
காதலன் வந்ததும் படி தாண்டி
அவனுடன் ஓடும் காதலி போல்
கவிஞனுடன் ஓடுகிறது
உலகத்தின் காட்சிகள்
– ஞானக்கூத்தன்
வீடோ, அலுவலகமோ அல்லது வேறு ஏதேனும் ஒரு இடமோ அதன் சுவரில், ஒரு காட்சியின் கணத்தை, நிலைத்து விட்ட ஒரு நினைவை , உறைந்து விட்ட ஒரு காலத்தைப் புகைப்படம் என்ற பெயரில் சட்டமிட்டு மாட்டுகிறோம். இந்தச் செயலுக்கும் கவிதையின் படைப்புச் செயலுக்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா?
தொடர்பிருப்பதாக நாம் கருதினால், கவிதைக்குள் வைக்கப்பட்ட காட்சிக்கு அதாவது புகைப்படத்திற்குச் சுவர் என்பது கவிஞனின் மனநிலையா? வாசகனின் மனநிலையா?
ஒரு புகைப்படத்தைத் தாங்கும் சுவருக்குப் படத்தின் தன்மையைத் தீர்மானிக்கும் தகுதி எதுவும் இருப்பதில்லை. ஆனால், கவிதையில் வைக்கப்பட்ட படத்தில் கவிஞனின் மனச்சாய்வுக்கும் அதை ஒட்டிய வாசகனின் மனச்சாய்வுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது.
கவிஞனின் தனிப்பட்ட மனச்சுவரில் பொருந்திப்போன காட்சியை, வாசக மனங்கள் என்னும் பொதுச்சுவர்களில் பொருந்த வைப்பது எப்படி? சுவர்கள் வேறுவேறாகவும் காட்சி மட்டுமே ஒன்றாக இருக்கும் நிலையில்?
கவிதையைப் புரிந்துகொள்வதில் காட்சியின் பங்கே இங்கு அதிகமாக இருக்கிறது. அதனாலேயே, தெரிந்த ஒரு காட்சியைக் கூறி, உணர்ந்த ஒன்றையோ, உணர்த்த வேண்டிய ஒன்றையோ கவிதையாக்குவது இங்குப் பொதுவான கவிதைச் செயல்பாடாக இருக்கிறது.
ஆனால், நுட்பமான காட்சியை ஒரு புகைப்படம்போல் தனக்குள் வைத்திருக்கும் கவிதை, ஒரே நேரத்தில் காட்சியின் முடிச்சையும் காட்சியில் வைக்கப்பட்ட உணர்வின் முடிச்சையும் அவிழ்க்க ஆரம்பிக்கிறது. ஒரு நண்பனின் புகைப்படம் நண்பனை ஞாபகப்படுத்தி, அவன் தொடர்பான நினைவுகளையும் கிளர்த்துவதைப் போல.
ஆனால், ஒரு புகைப்படத்தை ஒத்த கவிதைக் காட்சிகளை, வாசகன் மனச்சுவரில் பொருத்திப் பார்க்கும் முயற்சியில் இக்கட்டுரை எழுதப்படவில்லை. ஒரு பூவின் வடிவழகை, அதன் வண்ணத்தை, நினைவில் நிலைத்த அதன் மணத்தை நினைவுகூர்வது போலவே, ஒரு கவிதைக்குள் புகைப்படமாய்ப் பொருத்திப்போன காட்சிகளையும், அதைக் கொண்ட கவிதைகளையும் இக்கட்டுரைப் பேசிப் பார்க்க முயல்கிறது.
புகைப்படம் : 1 (இடிந்தவீடும் துளசிமாடமும்)
கவிஞர் ஞானக்கூத்தனின் ‘விவரம்’ என்ற தலைப்பிலான கவிதை இது.
வீடு இடிந்து போனதைப் பற்றி
மாடத்துத் துளசிக்கு
யாரும் சொல்லவில்லை போல.
இந்தக் கவிதையைப் படித்ததும் கவிதை சரசரவென ஒரு இடிந்த வீட்டையும் அந்த வீட்டின் துளசி மாடத்தில் வளர்ந்த துளசிச் செடியையும் வரைந்து காட்டுகிறது. கவிதை அல்ல, வாசக மனமே காட்சியை வரைவதாக நீங்கள் கூறலாம். ஒரு ஓவியத்தை வரைவது தூரிகையா, கைகளா, மனமா என நீங்கள் வரிசைப்படுத்திப் பார்த்தால் கவிதையே என ஒத்துக்கொள்ள விரும்புவீர்கள் என நினைக்கிறேன்.
