கிரிஸ்டோப் கீஸ்லோவ்ஸ்கி போலந்தின் மிக முக்கியமான இயக்குனர். தொன்னூறுகளில் அவர் இயக்கி வெளியிட்ட Three Colours – Trilogy படங்கள் அவருக்குப் பெரும் சர்வதேச கவனத்தைப் பெற்றுத் தந்தன. அதில் BLUE மற்றும் RED எனக்கு மிகவும் பிடித்த படங்கள். மனிதர்கள் தங்கள் தேவையின் பொருட்டு நேர்ந்துகொள்ளும் உறவுகளும், காதலும் அதன் ஆழ அகலங்கள் கூடிய வெறுமையும், அந்த வெறுமை உணர்ச்சி மனிதரில் ஏற்படுத்தும் வெடிப்புகளும் அவரது இந்த இரண்டு படத்தின் பிரதான அம்சங்கள். மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு எழுதப்பட்டு கலை மேதைமையோடு காட்சிப் படுத்தப்பட்ட படங்கள் என்று இந்த இரண்டு படங்களை மட்டுமல்லாமல் அவரது எல்லா படங்களையும் நாம் சொல்ல முடியும்.
கிரிஸ்டோப் கீஸ்லோவ்ஸ்கியை நான் அறிய நேர்ந்தது மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமாரின் மூலமாகத்தான். என் ஞாபகம் சரியென்றால் 2002 அல்லது 2003 ஆம் ஆண்டில் ‘நிழல்’ பத்திரிகையில்
“இத்தனை மழைக்குப் பிறகும்” என்ற தலைப்பில் கிரிஸ்டோப் கீஸ்லோவ்ஸ்கியின் சுயசரிதையின் ஒரு பகுதியை மொழிபெயர்த்து முத்துக்குமார் வெளியிட்டார். வெகுகாலம் என் சேமிப்பில் இருந்த அந்தக் கட்டுரையை காலம் ஏற்படுத்திய இடமாற்றத்தால் நான் இழக்க நேரிட்டது. பின்னாளில் அந்தக் கட்டுரையை தீவிரமாகத் தேடினேன் என்றாலும் வாசிக்கக் கிட்டவில்லை.
கீஸ்லோவ்ஸ்கியின் தந்தை ஒரு கட்டிடடப் பொறியாளர். சராசரி நடுத்தர வர்க்க குடும்பம். எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்ட அவரது தந்தை ஐம்பது வயதைத் தொடும் முன்னே இறந்துவிட்டார். கீஸ்லோவ்ஸ்கி திரைப்படக் கல்லூரியில் சேரவேண்டும் என பிடிவாதமாக இருந்து அதை சாதித்தவர் அவரது அம்மா. இளம் வயதில் கீஸ்லோவ்ஸ்கி நுரையீரல் பாதிப்பு கொண்டிருந்தார். எனவே அவரது நண்பர்களைப்போல கால்பந்தாட்டம் ஆடவோ, சைக்கிளில் ஊர் சுற்றவோ அவர் விரும்பவில்லை. அவரது உடல்நிலையும் அதற்கு ஒத்துழைக்கவில்லை. ஆகவே செலவழிக்க நிறைய நேரம் இருந்தது. இயல்பாகவே வாசிப்பில் நாட்டம் சென்றது. ”நல்ல புத்தகமோ அல்லது பிடிக்காத புத்தகமோ எனக்கு வாசிக்கப் பிடிக்கும். என் இளம் வயதில் நான் வாசித்த புத்தகங்கள் என்னை மிகவும் பாதித்தன; என்னை ஒரு உணர்வுமிக்கவனாக [Sensible] உருவாக்கின.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
போலந்தின் திரைப் படக்கல்லூரியில் இரண்டு வருடங்கள் முயற்சி செய்த பின் மூன்றாவது வருடம் அவருக்கு இடம் கிடைத்தது. திரைப்படக் கல்லூரியில் சேரும் முயற்சியில் இருந்தபோது ராணுவ சேவைக்கு அழைப்பு வந்தது. அதை எப்படியாவது தவிர்க்க வேண்டும் என்று அவர் ஒரு வருடம் ஓவியம் படித்தார். ஓவிய ஆசிரியராக வேண்டும் என்று சுற்றி இருப்பவர்களை நம்ப வைப்பதற்காக கடும் முயற்சி செய்வது போல நடந்துகொண்டார். ராணுவ நேர்காணலின் போது ‘நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்? உங்களால் என்னென்னவெல்லாம் செய்ய முடியும்?’ என்று கேட்ட போது, ‘நான் எதையும் செய்ய விரும்பவில்லை. என் எதிர்காலம் பற்றி எனக்கு யாதொரு திட்டமும் இல்லை’ என்று சோர்வுடன் பதில் சொன்னார்.
ராணுவ அதிகாரிகள், ‘கீஸ்லோவ்ஸ்கி ஆரம்பகட்ட மனப்பதட்ட நோயில் இருப்பதாகவும், அவர் ராணுவத்தில் பணியாற்றும் அளவுக்கு தகுதியான ஆளில்லை என்றும், இப்படியான ஆளிடம் துப்பாக்கி சென்று சேர்வது நாட்டுக்கு நல்லதில்லை’ என்றும் சான்றிதழ் வழங்கினார்கள். கீஸ்லோவ்ஸ்கி அதை மகிழ்ச்சி பொங்க ஏற்றுக்கொண்டார். ‘ஒருவேளை நான் தப்பித்தவறி ராணுவத்தில் சேர்ந்திருந்தால் முதலில் என் மேலதிகாரியைத்தான் சுட்டுக் கொன்றிருப்பேன்’ என்று கீஸ்லோவ்ஸ்கி, வேடிக்கையாக சொல்லியிருக்கிறார்.
