‘நாள்பட்ட கால்வலி’யில் வாழ்ந்த சுமதி ராஜேந்திரன் – கே.ரவிஷங்கர்
சிறுகதை | வாசகசாலை

விடிகாலை இரண்டு மணி இருக்கும். இழந்த தூக்கத்தை இழுத்து மீண்டும் கண்ணுக்குள் சொருக முயற்சித்து வராமல் புரண்டு புரண்டு படுத்தபடி இருந்தான் தயாளன். பாதித் தூக்கத்தில் அம்மாவின் கால்வலி நினைப்புதான் நிம்மதியாகத் தூங்கவிடாமல் கலைத்து விட்டது. இரவு 11.30 -12 மணி வாக்கில் தூக்கம் கலைந்திருக்கும் என்று யூகித்தான். பேசாமல் தண்ணீர் குடித்துவிட்டு வந்து படுத்திருக்கலாம்.
ஒருக்களித்திருந்த கதவு வழியாக அம்மாவைப் பார்த்தான். கலங்கி மனம் பாரமானது. கொஞ்ச நேரம்தான் தூங்கி இருப்பாள் போல. நேற்று இரவு தன் வேலைகளைச் சீக்கிரமாக முடித்துவிட்டு அம்மாவின் இரண்டு கால்களையும் அரைமணி நேரம் மெதுவாகப் பாசத்தோடு நீவிவிட்டுச் சுகித்தபடி தூங்க வைத்தான். வெறும் தேங்காய் எண்ணெய்தான். அந்தக் கம்பெனி கால்வலி தைலத்தைத் தலையைச் சுற்றி எறிந்து ஒரு மாசம் ஆயிற்று. அது படுத்தி எடுத்துவிட்டதாக அம்மா புலம்பித் தள்ளாத நாள் இல்லை. இப்போது தன்னையும் வேறு வகையில் படுத்தி எடுப்பதைத்தான் தாங்க முடியவில்லை.
அரைக் கண் முகம் மோட்டுவளையைப் பார்த்தப்படி இருந்தது. இரண்டு கைப் பிடிகளிலும் கொஞ்சம் கொத்தாக பெட்ஷீட் துணியை இறுகப் பற்றி இருந்தாள். முனகியபடி கால்களை உதறிக் கொண்டு தூக்கம் வராமல் கால்வலியின் இம்சையில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள். தன் தூக்கம் கலைந்த அதே சமயத்திலும் எழுந்து பார்த்த போதும் அம்மா இப்படித்தான் அவஸ்தைப்பட்டபடி இருந்தாள். தூக்கத்தைக் கலைக்கிறது கால்வலி. கடந்த பத்து நாளாகப் பார்க்கும் காட்சி. தேவை இல்லாமல் இழுத்துவிட்டுக் கொண்டது. பக்கத்தில் இல்லாத டாக்டர்களா? வலியோடு மூப்பின் தாக்கம் இப்படிச் சிந்தனையை மழுங்கடிக்கிறது. ஜமுக்காளத்தில் வடிகட்டிய அசட்டுப் பிடிவாதம். சொல்லி பார்த்தாயிற்று. கேட்டால்தானே? எவ்வளவு நாள்தான் கடத்துவது. உடம்புதான் பாழாகிறது.
“என்னடா தூங்கலயா” அம்மா பக்கவாட்டில் திரும்பி மெதுவாகக் குரல் கொடுக்க யோசனையில் இருந்து விடுபட்டு திடுக்கிட்டான் தயாளன்.
“தண்ணி குடிக்கலாம்னு எழுந்தேன். ஜஸ்ட் அப்படியே உன்ன பார்த்துட்டு போலாம்னு………”
“அந்த சுமதி ஆயில் கம்பெனிக்காரியைப் போய் பாருடான்னேன். இன்னும் போகாம இருக்க. போன்ல பேச சொன்னா நிம்மதியாகும். முடிஞ்சா அம்மா நிறைய ரிக்வெஸ்ட்டு பண்ணிச்சுன்னு அவள அழச்சிட்டு வா. பெரிய மவ சாரதா மாதிரி லட்சணமா இருக்கா. பார்த்தா ஒரே நாள்ல சரியா போய்டும். தைலம் ஃபால்ட்டுன்னு சொல்லிடாதே. அதுக்கும் என்ன தெரியும்?”
