இணைய இதழ்இணைய இதழ் 48கட்டுரைகள்

லெஸ் மிசெரப்ல்ஸ்; உன்னதம் நிறைந்த பேரிலக்கியம் – அமில்

கட்டுரை | வாசகசாலை

I Sobbed and wailed and thought [books] were the greatest things  – Susan Sontag

(லெஸ் மிசெரப்ல்ஸ் நாவலை வாசித்தபின் எழுதியது)                    

லெஸ் மிசெரப்ல்ஸ் என்ற பிரெஞ்சு செவ்வியல் நாவலை வாசிக்கவேண்டும் என்ற நீண்டநாள் எண்ணம் சமீபத்தில்தான் நிறைவேறியது. சிறு சிறு எழுத்துக்கள் அடங்கிய நாவலின் பக்கங்கள் சுமார் 1200! இடைவெளி விடாமல் வாசிக்கவேண்டுமே என்ற எண்ணத்தின் காரணமாகவே தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். முன்பு போரும் அமைதியும் வாசித்தபோதே ஏற்பட்ட அனுபவத்தில் உண்டான எண்ணம் இது. கொரோனா விடுமுறைக் காலத்தில் அதற்கான சந்தர்ப்பம் அமைத்தது. நாவலை வாசிக்கும்முன் அதன் ஓவியக் கதையை 50 பக்கங்களில் வாசித்திருந்தேன். கடைசியில் அதன் நிஜ வடிவத்தை வாசிக்க ஆரம்பித்தபோது பதினெட்டாம் நூற்றாண்டு பாரிஸ் நகரின் சத்தமும் மனித சஞ்சாரமும் அங்குள்ள புழுதியும் என்னை ஆட்கொள்ளத் தொடங்கியது. ஹூகோவின் இன்னொரு முக்கிய நாவலான ‘HUNCH BACK OF NOTREDAME’ என்ற நாவலை முன்பு வாசித்திருந்த எனக்கு இந்நாவலின் ஆரம்பப் பகுதிகள் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. காரணம், ‘நாடர்டம் நகர கூனன்’ நாவலின் பிரதான பிரச்சனையே பாதிரி ஒருவரால்தான் ஏற்படும், அவர் புறத்தில் தூய தோற்றம் கொண்ட, ஆனால் உள்ளுக்குள் இருண்ட மனம் கொண்டவராக இருப்பார். ஒரு அழகான ஜிப்சி பெண்ணால் தன்னுடைய பல கால மனத்தூய்மையும், மனக்கட்டுப்பாடும் தகர்ந்த்துபோவதை தாங்கிகொள்ளமுடியாத பாதிரியார் அதற்காக அப்பெண்ணை திட்டமிட்டு சாத்தான் என்பதாக அறிவித்துக் கொலை செய்வார். தன்னுடைய மன பரிசுத்ததிற்காக ஒரு அப்பாவிப் பெண்ணைக் கொலை செய்யும் மனிதாபிமானமற்ற பாதிரியாரின் மெய்த்தேடலை “Your search for light, made you blind” – “ஒளியை நோக்கிய உன் தேடல் உன்னை குருடனாக்கிவிட்டது’’ என்று கடுமையாக விமர்சிக்கும் ஹுகோ, லெஸ் மிசரப்ல்ஸ் நாவலில் ஆழ்ந்த மனிதாபிமானமும் மானுட அன்பும் நிறைந்த ஒரு பரிசுத்த பாதிரியாரைப் பற்றி நாவலின் ஆரம்பப் பகுதிகளில் பல பக்கங்களில் விவரிக்கிறார். இப்பகுதிகள் நாவலுக்கு சம்பந்தம் இல்லாததுபோல் நிறைந்திருந்தாலும் அது ஒரு முழுமையான நிறைவை கொடுப்பதாகத்தான் உள்ளது. 