கவிதையைப் புரிந்துகொள்ளுதல் என்ற செயலில் ஒரு வாசகனுக்கு ஏற்படும் முதல் படிநிலையைக் காட்சியை உள்ளடக்கிய கவிதை உருவாக்கிக் கொடுக்கும் தருணங்களில் இதுவும் ஒன்று. கவிதை காட்டும் இந்தக் காட்சியை இதற்குமுன் வாசகன் பார்த்திருப்பானா? அவனது கண்ணில் பட்டிருக்கலாம்! மனப் பதிவில் இருந்ததா? பழகிய ஒரு மனிதரைப் பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொள்வதைப் போல கண்டுகொள்வானா? வீட்டில் துளசி மாடம் வைக்காத ஒருவனுக்கும் அப்படியே நிகழுமா? அவன், சட்டைப் பையிலிருந்த படத்தை எடுத்துப் பார்த்துத் தெரிந்து கொள்வதைப் போல தன் நினைவுச் சேகரத்தில் தேடி எடுப்பானோ?
கண்ணில் பட்ட காட்சியெல்லாம் கருத்தில் பட்டு நிலைத்திருக்குமா? உணரப்படாத காட்சிக்கு உள்நினைவில் இடமுண்டா? இல்லைதானே? அப்படிப்பட்ட காட்சியைக் கவிதையில் காண முடிந்த வாசகனுக்கு உடனடியாக அக்காட்சி மனத்தில் தோன்றிவிடுவதில்லை. அவன் ஒரு நிமிடம் தடுமாற்றம் அடையக்கூடும்.
கவிஞன் என்னும் மாயாவி கண்டுணர்ந்த தருணத்தைக் காட்சியாக் காணும் வாசகனுக்கு, கவிஞனின் உணர்வுத் தளத்தைத் தொட்ட அக்காட்சியைக் காண,நெருங்க அக்கவிதையே அவனுக்கு உதவி செய்கிறது.
ஓர் இடிந்த வீடு , துளசி மாடம், மண்ணாகிப் போன வீட்டில் பசுமையாக வளர்ந்திருக்கும் துளசிச் செடி என இக்காட்சி மனதில் வரையப்படுகிறது. இந்தக் காட்சியை முன்னிருத்தி கவிஞன் சொல்வதும், வாசகன் உணர்வதும் ஒன்றோ, பலவோ, உடன்பட்டோ, விலகியோ அமையலாம். ஆனால், இதற்கெல்லாம் அடிப்படையான, கவிதை கூறும் காட்சியின் தன்மை முக்கியமானது.
இக்கவிதைக்கு மட்டுமல்லாமல் காட்சியைக் காட்டி வேறொன்றை உணர்த்த முயலும் எல்லா கவிதைகளுக்கும் இது பொருந்தும்.
கவிஞன் தான் கண்ட காட்சியில் உணர்ந்த ஒன்றை வாசகனுக்குச் சொல்ல வேண்டும் என நினைக்கிறான். காட்சியை மட்டும் சொல்ல வேண்டும் என்பது அவனது நோக்கமல்ல; தான் உணர்ந்ததை உணர்த்த வேண்டும் அல்லது கவிதையில் அதை இறுத்திவிட வேண்டும் என்ற அவனது நோக்கத்தை அடைய, முதலில் வாசகன் கண்டு கடந்துபோன காட்சியை மீண்டும் அவனிடம் நிறுத்திக் காட்டவேண்டும். மறந்துபோன ஒரு கடந்தகால நிகழ்வை ஒரு புகைப்படம் நிகழ்காலத்திற்குள் நிறுத்திக் காட்டுவதைப் போல.
