
Whiplash (2014)
Dir: Damien Chazelle | 106 min | Amazon Prime
பொதுவா விறுவிறுப்பான படம்னு சொல்லும் போதே நம்ம மனசுக்குள்ள அது த்ரில்லர் படம் அல்லது ஆக்ஷன் படமா தான் இருக்க முடியும்ங்கிற பொது அபிப்ராயம் இருக்கும். விறுவிறுப்பான டிராமா அப்டினு ஒரு படத்தைப் பத்தி சொன்னா ஒரு வேள அத உங்களுக்குக் கேட்கவே வித்தியாசமா தோணலாம். கலைக்கும் கலைஞனுக்கும் நடுவுல போட்டி நடந்தா அதுல ஜெயிப்பது கலையா இருக்குமா அல்லது கலைஞனா இருப்பானா? தான் ஒரு கலைஞனா கலையோட உச்சம் தொடணும் அப்டிங்குற வெறியோட இருக்குற ஒருத்தனும், அதே கலையை எவன் வழியிலாவது இன்னும் உயரத்துக்கு நகர்த்திடணும்ங்கிற வெறியோட இருக்குற ஒருத்தனும், வாழ்க்கையில ஒரே புள்ளியில சந்திச்சுக்கிட்டா? அது தான் Whiplash.
மனித கற்பனையோட உச்சமா சொல்லப்படுறது இசை தான். ஏன்னா எழுத்தை, ஓவியத்த , ஏன் இது எல்லாத்தையும் உள்ளடக்கிய ஒரு காட்சியைக் கூட நம்மால கற்பனை செஞ்சுட முடியும். இசையை மட்டும் நாம் அதனோட வடிவத்துல இல்லாம வேறு எந்த வடிவத்துலையும் பொருத்தி, அதுவழியா அதுக்கு ஒரு வடிவத்தை குடுக்க முடியாது. இசை பொதுவான மனித கற்பனை தளத்துக்கு அப்பால இருக்குற ஒரு கலை வடிவம். எழுத்து மிகச் சிறந்த மீடியம் தான். ஆனால், அதுக்கும் எல்லைகள் உண்டு. எழுத்து மூலமா வெளிப்படுத்த முடியாத விசயங்களையும் அல்லது தொட முடியாத ஆழங்களையும் காட்சிகள் வழியாவும் (விஷுவல் மீடியம்), காட்சிகளால தொட முடியாத ஆழங்களையும் இசையின் மூலமா தான் கடக்க முடியுது. ‘அந்த சீன்ல வர்ற ம்யூசிக் மனச என்னவோ பண்ணிருச்சுப்பா’ அப்டினு நாம சொல்றது உண்மையில நான் மேல சொன்ன இசை பத்தின கருத்தோட முழுசா ஒத்துப் போறதைப் புரிஞ்சுக்க முடியும்.
