பூபதிக்கு வழக்கமாக இருபது தேதிக்கு மேல்தான் பற்றாக்குறை வரும். பிப்ரவரி மாதம் வருமான வரி பிடித்து விடுவதால் பதினைந்தாம் தேதிக்குள் சம்பளப் பணம் தீர்ந்து விட்டது. இனி வரும் பதினைந்து நாட்களை எப்படி ஓட்டுவது. யாரிடமேனும் கடன் வாங்க வேண்டிவருமா, இல்லை வழக்கம் போல ஏதேனும் நகையை அடமானம் வைத்து சமாளித்துக் கொள்வோமா என்ற எண்ணத்தில் ஆழ்ந்தான்.
கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக ஒவ்வொரு மாதமும் இது தான் நிலையென்றானது. இது குறித்து அவன் மனைவியிடம் புலம்பும் போதெல்லாம் தானும் வேலைக்குச் செல்கிறேன் என்பாள். ஆனால் பூபதிக்கு அவளை வேலைக்கு அனுப்புவதில் தற்சமயம் விருப்பமில்லை. அவர்களுடைய குழந்தைக்கு இப்போது தான் நான்கு வயதாகிறது. அந்தக் குழந்தையை நன்றாக கவனித்துக் கொண்டால் போதும் என்பான். அவளோ உங்கள் அம்மா வீட்டில் தானே இருக்கிறார் அவர் குழந்தையைப் பார்த்துக் கொள்ளட்டும் என்பாள். ஆனால் பூபதியால் வயதான அம்மாவிடம் குழந்தையை விட்டுச் செல்ல ஏனோ மனம் ஒப்பவில்லை. தன் குழந்தை குறைந்த பட்சம் ஐந்து வருடங்களேனும் தாயின் அரவணைப்பிலேயே வளர வேண்டும் என நினைப்பான். அவனின் மனைவிக்கும் அது ஏற்புடையது தான் என்றாலும் மாதமாதம் பூபதி புலம்புவதும், அடகு வைக்கப்படும் நகைகள் திருப்பப்படாமல் இருப்பதையும் நினைத்தால் தானும் வேலைக்கு போனால் கொஞ்சம் கஷ்டம் குறையலாம் என நினைப்பாள்.
மனைவியிடமிருந்த சில்லறை நகைகள் எல்லாம் மீட்கப்படாமல் இருப்பதால் அவனின் அம்மா தன்னுடைய கம்மலைக் கழட்டிக் கொடுத்தாள். பூபதிக்கு வயதான அம்மாவின் கம்மலை வாங்குவதை குறித்து தயக்கமாக இருந்தது. அவளோ “நான் வீட்டில் தானே இருக்கிறேன். கஷ்டத்திற்கு இல்லாத நகை எதுக்குப்பா. நீ வைத்து இந்த மாதத்தை சமாளி” என்றாள்.
அம்மாவிடமிருந்து கம்மலை வாங்கும் போது பூபதியின் கை நடுங்கியது. இதை எப்போது திருப்பித் தரப் போகிறோம். அடுத்த மாதம் எப்படியாவது திருப்பி விட வேண்டும் என்று நினைத்தான்.
அடகுகடைக்கு முதன்முதலில் எப்போது போனோம் என்று பூபதி யோசித்தான். அவன் பொறியியல் இறுதியாண்டின் கடைசி பருவத்திற்கான கட்டணம் கட்ட பணமில்லை என்ற போது அம்மா அழைத்துச் சென்றாள். ஒவ்வொரு வருடக் கட்டணத்திற்கும் அவளின் ஒவ்வொரு நகையை அடகுவைத்ததால் அவளிடம் மிஞ்சி இருந்தது இரண்டு பவுன் தாலியும் கொடியும் மட்டும் தான். வெட்டுக்கிளியின் உடலையொத்த தாலியோடு நான்கு தனித்தனி குண்டுகளை மஞ்சள் கயிற்றில் கோர்த்து அதை கோதுமை வடிவ தங்க சைனில் கட்டி அணிந்திருப்பாள். பூர்வீக நிலத்தை விற்க வேண்டிய சூழல் வந்த போது அந்த நிலத்தின் ஞாபகமாய் அப்பா செய்து போட்டது இந்த தாலியும் கொடியும். அதையும் அடகு வைத்து விடலாம் என்று சொன்ன போது பூபதி நடுங்கிப் போனான். ஆனால் விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கிற பெற்றோரால் இதைத் தவிர பணம் புரட்டுவதற்கான வழியில்லை என்பதால், அடகுகடைக்குப் போனாள்.