”நான் என்னை ஒரு சர்வதேச மனிதனாக ஒருபோதும் உணர்ந்ததில்லை. நான் என்னை ஒரு போலந்துவாசியாகவே கருதிக்கொள்கிறேன். வேலை நிமித்தம் நான் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால், என் நாட்டைவிட்டு வேறு நாட்டுக்கு செல்லும் போதெல்லாம் எனக்குள் சுழலும் எண்ணங்கள் எல்லாமும் மீண்டும் நாடு திரும்புவது பற்றியதாக மட்டுமே இருக்கும். போலந்தின் அரசியல் நடைமுறைகளை, கட்சி அரசியலை நான் ஒருபோதும் கருத்தில் கொள்வதில்லை. ஆனால், நான் போலந்தை மிகவும் ஆழமாக நேசிக்கிறேன். என் நாட்டை பாதிக்கும் எல்லாமும் என்னையும் சேர்ந்தே நேரிடையாகவே பாதிக்கின்றன. நான் போலந்தில்தான் பிறந்தேன், என் இறப்பும் போலந்தில் மட்டுமே நிகழும்.” என்று அவர் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.
கிரிஸ்டோப் கீஸ்லோவ்ஸ்கி -யின் Dekalog திரைப்படம் மிக முக்கியமான ஒன்று. போலந்து தொலைக்காட்சிக்காக கீஸ்லோவ்ஸ்கி இயக்கிய இந்தப் படம் பத்து அத்தியாயங்கள் கொண்டது. எல்லா அத்தியாயங்களும் ஒருமணிநேரப் படங்களை உள்ளடக்கியது. [நெட்ப்ளிக்ஸ், அமேஸான் என இணையம் வழி சினிமா ஒளிபரப்பும் நிறுவனங்கள் இப்போது குறும்பட தொகுப்புகளை [Short Film Anthology] உருவாக்குவதற்கு ஒரு வகையில் முன்னோடி கீஸ்லோவ்ஸ்கி எனலாம்.] கீஸ்லோவ்ஸ்கி-யின் நண்பரும் வழக்கறிஞரும், அவருடன் நிறைய படங்களில் பங்களித்துள்ளவருமான கிரிஸ்டோப் ஃபிஸேவிக் திரைக்கதை எழுதிய படம். விவிலியத்தில் சொல்லப்பட்டுள்ள பத்து கட்டளைகள் இந்த பத்துப் படங்களின் பிரதான மையம் என்று சொல்லலாம்.
”மனிதர்களாகிய நம் வாழ்வு தருணங்களாலும் சந்தர்ப்பங்களாலும் ஆனது. மனித வாழ்வின் விதி என்பதே அவன் உருவாக்கிக் கொள்ளும் சந்தர்ப்பங்களால் அல்லது சந்தர்ப்பங்களை எதிர்கொள்ள நேரிடும் சாமர்த்தியங்களால் ஆனது. சந்தர்ப்பங்களை மனிதர்கள் எதிர்கொள்ள நேரிடும் போது நிகழும் நிகழ்தகழ்வையே நாம் விதி என்று கொள்ள முடியும்” என்பது கீஸ்லோவ்ஸ்கி-யின் ஆணித்தரமான நம்பிக்கை. இது அவரது எல்லா படங்களிலும் மைய இழையாக அடிநாதமாக படிந்திருப்பதைக் காணலாம், குறிப்பாக Dekalog திரைப்படத்தின் எல்லா அத்தியாயங்களிலும்.
எனக்கு மிகவும் பிடித்த, படத்தின் ஆறாவது அத்தியாயமான A Short Film About Love – திரைப்படத்தின் நாயகன் டோமெக் – தபால் அலுவலகத்தில் வேலை செய்கிறான். பத்தொன்பதே வயது நிரம்பிய, தனிமையான சுபாவம் கொண்ட அவன் தன்னைவிட வயதில் மூத்த பெண்ணின் அந்தரங்க செயல்பாடுகளை தொலைநோக்கி வழியே வேவு பார்ப்பவனாக இருக்கிறான். தனது வீட்டின் அருகாமையில் இருக்கும் அந்தப் பெண்ணின் அடுக்கக சன்னல் வழியே உள்ளே என்ன நடக்கிறது என்று பார்ப்பதுதான் அவனது அன்றாட வேலையாக இருக்கிறது. அந்தப் பெண் அவளது காதலனுடன் தனிமையில் மகிழ்ந்திருக்கும் வேளையில் சமையல் எரிவாயு கசிவு இருக்கிறது என்று பொய்ப்புகார் கொடுத்து அந்தப் பெண்ணின் வீட்டு முகவரியை கொடுத்துவிடுகிறான். அந்தப் பெண்ணின் வீட்டுக்கு, அகால வேளையில் பணியாளர்கள் வந்து தொந்தரவு செய்வதைப் பார்த்து மகிழ்ச்சி அடைபவனாக இருக்கிறான். அவனுக்குள் மெல்ல மெல்ல உருவாகி வளர்ந்து கொண்டிருக்கும் தீமையின் மலர்களை அவன் இரவின் தனிமை சூழ் பாழ் வெளியில் ஒற்றைக் கண் வெளிச்சத்தில் பார்க்கிறவனாக அவனை உலவவிட்டுருக்கிறார் கீஸ்லோவ்ஸ்கி. அவனது கீழ்மைகளை சொல்ல விரும்பிய கீஸ்லோவ்ஸ்கி, அவன் குளியறைக்குழாயில் நீர் பிடித்து சுடவைத்து அதில் தேநீர் பருகுபவனாக காட்சிப்படுத்தியிருக்கிறார். படத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட தடவை இந்தக் காட்சி இடம்பெற்றுள்ளது.
