
கடலின் பெருமரங்கள் – ஒரு வேட்டையின் சாசனம்
ப்ளீஸ்டோசீன் காலகட்டம். பொதுவழக்கில் “ஐஸ் ஏஜ்” என்று அறியப்படுகிற இது “பெருவிலங்குகளின் காலம்” (Era of Giants) என்கிறார்கள் விஞ்ஞானிகள். பிரம்மாண்டமான சடை யானைகள், கத்திப்பல் பெரும்பூனைகள், பெரும் ஸ்லாத் கரடிகள், ஜைஜாண்டோபிதிகஸ் குரங்குகள், ஆரோக்ஸ் என்று அழைக்கப்படும் பிரம்மாண்ட மாடுகள், சடை காண்டாமிருகம் போன்ற பெருவிலங்குகள் உலகெங்கிலும் கோலோச்சின. ப்ளீஸ்டோசீன் காலகட்டத்தின் முடிவில், அதாவது 14,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு பேரழிவு நிகழ்வில், இந்த பிரம்மாண்ட விலங்குகள் கிட்டத்தட்ட முற்றிலும் அழிந்துபோயின.
மீதமிருந்த சில பெருவிலங்குகள், ஆங்காங்கே இருந்த தீவுப்பகுதிகளுக்குள் தங்களை சுருக்கிக்கொண்டு அங்கிருந்த சூழலுக்கு ஏற்றவாறு வாழத்தொடங்கின.
அப்படியே காலச்சக்கரத்தை சில ஆயிரம் ஆண்டுகள் ஃபாஸ்ட் ஃபார்வேட் செய்து பார்க்கலாம்.
வடக்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள பெரிங் தீவு. கடற்கரையில் சில பேர் ஒரு பெரிய ஈட்டியால் வேகமாக ஒரு கடற்பசுவின் முதுகைக் குத்துகிறார்கள், குத்துகிற வேகத்துக்குத் தொடர்பே இல்லாமல் மெதுவாக ஈட்டி உள்ளே இறங்குகிறது, கொஞ்ச நேரத்தில் கடற்பசு கரைக்கு இழுத்து வரப்பட்டு வெட்டப்படுகிறது.
அது ஒரு வரலாற்று நிகழ்வு என்று அந்த வேட்டையாடிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அந்த கடற்பசு இனத்தைச் சேர்ந்த கடைசி உயிரினம் அது. அத்துடன் அந்த இனம் அழிந்துபோனது. ப்ளீஸ்டோசீன் காலகட்டத்தின் பிரம்மாண்ட இயற்கைப் பேரழிவையும் தாக்குப் பிடித்து பெரிங் தீவில் தன் வாழ்வை அமைத்துக்கொண்ட கடற்பசு, மனிதர்களை எதிர்கொள்ள முடியாமல் முற்றிலும் அழிந்தது.
இடைப்பட்ட சில ஆயிரம் வருடங்களில் நடந்தது என்ன?
உண்மையில் இந்த வரலாற்றின் காலகட்டம் சில ஆயிரம் வருடங்கள் கொண்டது அல்ல, சில நூறு வருடங்கள் கொண்டதும் அல்ல. சரியாக சொல்லப்போனால் இருபத்தி ஏழே ஆண்டுகளில் நடந்து முடிந்த ஒரு பேரழிவு இது. “Fastest Extinction in the world” என்று இதை அழைக்கிறார்கள் அறிவியலாளர்கள்.
காலக்கடிகாரம் நடுங்கியபடி அல்லாடிக்கொண்டிருக்கிறது. அதை சரியாக 1741 ஜூன் மாதத்துக்குத் திருப்புவோம். கம்சட்கா தீபகற்பத்திலிருந்து இரண்டு கப்பல்கள் கிளம்புகின்றன. விடஸ் பெரிங் என்பவர் தலைமையில் கிளம்பிய இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம், சைபீரியாவுக்கும் வட அமெரிக்காவுக்கும் இடையில் ஒரு வழித்தடத்தைக் கண்டுபிடிப்பதுதான். பயணத்தின் இயற்கையியலாளராக ஜார்ஜ் ஸ்டெல்லர் என்ற ஜெர்மானியர் நியமிக்கப்பட்டிருந்தார்.