வழக்கமாக அப்பா தான் அடகுவைப்பார். ஆனால் தாலியையும் கொடியையும் அடகு வைப்பதில் அவருக்கும் சிறுதயக்கம் இருந்ததால், அம்மாவையே போகச் சொல்லி விட்டார். அவள் தனியாகச் செல்ல வேண்டாம் என பூபதியையும் அழைத்துச் சென்றாள். அடகு கடைக்காரர் தாலியை அடமானம் வாங்க மறுத்துவிட்டார். ஆனால் அது கோர்க்கப்பட்ட கொடியை மட்டும் வைத்துக் கொள்ள சம்மத்தித்தார். மகனின் படிப்புக்காக வைத்தே ஆக வேண்டும் என்று பூபதியின் அம்மா கெஞ்சிக் கேட்டதால், தாலியை விற்க கூடச் செய்யலாம், ஆனால் அடமானம் வைக்கக் கூடாது என அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். அதைக் கேட்டதும் அப்பாவிடம் கூட கலந்துக் கொள்ளாமல் விற்பதற்கு சம்மதித்து விட்டாள். பூபதி வேண்டாம் என்று சொன்ன போதும் அவள் கேட்கவில்லை. “நீ படிச்சு வேலைக்கிப் போய் சம்பாரிச்சு அம்மாவுக்கு இதேமாதிரி செஞ்சு போடு” என்று சொன்னாள். அந்த பணத்தை பூபதியிடம் கொடுத்து சரிப்பார்க்கச் சொன்ன போது கைநடுக்கத்தோடு தான் வாங்கினான்.
அந்த இரவு அவனால் தூங்க முடியவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பில் இன்னும் பொறுப்புடன் படித்து அரசுக் கல்லூரியில் சேர்ந்திருக்கலாம். குறைந்த மதிப்பெண் எடுத்து சுயநிதிக் கல்லூரியில் சேர்ந்து பெற்றோரைக் கஷ்டப்படுத்துகிறோமே என தன்னைத் தானே நொந்துக் கொண்டான். அம்மா சொன்னது போல நல்ல வேலைக்குச் சென்று இதைப் போல இரண்டு மடங்கு நகைகளை அம்மாவுக்குச் செய்து போட வேண்டும் என்று நினைத்தான்.
பூபதி கல்லூரியில் ஓரளவுப் படிக்கக் கூடிய மாணவன் தான். இதுவரை அரியர் எதுவும் வைக்கவில்லை. அறுபது சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தான். ஆனாலும் அடகுக்கடை அனுபவத்திற்குப் பிறகு இன்னும் அதிக அக்கறையோடு படித்தான். படிப்பை முடித்ததும் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை கிடைத்தது. ஆனால் தன்னுடைய தேவைக்கு எடுத்துக் கொண்டு சொற்பப் பணத்தைதான் அனுப்ப முடிந்தது. இந்த வேலையிலேயே தொடர்ந்தால் தன்னுடைய எதிர்காலம் ஒன்றுமில்லாமல் போகிவிடும் என்று நினைத்தவன், வேலையை விட்டான். டிஎன்பிஎஸ்சி கோச்சிங் கிளாசில் சேர்ந்தான். இது குறித்து வீட்டிற்கு சொன்ன போது, அவன் அப்பா திட்டினார். வேலைக்குப் போய் கொண்டே படிக்க வேண்டியது தானே என்றுச் சொன்னார். ஆனால் அம்மா தான் அவனின் முடிவுக்கு ஆதரவாக இருந்தாள். “பணத்துக்கு நான் ஆச்சு. நீ என்ன படிக்க வேண்டுமோ படிப்பா” என்றாள்.