விக்டர் ஹூகோ

இதே போன்ற எண்ணம் ‘போரும் அமைதியும்’ நாவலை வாசிக்கும்போதும் எனக்கு ஏற்பட்டது. குறிப்பாக நடாஷா தன் மாமா வீட்டிற்குச் சென்ற போது ஓநாய்கள் வேட்டைக்குச் செல்லும் காட்சி. இவை உபகதைகளாக வந்தாலும் நாவலுக்கு ஒரு அழகையும் நிறைவையும் தந்துவிடுகிறது. பாதிரியாரின் உயர்ந்த மனிதாபிமானத் தன்மையை உணர்த்தக்கூடிய இரு நிகழ்வுகளில் முதலாவது  கொள்ளையர்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றபோதும் காட்டுக்குள் தனியாக பயணம் செல்வதும், எந்த பாதிப்பும் ஏற்படாமல் வீடு திரும்புவதும். இரண்டாவது, ஜீன் வலீஜான் சிறையிலிருந்து தப்பி வந்த கைதி என்று தெரிந்தும் தன் வீட்டில் தங்கவைப்பதும், தங்கவைக்கப்பட்ட வலீஜான் அவர் வீட்டிலிருந்த வெள்ளிப் பாத்திரத்தை திருடி செல்வதை மன்னிப்பதும் என அவரை ஒட்டுமொத்த பரிசுத்தத்தின் உருவகமாக ஹூகோ இந்நாவலில் படைத்திருக்கிறார். போலி மதவாதிகளை விமர்சிக்கத் தயங்காத ஹூகோ, அதே சமயம் உண்மையான மதவாதிகளை சிறப்பிக்கவும் செய்வது கலைஞனின் நேர்மைக்கான சான்று. இப்பாதிரியாரோடு ஆரம்பத்தில் ஏற்படும் சிறு சந்திப்பு ஜீன் வலீஜானின் மனதில் மாற்றத்தை சிறுகச் சிறுக ஏற்படுத்தும். ஜீன் வலீஜான் மிக அற்பமான ஒரு திருட்டிற்காக கைது செய்யப்பட்டு பிறகு பல முறை தப்பிக்க முயன்ற காரணத்திற்காக இன்னும் அதிக ஆண்டுகள் சிறையில் இருக்கவேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டவர். அற்ப காரணத்திற்க்காக தன் வாழ்நாளை சிறையிலே கழிக்க நேரிடுவது ஒரு மனிதனுக்குள் வாழ்வின் மீதான கடும் வெறுப்பையும், பிறர் மேலான வெறுப்பையும், கடைசியில் சுய வெறுப்பையும் ஏற்படுத்திவிடக்கூடிய கொடூரம் நிறைந்தது.மனிதாபிமானம் போன்ற பதங்கள் அவர்களுக்கு அர்த்தமற்ற உளறலாகத் தோன்றும். ஜீன் வலீஜானின் நிலைமை அதுதான். தனக்கு உதவிய பாதிரியாரிடமே அவர் திருடும்போதும், வழியில் சந்திக்கும் ஒரு ஏழைச் சிறுவனின் காசைத் திடும்போதும் கூட சிறிதளவு கூட வருந்தாதவராக இருப்பார். ஒரு தவறை வெறுமனே விமர்சிப்பதற்கும் அத்தவற்றின் பின்னுள்ள காரணங்களைப் புரிந்துகொள்வதற்கும் இடையே ஒரு இடைவெளி இருக்கிறது. ஹூகோ அதை புரிந்துகொள்ள முயல்கிறார். ஜீன் வலீஜான் வீட்டில் நிறைய குழந்தைகள் இருப்பார்கள். அவருடைய குடும்பம் மிகப் பெரியது. வறுமையால் சிரமப்படும் தன் குடும்பத்திற்காக சில துண்டு ரொட்டிகளை அவர் ஒரு வீட்டில் திருடிவிடுவார். அதுதான் அவர் செய்த குற்றம். இதற்காக சிறையில் தள்ளப்படும் வலீஜானின் நிலைமை, அவரை நம்பியுள்ள குடும்பத்தின் நிலைமை என்னாகிறது என்ற கேள்வியை நாவல் எழுப்புகிறது. அங்கிருந்து தப்பிக்க முயன்றதற்காக மீண்டும் மீண்டும் பல முறை சிறையில் தள்ளப்பட்டு தன் சுதந்திரத்தை இழக்கும் வலீஜான் கதாபாத்திரம் பிரெஞ்சு புரட்சியின் மூன்று அடிநாதங்களில் ஒன்றான சுதந்திரம் (LIBERTY) என்ற கருத்தை கேள்விக்குட்படுத்துகிறது. பிரெஞ்சு புரட்சியின் மீதான விமர்சனம் என்ற கோணத்தில் வாசித்தாலும், எப்படி சட்டத்தின் வரட்டுத்தனமான வடிவமைப்பு அதன் உண்மையான நோக்கத்திலிருந்து பிறழ்ந்து மனிதனை அறத்தின்பால் செலுத்தாமல் அவனை மேலும் கீழ்மையானவனாக ஆக்குகிறது என்று விமர்சிக்கிறது. 

