சிறுகதைகள்

ப்ராஜெக்ட் மனிதன் 2.0 – சந்தீப்குமார்

சிறுகதை | வாசகசாலை

கி.பி. 2060ஆம் ஆண்டின்  அக்டோபர் மாதம் மூன்றாம் நாள். ஜெனிவாவின் “தி பேலஸ் ஆஃப் நேஷன்ஸ்” கட்டிடம் அல்லோலப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைக்கட்டிடமாய் அறியப்பட்டிருந்த அது அன்று முதன்முறையாய் உலகின் அனைத்து நாடுகளின் தலைவர்களையும் ஒருசேரக் கண்டிருந்தது. நேச நாடுகள், விரோத நாடுகள், வளர்ந்த நாடுகள், வளர்ச்சியடையா நாடுகள், ஏழை நாடுகள் பணக்கார நாடுகள் என இது வரையில் அறியப்பட்டதாயும், பிரிக்கப்பட்டதாயும் உலகினில் அதிகாரபூர்வமாய் அறிவிக்கப்பட்டிருந்த அத்தனை நாடுகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் அன்று ஜெனிவாவில் குழுமியிருந்தனர். வரலாற்றில் இப்படியான ஒரு நிகழ்வு இதுவே முதன்முறையாதலால் உலகமே அதைக் கண்ணும் காதும் வைத்து தத்தமது வீடுகளில் இருந்தவாறே உற்று நோக்கியபடி இருந்தது.

அங்கிருந்த அந்தக் கலந்தாய்வுக் கூடம் மனித வரலாற்றின் மாபெரும் மாநாட்டை நிகழ்த்திடுவதற்கான ஆயத்தங்களை தன்னுள் ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அந்த முழு அறையும் புறஊதாக்கதிர்கள் கொண்டு கிருமிநீக்கம் செய்யப்பட்டிருந்தது. அந்தக் கலந்தாய்வுக் கூடத்தினுள் நுழைய ஒரு புறஊதாக்கதிர் சுத்திகரிப்புச் சுரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. ஆயத்தங்கள் அனைத்தையும் மனிதனால் கட்டுப்படுத்தப்பட்ட இயந்திர மனிதர்கள் கச்சிதமாய் செய்துக்கொண்டிருந்தனர்.

இத்தனை ஏற்பாடுகள் அங்கு நடைபெற்று வந்திருந்த போதிலும், அத்தனை நாட்டின் தலைவர்களும் அங்குக் குழுமியிருந்த போதிலும் அந்த நகரில் ஒரு மயான அமைதி நிலவியிருந்தது. சாலைகள் வாகனங்களின்றி வெறிச்சோடிப்போயிருந்தது. உணவும், அத்தியாவசிய பொருட்களும் பிராணவாயு கலன்களும் வீடு வீடாய்க் கொண்டுச் சேர்த்திடும் இயந்திர மனிதர்களை மட்டுமே எங்கும் கண்டிட முடிந்திருந்தது. ஆங்காங்கே பழுதாகிக் கிடக்கும் இயந்திர மனிதர்களை கவச உடையணிந்த ஒன்றிரண்டு பேர் சரிபார்த்த வண்ணம் இருந்தனர். கடைகள், கடைத்தெருக்கள், கேளிக்கைப் பூங்காக்கள் என அனைத்தும் மக்களின்றி வெற்றிடமாய் சூன்யம் கொண்டிருந்தது. அவ்விடத்தில் பூமி தன் பொலிவை இழந்திருந்ததாய் கதறி அழுதுக் கொண்டிருந்தார் ஆள்நடமாட்டமில்லாமல் பூட்டப்பட்டிருந்த தேவாலயத்தின் கடவுள்.

தலைவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளை வரவேற்கவும், அவர்களுக்கான ஏவல்களைப் புரியவும் கூட எந்திர மனிதர்களே பயன்பாட்டில் வைக்கப்பட்டிருந்தனர். மனிதர்களை பெயரளவில் கூட அங்கு சாதாரணமாய்க் கண்டிருக்க முடியவில்லை. காண முடிந்திருந்த மனிதர்கள் யாவரும் முழுதாய் மூடப்பட்டிருந்த, பிராணவாயுவுடன் கூடியதான கவச உடையை அணிந்திருந்தனர். மனித இனம் சந்தித்து வந்திருந்த மாபெரும் சவாலுக்கான விடையை அந்த மாநாடு தந்திடும் என உலகில் எஞ்சியிருந்த மொத்த மனித இனமும் நம்பிக்கைக் கொண்டு காத்திருந்த அதே நேரம் டாக்டர்.சந்தோஷ் ஆண்டிமுத்து இந்தச் செய்திகளைக் கேட்டுக் கொண்டே மனம் வெறுத்தவராய் தன் அறையில் இருந்த பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.