புகைப்படம் : 2 (குழந்தைகளின் விளையாட்டிடங்கள்)
சிறுவர்கள்
துக்க வீடுகளில்
மைதானங்களில்
ரயில்நிலையங்களில்
திருமண வீடுகளில்
படுக்கையறைகளில்
கல்லறைத் தோட்டத்தில்
பகல்நேர விடுதிகளில்
கருப்பைகளில்
கனவுகளில்
சிறுவர்கள்
விளையாடுகிறார்கள்
கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியத்தின் கவிதை இது. சிறுவர்களின் மாறாத விளையாட்டு இயல்பைச் சொல்லவரும் இக்கவிதை, துண்டு துண்டான காட்சிகளை வரிசையாக வாசக மனத்தில் எழுப்புகிறது. துக்க வீடுகள், மைதானங்கள், ரயில் நிலையங்கள், திருமண வீடுகள், படுக்கையறைகள், கல்லறைத் தோட்டங்கள்,பகல் நேர விடுதிகள் என கவிதையைப் படித்துக்கொண்டு வரும்போதே இந்த இடங்களிலெல்லாம் சிறுவர்கள் விளையாடும் காட்சிகள் தொடர்ந்து உருவாகிக் கொண்டே வருகின்றன.
இவையெல்லாம் நாம் கண்ட காட்சிகள்தாம். ஆனால், கருப்பைகள் என்றதும் ஒரு தேக்கம் ஏற்படுகிறது. பார்த்ததில்லை; பெண்கள் உணர்ந்திருக்கலாம்; ஆண்களும் அந்த உணர்வுச் சிலிர்ப்பை அடைந்திருக்கலாம். கவிதை, வாசகன் கண்ட காட்சிகளோடு உணர்ந்த ஒன்றையும் காட்சியாக இங்கே சேர்த்துக் கொள்கிறது.
அடுத்ததாக இவைகளில் இருந்து வேறுபட்ட ‘கனவுகளைக்’ கவிதை கூறுகிறது. விடிந்ததும் மறந்துவிடும் கனவுக்காட்சியை வாசகனின் நினைவுக் கைகள் துழாவித் தேடுகின்றன. இத்தனை ஒட்டுமொத்தக் காட்சிகளும் ‘குழந்தைகளின் மாறாத விளையாட்டு இயல்பை’ ஒரு பெரிய பதாகையில் தூக்கி நம்முன் காட்டியபடி நிற்கின்றன.
குழந்தைகள் எல்லா இடங்களிலும் விளையாடுவது சாதாரணமான ஒன்றுதானே? நமக்கெல்லாம் அது தெரியாததா? என நாம் நினைக்கலாம். ஆனால், பார்த்ததில் இருந்து உணர்ந்து கொள்ளுதல் என்னும் நிலையை இயல்பாக நம்மில் பெரும்பாலோர் எட்டுவதில்லை. கலைகள்தாம் அதைச் சுட்டிக் காட்டுகின்றன.அது இலக்கியமாகவும் பிறவாகவும் இருக்கலாம்.
இதை ஏன் இவ்வளவு உறுதியாகச் சொல்கிறேன் என்றால் குழந்தைகள் விளையாடுவதை இதற்குமுன்பு பார்த்திருந்த எனக்கு, இந்தக் கவிதையைப் படித்த பிறகு, அதைப் பார்ப்பது வேறுமாதிரியாகவே இருக்கிறது. ஷங்கர் ராமசுப்ரமணியத்தின் இந்தக் கவிதை, நாம் சாதாரணமாகக் கண்டு கடந்துபோன குழந்தை விளையாடும் காட்சிகளின்மேல் ‘மாறாத குழந்தை இயல்பு’ என்ற ஒளியைப் பாய்ச்சிவிட்டதாகவே நினைக்கிறேன்.
விளையாடுவதற்கான இடமல்ல இது என நாம் நினைக்கும் எந்த இடத்திலும் சிறுவர் கூட்டம் ஏதேனும் ஒரு விளையாட்டை விளையாடிக் கொண்டிருப்பதையும், இப்படியும் விளையாடலாமா! என வியந்தும் பார்க்கிறேன்.