முகத்தை எரிச்சலுடன் சுருக்கிப் பார்த்தான். பதில் எதுவும் சொல்லவில்லை. கெட்ட வார்த்தை முனகலுடன் படாரென்று கதவைச் சாத்தி படுக்கையில் போய் விழுந்தான். இறந்து போன பெரியக்கா பேர இழுத்து சும்மா எமோஷனல் சீன் போட்டு எப்படியாவது சாதிக்கலாம்னு திட்டம் போடுது கெழவி. ரொம்ப நேரம் தூங்காமல் அம்மாவின் கால் வலியைப் பற்றி ஏதேதோ யோசித்து மண்டை வலி வந்ததுதான் மிச்சம். தூங்கும் போது மணி இரண்டு.
மறுநாள் முதல் வேலையாக ஆர்த்தோ டாக்டர் சண்முகவேலைப் போய் பார்த்தான்.
“நீ மட்டும் வந்துருக்க தயாளா? அம்மாவ அழைச்சுட்டு வரல? இம்புரூமெண்டு இருக்கா? அந்த கால் வலி ஆயில் பொம்பளய மறந்துட்டாங்களா”
“என்னத்த சொல்றது. தஞ்சாவூர் கல்வெட்டு போல மனசுல பதிய வச்சுருக்காங்க. ஓவரா அப்செஷன் ஆகி மெண்டல ஆயிட்டாங்க. எதுக்கு மூளை? அத வச்சு யோசிக்காத….!சே…! இம்சையாக இருக்கு டாக்டர் ”
”ரொம்ப லாஜிக் யோசிக்காத. ஹாவ் எ பிராக்டிகல் அப்ரோச். நீ போய் அந்த லேடிய பாரு. விஷயத்த சொல்லு. அவங்க கைல நான் எழுதித் தர ஆயின்மெண்ட அவங்க மருந்து போல கொடுக்க சொல்லு பாசிட்டிவ்வா நடக்கும். அம்மாவும் நடப்பாங்க” மெலிதாக சிரித்தபடி அவனைப் பார்த்தார்.
“சார்……” தயக்கத்துடன் இழுத்தான்
“என்ன தயாளா… சொல்லு”
”லதா சரவணன பிசியோதெரபி லேடின்னு கண்டுபுடிச்சுட்டாங்க அம்மா. அதனால நீங்க ஒரு தடவ வீட்டுக்கு வந்து பார்த்தீங்கன்னா ….! பெரிய டாக்டரே வந்து பார்த்துட்டாருன்னு அம்மா க்யூர் ஆவாங்க……!” சொல்லிவிட்டு மிகுந்த தயக்கத்துடன் “கேட்கற பீஸ் கொடுத்துடறேன். நானே போக வர ஏசி கார் அரேஞ்ச் பண்,றேன் டாக்டர்”
“இதெல்லாம் வொர்க் அவுட் ஆகாது மிஸ்டர். இன்னும் நீ உங்க அம்மாவா அசெஸ் பண்ணல. நா சொன்னபடி செய்” – என்று முறைத்தபடி பார்க்க தயாளன் கிளம்பத் தயாரானான்.
மறு நாள் தயாளன் சென்னையின் நெருக்கமான பகுதியில் அமைந்திருக்கும் ஹவுசிங் போர்டு குடியிருப்புக்கு பைக்கில் பறந்தான். நானூறுக்கும் மேற்பட்ட வீடுகள். ஐந்தடுக்கு கொண்டவை. காரை பெயர்ந்து சிமெண்ட் பூச்சு வெளியே அகோரமாகத் தெரிய அழுக்கடைந்து கிடந்தது. பைக்கை கோபத்தோடு ’படக்’ என்று ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு சுணுங்கிய முகத்தோடு எதிரே ஒரு வீட்டு மாடிப்படி அருகே கூடி இருந்த பெண்களை நோக்கிப் போனான்.
“சுமதி ராஜேந்திரன் வீடு எதுங்க?”
“சுமதி டீச்சர் வூடுங்களா? தோ அந்த வூடுங்க. அவங்க சூட்டிங் போய்கிறாங்க. என்ன மேட்டருங்க?”
“அவங்க கால்வலி ஆயில் யூஸ் பண்றீங்களா? எதாவது எஃப்க்ட் தெரியுதா” குரலில் உக்கிரமும் நக்கலும் இருந்தது.
பெண்கள் புரியாமல் முகம் சுருக்கி அவனைப் பார்த்தார்கள். யாரும் பதில் பேசவில்லை. மீண்டும் அதே கேள்வியை கேட்டான்.