………..

மாநாட்டு நாளன்று காலை. செய்தி சேகரித்திடுவதற்கான இயந்திர மனிதர்கள் பேலஸ் ஆப் நேஷன்ஸ் கட்டிடத்தை மொய்த்த வண்ணம் இருக்க ஒவ்வொரு நாட்டின் தலைவர்களாய் அந்தக் கலந்தாய்வுக் கூடத்திற்கு வருகை தரத் துவங்கியிருந்தனர். உடலை முழுதாய் மூடியிருந்த, முகத்தின் முன் கண்ணாடி கொண்டிருந்த வகையிலான பிராணவாயு பாதுகாப்புக் கவச உடையை அனைவரும் அணிந்திருந்தனர். கவச உடையுடன் கிருமிநீக்கச் சுரங்கம் வழி பயணித்து, கலந்தாய்வுக் கூடத்தினுள் நுழைந்து தங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை தேடியமர்ந்தனர். ஒவ்வொருவராய் வந்த வண்ணம் இருக்க அங்கிருந்த அனைவர் முகங்களிலும் பல விதங்களிலான வித்தியாசப்பட்ட எண்ண ரேகைகள். சிலர் முகங்களில் கவலை, சிலர் முகங்களில் கோபம், சிலர் முகங்களில் குழப்பம், சிலர் முகங்களில் அதிருப்தி, சிலர் முகங்களில் சோர்வு. ஆனால் யார் முகத்திலும் மகிழ்வின் அம்சம் பெயரளவில் கூட துளியும் தென்பட்டிருக்கவில்லை. அதே நேரம் அனைவர் முகத்திலும் சொல்லிவைத்தாற்போல் ஒருவித அச்சத்தின் ரேகை இழையோடியிருந்தது.

அனைவரும் வந்திருந்தது உறுதி செய்யப்பட்டவுடன் அந்தக் கலந்தாய்வுக்கூடத்தின் தானியங்கிக் கதவு காற்று உள்புகா வண்ணம் தானாய் மூடிக்கொண்டது. அந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்கியிருந்த உலகசுகாதார நிறுவனத்தின் தலைவரும் ஆராய்ச்சியாளருமான டாக்டர். ஆண்டர்சன் தன் தழுதழுத்த குரலில் ஆங்கிலத்தில் உரையாடத் துவங்கினார்.

“எங்க அழைப்பை ஏற்று மனித குலத்தை செழிக்க வைக்க இங்க வந்திருக்க உலக தலைவர்கள் எல்லாருக்கும் எங்கள் தலையாய வணக்கம். இது நாம எல்லாரும்  மதம், மொழி, இனம், நிறம்ன்னு பேதங்கள் பாக்காம ஒன்றிணைஞ்சு, ஒன்னா நின்னு எஞ்சியிருக்க மனித இனத்த காப்பாத்த வேண்டிய நேரம்.  இங்க நாம எல்லாரும் எதனால கூடியிருக்கோம்னு உங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியும். மனிதர்கள் கடந்த ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்னான ஜனத்தொகைல இப்போ ஒரு பாதியளவு கூட உயிரோட இல்லை. இருக்கவங்க உயிருக்கும் நம்மகிட்ட எந்த வகையிலான உத்திரவாதமும் இல்லை. அவங்கள காப்பாத்தவோ, இல்லை இந்த அழிவைத் தடுக்கவோ நம்மகிட்ட எந்த வகையிலையுமான தொழில்நுட்பம் இதுவரையிலையும் இல்லை. இதுக்கான ஆரம்பப்புள்ளியா இருந்தது கி.பி. 2019ஆம் வருஷம் டிசம்பர் மாதம் முதன்முதலா கண்டுபிடிக்கப்பட்ட கோவிட்-19 வைரல் ஸ்ட்ரெயின் தான்…”

அவர் கூறிக்கொண்டிருந்தபோதே,
“இதுக்கெல்லாம் சீனாவோட பேராசை தான் காரணம். கோவிட்-19 ஒரு சீன வைரஸ். சீனாவால தான் நாமலாம் இப்போ இந்த நிலைமைல இருக்கோம்” வழிமறித்துக் காட்டுக் கத்து கத்தினார் அமெரிக்க நாட்டின் அதிபராய் இருந்த ஆலன் டொனால்ட்.

