இணைய இதழ் 115சிறுகதைகள்

சப்தங்களற்ற நிசப்தம் – காந்தி முருகன்

சிறுகதை | வாசகசாலை

வீட்டிற்குள்‌ நுழைந்ததும் ஊதுவத்தியின் வாசனை மூக்கைத் துளைத்தது. புகை மண்டலத்திற்குள் நுழைந்திட்டாற் போல சிறு உணர்வு ஏற்பட்டு விலகிப் போனது. மூளை வரை ஏறும் மணம் என்பதை விட நெடி என்பதே சாலப் பொருந்தும். நெடி மாறனை மூச்சுத் திணறலுக்கு ஆளாக்கி விடும். ராஜ ராஜேஸ்வரி அஸ்தகம் பாடிக் கொண்டிருக்கும் மனைவியைக் கடிந்து கொள்ள முடியாமல் சிறிது நேரம் அறைக் கதவைத் தாளிட்டுக் கொண்டு மெத்தையில் சாய்ந்து கொண்டான் மாறன். பெரும்மழைக்கான அறிகுறி வானில் தென்பட்டிருந்ததால் காற்றின் வேகம் சற்று கூடுதலாகவே சன்னல் திரையை மீறி செயல்பட்டுக் கொண்டிருந்தது. நீண்டிருக்கும் சன்னல் திரையும் அவ்வப்போது மாறனின் மூக்கின் வரை தொட்டுவிட்டுப் பின்வாங்கிக் கொண்டிருந்தது.

காலையிலிருந்து கார் பழுதும் பார்க்கும் பட்டறையில் நின்றுக் கொண்டே வேலை செய்வதால் பின்னங்கால்களும் பாதங்களும் ஓய்வை வேண்டிக் காத்திருந்தது போல மெத்தையில் மெய் மறந்து கிடந்தன. அழுக்காடையோடு வெள்ளை கலந்த ரோஜா பூ மெத்தை விரிப்பு மாறனின் அயர்வை உள்வாங்கிக் கொண்டிருந்தது.

தாளிடப்பட்டிருந்த அறைக்கதவு காற்றின் அழுத்தத்திற்கு அவ்வப்போது முட்டி மோதி ஓசையை எழுப்பிக் கொண்டிருந்தது. கண்களை மூடியவனுக்கு அந்தச் சிறு ஓசை கூட இமைகளை சலனமடையச் செய்தது. ஆழ்ந்த நிலை உறக்கம் அவனது கண்களில் தென்பட்டும் கூட கதவின் ஓசை  மூளையில் சிறு தட்டு விழுந்தது போலவே அவ்வப்போது திடுக்கிடச் செய்தது. அதிர்வலை ஏற்படுத்தும் ஒவ்வொரு முறையும் திரைச்சீலை மாறனது முகத்தைத் தழுவிச் செல்லத் தவறியதில்லை. அவனுக்குள் அவசியமற்ற ஓர் உணர்வை நிகழ்த்திக் கொண்டிருக்கும் சன்னலை மூடவும், காற்றோடு வன்மம் கொள்ளவும் அவன் ஒரு போதும் முனையவில்லை என்பது ஆச்சரியம்.

குப்புற படுத்தவாறு தன் பிரம்மைகளிலிருந்து விடுபட நினைத்தவனுக்கு திரைச் சீலை காலை வருடிக் கடந்த நொடி உடலைச் சிலிர்க்க வைத்து அயர்விலிருந்து பெரும் சீக்கிரத்தில் விடுவிக்க வைத்தது. கனத்துப் போயிருந்த தலையை உயர்த்தி பட்டென்று கால்களைத் தரையில் அழுத்தி மெத்தையில் அமர்ந்து கொண்டான் மாறன். எதிர்பாராத உருவம் ஒன்று தன் மெல்லிய துண்டை அவிழ்த்து தலையைத் துவட்டிக் கொண்டே உள்ளே நுழைந்தது. ஏதும் பேச இயலாதவனாய் கறை படிந்திருந்த மெத்தை விரிப்பைக் கடந்து மணிமேகலையின் திட்டுதலைப் பொருட்படுத்தாமல் அறையை விட்டு வெளியேறினான் மாறன்.

பார்வைக்கு மங்கலான நிலை குறைகையில் சமையலறை மூலையிலிருந்த அறைக் கதவு லேசாகத் திறந்திருந்தது தெளிவாகத் தெரிந்தது. நெற்றியைச் சூழ்ந்திருந்த வியர்வைத் துளிகள் முகத்தைத் தழுவி சட்டையில் வடிய ஆரம்பித்தன.

