இணைய இதழ்இணைய இதழ் 89சிறுகதைகள்

27 நாட்கள் – முத்துஜெயா

சிறுகதை | வாசகசாலை

கைக்கம்பை எடுத்துகொண்டு பட்டி வாசலை திறந்ததுதான் தாமதம், ஆடுகள் அவன் கால்களைத் தள்ளிக்கொண்டு வாசலை அடுத்து கிழக்காக ஓடையில் இறங்கத் துவங்கியது. கதவு இடுக்கை பார்த்துக்கொண்டே ஓடையை நோக்கி நகர்ந்தான் மாரி. நீலாவின் முகம் தெரியவில்லை.

எப்போதும் தலைவாசலைக் கடந்ததும் தூக்குச் சட்டியை எடுத்து நீட்டுவாள். ’பார்த்து சூதனமா போ’ என்பாள். இன்றைக்கு அப்படி ஒன்றும் நடக்காது என்று மாரிக்கு விளங்கியது.

வடசட்டியைத் தூக்கி எறிந்தாள். பாத்திரம் கழுவும் கல்லில் விழுந்து, சகதியில் உருண்டு ஓடியது. இடுப்பை வளைக்கும் இடத்தில் படுக்கும் அவள், சுவர் ஓரத்தில் ஒண்டிய இரவில் அவனுக்கு விளங்கியது அதிகாலை இப்படித்தான் இருக்கும் என்று.

அப்படி ஒரு கேள்வியை அவள் கேட்பாள் என்று யாராவது சொல்லிருந்தால் கூட மாரி நம்பியிருக்க மாட்டான். குழந்தை ஒன்றுதான் இல்லை. தீர்வு கிடைக்காத கணக்கு ஒருவித சுவை போல் இரவுகள் கலைந்தது. எப்போதாவது சொல்லுவாள் ‘ஆளு தான்யா நீ ஒலக்கு மாதிரி.’ என்று, ஆனால், சொல்லி முடிக்கும் போது கன்னத்தில் குழி விழும்.

விழுந்து அடித்து குடித்து சண்டை பிடிக்கும் குடும்பங்கள் பற்றிய செய்தி, வட்டிலில் சோறு போடும் போது தினம் ஒரு செய்தியாய் வரும். அதல்லாம் நீ எனக்கு கிடைத்த பாக்கியம் என்பதான ஒன்று.

‘ஏத்தி‘என்றுதான் மாரிக்கு கூப்பிடத் தோன்றும். ‘நீலானுதான் கத்தேன். என் வாயி பெருசுனு சொல்லுரேல்ல. இது கூடவா உன் வாயில நுழையாது?’ என்பாள். அவள் வாயி பெருசு என்று மாரி சொன்னதருணத்தை நினைத்து சிரிப்பான். அவளுக்கும் அதுதான் அப்போதைய தேவை.

இன்னைக்கு பட்டியில படுத்துக்கிறேன் என்று இவனாக வம்பு இழுப்பான். ‘போ, படு. எனக்கென்ன. ஆனா, ஜாமத்துல கதவ தட்டுனா என்னனு கேக்க மாட்டேன்’என்பாள். ‘ஏண்டி, மழை பெஞ்ச என்ன பண்றதாம்?‘ என்பான். ‘அப்போ மூடிக்கிட்டி உள்ளாரா இரு.‘ என்று தாடையைத் திருப்புவாள். பட்டியில் படுக்க போறேன் என்பது இன்னைக்கு எதும் தடங்கலா என்பதற்கான அவனுடைய கேள்வி அது. அதற்க்கு நீலாவிடம் இருந்து இப்படியான பதில்தான் வரும்.

சின்னய தேவர் வந்திருந்த நாளில்தான் அது நடந்தது. ’மூணு குட்டியாடே‘ என்றார் நீலா, ‘கருப்பி’ என்ற பெயர் வைத்த பொட்டயைப் பார்த்தபடியே .

‘ஆமா மாமா, இந்த ஈத்துதான்’ என்றான் ‘எல்லாம் பொட்ட வலசு’ என்றார். நீலாவை பார்த்து கொண்டே. மாரிக்கு புரிந்தது. ’பொட்ட என்ன பண்ணும் மாமா. கிடாய் பங்கு இல்லாம என்னனு உங்களுக்குத் தெரியாததா?’ என்றான். சின்னைய தேவர் இவன் எதையோ நமக்கும் சொல்லுகிறான் என்ற யோசனையிலேயே எழுத்து போனார்.

