கவிஞர் ந.பெரியசாமியின் ‘அகப்பிளவு’ கவிதைத் தொகுப்பு குறித்து சுஜாதா செல்வராஜின் வாசிப்பனுபவம்
கட்டுரை | வாசகசாலை

காதல், காமம், பிரிவு, தவிப்பு , ஊடல் இவற்றின் சுவையை எவ்வளவு பேசினாலும் தீராது. சொல்லச் சொல்ல இன்னும் இன்னும் என்று எஞ்சி நிற்கும் அற்புத உணர்வுகள் அவை.
பொதுவாக நாம் காதலை எழுதுவதைப் போல காமத்தை எழுதத் துணிவதில்லை. கத்தி மேல் நடப்பதைப் போல அது அவ்வளவு கவனமாக கையாள வேண்டிய வகை. கொஞ்சம் பிசகினாலும் ‘ச்சை’ என்று வாசகர்கள் அருவருத்து விட வாய்ப்புண்டு.
ந.பெரியசாமி அவர்கள் தன் ‘அகப்பிளவு’ என்ற கவிதைத் தொகுப்பில் அப்படி கொஞ்சம் எழுதிப் பார்த்திருக்கிறார். அந்த உணர்வுகளை அதன் குணம் கெடாமல் நமக்கு கடத்துவதில் வெற்றியும் கண்டுள்ளார்.
பெரும்பாலான கவிதைகள் ஆணின் பார்வையில் இருந்தே எழுதப் பட்டிருக்கின்றன. பெண்ணின் பார்வையில் இருந்து எழுதப்பட்ட கவிதைகள் வெகு சில மட்டுமே. அவைகளும் பிரிவின் துயரை, ஊடலின் குணங்களை சொல்வதாய் அமைந்துள்ளன. பெண்ணின் காமத்தைப் பேசும் கவிதைகளையும் முயன்றிருக்கலாம்.
கவிதைத் தொகுப்பு அ, ஆ என்று இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘அ’ வரிசை கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
காமத் தீ:
“விலகிப் போனால் சுடும்
நெருங்கி வந்தால் குளிர்மை தரும்”
விலக விலக காமம் ஒரு பெருந் தீயாக வளரும். அது
உடலையே திரியாக்கி எரித்துக் கொல்லும்.
செல்லாமை உரை:
“கிளை அமர்ந்த குருவி பறந்து போவது மரத்திற்கு பிரிவுத் துயர் தராதா? சூரியனால் குளத்து நீர் நெருப்பாகாதா?”
பிரிவில் குறும் பிரிவென்று உண்டா?
சமாதானம் சொல்லலாமா?
காதலுற்ற பெண்ணுக்கு அவனின் பிரிவு சுவாசத்தின் பிரிவல்லவா?!”
தீர்க்கும் மருந்தொன்று:
ஊரார் பார்த்திருக்க யாரும் அறியாமல் அவள் கண்களால் சமிக்ஞை செய்கிறாள் அந்த நோக்குதல் எப்படி இருக்கிறது
“விதைகளின் முதல் நாள் முளைப்புக்கு ஒப்பாக”.. ஆகா ஆகா!!
அத்தனை மெல்லிய, அத்தனை சிறிய அசைவு அது. காதலனின் கண்களுக்கு மட்டுமே அறியக் கிடைக்கும் அந்தப் பார்வை நோக்கு எந்தக் கலைக்கும் சிக்காத அதி அழகு.
கூடிய காமம் பிரிந்தார்:
“கிளையில் இருந்து விழக் காத்திருக்கும் இலையென உன் பிரிவுத் துயரில் இந்த உயிர் உடலில் ஒட்டி இருக்கிறது. நீ திரும்பி வரும் நாளில் ஒரு தீயைப் போல மாறி கோபிப்பேன். இல்லை இல்லை, நெருப்பணைக்கும் நீராகித் தழுவுவேன்”
வள்ளுவன் காலம் தொட்டு காதலுற்ற பெண்ணின் இந்த பித்து மனம் மாறாதா?
மட நெஞ்சினோடு வாழ்தல்:
“என்னை நினையாது என் குறித்த வலியை தராது
மகிழ்வாய் வைத்திருக்கும் அவனது நெஞ்சம் போல் இல்லாது வலி கொடுத்து என்னை வதைப்பதேன் என் மட நெஞ்சமே”
ஹஹா.. காதலுற்ற மனம் பைத்திய நிலைக்கு சற்று பக்கத்தில்தான் இருக்கிறது. மடமையே காதலுக்கு சுவை சேர்க்கிறது. இந்தப் பித்தின் அச்சில்தான் உலகம் சுழல்கிறது. காதலும் காமமுமே இந்த வாழ்வை வாழ்ந்து பார்க்கச் சொல்கிறது.
***
நூல் பெயர் – அகப்பிளவு
வகைமை – கவிதைத் தொகுப்பு
ஆசிரியர் – ந.பெரியசாமி
பதிப்பகம் – சொற்கள் பதிப்பகம்
*********