இந்த முறை கையில் நகைகள் எதுவும் இல்லாததால் வீட்டு பட்டாவை அடகுவைத்து பணம் அனுப்பி வைத்தாள். இதை அறிந்தபோது பூபதி மிகுந்த குற்றவுணர்வுக்கு ஆளானான். எப்படியாவது படித்து ஏதேனும் வேலை வாங்கி விட வேண்டும் என்ற எண்ணம் அவனை ஓயாமல் துரத்திக் கொண்டிருந்தது. ஆனாலும் அவன் இரண்டு முறை தேர்வு எழுதியும் வெற்றி பெற முடியாமல் போனது. இரண்டு முறையுமே கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு இரண்டு மூன்று மதிப்பெண் குறைவாகவே பெற்றிருந்தான். மிகக் கவனமாக படித்தும் வேலை வாங்க முடியவில்லையே, பேசாமல் மீண்டும் ஏதேனும் வேலைக்கே போய் விடலாமா என யோசித்தான்.
அதை அவன் அம்மாவிடம் சொன்ன போது “ஒரு வருடம் தானே ஆகிறது. இன்னொரு வருடம் முயற்சி செய்து பாருப்பா” என்றாள். ஆனாலும் இந்த முறை எந்தக் கோச்சிங் கிளாசுக்கும் செல்லாமல், இருக்கும் மெட்டீரியல்களை வைத்து சுயமாகவே படிப்பது எனத் தீர்மானத்தான். தனியறை எடுத்துக் கொண்டு இன்னும் தீவிரமாகப் படித்தான். மாதாமாதம் வீட்டிலிருந்து பணம் வந்துக் கொண்டிருந்தது. இந்த பணத்தை அனுப்புவதற்கு பெற்றோர் என்ன செய்கிறார்களோ என்ற நினைப்பு அவனைக் குற்றவுணர்வுக்குத் தள்ளும். கடினமாகப் படித்தான். இந்த முறை தேர்வு எழுதியதில் குரூப் டூவில் பாஸ் செய்தான்.
சேலத்தில் அரசு கருவூலத்தில் வேலை கிடைத்தது. முதல்மாத சம்பளத்தை வாங்கிப் பெற்றோரின் கையில் கொடுத்தபோது அவனின் அம்மா மிகவும் சந்தோசப்பட்டாள். உள்ளூர் சாமிகளில் தொடங்கி பழனி முருகன் வரைக்கும் கொடுத்த காணிக்கையிலேயே சம்பளம் கரைந்துப் போனது. அடுத்தடுத்த சம்பளத்தில் படிக்க வாங்கியிருந்த கடன்களைக் கட்டுவதற்கே சரியாக இருந்ததால் அவனால் அம்மாவின் தாலிக்கொடியை புதிதாக செய்து போட முடியவில்லை. இரண்டாவது வருடத்தில் கடன்களையும் அடமானத்திலிருந்த நகைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக மீட்டதும், அவனின் தங்கைக்கு வரன் அமைந்து விட்டது. அம்மாவின் நகைகளோடு மீண்டும் கடன் வாங்கி புதிய நகை எடுக்கவும் திருமணச் செலவுகள் செய்யும்படி ஆனது. பூபதியும் அவன் அம்மாவும் தனியாக இருக்கும் போது இது குறித்துச் சொல்லி புலம்புவான். அம்மாவின் கழுத்திலிருக்கும் மஞ்சள் கயிறை தன்னால் தங்கமாக்க முடியவில்லையே என ஏங்குவான். “விடுப்பா வயிசாகிப் போச்சுல்ல. இனி நாங்க எப்படியிருந்தா என்ன நீங்க நல்லா இருந்தா சரி” என்பாள்.
தங்கையின் திருமணத்திற்கு வாங்கிய கடன்களை அடைத்து முடிப்பதற்குள்ளேயே பூபதியின் திருமணத்தைப் பற்றிப் பேச ஆரமித்தார்கள். இப்போது என் திருமணத்திற்கு என்ன அவசரம் என்றுச் சத்தம் போட்டான். ஆனால் பூபதியின் அத்தை உடல் நிலை சரியில்லாமல் இருந்தால், அவள் சாவதற்குள் தன்னுடைய மகளை திருமணக் கோலத்தில் பார்க்க வேண்டும் என்று நினைத்தாள். பூபதியின் அப்பாவிற்கு அவனுக்குத் தங்கையின் மகளைக் கட்ட வேண்டும் என்ற ஆசையிருந்தது. அவனின் அத்தையும் பூபதியைப் பார்க்கும் போதெல்லாம் பிரியமாகப் பேசுவாள். அவனின் படிப்பு செலவிற்கு தங்களால் முடிந்ததைக் கடனாகக் கொடுத்திருந்தார்கள். அந்த உரிமையில் அத்தை திருமணம் குறித்தப் பேச்சை ஆரமித்தாள்.
