சிறுகதைகள்
Trending

பதினேழு- செல்வசாமியன்

“புதுச்சட்டைக்கு யாராவது இஸ்திரி போடுவாகளா..? நீ பண்றதெல்லாம் ரொம்ப அதிசயமாத்தான்டா இருக்கு..” பூமயில் இட்லித் தட்டில் மாவை ஊற்றிக்கொண்டே சொன்னாள். “புதுச்சட்டைனாலும் மடிப்புத்தடம் அசிங்கமாத் தெரியுதுல்ல..” என்று சட்டையை ஹேங்கரில் போட்டுவிட்டு “அப்பா வந்ததும் இந்த சட்டையையும் வேட்டியையும் கட்டிக்க சொல்லு, நான் குளிச்சிட்டு வந்துடுறேன்..” என்று வீட்டின் பின்பக்கம் சென்றான் முருகேசன்.

“இந்த மனுசன் இன்னிக்கு ஒருநாளாவது வீட்டுல குளிச்சாத்தான் என்ன..?  பாத்ரூம்மு கெட்டி சும்மாத்தானே கெடக்கு.. இந்த இருட்டுக்குள்ள குளத்தங்கரைக்கு மண்டி போயிருக்காரு.. பாம்பு பல்லிக கெடந்து புடுங்குனா யாரு பாத்துக்கறது..?”         

“நீயொண்ணும் பாத்துக்க வேணாம்.. இந்த மனுசப்பய நாத்தம்  அதுகளுக்கு    நல்லாத்தெரியும்..  என்  வாடையக்கண்டா கிட்டயே அண்டாதுக.. “ 

என்று தோளில் கிடந்த ஈரத்துண்டை உதறிக் கொடிக்கயிற்றில் போட்டார் சிவக்கொழுந்து.

“டப்பாத் தண்ணிய  மோந்து தலைக்கி ஊத்திக்கிறதெல்லாம் எனக்கு சரிப்படாது.. கொக்கூருணித் தண்ணில போயி விழுந்து எழுந்திரிச்சாத்தான் மனுசனுக்கு  குளிச்ச மாரியே  இருக்கு..” 

என்று நடுவீட்டுக்குள் சென்று சாமிப்படத்தைக் கும்பிட்டு விபூதியை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டு வெளியே வந்தார்.  பூமயிலு இட்லி மூடியை ஆவி பறக்கத் திறந்து விரலால் இட்லியை ஒரு குத்து குத்தி பதம் பார்த்து, கைப்பிடித் தண்ணீரை அள்ளி மேல்வாக்கில் தெளித்துவிட்டு இட்லித்தட்டை தூக்கித் தாம்பளத்தட்டில் கவிழ்த்தாள்.  முருகேசன் தலையில் தண்ணீர் ஊற்றிக்கொள்ளும் சத்தம் பின்பக்க இருட்டுக்குள் கேட்டது.

சிவக்கொழுந்து புதுச்சட்டையையும் வேட்டியையும் உடுத்திக்கொண்டு வாசலில் கிடந்த சேரில் வந்து உட்கார்ந்தார். பூமயிலு தட்டில் நாலு இட்லியும் தேங்காய் சட்னியும் வைத்து தந்தாள். இட்லியைப் புட்டு ஒருவாய் போட்டவர், “காரு எப்ப வருதாம்..?”  என்று கேட்க, தலையைத் துவட்டியபடியே வீட்டுக்குள்ளிருந்து வந்த முருகேசன், “இப்ப வந்துரும்… வந்ததும் கௌம்புனாத்தான்  ஏர்போர்ட்டுக்கு ஏழு மணிக்கெல்லாம் போய்ச் சேர முடியும்.. சரியா எட்டு மணிக்கு பிளைட்ட எடுத்துருவாய்ங்கே..” என்றான். சிவக்கொழுந்துவுக்கு முதல்முறையாக விமானத்தில் பயணம் செய்யப்போகிறோம் என்கிற ஆர்வமோ சுரத்தோ இல்லாமல் இருந்தார். பூமயிலுக்குத்தான் தன்னையும் கூட்டிச்செல்லாமல் அப்பனை மட்டும் அழைத்துச் செல்கிறான் என்கிற சிடுசிடுப்பு முகத்தில் பொரிந்துகொண்டிருந்தது.

முருகேசனுக்கு அப்பாவை விமானத்தில் அழைத்துச் செல்லவேண்டும் என்கிற எண்ணம் சில வருடங்களுக்கு முன்பே துளிர்த்துவிட்டது. அப்போது, அவன் பத்தாம் வகுப்பில் வாசித்துக்கொண்டிருந்தான். ஒருநாள், ஓவியப்போட்டிக்காக அவன் பெயர் கொடுக்க, வகுப்பாசிரியர் “உன் அப்பா பேரச் சொல்லு..?” என்றார்.  அவன் “பதினேழு சார்..!” என்று சொல்ல,  வகுப்பறையே “களுக்” என்று சிரித்துவிட்டது. 

வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக அப்பாவைப் பார்த்து, “உங்க பேரு சிவக்கொழுந்துங்குறதே எனக்கு மறந்துபோச்சு… ஊரே உங்கள பதினேழு பதினேழுனுதான் கூப்பிடுது..?” என்று வகுப்பறையில் நிகழ்ந்த அவமானத்தை எரிச்சலாகக் கொட்டி, “உங்களுக்கு யாரு பதினேழுனு பேரு வச்சா..?” என்று ஆத்திரமாகக் கேட்டான்.  அதற்கு அவர் மிக இயல்பாக “அது நம்ம பெரிய மணியார் வச்சப் பேருய்யா..” என்று சொல்லி, பெயர்க் காரணத்தை விரிவாக சிறு குறிப்பு வரைந்தார்.  ஒருவரின்  இயற்பெயரைத் தாண்டி இடையில் ஒட்டிக்கொள்ளும் பெயர்களிலெல்லாம் இயலாமையாலோ, அறியாமையாலோ அல்லது உடல் குறைபாடுகளாலோ உண்டான கேலிகள்தான் தொக்கிக்கொண்டு நிற்கும். சிவக்கொழுந்துவின் ‘பதினேழு’ என்ற பெயருக்குப் பின்னால் அறியாமைதான் கேலியாக சிரித்துக் கொண்டிருந்தது.  அதுவரையில் அப்பாவின் மீது அவன் கொண்டிருந்த  பார்வைக் கோணம் தரைநோக்கி இறங்கியிருந்தது. அதன் பின் அப்பா உயரமாகத் தெரிய, அவரின் தலைக்கு மேலாக தஞ்சை விமானப்படை விமானம்  தாழப்பறந்து சென்றது. அதிலிருந்துதான், பேருந்தில் பயணம் செய்ய ஆசைப்பட்ட அப்பாவை, விமானத்தில் அழைத்துச் செல்ல வேண்டுமென்கிற  எண்ணம் அவனுக்குள் விழுந்தது.

இப்போது, முருகேசன் சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் அசிஸ்டென்ட் செஃப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறான். மட்டநிலத் தண்டாக அவன் மனதில் புதைந்து கிடந்த அந்த ஆசை,  ஒன்றிரண்டு ஈரப்பசையான சொட்டுகள் விழுந்ததும் படீரென்று  விழித்துக்கொண்டது. மாதாந்திரியைப்  புரட்டி  பயணத்தேதியை தேர்வு செய்து  மூன்று மாசத்துக்கு முன்பே டிக்கெட்டை புக் செய்தான். 

சரியாக பயணத் தேதிக்கு முதல்நாள் சென்னையிலிருந்து வீட்டுக்கு வந்து அப்பாவிடம் டிக்கெட்டைக் காட்டினான். அவர், “எதுக்குப்பா இதெல்லாம்.. எனக்கு பிளேன்ல  பறக்கணும்னெல்லாம் ஆசையில்லப்பா..” என்றார். அவன் அமைதியாக, “உங்கள  பிளைட்ல கூட்டிட்டு போகணும்ங்கிறது என்னோட ஆசைப்பா..” என்றான். அவர் புரிந்துகொண்டார்.  பூமயிலின் முகத்தைப் பார்த்தார். பின் முருகேசனிடம் திரும்பி  “என்னைக்குப்பா போவணும்..” என்றார். அவன்,  “நாளைக்கு விடிகால ஆறு மணிவாக்குல கௌம்புனா.. நைட்டு ஏழெட்டு மணிக்கெல்லாம் வீட்டுக்கு திரும்பி வந்துடலாம்ப்பா..” என்றான்.

வாசலில் நீளமாக வெள்ளைப்படுதாவை விரித்துப் போட்டதுபோல் வெளிச்சம் பரவ, “காரு வந்துருச்சு.. இவன் இன்னும் சாப்பிடாம இருக்கான்..  முருகேசா..!?” என்று வீட்டின் உள்ளே பார்த்தாள் பூமயில்.  அவன் விமான டிக்கெட், ஆதார் கார்டு, ஏடிஎம் கார்டுகளை சரிபார்த்து பர்ஸில் வைத்துக்கொண்டு, பேக்கைத்  தோளில் மாட்டியபடி வெளியே வந்தான். “ஏம்பா, சாப்பிடாம போறியே..” என்று பூமயில் கேட்டதற்கு, “டைம் ஆயிருச்சும்மா, போற இடத்துல சாப்பிட்டுக்குறேன்” என்றான். “இட்லி சுட்டது எதுக்கு..? நாங்க திங்கவா..” என்று டிபன் பாக்ஸில் இட்லியையும்  மிளகா சட்னியையும் வைத்து  காரில் ஏறியவனிடம் நீட்ட, அவன் அதைக் கவனிக்காமல் படாரென்று கதவை சாத்தினான்.  பின்சீட்டில் அமர்ந்திருந்த சிவக்கொழுந்து, “இங்க குடு..” என்று வாங்கிக்கொண்டார். கார் புறப்பட,  பளபளவென்று விடிந்திருந்தது.

