கடலும் மனிதனும் 22; ‘நாவாய் சூழ்ந்த நளிநீர்’ – நாராயணி சுப்ரமணியன்
தொடர் | வாசகசாலை
![](https://vasagasalai.com/wp-content/uploads/2021/04/AntifoulingPaint.jpeg)
இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக மட்டுமே உலக அரசுகள் வருடத்துக்கு 5.7 பில்லியன் டாலர் செலவு செய்கின்றன. இந்த இம்சையால் மட்டும் அமெரிக்க கப்பற்படைக்கு வருடத்துக்கு 200 மில்லியன் டாலர்கள் நஷ்டமாகிறது.
உலகெங்கிலும் உள்ள அறிவியலாளர்கள் இதற்கு நிரந்தரமான தீர்வைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றி உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பு விவாதிக்கிறது. எல்லா உலக நாடுகளின் கப்பற்படைத் தலைவர்களும் தீர்வு வருமா என்று நகம் கடித்தபடி காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடிய விலங்குகளின் அதிகபட்ச நீளம் வெறும் பத்து சென்டிமீட்டர்! அரையடிக்கும் குறைவான உயிரியா இப்படி எல்லாரையும் அலைக்கழிக்கிறது!
இம்சை உயிரிகள் – தீர்வுக்கான தேடல் என்று இந்தக் கதை எளிதில் முடியாது, இன்னும் நாம் சரியான தீர்வை எட்டவேயில்லை. உச்ச உயிரினமாகத் தன்னை வரித்துக்கொள்ளும் மனிதன் சின்னஞ்சிறு உயிரிகளால் நஷ்டப்பட்ட கதை இது.
மனித சமூகத்தின் தற்போதைய வளர்ச்சிக்கும் உலகளாவிய செழிப்புக்கும் கப்பல் போக்குவரத்து ஒரு முக்கியமான காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. எத்தனையோ தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்டுவிட்ட இந்த 2021ம் ஆண்டிலும், சில நாட்கள் மட்டுமே சூயஸ் கால்வாயில் சிக்கித் தவித்த ஒரு சரக்குக் கப்பல், ஒரு மணிநேரத்துக்குப் பல லட்சம் டாலர்கள் இழப்பை ஏற்படுத்தி, உலகளாவிய பங்குச்சந்தையையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டதை நாம் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம். கப்பலை மீட்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருந்தால், யாரும் எதிர்பார்க்காத மூலை முடுக்குகளில் பல பொருட்களுக்குத் தட்டுப்பாடு வந்திருக்கும். இன்னமும் கப்பல் போக்குவரத்து நம் அன்றாட வாழ்வில் இன்றியமையாததாகவே இருக்கிறது.
கடல் மூலம் சரக்குகளை அனுப்பும் வணிகர்கள், கடற்போரில் ஈடுபடுகிற நாடுகள், மக்கள் பயணிக்கிற கப்பல்களின் முதலாளிகள் அனைவருக்கும் கப்பல்கள் முக்கியமானவை. பழுதின்றி அவை ஓடுவதும் சொன்ன நேரத்தில் துறைமுகத்தைப் போய் அடைவதும் தொழில் அறம் மட்டுமல்ல, லாபத்தையும் அதுவே நிர்ணயிக்கிறது. திடீரென்று பழுதடைந்துவிட்டாலோ, கப்பலின் வேகம் குறைந்தாலோ, அடிக்கடி கரைக்குக் கொண்டு வந்து சரிசெய்தால் மட்டுமே கப்பலை இயக்கவேண்டும் என்ற நிலை இருந்தாலோ அது கடுமையான நஷ்டத்தை ஏற்படுத்தும்.
இந்த எல்லாப் பிரச்சனைகளையும் ஏற்படுத்தக் கூடியவை ஒட்டுயிரிகள் (Biofoulers) என்று அழைக்கப்படுகிற கடல் உயிரினங்கள். துறைமுகத்தில் நின்றுகொண்டிருக்கும்போதோ பாறைகள் நிறைந்த கடற்கரையிலோ கவனித்துப் பாருங்கள், கப்பலின் அடிப்பாகத்திலும் பாறைகளின் மீதும் சின்னச் சின்னப் புள்ளிகளும் சிறு விலங்குகளும் தெரியும். கடல்நீரில் தொடர்ந்து இருக்கிற எல்லா பொருட்களின்மீதும் இந்த விலங்குகள் வளரும். மெதுவாக நகரக்கூடிய திமிங்கிலங்கள்/ஆமைகளின் முதுகில்கூட இந்த விலங்குகள் ஒட்டிக்கொள்ளும்! இறுக்கமாகத் தங்களைப் பிணைத்துக்கொள்ளும் இயல்பு உடையவை என்பதால், ஒருமுறை இவை ஒட்டிக்கொண்டால், கத்தியால் மட்டுமே இவற்றை வெட்டியெடுக்க முடியும். இன்னும் சொல்லப்போனால் அலசி (Barnacle) என்கிற ஒரு ஒட்டுயிரியின் உடலில் இருந்து சர்வ வல்லமை படைத்த பசையை (Superglue) உருவாக்கும் ஆராய்ச்சிகள் கூட நடந்துகொண்டிருக்கின்றன.