கப்பல்கள் வேகமாக கடற்பகுதிகளை அலசி ஆராய்ந்தன. அமெரிக்காவுக்குச் சென்று தன்னுடைய ஆய்வுகளை மேற்கொண்டபிறகு, ” பத்து மணி நேரம்தான் டைம், அதுக்குள்ள உங்க அறிவியல் ஆராய்ச்சியை முடிச்சிடணும்” என்று ஸ்டெல்லருக்கு அவகாசம் தருகிறார். தரப்பட்ட சில மணி நேரங்களில் ஒரு புது பறவை இனத்தை ஸ்டெல்லர் கண்டறிகிறார்! திரும்பி வரும் பயணத்தில் வெற்றிகரமாக வேலையை முடித்த இரு கப்பல்களும் திடீரென்று பிரிந்துவிட, ஸ்டெல்லரின் கப்பலில் இருந்த பலரை சொறிகரப்பான் வியாதி (Scurvy) தாக்கத் தொடங்கியது. வைட்டமின் சி குறைபாட்டால் வரக்கூடிய இந்த வியாதியால் பலர் செயலற்றுப் போனார்கள். களப்பணியின்போது தான் சேகரித்து வைத்திருந்த பழங்களையும் மூலிகைகளையும் சாப்பிடுமாறு ஸ்டெல்லர் எவ்வளவோ கூறியும், மாலுமிகள் அதை ஏற்காமல் அவரை எள்ளி நகையாடினர். கப்பலை செலுத்த ஆள் தட்டுப்பாடு ஏற்பட்டு இணைக்கப்பலையும் பிரிந்ததில், கிட்டத்தட்ட ஒரு விபத்து போன்ற நிகழ்வில் கப்பல் ஒரு ஆளில்லாத தீவில் சென்று கரை ஒதுங்கியது.
அந்தத் தீவில் இருந்த ஒரு விலங்குக்கு அது ஒரு பேரழிவின் தொடக்கப் புள்ளி.
கப்பலின் தலைவரும் ஸ்கர்வியால் இறந்துவிட, உணவால் தன்னை பாதுகாத்துக்கொண்ட ஸ்டெல்லர், மற்றவர்களுக்கு சிகிச்சை கொடுத்து நோயிலிருந்து மீட்கும் வேலையைத் தொடங்கினார். ஒருநாள் கடற்கரையில் அலைந்துகொண்டிருக்கும்போது, பிரம்மாண்ட யானை ஒன்று படுத்துக் கிடப்பதுபோலத் தெரியவே, என்னவென்று அருகில் சென்று பார்த்த ஸ்டெல்லர், அது ஒரு கடல் பசு என்று கண்டறிந்தார்.
அதன் உடலைக் கூராய்வு செய்து ஆராய்ச்சி செய்ய உதவுமாறு கப்பலைச் சேர்ந்த மற்றவர்களிடம் ஸ்டெல்லர் கேட்க, கொடுமையான நோயிலிருந்தும் அந்தத் தீவிலிருந்தும் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்ற முனைப்பில் கப்பல் கட்டும் யோசனையில் இருந்த மற்றவர்கள் அவருக்கு ஒத்துழைக்கவில்லை. புகையிலையை லஞ்சமாகக் கொடுத்து அவர்களை ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடுத்தினார் ஸ்டெல்லர்!
Steller’s Sea Cow என்ற ஒரு வகை கடல் பசு முதல்முதலில் அறிவியலின் வெளிச்சத்தை ஏந்திய நிகழ்வு இது. 30 அடி நீளமும் பத்தாயிரம் கிலோ எடையும் கொண்ட இந்த விலங்கு, இப்போது உலகக் கடல்களில் உலாவிவரும் மானடி (Manatee) மற்றும் ஆவுளியா (Dugong) ஆகிய விலங்குகளின் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆனால் இவற்றை விட மூன்று மடங்கு பெரிய ஸ்டெல்லர் கடற்பசு, திமிங்கிலங்களல்லாத கடல் பாலூட்டிகளிலேயே மிகப்பெரியதாகக் கருதப்படுகிறது. “பாசிகளை உண்ணுகிற தாவர உண்ணியான கடற்பசு, கூட்டமாக வாழும் தன்மை உடையது” என்று எழுதுகிறார் ஸ்டெல்லர்.