அந்தப் பெண்ணுக்கு அவளுடைய காதலனுடன் ஒரு பிரிவு நேரிடும்போது அவள் தனிமையில் அழுகிறாள். அதைப்பார்க்கும் அவன் அவனது அம்மாவிடம் மனிதர்கள் ஏன் அழுகிறார்கள் என்று கேட்கிறான். “மனிதர்கள் பல காரணங்களுக்காக அழுகிறார்கள். அவர்கள் அதிகம் நேசித்தவர்கள் அவர்களை விட்டுப் பிரியும்போது அல்லது இறந்து போகும்போது, தனிமையை எதிர்கொள்ள இயலாது போகும்போது, சக மனிதர்களால் ஆழமாக காயப்படும்போது, இந்த வாழ்க்கையை அதன் தீவிரத்தை எதிர்கொள்ள இயலாது மூச்சுமுட்டும் போது என பல காரணங்களுக்காக மனிதர்கள் அழுகிறார்கள்’’ என்று அம்மா பதில் சொல்கிறாள்.
ஆனால், அந்தப்பெண்ணை தனியே சந்திக்கவும் உரையாடவும் வாய்க்கும் போழ்தில் டோமெக்-கினால் சமநிலையுடன் இருக்க முடியவில்லை. அவள் அவளைப்பற்றி எல்லா உண்மைகளையும் சொல்லிய பின்னர் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறாய் என்று கேட்கிறாள். நான் உன்னை காதலிக்கிறேன், எனக்கு வேறெதுவும் தேவையில்லை என்று அவன் பதில் சொல்ல, ”காதல்” என்ற ஒன்று இந்த உலகத்தில் இல்லை என்கிறாள். அவளின் உண்மையை எதிர்கொள்ளமுடியாத அல்லது எதிர்கொள்ளத் தெரியாத அவன் அவனது மணிக்கட்டை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயல்கிறான். காதலை அதன் கள்ளமின்மையின்பால் சூல் கொள்ளும் உன்மத்தத்தை, மெல்ல மெல்ல காதல் என்ற உணர்வை சூறையாடும் மனிதர்களின் சுயநலத்தை, [இதில் ஆண் பெண் என்கிற பேதமில்லை. காதலென்னும் மானுட உணர்வைக் கொன்று சாய்ப்பதில் அவர்களுக்கிடையே ஆதாம் காலத்தில் இருந்தே போட்டி இருந்துகொண்டிருக்கிறது.] இந்தப்படம் ஆணித்தரமாய் காட்சிப்படுத்தியிருக்கிறது.
‘வயோரிஸம்’ எனப்படும் அடுத்தவர் அந்தரங்கத்தை கூர்ந்துநோக்கும் டோமெக்-கை அவள் விரும்ப ஆரம்பிக்கிறாள். அவனது இருப்பை அவனோடு இருக்கும் பொழுதுகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறாள். அவன் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சைக்கு போய்விடுகையில் அவள் கொள்ளும் அவஸ்தை சொல்லி மாளாதது. அவன் அவளாகவும் அவன் அவளாகவும் மாறிப்போகிற வினோத சூழ்நிலையில், அவன் இல்லாத அவனது வீட்டை அவள் தொலைநோக்கியில் பார்ப்பவளாக மாறிப்போகிறாள். காதலின் விந்தையை, மனித மனம் கொள்ளும் விசித்திரங்களை, அதன் பூடக நேர்த்தியை கவித்துவமாக சொல்லி முடிக்கிறார் கீஸ்லோவ்ஸ்கி.
Dekalog – திரைப்படத்தின் இரண்டாவது அத்தியாயத்தில் ஒரு காட்சி வருகிறது. ஆண்மையில்லாத கணவன் மருத்துவமனையில் சாகக் கிடக்கிறான். இன்னொருவர் மூலம் கர்ப்பமாயிருக்கும் அவனது மனைவி, மருத்துவரிடம் என் கணவர் பிழைத்து விடுவாரா என்று கேட்கிறாள். உண்மை என்னவெனில் அவளது கணவன் பிழைத்துவிட்டால் அவள் அந்தக் குழந்தையை கருக்கலைப்பு செய்ய நேரிடும். அவளது கணவன் செத்துப்போய்விட்டால் அந்தக் குழந்தையை அவள் பெற்றெடுப்பாள். இந்த அபத்த எதிர்முனை உண்டாக்கும் ஒளிச்சிதறல் வாழ்வின் சுவர்மீது பட்டு எதிரொலிக்கிறது. இந்த இடத்தில் அந்த மருத்துவரின் பங்கு என்ன அல்லது கடவுளின் பங்குதான் என்ன? அவர்கள் அந்தப் பெண்ணுக்கு எதை அளிப்பார்கள்? வாழ்ந்து மரணத்துடன் போராடிக்கொண்டிருக்கும் ஓர் உயிர் பிழைக்க வைக்கும் அற்புதத்தையா அல்லது கருவிலே கடவுளின் ஆணையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அந்தக் குழந்தையின் வேண்டுகோளையா? மனிதராய் இருப்பது சுலபத்திலும் சுலபம். கடவுளாய் இருப்பதுவும் கடினமே. கடவுளின் அகங்காரம் மனித இருப்பின் முன்னே இற்று வீழ்ந்துபோவதை நாம் கீஸ்லோவ்ஸ்கியின் படங்களில் காண முடியும்.