” யார் நீ? அத்த அவங்களாண்ட கேளுங்க தம்பி. அது அவங்க மேட்டரு” – ஒரு வயதான பெண்மணி அவனை முறைத்தபடி பதிலளிக்க எல்லோரும் மெலிதாக முறைத்தபடி கலைந்தார்கள்.
அவர்கள் போவதை வெறுப்புடன் பார்த்துவிட்டு அவர்களை விட்டு விலகி சுமதி வீட்டருகே வந்தான்.
அப்போது புது சிவப்பு வண்ண கைனடிக் ஹோண்டாவில் வந்த நடுத்தர வயதுப் பெண் அந்த தரைத்தள வீட்டருகே ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினாள். தயாளன் அவளைப் பார்த்தான். கால்வலி தைலம் சுமதி ராஜேந்திரன்தான். ஆனால், இந்தக் குடியிருப்பிற்குப் பொருத்தம் இல்லாமல் இருந்தாள். செக்கசெவேல் நிறம். சராசரி உயரம். தடிமனான உடம்பு. அழகாக அழுந்த நடு வகிடு எடுத்து வாரப்பட்ட தலை முடி. நெற்றியில் பெரிய பொட்டு. வகிடில் குங்குமத் தீற்றல். காதில் கழுத்தில் கைகளில் மின்னும் நகைகள். தன் நிறத்திற்கு பொருந்தியது போல உடைகள். விளம்பர குடும்பப் பெண். அம்மா பாஷையில் ஹவுஸ் ஒய்ஃப். இவளை நம்பித்தான் அம்மா தைலத்தைத் தடவி தேய் தேயென்று காலில் தேய்த்துக் கொண்டவள். இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறாள். பெரியக்கா சாரதா ஜாடையும் இருந்தது.
முகத்தைச் சுருக்கித் தயாளனைக் கேள்விக் குறியுடன் பார்த்தாள்.
“நீங்கதான் சுமதி ராஜேந்திரனா?”
“ஆமாங்க”
“இங்க வேணாம் உள்ள வரலாமா?”
”இன்ன மேட்டரு?” கேள்வியில் எரிச்சல் படிந்திருந்தது.
“அந்த விளம்பர கால் வலி ஆயில் மேட்டர்தான். உங்கள பத்தி விவரங்களா என் பிரண்ட் மூலமா தெரிஞ்சுக்கிட்டேன்”
சில வினாடிகள் யோசித்துவிட்டு சந்தேக முகபாவத்துடன் உள்ளே வரச் சொன்னாள். தயாளன் அங்கிருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்தான். சுவரில் அந்தக் கம்பெனி ஆயில் விதவிதமான விளம்பர புகைப்படங்களில் சிரித்தப்படி இருந்தாள். பார்க்கப் பார்க்க எரிச்சலாக இருந்தது.
அவளும் எதிரே இருந்த ஒற்றை சோபாவில் உட்கார்ந்தாள்.
”இன்ன மேட்டரு சொல்லுங்க”
“எப்படிங்க அது அஞ்சு வருஷ கால் வலி பதினைஞ்சு நாள்ல குணமாயிடுதுன்னு கூசாமா சொல்லி விக்கறீங்க? உங்களுக்கு மட்டும் கிராபிக்ஸ்ல ஸ்பெஷலா குணமாகும் போல”
“புர்ல தம்பி. யார் நீ..? இன்ன மேட்டரு? மரியாத இல்லாம மெர்சலா பேசற. நல்லா இல்ல”
”அதான் உன்னோட டபுள் ஸ்ட்ராங் தைலம். தேய் தேய்ன்னு தேச்சுட்டுக் கேட் வாக் கணக்கா நடப்பியே……! ஆர்த்தோ ரேபிட் ஆக்ஷன் பெயின் ரிலீஃப் கால் வலி தைலம். கில்லர் ஒன்”
உச்சக் கடுப்பில் குரலை உயர்த்தினான்
”ஏய், இன்ன சொல்ற? மரியாத கொறயுது. என்னோட தைலமா? யார் சொன்னா? அது கம்பெனி மேனுபாக்சர் அயிட்டம். அதுக்கு இன்னான்ற இப்ப? வீடு தேடி வந்து மிரட்ற. எங்க வூட்டுக்காரர பத்தி தெரியுமா?”
“உன்ன நம்பி ஏமாந்து போனாங்க எங்கம்மா. ரெண்டாயிரம் ரூபாய் செலவு பண்ணி வாங்கித் தண்டமாயிடுச்சி. ரியாக்ஷன் ஆகி கால்வலி அதிகமாகி ரெண்டு மாசமா அவஸ்தப்படாறாங்க. எனக்கும் தூக்கம் போச்சு. உனக்கு தெரியுமா?”
