இணைய இதழ்இணைய இதழ் 89சிறுகதைகள்

ஒரு மனிதனும் சில காகங்களும் – பலராம் செந்தில்நாதன்

சிறுகதை | வாசகசாலை

ராஜேந்திரனுக்கு தலையில் மூன்று காயங்களாகி அவையாவும் ஆறவும் துவங்கியிருந்தது. மூன்றுமே காகம் கொத்தியது. தவிர கடந்த ஒரு வருடமாகவே தினம் தினம் துரத்தி, கொத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறது. சில தினங்களில் அம் முயற்சியில் வெற்றியடைகிறது காகம்! காக்கையின் மேல் ராஜேந்திரனுக்கு துளியும் கோபமில்லை. அவன் அசாத்தியமான பொறுமைசாலி .

அலைபேசிக்கு முந்தைய காலங்களில் ரயில் பயணச்சீட்டிற்கும் ஆயூள் காப்பீட்டிற்கு பணம் செலுத்த வரிசையில் நிற்கும் தருணங்களில் மிகச் சரியாக அவன் முறை வரும் போது உணவு இடைவேளையோ அல்லது வேலை நேரம் முடிந்தோ போயிருக்கிறது. அதற்கெல்லாம் கிஞ்சித்தும் கவலைப்பட்டதில்லை ராஜேந்திரன் .

தேவையான ஆதாரங்களோடு போனால் அவன் பெயரை ஆங்கில அகராதியில் ‘பொறுமைசாலி’ என்ற பதத்திற்கு நேராக ‘ராஜேந்திரன்’ என இடம்பெறச் செய்யவும் வாய்ப்புண்டு!

ராஜேந்திரன் ஒரு நிறுவனத்தில் மேலாளர் ஆகப் பணிபுரிகிறான். மேலாளர் என்றவுடன் குளுகுளு கேபின், சூழலும் நாற்காலி , மெலிதான நறுமணத்தோடு ஓர் இளம், பெண் உதவியாளர் என்றெல்லாம் கற்பனை செய்து கொள்ளாதீர்கள். நிறுவனத்தின் கழிப்பறை சுத்தம் செய்வது தவிர- எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறான். கதை, திரைக்கதை, வசனம், நெறியாள்கை, ஒளிப்பதிவு, இசை, பாடல்கள்- என தமிழ் சினிமாவில் ஒரே நபர் அனைத்துப் பணிகளையும் கையாளுகிறாரே அது போல!

பணிக்கு அழைத்துப் போக காலை 8:30 மணிக்கு நிறுவன வண்டி வரும். வீட்டிலிருந்து ஐந்து நிமிடம் நடந்து போய் பிரதான சாலையில் ஏறிக் கொள்வான். (இப்படி நடந்து போகும் போதுதான் காகம் கொத்துவதும் -துரத்துவதும்) 

மாலை வீடு திரும்புவதென்பது என்பது வேலையைப் பொருத்தது. இரவு எட்டிலிருந்து ஒன்பது ஆகிவிடும்.

நேர்முகமாக முதலாளிக்கு கீழ் பணிபுரிந்து அவரை திருப்திப்படுத்துவது என்பது முழு வழுக்கைத் தலையில் முடிவளர கூந்தல் தைலம் தேய்த்து அதன் முடிவிற்காக காத்திருப்பதற்கு ஒப்பானது!

இயந்திர மீன்பிடி படகுகளின் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் அது. அதில் ராஜேந்திரனின் வேலை இப்படித்தான் துவங்கும், காலையில் வேலைக்கு வரும் தொழிலாளர்களை தேவைக்கேற்ப மெஷினுக்கு பிரித்து விடுதல், அன்றைக்கு வெல்டரின் தேவை மிக அவசியமாக இருக்கும்.. அவர் வந்திருக்க மாட்டார். ‘அவசர வேலை வர இயலாது’ என அலைபேசியில் தகவல் சொல்லி இருப்பார் அவரை ‘பிடித்து’ வரும் ‘ஆபரேஷன்‘ ராஜேந்திரனிடம் தரப்படும். கம்பெனி காரில் அவர் வீட்டிற்குப் போனால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வெல்டரும் அவர் மனைவியும் கட்டிலில் படுத்துக் கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவரிடம் கெஞ்சிக் கூத்தாடி கைகூப்பி அழைத்து வர வேண்டும்.