அக்காலகட்ட பெரும் எழுத்தாளர்களில் ஒருவரான சார்லஸ் டிக்கென்சும் தன் நாவல்களில் சட்டத்துறையை மீதான கடும் விமர்சனங்களை வைத்துள்ளார். லியோ டால்ஸ்டாயின் ‘புத்துயிர்ப்பு’ நாவலில் பெரும்பாலான காட்சிகள் நீதிமன்றத்திலேதான் நடக்கும். தக்க ஆதாரமில்லாமல், வலிமையான அனுமானத்தின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும் (அ)நீதியும் அது ஒரு மனிதனை எப்படி பாதிக்கிறது என்ற மனிதாபிமான கண்ணோட்டத்தோடு அணுகுகிறது. இந்நாவல்களின் பேசுபொருட்கள் இன்றைக்கும் முக்கியத்துவம் நிறைந்ததாக இருப்பதே அவற்றை செவ்வியல் படைப்புகளாக்குகிறது. இயற்றப்படும் சட்டங்களின் போதாமைகள் மற்றும் அவற்றின் வறட்டுத்தன்மை எப்படி மனிதர்களை பாதிக்கிறது என்பது பற்றி பல்வேறு காலங்களிலும் கலை தொடர்ந்து திவுசெய்துகொண்டே தான் வருகிறது. சமீபத்திய காத்திரமான உதாரணம் மராத்தியிலும் பிற மொழியிலும் வெளிவந்து தேசிய விருது பெற்ற ‘COURT’ படம். 

மனிதர்களின் மீது அறவே நம்பிக்கையிழந்த, வெறும் கசப்பால் மட்டுமே நிரம்பியிருக்கும் வலீஜானின் வாழ்வில் ஒரு புது வெளிச்சமாக அன்பின் வாச மலராக வருவாள் பேன்டீன் என்ற இளம்பெண். உலக இலக்கியங்களில் சில மறக்கமுடியாத பெண் கதாபாத்திரங்கள் என அன்னா கரீனினா, மேடம் பவாரி, எஸ்மரால்டா, டெஸ்டிமோனா, நடாஷா, சோபியா , டேவிட் காப்பர்பீல்டின் தாய் கிளாரா, என்று வரிசையாகச் சொல்லிகொண்டே போகலாம். அந்த வரிசையில் மிக அழுத்தமாக மனதில் உறையும் ஒரு கதாபாத்திரம்தான் பேன்டீன். அழகும் வனப்பும் மிளிரும் உற்சாகமான பெண்ணான அவளுடைய இருப்பு குளிர்ந்த தென்றலை போல் இருக்கும். எல்லோரும் போல காதல் வயப்படும் பேன்டீனை அவளுடைய பணக்காரக் காதலன், குழந்தையை மட்டும் கொடுத்து விட்டு கைவிட்டுச் செல்கிறான். (‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலில் தந்தை பெரியார் அவர்கள் ‘ஆண்மை’ அழியட்டும் என்று கூறுவது நினைவிற்கு வந்து செல்கிறது) திருமணமாகாமல் கைக்குழந்தையோடு நிராதவராக நிற்கும் அப்பெண் செய்வதறியாது தவிப்பாள். அப்பாவித்தனமும் அழகும் நிரம்பிய தேவதையான பேன்டீனின் நிலைமை நம் மனதில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தும். அதுவரை சுதந்திரமான பெண்ணாக இருந்த அவள் இப்போது இன்னொரு ஜீவனை வைத்து காப்பாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுவிடுவாள். கோசெட் என்ற அந்த குழந்தையை வளர்க்க அவள் பெரும் சிரமத்தைச் சந்திக்கநேரும். அப்போதுதான் அவள் தே நார்டியர் தம்பதியை சந்திப்பாள். அவர்கள் ஒரு விடுதியை நடத்தக்கூடியவர்கள். அவர்களின் குழந்தைகளோடு தன் குழந்தையும் வளரட்டும் என்று அவர்களிடம் ஒப்படைப்பதோடு அவளுக்கான செலவு தொகையை மாதந்தோறும் தான் வேலை செய்து அனுப்புவதாகக் கூறுவாள். அதே போல் மாதாமாதம் பணம் அனுப்புவாள். ஆனால், உண்மையில் தே நார்டியர் தம்பதிகள் பேராசையும் சுயநலமும் மிக்க சுரண்டல் பேர்விழிகள். கோசட்டை அவர்கள் சிறுமி என்றும் பாராமல் ஒரு அடிமையைப் போல் நடத்துவார்கள். அவளிடம் கடுமையாக விடுதியின் வேலை வாங்குவதோடு, அவளுடைய செலவுக்காகவென்று அதிக தொகையை அவள் தாயிடமிருந்து சுரண்டுவார்கள். வேலை செய்யும் இடத்தில் அவள் திருமணமாகாமல் குழந்தை பெற்றவள் என்று தெரியவந்ததும் பேன்டீன் வேலை நீக்கம் செய்யப்படுவாள். அத்தோடு குளிர் காலத்தில் கொசட்டிற்கு சரியான உடையில்லை அதனால் அதிக பணம் தேவை என்று ஈரமற்ற ஓநாய்களான தே நார்டியர்கள் பொய்யாகக் கடிதமெழுத, பேன்டீன் நிலைகுலைந்து போவாள். கடைசியில் அவள் தன் அழகிய தலைமுடிகளை விற்று அப்பணத்தை அனுப்பிவைப்பாள். “என் தலைமுடிகளால் என் குழந்தைக்கு ஆடை போர்த்தியுள்ளேன்” என்று அவள் கூறுவதாக எழுதும் ஹியுகோவின் எழுத்தக்கள் நம் மனசாட்சியைப் பிழிந்து கண்ணீரை வரவழைப்பன. 