“தூக்கம் போச்சுன்னா? கால்லதானே தடவனம். முழங்க சொன்னாங்களா? சும்மானா ஏத்திவுடற. உன்னோட அம்மாவுக்கு ஏதோ காம்பிளிகேசன் இருந்திருக்கு. அங்க சொல்லு. செல் நம்பர கொட்ட எழுத்துல ஓட விடறான்ல. கம்ப்ளைண்டு ரிட்டர்ன் ரிஃப்ண்டெல்லாம் கம்பெனில. நாங்க ஆட் மார்க்கெட்டிங் கம்பெனி. கம்பனிதான் பொறுப்பு. கன்சீமர் கோர்ட்டாண்ட போ”
“கம்பெனி உங்கள காட்டி நம்ப வச்சு எங்கம்மாவ சீட் பண்ணிட்டது உங்களுக்குத் தெரியனும். எங்கம்மா உங்கள பாக்கனும்னு துடிக்குது”
“சீட்டா? இன்னா நீ…? உங்கம்மா எந்த உலகத்துல இருக்கு? அது சரி….. நீ சொல்ல தாவல அம்மாகிட்ட. எனக்குக் கால்வலின்னு யார் சொன்து? அது அந்த தைல கம்பெனி எடுத்த வெளம்பரம். பேர கூட முழுசா சொல்ல தெரியாம மூணு டேக் எடுத்தாங்க. இங்க பேசற ஏரியா பாசை அங்க பேசமாட்டேன் தெரிஞ்சுக்கோ. லூசா? நீ படிச்சவன்தானே? உனக்குப் புரியத் தாவல? இங்க வந்து குரல் கொடுத்துகினு இருக்க. மெர்சல் காட்டாத. எங்க பசங்கள கூப்டவா? கதயே வேறயாகிடும்”
கேட்டவுடன் தயாளன் பதட்டமாகி உடம்பு லேசாக நடுங்கியது.
“எனக்கு எல்லாம் புரியதுங்க. டென்ஷன்ல பேசிட்டேன். மக போல நம்பி வாங்கி ஏமாந்து போனது இல்லாம ரியாக்ஷன் ஆகி வீங்கி இம்சைப்பட்டுத் தெனம் சாவறாங்க”
தயாளனின் திடீர் மனோபாவ மாறுதலைப் பார்த்து சற்று திடுக்கிட்டாள் சுமதி. இரண்டு நிமிடம் அமைதி நிலவியது.
”ஏம்பா தம்பி…. கேட்கறேன்னு தப்பா நெனக்காத. இவ்வளவு ஜூட்டா வூடு தேடி வந்து வீர ஆவேசமா காட்றயே. என்கொயரி பண்ணி வாங்க வேணாம்? டாக்டராண்ட காட்லயா. கால்லதானே தடவிச்சு. உள்ளுக்குச் சாப்டலயே? அதுக்கு வேற ஏதோ பிராப்ளம். வயசாகி பூட்சு”
“தன்னோட பொண்ணு கணக்கா நம்பிடிச்சுக்கா அம்மா” பரிதாப தொனியில் குழைந்துப் பேசினான்.
”அதான் மேட்டரு. அதுக்கு நா இன்ன செய்றது” உள்ளுக்குள் பெருமைப்பட்டு வெளிக்காட்டாமல் சொன்னாள்.
“நானு ஆட் மாடலு. எனக்குத் தெரியாதா? தோ பக்கத்து ஊட்ல கூட வாங்கித் தடவுறாங்க. நல்லாத்தான் இருக்காங்க. கம்பெனி வெசமா விக்கறான். நம்பனும் தம்பி”
“கரெக்டுக்கா”
”தைலம் கொஞ்ச முன்னபின்ன இருக்கும். ஆனா, நீ சொல்ற மாதிரியெல்லாம் ரியாக்சன் கொடுக்காது. அம்மாகிட்ட ஏதோ கோளாறு இருக்கு. எல்லாம் சரியாயிடும்னு நா சொன்னேன்னு சொல்லு. நா உனக்குப் பேசி றீஃப்ண்ட் வாங்கித் தரேன்”
“இல்ல” அரை நிமிடம் அவளைப் பார்த்து தயங்கிவிட்டு, ”ரீப்ண்ட் வேணாங்க. உங்கள பார்க்கனுமாம். பேசனுமாம். அழைச்சுட்டு வான்னு தெனம் அரிச்சு எடுக்குறாங்க. பாவம்கா அம்மா. நீங்க ஒரு வாட்டி வீட்டுக்கு வந்து அம்மாவ பார்த்துட்டு ஆறுதல சொன்னீங்கன்னா சரியாடும்”
அவனை கோபமாக முறைத்தாள்.