“சார், இன்னும் காலை டிபனே சாப்பிடலை” என்பார். வரும் வழியில் டிபன் வாங்கிக் கொடுக்கவும் வேண்டும். 

அந்த ஆபரேஷன் முடிந்ததும் அடுத்தது ஏற்கெனவே தயாரான உதிரிபாகங்களுக்கேற்ப பையனிடம் சொல்லி பெட்டி அடித்து பில் மற்றும் டி சி தயாரித்து பார்சல் ஆபீஸ் போக வேண்டும். ரா மெட்டீரியல் வாங்குவதற்கு பட்டியல் தர வேண்டும். தொழிலாளர்களின் வருகையை பதிவு செய்ய வேண்டும். வங்கி வேலைகளுக்காக போய் வர வேண்டும். மும்பை, மங்களூர் மற்றும் கொச்சி பார்ட்டிகள் வந்தால், அவர்களை அழைத்துவர ஸ்டேஷன் போக வேண்டியிருக்கும்! இவ்வரிசை தினம் மாறுதலுக்கு உட்பட்டது .

இப்படி வேலை மாரத்தான் ஓட்டமாக நீண்டுகொண்டே போகும். நீள்வது கூட பிரச்சனை இல்லை முதலாளியின் சுடுசொல் இருக்கிறதே… ஈர மொசைக் தரையில் வழுக்கும் சோப் மாதிரி விரைவாகவும் வழுவழுப்பாகவும் வரும்! வாழைப்பழத்தில் நுழையும் ஊசி போல!

“ராஜேந்திரன், இந்த சட்டை பிரமாதமாக இருக்குங்க. அருமையா அயர்ன் பண்ணி போட்டிருக்கீங்க” என்பார்! 

மெலிதான புன்னகையோடு “தேங்க்ஸ் சார்” என்பான். தோளில் கை போட்டபடியே அவனை மெல்ல அழைத்துப் போவார் . 

“ஆனா, இங்க பாருங்க.. மழத்தண்ணீ… நடு ஷாப் ப்ளோர்ல இது என்ன நல்லாவா இருக்கு? கிளீன் பண்ணச் சொல்லுங்க” என்பார். 

இரவு பெய்த மழையில் மேலிருந்து ஒழுகி சிறிய நீள் வட்டமாய் சேர்ந்திருக்கும் தண்ணீர். 

எல்லோரும் உணவு இடைவேளையில் போயிருப்பார்கள் ராஜேந்திரனே சுத்தப்படுத்துவான்.

“எல்லாமே சொல்லிதான் செய்யணுங்கறது இல்லைங்க, நமக்கே உணர்வு வரணும்” என்பார். இதுவே கோபம் மிகுந்த தருணமாயிருந்தால் திட்டவும் செய்வார்.

“ராஜேந்திரன் ராஜேந்திரன்” என விளித்து வேலைகளை ஏவிக் கொண்டே இருப்பார்.

ராஜேந்திரன் செய்யும் வேலையில் – வேறு யாராலும் ஒரு வாரத்துக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது. ஆனால், இது அவனுக்கு ஐந்தாவது வருடம். 

“இந்தக் கருமம் பிடிச்ச வேலையை விட்டு வேற எங்கயாவது போலாமல்ல?” என்பாள் கௌசல்யா. 

கௌசல்யா ராஜேந்திரனின் மனைவி. அதைக் காதில் வாங்கிகொண்டு மௌனமாகவே நின்றிருப்பான் ராஜேந்திரன்.

கௌசல்யா-ராஜேந்திரனுக்கு நேரெதிர் பார்க்க மென்மையாகவும் மௌனமாகவும் இருப்பதாகத் தோன்றக்கூடும். மௌன எரிமலை அல்லது கண்ணிவெடி. எப்போது அவள் வெடித்துச் சிதறுவாள் எனத் தெரியாது. துர்வாசருக்கு தூரத்து சொந்தம்!

அவளின் சின்ன வயதில் வீட்டில் நிலைமை சரியாக இல்லை, வறுமை வீட்டில் மைக்கேல் ஜாக்சன் மாதிரி ஆடிக்கொண்டிருந்தது. 