மேலும் மேலும் தே நார்டியர் தம்பதிகள் அவளிடம் அதிக பணத்தை கேட்க, அதனால் செய்வதறியாது அவள் விருப்பமின்றி தன் உடலை விபச்சாரத்திற்கு கொடுப்பாள். அதன் மூலம் அதிக வருவாய் வருவதால் அந்த பணத்தால் தன் மகள் நிம்மதியாக இருப்பாள் என்ற எண்ணத்தால் சிறுகச் சிறுக தன்னையே இழந்துகொண்டிருப்பாள். கடைசியில் அவள் நலிவுற்று மேலும் பணம் தர முடியாமல் தன் முன் பற்களை விற்றுப் பணம் தருவாள். தே நார்டியர் தம்பதிகள் கதாபாத்திரம் தனி மனிதனின் அதீத பேராசையும், பொருள் மோகமும் ஏற்படுத்தும் நாசத்தைக் காட்டுவதாக உள்ளது. பொருள்மோகம் சிறுகச் சிறுக மனித தன்மையின் அடிப்படை சாரத்தையே கொன்றுவிடக்கூடிய அபாயகரமானது. அதனால்தான் திருவள்ளுவர் அதீத பொருளாசைதான் ஆகப் பெரிய பாவம் என்பதாக ஒரு குரலில் சொல்கிறார். தனிமனித சுயநலமும் சூழ்நிலைகளும் தேவதை போன்ற வனப்போடு இருந்த பேன்டீனை அவலநிலைக்குத் தள்ளியதோடு அவளுக்கு விபச்சாரி என்ற பட்டத்தையும் கொடுக்கிறது. தன்னிடம் வீம்புசெய்த ஒருவனை அவள் தாக்குவதை பார்க்கும் சமூகம் அவளை விபச்சாரி என்று தூற்றும், அத்தோடு அவளைக் கைது செய்ய ஜாவேர்ட் என்ற போலீஸ் அதிகாரி முயல்வான். இந்த போலீஸ் அதிகாரிதான் ஜீன் வலீஜானை ஆரம்பத்திலிருந்தே துரத்திக்கொண்டிருப்பவர். உடல் வதைகளாலும், சமூகத்தின் கண்மூடித்தனமான சொல் அம்புகளாலும், தனி மனித சுரண்டலாலும், ஆண்மை என்ற பேரால் காதலனால் ஏமாற்றப்பட்டதாலும் தொடர்ந்தது பாத்திக்கப்பட்ட பேன்டீன், கடைசியில் தன் மகளைக் காணவேண்டும் என்ற ஆசை நிறைவேறாமலே இறப்பாள். நாவலை வாசிக்கும்போது ஒரு நிமிடம் பேன்டீனின் ஆரம்பத்தையும் முடிவையும் நினைக்கும்போது கட்டுபடுத்த முடியாத உணர்ச்சிவசத்தால் கண்ணீர் வழிந்தோடியது. 