கடல் நாய், கடற்சிங்கம், சீல் என பார்ப்பதை எல்லாம் வேட்டையாடிக்கொண்டிருந்த ஸ்டெல்லரின் கடற்பயணிகள், இந்த கடற்பசுக்களும் வேட்டையாடத் தகுந்தவையா என்று ஆராய்ந்தனர். ஸ்டெல்லர் கடற்பசுக்கள் கடற்பரப்பில் மேலேயே மிதந்துகொண்டிருந்தன என்பதால், அவற்றை ஆழம் வரை சென்று தேடிப்பிடிக்கத் தேவையில்லை என்பதும், ஒரு கடற்பசு மாட்டிக்கொண்டால் இன்னொரு கடற்பசு அக்கறையோடு அதை விடுவிக்க வந்துவிடும் என்பதால் எளிதில் இவற்றை ஒன்றுதிரட்டலாம் என்பதும் பெரிய நன்மைகளாக இருந்தன. ஆனால் வேட்டையாடுபவர்களுக்குப் பெரிய இம்சையாக இருந்தது கடற்பசுவின் தோல்.
“கிட்டத்தட்ட ஒரு மரத்தின் பட்டை அளவுக்கு தடிமன் கொண்ட கடினமான தோல் அது” என்று எழுதுகிறார் ஸ்டெல்லர். பிற்கால சூழல் எழுத்தாளர்கள், ஸ்டெல்லர் கடற்பசுக்களை “கடலின் மரங்கள்” என்கிறார்கள். தடிமனான தோலைத் தாண்டி ஈட்டியைக் குத்தி எப்படி இந்த விலங்கைக் கொல்வது என்று புரிந்துகொள்ளவே கப்பல் பயணிகளுக்கு சில காலம் பிடித்தது.
அவர்கள் யுத்தியைக் கற்றுத் தேர்ந்தவுடன் வேட்டை தொடங்கியது.
அடுத்த 27 ஆண்டுகள் ஸ்டெல்லர் கடற்பசுக்கள் அதிரடியாக வேட்டையாடப்பட்டன. பொதுவாக ஒரு விலங்கின் வேட்டைக்கு உச்சவரம்பு உண்டு. ஆனால் “உச்சவரம்பையும் மீறி 7 மடங்கு கூடுதல் எண்ணிக்கையில் இவை வேட்டையாடப்பட்டன” என்கிறது ஒரு அறிவியல் கட்டுரை. “ஒரு போர் நடப்பது போல, ஒரு புயல் வந்து எல்லாவற்றையும் தடயமின்றி அழித்தொழிப்பதுபோல இந்த வேட்டை நிகழ்த்தப்பட்டது” என்று வரலாற்றாசிரியர்கள் விவரிக்கிறார்கள்.
சராசரியாக ஒரு கடற்பசுவின் உடலில் உள்ள இறைச்சி, 33 பேர் கொண்ட ஒரு குழுவுக்கு ஒரு மாதம் உணவளிக்கப் போதுமானதாக இருக்குமாம்! தவிர, இதன் பால், பாலிலிருந்து கிடைக்கும் கடற்பசு வெண்ணெய், இதன் கொழுப்புப் படலம், தடிமனான தோல் எல்லாமே பயன்படுத்தப்பட்டன. “ஹாலந்தின் பசு வெண்ணெயைப் போல இந்தக் கொழுப்பு ருசியாக இருக்கிறது, இதை சூடுபடுத்தினால் பாதாம் எண்ணெயின் மணம் வீசுகிறது, இதன் இறைச்சி மிகவும் சுவையாக இருக்கிறது” என்று சப்புகொட்டி எழுதினார் ஸ்டெல்லர். ஒரு படகைக் கட்டிக்கொண்டு தீவிலிருந்து தப்பித்து எல்லாரும் ஒருவழியாக வீடு போய் சேர்ந்ததும், கடற்பசுவை பார்த்த தன்னுடைய அனுபவங்களைத் தொகுத்து எழுதி, கடற்பசு இறைச்சியின் புகழை (?!) எல்லாரிடமும் கொண்டு போய் சேர்த்தார் ஸ்டெல்லர். பயணத்தலைவர் விடஸ் பெரிங்கின் நினைவாக அந்தத் தீவுக்கு பெரிங் தீவு என்று பெயர் சூட்டப்படுகிறது.