அவை சலசலக்கத் தொடங்கியது.

“கோவிட்-19 எங்ககிட்ட இருந்து பரவியிருந்தாலும் அத எங்களுக்குப் பரப்புனதும், அத வச்சு இலாபம் பாத்ததும் அமெரிக்கா தான். அதுக்கப்புறமா எங்கள பழிவாங்கரதா நினைச்சு அவங்க பரப்பி விட்ட ரெண்டாவது கொடிய வைரல் ஸ்ட்ரெயின் மார்பெர்க்2044 தான் இப்போ நடந்திட்டிருக்க இந்த பேரழிவுக்குக் காரணம். இது முழுக்க முழுக்க அமெரிக்காவோட பழிவாங்கும் செயல். சீனா மீது வீண்பழி போட்டா நாங்க சும்மா இருக்க மாட்டோம்”, கோபம் தெறிக்க பேசினார் சீன அதிபர் வாங்.

“உங்க ரெண்டு நாட்டோட சண்டைல பாதிக்கப்பட்டது உலகம் பூரா தான். எங்க மக்களை ஏன் வீணா கொன்னிங்க”, வடகொரிய அதிபர் ஜிம் கேள்வியெழுப்ப

” மக்கள் மேல அக்கறை உள்ள மாதிரி யாரும் நடிக்க வேண்டாம். நாம என்னதான் மக்களுக்காக தான் ஆட்சின்னு நாடகம் போட்டாலும் நம்ம எல்லாருக்குமே தெரியும். நாம உண்மையான ஆட்சிய நடத்தரது பெருமுதலாளிகளுக்காக தான். அவங்க தான் நம்மள இயக்குர சக்தி. அவங்களுக்கு வர பாதிப்புகள் மட்டும் தான் விவாதப்பொருளாகும். இப்பவும் கூட இந்த மாநாடு எதுக்காக?? மக்களில்லாம எல்லாரும் செத்தொழிஞ்சு போயிட்டா யார வச்சு நாம ஆட்சி பண்ரது. அவங்க யார வச்சி சம்பாதிக்கரது. ஜனநாயகமோ கம்யூனிசமோ மக்களாட்சியோ சர்வாதிகாரமோ எல்லாமே வெறும் மாயை தான். ஜனங்கள ஏமாத்த உருவாக்கப் பட்டிருக்க மாயை. ஆனா இது எல்லாமே பெருமுதலாளிங்க வடிவமைச்சு குடுத்த ஏமாற்று வடிவங்கள் தான். இதுக்கு யாருமே நிச்சயமா மறுப்பு சொல்லிடவே முடியாது. நடந்த இந்த தப்புல நம்ம ஒவ்வொருத்தங்களுக்கும் பங்கிருக்கு. இதுக்கு மறுப்பு தெரிவிக்கரவங்க தெரிவிக்கலாம். அவங்களாம் யார்யார்கிட்ட எவ்ளோ பங்கு வாங்கிருக்காங்கங்கர விஷயம் எங்களுக்குத் தெரியும்”, கரடியாய்க் கத்தி முடித்திருந்தார் அமெரிக்க அதிபர்.

அவை முழுதுமாய் ஒரு மயான அமைதி.
அந்த அமைதியைக் கலைக்கும் விதமாய் வாய் திறந்தார் இந்தியப் பிரதமர், “சரி. இப்போ எதிர்காலத்திட்டம் தான் என்ன. அத நீங்க விளக்குங்க டாக்டர்.ஆண்டர்சன்”.

டாக்டர் ஆண்டர்சன் மேற்கொண்டு பேசத் தொடங்கினார்.