ஒரு கோடை விடுமுறையில் தூரத்து பாட்டி ஒருவரின் வீட்டிற்கு போயிருந்தாள் சிறுமி கவுசல்யா. பாட்டி ஒரு சிறிய வாணலியில் உப்புமா செய்து, “இந்த உப்புமா இருந்தா உங்க வீட்ல எல்லாருமே சாப்பிட்டிருவீங்க இல்லையாடி?” எனக் கேட்டிருக்கிறாள்.

அழுதுகொண்டே கௌசல்யா அன்றிரவு உப்புமா சாப்பிடவில்லை அதன் பிறகு எப்போதுமே உப்புமா சாப்பிடுவதில்லை!

வீட்டிற்கு வந்ததும் அம்மாவிடம் அழுதுகொண்டே சொன்னாள் உப்புமா விஷயத்தை. 

“விடுமா பெரிய மனுஷி சொன்னா சொல்லிட்டு போறா” என்றாள் அம்மா.

இப்போதுகூட கணவனுக்கு எப்போதாவது உப்புமா செய்யும் தருணங்களில் பழைய கருப்பு வெள்ளை திரைப்படங்களில் தெரிவது போல பாட்டியின் முகம் வாணலி உப்புமாவில் தெரிந்து அதிலிருந்து ‘வாய்ஸ் ஓவர்’ கேட்கும்.

ராஜேந்திரனுக்கு உப்மாவை தட்டில் பரிமாறிக்கொண்டே, “அந்த சுலோச்சனா பாட்டி..” எனத் துவங்கி 25 வருடத்திற்கு முன் பாட்டி சொன்னதை அப்படியே சொல்வாள். மேலும் இறுதியில், “இத நா உயிருள்ளவரைக்கும் மறக்கவே மாட்டேன்….” என்பாள்.

“கௌ- உனக்கு இருக்கிற மெமரி பவருக்கு நீ நல்லா படிச்சிருக்கலாம்” என்பான் ராஜேந்திரன்.

“நா என்ன படிக்காமயா இருக்கேன்? சீதாலட்சுமி ராமசாமி காலேஜ்ங்க… நா படிச்ச காலேஜ்லதான் நம்ப ஃபினன்ஸ் மினிஸ்டர் நிர்மலா சீதாராமன் படிச்சிருக்காங்க தெரியுமா?”

“அடிப்பாவி ! அவங்க படிச்ச காலேஜ்லதான் நீ படிச்சேன்னு சொல்லு ” 

ஒரு வினாடி- கணவனுக்கு வாயையும் முகத்தையும் இடமாக கோணி சுழித்து காண்பித்துவிட்டு நகர்வாள்.

யாரிடம் என்ன பேசவேண்டும், எவ்வளவு பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும், எதிராளி நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார் என அனைத்தையும் சில நிமிடங்களிலேயே யூகித்து விடுவாள். அதற்கேற்ப வியூகத்தை வகுத்துக் கொள்வாள் கௌசல்யா .

இவை எதுவும் அறியாத ‘வெள்ளச்சோளம் ‘ராஜேந்திரன். 

திருமண வீட்டில் உறவினர்களிடம் தேவையில்லாததை சொல்லிக் கொண்டிருப்பான். ‘சொல்ல வேண்டாம்’ என்பதையோ ‘போதும் வாங்க போகலாம்’ என கௌசல்யா கண்ணால் ஜாடை காட்டுவதைக் கூட புரிந்துகொள்ளாமல் உரையாடலைத் தொடர்வான். 

வீட்டிற்கு வந்தவுடன் ‘சர்ஜிக்கல் ஆபரேஷன்‘ நடத்தி நிலைகுலைய வைத்து விடுவாள் கணவனை. 

“ச்சே…ஆர்த்தி கூட ஸ்மார்ட்டா பிகேவ் பண்றா…”என்பாள்.

 ஆர்த்தி அவர்களின் ஒரே புதல்வி, படிப்பது செகண்ட் ஸ்டாண்டர்ட். “அவளுக்கு இருக்கிற அறிவில் பாதி கூட உங்களுக்கு இல்லை” பல்லைக் கடிப்பாள் கௌசல்யா.

“அம்மா- அப்பா பாவம்மா” என்பாள் ஆர்த்தி , 

“இவ அப்பாவுக்கு சப்போர்ட். நீ சும்மா இருடி…” என அவள் மேலும் பாய்வாள்.

சென்ற வருடத்தின் ஜூலை 19-ஆம் தேதி ராஜேந்திரன் வாழ்வில் மறக்க முடியாத நாளாகி விட்டது.

