தனித்தலையும் பறவை
வெறுமை தகித்த மதியமொன்றில்
வீடேறிச் சிரித்த
முதியவரின் நடையை
காலம் தின்றுவிட்டிருக்க
வழிநெடுகிலும்
மூப்படைந்த பறவையின்
கால்தடம்
இளம்பிராயத்தில்
செங்கல் எடுத்துத் தந்ததையும்
எழுப்பிய சுவருக்கு நீர் தெளித்ததையும் சொல்லி
அங்கீகாரப் பல்லக்கில்
ஏற முயன்றதில் யாருக்கும் உடன்பாடில்லை
ஆசுவாச பானமொன்றைத் தருதலோடு
விருந்தோம்பலை முடித்துக்கொள்ள முயல்வோரிடம் உறவுமுறையின் அடையாளங்களை நினைவூட்டப் போராடும் கண்களில் பரிதவிப்பின் ஒளி
இன்றைய மௌனத்திடம்
நேற்றைய வனத்தின் சாம்பலைக் காட்டி இறகுலர்த்திப் போனதற்கான
சுவாரஸ்யங்களைப் பிரசவித்துவிட முயன்றுத் தோற்றதன்
இருப்பு
கண்டுகொள்ளாமல் விடப்பட்டதொரு கழைக்கூத்தாடியின்
சதங்கையை நினைவூட்டுகிறது
தெருவில் திரும்பி நடக்கத் தொடங்கியவர்
ஒருநிமிடம் தயங்கி நின்றது
மீட்டெடுக்கவே முடியாத
பால்யத்திற்கான மௌன அஞ்சலியாக இருக்கலாம்.
***
சொல்லின் விலை
பேருந்துப் பயணங்களில் நிர்ணயித்த விலை காட்டி
மாச்சில் கேட்கையில்
சிரிப்பவர்களுக்கு
சொல்லும் விலையும்
வெவ்வேறு மொழி
பகலிலும் மின்னும் அங்காடியில்
பாக்கெட்டின் இருப்பைத் தொட்டுப்பார்த்தவாறு உள்நுழைபவர்களின் விரல்களால்
மீற முடிவதில்லை
பேரம் பேசுதல் நாகரீகமற்றதென
கொடுத்துப் பழகிய கைகளை
புன்னகையின் சாயமிட்டு
அநியாய விலை
வைப்பவர்களின் மீது பிறகு
கல்லெறிந்து கொள்ளலாம்
உணவகங்களில் பண்டங்களின்
விலை கேட்போரை
பரிதாபமாய் பார்ப்பவனின் தோரணையை
கண்டிக்கத் தேவை
கனலேறிய சொல்லொன்று.
***
சாத்தானின் குறுக்கு விசாரணை
என் அந்திமங்களின் மீதேறி
நின்று குதித்து
அப்படியென்ன பிரமாதமாய்
செய்துவிடப் போகிறாய்
அடுக்கி வைத்திருக்கும் தோல்விகளிலிருந்து
ஒன்றை உருவி புரட்டிப் பார்
நீ புரட்டுவது என்னளவில் ஒத்தடமாகிவிடக்கூடும்
எச்சரிக்கையாய் கைகளை
கழுவிக் கொள்வதே
தொலைந்துபோன பால்யத்தின்
இரத்தக் கவுச்சி போக ஏதுவானது
உன் கேலிகள் பட்ட காயங்கள் எதுவும் காயங்களில்லை
அவை எப்போதோ தழும்புகளாகிவிட்டபோதும்
உன் குரூரத்திற்கு தீனி போடவே மனைவி இளமையில் தீட்டிய லிப்ஸ்டிக் சாயத்தை அதில் அப்பியிருக்கிறேன்
என்னை வாட்டிச் சிரிக்கும்
உன் தொழிலில் நீ
பிழைத்துவிட்டுப் போக நானும்
காத்திருக்கிறேன்தான்
என் பரிதாபங்களின் முகத்தில் கடிவாளமிட முயன்றுத் தோற்று
நிரம்பி வழியும்
உன் பிரயத்தனங்களை எதில் சேகரிக்கப் போகிறாய் என்றுதான்
இப்போது கவலையெனக்கு
களமாட வந்த இடத்தில்
எதிரொலிக்கும் புலம்பலை உனக்கு நீ
மடைமாற்றிக் கொண்டதன் விளைவு
கொம்புகள் இருந்த இடத்தில் பூக்கள்
எப்படியேனும் ஏளனம் செய்தே தீருவதாய் எக்களித்து நிற்கும்
உன் உச்சந்தலையில்
ஒரு குட்டு குட்டி சொல்கிறேன்
இப்போதாவது
வாயேன்
சூடாக கொஞ்சம் கதை சேர்த்து
ஒரு தேநீர் அருந்தியபின் யோசிக்கலாம்
என்னை என்ன செய்வதென.
*******