“இந்த கோவிட்-19 ஸ்ட்ரெயினும், மார்பெர்க்2044 ஸ்ட்ரெயினும் தனித் தனியா நம்மளால அழிக்கக் கூடியது. ஆனா இது வரை நாம கண்டறிஞ்சிருக்காத இயற்கைக்கு புறம்பான ஒரு விஷயமா நாம கருதியிருந்த ஒன்னு இயற்கையாவே நடந்திருக்கு. அதாவது கோவிட்-19 ஸ்ட்ரெயினும் மார்பெர்க்2044 ஸ்ட்ரெயினும் ஒன்னோடொன்னு கலந்து ஒரு புதுவிதமான வைரல் ஸ்ட்ரெயினா உருமாறி அதிவீரியத்தோட பரவி எல்லாரையும் கொன்னிட்டிருக்கு. அத விட ஆபத்தான விஷயம் இது காத்துல சரளமா கலந்து சுவாசிக்கர எல்லாத்தையும் பாதிச்ச அடுத்த நாளே உடலுறுப்புகள செயலிழக்க வைச்சு கொல்லுதுங்கரது தான். அதுவும் இல்லாம இதுவரையில வைரஸ் இனப்பெருக்கம் பண்ண ஒரு மீடியம் தேவை. அது தான் இயற்கையோட விதி. ஆனா அந்த விதியையும் இது பரிணாம மாற்றம் அடைஞ்சு தகர்த்திருக்கு. காற்றுலயே இனப்பெருக்கம் பண்ணி பல்கிப் பெருகுது”.

கேட்டிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்திருக்க அவர் மேலும் தொடர்ந்தார்.

“இதப் பத்தின ஆராய்சிகளுக்காய் நாம பல்வேறு உலகநாடுகளைச் சேர்ந்த முன்னனி ஆராய்ச்சியாளர்கள் கொண்ட குழு ஒன்னு அமைச்சு பல வருஷமா தீவிரமா ஆராய்ச்சி செஞ்சிட்டே வர்றோம். ஆனாலும் இதோட பரிணாம வளர்ச்சி நாம எதிர்பார்க்காத விதமா அசுர வேகத்துல நடந்திட்டு வருது. நாம இயற்கைய கட்டுப்படுத்த நினைச்சதனாலயோ என்னவோ இயற்கை நம்ம கட்டுக்கு அடங்காம பயங்கரமா கொந்தளிக்கரத உணர முடியுது. அதுவுமில்லாம எல்லா நாடுகள்ளயும் மக்கள் கடும் அதிருப்திலயும் பயத்திலயும் இருக்காங்க. வீட்டுக்குள்ளயும் கவச உடையோட முடங்கிப் போய் மனசளவுல எல்லாரும் பாதிக்கப்பட்டவங்களா இருக்காங்க. பொருளாதாரம் கீழ போய்ட்டே இருக்கு. தினமும் இலட்சக்கணக்குல சாவராங்க. அரசாங்கங்களுக்கு மக்கள் தொகை தேவைப்படுது நாட்ட நடத்த. இது வரைக்கும் நம்ம ஆராய்ச்சிக்கு நிதி தந்திட்டிருந்த கார்ப்பரேட்ஸ் இனி இதுக்கான மருந்துல முதலீடு பண்ரதுல பிரயோஜனம் இல்லைன்னு நிதி உதவிய நிறுத்திட்டாங்க. அதனால இதுக்கு மருந்து கண்டுபிடிக்க பண்ண ஆராய்ச்சி முயற்சிகள நாங்க கைவிடரோம்.”

“என்ன. கைவிடரிங்களா…அப்போ இத சொல்லத்தான் எங்க எல்லாரையும் கூப்ட்ருகிங்களா இங்க”, கொதித்தார் ரஸ்புடின், ரஷிய நாட்டு அதிபர்.

” இல்லை. இது சம்பந்தமான ஆராய்ச்சிகள்ள அந்த மார்பெர்க் வைரச உருவாக்குன அந்த நிறுவனம் ஒரு ப்ரேக்த்துரூ கண்டுபிடிச்சாங்க, ஒரு வகையான மலை வவ்வால்கள்ள, இந்த புது வைரச எதிர்க்க கூடிய வகையிலான ஒரு ஜீன் இருக்கரத கண்டுபிடிச்சு அத பிரிச்செடுத்திருக்காங்க. அத நாம மனுஷங்களுக்குள்ள செலுத்தி மரபணு மாற்றம் செய்யப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மனுஷங்கள உருவாக்க முடியும்ன்னு அவங்க ஒரு பரிந்துரைய குடுத்திருந்தாங்க. அத வளர்ந்த நாடுகள் அடங்கிய குழு ஏற்கனவே பரிசீலிச்சு அதுக்கான ஒப்புதலையும் தந்திட்டாங்க. அதுதான் இப்போ பலநாடுகள் சேர்ந்து செஞ்சிட்டிருக்க ப்ராஜெக்ட் சேப்பியன்ஸ் 2.0 (ப்ராஜெக்ட் மனிதன் 2.0)”.

கூறிக்கொண்டே அது தொடர்பான படங்களை அங்கிருந்த பெரிய திரையில் ஓடவிட்டபடி தொடர்ந்தார்.

