
என் வார்த்தைகள் எனது முன்னோர்களின் ரத்தம்
என் கனவுகள் மூதாதையர்களின் ஆன்மா
என் கவிதைகள் வஞ்சிக்கப்பட்டவர்களின் துண்டிக்கப்பட்ட நாக்கு
தேசப்படத்தில் நிராயுதபாணிகளின் ரத்தம்
துயர இழைகளில் தொங்கிக் கொண்டிருக்கிறது காலம்
அராஜகத்தின் கன்னிவெடிகளுக்குள் சிக்கியிருக்கிறது எம் வாழ்வு
பிரார்த்தனைக் கூடம் மூடப்பட்டிருக்கிறது
கண்ணீரில் கரைகிறேன்
நிசப்தத்தின் சங்கீதம் அதிகாலைச் சூரியனாய் எழுகிறது
தூரத்துக் கடலிருந்து சூரியன் எழுந்து வருகிறான்
வானம் நீலப்பளிங்காய் மிளிர்கிறது
கூழாங்கற்கள் சிதறிக் கிடக்கும் கரையில் இலைகளற்ற மரம்
கரையொதுங்கி இருக்கிறது படகு
கருமேகங்கள் திரள்கின்றன
அலையற்ற நீரில் மலைப்பசுமை புகைப்படமாய்ப் படிகிறது
பூமரக்கிளையில் இரு வெண்புறாக்கள்
ஒன்று தலையைக் கோதிட மற்றொன்று கவிழ்ந்து
அதன் தாடையை நீவுகிறது
பூக்கள் புறாக்களின் மீது சொரிகின்றன.
*
நாணற்பூவால் மெல்ல வருடுகிறேன்
பூனைக்குட்டி போல மல்லாந்து
மேனி சிலிர்க்கிறாள்
மவுனத்தில் காதலின் சித்திரங்கள் உயிர் பெறுகின்றன
செம்பருத்திப் பூவை உள்ளங்கையில் ஏந்தினாள்
அன்பின் குளிர்மை
உடலெங்கும் பரவியது
சிலிர்த்தபடி அவளுள்
கரைந்து கொண்டிருக்க
கனவுகளை எழுதிக் கொண்டேயிருக்கிறேன்
கனவுகள் குவிந்து கொண்டேயிருக்கின்றன
கனவுகளுக்குள் காணாமல் போய்விடுவேனோ என
பயம் மேலிடுகிறது
தைலமரத்தின் வாசனை
அவளை ஞாபகமூட்டுகிறது
தனித்து நடந்து போகிறேன்
மலையுச்சியிலிருந்து யாரோ கூப்பிடுவது போலிருக்கிறது
மெல்லிய மனதுள் பெரும்பாரம்
அவளின் நினவுகளாய் கனக்கிறது
வாழ்நாள் முழுவதும்
பூக்கூடையை
சுமந்தலைகிறது நத்தை.
*
புரிபடாதவை ஆயிரம்
புரிந்தவை சொற்பம்
புரிந்தும் புரியாமலும் யாவும் கடந்து கொண்டிருக்கின்றன
கரடிக்குட்டி தேனடயை மெல்லுகிறது
தேனீக் குஞ்சுகள் தப்பிட தவிக்கின்றன
சொட்டும் தேன் நதியாய் பாய்கிறது
மூங்கில் பூக்கள் மலர்ந்திருக்கின்றன
தேன்சிட்டுகள் தாவித் திரிகின்றன
வக்கனத்தி முட்டைகளை அடை காக்கிறது
சுனையில் பீறிடும் உயிர்
அருந்த தலை குனியும் மான்
நீர்ப்பரப்பில் மிதக்கும் புலி நிழல்
வனத்தின் நடுவில் மரம்
மரத்தின் கிளையில் கனி
கிளிகள் தின்னத் தடுக்குது பாம்பு
ஒற்றையாயிருக்கும் ரோஜா
கூந்தலில் மிளிர்கிறது
தெளிந்திருக்கும் அவள் முகம் நீர்ஊற்றாய்
கரும் வெள்ளையாய் நீந்தும் மீன்களாய் கண்கள்
நீரின் மேல் உதிரும் பூவாய்
என் இதயம்
கனவு காண்பது மனசுக்கு நிம்மதி
கவிதையில் கரைவது உயிருக்கு சந்தோஷம்
கடும் வெயிலில் காலத்தைக் கடந்தாகனும்
மழைத்துளிகள் நிலம்பட்டுச் சிதறின…சிதறின
நதியில் மிதந்து செல்லும் நீர்க்குமிழிகள் ஒளிர்ந்தன
பிரபஞ்சத்தை சுமக்கும் பெருமிதம்.
*
வழி துலங்கியது
நடக்கிறேன்
கனவுகள் சுமைதான்
பயணிக்கிறேன்
நான் மரமாயிருந்த நாளில்
பறவைகள் கூடு கட்டின
வழிப்போக்கர்கள் பசியாறினார்கள்
நிழலுக்கு வந்தவர்கள்
கிளைகளை முறித்துப் போனார்கள்
ரத்தமும் கண்ணீரும் பெருகியோடின
பறவையாக வந்தவளின்
சிறகுகள் உதிரிந்து போயின
தலைவிரிகோலமாய்
சூரியனைச்
சபித்துக் கொண்டிருக்கிறாள்
வழியெங்கும் இறைக்கப்பட்டிருக்கும்
தானியங்களின் வாசனை
என்னைப்
பசுமைப் புல்வெளிகளுக்கு வழிநடத்துகின்றன
சருகுகளின் சரசரப்பொலியினூடாக
தனிமை
பழங்காலத்தை நினைவூட்டும்
ஒரு மஞ்சள் கீற்று.
*