பூபதிக்கு அத்தையின் மகளைத் திருமணம் செய்துக் கொள்வதில் விருப்பமில்லாமல் இல்லை. தங்கைக்குத் திருமணம் நடந்து இரண்டு வருடங்கள் தான் ஆகியிருந்தது. அந்த கடன்களையே இன்னும் முழுவதுமாகக் கட்டி முடிக்கவில்லை. மீண்டும் கடன் வாங்கித் திருமணம் பண்ண வேண்டுமா? வீட்டைக் கொஞ்சம் சரிபண்ண வேண்டும். அம்மாவிற்கு நகை செய்துப் போட வேண்டும். இன்னும் இரண்டாண்டுகள் போகட்டும் என்று அடம்பிடித்தான். ஆனால் அத்தையின் உடல் நிலை மோசமாகிக் கொண்டேப் போனது.
“மகள மணக்கோலத்துல பாக்கனுமுன்னு ஆசப்படறா. அத பாக்கமலே போய் சேந்துட்டா அந்த பாவம் உனக்கு தான் வரும். அது வேண்டாம்பா நீ கண்ணாலம் பண்ணிக்கோ” என்று பூபதியின் அம்மா சொன்ன போது அவனால் மறுக்க முடிவலில்லை.
பூபதியின் அத்தை வீட்டாரும் வசதியான குடும்பமில்லை. மூன்று பெண்பிள்ளைகள். புற்று நோயோடு போராடும் அத்தையை வைத்துக் கொண்டு பூபதியின் மாமாவால் என்ன தான் செய்ய முடியும். திருமணத்திற்கு ஆகும் மொத்த செலவையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என அப்பா சொல்லிவிட்டார். இந்த முறை கடன் வாங்கப் பெற்றோரைக் கஷ்டப்படுத்தாமல் பூபதியே வங்கியில் பர்சனல் லோன் போட்டான். அதுவும் பத்தாமல் கூட்டுறவு சங்கத்திலும் கடன் வாங்கினான். இந்த திருமணக் கடனில் பூபதி செய்த ஒரு சின்ன நல்ல விஷயம் அவனுக்கு சற்று ஆறுதலைத் தந்தது. வருங்கால மனைவிக்குத் தாலி வாங்கச் சென்றபோது அம்மாவையும் தங்கத்தில் தாலி வாங்கிக் கொள்ள சொன்னான். ஆனால் அவளோ திருமணச் செலவுகளைக் காரணம் காட்டி வாங்க மறுத்து விட்டாள். பூபதி எவ்வளவோ கெஞ்சி அடம்பிடித்ததில் தன்னுடைய பழைய கம்மலை மாற்றிக் கொள்ள மட்டும் சம்மத்தித்தாள். கால் பவுனுக்கும் குறைவான கம்மலை மாற்றி அரை பவுனுக்கு கொஞ்சம் பெரியதாக எடுத்துப் போட்டான். பூபதி வேலைக்குச் சென்று அவனின் அம்மாவிற்கு என்று தன்னுடைய சம்பளத்தில் செய்து போட்டது இந்த கம்மல் மட்டும் தான்.
அந்தக் கம்மலை அவனுடைய அப்பா இறந்தப் பின்பும் கூடக் கழட்டவில்லை. என்னுடையப் பிள்ளை அவனுடைய சம்பாத்தியத்தில் எடுத்துப் போட்டது என்று பெருமையாகச் சொல்லி மறுத்து விட்டாள். அந்த கம்மலைத் தான் இன்று அம்மா பூபதியிடம் அடமானம் வைக்கக் கொடுத்திருந்தாள்.