“இந்த ப்ராஜெக்ட் மனிதன் 2.0 படி ஒவ்வொரு நாட்டுக்கும் எந்த மாதிரியான மனிதர்கள் தேவை, எவ்வளவு மனிதர்கள் தேவை என்பதை முன்னரே தெரிவித்து அதற்குண்டான தொகையை செலுத்தி பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். மனிதர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள், ஆற்றல்கள், திறமைகளைப் பொறுத்து தொகையும் மாறுபடும். நீங்கள் கேட்கும் வகையிலான மரபணுக்கூறுகளைக் கொண்ட மனிதர்கள் உங்களுக்கு உருவாக்கித் தரப்படுவார்கள். அவர்களை நீங்கள் இருக்கும் மக்கள் தொகையோடு கலந்து வரக்கூடிய தலைமுறைகளை இந்த நோய்க்கான எதிர்ப்புசக்தி கொண்ட மக்கள்தொகையாக்கிப் பெருக்கலாம். மேலும் இந்த எதிர்ப்பு சக்தி இந்த ஒரு நோய்க்கு எதிரானது தானே தவிர மத்த வியாதிகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. அதுனால க்ளோபல் ட்ரக் மார்க்கெட்க்கு எந்த பாதிப்பும் வராது. ஆனா இதுல ஒரு சிக்கல் இருக்கு”.

கூறியவர் நிறுத்தி அங்கு வைக்கப்பட்டிருந்த நீர் இருந்த பூட்டப்பட்ட கண்ணாடிக் குடுவையின் நுனியை திருகி உடைத்து தன் கவச உடையின் நீர் உறிஞ்சிமிடத்தில் பொருத்தி உள்ளிருந்த உறிஞ்சு குழாய் மூலம் உறிந்து இரண்டு மடக்குகள் குடித்தார். பின் மீண்டும் தொடர்ந்தார்.

“இந்த மனிதர்கள தயாரிக்கர ப்ராஜெக்ட்ட எடுக்க பல பெரிய நிறுவனங்கள் கடுமையா போட்டி போட்டிட்டிருக்கு. ஆனா நம்ம ப்ராஜெக்ட் மனிதன் 2.0 இன்னும் முழுசா முடிவடையல. நம்மகிட்ட இருக்க விஞ்ஞானிகளால மரபணு மாற்றத்த விரும்பிய முறையில கச்சிதமா செஞ்சு சரியான மனிதர்கள இன்னும் வெற்றிகரமா உருவாக்கித் தர முடியல”.

கூட்டத்தில் மீண்டுமொரு சலசலப்பு. சலசலப்பை அதிகப்படுத்தும் விதமாய் திரையில் தோன்றியது ஒருவரது புகைப்படம்.

“டாக்டர். ஆண்டர்சன் அவர் டாக்டர். சந்தோஷ் ஆண்டிமுத்து தானே. இருபது வருஷம் முன்னாடி இவரோட கண்டுபிடிப்புகள அழிச்சு அவர சிறையில அடைச்சு வச்சிருந்தோமே??”, ஆச்சரியம் மேலோங்கக் கேட்டார் ஆஸ்திரேலியப் பிரதமர் வைட்.

“ஆமாம். நீங்க சரியா சொன்னிங்க. அவர் தான் டாக்டர்.சந்தோஷ் ஆண்டிமுத்து. இந்த நூற்றாண்டோட மிகப் பெரிய மரபணு விஞ்ஞானி. கி.பி.2025ஆம் ஆண்டு செடிகள்ள இருக்கர பச்சையத்துக்கான  (க்ளோரோபில்) மரபணுவ மனித மரபணுவோட சேர்த்து, சூரிய ஒளி மூலமா தனக்கு தேவையான சக்திய தாவரங்கள் உருவாக்கிக்கர மாதிரியே தற்சார்பா தனக்குள்ளவே சக்தியை உணவில்லாம உருவாக்கிக்கர மாதிரியான பச்சை மனிதர்கள உருவாக்கினார். குளோபல் புட் மார்க்கெட்டே ஆடிப்போச்சு. உணவு தேவைப்படாத பச்சை மனுஷன்னால ஆயிரத்து இருநூத்தி எண்பது டிரில்லியன் டாலர் புட் மார்க்கெட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து வந்தது. அதனால அவரோட ஆராய்ச்சிகள அழிச்சி இருபது வருஷம் ஆஸ்திரேலியால சிறையில அடைச்சி வச்சிருந்தோம். அதுக்கப்புரமா இந்தியா போனவர் அஞ்சு வருஷமா எங்க கண்காணிப்புல தான் இருந்தார். திடீர்னு ஒருநாள் காணாம போய்ட்டார். இப்போ இந்தியாவோட தென்மூலைல ஒரு கடலோர கிராமத்துல மறைஞ்சு வாழரார்ன்னு ஒரு தகவல் கிடைச்சிருக்கு. அவர உலக நன்மைக்காக இந்திய அரசாங்கம் எங்ககிட்ட ஒப்படைக்கனும்”.