ஒரு விலங்கு ஒட்டிக்கொள்வதற்குத்தான் இத்தனை பிரச்சனையா? வெட்டி எடுத்துவிட்டால் போகிறது – என்று தோன்றலாம். அது ஒட்டிக்கொண்டிருப்பது கப்பலுக்கு அடியில்! பயணத்தின்போது எப்படி வெட்டியெடுப்பது?! ஒரு சின்ன உயிரி என்றால் பரவாயில்லை, சில நாட்கள் கப்பல் கடலில் பயணித்தாலே ஆயிரக்கணக்கான உயிரிகள் கப்பலுக்கடியில் குடியேறிவிடும். வெறும் 50 சென்டிமீட்டர் உயரத்துக்கு அவை ஒட்டிக்கொண்டாலே, கப்பலின் அடிப்பாகத்தில் 100 டன் எடை கூடிவிடும்! இதனால் கப்பலின் மீது இயங்கும் பின்னிழுவிசை (Drag) 60% அதிகரிக்கும். இதனால் கப்பலின் வேகம் குறையும். இந்த விசையையும் மீறி வேகத்தை அதிகப்படுத்தவேண்டுமானால் 40% அதிகம் எரிபொருள் தேவைப்படும்! தவிர, துறைமுகத்தை அடைந்த உடன் இந்த எல்லா உயிரிகளையும் சுரண்டி எடுப்பதற்கு வேலையாள் கூலி, அதனால் ஏற்படும் தாமதம் என்று நஷ்டக்கணக்கு ஏறிக்கொண்டே போகும்.
இன்று நேற்றல்ல, கடலில் படகுகளை மனிதன் இயக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே இது பெரிய பிரச்சனைதான். கி.மு நான்காம் நூற்றாண்டில், இந்தப் பிரச்சனை ஒரு மீனால் ஏற்படுகிறது என்று மக்கள் நம்பினார்கள். சுறாமீன்களின் மேல் உடும்பு போல் ஒட்டிக்கொண்டு பயணிக்கும் ரெமோரா (Remora, தமிழில் அப்புக்குட்டி மீன்) வகை மீன்கள், படகுக்கு அடியில் போய் ஒட்டிக்கொண்டு, தங்கள் முழு பலத்தையும் கொடுத்து படகைப் பின்னோக்கி இழுக்கின்றன எனவும், அதனால்தான் படகு முன்னேற முடியாமல் தவிக்கிறது என்றும் நம்பப்பட்டது. ரெமோராவுக்கு ‘கப்பல் நிறுத்தி’ என்ற பெயரும் சூட்டப்பட்டது.
பிரச்சனைக்குக் காரணம் ரெமோராக்கள் அல்ல, பல்வேறு சிறு உயிரிகள் என்பதைப் புரிந்துகொள்ளவே பண்டைய மக்களுக்குப் பல ஆண்டுகளாயின. “களைச்செடிகள், குழம்பு போன்ற சில உயிரிகள், அசிங்கங்கள் வந்து கப்பலின் பக்கவாட்டில் ஒட்டிக்கொள்கின்றன, கப்பலே ஒரு மாதிரி பயணிக்கத் தொடங்கிவிடுகிறது, கப்பல் வலுவிழக்கிறது” என்று எழுதுகிறார் ப்ளூடார்ச். 412ல் கடலில் பயணித்த வணிகர்கள், படகுகளைப் பாதுகாக்க ஆர்சனிக், சல்பர் இரண்டையும் கலந்து எண்ணெயோடு குழைத்து படகின்மேல் பூசியிருக்கிறார்கள். பண்டைய தமிழகத்தில் சுண்ணாம்பும் சணலும் சேர்த்து அரைக்கப்பட்ட கலவை எண்ணெயோடு படகில் பூசப்பட்டதற்கான குறிப்புகள் இருக்கின்றன.