வட அமெரிக்காவில் இருக்கும் விலங்குகளின் தோலுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்த காலகட்டம் அது. நியூயார்க் ஃபேஷன் வீக், வோக் பத்திரிக்கை போன்றவை வருவதற்கு முந்தைய காலகட்டம்தான் என்றாலும், உலகளாவிய ஃபேஷன் துறையில் விலங்குத்தோல் சந்தையின் மையமாக அமெரிக்கா இருந்தது. கலிஃபோர்னியாவின் புகழ்பெற்ற தங்கவேட்டை கோல்ட் ரஷ்ஷுக்கு இணையாக, இது “Fur Rush” என்று அழைக்கப்படுகிறது. பீவர்கள், கடல் நாய்கள் போன்ற விலங்குகளை வேட்டையாட அடிக்கடி வட அமெரிக்காவுக்கு சென்று வந்த ரஷ்யர்கள், பெரிங் தீவில் நிறுத்தி சிலபல கடற்பசுக்களை சும்மா வேட்டையாடுவதை ஒரு முக்கியப் பொழுதுபோக்காக வைத்திருந்தார்கள்.
பொதுவாக 18ம் நூற்றாண்டு இயற்கையியலாளர்கள், “இயற்கை என்பது அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம்” என்ற மனநிலை கொண்டவர்கள், அதே போன்ற எண்ணத்துடன் ஸ்டெல்லர் எழுதிய குறிப்புகளைப் படித்தவர்கள் வரம்பின்றி வேட்டையில் ஈடுபட்டனர். தேவைக்கு மீறிகூட பல நேரங்களில் கடற்பசுக்கள் கொல்லப்பட்டன. தொழிற்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில், வெறும் ஈட்டியையும் கயிறுகளையும் மட்டுமே வைத்துக்கொண்டு இவர்கள் நடத்திய தொடர் வேட்டையில், கண்டுபிடிக்கப்பட்டு இருபத்தி ஏழே ஆண்டுகளில் ஒரு இனம் அழிக்கப்பட்டது.
இவ்வளவு விரைவாக இந்த இனம் அழிந்ததற்கு என்ன காரணம்?
வேட்டையைத் தவிரவும் சில நுணுக்கமான காரணங்கள் உண்டு என்கிறார்கள் சூழலியலாளர்கள்.
- கடற்பசுக்களின் இனப்பெருக்க விகிதம் குறைவு, வளர்சிதை மாற்றம், குட்டிகளின் எண்ணிக்கை, வளர்ச்சி விகிதம் எல்லாம் குறைவான இனங்கள் இவை. நிலத்தில் இவற்றை யானைகளோடு ஒப்பிடலாம். இதுபோன்ற விலங்குகளை K selected species என்பார்கள். இந்த வகை விலங்குகள் ஓரளவு வேட்டையாடப்பட்டாலே முற்றிலும் அழிந்துவிடும் ஆபத்து உண்டு.
- விலங்குகளின் தோலை முன்வைத்து நடந்த சந்தை, கடல்நாய்களையும் (Sea otters) குறிவைத்தது. பெரிங் தீவில் நடத்தப்பட்ட தொடர் கடல் நாய் வேட்டைகளால் கடல்நாய்களின் எண்ணிக்கை குறைந்தது. ஆகவே, கடல்நாய்களின் இரையான கடற்பரட்டை (Sea urchin) எண்ணிக்கை கிடுகிடுவென்று உயர்ந்தது. இவை வேகமாக வளர்ந்து, அந்தக் கடற்பகுதியில் இருந்த பாசிகளை உண்டு அழித்தன. பாசிகள் அழிந்துபோனதால் இரை இல்லாமல் கடற்பசுக்கள் கடும் அழுத்தத்தை சந்தித்தன. உணவு இல்லாத சூழலில் வேட்டையும் கூடுதலாக இருந்ததால், இவை விரைவில் அழிந்தன.
வேறு சில சூழல் ஆராய்ச்சியாளர்களோ, “ஸ்டெல்லர் கண்டுபிடித்தபோதே 2000 கடற்பசுக்கள்தான் இருந்தன என்று ஒரு கணக்கு சொல்கிறார்கள், ஆக இவை ஏற்கனவே அழிவின் விளிம்பில் இருந்திருக்கின்றன” என்கிறார்கள். “ப்ளீஸ்டோசீன் அழிவிலிருந்து தப்பிப் பிழைத்து அவை சிறிய ஒரு தீவில் வாழத் தொடங்கியபோதே அவை மரபணு ரீதியாக மிகவும் குறுகிவிட்டன, ஆகவே அவற்றின் அழிவுக்கான டைம் பாம் ஏற்கனவே இயங்கத் தொடங்கிவிட்டது” என்று விளக்கம் தருகிறார்கள்.