சொல்லி முடித்திருந்தார் ஆண்டர்சன்.

“அவர் எப்படி உங்களோட இந்த ஆராய்ச்சில ஈடுபட ஒத்துப்பாருன்னு நினைக்கிறிங்க?”. இந்தியப் பிரதமர் குழப்பத்துடன் கேட்க

“அவர் ஒத்துக்கலனாலும் மின்காந்த அலைகள் மூலமா அவர் மூளையத் தூண்டி அதுல பதிஞ்சிருக்க தகவல்கள வெளிக்கொணர நம்மகிட்ட தொழில்நுட்பம் இருக்கு”. பெருமிதமான ஒருவித திமிர்ப் பாவனையுடன் சொல்லி முடித்தார் அமெரிக்க ஜனாதிபதி ஆலன்.

மனித இனத்தைக் காத்திடுவதற்கான பெயரில் வியாபாரம் அமோகமாய் நடைபெற்றிருந்தது அன்று.

ஒரு வாரம் கழிந்திருந்தது.

……………

சின்னமுட்டம். கன்னியாகுமரி மாவட்டத்தின் முனையில் அமைந்திருக்கும், மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டிருக்கும் அழகிய மீனவக் கிராமம்.  கைவிடப்பட்டிருந்த கிராமமான அதில் கடற்கரையோரமாய் காரைச்சுவர்களின் மேல் கூரை வேய்ந்திருந்த ஒரு சிறிய வீடு. கூரையின் மேல் சில ஆண்டனாக்களும் ரேடார் கருவியும் நீட்டிக் கொண்டிருந்தது. ஒரு காற்றின் திசைக்காட்டி காற்றின் போக்குக்கே போக்குக் காட்டியபடி திசையைக் காட்டிக் கொண்டிருந்தது. வீட்டினுள் அந்த வீட்டின் தோற்றத்திற்கு சற்றும் பொருந்தாத வகையிலான நவீன மின்னனு சாதனங்கள் நிறைந்திருந்தது. வீட்டினுள்ளே அழகழகாய்ப் பூச்செடிகள் ஆங்காங்கே அலங்காரமாய் வைக்கப்பட்டிருந்தது அந்த வீட்டிற்கு ஒரு அகங்காரத்தைக் கொடுத்திருந்தது. அதில் போடப்பட்டிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தவாறு அன்றின் டிஜிட்டல் நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்தார் டாக்டர்.சந்தோஷ் ஆண்டிமுத்து.

பகுதியாய் நரைத்திருந்த தலைமுடி, நடுத்தரமான உடல்வாகு, வெளுத்த குறுந்தாடி, இவையனைத்தையும் மறைக்கும் வகையிலான கவச உடை.  இந்தியாவில் இளங்கலை. ஆஸ்திரேலியாவில் முதுகலை மற்றும் ஆராய்ச்சிப்படிப்பு. மரபணுமாற்றவியலின் நவீன தந்தை என்றறியப்படும் வகையிலான நபராக இருந்திருந்தவர் டாக்டர். சந்தோஷ் ஆண்டிமுத்து.

அன்றின் காலையில் அவரால் ஏதோவொரு அசாதாரணத்தை உணர முடிந்திருந்தது. இத்தனை வருடங்களில் அங்கு அவர் கேட்டிருக்காத சப்தங்களை அன்று அவர் உணர்ந்திருந்தார். வாகனங்களின் சப்தம். எதையோ ஊகித்தவராய் தயாரானார் டாக்டர்.சந்தோஷ். வந்திருந்த தேசிய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவரிடம்  அவரை அழைத்துச் செல்ல விரும்புவதாய் தெரிவிக்க எதிர்ப்பேதும் தெரிவிக்காதவராய் அவர்களுடன் புறப்பட்டிருந்தார். அங்கிருந்து டெல்லி கொண்டு செல்லப்பட்ட அவர், இரண்டு நாட்களில் ஜெனிவா அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.