தனியார் அடகுக்கடையில் தன்னுடைய வண்டியை பூபதி நிறுத்திய போது அவனின் செல்போன் ஒலித்தது. எடுத்துப் பார்த்தான். அவனுடைய கல்லூரி நண்பன்.
“சொல்லுடா சந்ரு”
“டே மச்சான் அவசரமாய் பணம் பத்தாயிரம் ரூபாய் வேணும். கிடைக்குமா. ஒரு மாசத்தில் திருப்பிக் கொடுத்துடுறேன்” என்றான்.
பூபதி தர்ம சங்கடத்தோடு தன்னுடையச் சூழலைச் சொன்னான். ஆனால் அவனோ “என்னடா மச்சான் நம்ம பேஜ்சுலையே நீ தான் கவர்மெண்ட் வேலைக்குப் போனவன். ஆனா எங்கள விட நீ தான் அதிகமா புலம்புரே” என்று சொல்லிச் சிரித்தான்.
இவன் மட்டுமல்ல பூபதியின் நெருங்கிய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இவன் அதிகமாக சம்பாரிக்கிறான், கருவூலத்தில் வேலை செய்வதால் நிறைய லஞ்சம் கிடைக்கும், ஆனால் பூபதிக்குக் கொடுப்பதற்கு மனசு வரவில்லை, சரியான கஞ்சன் என்று பேசிக் கொண்டார்கள்.
இதை கேள்விப்பட்ட போது பூபதிக்குச் சிரிப்புதான் வந்தது. அவன் வேலைக்குச் சேர்ந்த எட்டு ஆண்டுகளில் லஞ்சம் என்று ஒத்த ரூபாய் கூட வாங்கியதில்லை. பூபதியோடு வேலைப் பார்ப்பவர்கள் இவனை “பொழைக்கத் தெரியாத ஆளு சார் நீங்க” என்று பரிகாசம் பேசுவார்கள். ஆனால் பூபதி அவற்றையெல்லாம் பொருட்படுத்த மாட்டான்.
வாங்கும் சம்பளத்தில் பெரிய வசதிகளோடு வாழ முடியவில்லை என்றாலும் கடன் வாங்காத சராசரி நடுத்தர குடும்ப வாழ்க்கையை பூபதியால் வாழ முடியும் தான். ஆனால் எதிர்பாராமல் பூபதியின் அப்பாவிற்கு சிறுநீரகம் செயலிழந்து, டயாலிசிஸ் செய்ய வேண்டி வந்ததால் பெரும் பண நெருக்கடிக்கு ஆளானான் பூபதி. தன் சக்திக்கு மீறி மருத்துவச் செலவுகள் செய்துப் பார்த்தும் இரண்டாண்டுகளுக்கு மேல் அப்பாவை காப்பாற்ற முடியவில்லை.
மெல்ல மெல்ல அப்பாவின் மருத்துவச் செலவிற்கு வாங்கிய கடன்களைக் கட்டிக் கொண்டு வந்தான். குடும்பச் செலவிற்குப் பற்றாக்குறை வரும் போதெல்லாம் யாரிடமும் கடன் வாங்கமாட்டான். விட்டில் இருக்கும் நகைகளை வைத்து சமாளித்துக் கொள்வான். வருடத்திற்கு ஒருமுறை ஈஎல் சரண்டர் போட்டு அந்த பணத்தில் அடகுவைத்த நகைகளைத் திருப்பிக் கொள்வான். ஆனால் கொரோனாவிற்குப் பிறகு அரசாங்கம் ஈஎல் சரண்டரையெல்லாம் நிறுத்தி விட்டதால், சம்பளத்தைத் தவிர வேறு வழியில் பணம் கிடைக்க வாய்ப்பில்லாமல் போனது. வைத்த நகைகளையே திருப்ப முடியாமல் போய்விட்டது.
நகை அடகுக் கடைப் பையன் பூபதியைப் பார்த்ததும் “வாங்க சார்” என்றுச் சிரித்தான். ஆனால் பூபதிக்குதான் சற்று நெருடலாக இருந்தது. கம்மலை அவனிடம் கொடுத்தபோது கல்லூரி நாட்களிலிருந்து வேலைக்குப் போகின்ற இந்த நாள் வரை வாழ்க்கை பெரிதாக மாறிவிடவில்லையோ என்று எண்ணத் தோன்றியது. விவசாயம் செய்தப் பெற்றோரின் வாழ்க்கைக்கும் படித்து அரசு வேலைக்குச் சென்ற தன்னுடைய வாழ்க்கைக்கும் பெரிதாக வித்தியாசமில்லையோ என உணர்ந்தான்.