“ஆரம்பிச்சிட்டீங்களா….”

மணிமேகலையின் பேச்சு காதில் விழாதவாறு கால்கள் நகர ஆரம்பித்தன மாறனுக்கு.

“சாம்பராணி பொக போட நா…”

அவள் முடிக்கும் முன்னரே மாறனது சிந்தனைகள் சிதற ஆரம்பித்தன.

“ஆமாம்…பொல்லாத ரூம்…கதவ தெறக்கவே கூடாதாம்…பேய் வீ…”

மணிமேகலையின் முனகல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவனது செவிகளிலிருந்து விடுபட்டுக் கொண்டிருந்தன. மனம் ஒப்புதல் வழங்காத நிகழ்விற்கு மூளை அதிவேகமாய் அடிப்போட்டுக் கொண்டிருந்தது. கால்களின் நகர்விற்கு பின்னிருந்து உந்துதல் சக்தி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. சூழலைக் கண்ட மணிமேகலை நெற்றியில் அடித்துக் கொண்டு தன் வேலைகளில் மும்முரமானாள்.

கதவை முழுமையாகத் திறக்க முனையாத விரல்கள் நரம்புத் தளர்ச்சியாய் தவித்துக் கொண்டிருக்க, படாரென கதவைத் திறந்தான் மாறன்.

“வா…மாறா…”

அவளது குரலேதான். வெகுதூரத்திலிருந்து ஒலிக்கிறது. அது அன்பாலான குரலல்ல. உறுமிக் கொண்டே காற்றிலாடிய குரலோசை. அறை முழுவதும் நிறைந்திருந்த நூல்களில் ஒலித்துக் கொண்டிருப்பது போலவே ஆங்காங்கே உணர முடிந்தது. சற்றும் கலையாமல் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நூல்கள் அப்படியே தூசிகளால் நிரம்பியிருந்தன. திறந்து வைக்கப்பட்ட மடிக்கணினி இன்னுமும் மூடப்படவில்லை. அம்மா கடைசியாக எழுதிய அந்தச் சிறுகதைத் தாள்கள் பேனாவின் அடியில் பத்திரமாக இருந்தன. அம்மாவின் மேசையை‌ இன்னுமும் மாயா ஆங்கலோவும், அருந்ததி ராயும் ஆக்கிரமித்திருந்தனர். சுவரைச் சுற்றியிருந்த விருதுகளும், சான்றிதழ்களும், படங்களும் மாறனின் தலையைச் சுற்றியே கண்களின் பார்வையை அலை மோத விட்டு உடல் முழுக்க வியர்த்து மயக்க நிலைக்குத் தள்ளப்படும் வேலையில் பட்டென விழுந்து நொருங்கிய கண்ணாடிகளின் துகள்கள் கண் இமையை மூடச் செய்தது.

“ஐயோ….என் புக்கு….”

அம்மாவின் பதற்றக்குரல் மூடிய கண்களைத் திறக்கச் செய்தது. கண்ணாடி துகள்கள் மீது தன் பாதங்களைப் பதித்த அம்மா, காப்பியின் ஈரத்திலிருந்து “ஆழிப்பேரலை “நாவலை எடுத்து அணிந்திருந்த சட்டையில் துடைக்கின்றார். ஒவ்வொரு பக்கங்களாகத் திறந்து முகத்தை நிரப்பிய தன் கண்ணீர் படாதவாறு காப்பிக் கறையைத் துடைக்க முயற்சிக்கிறாள். அறைக் கதவினருகே கண்களைத் தேய்த்தவாறு பத்து வயது சிறுவன் நிற்கிறான். ஒரு கோர உருவமொன்று விரிந்த தேகத்தோடு இடுப்பில் கைகளை வைத்து ஆங்காரமாய்ச் சிரிக்கிறது. அதன் தடித்த கால்கள் அம்மாவின் தோள் பட்டையை எட்டி உதைக்கிறது. அம்மா கண்ணாடித் துகள்களின் மீது விழுகிறாள்.

“..ம்மா ..”

என்று அந்தச் சிறுவனும் அலற, மாறனின் உணர்வுகள் தன்னிலை மறந்து நின்றது. கண்ணீரோடு சிறுவன் அம்மாவின் அருகில் “அப்பா மோசம்…” என்று சொல்லியவாறே அமர்கிறான். அந்த உருவம் மோட்டார் வண்டியில் ஏறிச் செல்லுகையில் மறுபக்கம் மீண்டும் ஏதோ உடைபடும் சத்தமொன்று காதை எட்டிப் பார்த்தது.

