
விளங்கிக்கொள்ள முடியாத
விசித்திரக் கதையின்
ஒவ்வொரு பக்கத்திலும்
உதிர்ந்து விழுகிறது இதயம்
நாவில் உமிழ்ந்த
பிரிவின் சோகம்
நஞ்சாய் நழுவி
எனக்குள் சென்று
உயிரைக் கொல்கிறது
வந்தீர்கள்
செல்கிறீர்கள்
உங்கள் இருப்பிற்கு பழக்கப்பட்டுவிட்ட
என் சிறுநெஞ்சை
எந்த மருத்துவரிடம் கொடுத்து
பழுது பார்க்க?
*
மன்னிப்பே கிடைக்காத
குற்றங்களை எல்லாம் செய்துவிட்டு
மானிட வேடத்தில்
திரிந்து கொண்டிருக்கிறாய்
தேவன் உன்னை எப்படி மன்னிப்பான்?
உனக்கு தண்டனை கொடுக்க
மூளையைக் கசக்கிக் கொண்டிருக்கிறான்
இந்த ஞாயிறன்று
உருகும் மெழுகை உற்றுப் பார்
அது மரித்துப்போன தேவனின்
தூய குருதி.
*
இழவிற்குத் தயாராகி வந்திருப்பவர்களின்
மலர்ச்செண்டுகள்
எப்படி குணமாக்கும்
ரணங்களை..?
*
சேர்ந்து ஒரு தேநீர் கூட அருந்தியதில்லை
அத்தனை சிறியதா நம் உறவு?
*