கீஸ்லோவ்ஸ்கியின் டிரையாலஜி படங்களில் ஒன்றான RED திரைப்படத்தில் டொமேக்-கை பிரதி செய்த பாத்திரம் போல் ஒய்வு பெற்ற நீதிபதியின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பணி ஒய்வு பெற்ற அந்த நீதிபதி வீட்டில் இருக்கும் நேரங்களில் சக மனிதர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பவராக இருக்கிறார். அவருக்கு தான் செய்யும் அந்த நேர்மையற்ற செயல் பற்றி எந்தக் குற்றவுணர்வும் இல்லை. அடுத்தவர் அந்தரங்கத்தை ஒட்டுக்கேட்பதை அவர் ஒரு சாகசம் போலவே செய்கிறார். அது பற்றிய பெருமித உணர்வும் கொண்டவராகவே அவர் இருக்கிறார். ஒரு கட்டத்தில் வேலண்டைன் அவரது செயல்களை கண்டறிந்து அது பற்றிக் கேள்வியெழுப்பும்போது அவர் அவளின் போதை மருந்துக்கு அடிமையாகிப் போன தம்பியைப் பற்றிச் சொல்லி அவளை அதிர வைக்கிறார். அவள் அவரைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளவும் அறிந்துகொள்ளவும் விரும்புகிறாள். வேறு நாட்டில் இருக்கும் அவள் காதலன், போதைக்கு அடிமையான தம்பி, என அவள் உலகின் ஆண்கள் அயர்ச்சியை அளிக்கிறவர்கள். இயல்பாகவே அவளுக்கு அவரின் மீது ஒரு நாட்டம் உருவாகிறது. அவளது கள்ளமின்மை, பூடகமான அழகு, வெளிப்படைத் தன்மை என எல்லாமும் சேர்ந்து நீதிபதியை மனம் மாற வைக்கிறது. எவரும் அறிந்திராத அவரது கடந்தகாலத்தை வாலண்டைனிடம் சொல்கிறார். அவர் தன் தவறுகளை ஒப்புக்கொண்டு தண்டனையை ஏற்கத் தயாராகிறார். ஒரு பெண்ணின் அசலான இருப்பும், அவளுடனான உறவால் ஓர் ஆணுக்குள்ளே நிகழும் திருவுருமாற்றமும் என அர்த்தபூர்வமான ஒளிப்பதிவாலான காட்சிகளும், ஒளிப்பதிவில் வெளிப்படும் வண்ணங்களும் இந்தப் படத்தை ஒரு மீ மெய்யியல் அனுபவமாக பார்வையாளர்களுக்கு அளிக்கின்றன.
போலந்தில் முதலில் நாஸி ஜெர்மனியால் ஆக்கிரமிப்பு, போருக்குப் பிந்தைய மூச்சுத் திணற வைக்கும் கம்யூனிச ஆட்சி. கீஸ்லோவ்ஸ்கியின் ஆரம்பகால ஆவண / புனைவுப் படங்கள் அப்போதைய போலந்தில் நிலவிய அரசியல், சமூக நெருக்கடியை பற்றிப் பேசுவதாக இருந்தன. ஆனால், அவருடைய பிற்கால புனைவுப் படங்களில் பிரதான பேசுபொருளாக அரசியல் இருக்கவில்லை. மாறாக மனித வாழ்வும் அதன் இருண்ட பக்கங்களும், அதனூடே வெளிப்படும் வெளிச்சங்களும், மனித யத்தனங்களும் அதை மீறிய மனங்களின் விகசிப்பும் பிரதானமாக இருந்தன. ”பாசிசமோ, கம்யூனிசமோ மக்களை நெருக்கடிக்கு ஆளாக்கும் எந்த ஒரு அரசியல் சித்தாந்தமும் தானாகவே வீழ்ச்சியை சந்திக்கும்” என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது.