நிறைய அழுத நீலா அன்றைய இரவு அவனைத் தூங்கவிடவில்லை. ‘நானும் வரட்டுமா?’ என்றாள் ஆடு மேய்க்க. ‘ஆடு மேயனுமா வேண்டாமா? நீ இரு.’ என்று வாய் நிறைய பல்லைக் காட்டிவிட்டு நடையைக் காட்டினான் மறுநாள் காலையில்.

இன்றோடு மூன்று நாள் ஆகிவிட்டது நீலா முகம் கொடுத்து. சமாதானமாக சீலையை இழுத்துப் பார்த்தான். அசைவதாக இல்லை. வெடுக்கென்று திரும்ப இழுத்துகொண்டாள். சும்மா இருந்திருந்தால் கூட திரும்ப ஒரு முறை முயற்சித்துப் பார்திருப்பான். நெடு நேரம் தூக்கம் இல்லை. நடுவில் எழுந்து தண்ணீர் குடிக்கும் பழக்கம் இல்லை நீலாவிற்கு, டம்ளரை ‘பட்’ என்று வைத்த தருணத்தில் கூட மாரி கண்ணை இருக்க மூடி கொண்டான். காலையில்தான் உரைத்தது தன்னை நோட்டம் விட அல்லது சமாதான தூது அதுவென்று. தனக்கு முன்னதாக எழும் நீலா தூங்குகிறாள் என்ற போதாவது யோசனை வந்திருக்கவேண்டும். அவ்வளவு அறிவா ஆண்களுக்கு இருக்கிறது. அவள் தூங்கவில்லை எழுப்பக் காத்திருந்தாள். அதுவும் நடக்கவில்லை.

ஆடுகள் கருங்கல் குளத்து ஓடையில் இறங்கியது. கரையில் வாய் வைத்து கொஞ்சநேரம் ஆடுகள் அப்படியே கிடக்கும். அப்படியே குளத்தில் இறக்கிவிட்டால் போதும்.. உச்சிவெயில் வரைக்கும் புளிய மர நிழல்தான் மாரிக்கு.

‘குளம்னு யாரு பேரு வச்சிருப்பா. இவ்ளோ பெருசா இருந்தா கம்மாய்தான’ என யோசிப்பான். முதல்ல குளம்தான். கட்டையா ஏத்தும் போது கொஞ்சம் பெரிய குளமாக ஆகிருக்கலாம். அதுக்காக பேரையா மாத்த முடியும் என்று அவனாகவே சமாதானம் செய்து கொள்வான். குளத்தை குளமாக பார்க்காமல் வேறொன்றாக நினைத்து சிரித்துக்கொண்டான்.

கருப்பி மட்டும் தனியாக மேயத் துவங்கியது. சுரட்டையை எடுத்து வீசினால், மாரியின் தாடையில் விழுந்து பட்டிக்குள் விழுந்து ஓடியாது. ‘ஏத்தி ‘என சிரித்துக் கொண்டான்

‘எப்போ பாரு.. அதே புத்தி, கை ரெண்டும் கன்னுகுட்டியாட்டம் முட்டுறது போதாதாக்கும். ஆளும் மொகரையும் பாரு. வாயத் தொறந்தா பாத்துக்கோ.’

‘நான் உன்ன சொன்னனா கழுத. ஆட்டுக்கு எதுக்கு இவ்ளோ பெருசுனு கேட்டேன்‘ என்று மறுபடியும் சிரித்தான்.

பட்டியை பார்த்து அமர்த்திருந்தவனின் பின்னால் தலை முடியைப் பிடித்து இழுத்தாள். ‘விடுறயா. இல்ல. மைத்த பத்தி எதாவது சொல்லட்டுமா.?’என்றான்

முதுகில் ஓங்கி குத்திவிட்டு வீட்டுக்குள் ஓடிவிட்டாள்.

சில நேரத்தில் இப்படி வெட்கம் திங்கும் நீலாவை. ஒரு முறை மாரியும் மாட்டிக் கொண்டன். அது விபரீத ஆசையில் வந்த வினை.

‘எந்த பாம்பு கொத்திச்சி. கிறுக்கு பிடிச்ச மாதிரி இருக்கு.’ என்றாள். 

மாரிக்கு விளங்கவில்லை. ‘என்னத்த சொல்லுற?’ என்றான்

‘இல்ல. பாம்பு கொத்துன கீரிப்புள்ள புல்லுல பொரளுமாம். அதான் கேட்டேன். உனக்கு கொத்திருக்கு. என்னைய அங்கிட்டும் இங்கிட்டும் உருளச் சொல்ற’ என்றாள்.

‘அதல்லாம் ஒன்னுமில்ல. வெக்கம்கெட்டவ போறியா அங்கிட்டு.’

