பூனை செய்த அட்டகாசம்
ஆதவன், மித்ரன், அமுதா, மருதாணி நான்கு பேரும் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். மருதாணி அவளுக்குப் பிடித்த குட்டி யானை பொம்மையை கையில் பிடித்தபடியே ஓடி விளையாடினாள். மாடி வீட்டில் இருந்த பூனை இவர்களை வேடிக்கை பார்த்தபடியே மெல்ல வாலாட்டிக் கொண்டிருந்தது.
விளையாடிக் கொண்டிருந்த மருதாணி வீட்டுக்கு முன் இருந்த டென்னிஸ் கோர்ட் வாசலில் பூத்திருந்த பூவைப் பார்க்க போனாள். அட அழகாய் இருக்கிறதே! அதைப் பார்த்தபடியே நின்றிருந்தபோது கையிலிருந்த யானை பொம்மையை ஆதவன் கேட்டான்.
“மருதாணி, உன் யானை பொம்மைய கொடேன். நானும் மித்ரனும் கொஞ்ச நேரம் விளையாடிட்டு தர்றோம்.”
“சரி இந்தாங்க. பத்திரமா வச்சு விளையாடிட்டு என்கிட்ட திரும்பக் கொடுக்கணும். எனக்கு ரொம்ப பிடிச்ச பொம்ம இது.”
“ம்ம் சரி”
ஆதவனும் மித்ரனும் பொம்மையை தூக்கிப் போட்டு பிடித்து விளையாட ஆரம்பித்தனர்.
“டேய்.. யார் கீழ போடறாங்களோ அவங்க அவுட்” என்றான் மித்ரன்.
“சரிடா”
இருவரும் கீழே போடாமல் விளையாடிக் கொண்டே இருந்தபோது திடீரென பூனை நடுவில் தாவியது. ஆளுக்கு ஒரு பக்கமாக ஓடினார்கள்.
கீழே விழுந்த யானை பொம்மையை பூனை தூக்கிக் கொண்டு தாவி ஓடிவிட்டது.
மித்ரன்: அச்சச்சோ. மருதாணி பொம்மைய பூனை தூக்கிட்டு போயிடுச்சுடா
ஆதவன்: அவ நம்மள நம்பி தானேடா கொடுத்தா. இப்ப என்ன பண்றது?
பூனை எங்கிருக்கிறது என்று தேடிப் பார்த்தார்கள். டென்னிஸ் கோர்ட்டின் கூரை மேல் உட்கார்ந்து, யானை பொம்மையை கடித்துக் குதறுவது போல் பார்த்துக்கொண்டிருந்தது.
ஆதவன்: அதுக்குள்ள அங்க போய் உக்காந்துருச்சுடா. அத எப்படி இப்ப கீழே கூப்பிடறது?
இருவரும் விழித்தபடி நின்றார்கள். அமுதாவும் எல்லாவற்றையும் பார்த்தபடி தான் நின்றிருந்தாள். இப்போது நான்குபேரும் கூடி வட்டமாக நின்று கொண்டனர்.
ஆதவன்: சரி, வழக்கம்போல நாம் எல்லாரும் ஒன்னு கூடிப் பேசி ஒரு முடிவுக்கு வரலாம். பிரச்சனை என்னன்னு நமக்குத் தெரியும்.
“இது நாம் விவாதிக்கும் நேரம்.
Brainstorm பண்ணலாம் வாங்க…
எல்லோரும் வாங்க…
எந்த ஐடியாவும் தவறானதில்ல
சிறிய ஐடியாவும் பெரிய மாற்றங்களுக்கு
காரணமாக மாறுமே!!
ஆம், இது நாம் விவாதிக்கும் நேரம்.”
க்ரூப் சாங் பாடி உற்சாகம் ஏற்றிக்கொண்டு எல்லோரும் களத்தில் இறங்கினார்கள்.
மித்ரன்: நாம ஏணி போட்டு மேல ஏறலாமா?
அமுதா: அதுக்கு முன்னாடி நம்ம வீட்டுப் பெரியவங்க கிட்ட அனுமதி கேக்கனும். சின்ன பசங்க தனியா ஏணிய பயன்படுத்தக்கூடாதுனு சொல்லிருக்காங்கல்ல.
மித்ரன்: சரி. அப்போ நாம அவங்களயே கூப்பிட்டு, ஏணில ஏறி எடுத்துத் தர சொல்லி உதவி கேப்போம்.