கீஸ்லோவ்ஸ்கியின் படங்களை அவருக்கும் இந்த மேலான பிரபஞ்சத்துக்கும் இடையே நடந்த ஆத்மார்த்தமான உரையாடல்கள் என்று சொல்லாம். ஆழ் மனமும் ஆத்மார்த்தமும் சேர்ந்து உரையாடுவதைப் போலத்தான் அவர் தனது கதாபாத்திரங்களை [அவை எதிரெதிர் குண வார்ப்புகளைக் கொண்டிருந்தாலும்] வடிவமைத்தார். RED திரைப்படத்தில் பிறரது அந்தரங்க உரையாடல்களை ஒட்டுகேட்டும் நீதிபதி ஒரு அறிமுகம் இல்லாத பெண்ணொருத்தியின் இருப்பால் ஈர்க்கப்பட்டு தன் தவறை ஒப்புக்கொண்டு தண்டனையை ஏற்றுக்கொள்கிறான். அந்தப் பெண் பயணம் செய்த கப்பல் விபத்துக்குள்ளாகும் போது பதைபதைப்புடன் தொலைக்காட்சியில் மீட்புப் பணிகளை பார்த்துக்கொண்டிருக்கிறான். BLUE திரைப்படத்தில் கணவனையும் மகளையும் விபத்தில் இழந்த ஜூலி தனது எல்லா அடையாளங்களையும் துறந்து எதுவுமில்லாமல் வாழ முயற்சிக்கிறாள். ஆனால், அப்படி எல்லாவற்றையும் துறந்து வாழ முடியுமா? மனிதர்களுக்கும் வாழ்க்கைக்குமான தொடர்பு ‘துறத்தல்’ மூலம் ஒன்றுமில்லாமல் போய்விடுமா? மனித வாழ்வின் அகங்காரமும் அடையாளமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவனா? எல்லாம் போன பின்னும் மனிதனிடம் எஞ்சியிருக்க வேண்டியது என்ன? அடையாளம் துறத்தல், பருப்பொருள் வாழ்வைத் துறத்தல் என்பதையும் மீறி விகசிக்கும் ஆன்மாவின் ஒளிரல் என்னவாகும்? ஒரு மனிதனால் அவன் சுயத்தை, அதன் ஆன்மாவைத் துறக்க முடியுமா? நாமெல்லாரும் தனி உடல், தனி மனம் என தனித்திருந்தாலும் இந்தப் பிரபஞ்சத்தின் வழி பிணைக்கப்பட்டவர்கள் இல்லையா? முடிவில்லாத கேள்விகள். கீஸ்லோவ்ஸ்கியின் படங்கள் மீ மெய்யியல் தன்மை கொண்டவை. அவருடைய படங்களின் எளிமை நம்மை ஏமாற்றும்தன்மை கொண்டவை. ஆனால், அதன் ஆழத்துள் ஒளிரும் ஆன்மாவை நாம் கண்டுகொண்டால் அவருடைய படங்கள் வெறும் படங்கள் அல்ல.
#####
மேதைமையின் இனிமையும் மொழிப்புலமையும் – வெ ஸ்ரீராம்
பதிப்பாளராக ஆன பின்னால் ஏற்பட்ட ஓர் சௌகர்யம் என்னவெனில் எழுத்தாளர்களை, மொழிபெயர்ப்பாளர்களை தனிப்பட்ட முறையில் சந்திக்க முடியும் என்பதுதான். ஒரு வாசகர் – எழுத்தாளர் சந்திப்பாக அது இல்லாமல், படைப்பு சார்ந்தும் மொழிபெயர்ப்பு குறித்தும் நிறைய பகிர்ந்துகொள்ளும் செறிவான உரையாடலாக அது இருக்கும். ஒரு வாசகனாக மொழிபெயர்ப்பாளர் எம்.எஸ்- ஸாரிடம் அறிமுகம் ஆன பின்னர்தான் செகாவ் கதைகளை தமிழில் மொழிபெயர்த்துத் தர முடியுமா என்று அவரிடம் கேட்டேன். பாதரசம் என்ற பதிப்பகம் உருவானது எம்.எஸ் என்ற ஆளுமையினால்தான் என்பதை எப்போதும் நன்றியுடன் நினைவு கூற விரும்புகிறேன்.
எம்.எஸ்-ஸாருக்கு பின்னர் நான் அதிகம் சந்தித்து உரையாடியடியதும் கற்றுக்கொண்டதும் ஆர் சிவகுமார் ஸாரிடம் தான். ‘இரண்டு வார்த்தைகளும் மூன்று துறவிகளும்’ தொகுப்பாக்கத்தின் போது அவரை வாரம் ஒருமுறை சந்தித்து உரையாடவும் பிரதி செம்மையாக்கம் செய்யவும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சந்திப்புகளின் போது ஒற்றுப் பிழைகள், வாக்கிய அமைப்புகள், இலக்கண வகை முறைகள், குறிப்பிட்ட வார்த்தைகளை குறிப்பிட்ட இடத்தில் பயன்படுத்தும் போது வாக்கியங்களில் நிகழும் அர்த்த வேறுபாடுகள் அல்லது மாறுதல்கள், மொழிபெயர்ப்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விதிமுறைகள், வழிமுறைகள், மூலப் பிரதியுடன் ஒப்பிட்டு செய்யவேண்டிய பிரதி செம்மையாக்கம் என நிறையவே கற்றுக்கொள்ள முடிந்தது. புத்தகம் அச்சுக்கு போகும் முன்னாளது வரையிலும் கூட சிவகுமார் ஸார் அழைத்து திருத்தங்கள் செய்ய வேண்டும், முடியுமா என்று கேட்டிருக்கிறார். மொழிமீது அவருக்கு இருக்கும் ஆழமான பற்றும் மொழியைக் கையாளும்போது வெளிப்படும் ஆளுமையும் அக்கறையும் இளைய தலைமுறை வாசகர்கள், புதிதாக எழுத வருபவர்கள், பதிப்புத்துறையில் வேலை செய்ய விரும்புபவர்கள் என அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டியவைகள் என்பேன்.