வழக்கம் போல் மனைவி தந்த காலை டிபனை முடித்துவிட்டு, கம்பெனி வாகனத்திற்காக பிரதான சாலைக்கு வந்துகொண்டிருந்தான்.

சங்கீதா பேக்கரி திருப்பத்தில் காகம் ஒன்று தலையில் காயத்தோடு சாலை நடுவே உட்கார்ந்திருந்தது. வாயைத் திறந்தபடி குறுகி நடுங்கியவாறு இருந்தது. 

மேலே ஏராளமான காகங்கள் வட்டமாகப் பறந்தவாறே கத்திக் கொண்டிருந்தது. காலை எட்டு மணி சுமார் இருக்கும். பள்ளி மற்றும் அலுவலக நேரமென்பதால் வாகனங்கள் மேலும் கீழுமாக விரைந்து கொண்டிருந்தது. இரண்டு பள்ளி சிறுவர்கள் மட்டுமே நின்றிருந்தனர்.

தோள்பையை பள்ளி சிறுவனிடம் கொடுத்து கொடுத்துவிட்டு காக்கையை கையிலெடுத்து தண்ணீர் புகட்டினான் ராஜேந்திரன். எங்கோ அடி பட்டிருக்க வேண்டும் அல்லது யாராவது காகத்தை அடித்திருக்க வேண்டும்.

நடுங்கிக்கொண்டிருந்த காகம் சொற்ப நீரை அருந்தி விட்டு சில வினாடிகளில் அவன் கையில் உயிரை விட்டது. தலை தொங்கிப் போயிற்று!

சாலையோரமாக இருந்த முள் செடிகளருகே காகத்தை மெல்ல வைத்தான். வைத்துவிட்டு நிமிரவும் தாழ்வாக பறந்து வந்த காகம் ஒன்று அவனின் காதருகே தன் சிறகால் அடித்தபடி பறந்து போனது.

பாட்டில் தண்ணீரைச் சாய்த்து கை கழுவிக் கொண்டான். பின், பாட்டிலை பேக்கில் வைக்கத் திரும்பியபோது மீண்டும் ஆவேசமாய் தலையில் கொத்தியது.

எட்டாப்பில் விடை தெரியாத கேள்விக்கு, பதில் சொன்ன பக்கத்து மாணவன் கொட்டியதை போல் இருந்தது. மேலே பார்த்தான்.

காகங்கள் மேலும் கத்தியபடியே ராஜேந்திரனுக்கு முன்னும் பின்னுமாக பறந்து கொண்டிருந்தது. பயமும் பதற்றமுமாக இருந்தது.

ரவு வீடு திரும்பியவன் நடந்ததை கௌசல்யாவிடம் சொன்னான். முடியை விலக்கிப் பார்த்தவள், “காயமே ஆயிருச்சுங்க, இவுரு பெரிய பாரி வள்ளல்.. அவரு முல்லைக்கு தேர் கொடுத்தாரு. இவரு காக்காவுக்கு தண்ணீ குடுத்திருக்காரு…” 

மேலும் தொடர்ந்தாள்.

“காலைல ஆபீசுக்கு கிளம்பியாச்சுன்னா நம்ம வேல என்னவோ அதை பாக்கணும். அத விட்டுட்டு எதுக்கு இந்த வெட்டி வேல? வேற யாராவது நின்னாங்களா? ரோட்டில் எத்தனைபேர் போய்ட்டு இருந்தாங்க……” காய்ச்சி எடுத்தாள் கௌசல்யா. 

மறுதினமும் அதற்கடுத்த தினமும் ஒற்றைக் காகம் மட்டுமே வந்தது. இது அந்தக் காக்கையின் அம்மாவாக இருக்க வேண்டும் என எண்ணினான். அவனுக்கு முன்னால் பறப்பதும் திரும்ப மீண்டும் அவனை நோக்கிப் பறந்து வருவதுமாக இருந்தது. மழைக் காலங்களில் தரை இறங்கத் தவிக்கும் விமானம் போல! அது நிஜத்தில் அவனை கொத்தவும் தாக்கவும் முயற்சித்துக் கொண்டிருந்தது.