காலப்போக்கில் காரீயம் பூசும் பழக்கம் வந்தது. பிறகு தாமிரம் கலந்த பெயிண்டைப் பூசும் வழக்கம் ஏற்பட்டது. இவை எதுவுமே பெரிதாக உதவவில்லை என்றாலும், வேறு வழியின்றி கப்பல் முதலாளிகள் இவற்றை வைத்து சமாளித்துக்கொண்டிருந்தார்கள்.
18ம் நூற்றாண்டில், இரும்பாலான கப்பல் கூடுகள் புழக்கத்தில் வந்தன. இரும்புக்கூடுகளில் இந்த உயிரிகளின் பிரச்சனை தாறுமாறாக இருந்தது. கடற்பாசிகள், அலசிகள், மட்டி, சிப்பி, சங்கு, கிளிஞ்சல் போன்ற பல உயிரிகள் வந்து ஒட்டிக்கொள்ளும். தாமிர பெயிண்டுக்கும் இவை பெரிதாக பயப்படவில்லை. ஒரு கட்டத்தில், எல்லாவகையிலும் சிறப்பாக இருந்தாலும், இந்த இம்சை உயிரிகளை சமாளிக்க முடியவில்லை என்பதாலேயே இரும்புக்கூடுகளை விட்டுவிட்டு பழையபடி மரக்கலங்களுக்குப் போய்விடலாமா என்று கூட உலக நாடுகள் யோசித்தன!
என்னதான் புழக்கத்தில் இல்லாவிட்டாலும், தாமிரம் கலந்த வண்ணத்தின் தாக்கம் இன்றும் இருக்கிறது. பல கப்பல்களில், அடிப்பகுதியில் ஒரு நிறமும், மேற்பகுதியில் வேறொரு நிறமும் பூசப்பட்டிருப்பதைப் பார்க்கலாம், அதில், அடிப்பகுதியின் நிறம் பெரும்பாலும் சிவப்பாகவே இருக்கும். சிவப்பு நிறத்தைக் கொண்ட தாமிர வண்ணங்களை அந்தக் காலத்தில் பூசினார்கள் என்கிற வரலாற்றின் எதிரொலி அது.
தொடர்ந்து உலகம் எங்கும் அசுர வேகத்தில் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன. கேன்வாஸ், எபோனைட், ரப்பர், கார்க், காகிதம், கண்ணாடி, எனாமல் என்று கண்ணில் பட்டதையெல்லாம் கப்பல்மேல் பூசி உயிரிகளை விரட்ட முடியுமா என்று விஞ்ஞானிகள் தேடினார்கள். ஒளிவிளக்கில் பொருத்துவதற்கான சரியான இழையைத் தேடிய தாமஸ் ஆல்வா எடிசனைப் போல, இந்த உயிரினங்களை விரட்டுவதற்கான அந்த மேஜிக் பொருளை எல்லாரும் தேடிக்கொண்டிருந்தார்கள். எவ்வளவு விலை இருந்தாலும், அந்த மேஜிக் பெயிண்டை வாங்கிக் கப்பல்மேல் பூசுவதற்கு முதலாளிகளும் தயாராக இருந்தார்கள். ஆனால் முயற்சிகள் தோல்வியடைந்தபடியே இருந்தன. மெக் இன்னஸ் என்கிற ஒரு நிறுவனம், ஒட்டுயிரி தடுக்கும் பெயிண்ட் (Antifouling Paint) ஒன்றை முதன் முதலில் உருவாக்கி, 1860ல் சந்தைப்படுத்தியது. அதுவரை வந்த பொருட்களிலேயே ஒரளவு வெற்றி விகிதம் அதிகம் என்பதால், அதைப் பரவலாக வாங்கி அனைவரும் பயன்படுத்தினார்கள்.
காலப்போக்கில் வணிகர்கள் மட்டுமல்லாமல், கப்பற்படையினரையும் இது பெருமளவில் பாதிக்கத்தொடங்கியது. பெரிய அளவிலான போர்க்கப்பலுக்கு இந்த ஒட்டுயிரிகள் பெரிய இம்சையாக இருந்தன. 1906ல் ஒட்டுயிரிகளின் தொல்லை தாங்காமல் பெயிண்ட் பற்றிய ஆராய்ச்சியில் களமிறங்கியது அமெரிக்க கப்பற்படை!
சமூகம் வளர வளர, பல்வேறு தொழில்களில் உள்ளவர்களுக்கும் இம்சையாக உருவெடுத்தன ஒட்டுயிரிகள். கடலுக்கு அருகில் தொழிற்சாலைகளின் குழாய்கள், கடலுக்கடியில் உள்ள எண்ணெய்க் கிணறுகள், கடல் பண்ணைகள், கடலுக்கடியில் உள்ள எண்ணெய்க் குழாய்கள் என்று எல்லாவற்றிலும் ஒட்டிக்கொண்டன, அவற்றின் வலுவான கட்டமைப்பை சிதைத்தன, செலவு வைத்தன. கறுப்பு பெயிண்ட் கலவை, வெள்ளை பெயிண்ட் கலவை, பழுப்பு பெயிண்ட் கலவை என்று முதலாளிகள் சமாளித்துப் பார்த்தார்கள்.