நான் அதிகம் பேசிப் பழகியதில்லை என்றாலும் பெரிதும் மதிக்கும் மொழிபெயர்ப்பாளர் வெ. ஸ்ரீராம். அறுபது / எழுபது காலகட்டங்களில் நா. தர்மராஜன், ரா. கிருஷ்ணையா உள்ளிட்ட மொழிபெயர்ப்பாளர்கள் ரஷ்ய மொழியைக் கற்றுக் கொண்டு நேரடியாக ரஷ்ய பேரிலக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்தார்கள். அதற்குப்பிறகு ஆங்கிலம் அல்லாத வேற்று மொழியில் இருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்த்தது வெ. ஸ்ரீராம் ஸார் மட்டுமே. எண்பதுகளின் தொடக்கத்தில் அவர் மொழிபெயர்த்த ஆல்பர்ட் காம்யு வின் ‘அந்நியன்’ நாவல் தமிழ் மொழிபெயர்ப்புலகில் ஒரு திருப்புமுனை என்றே உறுதியாகச் சொல்லலாம். குட்டி இளவரசன், சொற்கள்- ழாக் ப்ரெவர், சின்னச் சின்ன வாக்கியங்கள், காண்டாமிருகம், முதல் மனிதன், தொலைக்காட்சி – ஒரு கண்ணோட்டம், பிரெஞ்ச் சினிமா – புதிய அலை இயக்குனர்கள் என அவர் மொழிபெயர்ப்பில் தமிழுக்கு அளித்த பங்களிப்பு பெரியது, காத்திரமானதும் கூட.
பத்தாண்டுகளுக்கு முன் ஆண்டன் செகாவ் கதைகளை தமிழில் பதிப்பித்தவுடன் ஒரு அசட்டு தைரியத்தில் எழுத்தாளர் அசோகமித்திரனை சந்திக்கச் சென்ற மாதிரிதான், மொழிபெயர்ப்பாளர் வெ ஸ்ரீராம் அவர்களையும் சந்தித்தேன். கிடைத்த சில நிமிடங்களில் நிகழ்ந்த சம்பிரதாய சந்திப்பு அது. பின்னர் அவரது தொடர்பு எண்ணைப் பெற்று நேரம் கிடைக்கும்போதெல்லாம் பேசுவேன். அப்படியாகப் பேசிப் பேசிப் பல ஆண்டுகளுக்கு பின்னர் சமீபத்தில் அவரைச் சந்திக்கும் நல்வாய்ப்பு கிடைத்தது.
இனிமையுடனும் முகமலர்ச்சியுடனும் வாசலுக்கு வந்து வரவேற்றார் ஸ்ரீராம் ஸார். சந்திப்பு முடிந்து வழியனுப்பும் போதும் வாசலுக்கு வந்து விடை கொடுத்தார். [இந்தப் பழக்கம் முந்தைய தலைமுறையிடம் காணப்படும் அரிதான பண்பு. நாம் கிட்டத்தட்ட இம்மாதிரியான பழக்கத்தை விட்டொழித்துவிட்டோம்.] அவரைச் சந்தித்து பேசிய ரெண்டு மணி நேரங்களை பொழுதை பொன் செய்த கணங்கள் என்பேன். அதிகம் குறுக்கீடு செய்யாமல் அவர் பேசியதை அமைதியாகக் கேட்டுக்கொண்டி ருந்தேன். பிரெஞ்சு இலக்கியத்தில் இருந்து முக்கியமான மொழியாக்கங்களை தமிழுக்கு கொண்டுவந்திருந்தாலும் அது குறித்த பெருமிதங்கள் ஏதும் அவரிடம் இல்லை. மொழிபெயர்ப்பாளர்களில் நான் சந்தித்த மூன்றாவது நிறைகுடம் வெ. ஸ்ரீராம் ஸார்.
”நான் முழுநேர மொழிபெயர்ப்பாளன் இல்லை. எல் ஐ சி -யில் குமாஸ்தா வேலை செய்துகொண்டே பகுதி நேரமாக மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டேன். நான் நடுத்தர வர்க்கத்தைச் சேர்த்த சராசரி குடும்ப மனிதன். அதற்கு மேல் என்னைப்பற்றிச் சொல்லிக்கொள்ளும் படியாக எதுவும் இல்லை” என்பது அவரது சுய அறிமுகம். அவரை ஒரு மொழிபெயர்ப்பாளராக நாம் ஓரளவுக்கு அறிவோம். ஆனால் தமிழ், பிரெஞ்சு என இரண்டு மொழிகளில் வேலை பார்த்து ஒய்வு பெறாமல், இன்றும் அதே ஆர்வத்துடனும் கூர்மையுடனும் வேலை செய்துகொண்டிருக்கும் அவரின் தமிழ் சமூக இயங்கியல் குறித்தான புரிதல் அபாரமானது. அதை அவர் தனிப்பட்ட பேச்சில் மட்டுமே பகிர்ந்து கொள்வார். [காம்யுவை பற்றி அவர் மணிக்கணக்கில் கண்கள் விரியப் பேசுவார், அதைப்போலவே முன்னாள் முதல்வர் கலைஞரைப் பற்றி அவர் பேசிக் கேட்க வேண்டும்.அபாரம்.]