ஜாஸ் இசை அமெரிக்காவுல மிக பிரபலமான இசை வடிவம். நியூயார்க் நகரத்துல இருக்குற Shaffer Conservatory of Music அப்டிங்குற இசைப் பள்ளியோட முதலாமாண்டு மாணவன் ஆண்ட்ரூ நேய்மன். அவனுக்கு ஜாஸ் டிரம்மரா சாதிப்பதுதான் வாழ்க்கை, கனவு எல்லாமும். அதே பள்ளியில மிகக் கண்டிப்பான கண்டக்டர் (music conductor) டெரென்ஸ் ஃப்ளட்சர். அந்த இசைப் பள்ளியோட பேண்ட் (இசைக் குழு) லீடரும் அவர் தான். அவரோட குழுவுல இடம் பிடிச்சிட மாட்டோமா அப்டிங்குறது அங்க காலெடுத்து வைக்கிற ஒவ்வொரு மாணவனோட கனவு. ஆனா, அது நனவாகுறது அவ்வளவு சுலபமில்ல. குழுவில இடம் பெற ஃப்ளட்சரோட கவனத்துக்கு அந்த நபர் வரணும். அவருக்கோ மனுஷங்க, அவங்களோட கஷ்டம் எல்லாம் துச்சம். கலையோட உன்னதத்துக்கு முன்னாடி தனி மனுஷ சிரமம் எல்லாம் ஒண்ணுமே இல்லனு பரிபூரணமா நம்புற ஆள் அவர். அவர் கண்ணுல பட்டு குழுவில் ஒரு வழியா சேர்ந்துட்டா, அதுக்கு அப்புறம் இன்னொரு சவால் இருக்கும். அது அவர்கிட்ட தாக்குப் பிடிக்கிறது. மிகக் கடுமையான அவரோட அணுகுமுறைக்கு தாக்குப் பிடிச்சு சமாளிக்கிறதே மிகப் பெரிய விசயம். கொஞ்சமும் இரக்கமில்லாத அவரோட பயிற்சி முறைகள் எவரையும் கசக்கி எறிஞ்சுடும். அவரோட வசவுகளுக்கு தாக்குப் பிடிக்க மலட்டுக் காதும், எதையும் தாங்குற கல்லு மனசும் அவசியம். நூல் பிடிச்ச மாதிரி இருக்குற அவரோட வேலை செய்யும் விதத்துல (working style) வாசிக்கிறதுல மயிரளவு பிசிர் இருந்தாலும் அந்த இசை கலைஞன குப்பையில வீசிட அவர் தயக்கமே காட்டாதவர்.
படத்தோட முதல் காட்சி துவங்குறதுக்கு முன்னாலேயே நாம டிரம்ஸ் இசையை கேட்க ஆரம்பிச்சுடறோம்.அதுக்கு அப்புறம்தான் காட்சியே வருது. ஒரு தனி அறையில தன் கனவ எட்டிப் பிடிச்சிடும் வேகத்துல ஆண்ட்ரூ பயிற்சி செய்யுறான். திடீருனு ஒரு உருவம் முழுக்க கறுப்பு உடையில அவன் முன்னால. ஃபிளட்சர். மிகச் சில நொடிகள் அவன்கிட்ட பேசிட்டு அவன் வாசிக்கிறது கேட்டுட்டு நகர்ந்து போயிடறார். பிறகு சட்டுனு அவரோட குழுவுல இருக்குற டிரம்மருடைய மாற்று ஆளா ஆண்ட்ரூவோட வகுப்புக்கே வந்து அவனத் தேர்ந்தெடுத்து கூட்டிகிட்டு போயிடறார். அதுவே ஒரு பெரிய கனவு தான். அவனுக்குள்ள ஒளிஞ்சு கிடக்கும் திறமைய ஒரு மேதையா அவரு புரிஞ்சுக்கிறாரு. அதனாலேயே அவன கனிவோட நடத்தத் துவங்குறாரு. ஆனா, அது அவன் இசையில முதல் பிசிறு தட்டுற வரையிலும் தான். வந்த உடனேயே அவரோட சர்வாதிகார முகத்தை நேரடியா பார்க்கிற போதும், தனக்கு அது நடக்கும் போது ஆண்ட்ரூ கலங்கிப் போறான். அதை எப்படி எதிர்கொள்றதுனு தெரியாம தவிக்கிறான்.