கண்களை திசைத் திருப்பிய மாறனுக்கு அதே உருவம் சிவப்பு நிறத்திலான‌ மடிக்கணினி தரையில் ஓங்கிய ஒலியை விட அதன் பாகங்கள் சிதறிய நொடிகளே காட்சிக்குள்ளானது.‌ அதே அம்மா இயல்பான நிலையில் முகத்தில் எந்தவொரு சலனமுமின்றி உடைந்த பாகங்களைச் சேகரிக்கிறாள். அங்கேயும் மாறன் கால் நடுங்க நிற்கிறான். அதே சிறுவன் நெகிழிப்பையைக் கொண்டு வந்து தாயிடம் கொடுத்துவிட்டு உடைப்பட்ட மடிக்கணினி பாகங்களைப் பொறுக்குகிறான். அந்த உருவம் நாற்காலியில் அமர்ந்தவாறு தலையைத் தொங்கவிட்டு ‌குறட்டை விடுகிறது. சிறுவன் காதோரமாய் தாயிடம் “அவரு மோசம்…” என்கிறான்.…

அந்தச் அறையில் மாறனின் சிந்தனைகள் தட்டுத் தடுமாறின. கதவோரமாய் வந்து நின்ற மணிமேகலை சலித்துக் கொண்டு தன் வேலைகளைப் பார்க்கலானாள். போகும் முன் அறையின் மின்விசிறியைத் தட்டி விட்டு சென்றாள். அம்மாவின் படத்திற்கு மாட்டப்பட்டிருந்த பூமாலை ஒரு பக்கமாய் கீழே விழ மாறனின் கைகள் நடுங்க ஆரம்பித்தன. அம்மாவின் வருகையை உணரும் தருணமது. கொஞ்சம் கொஞ்சமாக உடல் அலமாரி மீது சாய மேலிருந்து ஒரு படம் கீழே விழுந்தது. அந்தக் கொடூரமான உருவத்தைப் பார்த்த மாறனின் கண்களில் நீர் ததும்ப ஆரம்பித்தது. இறுதிச் சடங்கிற்குப் பின்னர் இன்றுதான் அந்த உருவத்திற்காக அழுகிறான் மாறன். அன்று அம்மாவின் கண்களில் மறுத்த கண்ணீர் இன்று அவனது கண்களில் இருமடங்காக ஊற்றெடுத்தது. படத்தோடு வந்து விழுந்த நாளிதழ் செய்தி இன்னும்‌‌ மனத்தை இரணமாக்கியது.

“நடுத்தர வயது எழுத்தாளர் வெட்டிக் கொலை“ – அருகே முகம் நிறைந்த புன்னகையோடு நாளிதழில் அம்மாவின் படம்.

அம்மாவின் இறப்புச் செய்தியில் இலக்கிய உலகம் ஓர் ஆளுமையை இழந்திருந்தது. குறைவான படிப்பறிவு, பெண்ணியம் சார்ந்த எழுத்தாளராய் வென்று நின்றது இன்னமும் பலரும் அம்மாவை நினைவு கூறத் தவறியதில்லை. தன்னைச் சூழ்ந்த அத்துணைத் தடைகளையும் கடக்க மனம் தேர்ந்தவள். தேடலுக்காகப் பல பயணங்களை மேற்கொண்டவள். இறுதிப் பயணத்தில் திரும்பி வரவில்லை.

அம்மாவின் நூல்களின் இடுக்குகளிடையே தன் எண்ண அதிர்வுகளை உதித்த டைரி ஒன்று மறைத்து வைக்கப்பட்டுத்தான் கிடைக்கிறது. பலரும் அறிந்திடாத இவ்விடயத்தை அவரது நண்பன் கருவும் மறந்து போனது துக்கத்தின் உச்சம். மாறனும் அதை எங்கும் பதிவு செய்யவில்லை என்பது நிதர்சனம்.