“சார் நாலரை கிராம் இருக்கு. பதினெட்டாயிரம் தரலாம்”
“அவ்வளவு வேண்டாம்பா. பின்னாடி திருப்புறது கஷ்டமாயிரும். பத்தாயிரம் போதும்” என்றான்.
“ஒரு பதினைச்சாயிரமாவது வாங்கிக்கங்க சார்” என்று மீண்டும் கேட்ட கடைப் பையனின் வார்த்தை தன் மீதான அக்கரையா இல்லை கடை முதலாளிக்கான விசுவாசமா என யோசித்த பூபதி “வேண்டாம்பா” என்று உறுதியாக மறுத்தான்.
பையன் அடமானச் சீட்டியில் இரண்டு கையெழுத்துக்களை வாங்கிக் கொண்டு முதல் மாத வட்டியை வழக்கப் போல பிடித்துக் கொண்டு மீதித் தொகையைக் கொடுத்தான்.
“வரும் போது அத்தைக்கு மறக்காமல் ஒரு கவரிங் கம்மல் வாங்கிட்டு வாங்க” என்று பூபதியின் மனைவி சொன்னது நினைவுக்கு வரவே கடைவீதிப் பக்கம் நடந்துப் போனான். கவரிங் கடைகள் எல்லாம் புதிய பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் ஏவிஆர் நகைக் கடைக்குப் பக்கத்தில் இருக்கும். இந்த கடைத் தெரு முழுக்க வட இந்தியர்கள் நடத்தும் கடைகளால் நிரம்பி இருக்கிறது. பத்துக்கு பத்து அளவுள்ள கடைகளில் செல்போன்களும் அதன் உதிரிபாகங்களும் விற்கப்படுகிறது. டிவி ரிமோட்டிலிருந்து எல்லா எலெக்ரானிக்ஸ் பொருட்களும் இங்கு கிடைக்கும். பானிப்பூரி விற்பதிலிருந்து வைரக்கல் வரை மார்வாடிகளின் கைதான் இங்கு ஓங்கியிருக்கிறது. படிப்பறிவில்லாமல் வெறும் தொழிலை மட்டுமே நம்பி ஒரு புதிய இடத்தில் புதிய சூழலில் இவர்களால் வியாபாரத்தை வெற்றி கரமாக நடத்த முடிகிறதே. ஆனால் நாமெல்லாம் எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் சொகுசாக அரசு வேலையில் ஒட்டிக் கொண்டு, அன்றாகத் தேவைகளுக்கே அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறோம் என பூபதி நினைத்தான்.
இரண்டு முன்று கடைகள் கண்ணில் பட்டாலும் முன்பொரு முறை மனைவியோடு வந்திருந்த சாய் கவரிங் கடைக்குச் சென்றான். வயதான அம்மாவிற்கு அரைப் பவுன் அளவில் கம்மல் வேண்டுமெனக் கேட்டான். கடையில் இருந்த இந்திக்காரப் பையன் “அம்மாகு” என்று சொல்லியப் படியே கம்மல்கள் நிறைந்த கண்ணாடிப் பெட்டியை எடுத்து வந்தான். “இது எல்லாமே ஒன் கிராம் கோல்டு கலந்தது சார். சீக்கிரம் கருக்காது” என்றான். அதில் தேடி அம்மாவின் கம்மல் மாடலில் ஒன்றை பூபதி தேர்வுச் செய்தான்.
“வேற ஏதாச்சும் வேணுமா சார்” என்று கேட்ட படியே கழுத்துச் செயின்கள் நிறைந்த கண்ணாடிப் பெட்டியை எடுத்து வைத்தான். “புது மாடல் சார்” என்று கண்களை சுருக்கிச் சொன்னான்.
