இரண்டு நண்பர்கள்
இம்முறை அவனிடத்தில் எக்ஸ்ட்ராவாக
ஒரு முழு போத்தல் மது கிடைத்தது
இரு கைகளிலும் இரு முழு போத்தல்கள்
இன்று இறைவன் தன் மீது
கருணைக் காட்டிவிட்டான் என்று
நினைத்துக் கொண்டான்
இரவு சரசரவென இறங்கிக் கொண்டிருந்தது…
தூரத்தில் இருந்த நண்பனை போனில் அழைத்தான்,
வருவதற்கு கடினம் என்றான் முந்தைய மூன்று நண்பர்கள் போலவே…
நண்பர்கள் இல்லாமல் அவன் குடித்ததில்லை
கவனமாக சீலிடப்பட்ட அப்போத்தல்களைப் பார்த்தான்
அவை பெரும் மாயங்களை தன்னுள் அடக்கிக் கொண்டிருந்தாற்போல் இருந்தன…
யாரேனும் வருகிறார்களா என்று பார்த்தான்
சாலை யாருமற்று நீண்டு கிடந்தது…
கண்ணில் தென்பட்ட பார் சிப்பந்தியும்
போதையில் சரிந்திருந்தான்,
நேரம் செல்லச் செல்ல கையில் இருந்த போத்தல்கள்
பெரும் சுமையாய் கணத்தன
இரவு நீண்டுகொண்டே இருந்தது…
கடைகள் அடைக்கப்பட்டுவிட்டன.
இரவின் அந்தகாரத்தில் அவன் அப்படியே சிலையாக நின்றிருந்தான்
நண்பர்களற்ற அப்பெருவெளி நரகமாக இருந்தது.
நா வறண்ட அந்நேரத்தில்தான்
கடவுள் தனது பணி முடிந்து அவன் எதிரே நடந்துவந்தார்,
உற்சாகமான அவன் கடவுளிடத்தில் ஒரு போத்தலை நீட்டினான்.
வாங்கிக் கொண்ட கடவுள் புன்முறுவலுடன் சொன்னார்
நண்பர்களின்றி நான் மட்டும் எப்படி மது அருந்துவது?
‘ச்சீயர்ஸ் நண்பா’ என்றார்.
நாளை அவன்
கடவுளைப் பார்த்தேன்
என்று சொல்லும்போது யார்தான் நம்புவார்கள்..?
*****