திருச்சி ஏர்போர்ட்டில் காரிலிருந்து இறங்கும்போதும் டிபன் பாக்ஸை  கையிலேயே வைத்திருந்தார் சிவக்கொழுந்து. செக்கிங் நடக்கும் இடத்தில்தான் அதை  வாங்கி பேக்கிற்குள் வைத்துக் கொண்டான் முருகேசன்.  அந்த பேக் ஆற்று நீரில் மிதந்துவரும் துணிமூட்டை பாலத்தின் அடியில் புகுந்து வெளிவருவதைப் போல  வெளியே வந்தது. அதையெடுத்து மறுபடியும் தோளில் மாட்டிக்கொண்டான். விமான நிலையக் கட்டிடத்திலிருந்து விமானம் நிற்கும் இடத்திற்கு பஸ்ஸில் கூட்டிச் சென்றார்கள். சிவக்கொழுந்துவிற்கு இதெல்லாம் புதிது என்றாலும் வியப்போ, ஆர்வமோ இல்லாமல் இருந்தார்.  முருகேசனிடம்தான் எல்லாவற்றிலும் முன்னெச்சரிக்கையும் சிறுபதற்றமும் தெரிந்தது. விமானத்தின் உள்ளே இருக்கையில் அமர்ந்ததும் முருகேசன்  தலையைத் திருப்பி கடைசி இருக்கை வரை பார்வையை விட்டான்.  பயணிகள் ஒவ்வொருவரின் முகத்தையும் கூர்ந்து பார்த்தான்.  அப்பாவிற்கு சீட்பெல்ட்டை அணிவித்தான்.  விமானம் பறக்கத் தொடங்கியது. அதன் சத்தமும் உதறலும் அவனுக்கு லேசாக பயத்தை உணர்த்த, அப்பாவைத் திரும்பிப்  பார்த்தான், அவர் சிறிதும் சலனமற்று இருந்தார். விமானம் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களில் அவனுக்கு தூக்கம்  கண்களை சுருட்டிக்கொண்டு  வந்தது.  சிவக்கொழுந்து மகனின் முகத்தைப் பார்த்தார். “…அப்பஞ்சாடையிலயே புள்ளையும் இருக்குறான்.”  என்று அடிக்கடி பூமயிலு  சொல்லும் வார்த்தை  ஞாபகத்திற்கு வந்தது.

சிவக்கொழுந்துக்கு அப்போது பதினாறு பதினேழு வயதிருக்கும். மணியார் வீட்டில் பண்ணையம் பார்த்துக்கொண்டிருந்தார்.  பண்ணையம் என்றால் எருமை மாடுகளைப் பராமரிப்பது. ஒரு டஜன் எருமைக் கிடேரிகள், அதன் கன்றுகள்,  காளைக்காக ஒரு சுருட்டெருமையென்று மொத்தமாக சேர்த்தால் இருபது உருப்படிகள் இருக்கும். அவற்றை மேய்ச்சலுக்கு ஓட்டுவது, பால் கறவை, இரையள்ளிப் போடுவது என இவைகள்தான் அவரின் அன்றாட வேலை.  அதிகாலையில் ஊருக்குள் நுழையும் 17ம் நம்பர் பஸ்காரன் அடிக்கும் ஹாரன் சத்தத்தில்  கண் விழித்தார் என்றால், மணியார் வீட்டிற்குச் சென்றுதான் முகம் கழுவுவார்.  எருமை மாடுகளை அவிழ்த்து மாற்று இடத்தில் கட்டிக் கறவைக்கு உட்கார்ந்தால் மாட்டுக்கு ஒருபடி என்று கறந்தபின்தான் எழுந்திருப்பார். கறந்தப் பாலை மொத்தமாக பெரிய மணியார் மனைவியிடம் கொடுத்துவிட்டு சிறிது நேரம் உட்கார்ந்தார் என்றால் செம்பு நிறைய காபி வரும்.  சாப்பாட்டு விசயத்தைப் பொறுத்தவரை மணியார் வீட்டில் எல்லாருக்கும் பொதுதான். சிவக்கொழுந்துதானே என்ற பாகுபாடெல்லாம் இருக்காது. பெரிய மணியாருக்கு  என்னவோ  அதுதான்  சிவக்கொழுந்துவுக்கும். காபியைக்  குடித்துவிட்டு  துண்டையெடுத்து  இடுப்பில் கட்டிக்கொண்டு கூடை கூடையாக  எருமைச் சாணியையும்  தீவனக்  கழிவையும்  அள்ளி  எருக்குழியில் கொண்டுபோய் கொட்டுவார். 

கட்டுத்தறியை சுத்தமாக கூட்டிப்பெருக்கி  முடிக்கும்போது, 17ம் நம்பர் பஸ் தஞ்சாவூர் சென்று மூன்றாம் நடைக்குத் திரும்பியிருக்கும்.  சிவக்கொழுந்து  கைகால்களை அழம்பிவிட்டு காலைக் கஞ்சிக்கு திண்ணையடியில் குந்துவார்.  பெரிய மணியார் மனைவி ஈயக்கும்பா நிறைய பழைய கஞ்சியும் எருமைத் தயிரும்  போட்டுவந்து வைப்பாள்.  அவர் சாப்பிட்டு முடிக்கும்போது கையை நெய்ப்பானைக்குள் விட்டதுபோல பிசுபிசுப்பாக இருக்கும்.  “மணியார் வூட்டுல எருமைக்கன்னுகள மேய்க்கிறதுக்குன்னே குட்டியானைய  கூழம்போட்டு  வளக்குறாங்கய்யா..” என்று அவரைக் காலனியில்  கிண்டலடிப்பார்கள்.  சிவக்கொழுந்துவும் அப்படித்தான் ஊளைச்சதையும்  வறண்ட தோலுமாக  இருப்பார்.