நான் அவருடைய ஆரம்பகால மொழிபெயர்ப்பு அனுபவங்களைப் பற்றிக் கேட்டேன். அந்த நினைவுகள் அவருக்கு எப்போதும் உவப்பானவை என்பதை நான் அறிவேன். அவர் மெல்ல ஆரம்பித்தார். அவருடன் நிகழ்ந்த அற்புதமான உரையாடலிலிருந்து சில முக்கியமான விஷயங்களை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
- இது அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியது. அவருடன் உடன் பிறந்தவர்கள் பத்து பேர். வெ. ஸ்ரீராம் இரண்டாவதாகப் பிறந்தவர்.படிப்பு முடிந்தவுடன் எல் ஐ சி -யில் பணியில் சேர்கிறார். தேர்வுகள் எல்லாம் எழுதி பதவி உயர்வு வரும்போது மறுத்துவிடுகிறார். காரணம் பதவி உயர்வு கிடைத்தால் வேறு ஊருக்கு பணி மாறுதலாகிச் செல்ல வேண்டும். வீட்டைக் கவனிக்க முடியாமல் போய்விடும். இதைச் சொல்லும்போது அவரது கண்களை உற்றுக் கவனித்தேன். அதில் சுய பச்சாதாபமோ அல்லது தியாக உணர்வோ கொஞ்சமும் இல்லை. மாறாக குடும்பத்தின் மீது அன்பும் அக்கறையும் கொண்ட ஒரு சராசரி மனிதனையே கண்டேன்.
- இரண்டாவது அவரது ஆரம்பகால இலக்கிய / மொழிபெயர்ப்பு நட்பைப் பற்றியது. 1980-ஆம் வருடம் ‘க்ரியா’ ராமகிருஷ்ணன், ந.முத்துசாமி உள்ளிட்ட பிரக்ஞ பத்திரிகை நண்பர்கள் வெ.ஸ்ரீ யை மொழிபெயர்க்கத் தூண்டுகிறார்கள். ஒரு உள்ளார்ந்த உத்வேகத்தில் ஆல்பர்ட் காம்யு வின் அந்நியன் நாவலின் பத்து பக்கங்களை மொழிபெயர்ப்பு செய்து நண்பர்களிடம் படிக்கக் கொடுத்தார். மொழிபெயர்ப்பில் வெளிப்பட்ட மொழி, நவீனமும் தனித்துவமும் வாய்ந்தது என்று ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் சொல்ல, ந.முத்துசாமி இந்த நாவலை முழுதுமாக மொழிபெயர்த்துவிடு, இல்லையென்றால் நான் உன்னிடம் பேசமாட்டேன் என்று உரிமையுடன் சொல்லியிருக்கிறார். பின்னர் அந்நியன் நாவலை முழுவதுமாக மொழிபெயர்த்து க்ரியா வெளியீடாக கொண்டுவருகிறார் ராமகிருஷ்ணன். அதற்குப் பின்னர் நிகழ்ந்ததெல்லாம் மாயாஜாலம்.[‘‘ந.முத்துசாமிக்கு என் அண்ணன் வயது. அவர் எனக்கு அண்ணன் மாதிரி. அவர் உரிமையாகச் சொல்லிவிட்ட பிறகு எப்படி மொழிபெயர்க்காமல் இருக்க முடியும். ஆகவே முழுவீச்சில் மொழிபெயர்ப்பை செய்து முடித்தேன்’’ என்று நினைவு கூர்கிறார் வெ.ஸ்ரீராம்.]
- 1985-ஆம் ஆண்டு பிரெஞ்சு அரசாங்கம் Year of India என்னும் திட்டத்தை செயல்படுத்தியது. இந்தியாவெங்கிலுமிருந்து பத்து கவிஞர்களை தேர்ந்தெடுத்து அங்கே ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. அந்த கருத்தரங்கை ஒழுங்கு செய்தவர் வெ.ஸ்ரீராம். தென்னிந்தியாவிலிருந்து மூன்று கவிஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தமிழிலிருந்து சுந்தர ராமசாமி, மலையாளத்திலிருந்து அய்யப்ப பணிக்கர், கன்னடத்திலிருந்து கோபால கிருஷ்ண அடிகா என மூன்று பேர் பிரான்ஸ் கலாச்சார விழாவில் பங்கேற்றார்கள். மூன்று நாட்களில் விழா முடிந்த போது ஸ்ரீராம், சு.ரா-வை ஒரு வாரம் தங்கிவிட்டுச் செல்லுங்கள் என்று சொல்ல, தனது சைவ சாப்பாட்டு பிரச்சினையை சொல்லி சுரா முடியாது என்று மறுக்க, ஸ்ரீராம் அவரை எலிஸெபத் என்னும் பிரெஞ்சு ஆசிரியை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே எலிஸெபத், சாப்பாடு மேசையில் தலை வாழை இலை போட்டு கூட்டு, பொரியல், அப்பளம், அரிசிச் சோறு, சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், மோர் என தமிழநாட்டு சைவ சாப்பாட்டை பரிமாற சு.ரா மகிழ்ச்சியில் திளைக்கிறார். ஓர் பிரெஞ்சு சாப்பாட்டு மேசையில் அவர் தென்னிந்திய சைவ சாப்பாட்டை எதிர்பார்த்திருக்கவில்லை. அதன் பின்னர் ஒருவாரம் பிரான்சில் தங்கி பிக்காஸோவின் ஓவியக் கண்காட்சி, Museum of Modern Art, எழுத்தாளர்கள் சந்திப்பு என பயனுள்ள ஊர் சுற்றியாகி சுந்தர ராமசாமி மகிழ்ச்சியுடன் இந்தியா திரும்பினார்.