”என்ன வச்சு காமெடி பண்றயா. அய்யோ வேணாவே வேணாம். இப்ப இருக்கற ரீல்ஸு அது இதுன்னு மீடியால ஷேர் பண்ணி வம்பா பூடும். வெளில தல காட்ட முடியாது. கம்பெனி தொரத்தி உட்றுவாங்க. எனுக்கு இன்னா ரெஸ்பான்சி அதுல. டிஸ்கி போட்ருப்பாங்களே கீழ. எந்து ஆக்ட்டிங்தான்”
“நாங்க அந்த மாதிரி ஆளு இல்லேங்க. டீசண்ட் ஃபேமிலி”
“டீசண்டா…? ஆரம்பிக்க சொல மெர்சலா ஏத்து ஏத்தின? செட் ஆவாது. எல்லாம் சரியா பூடும். இதெல்லாம் பாசிங் மேட்டரு. கிளம்பு தம்பி. நா டியூசன் கிளாஸ்ல போய்ப் பையன கூட்டி வரனும்”
அவனை வெளியே தள்ளாத குறைதான். நொந்தபடி வெளியே வந்தான். இங்கு வரும்போது இருந்ததை விட இப்போது மனபாரம் அதிகமாயிற்று. சே…..கொஞ்சம் பெரிய மனசு பண்ணி வந்துப் பார்க்கக் கூடாதா? ஜஸ்ட் பெண்ணுக்குப் பெண் ஹெல்ப்தானே. என்ன செய்வதென்று புரியாமல் எங்கோ வெறித்தப்படி வண்டியில் உட்கார்ந்து ’அம்மா செத்து ஒழியும் வரை இது இருக்கும்’ முனகிக் கொண்டே எரிச்சலில் உதைத்தான் பெடலை. வீட்டுக்குப் போனால் அம்மா சத்தியமாக உதைப்பாள் கால் வலி பாவனையில். முரட்டுப் பிண்டத்திற்கு காரியத்தைச் சாதிக்க லாயக்கில்லை என்று வாயைவிட்டு வெளி வராத முனகலோடு.
தயாளன் கிளம்பியடன் ரிஷி பூர்ணா மவுண்டன் ஆயுர் & சித்தா மெடிசன் கம்பெனியின் விளம்பர பிரிவுக்குச் செல் பேசினாள் சுமதி.
“மேனேஜர் சாரா?”
“எஸ், சொல்லுமா”
நடந்த எல்லா விவரங்களையும் ஒன்றுவிடாமல் சொன்னாள்.
“ஓ……..! நம்பவே முடியல சுமதி. அதே சமயத்துல வெரி ஃப்ன்னி ஆல்சோ. அது போகட்டும். இது பெஸ்ட் காம்பிளிமெண்ட்மா அந்த ரோலுக்கு. தேங்க்ஸ் சொல்லுங்க பாட்டிக்கு…. வாட்ஸோ எவர் ஃப்ன்னி ரீசன்” ஓவென்றுச் சிரித்தார்.
“சார் இத நா நோட் பண்ல சார். காம்பிளிமெண்டா… எடுத்துக்கிறேன் சார்….! ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கேன். அப்படியே இத சாக்கா வச்சு என்ன ’பி’ கிரேடு ஆர்ட்டிஸ்டுலேந்து ’ஏ’ கிரேடுக்கு ஜம்ப் கொடுங்க சார். பேமெண்டும் நல்ல வரும்” கெஞ்சியபடி அசட்டுச் சிரிப்பு சிரித்தாள்
“ஓகே சுமதி….மேக்சிமம் டிரை பண்றேன். க்ளிக் ஆச்சுன்னா அந்தப் பாட்டி வீட்டுக்கு போய் மறக்கமா ’எல்லாம் உங்க ஆசீர்வாதம்னு’ கால்ல விழுந்து பிசிகல் ஆசீர்வாதம் வாங்கிடுங்க. அவங்க கால் வலியும் சரியாயிடும்” வெடியாகச் சிரிப்பு வெளிப்பட போனை கட் செய்தார்.