இப்போதெல்லாம் எங்கெல்லாம் குழந்தைகள் விளையாடுவதைப் பார்க்கிறேனோ, அங்கு அப்போதே ‘சிறுவர்கள் விளையாடுகிறார்கள்’ என்ற கவிதை வரிகளை முணுமுணுக்கத் துவங்கி விடுகிறேன். இந்த வரி எவ்வளவு அழுத்தமாக இக்கவிதையில் படிந்திருக்கிறது என நினைக்கும்போதே, அதைவிட அழுத்தமாக நம் மனதில் படிந்துவிட்டதை உணர முடிகிறது. ஒரு கவிதை நாம் கண்ட காட்சியைக் கூறுவது உண்டு. ஆனால், நாம் காணும் காட்சிதோறும் கவிதையின் வரிகளை படியச் செய்யும் விந்தையை இந்தக் கவிதை செய்து காட்டுகிறது.
புகைப்படம் : 3 – ( குத்துவிளக்கு)
கவிஞர் ந.ஜயபாஸ்கரனின் கவிதை இது.
காஞ்சிரங்குளத்து
வெள்ளரிப்பழ மஞ்சள் மேனிப்பெண்
விலை கேட்டு வாங்காமல் சென்ற
வாகைக்குளக் குத்துவிளக்கு
கனிந்துகொண்டிருக்கிறது
கடையின் உள்ளே
புறச்சலன நீர்மையின்றி
பொருள்களை மனிதர்களோடு தொடர்புபடுத்தி நினைவுகூர்வது ஒன்றும் புதிதல்ல. பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்து சிவனின் சேவடி சேர்ந்த காரைக்கால் அம்மையாருக்கு அதிகாலை நேரமும், நடுப்பகலும், அந்தி மாலையும், அடர் இரவும் சிவனையே நினைவூட்டுகின்றன. குயிலும்,மயிலும், கருங்குருவியும், கருவிளைப்பூவும், காயாம்பூவும், களாப்பழமும் ஆண்டாள் நாச்சியாருக்கு அரங்கனையே நினைவூட்டுகின்றன. இவையெல்லாம் அந்த நினைப்பிலேயே நாளும் பொழுதும் நினைந்து நினைந்து கனிந்தவருக்கு நேர்ந்தது.
ஆனால், இக்கவிதையில் வெண்கலக் கடையேறி ஒரு குத்துவிளக்கை விலைபேசிச் சென்ற பெண்ணின் நினைவு கவிதைக்குள் சுழல்கிறது ; குத்து விளக்கின் மஞ்சள் நிற ஒளியில் அவளின் ஞாபகம் பிரகாசிக்கிறது.
குத்துவிளக்கு இலக்குமியின் குறியீடாகக் கருதப்பட்டாலும் பொதுவாகக் குத்துவிளக்கு ஒருபோதும் ஒருவருக்குச் சட்டென ஒரு பெண்ணை நினைவுபடுத்துவதில்லை. ஒரு பொதுஉணர்வை மாற்றி அமைத்தே கவிதை உணர்வு தலைநிமிர்கிறது.
இங்குக் கவிதையில், வெண்கலக் கடையில் புறச்சலன நீர்மையின்றிக் கனிந்து கொண்டிருப்பது வாகைக்குளக் குத்துவிளக்கு அல்ல; காஞ்சிரங்குளத்துப் பெண்ணின் நினைவே. கவிதையில், குத்துவிளக்கின் மஞ்சள் வண்ண பிரகாசத்தில் படிந்திருக்கும் பெண்ணின் நினைவு, அதைவிட அழுத்தமாக வாசக மனத்தில் படிந்து விடுவது, ஒரு புகைப்படத்தில் அழுந்தப் படிந்த நினைவை ஒத்திருக்கிறது.ஆனால், இந்தக் கவிதையை வாசித்த பிறகு ஏதாவது ஒரு குத்துவிளக்கைப் பார்க்கும்போதெல்லாம் இக்கவிதையின் நினைவு ஒளிர்வது ஒரு சுவரில் தொங்கும் புகைப்படத்தால் முடியாத கவிதையின் செயலல்லவா?
உதவிய நூல்கள் :
1.ஞானக்கூத்தன் கவிதைகள்
பதிப்பாசிரியர்: திவாகர் ரங்கநாதன்,
காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில் – 629001
2.ராணியென்று தன்னையறியாத ராணி
ஷங்கர்ராமசுப்ரமணியன்,
நற்றிணை பதிப்பகம்,
சென்னை – 600005
3.பிற்பகல் பொழுதுகளின்
உலோக மஞ்சள்
ந. ஜயபாஸ்கரன்,
காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில் – 629001