அது சரியா இல்லையா என்று அறிவியலால் இப்போது சரிபார்க்க முடியாது. ஒரு வாதத்துக்காக அதை உண்மை என்று வைத்துக்கொண்டாலும், சில நூறு ஆண்டுகளில் வெடித்திருக்க வேண்டிய அந்த டைம்பாமை 27 ஆண்டுகளில் வெடிக்கவைத்த பெருமை மனிதர்களையே சேரும்.
இன்னொருபுறம் கடல்நாய்களின் வேட்டையால் ஏற்பட்ட விளைவாக மட்டுமே இதைப் பார்த்தால்கூட, அந்த அழுத்தமும் மனிதனால் உருவாக்கப்பட்டதுதான். நேரடியாக கடற்பசுக்களை வேட்டையாடாமல், கடற்பசுவின் இரையைப் பாதுகாக்கும் கடல்நாய்களை மனிதர்கள் வேட்டையாடி அழித்திருக்கிறார்கள்.
ஸ்டெல்லர் கடற்பசுவின் அழிவில் பல கூடுதல் சோகங்கள் உண்டு. ஏதேதோ காரணங்களால் இந்த இனம் ஒருமுறை கூட பாடம் செய்யப்படவில்லை! நம்மிடம் மீதம் இருப்பதெல்லாம் வெறும் ஓவியங்களும் எலும்புக்கூடுகளும் மட்டுமே. அதிலும், இந்த கடற்பசுவை நேரில் பார்த்து, அதன் அடிப்படையில் ஒரே ஒரு ஓவியம் தான் வரையப்பட்டிருக்கிறது. பாஸ்கல் என்பவர் வரைந்த அந்த ஓவியம், கிட்டத்தட்ட ஒரு குழந்தையின் கிறுக்கலைப் போலத்தான் இருக்கிறது. இப்போது அறிவியல் நூல்களில் உலா வரக்கூடிய முப்பரிமாணத்தன்மை கொண்ட வண்ண ஓவியங்கள் எல்லாமே குறிப்புகள் மற்றும் எலும்புக்கூடுகளின் அடிப்படையில் கற்பனை கலந்து வரையப்படும் புனைவுகள்தான்! மனித இனம் கண்ணாலேயே பார்த்திராத டைனோசர்களுக்கு நாம் கற்பனை கலந்து உருவம் தருகிறோம் என்றால் பரவாயில்லை, 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அழிந்த ஒரு உயிரினத்துக்கும் இதே நிலைதான் என்ற சோகத்தை எங்குபோய் சொல்வது?
ஸ்டெல்லர் கடற்பசுக்களின் அழிவால், வடக்கு பசிபிக்கில் உள்ள கெல்ப் பாசிக்காடுகளில் கடல்நாய்களுக்கும் பிற சிப்பி கிளிஞ்சல்களுக்கும் உள்ள ஒரு மென் உறவு கெட்டுப்போனது. அதன்பிறகு அவை இன்றுவரை ஒன்றோடொன்று முரண்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. முன்னொரு காலத்தில் இந்த உறவுப்பின்னல் எப்படி இருந்தது, கடற்பசுக்கள் அதை எப்படி வலுவாக்கின என்பதை விளக்கும் அறிவியலாளர்கள், “கெல்ப் காடுகள் அழிவதைப் பற்றி இப்போது வேகமாக ஆராய்கிறோம், ஆனால் அந்த அழிவின் விதை எப்போதோ தூவப்பட்டுவிட்டது” என்கிறார்கள். 18ம் நூற்றாண்டில் அழிந்த கடற்பசு, இன்னும் கடல்சூழலில் அதிர்வலைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதாகவும் இதைப் பார்க்கலாம், ஒரு விலங்கின் திடீர் அழிவு ஒரு சூழலை எப்படி நிரந்தரமாக சீர்குலைக்கிறது என்பதை இது காட்டுகிறது.