அங்கு பல கட்ட சோதனைகளுக்குப்பின் சர்வதேச நிர்வகிப்புக் குழுவின் முன் நிறுத்தப்பட்டிருந்தார் டாக்டர். சந்தோஷ். அவரிடம் அவரை அழைத்து வந்ததற்கான காரணங்களை விளக்கினார் டாக்டர். ஆண்டர்சன். அது வரையில் யாரிடமும் எதுவும் பேசாதவராய், சமிக்ஞைகள் மூலமாய் மட்டும் பதிலளித்து வந்தவராய் இருந்த டாக்டர்.சந்தோஷ் வாய் திறந்தார். அழகிய நுனிநாக்கு ஆங்கிலத்தில் தன் கருத்துக்களைக் காட்சிப்படுத்தத் துவங்கினார்.

“இந்த பூமில இருக்க மிகக் கொடுரமான வைரஸ் எதுன்னு தெரியுமா. மனுஷன். அவன் கொண்டிருக்க அந்த பாதிப்ப ஏற்படுத்தர மோசமான ரெண்டு ஜீன் எது தெரியுமா. பேராசையும், சுயநலமும். இயற்கை ஒரு வியக்கத்தக்க அமைப்பு. அது தன்னகத்தே குப்பை சேரரத ஒரு நாளும் அனுமதிக்காது. அப்படி மீறி சேரக் கூடிய குப்பைகளையும் அழுக்குகளையும் உடனுக்குடன் நீயூட்ரலைஸ் பண்ணக்கூடிய பேராற்றல் எப்பவுமே இயற்கைக்கு உண்டு. அந்த வகையில இயற்கைல இப்போ சேர்ந்திருக்க குப்பை தான் மனுஷன். இயற்கை இப்போ தன்னத்தானே சுத்தம் பண்ணிட்டிருக்க ப்ராசஸ்ல இருக்கு. உங்க கூட சேர்ந்து அதை நான் மேலும் குப்பையாக்கி அசுத்தப்படுத்த விரும்பலை. என்ன தயவு செஞ்சி என் போக்குல அமைதியா விட்டிடுங்க”. அழுத்தமான குரலில் ஆணித்தரமாய்க் கூறியவர் அங்கிருந்து பதிலேதும் எதிர்பார்த்திருக்காமல் கதவை நோக்கி நடையைக் கட்டினார்.

அவரைத் தொடர்ந்தவாறே பின்னே ஓடி வந்தார் டாக்டர். ஆண்டர்சன்.

“யூ ஆர் டூ ஸ்டப்போர்ன் டாக்டர்.சந்தோஷ். உங்களுக்கு நாங்க தங்கறதுக்கான ஏற்பாடுகள் பண்ணிருக்கோம் இன்னிக்கு அங்க தங்கி யோசிச்சு நாளைக்கு ஒரு நல்ல முடிவ சொல்லுங்க. என் அசிஸ்டண்ட் க்ளாரா உங்கள உங்க அறைக்கு கூட்டிப் போவா” சந்தோஷிடம் கூறியவர் க்ளாராவை நோக்கி, “ப்ளீஸ் டேக் ஹிம் அண்ட் மேக் ஹிம் பீல் த கம்போர்ட்”, மிடுக்காய் கூறிவிட்டு அங்கிருந்து நகரவும் டாக்டர்.சந்தோஷ் க்ளாராவைப் பின்தொடர்ந்தார்.

அன்றின் இரவு. டாக்டர்.சந்தோஷ் ஆண்டிமுத்து தன் அறையில் உறங்கிக் கொண்டிருக்க, அறைக்குள் தடாலடியாய் நுழைந்த நான்கு தடியன்கள் அவரைக் குண்டுக் கட்டாய்க் கட்டித் தூக்கிக் கொண்டு ஆராய்ச்சிக் கூடத்திற்கு கொண்டு வந்தனர்.
டாக்டர்.சந்தோஷின் மூளையிலிருக்கும் தகவல்களை மின்காந்த அலைகள் மூலம் முப்பரிமாண காட்சிப்படுத்தல்களாய் மாற்றிடுவதற்கான அனைத்தும் அங்கு ஆயத்த நிலையில் இருந்தது. டாக்டர்.சந்தோஷின் பின்னங்கழுத்தில் பிரைன் இமேஜிங்கான டை ஊசி மூலம் செலத்தப்பட்டு மின்காந்த அலைகள் செலுத்தப்பட அவர் துடிதுடித்துக் கொண்டிருந்தார்.