எருமை மாடுகள் ஒவ்வொன்றும் இரும்புச் சங்கிலியில்தான் கட்டப்பட்டிருக்கும். கொக்கிகளை அவிழ்த்து “ந்த்த..” என்று முதுகில் ஒரு தட்டு தட்டுவார். கிழவி வெற்றிலைப் பாக்கு மெல்லுவதைப்போல அசைபோட்டபடி மாடுகள் மேய்ச்சலுக்கு கிளம்பும். ஆடி அசைந்து சாலையை அவை அடைத்துக்கொண்டு செல்லும்போது, எதிரில் ஒரு ஆள் வரமுடியாது. மூங்கிக்கம்பைக் கொண்டு அடித்தாலும் ஒதுங்காது. தார்ச்சாலையில் இருந்து பிரிந்து கொக்கூருணிக் குளத்துக்கு செல்லும்  மண்சாலைக்கு போவதற்குள் பல பேரிடம் ஏச்சு வாங்குவார். சில பேர் கையை ஓங்கிக்கொண்டு அடியலுக்கு வருவார்கள்.  அவர் 17ம் நம்பர் பஸ் வருவதற்குள் மாடுகளை மண்சாலைக்குள் பத்திவிட வேண்டுமென்று முனைப்புக் காட்டுவார். சரியாக எருமைகள் மண்சாலைக்குள் பிரியும்போது பஸ் ஒலியெழுப்பியபடி வரும். சிவக்கொழுந்து திரும்பி பஸ்ஸை பார்ப்பார்.  அது லேசாக புழுதியைப் பறக்கவிட்டபடி செல்லும். பேருந்துக்குள் சினிமாப்பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும்.  ஏரிக்கரை வளைவில் அது மறையும் வரை பார்த்துக்கொண்டு நிற்பார்.

17 அந்த ஊருக்கு வந்துசெல்லும் ஒரே ஒரு பேருந்து. மீனாட்சி விலாஸ்தான் அந்தப் பேருந்தின் பெயரென்றாலும், தடம் எண் 17 என்பதால் எல்லோரும் பதினேழு என்றே அழைப்பார்கள்.  கடிகாரம் இல்லாத அந்த ஊருக்கு அதுதான் நேரங்காட்டி.  அதிகாலை நான்கு மணிக்கு பேருந்து ஊருக்குள் நுழையும்போது டிரைவர் சத்தமாக ஒலி எழுப்புவார்.  ஊரே விழித்துக்கொள்ளும். காய்கறி மூட்டை, கீரைக்கட்டு, கொய்யாக்கூடை என்று ஆளாளுக்கு தூக்கிக்கொண்டு பேருந்து நிறுத்தத்திற்கு வந்து சேருவார்கள்.  நான்கு மணிக்கு ஒரு நடை, ஏழு மணிக்கு ஒரு நடையென்று.. மூன்று மணி நேர  இடைவெளியில் இரவு பத்து மணி வரை ஓய்வில்லாமல் ட்ரிப் அடிப்பார்கள்.  முதல் நடைக்கு பக்திப் பாடலும், அடுத்தடுத்த  நடைக்கு சினிமாப் பாடல்களையும் போடுவார்கள். பாட்டுச் சத்தம் கொக்கூருணிக் கரையில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் சிவக்கொழுந்து வரைக்கும் கேட்கும். வயல்காட்டில் வேலை செய்பவர்கள் “பதினேழு வந்துட்டான்.. இன்னும் கஞ்சி கொண்டுவர்ற ஆளக்காணும்..” “பதினேழு திரும்பிப் போயிட்டான்.. எல்லாரும் கரையேறுங்கடி..” என்று, 17 பஸ்ஸை மையமாக வைத்தே நேரத்தைக் கணக்கிட்டுக்கொள்வார்கள். 

சிவக்கொழுந்துவும் அப்படித்தான் ஒன்பது மணி ட்ரிப்புக்கு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டுவார். மதியம் ஒரு மணி ட்ரிப்புக்கு மாடுகளை கொக்கூருணியில் தண்ணிக்கு விடுவார். தண்ணிக்கு செல்லும் மாடுகள்  குளத்துக்குள் இறங்கினால் மூன்று மணி ட்ரிப்புக்குதான் கரையேறும். இடையில் கல்லெடுத்து எறிந்தாலும் அசையாமல் தண்ணீருக்குள்ளேயே கிடக்கும்.  மாடுகளை கட்டுத்தறியில்  கட்டிவிட்டு உறுமச்சோறு  சாப்பிடும்போது மணி நாலாகியிருக்கும். சிறிதுநேரம் நிழலில் குந்துவார். சிலநேரம் கடைகண்ணிக்கு ஓடச்சொல்வார்கள்.  ஐந்து மணிக்கு  பஸ் வரும்போது மாலைக் கறவையை ஆரம்பிப்பார். ஏழு மணி நடைக்கு வீட்டுக்கும் சேர்த்து  ராத்திரி சோறு வாங்கிக்கொண்டு கிளம்புவார். கடைசி நடை ஹாரன் சத்தத்தைக் கேட்டால்தான் அவருக்கு  தூக்கம் வரும்.