இப்போதைய நிலையில அவனுக்கு கனவை கைபிடிக்கிறதை விடவும் முக்கியமானதா படுவது ஃபிளட்சர்கிட்ட பேரெடுப்பது தான். பயிற்சி காலை 9 மணிக்குன்னா மிகச் சரியா நொடி சுத்தமா அதே நேரத்துல வர்ற அவர்கிட்ட பேரெடுப்பது என்ன லேசான காரியமா? வெறித்தனமா உழைக்கிறான். விரல்கள்ல இருந்து ரத்தம் கசிகிற அளவுக்கு பைத்திய நிலையில பயிற்சி போகுது. இசைக்கான தேடலுக்கும், உழைப்புக்கும் இடையில அவனுக்கு திரை அரங்குல பார்ட் டைம் வேலை செய்யும் ஒரு பொண்ணோட காதல் அரும்புது. முதன்மை டிரம்மர் டேனருக்கு பதில் ஆளா (alternate to the core drummer) இருக்குற ஆண்ட்ரூவுக்கு இசைக் குழு பங்கு எடுத்துக்கிற ஒரு போட்டியில – அவனாலயே நடந்த ஒரு சின்ன தவறால – டேனருக்கு பதிலா வாசிக்கிற வாய்ப்பு கிடைக்குது. அதுவே குழுவுல அவனுக்கு முதன்மை டிரம்மரா ஆகுறதுக்கான வாய்ப்பாவும் அமைஞ்சு போகுது. அது அவனோட வெறியை இன்னும் அதிகமாக்குது. ஏற்கனவே கடுமையா இருக்குற தன்னோட பயிற்சிகளை இன்னும் கடுமை ஆக்கிக்கிறான். அவன் மூளைக்குள்ள டிரம்ஸோட அதிரும் இசையைத் தவிர எதுவுமே இல்ல. மனசு முழுக்க அந்த கலைய தன்னோட வசமாக்கி யாரும் அதுல எட்டாத உயரத்த அடையணும் அப்டிங்குற தீரா வெறி மட்டும்தான் நிரம்பிக் கிடக்குது. வேகமும், தீவிரமும் அவன் கண்ணை மறைக்குது. காதலை தன்னோட கனவுக்கான தடையா பார்க்குற அளவுக்கு அவன் கனவுப் பித்தேறி அலையுறான். அரும்பின காதலை அவனே கசக்கி எறியுறான். இப்போ இருக்குற ஒரே காதலி அவனோட டிரம்ஸ் மட்டும் தான்.
ஃபிளட்சர்கிட்ட கெடச்ச அங்கீகாரத்தை தக்க வச்சுக்கிறதுதான் ஒரு விதத்துல அவன் வெறியோட இசைக்குள்ள தேடுறதுக்கான மிக முக்கியமான காரணமா இருக்கு. ஒரு நாள் அவனோட இருந்த ‘ரையன் கானலி’ய குழுவுக்குள்ள அழைச்சுகிட்டு வர்றார் ஃபிளட்சர். கொஞ்ச நாள் முன்பு குழுவுக்குள்ள வந்து இணைஞ்ச ஆண்ட்ரூ மாதிரியே இவனோட வருகையும் இருக்கு. டேனருக்கு பதிலா இவனை ஏத்தி அழகு பார்த்த ஃபிளட்சர், இப்போ இன்னொருத்தன கூட்டிகிட்டு வந்திருக்கார். தன்னோட இடம் கேள்விக்குள்ளாகுற போது ஏற்படுற வலிய முதல் தடவையா ஆண்ட்ரூ உணர்றான். தன்னோட இடத்தை தக்கவச்சுக்குற போராட்டத்தோட அடுத்த கட்டத்துக்கு தான் நகர்ந்துட்டதையும் புரிஞ்சுக்கிறான். ஆனா, இப்போ ஆட்டத்தில் நிலை மாறி இருக்கு. தன்னை முன்வச்சு ஒரு காலத்துல டேனர ஓரம் கட்டின ஃபிளட்சர், இப்போ ரையனை முன்வச்சு இவனுக்கும் அதையே பண்றார். அத தாங்க வலு இல்லாம தள்ளாடுறான் ஆண்ட்ரூ.