நள்ளிரவு மணி பன்னிரண்டை நெருங்க மணிமேகலையின் மனத்தில் அச்சம் நெருக்கமானது. வழக்கத்திற்கு மாறாக மாறனது நடவடிக்கை அவளைப் பதற்றமாக்கியது. கதவின் ஓரமாக நின்று எட்டிப் பார்த்தாள். தாயின் கொலை வழக்கு நாளிதழ்கள் அவனது மடியில் இருந்தன. எதுவும் ‌பேசாமல் குழப்பம் சூழ்ந்த மனதோடு நகர்ந்து போனாள். மாறனது ‌வருகைக்காக வரவேற்பறையில் அமர்ந்து கொண்டாள்.

நூல்களின் இடுக்கில் இருந்த வளைந்த பேனா ஒன்று மாறனது கண்ணில் பட்டது. ஆறு மாதத்திற்கு முன்பு அங்கு சொருகப்பட்டிருக்க வேண்டும்.

மீனாட்சி பெருமாளின் இறுதிப் பயணம் நாட்டின் எல்லையிலிருந்த பழங்குடி மக்களைக் காணும் விருப்பம்தான். தனியாளாகச் சென்றிருக்க வாய்ப்பில்லை என்பது ஊரறிந்த ஒன்று. அவளின் அந்தப் பயணம் காட்டுப் பாதையை உள்ளடக்கியது. நெருங்கிய நண்பன் கருணா இல்லாமல் அவளது பயணங்கள் முழுமைப் பெறாது.

“கரு, நீயில்லாமல் முடியாது. ஆஸ்திரேலியாவிலிருந்து வந்தப் பிறகுதான்…”

இன்றளவும் மணிமேகலை நினைத்து பார்க்கும் மீனாட்சியின் கடைசி வாட்சப் தகவல் மலாய் மொழியில் . “கிளம்பி போய்க்கிட்டு இருக்கேன்டா.. இந்த வாட்சப் தகவல் மணிமேகலைக்குப் பேரதிர்ச்சியாக இருந்தாலும்”

“பெல்“என்று எப்போதும் அழைக்கும் மீனாட்சியின் தொலைதலில் அதை உணரத் தவறியிருந்தாள் மணிமேகலை.

மீனாட்சியின் பயணத்தன்று காணாமல் போன மாறனின் இருப்பையும் அவள் நினைவில் கொள்ளவில்லை. அதிகாலையில் வீடு வந்து சேர்ந்தவன் வழக்கத்திற்கு மாறாக அன்று பட்டறைக்கு வந்திருந்த தோயோடா ஹைலக்ஸ் ரக வாகனத்தை வீட்டுக்குக் கொண்டு வந்து கழுவியதை மணிமேகலை கருத்தில் கொள்ளவில்லை.

வெகுநேரமாகியும் மாறன் அறையை விட்டு வெளியே வராதது மணிமேகலைக்கு எண்ண அலைகள் சிதற வைத்தது. அறையை எட்டிப் பார்த்தவளுக்கு

“போடா…வரேன்…”

குரல் மட்டும் பதிவானது. அரைக் கண்களோடு அறையைப் பார்த்தாள். தலை தொங்கியவாறு மாறன் அமர்ந்திருக்க பேனா ஒன்று முனை‌ தரையை நோக்கி அழுத்தியவாறு உடைந்து மடங்கி அவனது உள்ளங்கையை ஆக்ரமித்திருந்தது.

மீனாட்சியின் அறையில் உடைந்து போன பேனாக்கள் அதிகம்.‌ ஒவ்வொரு முறையும் மணிமேகலை கேட்கும் போதெல்வாம் மீனாட்சி புன்னகையால் கடந்து விடுவது வழக்கம். இருந்தாலும் அவளது கண்களில் ஒரு வித பயம் குடிக் கொண்டது போல உணர முடியும்.

மீனாட்சியின் ஒரு நூல் வெளியீட்டிலும் மாறன் பங்கு கொண்டதில்லை. பலரும் அறியாத‌ உண்மையில் மீனாட்சி பின்வாங்கியதில்லை.

ஆழ்ந்த உறக்கத்திற்குப் போன மணிமேகலையின் பாதங்களை மாறன்‌ பிடித்து விட்டதை அவள் உணரவில்லை. மீனாட்சியின் வெற்றிடத்தை நிரப்ப தையல் கலையை தனதாக்கிக் கொண்டு சாதித்தும் வருகிறாள்.. பாதங்களைப் பிடித்து விட்டவன் தன் இரு கைகளையும் இடுப்பில் வைத்து உடலை விரித்துச் சிரித்ததை ஆழ்ந்த உறக்கத்திலிருந்த மணிமேகலை உணரத் தவறினாள்.

kanthimurugan61@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button