1960களில் வரமாக வந்து இறங்கியது TBT – Tributyl Tin. தகரம் கலந்த ஒருவகை சேர்மம் இது. ஒட்டுயிரிகளை விரட்டுவதில் பெரிய அளவில் செயல்திறன் கொண்டதாக இது இருந்தது. உலக அளவில் எல்லா நாடுகளும் உடனடியாக இதைப் பயன்படுத்தத் தொடங்கின.
டி.பி.டி பயன்பாட்டுக்கு வந்து சில ஆண்டுகள் கழிந்தன. 1970ல் திடீரென்று ஒருநாள் ஒரு கடற்கரைப் பகுதியில், எல்லா பெண் கிளிஞ்சல்களுக்கும் ஆண் இனப்பெருக்க உறுப்புகள் வளர்ந்தன. விஞ்ஞானிகள் குழம்பிப் போனார்கள். அருகிலிருக்கும் எல்லா கடலோரப் பகுதிகளும் ஆய்வு மேற்கொண்டார்கள்.கப்பல்கள் அதிகமாக இருக்கும் கடற்கரைப் பகுதிகளில் மட்டுமே இது நடக்கிறது என்று கண்டுபிடித்த விஞ்ஞானிகள் குழு, என்ன காரணம் என்று கண்டறிவதற்காகக் களத்தில் இறங்கியது.
இந்தப் பிரச்சனைக்கு, டி.பி.டி தான் காரணம் என்று கண்டறியப்பட்டது. கிளிஞ்சலுக்குத்தானே பிரச்சனை என்று அலட்சியமாக அனைவரும் ஒதுக்கிவிட, அடுத்தடுத்த ஆராய்ச்சி முடிவுகள் அதிர்ச்சியளித்தன. இது சுரப்பிகளின் இயல்பான சுழற்சியோடு குறுக்கிட்டு, டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை அதிகப்படுத்தி, பெண் விலங்குகளில் ஆண் தன்மையை ஏற்படுத்துகிறது என்று உறுதி செய்யப்பட்டது. உணவுச்சங்கிலியில் கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏறி, ஊடுருவி, இது மனிதர்களையும் வந்து அடையும் என்றும், மனிதர்களும் பாதிக்கப்படுவார்கள் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்தார்கள். டி.பி.டி நச்சால் மனிதர்களுக்கு நரம்பியல் பாதிப்புகளும் தோல் அழற்சிகளும் ஏற்பட்டன.
ஒரு கப்பல், மூன்று நாட்கள் மட்டும் துறைமுகத்தில் நின்றாலே, அந்தக் கடல்நீரில் 200 கிராம் டி.பி.டி கலந்துவிடும்! தவிர, ஒவ்வொரு முறையும் கப்பலின் அடிப்பாகம் சுரண்டப்படும்போதும் பழுதுபார்க்கப்படும்போதும் டி.பி.டி துகள்கள் கடல்நீரில் கலந்தபடியே இருக்கும். பல துறைமுகங்களில் உள்ள கடல்நீரில் கடுமையான நச்சு அளவு ஏற்பட்டது.
புழக்கத்துக்கு வந்த பத்து ஆண்டுகளிலேயே இது ஆபத்தான நச்சு என்று அறிவியல் எச்சரித்தது. 1983ல், நன்னீர் வாழிடங்களில் டி.பி.டி பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டது. அதற்குள் 100க்கும் மேற்பட்ட சிறு உயிர்களின் உடலுக்குள் இது புகுந்துவிட்டது.
இது தெரிந்தும் 40 ஆண்டுகள் டி.பி.டி வண்ணங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டன. 2003ல், சர்வதேச கடல்சார் அமைப்பு (International Maritime Organisation), டி.பி.டி-யைத் தடை செய்தது. 2008ல் தடை அமலுக்கு வந்தது.
