![](https://vasagasalai.com/wp-content/uploads/2020/09/IMG_9140-780x405.jpg)
உலகத்தைக் கைவிடுதல் – 1
*
தட்டையான இந்த உலகில் உனக்கான முகமூடி அமைதியற்றிருக்கிறது
அதை நீ அணிந்து கொள்வதை விட
அதை இன்னும் பைத்தியமாக்குவதே சிறந்தது.
*
தட்டையான இந்த உலகில் உனக்கான மழை குளிர்ச்சியற்றிருக்கிறது
அதை நீ எதிர்பார்த்திருப்பதை விட
ஒரு கைப்பிடியளவு மேகத்தை நீராக்குவதே அறிவானது.
*
தட்டையான இந்த உலகில் உனக்கான திசை குழப்பமாகயிருக்கிறது
அதை நீ பாதையாக்குவதை விட
உன் பாதங்களின் வலிக்கு மருந்திடுவதே அவசியமானது.
*
தட்டையான இந்த உலகில் உனக்கான மொழி சுதந்திரமற்றிருக்கிறது
அதை நீ உபயோகிப்பதை விட
ஒரு நதியில் கரைத்து விடுவதே பொறுப்பானது.
*
தட்டையான இந்த உலகில் உனக்கான கடவுள் பொருளற்றிருக்கிறது
அதை நீ ஞாபகப்படுத்திக் கொள்வதை விட
ஒரு புகைமண்டலத்தில் போட்டு விடுவதே மேலானது.
*
தட்டையான இந்த உலகில் உனக்கான தானியங்கள் ஏதுமற்றிருக்கிறது
அதை நீ சேமித்து வைப்பதை விட
பறவைகளுக்குப் பகிர்ந்து கொடுப்பதே தீர்க்கமானது.
*
தட்டையான இந்த உலகில் உனக்கான அதிகாரம் கூர்மையற்றிருக்கிறது
அதை நீ பத்திரப்படுத்தி வைப்பதை விட
மறத்துப்போன இதயத்திற்குள் இறக்கி விடுவதே கருணையானது.
*
தட்டையான இந்த உலகில் உனக்கான வாழ்வு களையற்றிருக்கிறது
அதை நீ சுமந்து கொண்டிருப்பதை விட
மீதமிருக்கும் துரோகங்களின் வலிகளைக் கைவிடுவதே நலமானது.
*
உலகத்தைக் கைவிடுதல் – 2
வேப்பம் பூக்கள் அதன் கசப்புகளை உலகத்திடம் காண்பிப்பதில்லை
அவைகளுக்குத் தெரியும்
இந்த உலகத்தை விட கசப்பு மிக வயதானது.
*
கடலின் உப்புகள் அதன் துயரங்களை உலகத்திடம் காண்பிப்பதில்லை
அவைகளுக்குத் தெரியும்
இந்த உலகத்தை விட துயரம் மிக நம்பகமானது.
*
கைவிடப்பட்ட சொற்கள் அதன் வலிகளை உலகத்திடம் காண்பிப்பதில்லை
அவைகளுக்குத் தெரியும்
இந்த உலகத்தை விட வலி மிகத் தனிமையானது.
*
நட்சத்திரங்கள் அதன் ஏமாற்றங்களை உலகத்திடம் காண்பிப்பதில்லை
அவைகளுக்குத் தெரியும்
இந்த உலகத்தை விட ஏமாற்றம் மிக நுட்பமானது.
*
மாநகரம் அதன் உண்மைகளை உலகத்திடம் காண்பிப்பதில்லை
அவைகளுக்குத் தெரியும்
இந்த உலகத்தை விட உண்மை மிக நெருக்கமானது.
*
காடுகள் அதன் நீர்வழித்தடங்களை உலகத்திடம் காண்பிப்பதில்லை
அவைகளுக்குத் தெரியும்
இந்த உலகத்தை விட தாகம் மிக உணர்வுப்பூர்வமானது.
*
பறவைகள் அதன் சுதந்திரங்களை உலகத்திடம் காண்பிப்பதில்லை
அவைகளுக்குத் தெரியும்
இந்த உலகத்தை விட சுதந்திரம் மிக நீளமானது.
*
இரவு அதன் அடர்ந்த இருளை உலகத்திடம் காண்பிப்பதில்லை
அவைகளுக்குத் தெரியும்
இந்த உலகத்தை விட இருள் மிக அடர்த்தியானது.
*