோரா அண்ணி போல.’ அதைச் சொல்லிக் கொஞ்சம் இடைவெளி விட்டேன். ’நீங்கள் உங்களின் அடுத்த கேள்வியைக் கேட்பதற்கு முன் நானே சொல்லிவிடுகிறேன். அண்ணி என்றால், என் சினேகிதனின் அண்ணனுடைய மனைவி. அவரிடம் ஒரு சுடர், ஒரு தழல் இருந்தது. என் கல்லூரிக் காலத்தில் இருந்து இந்த 202-ஆம் அறை வரை அந்த வெளிச்சம், வெப்பம் என்னைச் சுற்றி இருக்கிறது’

சொல்லி முடித்து ஆழமாக நெடு மூச்சு விடுவதை மேகநாதன் உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தார்.

‘அவ்வளவு காலத்திலும் ஃப்ளோரா அண்ணி எப்போது ரொம்ப அழகாக இருந்தார் தெரியுமா? அவருடைய இரண்டாவது கீமோ முடித்த நிலையில் அவரைப் பார்க்கச் சென்ற போது. என் சினேகிதனும் கூட இருந்தான். வலி அண்ணியின் மீது ஒரு பள பளப்பான எண்ணெயைப் பூசி இருந்தது. பார்த்தபடியே இருந்தேன். எனக்குத் தாங்க முடியவில்லை. அப்படியே ஃப்ளோரா அண்ணியைக் கட்டிப் பிடித்துக் கொள்ள விரும்பினேன். இதுவரை எல்லாம் அப்படித் தோன்றியதில்லை. அல்லது இதுவரை எனக்குள் அப்படித் தோன்றிக்கொண்டேதான் இருந்ததுவோ என்னவோ?’

அண்ணிக்குத் தெரிந்துவிட்டது. அது எப்படித் தெரியாமல் போகும்? பக்கத்தில் இருந்த சினேகிதனைப் பார்த்தார். அவனைப் பார்த்துப் புன்னகைத்தார். என்னைப் பார்த்தார். என்னுடைய கையை எடுத்து அவர் கைகளுக்குள் பொத்தினார். புகைமூட்டம் போல இளங்கருப்பில் ஒரு வழவழப்பான சேலை உடுத்தியிருந்த மடியில் வைத்துக் கொண்டார். நெஞ்சிலும் அப்படி வைத்துக்கொள்ள மாட்டாரா என்று இருந்தது.’

சக்கர நாற்காலியைத் தானே நகர்த்தியபடி என் பக்கம் வந்த மேகநாதன், என் முந்திய வாக்கியத்திலிருந்த என் கையை எடுத்து நெஞ்சோடு வைத்துக் கொண்டார்.

மருத்துவமனையின் துப்புரவுப் பணியாளர் வந்து வணக்கம் சொல்லி, ‘அறையைத் துடைத்து விடட்டுமா?’ என்று கேட்டார். மேகநாதன் எனக்குப் பதிலாக அந்தப் பெண்ணிடம் ‘சிரமம் இல்லை என்றால், கொஞ்சநேரம் கழித்துப் பண்ணிக் கொள்ளலாமா?’ என்று கேட்டார். பணியாளர் போனதும் என் கைகளைத் தளர்த்தினார். என் தோளைத் தட்டிக் கொடுத்தார்.

ஒரு குறிப்பிட்ட தூரம் அவசியம் என்பது போலச் சக்கர நாற்காலியை முன்பு இருந்த இடத்திற்கு நகர்த்திச் சென்று கொண்டார். ‘உங்களுக்கு ஃப்ளோரா எப்படியோ அப்படித்தான் எனக்கு சிவகாமி. நீங்கள் அண்ணி என்று சொல்கிறவர் உங்களுக்கு மூத்தவர். சிவகாமி என்று நான் சொல்கிறவர் எனக்கு இளையவர். ஆனால், எல்லோரும் ஒருவரே’ என்றார்.

எனக்குக் கேட்காமல் இருக்க முடியவில்லை, ‘அது என்ன, என்று சொல்கிறவர், என்று சொல்கிறவர்?’

விரல்களைப் புறங்கைப் பக்கமாகத் திருப்பி நகக்கண்களையே பார்த்துக் கொண்டிருந்தார். அப்படி அவர் பார்த்ததாலோ என்னவோ என்னை அறியாமல் நானும் என் விரல்களை முன் பக்கமும் பின்பக்கமுமாகத் திருப்பிப் பார்த்துக் கொண்டேன்.