அந்த வார சனிக்கிழமை ஆபீஸில் சொல்லிவிட்டு மாலை 6 மணிக்கு வீடு வந்தான்.கௌசல்யா மற்றும் ஆர்த்தியுடன் அருகில் உள்ள கோவிலுக்குப் போய் நவகிரக அர்ச்சனை செய்து எள் தீபமேற்றி 9 முறை வலம் வந்து வழிபட்டார்கள்.

அதற்கு அடுத்த திங்கள் செவ்வாய் ஆகிய இரு தினங்களும் காகத்தைக் காணவில்லை.

“கௌசல்யா, நவகிரக அர்ச்சனை பரவால்ல, இப்ப அந்த காக்கா வர்றதில்லை” – இரவு வீடு திரும்பியதும் பேக்கை வைத்தபடியே சொன்னான். 

மறுதினம் ஆர்த்தி, “இன்னைக்கு வந்துச்சாப்பா உங்க ஃபிரண்ட்?” எனக் கேட்டாள். 

“ஆமாடா, இங்கே வந்து பாரேன்” குனிந்து தலையை ஆர்த்திக்கு காட்டினான் .

“மைகாட், நல்லா வீங்கி இருக்கு பா” என்றாள், மேலும், “அப்ப மண்டே டியூஸ்டே எங்கப்பா போச்சு?” 

“லீவுல போயிருக்கும் ஆர்த்திக் குட்டி”

தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்த கையோடு சொல்வான் காகத்தைப் பற்றி!

கௌசல்யா ‘மூடை‘ பொறுத்து கேட்பாள். சில நேரங்களில் “க்கும்… உங்களுக்கு என்ன வேல?” எனப் போய்விடுவாள்.

ன்றோடு காக்கை துரத்த ஆரம்பித்து ஒரு வருடம் 2 மாதம் ஆகிவிட்டது. கௌசல்யா கணவனிடம் கையில் ஒரு குச்சியோ பெல்ட்டோ வைத்துக் கொள்ளும்படி சொன்னாள். “வேண்டாம், விடு பாவம்…” என்றான் ராஜேந்திரன்.

“அப்பா, இன்னைக்கு நம்ம வீட்டுக்கே வந்துருச்சுப்பா உங்க ஃபிரண்ட், உங்களுக்காக வெயிட்டிங் போல…” என்றாள் ஆர்த்தி.

அன்றைக்கு ஆர்த்திக்கு பள்ளி விடுமுறை. ராஜேந்திரன் ஆபிஸுக்குத் தயாராகிக் கொண்டிருந்தான்.

சமையலறை ஜன்னலருகே படர்ந்திருந்த பாதாம் மரக்கிளையில் உட்கார்ந்தது. கத்தியபடியே தலையைச் சாய்த்து சாய்த்து பார்க்கவுமாக இருந்தது காகம்.

முதல் மாடியிலிருந்தது அவர்களின் வீடு.

ஜன்னல் அருகில் ஸ்டூலை இழுத்துப் போட்டு அதன் மேல் ஏறிக் கொண்டாள் ஆர்த்தி .

“உன்னோட பாப்பாவுக்கு தண்ணிதானே எங்க அப்பா தந்தார். அதுக்கா இப்படி தொரத்தி தொரத்தி கொத்தறே? மை டியர் க்ரோ…. எங்கப்பா பாவம்பா… ப்ளீஸ் அவரை விட்ரு, எங்கம்மா உனக்கும் உன்னோட ஃபிரெண்ட்ஸ்க்கும் சாதமெல்லாம் வைக்கிறாங்க. எங்கப்பாவை கொத்தாதே…ப்ளீஸ்பா…”

ஆர்த்தியின் வேண்டுதலால் மனமிரங்கிய காகம் அதன்பின் ராஜேந்திரனைக் கொத்தவே இல்லை. அவன் சீரும் சிறப்புமாக வாழ்ந்தான் !

-என கரகர குரல் ஒலிக்க – ‘எண்ட் – கார்ட் ‘ போடலாம்தான்! !

ஆனால்……

அவன் வாழ்வில் எத்தனையோ காகங்கள் அவனைக் கொத்துகிறது. அதோடு சேர்த்து இவைகளையும் ஏற்றுக் கொண்டான் ராஜேந்திரன்! !

*****

– cbesenthil30@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. அருமை செந்தில்நாதன் கதைல மாமியாரர் ரோல் இல்லாம போச்சு அது இருந்தா இன்னும் ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button