சிவக்கொழுந்துக்கு நெடுநாளாக ஒரு ஆசை, 17 பஸ்ஸில் ஏறி சினிமாப் பாடலைக் கேட்டுக்கொண்டே  தஞ்சாவூர் வரை போய்வர வேண்டும் என்று. அதுகூட இல்லையென்றாலும் ஒருமுறையாவது  அந்த பஸ்ஸில் ஏறி, ஒரே ஒரு பாடலை முழுமையாக பயணித்தபடி கேட்க வேண்டும். ஒவ்வொரு முறையும் பஸ்ஸை பார்க்கும்போதெல்லாம் அந்த ஆசை எட்டிப்பார்க்கும். ஆனால், வேலை சூழல் அதை நடக்காமல் பார்த்துக்கொண்டது.  எல்லா நாட்களும் பண்ணையத்திற்கு செல்ல வேண்டியிருக்கும். தீபாவளி, பொங்கலுக்கு மட்டும்தான் மாடுகளை  மேய்ச்சலுக்கு அவிழ்க்கமாட்டார்கள்.  அன்றைக்கென்று பார்த்து  பேருந்து வராது. தினமும் கீழே நின்றுதான் பேருந்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது கேட்கும் பாடலைத்தான்  அந்த நாள் முழுக்க முணுமுணுத்துக்கொண்டு இருப்பார்.

அன்று, எருமை மாடுகளை கொக்கூருணிச் சாலையில் பத்திவிடும்போது சரியாக 17 வந்தது. திரும்பிப் பார்த்தார்.. பேருந்தில் முதல் மரியாதை படத்திலிருந்து  பாடல் ஒலித்தது. பஸ் திருப்பத்தில் சென்று மறையும்  வரை பார்த்துக்கொண்டிருந்தவர், அன்று  மேய்ச்சல் காடெங்கும்,  “ஏக்குருவி.. சிட்டுக்குருவி.. ஓஞ்சோடி ஒன்ன இங்க கூட்டிக்கிட்டு என் விட்டத்துல வந்து கூடு கட்டு..” என்றே  பாடிக்கொண்டிருந்தார்.  சரியாக ஒருமணி ட்ரிப்புக்கு  மாடுகளை தண்ணிக்கு ஓட்டினார். எருமைகள் தண்ணீருக்குள்  சென்று படுத்ததும் கரைக்கு வந்து ஆலமரக் கிளையில் ஏறி உட்கார்ந்துகொண்டார்.  17 செல்லம்பட்டி  வரை சென்று திரும்பி வந்தது. மரக்கிளையில்  அமர்ந்தபடி பேருந்து போவதையே பார்த்துக்கொண்டிருந்தார். போய்க்கொண்டிருந்த பேருந்து கொக்கூருணிச் சாலைப் பிரிவில் திடீரென  நிற்க, பயணிகள் யாராவது இறங்குவார்கள் என்று நினைத்தார். ஆனால், வெகுநேரமாகியும் பேருந்து புறப்படவில்லை. “ஹோ..” என்று கிளையில் இருந்து குதித்தவர், பேருந்தை நோக்கி  வேகமாக ஓடினார். பேருந்து முன்சக்கரம் பஞ்சராகி நின்றுகொண்டிருந்தது. அதைக் கழற்றிவிட்டு வேறு சக்கரத்தை மாட்டிக்கொண்டிருந்தார்கள். சிவக்கொழுந்து மூச்சிரைக்க ஓடிவந்து பார்த்தார். ஆண் பயணிகள் எல்லாம் கீழே இறங்கி நின்றுகொணடிருந்தார்கள். சிவக்கொழுந்து முகத்தில்  லேசான புன்னகை. டயரை மாட்டிமுடிக்க நேரம் எடுக்கும் என்பதை உணர்ந்தவர் பின்படிக்கட்டின் வழியாக ஏறினார். பெண்கள் மட்டும் சீட்டில் இருந்தார்கள்.  அதே முதல் மரியாதை படத்திலிருந்து பாடல் பாடிக்கொண்டிருந்தது.  முன்படிக்கட்டு வரை நடந்தவர் திரும்பிவந்து கடைசி சீட்டில் அமர்ந்துகொண்டார்.  “பூங்காற்று திரும்புமா.. ஏம்பாட்டை விரும்புமா..?” என்று பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அந்தப் பேருந்து அவரை மட்டும் அமர்த்திக்கொண்டு  பசுமையான ஒரு சமவெளியில்  பயணிக்கத் தொடங்கியது. பயணம் தொடங்கிய சில நிமிடங்களில்  திடீரென   பாடல் பாதியில் நிற்க,   கீழே நின்றிருந்தவர்கள் திபுதிபுவென ஏறிவந்தார்கள். பேருந்து புறப்பட்டது. சிவக்கொழுந்து  இறங்கிக்கொண்டார்.  பேருந்து போவதையே பார்த்துவிட்டு “பூங்காற்று திரும்புமா.. ஏம்பாட்ட விரும்புமா..” என்று பாடிக்கொண்டே மண்சாலையில் நடந்தார்.  நடந்து வந்தவர் சட்டென நடையை நிறுத்த.. பாடலையும் நிறுத்தித்தான் குளத்தங்கரையைப் பார்த்தார்.  மாடுகள் கரையில் ஏறி நடவுவயலுக்குள் நுழைந்திருந்தன. அவர் நெஞ்சுக்குள் பட்டாசு கொளுத்திப்போட்டதைப்போல ஏதோவொன்று படபடவென்று வெடித்து தெறித்தது. விட்டார் ஓட்டத்தை.. கையில் அகப்பட்டதை  எல்லாம்   எடுத்து வீசியபடி ஓடினார். எருமைகள் அசரவில்லை. பயிறுக்குள் இறங்கியோடி மூங்கிக்கலியால் ஓங்கி ஓங்கி சாத்தினார். எருமைகள் தெறித்து ஓடின. எருமையின் குணம் அது. ஓங்கி அடித்தாலும் ஓடாது.. ஓட்டம் பிடித்தாலும் நிறுத்தாது. கரையில் ஏறி நடவுவயலைப் பார்த்தார். கடிக்கப்பட்ட பயிரைவிட உழப்பி வைத்திருந்தது அதிகமாக இருந்தது.  வயல்காரர் பார்த்தால் கட்டிவைத்து உரித்துவிடுவார் என்று நினைத்தார். உடல் நடுங்கத் தொடங்கியது.