ஸ்டெல்லர் கடற்பசுக்கள் பற்றிய பல ஆராய்ச்சிகள், அவற்றின அழிவுக்குப் பின்னரே நடத்தப்பட்டன. “இவை சாப்பிடுவதிலேயே மும்முரமாக இருக்கின்றன, ஆகவே இவை பாசி இருக்கும் கடற்பரப்பிலேயே சுற்றிக்கொண்டிருக்கின்றன” என்று ஸ்டெல்லர் எழுதுகிறார். அவருக்குப் பின்னால் வந்த விஞ்ஞானிகள், கடற்பசுக்களின் உடலே மேற்பரப்பில் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டவை என்றும், அவை நினைத்தாலும் அவற்றால் ஆழத்துக்கு செல்ல முடியாது என்றும் கண்டறிந்தனர். இவற்றின் தடிமனான தோல், நான்கு அங்குலம் தடிமன் கொண்ட கொழுப்பு, சிறிய துடுப்புகள் ஆகியவை எல்லாமே குளிரான கடற்பகுதிகளில் வாழ்வதற்கான தகவமைப்புகள் என்பதும் கண்டறியப்பட்டது. கடற்பசு குடும்பத்திலேயே மிகவும் குளிர் நிறைந்த கடல்நீரிலும் தாக்குபிடிக்கக் கூடிய ஒரே இனம் இதுதான் என்பதை ஒரு ஆய்வுக்குழு கண்டுபிடித்தது. இவ்வளவு ஏன், இந்தக் கடற்பசுக்களின் எலும்புக்கூட்டிலிருந்து எலும்புப்பொடிகளை எடுத்து மரபணு ஆய்வு செய்து 2021ம் ஆண்டில் ஒரு நிபுணர் குழு கட்டுரை வெளியிட்டிருக்கிறது! எல்லாமே அழிவுக்குப் பின் கிடைத்த தகவல்கள்!
பேராசையும் அறியாமையும் நிறைந்த இந்த நிகழ்வினால் ஏதாவது நன்மை உண்டா என்பதைக் கண்டுபிடிக்கத் தேவையில்லைதான். ஆனாலும் ஒரு சிறு நன்மை இருக்கிறது. இந்தக் கடற்பசுவின் அழிவுக்குப் பிறகுதான், விலங்குகளின் அழிவு (Extinction) ஒரு முக்கியப் பிரச்சனையாக கவனிக்கப்பட்டது. 1812ல் “நம்மிடமிருந்து அழிந்த விலங்குகள்” என்ற பட்டியலில் இதை சேர்க்கிறார் ஜார்ஜ் ஹென்ரிச் வான் லாங்க்ஸ்டார்ப் என்ற அறிஞர். விலங்குகளின் அழிவு பற்றிய விவாதங்கள் தொடங்கின. “கடற்பசுவின் அழிவு என்ற அந்த நிகழ்வு, விலங்குகளின் அழிவு பற்றிய நவீன அறிவியலின் தொடக்கப்புள்ளி” என்கிறார் ரயன் டக்கர் ஜோன்ஸ் என்ற சூழலியல் வரலாற்றாசிரியர். வரம்பற்ற வேட்டை தவறு என்பது போன்ற விஷயங்களும் பொது விவாதங்களில் முன்வைக்கப்பட்டன. “இயற்கை என்பது அள்ள அள்ளக் குறையாதது” போன்ற கருத்துக்கள் மாறத் தொடங்கின
“குளிர் என்னை பாதிக்கவில்லை
அதைத் தாங்கிக்கொள்ளுமாறு நான் உருவாக்கப்பட்டிருக்கிறேன்
வேட்டைக்காரர்கள்
அதிகமான வேட்டைக்காரர்கள்
தாங்க முடியாத எண்ணிக்கையில் வேட்டைக்காரர்கள்
இதைத் தாங்கிக்கொள்ளுமாறு நான் உருவாக்கப்படவில்லை
குட்டிகளைப் பாதுகாக்கவேண்டும்
இணையைப் பாதுகாக்கவேண்டும்
காலம் போதவில்லை
தாமதமாகிவிட்டது”
என்று கடற்பசுவின் பார்வையில் எழுதப்பட்ட ஒரு கவிதை உண்டு. உணவுக்காக மட்டுமே இது வேட்டையாடப்பட்டிருந்தால், பேராசை தவிர்க்கப்பட்டிருந்தால் இந்த அழிவுநிலை வந்திருக்காது என்பதே சூழலியலாளர்களின் கருத்து.
கடற்பசுக்களின் அழிவு எப்போதோ நடந்த ஒரு நிகழ்வு, இப்போதும் பல கடல் உயிரிகளை நாம் அழிவின் விளிம்பில் தள்ளிக்கொண்டுதான் இருக்கிறோம். அவற்றில் ஒரு விலங்கு முக்கியமானது, அது என்ன இனம்?
தொடரும்…