“ஒன்னும் வேணாம்பா” என்று சொல்லிய படியே கண்ணாடி பெட்டியில் மாட்டியிருந்த சைன்களை ஒருமுறைப் பார்த்தான். அதில் கடைசியில் மாட்டியிருந்த சைனைப் பார்த்ததும் பூபதி படபடப்பானான். இதேபோன்ற கோதுமை வடிவத் தாலிக்கொடியைத் தான் அம்மா இவன் படிப்பிற்காக விற்றாள் என்பது நினைவுக்கு வந்தது. அந்த சைனை எடுத்து தரச் சொல்லி பூபதிக் கேட்டான். கடைக்காரப் பையனும் தனக்கு இன்னொரு வியாபாரம் கிடைக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியோடு எடுத்துக் கொடுத்தான்.
அப்பா இறப்புக்குப் பிறகு அம்மா கம்மலைத் தவிர வேறு எதையும் போடுவதில்லை. அவனின் மனைவிக்குத் தங்கத்தைத் தவிர வேறு சைன்கள் போட்டால் கழுத்தில் தோல் கறுப்பாக மாறி அரிக்க ஆரமித்து விடுவதால் அவள் இது போன்ற சைன்களைப் போடுவதைத் தவிர்த்து விட்டாள். இதை வாங்கிக் கொண்டுப் போய் என்ன செய்வது என யோசித்த பூபதி இன்னொரு முறை அதை ஆசைத் தீரப் பார்த்து விட்டு கடைப் பையனிடமே திரும்பக் கொடுத்தான். பையனுக்கு வியாபாரம் ஆகாததில் கொஞ்சம் வருத்தம் இருப்பது அவன் முகத்தில் தெரிந்தது. கம்மலுக்கான பணத்தைக் கொடுத்துவிட்டு வண்டியை நோக்கிச் சென்றான்.
இந்த கம்மலையே கூட அம்மா போடுவார்களா என பூபதிக்கு சந்தேகமாக இருந்தது. அந்த கவரிங் சைனைப் பார்த்ததிலிருந்து இனி எவ்வளவு சம்பாரித்தாளும் அம்மாவிற்கு மீண்டும் அது போல் தங்கத்தில் சைன் போட முடியுமா? அப்பா இருந்த போதே எப்படியேனும் கடன் வாங்கி அதை செய்திருக்க வேண்டும், அதில் தவறி விட்டோம், இந்தக் குற்றவுணர்வு வாழ்நாள் முழுவதும் தொடரும் என நினைத்தான்.
பூபதி வீட்டுக்குள் நுழைந்தப் போது அம்மாவின் சிரிப்புச் சத்தம் கேட்டது. இவன் வருவதைப் பார்த்ததும் சிரிப்பின் சத்தத்தைக் குறைத்துக் கொண்ட அம்மா “பூபதி உன் பிள்ள பண்ணின வேலையப் பாத்தியா” எனச் சிரித்தாள்.
“என்னமா பண்ணினா?” என்று பூபதியும் ஆர்வத்தோடு அம்மாவின் பக்கத்தில் சென்றான்.
வெக்கம் கலந்த சிரிப்போடு தன்னுடைய காதைக் காட்டினாள். அதில் பிங்க் நிற மயில் தோடு இருந்தது. “பாட்டி காது வெறும் காதா இருக்குதுன்னு எம் பேத்தி அவ தோட்ட போட்டு விட்டா. எப்படியிருக்குது என் தோடு?” எனச் சொல்லி அம்மா சிரித்த போது அவளும் தன் நான்கு வயது குழந்தையாகவே பூபதிக்குத் தெரிந்தாள்.
அம்மாவிற்குச் செய்ய நினைத்ததை எல்லாம் தன்னுடைய மகளுக்குச் செய்திட வேண்டும் என்ற எண்ணம் அந்த கணத்தில் தோன்றியது. இந்த எண்ணம் வந்ததும் அவன் மனதில் பெரிய பாரம் குறைந்ததைப் போல உணர்ந்தான். அப்போது தன் மகளை தூக்கி முத்தமிட வேண்டும் போல இருந்தது.
“பாரூ…” என்று பூபதி அழைத்தான்.
“அப்பா” என்ற குரல் குளியலறையிலிருந்து தொடங்கி அவன் வீடு முழுக்க எதிரொலித்தது.
*****