தானே நல்லா இருக்கப்போ எதுக்கு தனக்கு ஒரு மாற்று அப்டிங்குறது ஆண்ட்ரூவோட தரப்பா இருந்தா, எவனுக்கும் எந்த இடமும் நிரந்திரமில்ல, உனக்கான இடம் வேணும்னா அதுக்கு நீ முழு தகுதியோட இருக்கணும் அப்டிங்குறது ஃப்ளட்சரோட தரப்பா இருக்கு. அடுத்த வருகிற போட்டிக்கு மிகக் கடுமையான பயிற்சிகளை செஞ்சும் கடைசி நேர தடங்கலால ஒரு விபத்துல சிக்கிக்கிறான் ஆண்ட்ரூ. இருந்தும் ரத்தம் வழிய வழிய மேடை ஏறுறான். ஆனா, மனசுக்குள்ள நிறைஞ்சு கிடக்குற இசை இவன் விரல் வழியா டிரம்ஸில் விளையாட முடியல. தளர்ந்து ரத்தம் ஒழுக பரிதாபமா இருக்கும் ஆண்ட்ரூ மேல கடுகளவும் கருணை இல்ல ஃப்ளட்சரோட கண்ணுல. பதிலா தன்னோட குழு ஜெயிப்பதும், அதன் வழியா தன்னோட களங்கப்படாத கௌரவம் நிலைக்கணும் அப்டிங்குற வெறி மட்டுமே அதுல நெறஞ்சு கிடக்குது. அவரோட இந்த ஈரமில்லாத கொடூரத்தை தாங்க முடியாத ஆண்ட்ரூ, அதுவரையிலும் யாரும் செய்ய கற்பனை கூட பண்ணாத ஒரு விசயத்தைச் செய்யுறான். மேடையிலயே அவர் மேல பாஞ்சு அடிச்சுத் தள்ளி ஒரே கலவரமாயிடுது. தன்னோட கர்வத்தை நேரடியா சீண்டிப் பார்த்த இந்த செயல ஃப்ளட்சர் அவ்வளவு லேசா எடுத்துப்பாரா என்ன! இசைப் பள்ளியை விட்டே நீக்கப்படுறான் ஆண்ட்ரூ.
நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து ஒவ்வொரு அங்குலமா பார்த்துப் பார்த்துக் கட்டின கனவின் கோட்டை ஒட்டு மொத்தமா தகர்ந்து போகுது. வெறும் இசைக் குறிப்புகளாலயும், மேதைகளான டிரம்மர்களோட போஸ்டர்களாலையும் நிறைஞ்சிருந்த அவனோட அறையின் சுவர் இப்போ அவனோட மனசு மாதிரியே மூளியா இருக்கு. சகலத்தையும் கிழிச்சு மூட்டை கட்டி குப்பையில கடாசிட்டு தன் வாழ்க்கையை அதனோட போக்குல நடத்த ஆரம்பிக்கிறான். ஒரு உணவகத்துல வேலைக்குப் போக ஆரம்பிக்கிறான். இடையில ஆண்ட்ரூ தன் அப்பா கேட்டுகிட்டதுக்காக ஷான் கேஸி அப்டிங்குறவனோட வழக்கறிஞரை சந்திக்கிறான். அந்த மாணவன் ஷான் பத்தி முன்பு ஒரு முறை தங்களோட வகுப்பு துவக்குறதுக்கு முன்பு ஃபிளட்சர் பேசி இருக்காரு. ஷான் தன்னோட மாணவன்னும் அற்புதமான கலைஞன்னும் அவனப் பாராட்டி, அவனோட இசை குறுந்தட்டு (CD) ஒண்ணப் போட்டு மாணவர்கள கேட்கச் சொல்லி இருந்தார். அவன் முந்தின