‘அப்படித்தான் சொல்ல வேண்டும். வேறு எப்படியும் சொல்லக் கூடாது’ என்று சிரித்தார்.’

எனக்கு சசி நினைவு வந்துவிட்டது. ‘அவரை எங்கே காணோம்?’

’அவருக்கு இங்கு பழைய சகாக்கள் அதிகம். இந்த மருத்துவமனையில் வரவேற்பில், கணக்குப் பிரிவில் இரண்டு மூன்று வருடங்கள் அவர் இருந்திருக்கிறார். அப்புறம் சசிக்குத் தெரியும், நீங்கள் சிவகாமி பற்றிக் கேட்பீர்கள் அல்லது நான் சொல்வேன் என்று. அதற்கான அவகாசத்தை அவர் நமக்குத் தர நினைத்திருக்கலாம்’ – அவர் மணியைப் பார்த்துக் கொண்டார். கடிகாரத்தை மணிக்கட்டில் உட்பக்கமாகக் கட்டியிருந்தார். முழுக்கைச் சட்டை அவருக்கு நன்றாக இருந்தது.

’நீங்கள் சிவகாமியைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே?’

‘உங்களுக்கு ஃப்ளோரா எப்படியோ, சிவகாமி எனக்கு அப்படி என்று சொல்லி விட்டேனே. நெருக்கமானவர்கள் பற்றி வெகு குறைவாகச் சொல்ல வேண்டும் அல்லது சொல்லவே கூடாது, சுந்தரம்’

‘நானும் உங்களிடம் மட்டும்தான் சொல்லியிருக்கிறேன்’

‘ஃப்ளோராவை நீங்கள் அவர் மிகுந்த வாதையில் இருக்கும் போது கட்டிக்கொள்ள நினைத்தீர்கள். நான் இவரை அவர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் போது ஒரே ஒரு முறை அணைத்துக் கொண்டேன். சரியாகச் சொன்னால் அணைத்துக் கொள்ளப்பட்டேன்’ – அவர் தழுவுவது போல இரண்டு கைகளையும் அகட்டி ஒன்றோடு ஒன்றைப் பூப்போல இணைத்துக் கொண்டார். அவர் கண்கள் இமை பொருந்தி மூடியிருந்தன.

இரண்டு குட்டி செவிலியர் வந்து ரத்த அழுத்தம், ரத்தச் சர்க்கரை அளவு பார்த்துவிட்டு, நாங்கள் யாரும் கேட்காமலே ‘நார்மல்’ என்று சொல்லிவிட்டுப் போனார்கள்.

‘அப்புறம் என்ன? நாமும் நார்மல் தான்’ – மிகத் தணிந்த குரலில் , நானும் அவரும் அருகருகில் இருக்கும் ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டது போல, மேகநாதனால் தன் சந்தோஷத்தை என்னிடம் சொல்ல முடிந்தது.

சசி உள்ளே வரும் போதே, ‘என்ன அது நார்மல், அப்நார்மல் பட்டிமன்றம்?’ என்று உரக்கக் கேட்டுக்கொண்டே வந்தார். சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு வந்த சசியை விட இவர் புதிதாக இருந்தார். அவருடைய பழைய சகாக்களின் சந்திப்பில் இருந்து அவரிடம் ஒரு வெளிச்சம் வந்து சேர்ந்திருந்தது.

நேரே மேகநாதனிடம் வந்து கையைக் குலுக்கினார். ‘நன்றி இறைவனுக்கு’ என்று கையை அப்படியே பிடித்துக்கொண்டு பேச ஆரம்பித்தார்.

‘டிஸ்சார்ஜ் சம்மரி காப்பியையே பார்த்துவிட்டேன். சிவகாமி மேடம் சனிக்கிழமையே அனுப்பப்பட்டு இருக்கிறார். நன்கு நலமடைந்தவராகவே அவரை டிஸ்சார்ஜ் செய்திருக்கிறார்கள். நான்கு வாரங்கள் கழித்து ரெவ்யூ. அது வழக்கமான நடைமுறை. லிஃப்ட்டில் நியுரோ மணிகண்ட பாபுவைப் பார்த்தேன். உங்களை ரொம்ப விசாரித்தார். பிஸியோ தெராப்பியை நிறுத்த வேண்டாம் என்றார்.’ – சசியின் மொழி கிட்டத்தட்ட மருத்துவமனை மொழியாகிவிட்டிருந்தது. கண்ணாடி முன்னைப் போலவே பாதி வகிட்டு உச்சிக்கும் மேலே போயிருந்தது.

