பெருநேசந் தகுவி
சகா
நான் அனுப்பும் பிரிவுக்கான சமிக்கைகளையெல்லாம்
நீ கூசாமல்
கழுவிலேற்றிக் கொல்கிறாய்
குருதியொழுகும் அக்கழு கொண்டே
என் குறி புணரப் பார்க்கிறாய்
ஒவ்வொரு கூடலிலும்
நீ அழித்துக் கொண்டிருப்பது
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
முன்னோர் என் அணுவில் ஏற்றி வந்த
நிரல்களையன்றோ
நான் முன் போலில்லையடி மடச்சியென
கண்ணீரால் மடி நிறைக்கும் வெற்ப
உன் கன்னம் அழுந்தும் அடி வயிற்றில்
மயிர்கள் பூத்திருந்த இடத்திலெல்லாம்
இப்போது
முட்கள் மண்டிக்கிடக்கின்றனவே
இதற்கான காரணமென்றும் நீ
என்னையேதான் கை காட்டப் போகிறாயா?
யோசித்து விட்டு வருவதாக
உன்னிடம்
சொல்லிச் சென்ற அந்த இரவில்
கையில்
மாயக் குடுவையோடு தேடி வந்த
பேய்ச்சியொருத்தி
குப்பி திறந்து என் மீது தெளித்தவை
மந்திரத் துளிகள்
அப்போதே தீர்மானித்தேன்
உனைப் பிரிய முடிவு செய்த அந்த
தினத்தில்தான்
உலகைப் பிளக்கும் இடியொன்று மீண்டும்
இடித்தது
முதன்முறை அப்படியோர் இடி இடிக்கையில்
நான் தலை மகவாய்
என் தாய்க்கு ஜனித்திருந்தேன்
அவள் தன்
கண் துளைத்த மின்னல் கீற்றொளியில்
என் நகை கண்டு அரண்டு போனாளாம்
என் உச்சி தொட்டுத் தெறித்த அவ்விடி
தீர்மானமாய் சொன்னது
நான் காதலிக்கப் பிறந்தவள்
நான் காதலிக்கப் பிறந்தவள்
இதோ
பாலைக் கள்ளியாய் வறண்டிருந்த
என் மார்பில்
மீண்டும் கள்ளூறத் தொடங்குகிறது
இனி
நீ
உன் துயரம் கொப்பளிக்கும் இசையை
நீயே கேட்கத் தொடங்கு.
*****
அருமையான கவிதை. ஆழமான வரிகள்.