நாள் ஒரு கார் விபத்துல இறந்திட்டதா சொல்லி இருந்தாரு. ஆனா, இப்போ இவன் வழக்கறிஞர் மூலமா கேள்விப்படுற விசயம் வேற மாதிரி இருக்கு. உண்மையில ஷான் மிக அதிமான மன அழுத்தத்தின் காரணமா தற்கொலை செஞ்சுகிட்டு தான் இறந்திருக்கான். ஷானோட பெற்றோர் அதுக்கு காரணம் ஃபிளட்சர் தான்னு சொல்றாங்க. அவர் மேல சட்டப்பூர்வமா நடவடிக்கை எடுக்கணும்னு உறுதியா இருக்காங்க. ஆனா, அவர் மாணவர்கள மோசமா தான் நடத்துவார் அப்டினு யாரும் சாட்சி தர முன் வராததால அது முடியாமலேயே முடங்கிக் கிடக்கு. முதல்ல தயங்குற ஆண்ட்ரூவ அவனோட அப்பா, இது போல வேற எந்த மாணவனுக்கும் நடக்கக் கூடாது இல்லன்னு பேசி சம்மதிக்க வைக்கிறாரு. அவனோட அடையாளம் வெளிய வரவே வராதுன்னு அந்த வழக்கறிஞர் மூலமா உத்தரவாதம் குடுக்குறாங்க. மனசுக்குள்ள ஷான் மரணத்துக்கு குரல் கொடுக்கணும் அப்டிங்குறத விட, தன்னோட இசைக் கனவ நாசமாக்கின ஃபிளட்சரோட இசை உலக வாழ்க்கைய நாசம் செய்ய இத ஒரு நல்ல வாய்ப்பா பாக்குது அடிபட்ட அவனோட மனசு. வழக்கின் விளைவா விளைவு இசைப் பள்ளியில இருந்து வெளியேற்றப்படுறார் அவர். நாட்கள் அப்படியே நகருது.
தன்னோட இசையோட பிணைஞ்ச கடந்த கால வாழ்க்கையை ஏறத்தாழ மறந்துட்டு வாழ்ந்துகிட்டு இருக்குற ஆண்ட்ரூ, ஒரு நாள் மிகத் தற்செயலாக ஒரு ஜாஸ் கிளப்ல ஃபிளட்சர் ஒரு பியானோ கலைஞரா இருப்பதைப் பார்க்குறான். முன்னாள் எதிரிகள் ரெண்டு பேரும் சந்திச்சுக்குறாங்க. ஃபிளட்சர் தன்னோட அணுகுமுறை கடுமையானதுன்னு ஏத்துகிறாரு. ஆனா, அதனோட நோக்கம் ஒரு கலைஞனை அவனோட திறனைத் தாண்டி ஜொலிக்க வைக்குறது மட்டும்தான்னு நியாயம் பேசுறாரு. அந்த உரையாடலே மிக சுவாரசியமானது. அதை விட சுவாரசியமானது அதுக்கு அடுத்து வர்ற கிளைமாக்ஸ் காட்சி. அதை நான் இங்கயே வார்த்தைகளால விளக்கிட்டா சுவாரசியம் போயிடும். அதனால நான் தவிர்க்குறேன். ஆனா, அந்த காட்சியில தெரிக்கிற கலவையான மனித உணர்வுகளைப் பத்தி சொல்ல ஆசைப்படுறேன். ஒரு ரசிகனா இந்த படத்துலயே நான் ம்ப ரசிச்ச காட்சி இறுதிக் காட்சி தான். சினிமாத்தனமான கிளைமாக்ஸ்தான்னாலும் , இது போன்ற உணர்ச்சிகள் கொப்புளிக்கிற ஒரு கொந்தளிப்பான டிராமாவுக்கு அந்த உச்சம் சரியான பொருத்தம் தான்.