திருமணமாகாத பெண் குழந்தை பெற்றால் அவளை வேறுமாதிரியாக பார்க்கும், விபச்சாரி என்பதாக பட்டம் கட்டும் சமூகம், ஏன் அவள் இந்நிலைக்கு ஆளானால் என்றோ அல்லது அவளுடைய நிலைக்கு காரணம் யார் என்றோ கூட யோசிப்பதில்லை. ‘அன்னா கரீனினா’ நாவலில் ராணுவ வீரர்கள் முறையாகத் திருமணம் செய்துகொள்வதற்கு முன் வேறு பெண்களோடு உறவு வைத்துகொள்ளும் வழக்கம் மிகச் சாதாரணமாக இருந்து வந்ததாகவும், அதை ஒரு பெரும் தவறாகவும் யாரும் கருதவில்லை என்பதாகவும் டால்ஸ்டாய் எழுதுவார். இந்த பின்புலத்தில் வைத்து அன்னாவுக்கு விரான்ச்கியோடு ஏற்படும் தொடர்பையும் அதையொட்டி சமூகத்தில் ஏற்படும் சலசலப்பையும் பேச்சுக்களையும் பார்த்தாலே தெரியும் சமூகம் எப்படி ஆணாதிக்கம் நிறைந்ததாக இருக்கிறது என்று. அன்னாவுக்கும் விரான்ஸ்கிக்கும் நடக்கும் ஒரு உரையாடல் இதை நமக்கு நன்கு உணர்த்துவதாக இருக்கும். நாடகம் காண ஒன்றாகச் செல்லலாம் என்று அன்னா விரன்ச்கியை அழைக்கும்போது அவன் வேண்டாமென்று மறுப்பான். காரணம் கேட்க்கும்போது அவன் “தேவையில்லாத அவப்பெயரும் தூற்றலும்’’ என்பதாகச் சொல்வான். “யாருக்கு?’’ என்று அன்னா கேட்க “நமக்குதான், குறிப்பாக உனக்கு’’ என்பதாக அவன் சொல்வான். ஒரு செயலை சரியோ தவறோ அதை செய்வதற்கு ஆணுக்கு உள்ள சுதந்திரமும் பெண்ணுக்கு உள்ள நெருக்கடியையும் வைத்தே சமூகம் எப்படி பாராபட்சமாக உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

ஜீன் வலீஜானுக்கு பேன்டீன் மீது உள்ள பாசமும் இரக்கமும் அவளுடைய மரணத்தால் ஏற்பட்ட தாக்கத்தால் அதிகரித்து, அவளுடைய மகளான கோசெட்டை தே நார்டியர்களிடமிருந்து மீட்கும் எண்ணத்தோடு கிளம்புவார். இதற்கு மத்தியில் ஜாவேர்டின் துரத்தல் தொடர்ந்தது கொண்டே இருக்கும். கோசெட்டின் இடத்திற்குச் சென்று தே நார்டியர்களிடம் அதிக தொகை கொடுத்து அவளை விலைக்கு வாங்கி தன் குழந்தையைப்போல அவளை வளர்க்க தொடங்கும் பகுதிகள் ஜீன் வலீஜான் வாழ்வில் மட்டுமல்ல, வாசிக்கும் நமக்கும் மிகுந்த மனத்திளைப்பையும் உணர்வெழுச்சியையும் ஏற்படுத்தக்கூடிய பகுதிகள். தே நார்டியர்களின் விடுதியில் அடிமையைப்போல் வேலை செய்துவந்த சிறுமி கொசெட், தாயன்பையோ அல்லது வேறு பிற அன்பையோ பெற்றிடாதவள். முதல்முறையாக உயிர்பெற்றெழுவதைபோல் அவள் சுதந்திரத்தை சுவாசிப்பாள். வலீஜானோடு வந்தபோது முதல் நாள் தூங்கி எழுந்ததும் உடனே துடைப்பத்தை கையில் எடுத்துகொண்டு பெருக்கத்தொடங்கிவிடுவாள். இந்த நுட்பமான காட்சியின் மூலம் ஹ்யூகோ அவளுடைய கடந்த கால வாழ்வின் நிலையை உணர்த்திவிடுகிறார். தான் வேலை செய்யாவிட்டால் தே நார்டியர்கள் தன்னை தண்டிப்பார்கள் என்ற பயத்திற்கு பழகிவிட்ட அக்குழந்தையின் பிஞ்சு உள்ளம், தான் ஒரு சுதந்திரப் பிறவி என்பதைக் கூட உணர முடியாத நிலையில் அடிமைத்தனத்தில் வளர்க்கப்பட்டுள்ளது. அவள் பெருக்குவதைப் பார்க்கும் வலீஜான், இனி அவள் இதுபோன்று பெருக்கவோ வேலை செய்யவோ தேவையில்லை என்றும், எப்போதும் விளையாடிகொண்டே இருக்கலாம் என்பதாகவும் சொல்வார். மிகுந்த பரவசமும் மகிழ்ச்சியும் கொண்டவளாக அவள் இருப்பாள். தொடர்ந்து ஜாவேர்டால் துரத்தப்படும் வலீஜான் தப்பிப்பதற்காக நிறைய வேஷங்களில் மறைந்திருப்பார். டூமாசின் கவுன்ட் ஆப் மாண்டே கிறிஸ்டி நாவலில் வரும் நாயகனும் தொடர்ந்து இது போன்ற நிறைய வேடங்களில்தான் இருப்பான். இது அக்கால கட்ட இலக்கியத்தின் தன்மை என்று தோன்றுகிறது. 