எருமைகளை ஒன்று சேர்த்து வீட்டிற்கு ஓட்டிக்கொண்டு வந்தார். எந்த நேரமும்  ஆட்கள் தேடிக்கொண்டு வரலாமென்று வழியையே  பார்த்துக்கொண்டிருந்தார்.  ராத்திரிச்சோறு  வாங்கிக்கொண்டு கிளம்பும்வரை யாரும் வரவில்லை.  மனநடுக்கம் நின்று பெருமூச்சுவிட்டார். வழக்கத்திற்கு முன்னதாகவே சாப்பிட்டுவிட்டு படுத்தார்.  தூக்கம் வரவில்லை. “இன்னும் இந்த பஸ்ஸ வேற காணும்..” என்று  நினைத்தபோது, வாசல் பக்கம் ஏதோ பேச்சரவம் கேட்டது. கூர்ந்து கவனித்தார்.  அம்மாவின் குரல்தான்..  “உள்ளதாங்கய்யா படுத்துருக்கான்..” என்று சொல்லிவிட்டு, ”எலேய் செவக்கெழுந்து.. பெரியய்யா வந்திருக்காக எழுந்திருச்சு வெளிய  வா..” என்று அழைத்தாள்.  சிவக்கொழுந்துவுக்கு தூக்கிவாரிப் போட்டது. “பெரியய்யான்னா.. எந்த பெரியய்யா..? வயல்காரர்தான் வந்திருப்பாரோ..?”  என்று நினைத்தார். உடல் நடுநடுங்க ஆரம்பித்தது. எழுந்து வாசலுக்கு வந்தார். பெரிய மணியார் நின்றுகொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும்  உடல் நடுக்கம் நின்றது. பெரிய மணியார் “படார்” என்று அருகில் இருந்த வேலியில் கட்டாமணக்கு குச்சியை ஒடித்தார்.  “மளார்.. மளார்..” என்று  விளாசினார்.  சிவக்கொழுந்து  பிடித்து வைத்ததைப்போல  அசையாமல் நின்றுகொண்டிருந்தார். “எரும… எரும… இவ்ள அடிச்சும்  சொரணையே இல்லாம  நிக்கிறாம் பாரு… எருமக்கிடா..” என்று நிறுத்தாமல் விளாசினார். காட்டாமணக்கு குச்சி முறிந்து சுக்கலாக “மாட்ட மேய்ச்சலுக்கு விட்டுட்டு எவளப் பாக்கடா போன.. ஒடம்புல கொழுப்பேறி மெதக்குது நாய்க்கு.. அதான்.. ஊரு மேயப் போயிருச்சு… நாலு நாளு குண்டிய காயவிட்டா எல்லாம் சரியா வந்துரும்.” என்று எஞ்சிய குச்சியை அவர் மூஞ்சியில் விசிறிவிட்டுப் போனார்.