படத்துல மிகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு அம்சம் படத்தொகுப்பு (எடிட்டிங்). இசைக் கலைஞர்கள் பயிற்சிக்குத் தயாராகுற அந்த நிமிஷங்கள் அவ்வளவு கச்சிதமா, நூற்றுக்கணக்கான கட்ஸோட அட்டகாசமாக காட்சிகள் கோர்க்கப்பட்டிருக்கும். அதுக்குப் பிறகு பொங்கி தடதடக்குற இசையோட முன்னறிவிப்பு போல அதெலாம் இருக்கு. இந்தக் கட்டுரையோட முதல் வரியிலயே நான் சொன்ன ‘விறுவிறுப்பான’ அப்டிங்குற வார்த்தையை என்ன சொல்ல வச்சதுல மிக முக்கிய பங்கு இந்த படத்தின் காட்சிகள் எடிட் செய்யப்பட்ட விதத்துல நிச்சயம் இருக்கு. ஆண்ட்ரூ கதபாத்திரத்தை ஏத்து நடிச்சிருக்குற Miles Teller நிஜ வாழ்க்கையில தன்னோட பதினஞ்சாவது வயசுல இருந்தே வாசிக்கிற ஒரு டிரம்மர். டிரம்ஸ் மேல எக்ஸ்பிரஸ் வேகத்துல தடதடக்குற அவரோட கரங்களுக்கு இணையான வேகத்துல நகர்ந்து காட்சிகளை சிறை பிடிக்கிற காமிராவோட துல்லியத்தை ரசனையோட பார்வையாளனுக்கு கடத்துறது மிக நேர்த்தியான எடிட்டிங்கால தான் சாத்தியமாகி இருக்கு.
படம் பத்தின இன்னொரு சுவாரசியம் இந்த படம் இதே பெயருல முதல்ல உருவானது ஒரு குறும்படமாதான் அப்டிங்குறது. அந்த குறும்படமும் யூடியூப் தளத்துல இருக்கு. படத்தோட ஒரு சில காட்சிகள் மட்டும் இதுல வருது. 2013-ஆம் ஆண்டு Damien Chazelle இயக்கத்துலயே வெளியான இக்குறும்படம் சண்டான்ஸ் திரைப்பட விழாவுல பலரோட கவனத்தையும் ஈர்த்துச்சு. அதன் மூலமா முதலீடுகள ஈர்த்துதான் அடுத்த வருடம் அவர் இதை முழுநீளத் திரைப்படமா எடுத்திருக்கார். அந்த குறும்படத்தோட காட்சிகளையும், இந்த படத்தோட காட்சிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தா, ஒரு திரைப்படத்துல காமிரா, லென்ஸோட தேர்வு மற்றும் லைட்டிங் போன்ற விஷயங்களால எப்படி ஒரு காட்சிக்குள்ள மாயாஜாலத்தை நிகழ்த்த முடியும்ங்கிறத கண்கூடா நம்மால பார்க்க முடியுது. பெரிய டெக்னிக்கல் அறிவெல்லாம் கூட இந்த ஒப்பீட்டுக்கு அவசியப்படுறது இல்ல. சாதாரண ரசிக கண்களுக்கே இந்த வித்தியாசம் ரொம்ப எளிதாகவே தெரியுது.
மீண்டும் திரைக்கதைக்கே திரும்பிடலாம். ஒரு குரு ஸ்தானத்துல இருக்குற ஒருவருக்கும், சிஷ்யன் போல இருக்குற ஒருவனுக்கும் இடையில் மூளுற ஈகோ யுத்தமா தான் கதையின் பெரும்பகுதி நகருது. முதல் பகுதி அதுக்கான அச்சாரமா இருக்குதுன்னா, பிற்பகுதி அதுக்கு செயல் வடிவம் தந்தது மாதிரி இருக்குது. ரெண்டு பேருமே தங்களால முடிஞ்ச அளவுக்கு இசைத் துறையில இன்னொருவர் இருக்கவே கூடாது, அவரோட சகாப்தமே முடிஞ்சு போகணும் அப்டிங்குறது மாதிரி மல்லுக்கட்டுறாங்க.
