
சொல்லாமலே போய்விட்ட
கடைசி வார்த்தைகளையும்
கேட்காமலே போய்விட்ட
கடைசி குரலையும்
காலம் யாரோ
வேறு சிலரின் காலடியில்
கொண்டு சேர்க்கிறது
அருகி அருகி அற்றுப்போனதை
அலைந்து தேடும் ஆன்மாவோ
பிரபஞ்சங்கள் தாண்டிய
பெருவெளியில்
பெருமூச்சுடன் காத்திருக்கிறது.
*
வேகமாய்
திரை தள்ளிக்கொண்டிருந்த விரல்
திடுமென
நிறுத்தி நிதானித்து
நகராமல் பிடித்து வைக்கிறது
அந்த நாழியை
நினைவு அடுக்குகளுக்குள்
சென்று படிந்துவிடாமல்
நிர்க்கதியாய் நிற்கும் இழையொன்று
எப்படிப் புரிந்தது
விரல் நுனிக்கு?
*
ஆமாம்
அடி உதவுவது போல்
அண்ணன் தம்பிகள் உதவுவதில்லை
ஆனால் பாருங்கள்
அடியும் உதையும்
அறுத்துப் போட
அண்ணன் தம்பிகளும்
சேர்ந்தே உதவுகிறார்கள்
ஆணவக் கொலைகளுக்கு
*
யாரோ சிலருக்காக
தசைகளை அறுத்து
தலைவாழையிலிட்டு
பள்ளயம் வைத்து
படையலிட்டு விடுகிறீர்கள்
ஆனால் நம்புங்கள்
அவர்கள்
இளங்கறிக்காக
இருகையேந்தி
இன்னொரிடத்தில்
இரந்து
நின்று கொண்டிருக்கலாம்!
*
இறுதி வேண்டல்
எரிமதம் கொண்ட
யானையின் வேகம் போல
நின் காமத்தீயில்
எரிந்து கரியாகி
இல்லாமல் போவதன்ன
கூடல்!
*