தடை அமலுக்கு வந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகும், கடலோர நகரங்களில் உள்ள சிறு குழந்தைகளின் கழிவுகளிலும் டயாபர்களிலும் டி.பி.டி. துணுக்குகள் கண்டறியப்பட்டன! சூரை, ஓங்கில்கள், கடல்நீர்நாய்கள் போன்ற, உணவுச்சங்கிலியில் மேலே இருக்கும் பல உயிரினங்களின் உடலில் இன்னமும் ஆங்காங்கே டி.பி.டி கண்டுபிடிக்கப்படுகிறது. இப்போதும் பல துறைமுகங்களில் உள்ள கடல்நீரில் டி.பி.டி. நச்சு ஆபத்தான அளவிலே இருக்கிறது. நீரில் கரையாமல், நச்சுத்தன்மை குறையாமல் இன்னும் அது உணவுச்சங்கிலுக்குள் சுற்றிக்கொண்டிருக்கிறது.
“தொழில்புரட்சிக்குப் பின்னான வேதியியல் உலகின் முக்கியமான நீதிக்கதை இந்த டி.பி.டி” என்று எழுதுகிறார் ஒரு சூழலியல் ஆராய்ச்சியாளர். உலகமே தீர்வுகளைத் தேடி ஓடியபோது வந்து குதித்தது இந்த டி.பி.டி. இப்போது டி.பி.டி யிடமிருந்து தப்பிக்க நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம். டி.பி.டி நமது கடல்களிலிருந்து நிரந்தரமாக விலகிவிட்டது என்று அறிக்கை வரும் நாளுக்காக சூழலியலாளர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
சந்தையிலிருந்து ஒரு பெயிண்ட் விலகிவிட்டது என்பதற்காக ஒட்டுயிரிகள் விட்டுவிடுமா என்ன? ஒட்டுயிரிகளை விரட்டுவதற்கான வழிமுறைகள் பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் தொடர்கின்றன. சுறாக்களின் முதுகில் ஒட்டுயிரிகள் அண்டிக்கொள்வதில்லை, ஆகவே சுறாவின் தோல் போன்ற ஒரு பொருளால் கப்பலின் அடிப்பகுதியை மூடினால் என்ன? என்று கேட்கிறது ஒரு ஆய்வு. “மீன்களின்மேல் அலசிகள் ஒட்டிக்கொள்வதில்லை, அதற்கு மீன்களின் உடலில் உள்ள பிசுபிசுப்பான திரவம்தான் காரணம், அதுபோன்ற திரவத்தைக் கண்டுபிடியுங்கள்” – என்று நிதி ஒதுக்கியிருக்கிறது அமெரிக்க பாதுகாப்புத் துறை. சர்வதேச பொருளாதாரக் கூட்டமைப்போ, “ஒட்டுயிரிகளை ஒட்டும்போதே சுரண்டியெடுப்பதற்கு கப்பலுடனே பயணிக்கும் ரோபோக்கள் தயார்” என்று ஜனவரி 2021ல் அறிக்கை விட்டிருக்கிறது.
“என் ஆன்மா முன்னேற நினைக்கிறது, என் கடந்தகாலமோ, கப்பலுக்கு அடியில் ஒட்டிக்கொண்டிருக்கும் அலசியைப் போல கனக்கிறது, என்னைத் தடுக்கிறது” என்று எழுதுகிறார் கவிஞர் சிட்னி லானியர். நினைத்தபடி கப்பல் வேகத்தைக் கூட்டி லாபம் பார்க்க முடியாமல், பல முதலாளிகளைத் தடுக்கின்றன ஒட்டுயிரிகள். ஒட்டுயிரிகளுக்கு எதிரான மனிதனின் போராட்டத்தில் தொடர்ந்து ஒட்டுயிரிகளே ஜெயித்துக்கொண்டிருக்கின்றன.
டி.பி.டியில் ஏற்பட்ட தோல்வியும் அதனால் ஏற்பட்ட சூழலியல் பாதிப்புகளும் சூழலை பாதிக்காத தேர்வுகளை நோக்கி ஆராய்ச்சியாளர்களை உந்தித் தள்ளியிருக்கிறது. அது மகிழ்ச்சிதான். ஆனால் உலக நாடுகளின் அவசரத்துக்கு ஆராய்ச்சியாளர்களால் பதில் சொல்ல முடியுமா என்பது தெரியவில்லை. உலகப் பொருளாதாரத்தின்மீது இந்த ஒட்டுயிரிகள் இறுக்கமாகப் படர்ந்துகொண்டு மனித இனத்துக்கே பழிப்புக் காட்டுகின்றன என்று தோன்றுகிறது.
சின்னஞ்சிறிய உயிரிகள் மனிதனை இம்சிக்கின்றன என்றால், கண்ணுக்கே தெரியாத ஒரு ஆயுதத்தால் மனிதன் சின்னஞ்சிறிய உயிரிகளை மிரட்டிக்கொண்டிருக்கிற வரலாறு தெரியுமா?
தொடரும்…