‘ஏன்.. இத ராவுலு சொல்ல கூடாது. யாருனு நானும் பார்த்துருப்பேன்ல.’

‘இனி நீ சும்மா இருக்க மாட்ட. டீ குடிச்சிட்டு வர்றேன்‘ என்று நழுவினான்

‘முன்ன பின்ன பார்த்துப் போ‘ என்று அழுத்தி சொன்னாள்.

சிரித்துகொண்டே வெட்கம் பிடுங்க கல் எடுத்து ஏறியப் போனான். கதவை மூடிக்கொண்டாள். நீலாவிற்கு அன்றைய நாள் முழுவதும் சிரித்த முகம்தான்.

ஏற்கனவே அவள் ஒரு முறை சொன்னதுண்டு. ‘அந்த விசயத்துல ஆம்பளைங்க இன்னும் மனுஷ சாயல் இல்லாமதான் இருக்கீங்க’ என்ற போது மாரி ‘ஏன்?’ என்று கேட்டான். ‘கல்யாணத்தனைக்கு உன் அவசரம் எனக்கு இல்லாமலா இருந்துருக்கும். ஆனா, எனக்கு முகத்துல கூட தெரியல. உனக்கு உடம்பு பூராவும் அதுதான்’ என்றாள்.

‘ஆங்.. நாங்க ஆம்பளைங்க’

‘அதான் சொன்னேன். ஆனா, மனுஷ சாயல்ல இருக்குற ஆம்பளைங்கனு’ -சில நேரம் நீலா பேசுவது அவனுக்குப் புரியாது. புரிந்தது போல தலையை ஆட்டிக்கொள்வான்.

வெயில் கீழ் இறங்க துவங்கியது. சோற்று தண்ணீர் மிச்சம் இருந்ததை குடித்தான். அவசரப்பட்டு சின்ன வெங்காயத்தை அப்போதே கடித்து விட்டோமே என்ற கவலை வந்தது. புளிய மரத்தில் கைக்கு எட்டிய தூரத்தை பார்த்த போது இளம் பிஞ்சிகள் தெரிந்தது. இரண்டு பிஞ்சிகளை பறித்து குடிக்கத் துவங்கினான். சீக்கிரமா வீட்டுக்கு போனால் தேவலை என்று மனம் குரங்குக்கு அடிமையானது.

கறுப்பிக்கு பக்கத்தில் போன மூன்று குட்டி கிடாய் ஏமாற்றதோடு திரும்பியது. கஞ்சித் தண்ணியை குடித்துக்கொண்டே அதைப் பார்த்தபடிதான் இருந்தான். ‘ஆமாம், ‘வெள்ளாட்டுக்கும் மனுஷப் பயலுக்கும் என்ன வித்தியாசம்?’ என்று நீலா ஒரு முறை கேட்டதுண்டு. ‘யாருக்குத் தெரியும். அது பேசாது. சிரிக்காது. அப்புறமா.. உன்ன மாதிரி எல்லாத்துக்கும் நேரம் காலம்னு சாக்கு சொல்லது.’ என்று சிரித்தான்

‘அதான. உன் புத்தி வேற எங்க போகும். என்னைக்காவது புதுசா தோணும். தினமும் அது கூட தான இருக்க. தோணுனா சொல்லு’ என்றாள்

இது வரை அப்படி எதுவும் நடக்கவில்லை. சம்பந்தம் இல்லாமல் எப்போதாவது பேசுவாள். எரிந்து விழுவாள் மாதத்தில் ஒரு முறை நடக்கும். கருப்பையா கோனார் கூட ஒருமுறை சொல்லியதுண்டு. ‘எல்லாம் அப்டிதான்டா. இதோட நிக்குதேனு சுசுவான்னு இருந்துக்கணும். அப்பதான் பொழப்பு ஓடும்’ என்று.

கிழக்கில் அரை நிலா வெளிச்சம் வந்தது. வீட்டைப் பார்த்து ஆடுகளை ஓட்டி விட்டு பின்னால் நடந்தான். கடைசியாக நீலா கோபபட்ட நாள் கணக்கு நினைவில் வந்தது. இதுல ஒரு பதினாலு.. அதுல ஒரு பதிமூணு . ஆக மொத்தம், இருவத்தி ஏழு நாள்.

ஏதோ புரிந்தவனாக கறுப்பியின் காதைப் பிடித்து தன்னோடு அணைத்துக் கொண்டு வீட்டை நோக்கிப் போனான்

நீலாவின் காதும் அன்றைய நாள் அப்படித் தான் இருந்திருக்க வேண்டும் மாரியின் விரல்களுக்குள்.

********

mk0405150@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button