லெஸ் மிசெரப்ல்ஸ் நாவல் நிறைய கதைமாந்தர்களையும் பெரும் வரலாற்று காலத்தையும் உள்ளடக்கிய ஒரு நாவல். இந்நாவலை இன்று வாசிக்கும்போது சில சிரமங்கள் இருக்கத்தான் செய்கின்றன. காரணம், ஹியூகோ ஒவ்வொரு இடத்தை விவரிக்கும்போதும் எக்கசக்கமான தகவல்களால் அதை விவரிக்கிறார். உதாரணமாக வலீஜான் கோசட்டின் காதலனை சுரங்கக்கால்வாய் வழியாக மீட்டு அழைத்து வருவார். இந்நிகழ்வை எழுதும் ஹியூகோ அக்கால கட்ட கழிவுநீர் கால்வாயின் வரலாற்றையும் அதன் அமைப்பையும் பற்றி பல பக்கங்களில் தகவல்களாகத் தருகிறார். எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்கள், அக்கால பெரும் நாவல்கள் அக்காலத்தின் தேவைக்காக எழுதப்பட்டவைகள் என்று ஓரிடத்தில் குறிப்பிடுவது நினைவுக்கு வருகிறது. மக்களுக்கு தாங்கள் அறியாதவற்றைத் தெரிந்துகொள்ளும் கருவியாக புத்தகங்கள் மட்டுமே இருந்த காலமது என்பதை இந்நாவலை வாசிக்கும்போது புரிந்துகொள்ளலாம்.

லெஸ் மிசெரப்ல்ஸ் நாவலை வாசித்தபின் 2018-ல் வெளிவந்த பிபிசி சீரீஸை பார்த்தேன். காட்சிபூர்வமாகவும் கதைபூர்வமாகவும் நாவலுக்கு நெருக்கமாக உள்ளது. இன்றளவும் இந்நாவல் வாசிக்கப்படுவதும் கொண்டாடப்படுவதுமாக உள்ளதே அதன் சிறப்பை உணர்த்தப் போதுமானது. பெரும் செவ்வியல் படைப்புகளில் காணப்படும் ஒரு ஒற்றுமை அவற்றின் பரந்த பார்வையும் உன்னதமான மனிதாபிமான நோக்கும்தான். புகழ் பெற்ற அமெரிக்க அபுனைவு எழுத்தாளரான சூசன் சொண்டாக் “நான் விம்மினேன், சப்தம்போட்டு அழுதேன், பிறகு நினைத்தேன் புத்தகங்கள்தான் ஆகச் சிறந்தவைகள்’’ என்று இந்நாவலை வாசித்த பின் தன் அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார். இலக்கியத் தேடல் கொண்டவர்கள் தவிர்க்காமல் வாசிக்க வேண்டிய மாபெரும் படைப்பு லெஸ் மிசெரப்ல்ஸ்.

amilwriter@gmail.com

******

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button