இன்னும் மலராத இசைக் கலைஞனா இருக்குற ஆண்ட்ரூ மொட்டிலயே பொசுங்கிப் போகணும் அப்டிங்குறது மாதிரி தான் இறுதியில ஃபிளட்சரோட தந்திரமான பிளான் இருக்குது. ஒரு வகையில அது அவனுக்கு அவர் செய்யத் துணியுற துரோகம். அதாவது அவன் அவருக்கு செஞ்ச துரோகத்துக்கான பதிலடியா அவர் அதைப் பார்ப்பது போல இருக்குது. இவனும் சளைச்சவன் கிடையாது. தன் பங்குக்கு என்ன சேதத்தை அவருக்கு உண்டாக்கணுமோ அதை செஞ்சுடணும் அப்டிங்குறதுல முனைப்புக் காட்டுறான். ஆனா, ஒரு கணத்துல, இசைங்குற கலை பொங்கி எழுந்து அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து, அங்க இருக்கிற எல்லாரையும் மூழ்கடிக்கிற அந்த மாயாஜால தருணத்துல, அதுவரையிலும் மிகச் சாதாரண மனிதர்களா ஒருத்தர ஒருத்தர் அழிக்கிற ஆவேசத்தோட, அதுக்கான ஒரு ஆயுதம் போல மட்டுமே இசையில தங்களுக்கு இருக்க திறமைய பயன்படுத்திக்கிட்டு இருந்த அவங்க, இசையோட அழுக்கில்லாத ஆன்ம ஒளிக்கு முன்னாடி பேச்சு மூச்சில்லாம நிக்கிறாங்க. மண்டைக்குள்ள ஓடிக்கிட்டு இருந்த கர்வத்தை கரைச்சு, ஆணவத்தை அழிச்சு அவங்கள உடைச்சுப் போடுது இசையோட வல்லமை. இவனை அழிச்சே தீரணும்னு கங்கனம் கட்டிகிட்டிருந்த ஃபிளட்சர் கூட தன்னை மறந்து ஆண்ட்ரூகிட்ட இருந்து பெருக்கெடுக்கிற அந்த ஜீவ இசையோட சுழலுக்குள்ள சிக்கிக்கிறாரு. தன்னோட செருக்க எல்லாம் உதறித்தள்ளிட்டு ஒரு அசலான இசைக் காதலனா, ஆசானா அவனோட இசையை மெருகேத்தி வழிநடத்தத் துவங்குறாரு. அந்த நொடியில உச்ச வேகத்துல நகர்ந்துகிட்டு இருக்க காட்சியோட வேகம் உறைஞ்சு போயி அவங்களோட கண்கள்ல நிலைக்குது. அந்த கணத்துல ரெண்டு மனிதக் கண்கள் சந்திச்சிக்கிட்டாலும் அது பார்க்குறது பரஸ்பரமா தங்களுக்கு முன்னால பிரம்மாண்ட வடிவமெடுக்குற இசையைத்தான். அந்த கணத்துல சகல குறைகளோடவும், சிறுமைகளோடவும் இருக்குற ரெண்டு கலைஞர்கள், தங்களை விடவும் ஆகப் பெருசா இருக்குற இசைங்குற பெருங்கலை வடிவத்துக்கு முன்னாடி மண்டியிடுறாங்க. தங்கள அதுக்கு ஒப்புக் கொடுக்குறாங்க. அந்த இடத்துல கலைஞர்களை கலை மிஞ்சுது. கலையோட நிரந்திரமான தன்மையை அனுபவிக்கிற நாமளும் அதனோட அளக்க முடியாத பிரம்மாண்டத்துல ஒரு மிக சாதாரண பார்வையாளனா கரைஞ்சு போயிடறோம் அப்டிங்குறதுதான் அழிக்க முடியாத உண்மை.
குறிப்பு:
குறும்படத்திற்கான லிங்க்: https://www.youtube.com/watch?v=ihNa3rXeerI
(தொடரும்…)