கேட்டுக்கொள்ளாமலே, நாற்காலியில் உட்கார ஆயத்தமானார். அதில் வைத்துவிட்டுப் போயிருந்த பேரங்காடிப் பையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டார். ஓடிப்பிடித்து விளையாடியது போல சேலைத் தலைப்பு, கால் வரையிலான கொசுவ மடிப்புகள் எல்லாம் தளர்ந்து இளகிக் கிடந்தன. சசி இன்னும் 202 அறைக்குள் வந்து சேராமல் வேறு ஒரு திளைப்பில் இருந்தார்.

என்னுடைய முகத்தைப் பார்த்துச் சிரித்தார். ‘அப்புறம்?’ என்றார்.

‘அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் சசி’ என்றேன்.

‘ஆமாம். நீங்கள் மழை பார்த்த போது இருந்தது போல’ என்றார்.

‘மழையை மட்டுமல்ல, அந்தக் கருநீலப் பூக்களையும் நீங்கள் பார்த்திருக்க வேண்டும் சசி’.

‘சுந்தரத்துக்கும் மகிழ்ச்சியில் ஒன்றும் குறைவில்லை. ஒன்றே ஒன்றைத் தவிர’ என்று மேகநாதன் என்னைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டினார். சசி என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.

‘ஒன்று சசி. நீங்கள் அவருடைய ஃப்ளோரா அண்ணி போலவே இருக்கிறீர்கள். இரண்டாவதுதான் அவருடைய மகிழ்ச்சிக் குறைவு. சுந்தரம் ஒரு மிக உருக்கமான தருணத்தில் ஃப்ளோரா அண்ணியை அணைத்துக் கொள்ள நினைத்திருக்கிறார். முடியவில்லை. இனிமேல் முடியாது. ஃப்ளோரா நம்முடன் இல்லை’  என்னுடைய முகத்தைப் பார்த்துக் கொண்டே பேசியவர் சசியைப் பார்த்துச் சொன்னார்

சசியின் மடியில் இருந்த அந்தப் பொதி அவர் கண்ணில் பட்டிருக்க வேண்டும்.

 ‘ஒன்று செய்வோம், அவர்கள் இங்கே இல்லாவிட்டால் என்ன இந்த அறைக்கு ஃப்ளோராவையும் சிவகாமியையும் வர வைப்போம்‘. மேகநாதன் அப்படிச் சொல்கையில் நிஜமாகவே அது அவரால் முடியும் என்பது போல் இருந்தார்.

‘சிவகாமி இல்லாவிட்டால் என்ன? அந்த பிஸ்கட் பாக்கெட்டை சுந்தரத்திடம் கொடுத்துவிடுவோம்’ என்றார்.

‘சிவகாமிக்கு அறுப்பு ரொட்டிகளும் பிஸ்கட்களும் பிடிக்கும். அவளுக்கு மிகப் பிடித்த பிஸ்கட் பிராண்ட் இது’ என்று சொல்லும் போது சசி மடியில் இருந்த பையோடு எழுந்து அவரிடம் நீட்டினார்.

‘அதனால் என்ன நீயே கொடு. நீ கொடுப்பது அவருடைய ஃப்ளோரா அண்ணி கொடுப்பது மாதிரி‘ என்று என் திசையில் இரண்டு கைகளையும் தணித்துக் காட்டினார்.

சசி எழுந்து என் பக்கம் வந்தார். என் பக்கத்தில் வந்து நின்று அந்த பிஸ்கட் பாக்கெட் இருந்த பையை ஆழ முகர்ந்து கண்களை மூடிக் கொண்டார். ஒரு வாசனை மிக்க அமைதியை நான் உணர்ந்தேன்.  

எதுவுமே சொல்லாமல் என்னுடைய கைகளில் சசி அதைத் தந்தார். வாங்கிக் கொண்ட என் கைகளை அப்படியே பிடித்துக் கொண்டார். மீண்டும் கொஞ்ச நேரம் கண்களை மூடி அப்படியே நின்றார்.

கைகளை அகல விரித்து அப்படியே என்னைத் தழுவி, ‘நல்லா இருங்க’ என்றார்.

vannadasan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க
Close
Back to top button