மித்ரன் ஓடிப்போய் அவனது அப்பாவிடம் விஷயத்தைச் சொல்லி ஏணியுடன் வந்தான். மித்ரன் அப்பா ஏணி போட்டு ஏற ஆரம்பித்தார். நடப்பதைப் பார்த்த பூனை, பொம்மையைத் தூக்கிக் கொண்டு நகர ஆரம்பித்தது. அவர் மேலே ஏற ஏற அது இன்னும் தள்ளிப்போனது. ஆனால் பொம்மையை விடாமல் தூக்கிக் கொண்டு போனது.
மித்ரன்: இது சரி வராது. வேறு ஏதாவது யோசிக்கலாம்.
வீட்டுக்கு போய் அம்மாவிடம் கருவாடு கேட்டு எடுத்து வந்தான் ஆதவன்.
ஆதவன்: ஹே பூனாச்சி… இங்க பாரு கருவாடு. வா வா வந்து யானைய கொடுத்துட்டு இத எடுத்துக்கோ…
பூனை கருவாட்டைப் பார்த்தபடியே மியாவ் மியாவ் என்று கத்தியதே தவிர, கீழே வரவில்லை.
ஆதவன்: இதுவும் சரி வராது போலயே!
மருதாணி: நாம எல்லாரும் பண்றத பாத்து பூனை பயப்படுது. நாம யோசிக்கற வரைக்கும் கொஞ்சம் தள்ளி இருந்து பாக்கலாம்.
எல்லோரும் பூனையை விட்டு கொஞ்ச தூரம் தள்ளி இருந்து பேச ஆரம்பித்தார்கள்.
அமுதா ஓடிப்போய் பூனை வளர்க்கும் மஹிமாவிடம் விஷயத்தைச் சொல்லிக் கூப்பிட்டு வந்தாள்.
மஹிமா: மிச்சு குட்டி. கீழ வாங்க செல்லம்.
பூனை: மியாவ்வ்வ்வ்வ்….
கத்தியதே தவிர கீழே வரவில்லை.
முயன்று பார்த்த மஹிமா அக்காவும் அவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டார்.
நால்வர் கூட்டணிக்கு மனம் சோர்வடைந்து விட்டது. எல்லோரும் அமைதியாக இருக்க ஆரம்பித்துவிட்டனர்.
இதை பார்த்துக்கொண்டிருந்த மித்ரன் அப்பா வந்து பேசினார்.
மித்ரன் அப்பா: முயற்சிய விடறது தான் தோல்வி. எல்லாரும் பொறுமையா யோசிச்சு பாருங்க. கண்டிப்பா உங்களால முடியும். ஒரு வேளை ஏதாவது உதவி வேணும்னா, நாங்க பண்ணுவோம். உங்களால முடியும்.
ஆதவன்: நாம எல்லாரும் தனித்தனியா முயற்சி பண்ணுனத சேர்த்து முயற்சி பண்ணி பாக்கலாமா?
மருதாணி: எப்படி அண்ணா?
ஆதவன்: ஏணியில 2, 3 படிக்கு ஒரு கருவாடு வைப்போம். கீழ இருந்து மஹிமா அக்கா கூப்பிடட்டும்.
ஆளுக்கு ஒரு வேலையாக எல்லாவற்றையும் தயார் செய்தார்கள்.
கீழிருந்து மஹிமா கூப்பிட, மெல்ல கருவாட்டை நோக்கி வந்தது.
ஏணிப்படிகள் சின்னதாக இருந்ததால், அது எடுக்க முயற்சிக்கும்போது கருவாடுகள் கீழே விழுத்த வண்ணம் இருந்தன. பொம்மையைக் கவ்வியபடி அடுத்தடுத்த கருவாட்டை நோக்கி பூனை நடந்தது.
கடைசியில் ஒரு வழியாக தரையில் இருந்த கருவாட்டை நோக்கி வந்தது பூனை. மஹிமா அக்கா பூனையை வேகமாகத் தூக்கிக்கொண்டு, பொம்மையை மருதாணியிடம் கொடுத்தார்.
“ஒற்றுமையால் சாதிக்க முடியும்.
சிறுவர்கள் சேர்ந்தாலே..
ஐடியாக்களைப் பகிர்ந்தாலே..
முயற்சிகள் செய்தாலே..
வெற்றிகள் கிடைக்குமே…”
பாடிக்கொண்டே மீண்டும் மகிழ்ச்சியாக மீண்டும் விளையாடத் தொடங்கினர்.
தொடரும்…