தான் செய்த தவறுக்கு தண்டனையைப் பெற்றுக்கொண்டோம். இனிமேல் வேறுயாரும் அந்த தவறைச் சொல்லி தன்னை அடிக்க முடியாது என்ற எண்ணம் சிவக்கொழுந்துவிடமிருந்த பயத்தைப் போக்கியிருந்தது. மலைப்பாகத் தெரிந்த ஒரு வேலையை செய்து முடித்ததுபோல் இருந்தது அவருக்கு.   ஆனால், சிவக்கொழுந்து அடிபடுவதைப் பார்த்துக்கொண்டிருந்த அவர் அப்பா, அம்மாவின்  நிலைதான்..? அவர்கள் வாய்விட்டு அழுவதற்குகூட  வழியில்லாமல்  நின்றுகொண்டிருந்தார்கள். 

சிவக்கொழுந்து படுத்திருந்தார். கண்கள் விழித்திருந்தன, எங்கும் இருட்டாகத் தெரிந்தது.  வரிவரியான தடிப்பின் வலிகளை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.  ஆனால், அப்பாவும் அம்மாவும் அப்படி நிலைப்படியாக நின்றிருந்ததுதான் அவருக்கு  கோபம் கோபமாக வந்தது.  கைகாலை நீட்டி மறித்திருக்கலாம். இலலையென்றால்,  ஒரு தடுப்பு வார்த்தையாவது சொல்லியிருக்கலாம்.. வெறும் உலக்கை மாதிரி நின்றிருருந்ததுதான் அவருக்கு அடிவலியாகத் தெரிந்தது. முதலில் பெரிய மணியார் மீது  கோபமெதுவும் இல்லை, அவர் அடித்தது சரிதான் என்று நினைத்தார்.  ஆனால், மனம் அதையே மறுபடி மறுபடித் தோண்ட கோபம் அவரிடம் திரும்பியது.  “அடிச்சதுகூட  பரவால்ல.. அந்த  வார்த்தைய எப்படி அவரு சொல்லலாம்.. நான் அப்படியா நடந்துகிட்டேன். இப்படி சுட்ட வார்த்தையை பேசிப்புட்டாறே..” என்று எண்ணினார்.

  சிவக்கொழுந்து நாளையிலிருந்து பண்ணையத்திற்கு போவதில்லை என்று முடிவெடுத்தார். “வேலைக்குப் போகாம என்ன செய்யப்போற..?” என்ற கேள்வியும் துணைக்கேள்விகளும், அவரை யாருக்கும் தெரியாமல் இந்த ஊரைவிட்டு ஓடிவிட வேண்டுமென்று முடிவெடுக்க வைத்தது. அப்போது, 17ம் நம்பர் பஸ் ஹாரன் அடித்தபடி ஊருக்குள் நுழைந்தது.  

சிவக்கொழுந்து பாயிலிருந்து எழுந்தார். அம்மாவும் அப்பாவும் உறக்கத்தில் கிடந்தனர். மெதுவாக ஊர்ந்து அடுக்குப்பானைக்குள்  கைவிட்டார். கேழ்வரகுக்குள் புதைத்திருந்த பத்து ரூபாய்,  ஐந்து ரூபாய்த்தாள்கள் நான்கைந்து கையில்  சிக்கியது. அதை எடுத்து கால்சட்டைப் பைக்குள்  வைத்துக்கொண்டு,  துணிக்கயிறில் தொங்கிய சட்டையை சுருட்டிக்கொண்டு பேருந்து நிறுத்தத்திற்கு வந்தார். 

17 வந்தது,  ஏறிக்கொண்டார்.  பேருந்தை கழுவி சுத்தமாக்கி,  முன் கண்ணாடியின் புருவங்களில் சந்தனம் தெளித்திருந்தார்கள். சாமிப் படத்தில் தடிமனான செவ்வந்தி மாலை தொங்கிக்கொண்டிருந்தது.  “திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்..” என்று பக்திமனம் கமழ்ந்தது.  சந்தைக்கு செல்லும் கூட்டம்.. கசகசவென்று பேசிக்கொண்டிருந்தார்கள்.  கடைசிச் சீட்டில் படிக்கட்டின் அருகில் அமர்ந்துகொண்டார். அதிகாலை ஈரக்காற்று முகத்தில் மோதியது. வலிகளை மறந்திருந்தார்.

பேருந்து தஞ்சை பஸ்ஸ்டாண்டில் வந்து நின்றது. இறங்கினார். எங்கே போவதென்று தெரியவில்லை. இதுவரை ஊர் எல்லையைத்  தாண்டாதவர். தினமும் பழகிய முகங்களையே பார்த்தவர்.. புதிதாக ஒரு ஊரையும், புதுப்புது முகங்களையும்  பார்த்ததும் பயம் தொற்றிக்கொண்டது. திரும்பிய பக்கமெல்லாம் அச்சத்தின் உருவகங்களாகத் தெரிய, அங்கு நின்றுகொண்டிருந்த 17 மட்டும்தான் அவருக்கு அணைவாக இருந்தது. உடனே, ஓடிப்போய் ஏறிக்கொண்டார். பின்படிக்கட்டுக்கு அருகில் அதே இருக்கையில் உட்கார்ந்துகொண்டார். செல்லம்பட்டி என்று டிக்கெட் வாங்கினார். பேருந்து புறப்பட்டது, சினிமாப்பாடல் வேறு.. அனைத்தையும் மறந்திருந்தார்.