[இங்கே எலிஸெபத் அவர்களை பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். தமிழ் மொழியை முறையாகக் கற்றுக்கொண்டு பக்தி இலக்கியங்களின் ஒன்றான தேவாரத்தைப் பற்றி ஆய்வு செய்தவர். பிரெஞ்சு மக்கள் தமிழ் எளிமையாக கற்பது வேண்டி புத்தகம் ஒன்றை பிரெஞ்சில் எழுதியவர். பிரான்ஸ் பல்கலைக்கழகத்தில் கீழைத்தேய மொழிகள் [Oriental studies] பிரிவில் பேராசிரியையாக பணியாற்றியவர். ஈழத் தமிழரை திருமணம் செய்துகொண்டவர். தமிழ் பண்பாட்டு கலாச்சாரத்தை தனது வாழ்க்கை முறையாக வரித்துக்கொண்டவர். நிறைய பிரெஞ்சு மாணவர்களை தமிழ் கற்கத் தூண்டியவர். அவரது மாணவர்களில் ஒருவர்தான் பின்னாளில் ஷோபா சக்தியின் நாவலை பிரெஞ்சில் மொழியர்த்தார்.]
ஆல்பர்ட் காம்யூவைப் பற்றி வெ.ஸ்ரீ, பேசிக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அதைப்போலவே பதிப்பாளரும் அவரது நீண்ட கால சகாவுமான ‘க்ரியா’ ராமகிருஷ்ணனைப் பற்றி இவர் பேசிக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவரைப் பற்றி பேசும்போது கண்கள் விரிய, இமயமலையை புதிதாகப் பார்க்கும் குழந்தையின் குதூகலம் வந்துவிடுகிறது. இவர் மொழிபெயர்த்த எல்லாப் புத்தகங்களையும் செம்மையாக்கம் செய்தவர் க்ரியா ராமகிருஷ்ணன். ”அவருக்கு பிரெஞ்சு மொழி தெரியாது. ஆனால், மொழிபெயர்ப்பு பிரதியில் எங்கெல்லாம் அவர் திருத்தம் சொல்கிறாரோ அங்கெல்லாம் மூலபிரதியை எடுத்து ஒப்பீடு செய்து சரிபார்த்தால் அவர் சொன்னது சரியாகவே இருக்கும். இது எப்படி என்பது இன்றுவரை விளங்கிக் கொள்ள முடியாத ஆச்சரியம்.” என்கிறார் வெ.ஸ்ரீராம். ஆழ்ந்த மொழிப்புலமையும் நட்புணர்வும் கொண்ட இருவரும் சேர்ந்து மொழிபெயர்ப்பு துறையில் தமிழுக்கு செய்த பங்களிப்பு அளப்பரியது. முன்னுதாரணம் இல்லாதது. எண்பதுகளில் தொடங்கி இன்றைய காலகட்டம் வரைக்குமான நினைவுக்குறிப்பு ஒன்றை வெ.ஸ்ரீராம் எழுதவேண்டும் என்பது என் வேண்டுகோள்.
1980-ஆம் ஆண்டு அந்நியன் நாவல் மொழிபெயர்ப்பு தமிழில் வெளிவந்த ஐந்தாண்டுகளுக்குப் பின் பிரான்ஸ் அரசாங்கம், உலகெங்கிலும் இருந்து ஐந்து மொழிபெயர்ப்பாளர்களை தேர்ந்தெடுத்து மூன்று மாதங்கள் பிரான்சில் தங்கி எழுத்தாளர் – மொழிபெயர்ப்பாளர்- பதிப்பாளர் சந்திக்கும் விதமாக திட்டம் ஒன்றை அறிவித்தது. டெல்லியில் பணிசெய்யும் நண்பர் ஒருவர் மூலமாக இந்த ஸ்காலர்ஷிப்புக்குக்கு விண்ணப்பித்தார் வெ.ஸ்ரீராம். ஆனால், ஆச்சரியப்படும் விதமாக அந்த ஐந்து பேரில் ஒருவராக வெ.ஸ்ரீ தேர்வாகியிருந்தார். இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே மொழிபெயர்ப்பாளர் வெ.ஸ்ரீராம். அதன் பிறகு 1995-ஆம் ஆண்டு மற்றும் 2005-ஆம் ஆண்டு பிரான்சுக்கு இந்த பெலோஷிப்பின் மூலம் பயணம் மேற்கொண்டார். பிரெஞ்சிலிருந்து தமிழில் மட்டுமல்லாமல் தமிழில் இருந்து பிரெஞ்சில் மொழிபெயர்க்கும் அளவுக்கு புலமையும் மொழித்தேர்ச்சியும் கொண்டவர்.
கடந்த நூற்றாண்டு தொடங்கி நிகழ்காலம் வரையிலான பிரெஞ்சு சமூகத்தின் எழுத்து, அதன்வழி பதிவாகியுள்ள பண்பாட்டு கலாச்சாரத்தின் சாரத்தை தமிழ் சமூகம் அறியத்தந்தவர் வெ.ஸ்ரீராம். தமிழ் இந்து, அம்ருதா, காலச்சுவடு சஞ்சிகைகளில் அவர் எழுத்தாளர்களை / புத்தகங்களை அறிமுகப்படுத்தி எழுதிய கட்டுரைகள், ஆளுமை அறிமுகக் குறிப்புகள்கள் முக்கியமானவை. அதே போல அவர் மொழிபெயர்த்த புத்தகங்களுக்கு அவர் எழுதிய பின்னுரைகள் முக்கியமானவை. ஆழமும் மொழிப் புலமையும் கொண்ட மொழிபெயர்ப்பாளனின் குறிப்புகள் அவை. அவை தமிழில் தொகுக்கப்படவேண்டும். மிக முக்கியமான அ-புனைவு ஆக்கங்களாக அவை இருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.
முற்றும்.