அதே நள்ளிரவில் தன் அறையில் டாக்டர்.ஆண்டர்சன் நிம்மதியாய் உறங்கிய வண்ணம் இருக்க அவரது அறை தொலைப்பேசியின் அதி தீவிர அலறல் அவரது தூக்கத்தைக் கெடுத்திருந்தது.
ரிசீவரை எடுத்தவர்

“ஹலோ..,…..!!??”

“டாக்டர். க்ளாரா ஹியர். டாக்டர்.சந்தோஷ் பிரைன் டேட்டா எக்ஸ்ட்ராக்‌ஷன்ல மூளை வெடிச்சு சிதறி இறந்துட்டார்”.

“ஓஹ் மை பக்கிங் காட்…வாட் ஆம் ஐ ஹியரிங். இது எப்படி நடந்தது”.

“எனக்கு தெரியல டாக்டர். சீக்கிரம் வாங்க”, மறுமுனை துண்டிக்கப்பட பின்னங்கால் கழுத்தில் படும் வண்ணம் அலறியடித்தபடி ஓடினார் டாக்டர் ஆண்டர்சன் ஆய்வுக்கூடத்தை நோக்கி.

அங்கு டாக்டர்.சந்தோஷின் தலையின் பின்புறம் திறந்த நிலையில் இருக்க வெடித்திருந்த மூளையின் சிதறிய துண்டுகள் ஆங்காங்கே தெறித்திருந்தது.

“எப்டி இது ஆச்சு. எவ்ளோ ரேடியேஷன் குடுத்திங்க அவர் மூளைக்கு. ஹவ் கேன் யூ பீப்பிள் பி சோ இர்ரெஸ்பான்சிபில்?? இப்போ ஒட்டுமொத்த கார்ப்பரேட்ஸ் அண்ட் வோர்ல்ட் லீடர்ஸ்க்கு நான் என்ன பதில் சொல்ரது”, அங்கிருந்தவர்களைப் பொரிந்துத் தள்ளிக் கொண்டிருந்தார் ஆண்டர்சன். அந்த இரவு அவருக்கொரு மிகக் கடுமையான, கொடுமையான இரவாய் மாறிப்போயிருந்தது.

மறுநாள் தன் அலுவலகத்தில் அமர்ந்திருந்த ஆண்டர்சனிடம் டாக்டர்.சந்தோஷின் மரணம் சம்பந்தமான அறிக்கைகளுடன் வந்தாள் க்ளாரா.

“டாக்டர். தேர் ஈஸ் சம்திங் வெரி ஸ்ட்ரேஞ்ச் இன் ஹிஸ் டெத். நாம வழக்கமா பாய்ச்சர மின்சாரத்தோட பகுதி அளவு தான் அவருக்கு கொடுத்திருக்கோம். அவரோட ப்ரைன் ரொம்ப வீக்கா அதே சமயம் எலெக்ட்ரிக் இம்பல்ஸ்க்கு வெரி ஹைலி ரியாக்டிவ்வா இருந்திருக்கு. அதே நேரம் அவரோட ஸ்கல் பின் பகுதில வெறும் ஜவ்வு மாதிரி தான் இருந்திருக்கு. நாட் கம்ப்ளீட்லி பார்ம்டு. இட் ஈஸ் ஸ்ட்ரேஞ்ச்”.

க்ளாரா சொல்லி முடிக்கவும் ஒன்றும் புரியாதவராய் அமர்ந்திருந்த டாக்டர்.ஆண்டர்சனுக்கு கவச உடைக்குள்ளும் வெகுவாய் வேர்த்திருந்தது தெரிந்தது.

அதே நேரம்.
பசிபிக் பெருங்கடலின், அதுவரையில் மனிதர்களால் கண்டறிந்திருக்கப்படாத, செயற்கைக்கோள் மற்றும் ரேடார் தொழில்நுட்பங்களில் அகப்பட்டிடா வண்ணம் நானோ காம்போசைட் தகடுகள் பொருத்தி மறைத்து உலகத்தோடு எவ்வித தொடர்பும் அதுவரையில் ஏற்படுத்தியிருக்கா வண்ணமான  ஒரு தீவில், தான் உருவாக்கியிருந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட மனிதர்களோடு தனது அடுத்த க்ளோனை உருவாக்கிக் கொண்டிருந்தார் டாக்டர்.சந்தோஷ் ஆண்டிமுத்து….!!

***

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button