செல்லம்பட்டியில் இறங்கி நடத்துனரும் ஓட்டுனரும் டீ குடித்தார்கள். சிவக்கொழுந்துவும் போய் டீ குடித்தார்.  பேருந்து புறப்பட்டது. ஏறிக்கொண்டார். தஞ்சாவூரில்  நடத்துனரும்  ஓட்டுனரும் டிபன் சாப்பிட சென்றார்கள்.  அவரும் புரோட்டோ வாங்கி சாப்பிட்டார்.  பஸ் புறப்பட்டது. செல்லம்பட்டி என்று டிக்கெட் கேட்டார்.  அவருடைய ஊரை பஸ் கடக்கும்போது குனிந்து மணியார் வீட்டைப் பார்த்தார்,  எருமைகள் அனைத்தும் அவர் கட்டிய இடத்திலேயே கிடந்தது.  பெரிய மணியார் வீட்டுக்குப் போய் விசாரித்திருப்பார் என்று நினைத்துக்கொண்டார்.

ஒருமணி ட்ரிப்பில் சிவக்கொழுந்து  மீது நடத்துனருக்கு சந்தேகம் வந்தது. அவர் இவரை கவனித்தார். தஞ்சாவூரில்  இறங்கியதும் டீ சாப்பிட்டுவிட்டு மீண்டும் வந்து பஸ் ஏறுவதைப் பார்த்தார். செல்லம்பட்டி என்று டிக்கெட் கேட்டதும்  பிடித்துக்கொண்டார். “எந்த ஊர்டா நீ..?” என்று அதட்டியதும் “வடக்கூர்” என்றார்.

பெரிய மணியாரும், சிவக்கொழுந்து அப்பாவும்  தெருத்தெருவாக தேடிக்கொண்டு வந்தார்கள். பெரிய மணியார் பின்னால் நான்கடி தள்ளிவந்த சிவக்கொழுந்து அப்பா, “அந்தப்பய இந்த ஊரவிட்டு இன்னொரு ஊருக்கு போனதில்லங்கய்யா.. இங்கதான் எங்கனையாவது நொளிஞ்சிக் கெடப்பான்.. கண்ணுல ஆப்ட்ருவாங்கய்யா..” என்று  புலம்பிக்கொண்டு வர, மந்தைவெளி  பஸ் ஸ்டாப்பில் 17ஆம் நம்பர் பஸ்ஸும்  படிக்கட்டு பக்கம் கொஞ்சம் கூட்டமும் இருப்பதை பார்த்து அங்கே ஓடினார்கள். 

பெரிய மணியார் வருவதைப் பார்த்து கூடியிருந்தவர்கள் வழிவிட, சிவக்கொழுந்து நிற்பது தெரிந்தது.  பெரிய மணியார் முகத்தில் கோபம் கொந்தளித்தது. தணைவாக இருந்த மரக்கிளையில் குச்சியை முறித்தார். சிவக்கொழுந்து உடல் உதறத்தொடங்கியது. பெரிய மணியார் நெருங்கி வர வர, நடத்துனர் அவரைப் பார்த்து “விடியக்கால மொத நடயில ஏறுனவன்.. எங்ககூட சேந்து தஞ்சாவூருக்கும் செல்லம்பட்டிக்குமா  ட்ரிப்  அடிக்கிறான்..  நாங்க டீ குடிக்கப் போனா அவனும் வந்து டீ குடிக்கிறான். பஸ் எடுத்தா ஏறிவந்து  அதே சீட்டுல குந்திக்கிறான்..” என்றதும், பெரிய மணியார் ஓங்கிய கையை இறக்கி  “களுக்” என்று சிரித்துவிட்டார். 

அவர்தான் முதலில் சிவக்கொழுந்தை ‘பதினேழு’ என்று அழைத்தார். பின், ஊரே அவரை அப்படி அழைக்கத் தொடங்கியது.

விமானம் சென்னையில் தரையிறங்கியது. இருவரும் விமான நிலைய கட்டிடத்திலிருந்து வெளியே வந்தார்கள்.  “எங்கே போவது..?” முருகேசனுக்கு எந்தத் திட்டமும் இல்லை. அப்பாவை விமானத்தில் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது மட்டுமே அவனுடைய எண்ணமாக இருந்ததால் அதைப்பற்றி அவன் நினைக்கவில்லை. பீச்சுக்கு போகலாமா..? இல்லை ஷாப்பிங் மால் எதுவும் அழைத்து போகலாமா..? என்று யோசித்தான். ஒருநொடி, அப்பா தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் முதல்முறை வந்து இறங்கியபோது இருந்த மனநிலையில் தானும் இருப்பது போல அவனுக்குத் தோன்றியது.  திரும்பி அப்பாவின் முகத்தைப் பார்த்தான்.  அவர், “ஊருக்குப் போறதுக்கு அடுத்த வண்டி எத்தன மணிக்குப்பா எடுப்பாங்க..” என்றார். 

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button